ஆறுமாத நட்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 283 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எப்படிப் பாடுகிறார் பார்த்தீர்களா? ரவை எவ் வளவு அனாயாஸமாக உதிருகின்றது!” என்றார் அவர்.

“ஆமாம், நன்றாகத்தான் பாடுகிறார்; ஆனாலும் பாவம் மட்டு” என்றேன் நான்.

“என்ன. அப்படிச் சொல்லுகிறீர்கள்? ஒரு ராகத்தை எத்தனை நாழி பாடுகிறார்? ஒரு பல்லவியில் எவ்வளவு ஸங்கதி போடுகிறார்?”

“அதெல்லாம் சரிதான். காதுக்கு மட்டும் சில இடங்களில் குளிர்ச்சியாக விழவில்லை.”

இப்படியாக எங்களுடைய சிநேகம் கிருஷ்ண கான ஸபையில் ஆரம்பமாயிற்று. கல்யாணக் கோர்ட்’ திறக்கும் உத்தராயணம் அன்றைக்குத்தான் ஆரம்பம்; பொங்கற் புதுநாள். ஸ்ரீநிவாஸையருக்கு ஸங்கீத விமரிசனத்திறன் அவ்வளவு போதாதென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். ஆனா லும் ஸங்கீதம் தெரிந்தவர்போலவும் மகா ரஸிகர் போலவும் காட்டிக்கொள்வார்.

எங்களுடைய பழக்கம், உத்தராயணத்தில் சூரிய னுடைய உஷ்ணம் வரவர ஏறுகிறதுபோல ஏறியது. அடிக்கடி ஸங்கீத ஸபையிலும் பிராட்வேயிலும் கடற்கரையிலும் கோயிலிலும் நாங்கள் சந்தித்து வந்தோம்.

இவ்வாறு பழகிவந்ததனால் அவரைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவரும் தெரிந்து கொண் டோம். ‘ஸர்வே ஆபீஸில் 150 ரூபாய் சம்பளத்தில் அவர் இருக்கிறார். மட்டுக்குடித்தனமாக இருந்து ஏதோ இரண்டு காசு சேர்த்து இப்பொழுது பெரிய குடித்தனம் நடத்துகிறார். பெரிய பெரிய மனுஷ்யர் களெல்லாம் அவருக்குப் பழக்கம். அவருக்கு 13 வயசுக்கு மேலே 14 வயசுக்குள்ளே ஒரு பெண் இருக் கிறாள். அவள் ஸங்கீதங்கூடக் கற்றுக்கொள்கிறாள். அவர் அப்பட்டமான வடதேசத்து வடமர். கோத் திரம் கௌசிக கோத்திரம் – இவ்வளவு விஷயங்கள் நான் அவரிடமிருந்து சேகரித்தவை. இவைகளிற் பெரும்பாலானவை நான் வேண்டாமலே அவராகத் தெரிவித்துக் கொண்டவை.

ஸ்ரீநிவாஸையர் பலவிதமாகக் குறுக்குக் கேள்வி கள் போட்டு என்னிடமிருந்து தெரிந்து கொண்ட விஷயங்கள் பல உண்டு. அவைகளில் முக்கியமானவை வருமாறு:

‘நான் ஹாம்டன் கம்பெனியில் மானேஜர். எனக்கு ரூ.200 சம்பளம். என்னுடைய 20 வயசுப் பிள்ளை சுந்தரேசன் பி. ஏ., பரீக்ஷையில் தேர்ச்சி பெற்றுவிட்டுச் சும்மா இருக்கிறான். அநேகமாக அவனுக்கு எங்களுடைய கம்பெனியிலேயே வேலை யாகிவிடும். நானும் வடமப் பிராமணன்; பாரத்வாஜ கோத்திரம்.’

ஒருநாள் அவர் வற்புறுத்தி என்னைத் தம்முடைய வீட்டுக்கு வரவேண்டுமென்று தொந்தரவு பண்ணி னார்; நான் போயிருந்தேன். பிரமாதமாக உபசாரமெல்லாம் செய்தார். தம்முடைய பெண்ணைக் கூப் பிட்டு அன்று பாடச் சொன்னார்; அவளுக்கு அன்று விசேஷமாக அலங்காரம் செய்திருந்தார்கள்.

அவள் பாடினாள்.

“எப்படியிருக்கிறது பாட்டு?” என்று என்னைக் கேட்டார்.

“தேவலை” என்று சொன்னேன்.

“என்ன, ஸார், பண்ணுகிறது? நல்ல பாட்டு வாத்தியார் கிடைப்பதில்லை. இருக்கிறவர்களைக் கொண்டு சரிப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தக் குட்டிக்கு ஸங்கீதமென்றால் பைத்தியம். ஸதா பாட்டுத்தான்.”

அப்படி ஸங்கீதப்பித்துடையவளாக அந்தப் பெண் எனக்குத் தோற்றவில்லை. யாரோ மூன்றாந் – தரத்துப் பாட்டு வாத்தியாரோ அல்லது வீட்டிலுள்ள பெண்களோ சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அபஸ்வரங்கள் அபரிமிதமாக அவள் பாடும் போது இருந்தன. ஆனாலும் அதை ஸ்பஷ்டமாக நான் சொல்லலாமா?

“ஒன்று உங்களைக் கேட்கலாமென்று இருந் தேன் : உங்களுக்கு ஸங்கீதத்தில் அதிக விருப்பம் இருக்கிறதே. உங்கள் வீட்டில் எல்லோருக்கும் அப்படித்தானோ?”

“ஆமாம்; என்னுடைய பையன் எல்லா ஸங்கீத ஸபைகளிலும் அங்கத்தினனாக இருக்கிறான்.”

“அப்படிச் சொல்லுங்கள். ஆமாம். இந்தக் காலத்தில் காலேஜ் பிள்ளைகள் ஸங்கீதப் போட்டிகளில் பரிசுபெறுகிறார்கள். சிலபேர்கள் வித்துவான் களைக்காட்டிலும் அருமையாகப் பாடுகிறார்கள்.”

“உங்கள் பெண்ணுக்கு யார் பாட்டுச் சொல்லித் தந்தார்?”

“ஆங் என்னவோ சொல்லித் தந்தான். எங்கள் ஊர் நட்டுவன் ஒருத்தன் இங்கே கொஞ்சகாலம் வந்திருந்தான். அவனைச் சொல்லித் தரச் சொன் னேன். உங்களுக்கு யாராவது நல்ல வாத்தியா ராகத் தெரிந்தால் சொல்லுங்களேன்.”

“அப்படியே செய்கிறேன்.”

எனக்குச் சில ஸங்கீத வித்துவான்களின் பழக்கம் இருந்தது. அவர்களில் ஸங்கீத ‘ட்யூஷன்’ சொல்லிக் கொடுத்து ஜீவனம் செய்யும் ஒருவரை ஸ்ரீநிவாஸை யர் வீட்டுக்கு அனுப்பினேன். மறுமுறை சந்தித்த போது ஸ்ரீநிவாஸையர் என்னை மிகவும் பாராட்டினார்.

“என்ன இருந்தாலும் தெரிந்தவர்களைக்கொண்டு ஒரு காரியம் பண்ணினால் அதன் சிலாக்கியமே வேறு தான்” என்றார் அவர்.

“எதை நினைத்துக்கொண்டு இதைச் சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.

“இத்தனை வருஷகாலமாக ஒரு ஸங்கீத வாத்தி யாருக்காக நான் பட்ட சிரமம் கணக்கு வழக்கில்லை. வெறும் டம்பாசாரிகளாக இருக்கிறார்கள்; சரக்கு இருப்பதில்லை. சரக்கு இருந்தால் நடவடிக்கை யிலே கோணல். பாருங்கள் : பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்திக்கு ஒரு ஸங்கீத வித்துவான் பாட்டுச் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வந்தான். என்னவோ பொடி போட்டு மயக்கி அந்தப் பெண்ணைச் சினிமா வில் சேர்ந்து கொள்ளும்படி பண்ணி விட்டான். யாரையும் நம்பமுடியவில்லை. இந்தச் சங்கடம் உங்களால் நிவர்த்தியாயிற்று.”

அவர் மேலும் உரைத்த புகழ்மாலைகளுக்கு அளவேயில்லை.

மற்றொரு நாள் ஸ்ரீநிவாஸையரைக் கடற்கரையிலே சந்தித்தேன்.

“நம்ம குட்டிக்கு இந்தத் தடவை கல்யாணம் செய்துவிடலாமென்று யோசனை. உங்கள் பிள்ளை ஜாதகத்தைத் தாருங்கள்; பார்க்கலாம்” என்றார். இவ்வளவு நாள் என்னிடம் ஆதரவு காட்டிப் பேசிய தற்குக் காரணமும் அவர் கருத்தும் முன்பே நான் ஊகித்திருந்தேன்; இப்பொழுது அவை நிச்சயமாகத் தெரிந்தன.

“அதற்கென்ன, பார்க்கலாம்” என்று சொன்னேன்.

நான் அனுப்பிய ஸங்கீத வித்துவானுக்கு மாதம் முதல் தேதியிலேயே சம்பளம் வந்துவிடும். அந்தவித்து வானிடம் அவர் சிஷ்யையைப்பற்றி விசாரித்தேன்.

“என்னவோ கடனுக்குச் சொல்லித் தருகிறேன். மாதம் மாதம் தவறாமல் சம்பளம் வந்துவிடுகிறது. காபி, டிபன் முதலிய உபசாரங்களுக்குக் குறைவில்லை” என்றார் அவர்.

நான் என் குமாரனது ஜாதகத்தை அனுப்பவேயில்லை. ஸ்ரீநிவாஸையர் கண்ணில் படாமலே இருந்து வந்தேன். அவர் பாட்டு வாத்தியாரை விசாரித்துப் பார்த்தார். “அவருக்கு எவ்வளவோ வேலை” என்று வாத்தியார் சொல்லிவிட்டார்.

சித்திரை மாதம் முடிவடைந்தது. வைகாசி மாதம் ஆரம்பமாயிற்று. ஸ்ரீநிவாஸையர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கே வரலானார். ஜாதகம் கொடுக்கும்படி கேட்பார். நான் ஏதாவது சாக்குச் சொல்லி விடுவேன். கடைசியாய் அவருக்கு மனம் புளித்து விட்டது.

ஆனி மாதம் இரண்டாம் வாரம்; ஒரு நாள் பாட்டு வாத்தியார் சிறிது வருத்தத்தோடு வந்து நின்றார்.

“என்ன சமாசாரம்?” என்று நான் கேட்டேன்.

“பாட்டுப் போதும்; நீங்கள் நாளை முதல் நின்று கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் உங்கள் நண்பர்” என்றார்.

நான் சிறிது யோசித்தேன். “சரி; நான் ஒரு ஜாதகம் தருகிறேன். அதை நாளைக்கு அவரிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி என் பிள்ளையின் ஜாதகத்தைக் கொடுத்தேன்.

மறுநாள் நான் எதிர்பார்த்தபடியே வாத்தியார் மிகவும் குதூகலத்தோடு வந்தார்; “நீங்கள் ஏதோ மந்திரம் பண்ணியிருக்கிறீர்கள்! நான் கொடுத்த ஜாதகத்தை அவர் பார்த்தார். கண்ணில் ஒற்றிக் கொண்டார். அப்புறம் திடீரென்று என்னைப் பார்த்து, ராத்திரியெல்லாம் யோசித்துப் பார்த்தேன். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எவ்வளவுக் கெவ்வளவு பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதென்று தோன்றியது. வீட்டிலும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டார்கள். ஆகையால் பழையபடியே நீங்கள் வாருங்கள். இந்த இரண்டு நாளும் பாடம் இல்லாமற் போனாலும் பரவாயில்லை. குட்டிக்கு லீவு விட்டது போல் ஆயிற்று’ என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்றார்.

மறுபடி வாத்தியார் தம் சிஷ்யைக்குப் பாடஞ் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். இரண்டு நாள் கழித்து ஸ்ரீநிவாஸையர் எங்கள் வீட்டுக்கு வந்தார். “முதல் தரமான பொருத்தம். இதைக்காட்டிலும் வேறு ஜோடியே இணையாதென்று ஜோஸ்யர் சொல்லிவிட்டார்’ என்றார். அவர் தெளிவாகப் பேசாவிட்டாலும் எனக்கு விஷயம் விளங்கிவிட்டது.

நானும், “பார்க்கிறேன்” என்று சுருக்கமாக விடை கூறி அவரை அனுப்பினேன். என் குமாரனுக்கு வேறு ஓர் இடத்தில் விவாகத்திற்கு ஏற்பாடு ஆகிக்கொண்டிருந்தது.

ஆனி மாதம் கடைசிவாரம் ஸ்ரீநிவாஸையர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்பொழுதுதான் என் பிள்ளைக்குப் பெண் கொடுப்பதாக ஏற்பாடுக ளெல்லாம் ஆகி முகூர்த்தம் எப்போது வைத்துக் கொள்ளலாமென்று கேட்பதற்கு, ஸம்பந்தியாக வரப் போகிறவரும் வந்தார். அச்சமயம் ஸ்ரீநிவாஸையர், “என்ன, பார்த்தீர்களா?” என்று உத்ஸாகத்தோடு கேட்டுக்கொண்டே வந்தார்.

“உட்காருங்கள். இவர்களைத் தெரியுமோ? இவர்கள் எனக்கு ஸம்பந்தியாக வரப்போகிறவர்கள். முகூர்த்தம் வைப்பதற்காக வந்திருக்கிறார்கள். நீங்கள் வந்து விவாகத்தை நடத்திக் கொடுக்க வேண்டும்” என்று ஸ்ரீநிவாஸையரைப் பார்த்துக் கூறினேன். மேலே பேச்சை வளர்த்தாமல் இருக்க வேறு வழி இல்லை.

“இவர்கள் ஸர்வே ஆபீஸில் பெரிய வேலையில் இருக்கிறார்கள். உத்தமமான குணம். ஸங்கீதத்தில் மகாரஸிகர்கள்” – என்று ஸம்பந்தியாகப் போகிறவருக்கு நண்பரைப் பழக்கம் செய்துவைத்தேன்.

ஸ்ரீநிவாஸையர் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே!

மறுநாள் முதல் பாட்டு வர்த்தியார் நிறுத்தப் பட்டார்.

அன்று ஆடி மாதம் முதல் தேதி; தக்ஷிணாயனம் ஆரம்பம். கிருஷ்ணகான ஸபைக்குப் போயிருந் தேன். ஸ்ரீநிவாஸையர் அங்கே உட்கார்ந்திருந்தார். “ஏன் எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வரவில்லை?” என்று கேட்கலாமென்று அவரை அணுகினேன். அவர் என்னைக் கண்டவுடன் பேசாமல் எழுந்து நெடுந்தூரத்தில் உள்ள ஓர் ஆசனத்திற் போய் உட்கார்ந்துகொண்டார்.

உத்தராயண ஆரம்பத்தில் ஏற்பட்ட எங்கள் நட்பு தக்ஷிணாயன ஆரம்பத்தில் அறுந்து போயிற்று.

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *