ஜான்சி ராணிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 7,049 
 
 

“ஏ புள்ள! நானெல்லாம் அந்த காலத்துல நெதமும் எட்டு மைலு தொலவு நடந்து போய் படிச்சிட்டு வந்தவந்தான்! அப்போ மாதிரியா இருக்குது ஊரு இப்போ? ரோட்டு போட்டிருக்காங்க. அக்கம் பக்கத்து ஊருங்களுக்கு பஸ்ஸ§ ஓடுது?”

இளங்கோ வாத்தியார் பேசுவதை பூங்கோதையும் காவேரியும் விழிகள் விரியக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

எட்டாவது வரை கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிட்டு, இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் என்று வாங்கிப் படித்தவர்களுக்கு பக்கத்து ஊரில் படிப்பு என்றதும் ஏற்படும் மலைப்பு புரிய வர, வாத்தியார் ‘கட கட’வென்று சிரித்தார்.

“என்ன புள்ள முழிக்குறே?” என்றார் பூங்கோதையைப் பார்த்து.

“பஸ்ஸுக்கு பாசு அரசாங்கமே எலவசமா குடுக்குது. நெதமும் போய் வரப் போறீங்க! பக்கத்து ஊர் பள்ளிக்கோடத்திலேயும் சத்துணவு போடறாங்க. சரி, சரி! நீங்க போயி ஒங்க ஆத்தாளையும் அப்பனையும் வரச் சொல்லுங்க! அவுங்க கிட்டவும் விசயத்தை சொல்லிடலாமில்லே?”

அந்த இரண்டு சிறுமிகளும், “வணக்கம் அய்யா!” சொல்லி விட்டு சிட்டாய்ப் பறக்க, வாத்தியார் திண்ணையில் அமர்ந்து அவர்களின் விண்ணப்பத்தாட்களைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார்.

இளங்கோ வாத்தியார் இந்த சின்னஜமீன்பட்டி கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து படித்து முடித்து ஆசிரியரானதும் தன்னுடைய கிராமத்திலேயே பணியாற்ற விரும்பி வந்தவர்.

சின்னஜமீன்பட்டி கிராமப் பள்ளிக் கூடம் அவரது முயற்சியால் தான் எட்டாம் வகுப்பு வரை வளர்ந்திருகிறது. ஒம்பதாவது படிக்க பக்கத்து டவுனுக்குத் தான் போக வேண்டும்.

வாத்தியாருக்குக் குழந்தைகளில்லை. கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் எல்லா பிள்ளைகளையும் தன் சொந்தக் குழந்தைகளாகவே பாவித்து அன்புடனும் கண்டிப்புடனும் நடத்தி வந்தார்.

கிராமத்து ஜனங்கள் எதை சாக்கிட்டு பிள்ளைகள் படிப்பை நிறுத்தலாம் என்ற மனப்பான்மையோடே வாழ்பவர்கள். அதுவும் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால் போதும்! எப்படி அவர்களை வீட்டுக்குள்ளேயே மடக்கிப் போட்டு ஒரு கல்யாணம் கட்டி வைக்கலாம் என்று தான் கணக்குப் போடுவார்கள்!

இங்கே அவர் முயற்சியெடுத்து படிக்க வைத்த பெண்பிள்ளைகள் மேற்படிப்பு படிக்க வேண்டாமா? ‘பெரிய ஆட்களாக’ வர வேண்டாமா? பூங்கோதையும், காவேரியும் புத்திசாலிப் பெண்கள். படிப்பில் ஆர்வம் உள்:ளவர்கள். அவர்கள் பெற்றோர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லி பக்கத்து ஊருக்கு ஒம்பதாவது படிக்க அனுப்புவது தன் பொறுப்பு மட்டுமல்ல, தன்னால் நிச்சயம் முடியக்கூடிய காரியம் என்ற நம்பிக்கை வாத்தியாருக்கு இருந்தது.

“வாத்தியாரய்யா! வாத்தியாரய்யா!”

பதட்டமாய் ஓடி வந்தனர் நான்கைந்து சிறுவர்கள்.

“ரோட்டுக் கிட்டே ஏதோ தகராறுங்களாம்! நம்மூருக்குள்ளார வருமே அந்த பஸ்ஸைக் கொளுத்திப்புட்டாங்களாம்! ஓடியாங்கய்யா!”

மூச்சு வாங்க, பிள்ளைகள் வந்த வேகத்திலேயே திரும்பி ஓடினார்கள்.

திடுக்கிட்டுப் போன வாத்தியார் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவர்கள் பின்னாலேயே ஓடினார்.

தாயாய் பிள்ளையாய் இது நாள் வரை பழகி வந்த கிராமத்து ஜனங்கள் மொத்தமும் இரண்டு அணியாக உருமாறி மெயின் ரோட்டில் வெறியோடு கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வருடக் கணக்கில் போராடி மனு கொடுத்து கிராமத்துக்காகக் கேட்டு வாங்கிய வழித்தடம்….அதில் போய் வரும் ஒரே பஸ்……………..இதோ இப்போது அவர்கள் பகைமைத் தீயில் அவர்கள் கண்ணெதிரிலேயே கருகி…. சாம்பலாகி…..

ஒரு வாரமாகவே ஊருக்குள் அரசல் புரசலாகப் புகைந்து கொண்டிருந்த விவகாரந்தான்!

எந்த விசேஷமான பெயருமில்லாமல் நிம்மதியாக ஓடிக்கொண்டிருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பேருந்து பிரிவிற்கு ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் பெயரைச் சூட்டப் போவதாக அறிவித்திருந்தது அரசாங்கம். உடனே அந்த தியாகியின் சாதியைச் சேர்ந்தவர்கள் அகமகிழ்ந்து போக, கிராமத்திலுள்ள மற்றொரு முக்கிய உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் சினந்து எழுந்தார்கள். அரசாங்கம் ‘பெயர் வைக்கப்போகிறேன்’ என்று அறிக்கை தான் விட்டது. இன்னும் பெயர் சூட்டு விழா நடை பெறவில்லை. அதற்குள்….அதற்குள்………….

வாய் வார்த்தையாய் இரண்டு சாதிக்காரர்களிடையேயும் ஆரம்பித்த தகராறு வலுத்து….இதோ…இப்போது ஊருக்குள் வரும் பஸ்ஸை நிறுத்தி கொளுத்தியதில் முடிந்திருக்கிறது. பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்களான பூங்கோதையின் அப்பன் சடையனும், காவேரியின் அப்பன் ராசுவும் இபோது எதிரெதிர் அணியில் கட்டிப் புரண்டு கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் சைரன் ஒலிக்க போலீஸ் ஜீப் வர, கல்லெறிபட்ட காக்காய்க் கூட்டம் போல ஜனங்கள் சிதறி ஓடி மறைந்து கொண்டனர்.

இளங்கோ வாத்தியார் இடுப்பு வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு கிணற்றிலிருந்து நீரை இறைத்து முன் வாசல் தோட்டத்துச் செடிகளுக்குப் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

“பக்கத்து டவுன் இஸ்கோல்ல புள்ளைய படிக்கப் போடப் போறீங்களாய்யா?”

பூங்கோதையின் அப்பன் சடையன் துண்டை இடுப்பில் கட்டி, பணிவாக வாத்தியார் எதிரே நின்றான்.

“போடலாமுன்னுதான் நெனச்சேன்!”

வாத்தியார் அவனை ஏறெடுத்தே பார்க்காமல் கருமமே கண்ணாக வேலை செய்து கொண்டே பேசினார்.

‘கட கட’வென்ற சத்தத்துடன் ஜகடை உருள, இரும்பு வாளி கிணற்றுக்குள் போய் நீர் முகர்ந்து வெளியே வந்தது.

சடையனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“எடம் கெடைக்கிலீங்களா அய்யா?” என்றான் பலகீனமான குரலில்.

“எடமெல்லாம் கெடச்சுப் போச்சு. ஆனா இஸ்கோலுக்கு எப்படிப் போவாங்களாம்?”

“அதான்…” ஏதோ வேகமாகச் சொல்ல வாயெடுத்த சடையன், வாயைப் பொத்திக் கொண்டான்.

அவன் மனக்கண் முன் பஸ் ‘திகுதிகு’வென்று எரிந்தது.

அப்போது, “வாத்தியாரய்யா!” என்ற குரலோடு ராசு வந்து நின்றான்.

“நீங்க கூப்புட்டதா புள்ள சொல்லிச்சிங்க. எப்படியாச்சும் அதுக்கு ஒம்பது சேர்ந்திடணுமாம். என்னையக் நெதமும் கெடந்து தொளைக்கிறா புள்ள!” அவன் குரலில் பணிவோடு தன் பெண் காவேரியைப் பற்றிய பெருமிதமும் கலந்திருந்தது.

“சேக்கலாந்தான்! ஆனா எப்புடிப் போவுறது? பஸ்ஸ§ தான் எரிஞ்சு போச்சே?”

“இந்த ஒரு பஸ்ஸ§தானா ஓடுது அரசாங்கத்தில? இது எரிஞ்சு போச்சின்னா இன்னொண்ணு வுடறாங்க! அதில போவலாமே?” என்றான் ராசு அலட்சியமாக.

“வுட மாட்டாங்களாமே? காலையில கலெக்டரைப் போயி கேட்டுப் பார்த்திட்டு தானே வந்தோம்?”

வாத்தியார் ஈரக்கையை மேல் துண்டில் துடைத்துக் கொண்டு திண்ணையில் ஏறி அமர்ந்தார்.

ராசுவுக்குத் ‘திக்’ கென்றது.

“ஒங்க ஊரு ஜனங்க போட்டி பொகைச்சல்னு சண்டை போட்டுக்கிட்டு பொதுச் சொத்தை எரிப்பாங்க, அழிப்பாங்க. அதுக்கு நாங்க எப்புடி பொறுப்பேத்துக்க முடியும்னு கை விரிச்சிட்டாங்க”

“சின்ன ஊரு! கையளவு மனுஷங்க! ஆனா ஒத்துமையில்லியே? அதான் இப்போ அவுங்க புள்ளைங்க படிப்புக்கே வழியில்லாம போச்சு!” என்றார் வாத்தியார் தரையைப் பார்த்துக் கொண்டு உணர்ச்சியற்ற குரலில்.

“வாத்தியாரய்யா!”

குரல் கேட்டு நிமிர்ந்தார் வாத்தியார்.

சடையனும் ராசுவும் எப்போது போனார்கள் என்று தெரியவில்லை. அந்த இடத்தில் இப்போது பூங்கோதையும் காவேரியும் நின்று கொண்டிருந்தார்கள்.

“அய்யா! நாங்களும் ஒங்களைப் போலவே நடந்து போயி படிக்கிறோங்கய்யா!” என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.

அவர்கள் முகத்தில் தென்பட்ட தீவிரத்தைப் பார்த்து விட்டு, “எங்க ஊரு ஜான்சி ராணிங்களாச்சே நீங்க? வேற எப்புடி பேசுவீங்களாம்?” என்றார் சந்தோஷமாக.

“வர்ற வெசாயக்கெழமெ இஸ்கோலு தொறக்குதில்ல? காலையில் ‘வெள்’ளென எந்திரிச்சு ரெடியாகி, சோத்தைக் கட்டிக் கிட்டு மெயின் ரோட்டுக்கு வந்திருங்க!” என்றார் வாத்தியாரய்யா.

பள்ளியில் சேர்ப்பதற்காக ஏற்கெனவே ஒருமுறை பஸ்சில் அழைத்துப் போயிருக்கிறார். புள்ளைகளுக்கு இடம் தெரியும்.

வியாழக்கிழமை!

காலை ஆறரை மணிக்கே, துவைத்துப் போட்ட பழைய சீருடையான நீல நிற சூடிதார் அணிந்து, நெற்றியில் கருப்பு சாந்து பொட்டும் அதன் மேல் கீற்றாக விபூதியும் மின்ன, பூங்கோதையும் காவேரியும் கையில் தூக்குச் சட்டியுடனும், புஸ்தகப்பையுடனும் ரோட்டுக்கு வந்தார்கள். இவர்களுக்கு முன்பே இளங்கோ வாத்தியார் தன் சைக்கிளில் மெயின் ரோட்டுக்கு வந்து நின்று கொண்டிருந்தார்.

“இந்தாங்க புள்ளைங்களா! போகையில ஒருத்தி, வருகையில ஒருத்தின்னு மெறிச்சிக்கிட்டுப் போங்க! திரும்ப நம்ப ஊருக்குள்ளார பஸ்ஸ§ வுடற வரைக்கிலும் வாத்தியாரய்யா சைக்கிள் ஒங்களுக்குத்தான்! ம்! கௌம்புங்க!”

சற்றும் எதிர்பாராத இந்த செயலால் திகைத்துப் போன சிறுமிகளுக்குப் பேச்சே வரவில்லை.

“நீங்க எம்புள்ளைங்கம்மா! ஒங்களை என்னிய மாதிரி நடந்து போயி படிக்க விட எனக்கு மனசு வரலியே!” வாத்தியார் குரல் பாசத்தில் கரகரத்தது.

“வர்றோங்கய்யா!” என்று விடை பெற்று கொண்ட காவேரி சைக்கிளில் ஏறி மிதிக்க, பூங்கோதை கேரியரில் தாவி ஏறிக் கொண்டாள்.

“நல்லா படிச்சு நல்ல புள்ளைங்கன்னு பேரெடுக்கணும். என்ன? வெளங்கிச்சா?” வாத்தியார் குரலில் இப்போது கண்டிப்பு ஏறி கம்பீரமாய் தொனித்தது.

‘ஜான்சி ராணிகள்’ என்று தான் அன்போடு அழைக்கும் சிறுமிகள் குதிரையேற்றம் போல சைக்கிளில் ஆரோகணித்துச் செல்வதை, சைக்கிள் கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றார் இளங்கோ வாத்தியார்.

‘ஊர்ப்புள்ளைங்க எல்லாம் படிச்சிட்டு வந்தா ஊரு மாறிடாதா என்ன? ஆனா அப்பவும் ரெண்டு சாதிங்க இருக்கும் ஊருக்குள்ளார. படிச்சவங்க, படிக்காதவங்கன்னிட்டு! அதுக்கென்ன? இருந்திட்டுப் போவட்டுமே?’ தன் எண்ணங்களோடு உறவாடிக்கொண்டே மெதுவாக ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார் இளங்கோ வாத்தியார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *