சத்தமில்லாத யுத்தங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 10,570 
 

இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன். என்று துளசி சொன்ன போது கோமதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

என்ன நீ விளையாடுறீயே..? அதென்ன பிடிக்கேல்லை எண்டிறதும் அவரை விட்டிட்டுத் தனிய வாழப் போறன் எண்டிறதும்……..! எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிட்டுதே? கோமதி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய்க் கத்தினாள்.

இல்லை அம்மா. எனக்குப் பைத்தியமும் இல்லை. கியித்தியமும் இல்லை. அவரோடை வாழத்தான் பிடிக்கேல்லை. துளசி சற்று எரிச்சலுடன் கீச்சிட்டாள்.

என்ன கிரகசாரமடா இது! ஐநூறு கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற ஹனோபர் வரை போய் தில்லையம்பலத்தார் நல்ல சாத்திரி என்று எல்லாரும் சொல்லுகினம் என்று அவரட்டைச் சாதகத்தைக் காட்டி பொருத்தம் பார்த்து, பிறகு ஐயரிட்டைப் போய் நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்துத்தானே எல்லாம் செய்தது.

பிறகேன் இப்படி நடக்குது. கோமதி குழம்பினாள்.

ஊர் கூட்டி, உறவுகளுக்கெல்லாம் சொல்லி, உலகின் அந்த அந்தத்திலிருந்து இந்த அந்தம் வரை பார்த்துப் பார்த்து ஈ மெயிலாய் அனுப்பி, ரெலிபோனாய் அடித்து, கடிதங்களாய் எழுதி தம்பட்டம் அடித்து, ஹோல் எடுத்து மணவறை போட்டு, இல்லாத அருந்ததி பார்த்து எல்லாரும் வாழ்த்தத்தானே திருமணம் நடந்தது.

ஐந்து மாதங்கள் கூட சரியாக நகரவில்லை. அதற்கிடையில் இவளுக்கு என்ன வந்தது. ஏன் இப்படி அதிரடி முடிவெடுத்தாள்? கோமதிக்குத் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

நீ கெட்டிக்காரி. மோளுக்கு நல்ல ஒரு பொடியனாப் பார்த்துக் கட்டிக் குடுத்துப் போட்டாய். யேர்மனிலை இப்பிடி படிச்ச நல்ல குடும்பத்து மாப்பிளை கிடைக்கிறதெண்டால் லேசில்லை. நீ கெட்டிக்காரிதான். இனியென்ன? உனக்கு ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரித்தான். ஏதாவது விழாக்களிலோ அல்லது கடைத் தெருக்களிலோ யாராவது தெரிந்த தமிழ்ப் பெண்களைச் சந்திக்கும் போது அவர்கள் இப்படித்தான் சொல்லி கோமதியின் மனதைக் குளிர வைப்பார்கள்.

நல்லாத்தான் இப்பப் பாரம் குறைஞ்சிருக்கு. இவள் என்ரை தலையிலை பாறாங்கல்லை எல்லோ தூக்கிப் போட்டிருக்கிறாள். கோமதியின் மனசு முணுமுணுத்தது. துளசியோ ஒரு கவலையுமில்லாமல் சீடீ ஸ்ராண்ட் இல் இருந்து சீடீ ஒண்டை எடுத்துப் போட்டு, பாட்டை ஓட விட்டிட்டு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக் கொண்டிருந்தாள். கோமதிக்கு அவளின் இந்த அலட்டிக் கொள்ளாத தன்மை எரிச்சலையே தந்தது. கோமதியும் அந்த நாட்களில் ஆடினவள்தான். ஆனால் அது பரதநாட்டியம். அதுவும் அவளின் கழுத்தில் எப்ப தாலி ஏறிச்சுதோ அன்று வரைக்கும் தான். அதற்குப் பிறகு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

அவளுக்கும் அந்த நாட்களில் வீட்டில் சில சமயங்களில் ஆடவேண்டும் போல ஆசை வரும். இனி ஆட முடியாதென்னும் போது அழுகையும் வரும். ஆடவேண்டும் போல் காலும் கையும் பரபரக்கும் போதெல்லாம் நீ ஆடுறது எனக்குப் பிடிக்கேல்லை எண்டு அவள் கணவன் அதுதான் துளசியின் அப்பா முதலிரவன்றே சொன்ன வார்த்தைகள் நினைவுகளில் ஒலிக்க அப்படியே கண்கள் பனிக்க கோமதி தன்னைக் கட்டிப் போட்டு விடுவாள்.

பரதநாட்டியம் மட்டுமே! இப்படி எத்தனை விடயங்கள் திருமண பந்தத்தில் உருவழிந்து போய் விட்டன. அதற்காக இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருக்காலும் அவள் தன் கணவனை விட்டிட்டுப் போக வேண்டும் என்று நினைத்ததில்லையே! ஆனால் ஐந்தே ஐந்து மாதத்தில் அவள் பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் மகள் துளசி வந்து வேண்டிக் கொடுத்த பொம்மையை வேண்டாம் என்று சொல்வது போல கணவனை வேண்டாம் என்கிறாளே! என்ன செய்வதென்று தெரியாமல் கோமதி குழம்பினாள்.

இந்தக் காலப் பிள்ளைகளிடம் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் தன்மையும், எதையும் தூக்கி எறிந்து பேசும் தன்மையும் சற்று மிகையாகவேதான் உள்ளன. அதுவும் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள், ஒரு விதமான இரட்டைக் கலாச்சாரத்துள் அகபபட்டு, அவர்களை அழுத்தும் மன உளைச்சல் காரணமாகவோ அல்லது எதிலும் முழுமையாக ஒட்ட முடியாத இயலாமை காரணமாகவோ தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பெற்றோருடன் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு கோமதியின் மகளும் விதி விலக்கானவளல்ல.

இரவுகளில் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது வேறு விழாக்களுக்கோ அல்லது டிஸ்கோவுக்கோ செல்ல அனுமதி மறுக்கப்படும் போது துளசியின் முட்டி மோதலையும் வாக்கு வாதத்தையும் சட்டை செய்யாதவள் போல் கோமதி நடித்திருந்தாலும், இந்த யேர்மனிய வாழ்வில் அது எத்தகையதொரு பாதிப்பை துளசியிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவள் உணராமலில்லை. அதனால் சமயம் வரும் போதெல்லாம் துளசியை தன்னுடன் அழைத்து, அன்பால் அணைத்து ஆறுதலான வார்த்தைகளால் அறிவுரை சொல்லுவாள். அது துளசியின் ஆதங்கங்களை முற்றாக சமாதானப்படுத்தவில்லை என்பது கோமதிக்குத் தெரிந்தாலும் கோமதியாலும் ஒன்றும் செய்யமுடியாமலே இருந்தது.

கோமதியும் பெண்தானே. அவளும் இந்தக் கலாச்சாரம் பண்பாடு என்ற போர்வைக்குள் மூச்சடங்கி முக்குளித்தவள் தானே. ஆனாலும் இந்தக் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ ஐரோப்பியக் கலாச்சாரத்துடன் வாழ், என்று தன் பெண்ணிடம் சொல்ல எந்தத் தமிழ்த்தாய்தான் மனந்துணிவாள்.

என்னதான் புதுமை, புரட்சி என்று பேசினாலும், எழுதினாலும் தமது குடும்பம் என்று வரும் போது, என் பெண் இந்தக் கலாச்சாரம் பண்பாடுகளிலிருந்து நழுவி விடக் கூடாதே என்பது தான் பெண்ணைப் பெற்றவர்கள் எல்லோரதும் கவலை. இந்த நிலையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றும், சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தும் வாழும் கோமதியின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை.

கோமதி கூட ஒரு இரண்டும் கெட்டான் மனநிலையில் போராடுபவள் தான். படித்த, உலகம் தெரிந்த அவள் மனதுக்கும், நான் ஆண் என்ற திமிர்த்தனம் சற்றும் குறையாத கணவனுடனான அவள் வாழ்வுக்கும் இடையில் அவள் நிறையவே போராட்டம் நடத்தி விட்டாள். ஆனால் அவள் போராட்டம் எப்பொழுதுமே அவள் மனதுக்குள் தான். மற்றும் படி கணவன் எள் என்ற உடனே இவள் எண்ணெய்யாக நிற்பாள்.

இந்த மனதோடு ஒரு வாழ்வு, நியத்தில் ஒரு வாழ்வு என்ற இரட்டை வேடம் கோமதி அறியாமலே கோமதியிடம் ஒரு வித மன உளைச்சலைக் கூட ஏற்படுத்தியிருந்தது. அதனால்தானோ என்னவோ கோமதி துளசியின் விடயத்தில், துளசியின் சின்னச் சின்ன ஏமாற்றங்களையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவளாக இருந்தாள். இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாத நிலையில் துவண்டாள். துளசி பெண் என்ற ஒரே காரணத்துக்காக, சில சின்னச் சின்ன விடயங்களில் கூட தடைகள் விதிக்கப்பட்டு அனுமதிகள் மறுக்கப்பட்ட போது, துளசி அப்பா அம்மாவை மீற முடியாத இயலாமையில் பொங்கி எழுந்து, அழுது ஆர்ப்பரிக்கையில் கோமதியும் அழுதாள். நாங்கள் தமிழ்ப் பெண்கள் என்பதையும், பண்பாட்டின் பெருமையையும் விளக்கி அவளைச் சமாதானப்படுத்தினாள். ஆனாலும் துளசியின் ரீன்ஏஜ் பருவம் துளசிக்கு மட்டுமல்லாமல், துளசியைத் திருப்திப்படுத்த முடியாத துளசியின் அம்மாவான கோமதிக்கும் கூட மிகுந்த மன உளைச்சலான வேதனையான கால கட்டமாகவே இருந்தது.

அதன் பிரதி பலன்தான் இதுவோ? துளசி கணவனை வேண்டாம் என்று சொல்வது ஏதோ பழி தீர்க்கும் படலம் போலவே கோமதிக்குத் தோன்றியது. கட்டுப்பாடுகளை உடைத் தெறிய அன்று பதினான்கு வயதில் அவளுக்கு முடியவில்லை.

இன்று இருபத்தினான்கு வயதில் அவள் அப்பாவை மட்டுமல்ல இந்த சமுகத்தையே பழிவாங்க நினைக்கிறாளோ! கோமதியின் சிந்தனை பல விதமாக எண்ணியது. இருபத்து நான்கு வயதுப் பெண்ணுக்கு அடித்தோ உதைத்தோ ஒன்றையும் திணிக்க முடியாது. அதுவும் துளசி அப்பா போலவே பிடிவாதக்காரி. அவளிடம் அன்பால் மட்டும்தான் ஏதாவது செய்ய முடியும். கோமதிக்கு அது நன்கு தெரியும்.

என்ன செய்யலாம், துளசியை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என்ற யோசனைகளோடே அன்றைய இரவு அமைதியின்றிய அரைகுறைத் தூக்கமும் யோசனை கழிந்த விழிப்புமாய் கோமதிக்குக் கழிந்தது. விடிந்தும் விடியாத பொழுதிலேயே தூக்கம் முழுவதுமாய்க் கலைந்து விட எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாள்.

நினைவு மட்டும் துளசியுடன் எப்படிப் பேசலாமென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. கணவருக்குக் கூட இன்னும் நிலைமையைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒரு குதி குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணி நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறாய் என்று கோமதியையும் சாடி விட்டு வேலைக்குப் போயிருப்பார்.

கோமதியின் எண்ணம், கணவரின் காதுக்கு விடயம் எட்டாமலே துளசியின் மனத்தை மாற்றி விட வேண்டுமென்பதுதான். கோமதி நினைவுகளுடன் போராடியபடி இருக்க துளசி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு வந்தாள். அப்பா என்னவாம் என்றாள்.

அப்பாக்கு நானொண்டும் சொல்லேல்லை. சொன்னால் இப்ப ஒரு பிரளயம் எல்லோ நடந்திருக்கும். ஏதோ இண்டைக்கு நேற்றுத்தான் உனக்கு அப்பாவைத் தெரியும் போலை இருக்கு உன்ரை கேள்வி. இதை என்னண்டு அப்பாட்டை நான் சொல்லுறது. கோமதி தனது எரிச்சலையும் கோபத்தையும் வெளியில் காட்டாமல் துளசியின் வினாவுக்குப் பதிலளித்தாள்.

அம்மா இது மறைக்கிற விசயமில்லை. அப்பா குதிப்பார் எண்டதுக்காண்டி முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ளை மறைக்கேலாது. துளசி கத்தினாள்.

இஞ்சை பார் பிள்ளை. இங்கை கத்துறதிலையோ, ஆர்ப்பாட்டம் பண்ணுறதிலையோ ஒரு அர்த்தமும் இல்லை. கொஞ்சமாவது யதார்த்தத்தை யோசிக்கோணும். கலியாணம் எண்டுறது ஆயிரம் காலத்துப் பயிர். அதை நீ இப்பிடி தூக்கி எறிஞ்சிட்டு வாற விசயமெண்டு மட்டும் நினைக்காதை. ஏன் அவருக்கும் உனக்கும் இடையிலை என்ன பிரச்சனை நடந்தது? இன்னொருக்கால் அவரோடை கதைச்சுப் பார்க்கலாம்தானே! கோமதி துளசியின் குணம் தெரிந்தவளாய் துளசியை ஆறுதல் படுத்தும் விதமாகக் கதைத்தாள்.

அம்மா நானும் அவரும் கதைச்சுத் தான் இந்த முடிவுக்கு வந்தனாங்கள். எனக்கும் அவருக்கும் ஒத்து வராது. என்ரை இன்றெஸ்ற் (interest) வேறை அவற்றை இன்றெஸ்ற் (interest) வேறை. அது தான்———துளசி இழுத்தாள்.

கலியாணம் எண்டு நடந்தால் இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து இன்றெஸ்ற் (interest) களை மாத்தித்தான் வாழோணும். அதை விட்டிட்டு இதுக்காண்டி ஆரும் எல்லாத்தையும் தூக்கி எறிவினமோ? — என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு எடுத்திருக்கிறாய் -வினவினாள் கோமதி.

பின்னை என்ன உங்களை மாதிரி என்னையும் வாழச் சொல்லுறிங்களே? நீங்கள் ஆசை ஆசையாப் படிச்ச பரதநாட்டியத்தை அப்பாக்காண்டி விட்டது போலை.——!

அம்மா நான் வாழ ஆசைப்படுறன். ஆருக்காண்டியும் என்ரை ஆசையளை கனவுகளை புதைக்க நான் தயாரா இல்லை. ஒருவருக் கொருவர் விட்டுக் குடுத்துத்தான் வாழோணும் எண்டு பேச்சுக்குச் சொல்லலாம். ஆனால் வாழுற போது அப்பாக்காண்டி நீங்கள் எல்லாத்தையும் விட்டுக் குடுத்தீங்கள். உங்களுக்காண்டி அப்பா என்னத்தை விட்டுத் தந்தவர் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம். எங்கடை ஆக்கள் ஒருத்தருக் கொருத்தர் விட்டுக் குடுக்கிறது எண்டு சொன்னால் அதுக்கு அர்த்தம் பொம்பிளையள் எல்லாத்தையும் விட்டுக் குடுக்கோணும் எண்டுறதுதான். என்னாலை அது முடியாது. துளசி ஆக்ரோசமாகக் கத்தினாள்.

கோமதி சில நிமிடங்களுக்கு வாயடைத்துப் போனாள். பிறகு நிலைமை விபரீதமாகப் போகப் போவதை உணர்ந்து கொண்டவளாய் என்ன செய்யிறது துளசி. வாழ்க்கை எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். பொம்பிளையள்தான் ஒரு மாதிரி சமாளிச்சு விட்டுக் குடுத்து கெட்டித்தனமா வாழோணும். இஞ்சை பார் நான் இருபத்தைஞ்சு வருசமா உன்ரை கொப்பரோடை வாழேல்லையே? என்று சமாளிக்கும் வகையில் பேசினாள்.

அம்மா நீங்கள் வாழுறது ஒரு வாழ்க்கையே——? நீங்கள் வாழுறிங்களே-! அதுக்குப் பேர் வாழ்க்கையெண்டு மட்டும் சொல்லாதைங்கோ. திருமணம் எண்ட பேரிலை ஒரு அடிமை சாசனம் எழுதி, அதுக்கு வாழ்க்கை எண்டு ஒரு பெயர் வைச்சிருக்கிறீங்கள். எனக்குப் பிடிக்காத, எனக்கு சந்தோசம் தராத வாழ்க்கையை நான் வாழோணுமெண்டு ஏன் என்னைக் கட்டாயப்படுத்திறீங்கள்? மிகவும் எரிச்சலுடன் துளசி சத்தம் போட்டாள்.

கோமதிக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. பதினாறு வயதில் கதைத்தே துளசியின் காதலைக் கத்தரித்தது போல, துளசியின் இருபத்து நாலு வயசில் துளசியைக் கதைத்து வெல்வது சுலபமான விடயமல்ல என்பது-! கட்டுப்பாடுகள், அதனால் வந்த ஏமாற்றங்கள் மட்டும் என்றில்லாமல், புலம் பெயர் மண்ணின் பல்கலைக்கழகப் படிப்பும் துளசியைப் புடம் போட்டு எடுத்திருந்தது.

இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில் கோமதியின் மனம் கவலை கொள்ளத் தொடங்கியது. மகளை நல்ல இடத்தில் கட்டிக் குடுத்திட்டாய் என்று வாயாரப் புகழ்ந்தவர்கள் எல்லாரும் இப்ப முன்னாலை நீலிக் கண்ணீர் வடிச்சிட்டு பின்னாலை, முகவாய்க்கட்டையை தோள் மூட்டில் இடிச்சு பாரன் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறா என்று சொல்லி நையாண்டி பண்ணப் போகிறார்கள். என்ற நினைப்பே கோமதிக்குச் சங்கடமாக இருந்தது. இனி செய்வதற்கொன்றும் இல்லை. கடைசி ஆயுதம் இந்த மனுசன் தான். அப்பாவை எதிர்க்கும் தைரியம் துளசியிடம் இருந்ததில்லை. என்று நினைத்துக் கொண்டு கோமதி மௌனமாகி விட்டாள்.

மாலை அப்பா வேலையால் வந்த பின் ஒரு பிரளயமே வீட்டில் நடந்தது. கூடுதலான பேச்சு வேண்டியது கோமதிதான். அது அப்பாவின் றிக்ஸான நடத்தை. தாங்களே பேச்சு வாங்குவதை விட அம்மா பேச்சு வேண்டினால் அது பிள்ளைகளைக் கூடுதலாகப் பாதிக்கும் என்பது மனோதத்துவம். அதை அவர் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தத் தவறுவதில்லை. கூடவே மானம், மரியாதை, சமூகம், அந்தஸ்து என்று பயமுறுத்தி விடுவார். இன்றும் அவர் கடைசி ஆயுதத்தை எடுத்து விட்டார். நான் எவ்வளவு மானம் மரியாதையா இருக்கிறன் தெரியுமோ? இதெல்லாம் உன்னாலை——————! ஓரு பெரிய பிரசங்கமே வைத்து விட்டார்.

அம்மாவோடு நியாயம் பேசிய துளசி அப்பா முன் தோற்றுப் போனாள். தோற்க வைக்கப்பட்டாள். பிறகென்ன—–? மீண்டும் துளசி கணவனோடு சேர்ந்து ஒன்றாக வாழ்வதென்பது தீர்மானமாகியது.

கோமதிக்கு துளசியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தனது கண்ணீரும் அப்பாவின் ஆளுமை நிறைந்த தந்திரமான பேச்சும்தான் துளசியை மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டு விட்டது என்பதை கோமதியால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் சமூகம், கலாச்சாரம், பண்பாடு இவைகளுக்கு மத்தியில் இதை விட்டு வேறு வழி ஏதும் இருப்பதாகக் கோமதிக்கு தெரியவில்லை.

சமூகத்தின் முன் கணவனின் கெட்டித்தனத்தின் முன் துளசி விடயத்தில் வெற்றி கிடைத்து விட்டதை நினைத்து கோமதி சிரித்துக் கொண்டாள். ஆனால் துளசிக்குத் துளியும் பிடிக்காத, சந்தோம் தராத வாழ்வை வாழச் சொல்லி துளசியை கட்டாயப்படுத்தி அனுப்பியது தவறு என்று கோமதியின் மனம் கோமதியுடன் சத்தமில்லாமல் யுத்தமொன்றை நடத்திக் கொண்டேயிருந்தது.

நன்றி: ஊடறு (பெண் படைப்பாளிகளின் தொகுப்பு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *