தோட்டக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 183 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராமசாமி முதலியார் தம்முடைய உத்தியோக காலத்தில் சம்பாதித்த பணமெல்லாம் இப்பொழுது இருந்த இடம் தெரியவில்லை. அவர் தம்முடைய வாழ்க்கையில் மிகவும் அருமையாகப் போற்றி வந்த பங்களாவைக்கூட அவர் குமாரர் விற்றுவிடத் துணிந்துவிட்டார். தம்முடைய கிராமமாகிய செந்தாரப்பட்டிக்கே போய் இருக்கிற நிலங்களைப் பார்த்துக்கொண்டு காலங்கழிக்கலாம் என்று எண்ணி, கண்ணப்ப முதலியார் தம் தந்தையார் அருமையாகப் பாடுபட்டு அழகாகக் கட்டிய பங்களாவை விற்க ஏற்பாடு செய்தார்.

பங்களா வென்றால் அது சாமானியமானதா? ராம சாமி முதலியார் கடைந்தெடுத்த பேர்வழி. சுகமாக இருக்க வேண்டுமென்பது அவருடைய கொள்கை. கடன் வாங்கியாவது தம் கௌரவத்தைக் காப் பாற்றிக்கொள்ள வேண்டியது தான் புருஷலக்ஷண மென்பது அவர் கருத்து. மொஹிதீன் மரக்காயர் கம்பெனியில் அவர் மானேஜர் வேலை பார்த்தார். கட்டட வேலைக்காரர்களையும், எஞ்சினீர்களையும், கண்ட்ராக்டர்களையும் அவர் நன்றாக அறிவார். பொறுக்கி எடுத்த உறுதியான சாமான்களால் அவர் தம்முடைய பங்களாவைக் கட்டினார். அதன் அமைப்பு மிகச் சிறந்தது. ஒரு மைல் சுற்றளவுள்ள இடம் வாய்த் திருக்கும் போது அவருடைய மனோபாவத்துக்கு ஏற்ற படி மாளிகையை நிர்மாணிக்கப் பஞ்சம் இல்லையே. பணத்தையும் தாராளமாக வீசினார். பங்களாவின் கட்டடத்தைவிட அதைச் சுற்றி அமைந்த சோலை யழகுதான் சிறந்ததாக இருந்தது. நவநவமான புஷ்பச்செடிகளும் மேல் நாட்டுக் ‘குரோட்டன்ஸ்’ வகைகளும் கண்ணுக்கு ரம்யத்தைத் தரும் கொடி வகைகளும் லதாக்கிருகங்களும் ஊற்றுக்களும் அந்த வனத்திற்கு அழகை அளித்தன. பங்களாவின் பின் புறத்தில் மாதுளை, கொய்யா, ஒட்டுமாமரம் முதலிய பழமரங்களை வைத்து வளர்த்தார்.

அவருக்குத் தக்கபடி தோட்டக்காரன் அமைந் தான். குப்புசாமிக்குத் தோட்ட வேலை நெடுநாட் பழக்கம். முதலியாருடைய தோட்டத்தில் இன்ன மூலையில் இன்ன செடி இருக்கிறதென்பது அவனுக்கு நிரூடியாக இருந்தது. அவன் மனத்தில் அந்தச் சிங்காரவனத்தின் படம் சோபையோடு விளங்கியது. அவன் கூலிக்கு மட்டும் வேலை செய்யவில்லை. அந்தச் செடிகளையும் மரங்களையும் கொடிகளையும் பார்ப் பதில் அவனுக்கு ஒரு தனி ஆனந்தம். “குப்புசாமி இல்லாவிட்டால் இந்த இடம் இப்படி அமையுமா?” என்று முதலியார் சில சமயங்களில் அவனைப் பாராட்டுவார்.

முதலியாரிடம் குப்புசாமி சொல்லும் யோசனை ஒன்றும் தவறாது. அவனுக்கு அந்தத் தோட்டத்தை விருத்தி பண்ணுவதில் எவ்வளவோ ஆவல்! ஊரி லுள்ள தோட்டக்காரர்களைச் சினேகம் பிடித்து
அங்கங்கே பங்களாக்களில் புதிது புதிதாக வரும் செடியையும் கொடியையும் பார்த்து எப்படியாவது ஒன்று சம்பாதித்துத் தன் தோட்டத்திலே கொண்டு வந்து வளர்ப்பான். தன் தோட்டமென்றே அவன் அதை நினைத்து வந்தான். அங்கேயுள்ள செடிகளில் ஒன்று யாராவது முதலியாரிடம் கேட்டால் அவர் தாக்ஷிண்யமில்லாமல், “எனக்குத் தெரியாது; குப்புசாமி கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிடுவார்.

அந்தச் செடிகளில் தான் அவனுக்கு எத்தனை ஆசை ! அவனுக்கு வயசு அறுபதுக்குமேல் ஆகிறது. அழகையும் வாஸனையையும் அனுபவிக்கும் காளைப் பருவத்தைத் தாண்டி எவ்வளவோ வருஷமாகிறது. ஆனாலும் அந்தப் பூக்களிலே அவனுக்குப் பாசம் அளவற்றதாக இருந்தது. இரண்டு நாளுக்கு முன் வைத்த பூங்கொடியில் ஒரு தளிர் விட்டிருந்தால் அவனுக்கு ஒரு மோஹரா கொடுத்தால் கூட அத்தனை சந்தோஷம் வராது; அப்படிச் சந்தோஷப்படுவான். அந்தத் தளிரை நாலு பக்கமும் சுற்றிச் சுற்றிப் பார்ப் பான். மலடிக்கு மகன் பிறந்தால், குருடனுக்குக் கண் தெரிந்தால் – இப்படி அடுக்கிப் பாருங்கள் – எத்தனை மகிழ்ச்சியோ அத்தனை மகிழ்ச்சி அந்தப் பூங்கொடியில் முதற் பூவை அவன் கண்டுவிட்டால் உண்டாகும். அதை உடனே முதலியாருக்குத் தெரி விக்காவிட்டால் அவன் மண்டை வெடித்துப்போகும்.

அவன் குதூகலத்தோடு ஓடிவரும்போதே முதலி யார் உண்மையை உணர்ந்து கொள்வார். ” ஏண்டா குப்புசாமி; இன்றைக்கு ஏதோ புதுப்புஷ்பம் உண்டாயிருக்கிறது போல் இருக்கிறதே?” என்று புன்னகையோடு கேட்பார்.

“அதோ அந்த மூலையில் வைத்த சம்பங்கிக் கொடி பூத்திருக்கிறது, எசமான்” என்று சந்தோஷத் தோடு அவன் பதில் சொல்வான்.

குப்புசாமிக்கு வேலை நேரம் என்பது இல்லை. அவன் எப்பொழுதும் தோட்டத்தில் தான் இருப் பான். எப்பொழுதாவது வீட்டுக்குப் போவான். அவ னுடைய மகள் வள்ளிக்குங்கூடத் தன் கையால் ஒரு பூவை ஓடித்துக்கொண்டு போய்த் தரமாட்டான். புஷ்பங்களை அந்த அந்தச் செடிகளிலோ கொடி களிலோ இருக்கும்போது பார்த்துக்கொண்டே இருப்பதுதான் அவனுக்கு ஆனந்தம். “ஏன் எச மான், பறவையின் சிறகை ஓடிப்பது போலப் பூவைக் கொத்தோடே ஓடித்து வைக்கிறதில் என்ன லாபம்? குழந்தையின் கையை ஒடித்தால் பாவமென்று சொல் கிறார்கள். மரம் செடி கொடிக்குக்கூட உசிர் இருக் கிறதாமே. அந்தக் கொடிகளிலும் செடிகளிலும் உள்ள பூவைப் பறிப்பது மட்டும் பாவமல்லவா?”

என்று அவன் முதலியாரைக் கேட்பான். முதலி யாருக்கு அது அசட்டுக்கேள்வியாகப் படும். அவன் குழந்தைக்கும் கொடிக்கும் வித்தியாசம் காணவில்லை யென்பதை அவரால் பூர்ணமாக அறிய முடியவில்லை. “பூவைப் பறிக்கிறது குற்றமானால் பின் எதற்குத்தான் செடி கொடிகளை வளர்ப்பது?” என்று எதிர்க்கேள்வி போடுவார் முதலியார்.

“ஏன்? குழந்தையின் முகம் அழகாயிருக்கிற தென்றால் அதைக் கழுத்திலிருந்து திருகியா அழகு பார்க்கவேண்டும்? அந்தக் கழுத்தில் இருந்தபடியே பார்க்கிறது தானே நல்லது? பூவையும் கொடியிலிருந்த படியே பார்க்கிறது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது!”

மறுபடியும் குழந்தையும் கொடியும் குப்புசாமிக்கு ஒன்றாகத் தோற்றுவதை முதலியாரால் அறிந்து கொள்ள முடியவில்லை. “அப்படியானால் நாம் காய்கறி சாப்பிடுவது பாவம். கொடியில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடும்” என்று பரிகாசத்தொனியோடு அவர் கூறுவார். குப்புசாமிக்கு அவர் சொன்னது புரிவதில்லை. ‘அதில் நிசம் இருக்கிறதென்று தெரிகிறது. வயிறு நிரம்பவும் வேணும்; காய்கறிகளைப் பறிக்கவும் கூடாது’ – இந்த முரண்பாட்டை அவனுக்குத் தெளிவாக்க முடிய வில்லை. ஆனாலும் கொடியும் குழந்தையும் அவனுக்கு ஒன்றுதான்.

சேலத்திலிருந்து வருவித்து வைத்த ஒட்டு மாஞ் செடியை அவன் உயிர்போலக் காத்து வந்தான். அதற்கு என்ன என்ன. உபசாரம் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தான். “இந்த மரம் பூத்துக் காய்த் துப் பழுத்துத் தானே உதிரும்போது அந்தப் பழத் தைத் தின்ன வேணும், எசமான்” என்று முதலி யாரிடம் முன்பே விண்ணப்பித்துக் கொண்டிருந் தான். அவனுக்கு மற்றச் செடி கொடிகளில் இருந்த பிரியத்துக்கு எத்தனையோ மடங்கு அதிகமான பிரியம் அந்த ஒட்டுமாமரத்தினிடம் உண்டாயிற்று. அதிலிருந்து உதிர்ந்த இலை என்ன பெறும்? அதை எடுத்து மோந்து பார்ப்பான்! கண்ணில் ஒற்றிக் கொள்வான் / பழுப்பிலையை எசமானுக்குப் பல் தேய்க் கக் கொடுப்பான். அன்பு முற்றினால் அது பைத்திய மாகுமாம். குப்புசாமிக்கு அந்த மாமரத்தினிடம் பித்துத்தான் பிடித்திருந்தது.

குப்புசாமிக்குக் கல்யாணம் நடந்து நாற்பது வருஷங்களுக்கு மேல் ஆகின்றன. அவனுக்குக் கல் யாணம் நடந்த அன்று உலகஸ்வபாவத்துக்கேற்ப ஒரு சந்தோஷம் இருக்குமல்லவா? அவனுக்கும் அந்தச் சந் தோஷத்துக்குக் குறைவில்லை. ஆனால் இன்றைக்கு அவனுக்கு உண்டான சந்தோஷம் என்றும் இருந்த தில்லை. வள்ளி பிறந்தபோது உண்டான மகிழ்ச்சி இந்தச் சந்தோஷத்தில் லக்ஷத்தில் ஒரு பங்குதான் என்று சொல்லவேண்டும். அத்தனை உத்ஸாகம், பூரிப்பு, மெய்ம்மறந்த ஆனந்தம்! கள்ளா குடித்து விட்டான்? இல்லை, இல்லை. எத்தனை களியாட்டம்! முகத்தில் அவனுடைய ஹிருதயத்திலுள்ள இன்ப சாகரம் பொங்கி வழிகிறது! புதையலையா எடுத்து விட்டான்? ஒன்றும் இல்லை. அவன் வளர்த்த ஒட்டு மாஞ்செடி அன்று அரும்பியிருக்கிறது. அடாடா! என்ன உச்சஸ்தாயியில் அவன் கண்டம் இன்றைக் குப் பேசுகிறது / ஏதேது, அவனுக்கு இருந்த ஆனந்தம் அவனுடைய மூளையையே கலக்கிவிட்டாலும் விட லாம்.

‘இனிமேல் காய்க்கும்; பழுக்கும். பழுத்து விழுந்ததைத்தான் எசமானுக்குக் கொடுப்பேன். அப்பொழுது தான் அதற்கு ருசி அதிகம்’ என்று அவன் மனோராஜ்யம் பண்ணினான். அந்த மாம் பூவின் மணம் தென்றலில் வீச அச்செடியின் நிழலிலே தன்னுடைய மேல் துணியை விரித்து அவன் படுத்திருந்தான். அவனுக்கு அப்பொழுது இருந்த மனச்சாந் திக்கு எதை உபமானமாகக் கூறலாம்? பரம உபசாந்த நிலையில் பேரானந்தம் அனுபவிப்பதாக வேதாந்திகள் புஸ்தகத்திற் படித்ததை ஒப்பிக்கிறார்களே, அதைச் சொல்லலாமா? காதலர்களுடைய உள்ளம் பிரேமை என்னும் மின்சாரத்தால் இணைக்கப்பட்டு ஒன்றிய காலத்து உண்டாகும் இன்பத்தைச் சொல்ல லாமா? எல்லாம் ஒருபடி மட்டந்தான்.

ஐயோ! மனிதனுக்குத்தான் எத்தனை ஆசாபங் கம்! அவன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் மரணதேவன் எட்டிப் பார்க்கிற அதிசயத்தை எப் படி அறிய முடிகிறது? முதலியாரது இன்பவாழ்க் கையில் மலேரியா ஜுரத்தூதனை முதலில் விட்டு மரணதேவன் புகுந்துவிட்டான். அவர் இறந்தார். அவர் பிள்ளை கண்ணப்ப முதலியார், சொத்துக்குக் கணக்குப் பார்த்தார்; “இனி, பட்டணத்தில் இருப் பதில் பிரயோஜனம் இல்லை” என்று துணிந்தார்.

குப்புசாமிக்கு அவன் எதிர்பார்த்த இன்பம் மலரும் பருவத்தில் இடிவிழுந்தது போலே இருந்தது. முதலியார் போனது கூட அவ்வளவு வருத்தமில்லை. அவர் பிள்ளை பங்களாவை விட்டுவிட்டு, தான் வளர்த்த உயிருக்குயிரான தோட்டத்தை விட்டு விட்டுப் போகப்போகிறாரென்பதை அறிந்த போது, அவன் ஹிருதயத்தில் ஓர் ஊசி தைத்தது. ‘இந்தப் பங்களாவை யார் வாங்குவார்களோ! நம்மை வைத்துக் கொள்ள அவர்கள் சம்மதிப்பார்களோ! வேறு எந்தப் படுபாவியாவது வந்துவிடுவானோ” என்று எண்ணி ஏங்கினான், ‘இந்தத் தோட்டத்தை விட்டால் என் உயிர் நில்லாது. கூலியில்லாமல் சும்மா வாவது வேலை செய்கிறேனென்று கேட்கிறேன். இல்லையானால் இந்த உலகத்தில் வாழ்வதற்கு நமக்கு வேறு என்ன இருக்கிறது?’ என்று நினைந்து கலங்கினான்.

புண்ணியகோடி செட்டியார் அந்தப் பங்களாவை வாங்கிவிட்டார். யாரோ தமக்குத் தெரிந்த தோட்டக்காரனை வைத்துக்கொண்டார். குப்புசாமி தன் உயிர்போன்ற தோட்டத்தை அயலானிடம் ஒப்பிக் கும் நிலைமை வந்து விட்டது; “தம்பி, நான் எப்போ தாவது இங்கே வருவேன். என் கையால் வைத்த இந்தக் குழந்தைகளைப் பார்க்கும்படி மட்டும் நீ சம்மதிக்க வேணும்” என்று அவன் கெஞ்சினான்; அவன் கண்களில் நீர்த்துளிகள் புறப்பட்டன; பேச முடியவில்லை; தொண்டை அடைத்துக்கொண்டது.

வந்த தோட்டக்காரன் மகா முரடன். அவனுக் குப் பணத்திலே கண். ‘இவனை இங்கே விட்டால் பழைய பழக்கத்தால் ஏதாவது செய்வான். எசமானிடம் சொல்லித் தான் வந்து புகுந்து கொள்வான்; நம்மைத் தொலைத்துவிடுவான்’ என்று அவன் எண்ணினான். “அதெல்லாம் முடியாது” என்று வெட்டொன்று துண்டு இரண்டாகப் பதில் சொல்லிவிட்டான்.

தோட்டக்காரன் “உனக்கு உதவியாக நானும் ஏதாவது செய் கிறேன். எனக்குக் கூலி ஒன்றும் வேண்டாம். இவ்வளவு நாள் பழகிவிட்டுப் பிரிவதென்றால் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய குழந்தையை விட்டுப் பிரிந்தால்கூட இவ்வளவு வருத்தம் உண்டாகாது” என்றான் குப்புசாமி.

“கிழட்டு மனிசன் நீ; நீ எனக்கு என்ன உதவி செய்யப்போகிறாய்? போ, போ! அதிகமாகச் சொன் னால் எசமானிடம் சொல்லுவேன். அப்புறம் கல்தாத் தான்” என்று நெஞ்சில் இரக்கம் இல்லாமல் ராக்ஷஸத் தனத்தோடு புதிய தோட்டக்காரன் பதில் சொன்னான்.

“ஐயோ தெய்வமே!” என்று அழுதுகொண்டே குப்பன் வீடுபோய்ச் சேர்ந்தான்.

தினமும் ஒருமுறை அந்தப் பங்களாவின் வழியே பகுப்புசாமி போவான். அதற்கு எதிரில் நிற்பான். காற்றில் அசையும் கொடிகளையும் பாரப்பான். ஒரே ஓட்டமாக உள்ளே ஓட வேண்டுமென்று தோன்றும். ஆனால் கதவைத் திறக்க அந்த ராக்ஷஸன் சம்மதிக்க மாட்டானே! அப்படியே கிழவன் நின்றுவிடுவான். அருமையாகப் பிறந்த குழந்தையைப் புதைத்துவிட்டு அவ்விடத்தருகே நின்று கண்ணீர்விடும் அன்புடைய தந்தையைப் போல் அவன் விம்மி விம்மி அழுவான்.

எவ்வளவு நாள் அந்த மனிதனைக் கெஞ்சிப் பார்த்தான்! “ஒரு நாளாவது அந்த ஒட்டுமாமரத்தை வந்து பார்க்கவேணும். உன் மனம் இரங்காதா!” என்று கேட்டான். பங்களாவின் பின்புறத்தில் இருந்த அந்த மரம் அவன் கண்ணில் தென்படு வதில்லை. “தெரியும், தெரியும்; இப்படியே வந்து பழங்களைத் திருடிக்கொண்டு போகலாமென்ற எண்ணமோ?” என்று வெருட்டினான் அந்தப் பாவி. அவன் பேச்சினால் அது பழுத்திருக்கிறதென்பதைக் கிழவன் அறிந்தான்; ‘ஏன் இவனை ஒரே குத்தாகக் குத்தி விட்டு ஓடிப்போய் அந்த மரத்தைப் பார்த்துவிட்டு வரக்கூடாது?’ என்று கூட அவன் மனம் எண்ணியது. அடுத்த க்ஷணமே அந்த உணர்ச்சி தளர்ந்தது; ‘தலை விதி! நான் செய்த பாவம்! நான் வளர்த்த மரத்தைக் கண்ணாற்கூடப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை!’ என்று வருத்தத்துடன் திரும்பிச் செல்வான்.

அருணோதயம் ஆகியிருக்கிறது; இருட்டு நன்றா கத் தெளியவில்லை. குப்புசாமி அவ்விரவு முழுதும் உள்ளத்தோடு பெரிய போராட்டமொன்றை நடத் திக்கொண்டிருந்தான். அவன் ஹிருதயம் படீரென்று வெடித்து விடும் போல் இருந்தது. ஒரு முறையாவது அந்த ஓட்டுமாமரத்தைப் பாராவிட்டால் அவன் இனி நல்ல அறிவோடு இருக்க முடியாது. கடைசியில் எப்படியாவது பங்களாவிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அதைப் பார்த்து வருவதென்று துணிந்து விட்டான்.

எப்படியோ ஏறிக் குதித்து ஒருவருக்கும் தெரி யாமல் மரத்தடிக்கு வந்தான். ஒரே ஓட்டந்தான்; அந்த மரத்தைக் கட்டிக்கொண்டு ஓவென்று அலறிவிட்டான். அந்தச் சத்தம் அங்கே படுத்திருந்த தோட்டக்காரன் காதிற் பட்டது . வந்து பார்த்தான். ஒட்டுமாமரத்தின் உயிரும் குப்புசாமியின் உயிரும் பிணைக்கப்பட்டிருப்பதை அவன் எப்படி உணர் வான்? “போக்கிரிக் கிழவா! கையுங்களவுமாக அகப் பட்டுக்கொண்டாயா?” என்று தலையில் இரண்டடி போட்டுவிட்டு உறுமினான், அந்தத் தோட்டக்காரன். குப்புசாமியோ அவ்வளவு அடியையும் பட்டுக் கொண்டு கட்டிய கையை நெகிழ்க்கவே இல்லை. இறுகக் கட்டிய கையின் மேல் அடித்தான், அந்தப் பாதகன். அப்பொழுதும் கிழவன் விடவில்லை. ஆத்திர மெல்லாம் சேர்த்து அடித்தபோது, “ஐயோ” என்று கதறிக்கொண்டு கீழே விழுந்தான் கிழவன். அவனுக்கு மயக்கம் போட்டுவிட்டது. அதற்குள் பங்களா விலிருந்து எஜமான் வந்துவிட்டார்.

“என்னடா சங்கதி?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் புண்ணியகோடி செட்டியார்.

“இந்தத் திருட்டுப்பயல் பங்களாவுக்குள் புகுந்து பழங்களைத் திருட வந்திருக்கிறான். நான் பார்த்து விட்டேன்; அடித்தேன். கீழே விழுந்து பாசாங்கு செய்கிறான்” என்றான் தோட்டக்காரன்.

மங்கலான வெளிச்சத்தில் செட்டியார் குனிந்து கிழவனைப் பார்த்தார். அவன் உண்மையிலேயே மயக்கமடைந்திருப்பதை அறிந்து தண்ணீர் கொண்டு வந்து தெளிக்கச் செய்தார்.

கிழவன் கண்ணைத் திறந்து பார்த்தான். மாமரத்தைக் கண்ட சந்தோஷ மிகுதியும் தலையில் அடிக்கப்பட்ட அடியும் சிறிது நேரம் அவனுக்கு ஒன்றும் விளங்காதபடி செய்தன. மெல்ல எழுந்திருந்தான்.

“ஏன் இங்கே வந்தாய்?” என்றார் செட்டியார்.

கிழவன் நிதானித்தான். எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன; “சாமி, என் பிள்ளையைப் பார்க்க வந்தேன். சத்தியமாகச் சொல்லுகிறேன். திருட வரவில்லை. என் பிள்ளையைப் பார்த்துவிட்டேன். இனிமேல் நான் சந்தோஷமாகச் சாவேன்” என்று அழுது கொண்டே அவன் சொன்னான். செட்டியாருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“இவன் பைத்தியக்காரனாக இருக்கலாம்” என்றார்.

“சாமீ, இந்த மாமரப் பைத்தியந்தான் பிடித்திருந்தது; இதை நான் என் கையால் வளர்த்தேன். ஒரு தடவையாவது இதைப் பார்க்க வேணுமென்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டேன். இவர் மனம் இரங்கவில்லை. இதைப் பார்க்காமல் எனக்குத் தூக்கமே வரவில்லை. அதனால் இந்தமாதிரி செய்தேன். நான் செய்தது தப்புத்தான். ஒரே ஒரு வரம் தர வேணும். அடிக்கடி இந்த மரத்தைப் பார்க்கும் படி செய்யவேணும். நான் திருடமாட்டேன். பழம் எனக்கு வேண்டாம். எங்கள் எசமானனுக்குக்கூடப் பழம் தானே விழுந்தால் தான் தின்னலாமென்றல்லவோ சொல்லி இருந்தேன்? அப்படிப்பட்டவன், ‘நான் பழத்தைப் பறித்துத் தின்பேனா? என் கண், என் உயிர் இந்த மரம்; சாமீ, இன்னும் ஒருதடவை அதைக் கட்டிக்கொள்கிறேன்” என்று எழுந்து போய் அதைக் கட்டிக்கொண்டான். தன் கன்னங்களையும் நெற்றியையும் அதன் மேல் அழுத்தினான். செட்டியார் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தார். “சரி; நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டு வேகமாகப் போய்விட்டான் கிழவன்.

ஆச்சரியத்தில் முழுகின செட்டியார் தம் தோட்டக்காரனை விவரமாக விசாரித்தார். அந்தக் கிழவனைப் பலமாக அடித்துவிட்ட பிறகு அவனுக்குச் சிறிது பச்சாத்தாபம் உண்டாயிற்று. கிழவன் தன்னிடம் கெஞ்சினதையும் தான் மறுத்ததையும் அன்று அவன் அம்மரத்தை விடாப்பிடியாகக் கட்டிக்கொண்டிருந்ததையும் சொன்னான். செட்டியார் பின்னும் சிலர் மூலமாக விசாரித்ததில் அந்தத் தோட்டத்தின் அழகுக்கும் வளப்பத்துக்கும் கிழவன் குப்புசாமியே காரணமென்பதை அறிந்தார். அவனை அழைத்துக் கொண்டு வந்து தோட்டத்தில் வேலை செய்யச் சொல்லலாம். இப்பொழுது இருப்பவனுக்கு உதவியாக இருக்கட்டும்’ என்று எண்ணினார்.

ஆனால், குப்புசாமி எங்கே? அன்றிரவு வீட்டிலே காணப்பட்டவன்தான்! அப்புறம் அவனை எல்லோரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாமரத்தினிடம் தான் போகும் இடத்தைச் சொன்னானோ என்னவோ, யார் கேட்டு அறிவார்கள்?

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *