கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,199 
 

கிரிதரன் வேலை முடிந்து தன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி போய்கொண்டிருந்தான்,திடீரென்று மழை பைக்கை நிறுத்தி விட்டு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்கினான்.எப்போது மழை நிற்கும் என்று எரிச்சல் பட்டுக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்,சிலர் மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள்,வேறு சிலர் பேருந்துக்காக நெரிசல் பட்டு காத்துக்கொண்டிருந்தார்கள்.தூரத்தில் ஒரு பெண் குடையுடன் வந்தாள்,நீண்ட கூந்தல்,வட்ட முகம் வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத அழகு.கிரிதரன் அவள் அழகில் மயங்கிப்போனான்,செதுக்கிய சிலை போலவே இருந்தாள்.அவள் வந்த வேகத்தில்,வந்து நின்ற பேருந்தில் ஏறி மாயமாக மறைந்து போனாள்.அவனுக்கு கனவு போல் இருந்தது.

மழை சற்று நிற்கவே தன் பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் கிரிதரன்,போகும் வழியெல்லாம் அவள் நினைவாகவே இருந்தது,அவனும் பல பெண்களை பார்த்திருக்கான்,ஆனால் அப்படி ஒரு அழகை பார்த்தது இல்லை, அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை,தனக்குள் சிரித்துக் கொண்டே வீட்டை அடைந்தான்.கதவை திறந்த அவனது தங்கை யமுனா,என்ன அண்ணா!சிரிச்சிகிட்டு வாற என்றதும்,ஒன்னும் இல்லை என்று சட்டென்று அறைக்குச் சென்று விட்டான்.

இரவு உணவு உண்ணும் போது,கிரி முகத்தில் சிறு மாற்றத்தை காண தவறவில்லை,அவனுடைய அப்பா சண்முகம்.என்னடா ஒரு மாதிரி இருக்க என்றார் அப்பா,வரும் போதும் சிரித்துக் கொண்டே வந்தான் அப்பா,என்று யமுனா மேலும் மாட்டி விட்டாள்.என்னடீ நீ..அவன் சிரிக்க கூட கூடாதா என்றாள் அம்மா கிரிஜா,நீ சும்மா இரும்மா,உனக்கு ஒன்னும் தெரியாது,என்னமோ இருக்கு என்றாள் கிரிஜா.ஆமா இவ பெரிய இவ,எல்லாம் தெரியும் என்று கிரிதரன் வாய் சொன்னாலும்,மனதில் படபடப்பு,கண்டு பிடித்துவிட்டார்களோ என்று,அவளை பார்த்ததுக்கே இவ்வளவு மாற்றமா,தன்னை தானே கடிந்து கொண்டான்.

கிரிதரன் ஒரு கம்பனியில் உயர்பதவியில் இருக்கிறான்,அப்பா இன்ஜினியர் என்பதால்,மகனும் அதையே தேர்வு செய்து படித்தான்.அவனின் திறமையால் இளம் வயதில் உயர் பதவியை எட்டிவிட்டான்.யமுனாவிற்கு சிறு வயதில் இருந்தே ஆசிரியராக ஆகவேண்டும் என்பது அவளது ஆசை.தற்போது கனவு நனவாகி உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்று தருகிறாள்,அவள் வீட்டின் அருகில் இருக்கும் பாடசாலையில், அம்மா சிறுவர்களுக்கு பாட்டு கற்று தருகிறாள் வீட்டில், மாலைப் பொழுதில் பொழுது போகவில்லை என்று ஆரம்பித்த பாட்டு வகுப்பு,தற்போது கிரிஜாவால் நினைத்தாலும் விடமுடியாத அளவிற்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வசதியான குடும்பம்.

சண்முகம் எப்போதும் கலகலப்பாக வீட்டில் இருப்பார். பிள்ளைகள் எதுவென்றாலும் அப்பாவிடம் தான் முதலில் கூறுவார்கள்.எதையும் நன்றாக யோசித்து நல்ல முடிவாகவே சொல்வார்,எதையும் பெரிது படுத்திக் கொள்ள மாட்டார். கிரிஜாவுக்கு அவசரப்புத்தி,உடனே முடிவு எடுப்பாள்,அது சில சமயம் பிழையாக போய்விடும்,பிறகு கவலைப் படுவாள்.சாப்பிட்டு முடித்தப் பிறகு அம்மா பாத்திரங்களை கழுவ போய்விட்டாள்,ஜமுனா நாளை படிப்பிக்கும் பாடங்களை தயார் செய்ய அறைக்குள் புகுந்துக்கொண்டாள். மொட்டை மாடிக்கு அப்பா போவதை கவனித்த கிரியும், பின்னாடியே போய்விட்டான்.

என்னடா!குட்டி போட்ட பூனை மாதிரி பின்னாடியே வாற என்றார் அப்பா,இல்லப்பா இன்னைக்கு ஒரு தேவதைய பார்த்தேன் என்றான் கிரிதரன்,எங்கடா பார்த்த,சாப்பிடும்போதே கவனித்தேன்,இப்படி அசடு வழியிற என்றார் அப்பா,பேருந்து நிலையத்தில் என்றான் அவன், உன்னுடைய பைக்கில் தானே வேலைக்கு போன,பிறகு எப்படி என்றார் அப்பா,மழைக்கு ஒதுங்கினேன்,அப்போது பார்த்தேன் என்றான் கிரி,கண்டதும் காதல் என்று சிரித்தார் சண்முகம், இப்படி சொன்னால் எப்படிடா தேடுவது,நாளைக்கு போய் இன்னைக்கு நின்ற இடத்தில் நில்லு என்றார் சண்முகம்,அப்பா.. என்றான் அவன்,அப்ப நான் போய் நிற்கவா, உனக்கு பதிலாக என்றார் அவர்,விளையாடாதீங்கள் அப்பா என்றான் கிரி,சரிசரி விடு,எப்படியும் மீண்டும் உன் கண்ணுக்கு தென்படுவாள் உன் தேவதை,அது மட்டும் கொஞ்சம் பொறு, வேலைக்கு மட்டம் போட்டு விட்டு தேட போய் விடாதே என்றார் சண்முகம்.அனுபவம் பேசுது என்றான் கிரி,ஆமாடா இல்லாட்டி உங்க அம்மாவை கட்டி இருப்பேனா!என்று இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தார்கள்.

இடைக்கிடை அவள் நினைவு வந்தாலும் கிரிக்கு,நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.மாத கடைசியில் கிரியின் சம்பள பணத்தை காசோலையாக தருவார்கள்.அதை அவன் பேங்கில் போட்டு காசாக மாற்றிக் கொள்வான்.அன்றும் காசோலையை எடுத்துக் கொண்டு பேங்குக்கு போய் வரிசையில் நின்றான், காசோலையை நீட்டும் போது சற்றும் எதிர் பார்க்காத அந்த தேவதை,கையை நீட்டியது காசோலையை வாங்க.அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை,கழுத்தில் அணிந்திருந்த பட்டியில் அவளின் பெயர் நர்மதா என்று இருந்தது.பணத்தைபெற்ற அவன் தேங்ஸ் என்று கூறி விட்டு, வேர்த்த முகத்துடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். மறுப்படியும் ஆப்பிஸ் போனவனுக்கு மாலை மட்டும் வேலையே ஓடவில்லை.

மாலை வீடு திரும்பியவன் அப்பாவை தேடினான்.என்ன விடயம் அப்பாவை தேடுற என்றாள் அம்மா,ஒன்னும் இல்லை என்றான் கிரி,அப்பா மாடியில் இருக்கார்,போய் பார் என்றாள் அம்மா. நாலு எட்டில் மாடியில் நின்றான் கிரி,அப்பா.. அப்பா.. நான் இன்று அவளை கண்டேன் என்றான்,யாரை பக்கத்து வீட்டு மாமியவா என்றார் சண்முகம்,அப்பா..என்று சினுங்கினான். அவள் பேங்கில் வேலை செய்கிறாள்,பெயர் நர்மதா என்றான். நானும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தேன்,எப்படி தேடுவது என்று இனி பிரச்சினை இல்லை, நீ ஒன்னும் யோசிக்காதே நான் பார்த்துக்கிறேன் என்றார் சண்முகம்,இப்போதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது

சண்முகம் நர்மதாவின் வீட்டு விலாசத்தை கண்டுபிடிக்க கஷ்ட்டப்படவில்லை,காரணம் அந்த பேங்கில் வேலை செய்யும் மெனேஜர் ரத்தினவேல் இவருடைய நண்பர்.அவளின் முழு விபரத்தையும் தெரிந்துக் கொண்டு,அவளின் வீட்டுக்கு ஒரு நாள் காலையில் சென்றார்.வீட்டின் பெல்லை அழுத்த அவளின் தம்பி நரேஷ் கதவை திறந்தான்,அம்மா இருக்காங்களா?நான் சண்முகம் என்று அறிமுகம் படுத்திக் கொண்டார் தன்னை, உள்ளே வாங்கள் என்று அவரை சோபாவில் உட்காரும்படி கூறி விட்டு அம்மாவை அழைத்தான் நரேஷ்,பார்வதி உள்ளே இருந்து வந்தாள்.நெற்றியில் சந்தனம்,கணவன் இல்லை என்பதை எடுத்துக் காட்டியது,இளமையாகவே இருந்தாள் பார்ப்பதற்கு,கை எடுத்து கும்பிடும் தோற்றம்.இவளே அழகாக இருக்கும் போது மகள் சொல்ல வேண்டியது இல்லை,என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

சண்முகம் வந்த விடயத்தை போட்டு உடைத்தார்.முதலில் தயங்கியவர்கள் சண்முகத்தின் கலகலப்பான பேச்சும்,ஒளிவு மறைவு இல்லாத அவர் குணமும்,அவர்களுக்கு பிடித்திருந்தது சிறிது நேரத்தில் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் மாதிரி ஆகிவிட்டார் சண்முகம்.பார்வதியும்,நரேஷும் அவருடன் சகஜமாக கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.காப்பி போட்டு கொடுத்தாள்,குடித்து முடித்து எழுந்துக் கொண்டார், மகளின் விருப்பத்தையும் கேட்டு விட்டு,அவளுக்கு சம்மதம் என்றால் மட்டும், எனக்கு போன் பன்னுங்கள்,முறைப்படி பெண் கேட்க்க வருகிறோம்,என்று கூறி விட்டு சென்று விட்டார்.வீட்டுக்கு போய் யாரிடமும் எதுவும் கூறவில்லை,அமைதியாக இருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு,பார்வதி போன் பன்னி நர்மதாவிற்கு சம்மதம் நீங்கள் தாராளமாக பெண் கேட்க்க வறலாம் என்றதும்,அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. சனி கிழமை வருவதாக வாக்கு கொடுத்தார்.சனி கிழமை காலையில் எல்லோரிடமும்,இன்று மாலை கோயிலில் பூஜை ஏற்பாடு செய்து உள்ளேன்,நாலு மணிக்கு தயாராகி விடுங்கள் என்றதும்,சரி என்று ஒத்துக்கொண்டார்கள்.அதற்கிடையில் பூ, பழம்,சுவிட் எல்லாம் வாங்கி கூடையில் போட்டு,தனது வாகனத்தில் வைத்துவிட்டார்,அதை யாரும் கவனிக்கவில்லை.

மாலை அனைவரும் கிளம்பிவிட்டார்கள்.வாகனத்தை தான் ஓட்டுவதாக கிரி கேட்டான்,வேண்டாம் நானே ஓட்டுவதாக அவரே வாகனத்தை எடுத்தார்.போகும் வழியில் எந்த கோயிலுக்கு போகிறோம்?என்று கிரிஜா கேட்டாள்,புது கோயிலுக்கு என்றதும் அமைதியாக இருந்தாள் அவள்.சற்று நேரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு,கூடையை எடுத்துக் கொண்டு நடந்த சண்முகத்தை,ஒன்னும் புரியாமல் மூவரும் பின் தொடர்ந்தார்கள்.ஒரு வீட்டின் பெல்லை அழுத்தினார், நரேஷ் கதவை திறந்தவுடன்,வாங்க அங்கிள் என்று எல்லோரையும் உள்ளே அழைத்தான்,மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்,நீண்ட நாள் பழக்கம் மாதிரி அவன் சண்முகத்திடம் பழகிய விதத்தைக் கண்டு.பார்வதி வந்து எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.

சண்முகம் எல்லோரையும் அறிமுகம் படுத்தி வைத்தார்.கிரி அப்பாவை பார்த்தான்,அப்பா கண்களில் சிரித்தார்,கிரிஜாவும், ஜமுனாவும் சண்முகத்தை முறைத்தார்கள்,இங்கு என்ன நடக்குது?என்று காத்க்குள் கேட்டாள் கிரிஜா கணவனிடம், இன்னுமா!உனக்கு புரியல உன் மகன் சுயம்வரம் என்று கூறிவிட்டு அவர் அமைதியாக இருந்தார்,நர்மதா காப்பி டம்ளர்களுடன் வெளியில் வந்தாள்,அவள்அழகில் நால்வரும் பிரம்மித்துப் போனார்கள்.மகன் தேவதை என்று சரியாக தான் கூறியிருக்கான் என்று சண்முகம் மனதில் நினைத்துக் கொண்டார்.ஓடி போய் அப்பாவை கட்டிப்பிடித்து தேங்ஸ் அப்பா என்று கத்த வேண்டும் போல் இருந்தது கிரிக்கு, அடக்கி கொண்டான்.

நர்மதா பேரழகி தான்,அதை யாரும் ஒத்துக் கொள்வார்கள். அவளின் அமைதி,பழகும் விதம் மேலும் அவளை அழகாக காட்டியது.சண்முகத்தின் குடும்பத்திற்கு அவளைப் பிடித்துப் போனது,நர்மதாவிற்கும் கிரியை பிடித்திருந்தது,பிறகு என்ன நாள் பார்த்து கெட்டிமேளம்தான்.இருவரும் இணைய சண்முகத்தின் முயற்சியே காரணம்,கிரி பல தடவைகள் அப்பாவுக்கு நன்றி சொன்னான்.பிள்ளைகளின் மனதை புரிந்து நடக்கும் பெற்றோர்கள் அமைந்தால்,எல்லோருக்கும் தேவதைகள் கிடைப்பார்கள் தானே,அதில் எந்த சந்தேகமும் இல்லையே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *