ஜூனியர் ஆர்டிஸ்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 4,263 
 
 

தானொரு சிறந்த நடிகராக வேண்டும் என்பதே சத்தியனின் லட்சியம். வெள்ளித்திரையில் தனது முகம் தெரிந்து விடாதா? என்று ஏங்கும் ஒரு சராசரி மனிதன் மட்டுமல்ல, அதற்கான உழைப்பையும் விடாமுயற்சியையும் தன்னகத்தே கொண்டவன். அவனுடைய முக்கிய மற்றும் முதலாவது வேலை, புதிய படங்களை தயாரிக்கும் அலுவலகம் திறந்த உடனே அதற்கான ஆடிஷனில் கலந்துகொள்வது தான். பல ஆடிஷன்கள் கலந்து கொண்டாலும் தன் திறமையை காட்டும் அளவிற்கு கதாபாத்திரம் கிடைக்காததால், சிறு மனக் குழப்பத்துடன் அவன் காணப்பட்டு வந்தான். அவனுக்கு ஆறுதலாக கோயில்களே இருந்தது. ஒரு நாள் ரயிலில் பயணத்தின் போது, தன்னுடைய திறமையை வெளிக்காட்ட பல்வேறு வழிகளை சிந்தித்து கொண்டு இருந்தான். ரயிலில் ஒரு திருநங்கயின் செயலை கண்ணிமைக்கா வண்ணம் கண்டு கொண்டிருக்கையில் மனதில் அவனுக்கு ஒரு பிடி கிட்டியது. கையில் இருந்த காசுகளை சேகரித்து, அவனே திருநங்கையை மையப்படுத்தி குறும்படம் எடுத்தான். அதற்கு “இவள் பாரதி” என்ற தலைப்பை வைத்து அவனே திருதங்கையாகவும் நடித்தான்.

அது தனக்கு ஒரு பெரிய பெயரை வாங்கித் தரும், திரைத்துறையில் அடுத்த நிலைக்குச் செல்லும் என்று கனவு கண்டு கொண்டிருந்தான். பிறகு வழக்கம் போல் தன்னுடைய திரைப் பயணத்தை தொடர்ந்தான். பல உதவி இயக்குனர்களை பின் தொடர்ந்து வாய்ப்புகளை பெற முயற்சித்தான். ஒருநாள் செய்தித்தாளில் வந்த செய்தியின் படி திருநங்கைகள் நடத்தப்படும் குறும்படப் போட்டிக்கு, இவள் பாரதி குறும்படத்தை அனுப்பி வைத்தான். உழைப்பவனுக்கு என்றுமே ஊதியம் உண்டு என்ற வாக்கின்படி தேசிய அளவில் சிறந்த நடிகனாக விருதுகளைப் பெற்றான். அதன்பின் பல இயக்குனர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அடடே இதுதான் திரையில் மின்னுவதற்கு வழியா! இது தெரியாமல் போயிற்றே என்று வருத்தப்பட்டான். ஆனால் அவனுக்கு இதைவிட பெரும் இடி காத்திருந்தது என்பதை அவன் உணரவில்லை. ஒருநாள் உதவி இயக்குனர் மகேஷிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது,

“சார் உங்க நடிப்பு எங்க இயக்குனருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு, வர்ற 25ஆம் தேதியிலிருந்து ஒரு பத்து நாள் பிளாக் பண்ணிக்கோங்க”

என்றான். சத்தியன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு வரப் போக இருக்கும் கதாபாத்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டு ஷூட்டிங் தேதிக்காக காத்திருந்தான். உதவி இயக்குனர் அழைப்பு வந்தது,

“சார் சூட்டிங் கொஞ்சம் டேட்டு தள்ளிப்போய் இருக்கு. வெயிட் பண்ணுங்க நான் கூப்பிடுறேன்” என்றான். சத்தியன் தன்னுடைய உற்சாகத்தை குறைத்துக் கொண்டு மீண்டும் பல சினிமா அலுவலகத்திற்குச் சென்று தனது திறமையை காட்டி கொண்டு வந்திருந்தான்,

உதவி இயக்குனர் மகேஷிடம் இருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது,

“சாரி சார் இந்த படத்துல கேமராமேனின் நண்பர் உங்க ரோல் பண்றாங்க கண்டிப்பா அடுத்த படத்துல சந்திக்கலாம்”

என்றான். இந்த முறை அவனுக்கு ஆறுதலாக இருந்தது பல நாளிதழ்கள் இவள் பாரதி குறும்படத்தை பற்றி பேசியது.

மீண்டும் மற்றொரு உதவி இயக்குனர் அரவிந்திடம் இருந்து அழைப்பு வந்தது,

“சார் எங்க படத்துல உங்கள ஒரு வக்கீல் ரோலுக்கு செலக்ட் பண்ணி இருக்கோம் நாளை மறுநாள் ஏவிஎம் ஸ்டுடியோ விற்கு வந்துடுங்க”

என்றான். அவ்வளவுதான் சத்தியனிற்கு இரவு முழுவதும் வாதாடுவது போல் கனவாகவே வந்துகொண்டிருந்தது. அந்தக் கதாபாத்திரம் சத்யனுக்கு கிடைக்க அரவிந்து மிகவும் பாடுபட்டு இருந்தான். ஏனென்றால் அரவிந்த் இவள்பாரதி குறும்படத்தால் கவரப்பட்டவன். சத்தியனிற்க்கு மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்தது அதிர்ச்சி. இயக்குனர் சத்தியனிற்கு சீனை விளக்கிக் கொண்டிருந்தார்.

“தம்பி நல்லா கேட்டுக்கங்க உங்க சீன் இதுதான் ஆக்ஷன்ல ரூமிலிருந்து கதவு திறந்து பயந்தபடியே ஓடணும் OK”.

சத்தியமன் திருதிருவென முழித்தான். ஓர பார்வையில் தனக்கு இந்த கதாபாத்திரம் இல்லையே என்றபடி உதவி இயக்குனர் அரவிந்தை பார்த்தான். அரவிந்திருக்கும் ஒரே குழப்பம் மீண்டும் இயக்குனர் தனது காட்சியை சத்யனிடம் விளக்குகிறார்.

“தம்பி புரியுதா போலீஸ் வந்து உன்ன விபச்சார விடுதியில் கைதி பன்ற காட்சி தான் எடுக்க போறோம். நீ கைலியை கட்டின வாறு பயந்து ஓடுற ஓகே”.

சத்தியனிற்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி, இயக்குனரிடம் கெஞ்ச ஆரம்பித்தான்,

“சார் சார் நான் தேசிய அளவில் விருதுகள் வாங்கி இருக்கேன் சார். நல்ல நடிப்பபே சார் என்ன நம்புங்க சார்” என்று கதறியது உதவி இயக்குனர் அரவிந்தை கண்கலங்க செய்தது. ஆனால் இயக்குனர் கோபத்துடன்,

“முடிஞ்சா இந்த ரோல் பண்ணு இல்லனா போய்கிட்டே இரு” என்றார்.

உதவி இயக்குனர் அரவிந்தும் இயக்குநரிடம் சிபாரிசு செய்ய, இயக்குனர் கோபத்தில் வெளியே சென்று விட்டார். தன்னுடைய நிலைமையை சத்யன் அரவிந்திற்க்கு கூற அரவிந்தனும் குழம்பியபடி,

“எனக்கும் ஒன்னும் புரியல. ஏன் இப்படி திடீர்னு உங்க ரோல மாத்துனாங்கனு தெரியல வெரி சாரி ப்ரோ” என்றான். திடீரென இயக்குனர் அங்கு வர,

“இன்னும் ரெடியாக வில்லையா?” என்று சத்தியனை நோக்கி கத்தினார். அதற்கு சத்தியன்,

“இல்ல சார் இந்த காட்சியைப் பற்றி தான் பேசிகிட்டு இருந்தேன். கைலியோட ஓட்டுவதை விட கைலிய அக்கில்ல வச்சுக்கிட்டு ஜட்டியோட ஓடுனா இந்த சீன் இன்னும் நல்லா இருக்குமே” என்றான் கலக்கத்துடன். இயக்குனரால் எதுவும் பேச இயலவில்லை. தனியாக வந்து அரவிந்தனிடம் இயக்குனர்,

“எனக்கு இது முதல் படம். இந்த படம் நடக்கலனா என் வாழ்க்கையே போச்சு, சத்யனுக்கு கொடுத்த கதாபாத்திரம் தயாரிப்பாளரின் பையனுக்கு வேணும்னு சொல்லிட்டாரு, என்னால ஒன்னும் பண்ண முடியல” என்றார். ஆம் இப்பொழுதெல்லாம் ஒரு இயக்குனர் தன்னுடைய படத்திற்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமல் போயிற்று. சத்தியன் தன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து, மீண்டும் புதிய சினிமா அலுவலகத்திற்கு ஆடிஷனுக்காக சென்றான்.

உழைத்தால் மட்டும் போதாது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற விஷயத்தை, சத்தியன் புரிந்து கொண்டான். ஒருநாள் வெள்ளித்திரையில் ஜொலிப்பான் என்பது உறுதியே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *