ஞானப்பரிணாமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,383 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலைப் பொழுது. குற்றால மலைப் பகுதியில் கிட்டத்தட்ட உச்சிப் பகுதி. செண்பகா தேவி அருவி, யாரோ தள்ளிவிட்டது போல, ஒலத்துடன் விழுந்து கொண்டிருந்தது. அந்த ஆத்திரத்தில் ஆறாக மாறிய அருவி நீர், பாறைகளைப் பிய்த்து விடுவது என்று தீர்மானித்ததுபோல், மலையைக் கிழிக்கும் வேகத்தில், கீழ்நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருப்பதுபோல், மைனாக்கள், கரிச்சான் குஞ்சுகள், குயில்கள் ஆகியவை கூட்டம் கூட்டமாக உட்கார்ந்தும், சிறகுகளை இலேசாக அடித்துக் கொண்டும் பண்ணிசைத்துக் கொண்டிருந்தன. சில பறவைகளுக்குக் காதல் வேறு வந்து விட்டது.

திடீரென்று பறவைகள் சிலிர்த்துக் கொண்டன. மலை மகளின் உச்சி முடிபோல் அடர்ந்தும். அழுத்தமாகவும் அமைந்திருந்த மரக்குவியலில், குரங்குகளின் பயங்கரமான ஒலி, அருவி ஒசையையும் மிஞ்சியது. குரங்குகளுடன் சமாதான சகவாழ்வு நடத்தும் அந்தப் பறவைகள் கூடப் பயந்து போய், பறக்கத் தொடங்கின. கிளைக்குக் கிளை தாவும் குரங்குகள் இப்போது மரத்துக்கு மரம் தாவிக் கொண்டும், அப்படித் தாவிப் பிடித்த வேகத்துடன், எல்லாக் குரங்குகளும் வருகின்றனவா என்று சரிபார்த்துக்கொண்டிருப்பது போல் திரும்பிப் பார்த்துக்கொண்டும் ஒடி வந்தன.

ஏறக்குறைய இருபத்தைந்து குரங்குகள் இருக்கும். பத்துப் பன்னிரண்டு குரங்குகளின் வயிற்றில் குட்டிகள் சிக்கெனப் பிடித்துக் கொண்டிருந்தன. வந்த குரங்குகள் வழுக்கைத் தலைபோல் மொழு மொழுவென்றிருந்த ஒரு குன்றில், இரண்டு கால்களையும் செங்குத்தாக வைத்துக் கொண்டு, கைகளால் காதுகளைப் பிறாண்டிக் கொண்டு உட்கார்ந்தன. ஆனால் அவற்றின் கண்கள் மட்டும், சற்றுத் தொலைவிலிருந்த ஒரு பகுதியைப் பீதியொடு பார்த்தன.

அத்தனை பயப் பிராந்தியிலும் தமைமைக் குரங்கு, இதர குரங்குகள் இருந்த இடத்துக்கு மேலே, நிதானத்துடன், அதே சமயம், நாலா பக்கமும் கண்ணைச் சுழற்றிக் கொண்டே உட்கார்ந்தது. அதன் பட்டத்து மகிஷியும், இதர வைப்புக்களும் அதன் அருகில் போய் உட்காருவதற்காக, மேலே போகத் தொடங்கின. ஆனால் கண்ணாளனின் தீர்க்கமான பார்வை வேறு எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டு, அவை இருந்த இடத்திலேயே மீண்டும் அமர்ந்தன.

எல்லாக் குரங்குகளும் தலைமைக் குரங்கைப் பெருமிதத்துடன் பார்த்தன. அது, சாதாரணக் குரங்கை விடச் சற்றுப் பெரியது. ‘குரங்குப் புத்தி அதிகமாக இல்லாததுபோல் எப்போதும் கம்பீரமாக உட்காரக் கூடியது. தலையில், புலித்தோல் நிறத்தில் அடர்ந்திருந்த, பட்டினும் மெல்லிய முடிக்கற்றை கிரீடம் போலத் தோன்றியது. அது, காலை மடக்கி வைத்திருந்த விதம், சிம்மாசனம் போலவும், கையைக் குவித்து வைத்திருந்த லாவகம், செங்கோல் போலவும் தோன்றின.

குரங்குகள், மெல்ல மெல்லப் பயத்தின் பிடிமானத்திலிருந்து விடுபட்டவைபோல், தங்களை உய்வித்த தலைமைக் குரங்கிடம், பின்புறமாய்ப் போய் வாலைத் துக்கின. அதுதான், குரங்கினம் தலைமைக்குச் செய்யும் அஞ்சலி. தலைமைக் குரங்கு பற்றற்ற யோகி போல், பிரஜை . குரங்குகளின் வாழ்த்தையும், வணக்கத்தையும், தேவையான அளவுக்குக் குறைவாக அங்கீகரிப்பதுபோல் தலையாட்டியது. எல்லாக் குரங்குகளும் வாலைத் தூக்கியபடி பின்புறமாய் நடந்து அஞ்சலி செய்தபோது வாளாவிருந்த ஒரு தடிக் குரங்கு, பின்னர் இதர குரங்குகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, வேண்டா வெறுப்பாகத் தன் வாலைத் தூக்க வேண்டிய அளவுக்குத் தூக்காமல், பின்னால் நகர வேண்டிய அளவுக்கு நகராமல், கடனே என்று அஞ்சலி செய்வதை, தலைமைக் குரங்கு கவனிக்கத் தவறவில்லை. முதலில் அதற்குச் சினம் பொங்கியது. அதைக் கெளவிக் கடித்து, கூட்டத்திலிருந்து வெளியேற்றி விடலாமா என்று கூட நினைத்தது. பின்னர், முன்னைய தலைமைக் குரங்கின் தளபதிபோல் விளங்கிய அது, ‘இவ்வளவாவது செய்கிறதே என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டது.

குரங்குக் கூட்டம், தலைமைக் குரங்குக்கு, அன்று அளவுக்கு மீறி அஞ்சலி செய்ததில் ஒர் அர்த்தமிருந்தது. இப்போது காத்ததுபோல் எப்போதும் காக்கவேண்டும் என்பது அதன் பொருள். சொல்லப் போனால், அவைகளுக்கு மொழிவளம் இருந்திருந்தால், மனிதனைப் போல், தலைமைக் குரங்கைப் போற்றி ஒரு கவியரங்கமே நடத்தியிருக்கும்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னால் –

குவியல் குவியலாக மண்டிக் கிடந்த மரத்தொகுதியில் ஒரத்தில் இருந்த ஒர் ஆலமரத்தில் ஒருசேர அமர்ந்து, அதன் பழங்களை இந்தக் குரங்குகள் தின்று கொண்டிருந்தபோது எந்தவிதமான சத்தத்தையும் எழுப்பாமல், ஒரு சிறுத்தை மரத்திலேறி வருவதை, இதரக் குரங்குகள் பார்க்கவில்லை. தலைமைக் குரங்கு பார்த்துவிட்டது. உடனே பயங்கரமான ஒலியை எழுப்பியது. அது உச்சியில் இருந்ததால் இன்னொரு மரத்துக்குத் தாவி, எளிதில் தப்பியிருக்கலாம். இதரக் குரங்குகள் மொத்தமாகத் தப்புவது கடினம்.

அதற்குள் மரம் இரண்டாகக் கவுணாகும் இடத்துக்குச் சிறுத்தை வந்து விட்டது. தெற்குப் பக்கம் வழுக்குப்பாறை. தாவ முடியாது. கிழக்குப் பக்கமும், வடக்குப் பக்கமும் பள்ளத்தாக்கு. விழமுடியாது. அவை தாவக்கூடிய ஒரே ஒரு பக்கம் மேற்குப் பக்கம்தான். அங்கே சிறுத்தை.

இரண்டு குரங்குகள் கிடைத்துவிட்டால் சிறுத்தை மற்றவற்றைப் பின்தொடராது என்பது குரங்குகளுக்கே தெரிந்த விஷயம்தான். இருப்பினும் அந்த இரண்டையும் இழந்து விட்டுத் தப்பிப்பதை, தலைமைக் குரங்கு விரும்பவில்லை. மரணத்தின் உச்சி போலிருந்த அந்த உச்சாணிக் கொம்பிலிருந்து, அது சற்றுக் கீழே இறங்கியது. எல்லாக் குரங்குகளையும் ஒர் அதட்டல் போட்டு, தன் பக்கம் வரவழைத்து, அரை வட்டமாக வியூகம் வகுத்துக் கொண்டது. சிறுத்தை எந்த இடத்தில் பாய்ந்தாலும் அதை வளைத்துக் கடித்து விடலாம். கீ. கீ. கீ… என்ற அச்சுறுத்தும் குரலுடன், தலைமைக் குரங்கு முழக்கமிட்டதைப் பார்த்த சிறுத்தை சிறிது யோசித்தது. அது ஒரு மூடச்சிறுத்தையாக இருக்க வேண்டும். குரங்குகள் எப்படித்தான் வியூகம் அமைத்தாலும் பாய்கிற வேகத்தில் பாய்ந்து, மீள்கிற வேகத்தில் மீண்டால் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறியாத ஜன்மம் அது. அதோடு ஏற்கனவே காட்டு நாய்களால் வளைக்கப்பட்டு, எப்படியோ தப்பித்து வந்த அதனிடம், அந்த அனுபவம் பேசியிருக்க வேண்டும். ஏறிய சிறுத்தை, கீழே இறங்கி, மீண்டும் ஏறலாமா என்று பார்த்த போது, குரங்குக் கூட்டத்தின் முன்னணியில் நின்ற தலைமைக் குரங்கு சிறுத்தை மேல் பாயப் போவதுபோல் பல்லைக் கடித்து, காலைத் துக்கி, கையை ஆட்டி, பாய்ச்சா’ பண்ணியது. இதைப் பார்த்த சிறுத்தை, அருகேயிருந்த ஒரு குகைப் பக்கமாக நடக்கத் தொடங்கியது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, எல்லாக் குரங்குகளும் இங்கே வந்துவிட்டன. தப்பித்த மகிழ்ச்சியில் பின்னுக்கு நடந்து தப்புவித்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தன.

குரங்குப் பிரஜைகளின் அஞ்சலியை ஒரளவு ரசித்துக் கொண்டிருந்த தலைமைக் குரங்குக்குத் திடீரென்று ராஜ்ய பரிபாலனம் நினைவுக்கு வந்தது. வழக்கமாகத் தாங்கள் வாழும் அந்தப் பகுதிக்கு, சிறுத்தை எப்படி வந்தது என்று யோசித்துப் பார்த்தது. சிறுத்தை, குகையைப் பார்த்துப் போனதால், அது அங்கு நிரந்தர வாசம் செய்யத் தொடங்கிவிட்டது என்பது புலனாகியது. ஒருவேளை குகையில் மேலும் ஒரிரு சிறுத்தைகள் இருக்கலாம். எப்படி வந்திருக்கும்? தலைமைக் குரங்கு ஒரு மரத்தின் உச்சியிலேறி நாலா பக்கமும் பார்த்தது. தொலை துரத்தில் மரங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதற்கு விஷயம் புரிந்துவிட்டது. பாதை அமைப்பதற்காக, மனிதன் வைத்த நெருப்பில் மாட்டிக்கொள்ள விரும்பாமல், சிறுத்தை இங்கே தங்களுக்கு நெருப்பு வைக்க வந்துவிட்டது. ஆகையால் இனிமேல் இங்கே இருக்க முடியாது. எங்கே போவது?

இருட்டத் தொடங்கி விட்டது. இனிமேல்தான், சிறுத்தைக்குக் கண் நன்றாகத் தெரியும். அதோடு, சிறுத்தை பழி வாங்குவதில், மனிதனையும் மிஞ்சக் கூடியது. தன்னை விரட்டிய குரங்குகளில் ஒன்றையேனும் மரம் மரமாக ஏறிப் பிடித்துத் தின்னு முன்னால், அதன் மனம் ஆறாது என்பது தலைமைக் குரங்குக்குப் புரிந்துவிட்டது. என்ன செய்யலாம்? எங்கே போகலாம்?

இந்தச் சமயத்தில் மலையின் கீழ்ப் பகுதிக்குப் போனால், யானைக் கூட்டம் இருக்கும். அவை இவற்றைக் கொல்லாது தான். இருந்தாலும், இந்த இருட்டில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேல் பகுதிக்கும் போக முடியாது. அங்கே காட்டு நாய்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. அவற்றின் சத்தம் கூடக் கேட்கிறது. அருகேயுள்ள பழமரத் தொகுதிக்குப் போகலாமா? கூடாது. அங்கே வாழும் இன்னொரு குரங்குக் கூட்டம் தாம் படையெடுத்துப் போயிருப்பதாக நினைத்துத் தாக்குமே தவிர, அகதிகளாய்ப் போனது மாதிரி தம்மை அரவணைக்காது. இங்கேயுள்ள மரங்களில் ஏறி இருக்கவும் முடியாது. சிறுத்தை வரலாம். என் செய்யலாம்?

ஒரே வழிதான்.

பேசாமல், இந்தப் பாறையில் விடியும்வரை துங்காமல், உஷாராக உட்கார வேண்டும். அதுவும் வியூகம் அமைத்து உட்காரவேண்டும். தின்ன வரும் சிறுத்தையைத் திருப்பித் தாக்க ஆயத்த நிலையில் இருக்கவேண்டும்.

அஞ்சலி செலுத்துவதற்காக ஆடியதில் அலுத்துப்போய் சில குரங்குகள், பாறையிலிருந்து கீழே இறங்கப் பார்த்தன. சில, மரங்களில் ஏறப் பார்த்தன. இதைக் கவனித்த தலைமைக் குரங்கு, பல்லைக் கடித்து, கைகளைத் தூக்கி, பாறையில் அடித்தது. உடனே, தலைவனுக்கு இன்னும் வழிபாட்டு மோகம் தீரவில்லை என்று நினைத்து, சில குரங்குகள் மீண்டும் பின்னால் வந்து வாலைத் துக்கின. அப்படியும் அதன் கோபம் அடங்குவதற்குப் பதிலாக, அதிகரிப்பதைப் பார்த்து, குரங்குகள் தத்தம் தலைகளைக் கைகளால் பிய்த்துக் கொண்டிருந்தபோது, தலைமைக் குரங்கு அவற்றை நெட்டித் தள்ளி, அரைவட்ட வரிசையாக நிற்க வைத்தது. இரண்டு ஒரங்களிலும் வலுவான குரங்குகளை நிற்க வைத்துவிட்டு, இது வரிசைக்கு முன்னால் வந்து நின்றது.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. சில குரங்குகள் தூங்கத் தொடங்கின. உடனே தலைமைக் குரங்கு அவற்றைக் கையால் பிறாண்டியது. குரங்குகள் மத்தியில் இலேசாகப் பரபரப்பு. இலேசான எரிச்சல். சரியாக அஞ்சலி செய்யாத அந்தத் தடிக் குரங்கு, “பார்த்தாயா . . . இவனோட . . . தர்பாரை?” என்பது மாதிரி இதர குரங்குகளுடன் கண்களால் பேசிக் கொண்டிருந்தது இரவுப் பொழுது ஒரு கட்டத்துக்கு வந்தபோது, எல்லாக் குரங்குகளுமே தூங்கின. ஆனால் தலைமைக் குரங்கு தூங்கவில்லை. தூக்கம் வருவதுபோல் தோன்றும் போதெல்லாம் இலேசாக உலாத்தியது.

பொழுது புலர்ந்தது.

எல்லாக் குரங்குகளுக்கும் கடுமையான பசி. சிறுத்தை மரத்தில் ஏறிய சமயத்தில்தான், அவை பழம் தின்னத் தொடங்கின. பறித்த பழங்களைப் பறிக்கப்பட்ட இடங்களிலேயே விட்டு விட்டு அவை ஓடிவந்து விட்டன. அதிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை. குரங்குத்தனமான பசி. அந்தப் பசியில் சிறுத்தை பற்றிய அபாயம், அவற்றுக்குப் பெரிசாகத் தெரியவில்லை. முன்பு சிறுத்தை வந்த அதே மரத் தொகுதிக்கு ஓடுவதற்கு அவை முன்னங்கால்களை அழுத்தி, பின்னங்கால்களைத் தூக்கியபோது, தலைமைக் குரங்கு பயங்கரமாகக் கத்தியது. எங்கேயும் போக வேண்டாமாம், அங்கேயே இருக்க வேண்டுமாம்.

குரங்குகள் பொறுமை இழக்கத் தொடங்கின. குட்டிக் குரங்குகள் கத்தத் தொடங்கின. போக வேண்டா மென்றால், எப்படிப் பசியை அடக்குவது? குரங்குகள் சொல்லி வைத்தாற்போல் முகத்தைச் சுழித்தன. அந்தத் தடிக் குரங்கு இப்போது சற்று வலுவாகவே முணு முணுக்கத் தொடங்கியது. தலைமைக் குரங்குக்கும் லா அண்ட் ஆர்டர் நிலைமை புரிந்து விட்டது. இருந்தும் அதன் உறுதி குலையவில்லை. அதே சமயம் அதன் கண்களில் அன்பு வெள்ளம் பாய்ந்தது.

இந்தச் சமயத்தில், சற்றுத் தொலைவில், நாலைந்து இளநீர்த் தேங்காய்கள் நன்றாகச் சீவப்பட்டு, ஐம்பது பைசா அளவு ஒட்டையுடன், கும்பம் போல் இருப்பதைக் குரங்குகள் பார்த்தன. தலைமைக் குரங்கு உத்தரவிடுவதற்கு முன்னதாகவே, அவை அவற்றை நோக்கி ஓடின. உடனே தலைமைக் குரங்கு ஓடியது. தடிக் குரங்கு உட்பட, பல குரங்குகள், தேங்காய் துவாரங்களுக்குள் கைகளை விடப் போன சமயம் தலைமைக் குரங்கு, பிரஜைகளைச் சிறிது கடித்துப் பின்னுக்குத் தள்ளியது. விஷயம் அதுக்குப் புரிந்து விட்டதே காரணம். மனிதர்கள் வைத்திருக்கும் கண்ணிகள் அவை. தேங்காய்களுக்குள் கைகளை விட்டுவிடும் குரங்குகள், பின்னர் கைகளை முஷ்டிகளாக்கி, அந்த முஷ்டிகளைப் பிரிக்காமலே கைகளை வெளியே எடுக்க முயற்சி செய்து, எடுக்க முடியாமலும், தேங்காயுடன் ஒட முடியாமலும் அங்கேயே சுற்றிச் சுற்றி வரும்போது பிடித்துக் கொள்வதற்காகக் குரங்காட்டிகள் வைத்திருக்கும் கண்ணிக் காய்கள் என்பது தலைமைக் குரங்குக்குப் புரிந்துவிட்டது. இதைப் புரிந்து கொள்ளாத சக தோழர்களை அது பயங்கரக் கூச்சலால் அடக்கி, அவற்றைப் பின்னுக்குக் கொண்டுவந்து, மீண்டும் அந்தப் பாறையிலேயே உட்கார வைத்தது.

குரங்குகள் மத்தியில் இப்போது பலமான முனகல். ஏன், தலைவன் இப்படி மடத்தனமாக நடந்து கொள்கிறான்? அந்தத் தடிக் குரங்கை, வழிகாட்ட வேண்டும் என்பதுபோல் பார்த்தன. இதற்குள் மனித நடமாட்டம் தெரிந்தது. குரங்குக் கூட்டத்தை எங்கேயும் போக வேண்டாமென்று தலைமைக் குரங்கு, தலையாட்டி உத்தரவிட்டு, தனியாகக் கீழே இறங்கியது. பத்து நிமிடத்தில் ஒரு சீப்பு வாழைப் பழங்களுடன் வந்தது. எல்லாக் குரங்குகளும் மொய்க்கத் தொடங்கியபோது, தலைமை, பழங்களைக் குட்டிகளிடம் கொடுத்தது. மீண்டும் தனியாகப் போய், தோசைகளுடன் வந்தது. சக குரங்குகளிடம் கொடுத்தது. தன்னுடன் வர யத்தனித்த தடிக் குரங்கையும், இதர குரங்குகளையும் வரவேண்டாம் என்பது போல் தலையை ஆட்டிவிட்டுப் போனது. தலைவன், அங்கே ஏதோ ஒரு தோப்புக்குள், நன்றாகத் தின்று விட்டு, எஞ்சியதைக் கொண்டு வருவதாகவும், தாங்கள் அங்கே போய் வயிறாரத் தின்னக் கூடாது என்று தங்களைத் தடுப்பதாகவும், தடிக் குரங்கு இதர குரங்குகளுக்கு முகபாவனையால் விளக்கியபோது, எல்லாக் குரங்குகளும் தலையாட்டின. சில, கோபத்தால் உதடுகளைப் பிதுக்கின.

இதற்குள் காலை நொண்டிக் கொண்டே தலைமைக் குரங்கு ஒரு தேங்காயுடன் வந்தது. கெளவிய தேங்காயைக் குரங்குக் கூட்டத்துக்கு முன்னால் போட்டு விட்டு, வலி தாங்கமுடியாமல் அது தன் வலது காலைப் பாறையில் உதைத்தது. எல்லாக் குரங்குகளும் அதை ஆச்சரியமாகவும், தோட்டத்துப் பழங்களைத் தங்கள் பார்வையிலிருந்து மறைத்த எரிச்சல் தாங்காமலும் பார்த்தன. தலைமைக் குரங்குக்கோ தன் வலியைத் தவிர, எதுவுமே தோன்றவில்லை. செண்பகாதேவி அருவிக்கருகே இருந்த அம்மன் கோவிலுக்கு, தேங்காய் பழங்களுடன் வந்த மனிதர்களை, உருட்டியும், மிரட்டியும், அவர்கள் உஷாராக இல்லாத சமயத்தில் திருடியும், பழங்களைப் பறித்துக் கொண்டு வந்த அது, இறுதியாக ஒரு சின்னப் பையன் கையிலிருந்த தேங்காயைப் பறித்துக் கொண்டு திரும்பிய போது அவனுடன் கூட வந்த ஒரு பெரிய ஆசாமி, கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் அதன் காலில் பலமாக அடித்துவிட்டார். அப்படியும் வலி தாங்காமல் வாய் வழியாகத் கத்தப் போன அது, தேங்காய் போய்விடும் என்ற அச்சத்தில் அப்படிக் கத்தாமல், மீண்டு வந்தது. காவில் இலேசாக ரத்தக் கசிவு. பிராணன் அந்தக் கசிவு வழியாகப் போவது போன்ற நரகவேதனை. ‘நீங்களும் வந்தால்… பசி மயக்கத்தில் வாழைப் பழத்தை பிடுங்கற ஜோர்லே பிடிபட்டாலும் பட்டுடுவீங்கன்னுதான் ஒங்கள இங்கேயே இருக்கச் சொன்னேன். கடைசில… நான் மாட்டிக் கிட்டேன்… சத்தியமாய் நான் இன்னும் எதையும் திங்கல…’ என்று பேசப் போன தலைமைக் குரங்கால் பேச முடியவில்லை. கனிகள் பழுத்துக் குலுங்கும் தோப்புக்குத் தான் மட்டும் போய்விட்டு, எதையோ வாங்கிக் கட்டிக்கொண்டு வந்த தங்கள் தலைவன், ப.ட்டும் என்று நினைத்தவை போல, ஒன்றையொன்று பார்த்து இலேசாகச் சிரித்துக் கொண்டன.

இதற்குள் நடப்பதை நோட்டம்விட்ட தலைமைக் குரங்கின் பழைய எதிரியான அதே தடிக்குரங்கு சுற்று முற்றும் பார்த்தது. பின்னர் சந்தர்ப்பத்தை நழுவ விடாதது போல், மின்னல் வேகத்தில் பாய்ந்து, தலைமைக் குரங்கைத் தாக்கியது. ஏற்கனவே ரத்தம் கசிந்த அதன் காலைக் கடித்து, முகத்தை நகத்தால் பிறாண்டியது. கழுத்தைப் பலங்கொண்ட மட்டும் கடித்தது. எதிர்பாராத தாக்குதலால் வியப்படைந்த தலைமைக் குரங்கு இதர குரங்குகளைப் பரிதாபமாகப் பார்த்தது.

இப்போது தடித்த குரங்கோடு, இதர குரங்குகளும் சேர்ந்துகொண்டு அதைத் தாக்கின. வயிற்றில் நகக் கீறல்கள். கழுத்தில் கடிகள்; காயம்பட்ட காலில் வால்களின் அடிகள். போரில் தோல்வியுற்ற நெப்போலியனை, அவன் பட்டத்தரசியே நிராகரித்தது போல, தலைமைக் குரங்கின் பட்டத்து மகிஷியும், இதர வைப்புக்களும் புதுத் தலைமைக் குரங்குக் குத் தாங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொண்டதை நிரூபிக்கும் வகையில் மாஜி மணாளனை ஒடஒடத் துரத்தின.

பழைய தலைமைக் குரங்கினால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தன் மாஜிப் பிரஜைகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே எவற்றுக்காகத் தன் காலை ஒடித்துக் கொண்டதோ, அவற்றின் அச்சுறுத்தலை நெஞ்சில் பொறுக்க முடியாமலும், அடிகளை உடம்பில் சுமக்க முடியாமலும், ஒரு பள்ளத்தில் இறங்கி, கிறங்கிப் போய் நின்றது.

இதற்கிடையே தடிக் குரங்கு, பட்டம் எய்தியதுபோல், ஒரு காலை உயரமாகத் துக்கி வைத்துக்கொண்டு, கம்பீரமாக இருக்க, இதர குரங்குகள், அதன் அருகில் போய், வாலைத் தூக்கி, அஞ்சலி செலுத்தின. பின்னர், புதிய தலைமை கிடைத்த களிப்பில், எல்லாக் குரங்குகளும் சிறுத்தை வாசம் செய்யும், அந்தப் பழைய பகுதியை நோக்கி ஓடின. அங்கே… போகாண்டாம். போகாண்டாம், என்று கண்களால் கெஞ்சிக் கொண்டு பின்தொடர்ந்த பழைய தலைமைக் குரங்கைப் பார்த்து, எல்லாக் குரங்குகளும் முறைத்தன. உடனே, புதிய தலைவனான தடிக் குரங்கு, தன் வீரத்தை, பிரஜைகளுக்குக் காட்டும் தோரணையில், துள்ளிக்கொண்டே ஓடி அந்த நொண்டிக் குரங்கின் நொண்டிக் காலை, மீண்டும் குறி பார்த்துக் கடித்துவிட்டு, வெற்றிக் களிப்புடன் திரும்பி வந்து பிரஜைக் குரங்குகளைப் பழைய இடத்துக்கு அழைத்துச் சென்றது.

தனித்து விடப்பட்ட நொண்டிக் குரங்குக்கு நினைத்துப் பார்க்கப் பார்க்க, நெஞ்சம் விம்மியது.

அந்தத் தடிக் குரங்கு, கண்ணித் தேங்காய்க்குள் கையை விடப்போனபோது, இது நினைத்திருந்தால், ஒரு மனிதனைப் போல் நடந்திருக்கலாம். எதிரிக்கும் கருணை காட்டிய நமக்கா இந்தக் கதி என்று கதியற்று கத்தியது. வாழ்ந்த அருமையையும், வாழ்விழந்த வெறுமையையும் இணைத்துப் பார்த்து, இனம் தெரியாத சோகம் இதயத்தைக் குத்த, நொண்டியடித்துக் கொண்டே அது மலைச் சரிவில் கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

சிற்றுத் தொலைவில், வாய்க்கு வெளியே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த ஒர் ஒநாய்க்குப் பயந்து, மனித நடமாட்டம் இருப்பதுபோல் தோன்றிய ஒரு குகையை நோக்கிச் சென்றது.

குகைக்குள், பத்மாசனத்தில் அமர்ந்து, ஒரு காவிச் சாமியார் எதையோ ஜெபித்துக் கொண்டிருந்தார். மோனமே அமைதியாகவும், அந்த அமைதியே ஒர் அருட் பாய்ச்சலாகவும், பற்றற்ற ஒன்றில் பற்று வைத்தது போல் தோன்றிய சாமியார், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். பரிதாபமாக ஒரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டு, கண்களால் கெஞ்சியபடி நின்ற குரங்கைப் பார்த்ததும், அவர் உள்ளம் நெகிழ்ந்திருக்கவேண்டும். சிவ சிவ என்று சொல்லிக் கொண்டே தம் பக்கமாக வரும்படி குரங்குக்குத் தம் கண்ணசைவால் அருள் காட்டினார். முதலில் சிறிது தயங்கிய குரங்கு பின்னர் அவர் கண்களில் மின்னிய அருட்டாலிப்பை உணர்ந்துபோல அவரை நெருங்கிக்கொண்டிருந்தது. சாமியார், வெண்பற்கள் வெள்ளிபோல் மின்ன, அமைதியாக, சூனியத்தில் பார்வையை நிலைநிறுத்தியவாறு பேசினார்.

“வாடாப்பா… வா… கவலைப்படாமல்… கஷ்டத்தை அங்கேயே விட்டு விட்டு நிர்மலமாக வாடாப்பா… ஒவ்வொருவருக்கும் ஒருகாலகட்டம் உண்டு. நன்மை தீமை போலவும், தீமை நன்மை போலவும் தோன்றுவது காலத்தின் மாயை.

“காலத்தை, அதன் வெளிப்பாடுகளில் இருந்து தனிப்படுத்தி, பிரித்துப் பார்த்து, அதில் உணர்வு மயமாகக் கலப்பதே மெய்ஞானம். கால வெளிப்பாடுகளான வெற்றி, தோல்விகளால் சுவாசிக்கப்பட்ட நீ, இனிமேல் பரம் பொருளாய் விளங்கும் காலத்தைப் படிப்படியாய் உணர்ந்து, அந்த உணர்வைச் சுவாசித்து உய்வடையலாம். வாடாப்பா வா. ஊனத் தோல்வி, ஞான வெற்றிக்கு உதவும் என்ற உணர்வோடு வா… அஞ்சாமல் வா…”

சாமியார், நொண்டிக்கொண்டே ஒரு காலைத் தூக்கிக் காட்டிய அந்தக் குரங்கை, தில்லையம்பலக் கூத்தனாகப் பாவித்து, ஞானப் பரவசத்தில் முறையிட்டாரா அல்லது அந்தக் குரங்கைத் தன் மனமாகப் பாவித்துப் பேசினாரா என்பது தெரியவில்லை. எப்படியோ குரங்கு, அவர் அருகில் வந்தது. சாமியார் அதன் உடம்பு முழுவதையும் தடவினார்.

பரிணாமப்பட்ட மனித குலத்திலிருந்து சற்று அதிகமாகப் பரிணாமப்பட்ட அந்தச் சாமியாரும், எதிர் காலக்கட்டத்தில், மனிதனைப் போல் அல்லாது, இன்னொரு நல்ல பரிணாம வெளிப்பாடு தோன்றுவதற்கு ஒருவேளை காரணமாக இருக்கக்கூடிய அந்தக் குரங்கும், உருவ வேறுபாட்டை, கால வேறுபாடாக ஒதுக்கி, அவற்றுள் உள்ளோங்கிய ஆன்மாவை காலமாகப் போற்றி ஒருவரை ஒருவர் மானசீகமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *