சிலந்தி வலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,496 
 
 

இரத்தத்தால் சிவப்பு அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையத்திற்குள், சப்-இன்ஸ்பெக்டர் இளைஞன் சாமிநாதன் நுழைந்ததும், மாமாமச்சானாய் பேசிக் கொண்டிருந்த ஏட்டு முதல் இரண்டாம் நிலைக் காவலர்கள் வரை, கப்சிப் ஆனார்கள். காரணம், அவர்கள், அவனை அவனாகப் பார்க்கவில்லை. காக்கி யூனிபாரத்தில் மூன்று நட்சத்திரங்களும், அசோகச் சக்கரமும் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய அதிகாரி, கூரையை பிய்த்துக்கொண்டு அவன் தலைக்கு மேலும், பூமியைக் குடைந்து கொண்டு காலுக்கு கீழும் ஒரு விஸ்வரூப வேதாளமாய் வியாபித்திருப்பதாகவே அவர்களுக்குத் தோன்றியது.

இந்த ஆகாயப் பாதாள உருவத்திற்கு பயந்ததுபோல், புரமோட்டியான எல் அண்ட் ஒ’ – அதாவது ஏட்டுப் பதவியில் இருந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் இன்னொரு சப் இன்ஸ்பெக்டராக மாறிய பெருமாளின் முன்னால் மேஜையில் கையை வில் போல் வளைத்தபடி, பேசிக் கொண்டிருந்த ஏட்டய்யா, லாக்கப் அறைப்பக்கம் ரோல்கால் எடுக்கப் போவதுபோல் போனார். நான்கைந்து காவலர்கள், தென்பக்கம், கிட்டங்கிபோல் தோன்றிய அறைக்குள் துப்பாக்கிகளை துடைக்கப் போனார்கள். வெளியே துப்பாக்கி சகிதமாய் நின்றவர்கள், சிறிது தொலைவிலுள்ள புளிய மரத்தடி மாமூல்காரர்களை, கையமர்த்தினார்கள். ரைட்டர் எனப்படுபவர், தனது சித்திரகுப்த நோட்டை விரித்துப் பிடித்தார். நீடித்த கலகலப்பு, நிசப்தமாகி, அந்த காவல் நிலையம் மயான பூமியாய் தோன்றியபோது .

சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், புரமோட்டி பெருமாளை ஒரு ‘கிரைம் முறைப்பாய் முறைத்தபடியே, மையூரிய மேஜையில் அட்டை கிழிந்த ஊதா நிறப் பொதுநாள் குறிப்பேட்டை எடுத்தான். நேற்று வரை, எல் அண்ட் ஒ பெருமாளே, இந்த க்ரைம் சப்இன்ஸ்பெக்டரின் குறிப்பையும் அவன் பெயரிலேயே எழுதி வைப்பார். ஆனால், நேற்றைய வாக்குவாதத்தால், அவர் தனது வேலையை மட்டுமே கவனித்தார்.

வாக்குவாதம் என்பதைவிட, ஒருவேளை பெருமாளின் வாக்கால், அவர் வதம் செய்யப்படக்கூடிய தகராறு. அவ்வப்போது காவல் நிலையத்திற்குள் உடம்பை வெளியே வைத்துக்கொண்டு, தலையை மட்டும் காட்டிவிட்டுப் போகும் சாமிநாதனைப் பார்த்து, அவன் வேலையையும் சேர்த்துப் பார்க்கும் கட்டாயத்திற்குள்ளான வயதான பெருமாள், ஏம்ப்பா சாமி… ஒருநாள் ஒரு பொழுதாவது உன் வேலையை பார்க்கக்கூடாதா…? என்று சிரித்தபடிதான் சொன்னார். அதுவும் கழண்டு கிடந்த அவன் சட்டையில் உள்ள ஈய உருண்டை பொத்தானை மாட்டியபடிதான் பேசினார். உடனே இவன், நாளையிலிருந்து என் வேலையை நீங்க பார்க்கக்கூடாது என்று ஆணைக்குரலில் பேசிவிட்டு, அவர் மாட்டிய பித்தானையும் கழட்டினான். கழட்டிக்கொண்டே, என் வேலையை, யாரை வைத்துப் பார்க்க வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும் என்றும் சொல்லி வைத்தான். அதிலிருந்த மிரட்டலைப் புரிந்து கொண்டவர்போல், பெருமாள், ஆரம்பத்தில் நடுங்கிப் போனார்.

இந்த சாமிநாதன், அசோகச் சக்கர அதிகாரியிடம் போட்டுக் கொடுத்து”, தன்னை தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றி, ஒரு தலையாட்டி சப்இன்ஸ்பெக்டரை கொண்டு வரப்போகிறான் என்பது புரிந்து விட்டது. ஆனாலும், தலைக்கு மேல் வெள்ளம் போன தைரியத்தில் அல்லது தத்தளிப்பில் அவர் மறுபேச்சு பேசவில்லை. இந்த சப்பயல் சாமிநாதனோடு இருப்பதைவிட தண்ணியில்லாத காடே மேல் என்று தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொண்டார்.

இப்போது இந்த இருவரும் மூன்றடி இடைவெளியில் இருந்தாலும், முந்நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்கள் போல் முகம் பார்க்க மறுத்தார்கள். பகல் பதினோரு மணிக்கு வந்துவிட்ட சாமிநாதன், பொதுநாள் குறிப்பேட்டில் எழுதத் துவங்கினான். இன்று காலைக் கடமை அறிக்கை துவக்கப்படுகிறது என்ற கோடிட்ட தலைப்புச் செய்திக்குக் கிழே, காலை ஏழு மணிக்கு கிரைம் காவலர்களை சரிபார்த்து, ரோல்கால் எடுத்தானாம். ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை காவலர்களுக்கு பாடம் நடத்தினானாம். சாதிக் கலவரங்களை, சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக அணுக வேண்டுமா அல்லது சமூகக் காரணிகளாகக் கருதி, நீக்குப் போக்காக நடக்க வேண்டுமா என்பது அவன் எடுத்த பாடமாம். பாடத்திற்குப் பிறகு, சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி காவலர்களை தெளிவடைய வைத்தானாம்.

சாமிநாதன், பொதுநாள் குறிப்பேட்டில், இப்படியாக எழுத வேண்டியவற்றை எழுதி முடித்து விட்டு, வழக்குக் குறிப்பேட்டைத் திறந்தான். பிரேத பரிசோதனை, விபத்து விசாரணை, கோர்ட் வழக்கு, ரிமாண்ட் கைதிகள், காணாமல் போனவர்களின் கண்டுபிடிப்புகள், பிட் பாக்கெட், புலன்விசாரணை போன்ற பணிகளுக்கு நியமித்திருக்கும் காவலர் பெயர்களை எழுதி வைத்துவிட்டு, தனக்கு எந்த டுட்டியை ஒதுக்கலாம் என்று தலையைக் குடைந்தபோது

காக்கிச் சட்டையில் சாம்பல் நிற இரட்டை வெள்ளைப் பட்டைகளைக் கொண்ட ஒரு காவலர், இளைஞன் ஒருவனை அவன் தலைமுடியை முன்பக்க குடுமிக் கைராக்கி, மாடுபோல இழுத்துக்கொண்டு வந்து, சாமிநாதன் பக்கமாய் குப்புறத் தள்ளியபடியே, நேரடி வர்ணனை கொடுத்தார். –

வேன்களில் பயணிகளை ஏற்றக்கூடாதுன்னு தடை வந்திருக்கு. இவன் என்னடான்னா… ஒவர் லோடா ஏத்திக்கிட்டிருக்கான். ஸ்டேஷனுக்கு வாடான்னு கூப்பிட்டால், என்ன விஷயமுன்னு வேன் சீட்ல இருந்து இறங்காமலே தெனாவட்டாய் கேட்கறான் ஸார்… இந்த நாயை முட்டிக்கி முட்டி வாங்கனும் ஸார்… ஒரு வருடத்துக்கு இவன் வேனை முடக்கிப் போட்டு, காய்லாங் கடைக்கு அனுப்பும்படி செய்யனும் ஸார்…”

சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும் கறிக்கோழி போல, கூனிக் குறுகியும் சிலிர்த்தும் நின்றான் வேன் டிரைவர். சாமிநாதன், இருவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, எதையோ யோசிப்பதுபோல் ஆள்காட்டி விரலால் நெற்றிப்பொட்டை மூன்றுதடவை தட்டிவிட்டு, வாய் மலர்ந்தான்.

“சரி… நீங்க, ரிமாண்ட் கைதிகளை கூட்டிக்கிட்டு கோர்ட்டுக்குப் போங்க. இவனை நான் கவனிச்சுக்கிறேன்.”

இளைஞனை மாடாக்கிய அந்தக் காவலர், உள்ளங்கையில் நமச்சல் ஏற்பட்டும் பலனில்லாமல் போனதை பற்கடியாய் வெளிப்படுத்திய படியே, லாக்கப் அறைக்குப் போனார். சாமிநாதன், பெருமாளை ஒரக்கண் போட்டுப் பார்த்து முடித்துவிட்டு, வேன் டிரைவரிடம் அமைதியாகக் கேட்டான்.

“எந்த டிராவல்ஸ்டா…?”

“நித்தியா டிராவல்ஸ் ஸார்… நான் முதலாளிகிட்ட எவ்வளவோ சொன்னேன் ஸார். வேன்ல ஷார்ட் டிரிப் அடிக்கக்கூடாதுன்னு பலதடவைச் சொன்னேன் ஸ்ார். அவர்தான் “நானிருக்கேன் பயப்படாதேன்னு சொன்னார் ஸார்…”

“போகட்டும். உன் கம்பெனியில எத்தனை டுரிஸ்ட் வண்டிங்க இருக்குதுடா….?”

“ஏ.சி. அம்பாசிடர் எட்டு… ஏ.சி. டாடா சுமோ ஒன்பது… மகேந்திரா ஆறு… அப்புறம், ஏ.சி. இல்லாத முப்பது வண்டிகள் இருக்கு ஸார்…”

“சரி… லைசென்சை எடு…”

‘முதலாளி, என் லைசென்சை வாங்கி டேங்கர் லாரிக்காரங்கிட்ட கொடுத்துட்டார் ஸார். அவனுக்கு லைசென்சு கிடையாது… சரியா ஒட்டவும் வராது… மூணு பேரைக் கொன்னுட்டான். அதுக்காக, என் லைசென்சை அவன் லைசென்சா காட்டியிருக்கு…”

“ஒன் போட்டோவை வச்சு கண்டுபிடித்திடலாமே…?”

“எங்க முதலாளி இந்திரஜித் ஸார்… சமாளிச்சுக்குவார்…”

“இதுக்கே உங்க ரெண்டு பேரையும் ஆறு வருஷம் உள்ள போடலாம்.”

‘அய்யா தர்மபிரபு… நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். எப்படியோ உண்மையை உளறிட்டேன். நீங்கதான் என்னை, என் முதலாளிகிட்ட இருந்தும் காப்பாத்தணும். உங்க காலுல…”

வேன்காரன், ஏங்கி ஏங்கி அழுதபடியே, சப்-இன்ஸ்பெக்டரின் பூட்ஸ் காலில், மனித வெடிகுண்டுபோல் குனிந்தபோது, சாமிநாதன் அவனை லத்திக் கம்பால் நிமிர்த்தியபடியே, ஒரு யோசனை சொன்னான்.

“உன்னை பார்க்கிறதுக்கு பாவமாய் இருக்குது. இந்தா வி சிட்டிங் கார்டு… இந்த விலாசத்திற்கு நாளைக்கு, ஏ.சி. சுமோவோட காலை ஆறுமணிக்கு போய் நிற்கணும். அந்த வீட்ல இருக்கிற ஒருவரை திருப்பதி வரைக்கும் பத்திரமாய் கொண்டு போய், பத்திரமாய் கொண்டு வரணும். சாப்பாட்டில் இருந்து சகல வசதியையும் தடயுடலா கவனிச்சுக்கணும். புரியுதா…?”

“எதுக்கும் எங்க முதலாளிகிட்ட ஒரு வார்த்தை…”

“அடி செருப்பால…”

லாக்கப் கைதிகளை பார்த்துவிட்டு திரும்பிய அதே காவலர், சப்-இன்ஸ்பெக்டரின் வாய், செருப்பானபோது, அவரது கைகளும், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கைகளோடு சேர்ந்து வேன்காரன் மீது விழும் செருப்பானது. முடியுமா… முடியாதாடா…’ என்று ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பிற்கும் ஒவ்வொரு விதமாய் அடித்தார். உடனே வேன்காரன், முடியும் ஸார்… முடியும் ஸார்…’ என்று வலியோடு முனங்கினான். அடித்த களைப்பிற்காக, சிறிது நேரம் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட சாமிநாதன், அந்த அடிதடிக் காவலரை அமைதிப் படுத்திவிட்டு ஆணையிட்டான்.

“இந்தப் பயகிட்ட ஒரு ஸ்டேட்மெண்டை வாங்கிக்கோ… இந்தா பாருப்பா! ஒன் பேரு என்ன…? பழனியா…? அதுதான் லைசென்சு இல்லாம ஒட்டாண்டியாய் வந்திருக்கியோ…? உன் வேன் இங்கேயே நிற்கட்டும். நாளைக்கு திருப்பதிக்கு போயிட்டு வந்த பிறகு, இங்கே வா… என்னை மட்டும் பாரு… சரியா…?”

“அய்யா அடிக்கக்கூடாது… முதலாளிக்கு மட்டும் ஒரே ஒரு டெலிபோன் போட்டு பேசிடுங்க…”

“நான் டெலிபோன் செய்யுற அளவுக்கு உன் முதலாளி பெரிய மனுஷன் இல்லடா… அவனை, எனக்கு நல்லாவே தெரியும். நான் சொன்னேன்னு சொல்லு… உன்மேல சந்தேகம் வந்தால், அவனை எனக்கு டெலிபோன் செய்யச் சொல்லு… ஏண்டா யோசிக்கே…? ஒண்ணு உள்ளே போ… இல்லன்னா வெளியே போ…”

வெளியே போகப்போன வேன்காரனை, அதே அடிதடிக் காவலர் இழுத்துப் பிடித்தார். இருவரும் பிராணச் சிநேகிதர்களாய் ஒரு மூலைப் பக்கமாகப் போனார்கள். அவர்கள் போவது வரைக்கும் பொறுமை காத்த சாமிநாதன், டெலிபோனை சுழற்றினான்.

அம்மாவா..! அய்யா வேண்டாம் உங்க கூடத்தான் பேசணும். நம்ம டாக்டர் தம்பி… திருப்பதி போறதுக்கு ஏ.சி. வண்டி வேணுமுன்னு கேட்டதா சொன்னிங்க இல்ல…? தம்பிகிட்ட சொல்லி டுங்க. நாளைக்கு காலையில சரியா ஆறுமணிக்கு ஒரு சுமோ உங்க வீட்டு முன்னால வந்து நிற்கும். ஒரு பைசாகூட கொடுக்கவேண்டாம். என்னதும்மா…? மாசம் பிறந்து நாலு நாளு ஆயிட்டுதேன்னு அய்யா என்னை விசாரிச்சாரா…? இதோ வந்துக்கிட்டே இருக்கேம்மா…”

எல் அண்ட் ஒ பெருமாளுக்கு, ஒரு தர்ம சங்கடம். அன்றைக்குப் பார்த்து அந்தப் பகுதியில் ஒரு சாதி ஊர்வலம். இந்த சாமிநாதன் போட்டுக் கொடுத்ததாலோ என்னவோ, அசோகச் சக்கர அதிகாரி, கூடுதல் போலீஸ்காரர்களை அனுப்ப மறுத்துவிட்டார். இந்த கிரைம் சாமிநாதனும், தனது காவலர்களுக்கு குறிப்பிட்ட பணிகளை ஒதுக்கிவிட்டான். தள்ளிப் போடக்கூடிய பணிகள்தான். அவனிடமே வாய்விட்டுக் கேட்டார்.

“சாமி… சாமி… இன்னைய ஊர்வலத்துல குடிகாரங்க நிறைய வருவாங்க. இப்படித்தான் போன ஊர்வலத்துல எங்கிருந்தோ வந்த ஒரு குடிகாரன், புரட்சிப் புயல் என்கிறதுக்குப் பதிலாய், புரட்சிப் பயல்ன்னு உளறிக் கொட்டி பெரிய ரகளையே நடந்துட்டு… உன் ஆட்களையும் எனக்கு உதவியாய் போடுப்பா…”

“மனுஷன்னா ரோஷம் இருக்கணும் ஸார். ஒங்க வேலை ஒங்களுக்கு… என் வேலை எனக்கு…”

சாதி ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த தவறிய குற்றச்சாட்டின் பேரில், அசோகச் சக்கர அதிகாரி, ஒருவேளை இந்த எல் அண்ட் ஒ’ பெருமாளை இடைக்காலப் பதவி நீக்கம் செய்தாலும் செய்யலாம் என்று நினைத்தபடியே, சாமிநாதன் தலைபோகிற வேலை இருப்பதுபோல், ஜீப்பில் டிரைவர் இருக்கையில் துள்ளிக் குதித்தான். அதற்குள், புளிய மரத்து அடிவாரக்காரர்கள், தலைவிரி கோலமாய் ஓடிவந்து, ஜீப்பை சூழ்ந்து கொண்டார்கள். மனுக்களைக் கொடுக்கிற சாக்கில், அவன் பேண்ட் பைகளையும், சட்டைப் பைகளையும் உப்ப வைத்தார்கள். ஆசாமி, ஏதோ பூச்சி கடித்து வீங்கிப் போனது போலவே காட்சியளித்தான்.

அசோகச் சக்கர அதிகாரியின் வீட்டிற்குள் நுழைந்ததுமே, வராண்டாவைத் தாங்கும் துண்களில் சாய்ந்தபடியே தூங்கிய இரண்டு காவலர்கள், துப்பாக்கிகளைக் கைமாற்றி, “டக்கென்று சத்தத்தை எழுப்பி, அவன் வருகையை அங்கீகரித்தார்கள். அவர்களைப் பார்த்து உப்புச் சப்பில்லாமல் தலையாட்டிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து ஊஞ்சல் பலகையில் ஆடிக்கொண்டிருந்த அம்மாவுக்கு, சாமிநாதன் ஒரு சல்யூட் அடித்தான். பெரிய அதிகாரியின் காக்கி யூனிபாரம், சுவரில், சோளக்காட்டுப் பொம்மையாய் தொங்குவதைப் பார்த்துவிட்டு, அவன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அந்த முகம் பூஜை அறையை நிமிட்டிக் காட்டியது.

சாமிநாதன், பூஜை அறைக்கு வெளியே ஒரு வெறுங்காலும் உள்ளே ஒரு வெறுங்காலுமாய் நின்றபோது, அசோக சக்கர அதிகாரி, தாம்பூலத்தட்டில் கற்பூரம் ஏற்றி, அங்கிருந்த தெய்வப் படங்களுக்கு ஆலவட்டம் சுற்றினார். உடனே சாமிநாதன், அந்தத் தட்டில் கத்தை கத்தைகளாக ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு, அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, நிமிர்ந்து ஒரு சல்யூட் அடித்தான். அவரும், அந்த நோட்டுக்கள் எவ்வளவு தேறும் என்பதை குத்துமதிப்பாய் நோட்டமிட்டபோது, இவன் என் பங்கைக்கூட எடுக்கலை ஸார்…’ என்றான். உடனே அவர், நல்லா இரு. லட்சுமி கடாச்சம் கிட்டட்டும்…’ என்று ஆசிர்வதித்துவிட்டு, அவனது நெற்றியில் குங்குமம் வைத்தார்.

பூஜை அறையிலிருந்து பக்திப் பரவசமாய் வெளியேறிய சாமிநாதன், ஊஞ்சல் பலகை அம்மாவை கண்களால் கும்பிடுவதுபோல், விழிகளை செங்குத்தாய் நிமிர்த்திவிட்டு, வீட்டுக்கு வெளியே, வந்து பூட்ஸ்களை மாட்டப் போனபோது, உள்ளேயிருந்து ஒரு கைதட்டல். திரும்பிப் பார்த்தால், அசோகச் சக்கரத்தின் அருமை மகன் வசந்த்…

சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், பூட்ஸ்களை கைகளால் துக்கிக்கொண்டே, அவன் பக்கம் ஓடினான். இது வாரிசுக் காலம். அவனோ தகப்பன் சாமி. நாயைக் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டாலும், வாலுக்கு பதிலாக தலையாட்டியாக வேண்டும். அந்த இளைஞன், புன்சிரிப்பாய் பேசினான்.

“திருப்பதிக்கு ஏ.சி. வண்டி ஏற்பாடு செய்ததற்கு ரொம்ப நன்றி பிரதர்…”

“ஓங்களுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்வேன்…? அப்புறம் ஏழுமலையான்கிட்ட எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்க டாக்டர் தம்பி…”

“நான் மலைக்குப் போகல… நண்பர்களோட அடிவாரத்துக்குத்தான் போறேன். ஒங்களுக்குப் புரியுமுன்னு நினைக்கேன். ஒங்ககிட்ட சிக்கி இருக்கிற ஏதாவது ரெண்டு கேஸ்களை தள்ளி விடுங்க…”

“ரொம்ப லேட்டா சொல்றீங்களே…”

“நீங்க நினைத்தா குடும்பப் பெண்ணையே பிராத்தலுல புக் பண்ணலாமே…?”

“பார்க்கலாம்…”

“பார்க்கலாம் இல்ல… பார்க்கணும். ஒங்க ஒர்க்மேட் பெருமாளுக்கு டாடி, நாள் குறிச்சிட்டார். பேஸ்டட்… நான் கும்பிட்டால்தான், அவன் கும்பிடுவான். ஒங்க காலுலயே, அவனை விழ வைக்கிறேன் பாருங்க…”

“அவ்வளவு வேண்டாம்… வயசானவன். என் கையைப் பிடித்துக் கெஞ்சினாப் போதும்.”

“அப்புறம் மிஸ்டர். சாமிநாதன்! என்னோட கேர்ல்.பிரண்ட் ரமேகா, நாளைக்கி காதலிக்க வாங்க என்று ஒரு கலை நிகழ்ச்சி வைத்திருக்காளாம். நீங்க இப்பவே போய், அவளைச் சந்தித்து செக்யூரிட்டி ஏற்பாடுகள் பற்றி பேசிடுங்க. நீங்க வருவீங்கன்னு நான் அவளுக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இன்னைக்கு முடியாட்டால் நாளைக்கி காலைல கூட நீங்கப் போகலாம்…”

“எந்தக் காரியத்தையும் உடனே முடிக்கிறவன் இந்தச் சாமிநாதன். இப்பவே போறேன்…”

சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், பெரிய திரை – சின்னத்திரை நடிகையான ரமேகாவின் பங்களாவில் முகப்பு புல்தரையின் இருபக்கமும், சிங்கம் போலவும் புலி போலவும், நாட்டிய மங்கை போலவும் கத்தரிக்கப்பட்ட புல் பொம்மைகளை லத்திக் கம்பால் தடவி விட்டபடியே நடந்தான். அவளுக்காக, அதிகாரப் பூர்வமற்ற முறையில் பாதுகாப்பாக போடப்பட்டிருந்த ஒரு முதல் நிலைக் காவலரும், இன்னொரு இரண்டாம் நிலைக் காவலரும், அவனை அதிசயித்துப் பார்த்தார்கள். இந்தச் “சின்னவீடு’ இவனுக்கு கைமாறியிருக்குமோ என்று அவர்களுக்கு ஒரு சந்தேகம். கைமாறவில்லை என்று அவர்கள் அனுமானிக்கும்படி, இவன், பூட்ஸ்களை கழட்டி வைத்துவிட்டு, சல்யூட் அடிப்பதற்குத் தயாராக வலது கையை உயரே துக்கிக்கொண்டே உள்ளே போனான்.

வெல்வெட் சோபா செட்டில், நிர்வாணமான இரண்டு கால்களையும் தூக்கி வைத்துக்கொண்டு, கால்மாட்டில் கிடந்த இரண்டு மூன்று இளைஞர்களின் தலைகளை கோதிவிட்டபடியே, ரமேகா, வாயும் கிளாசுமாய் லூட்டி அடித்துக் கொண்டிருந்தாள். அவன், தங்களை கைது செய்யத்தான் வந்திருப்பான் என்ற சந்தேகத்தில், அங்கே ஆடை பாதி அங்கங்கள் பாதியாகக் கிடந்த ஏழேட்டு பேர் அலறியடித்து எழுந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ரமேகாவைப் பார்த்து ஒரு சல்யூட் அடித்தான். அடித்தபடியே கேட்டான்.

“மேடம்! உங்களோட காதலிக்க வாங்க…”

“வாட்…?”

“சாரி மேடம். அந்த பேர்ல நடக்கிற ஒங்க கலைநிகழ்ச்சிக்கு, நான் செக்யூரிட்டி ஏற்பாடு பற்றி பேச வந்திருக்கிறேன். டாக்டர். தம்பி அனுப்பி வச்சார்.”

“நாங்க இப்போ, நீங்க சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கிறோம். நாளைக்குக் காலையில வாங்க…”

எல்லோரும் கொல்லென்று சிரித்தபோது, கூனிக்குறுகி நடந்த சாமிநாதனை, ரமேகா சொடக்கு போட்டு திரும்ப வைத்தாள்.

“லுக் மிஸ்டர் சப்-இன்ஸ்பெக்டர்! காலையில ஸாாப்பா 6மணிக்கு வந்துடனும். நான் துங்கி எழுந்திரிக்க லேட்டானாலும், காத்திருங்க பிளீஸ்…”

“எஸ் மேடம்…”

சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தள்ளாடியது போலவே, அவனது ஜீப்பும் தள்ளாடியது. அந்த வாகனம் மட்டும் போலீஸ் அலங்காரத்தோடு இல்லாதிருந்தால், வண்டியும் நொறுங்கி இருக்கும்; அவனும் நொறுங்கியிருப்பான். எப்படியோ காவல் நிலையத்திற்குள் திரும்பினான். அவன் மனதுக்குள் செல்வி ரமேகாவைப் பற்றி ஆபாச சொற்களை உள்ளடக்கிய ஒரு அகராதியே உருவானது. ஆனாலும், அவள் கலை நிகழ்ச்சிக்கு, எந்தெந்தக் காவலர்களை அனுப்பலாம் என்ற சிந்தனை, அவன் மூளையை ஆக்கிரமித்திருந்தது.

இந்தச் சமயத்தில் ‘எல் அண்ட் ஒ’ பெருமாள், தனது சகாக்களோடு வெளியேறுவதற்குத் தயாராக இருந்தார். பல ஊர்வலங்களில் ஒரே முகம் அடிக்கடித் தென்பட்டால், அந்த முகத்தை குளோசப்பில் எடுக்கவேண்டும் என்று போலீஸ் புகைப்படக்காரருக்கு, அறிவுறுத்திக் கொண்டிருந்தார். லத்திக் கம்புகளை குனித்து வைத்திருக்க வேண்டும் என்றும் சகாக்களுக்கு தெளிவாக்கினார்.

சாமிநாதன் உட்காரும் முன்பே, ரைட்டர், அவன் பெயருக்கு வந்திருந்த ஒரு பெரிய கவரை நீட்டினார். அப்பாவித்தனமான கவர். அதைப் பிரித்துப் பார்த்தால், முன்னாலும் பின்னாலும் அரக்கு முத்திரைக்குமேல் அரசாங்க முத்திரை பொறிக்கப்பட்ட சின்ன சிவப்புக் கவர். அதன் மேல்பக்கம் அந்தரங்கம் என்ற வாசகம். நடுப்பக்கம் சாமிநாதனின் பெயரும் பதவியும் கொண்ட சாமிநாதன், அந்தக் கவரை நிதானமாகத்தான் பிரித்துப் பார்த்தான். சிலசமயம் இப்படிப்பட்டக் கவர்களில் பாதுகாப்பு பற்றிய ரகசிய ஆணைகள் வருவதுண்டு. ஏகத்தாளமாக கவருக்குள் இருந்த வெள்ளைக் காகிதத்தை பிரித்தபடியே படித்தான்.

சாமிநாதனின் தலைக்குள் ஒரு பிரளயம்… கண்களுக்குள் ஒரு இருட்டு… அந்த எழுத்துக்களைத் தவிர எதையுமே பார்க்க முடியாத சூன்யம். அந்தக் காகிதம், இப்படி சேதி சொன்னது:

“ஜெட் 2. காவல் நிலைய குற்றயியல் துணை ஆய்வாளரான திரு. சாமிநாதன், வேலையில் விசுவாசமாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு குற்றவியல் புலன்விசாரணைகள் நிலுவையில் நிற்கின்றன. இது, திரு. சாமிநாதனின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையுமே காட்டுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள், அவர், தன்னை திருத்திக் கொள்ளவேண்டும். தவறினால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதனால் எச்சரிக்கப்படுகிறார்.”

சுவரையே சாய்க்கும் பலம் படைத்த சாமிநாதன், சுவரிலேயே சாய்ந்தான். கண்கள் பொய்யா? காகிதம் பொய்யா? என்று மூளைக்குள் ஒரு பட்டிமன்றம். ஆனாலும், பொய்யில்லை; மெய்தான் என்று கட்புலன் மூளைக்குச் சொல்கிறது. கிழே அதே அசோகச் சக்கர அதிகாரி கையொப்பமிட்டிருக்கிறார். கோணல் மாணலான கையெழுத்து. அதற்குக் கீழே, அடைப்புக் குறிக்குள் அவரது பெயர் பெரிய எழுத்துக்களில் டைப் அடிக்கப்பட்டுள்ளது. அதற்கும் கிழே, அவரது பதவி முத்திரை. தமிழக அரசின் இன்னொரு தனி முத்திரை.

காதும் காதும் வைத்ததுபோல் வந்திருந்த அந்த மெமோவை, சாமிநாதன் பகிரங்கப் படுத்தினான். ஒரு பைத்தியம் வீறிட்டு படிப்பதுபோல் படித்துவிட்டு, பெருமாளை நோக்கி, “பார்த்திங்களா ஸார்… பார்த்திங்களா…” என்று முதல் தடவையாக ‘ஸார் போட்டுவிட்டு, தொப்பியை எடுத்து துரே வீசினான். லத்தியை மேஜையில் போட்டான். அவன் கை இடுப்புக்குப் போனபோது, பெருமாள் அவன் கையைத் திருகி, பேண்டின் பக்கவாட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். அவனை, அப்படியே நிமிர வைத்துவிட்டு, போலீஸ் தர்மத்தை உபதேசித்தார்.

“இது, எல்லா அதிகாரிகளும், தனக்கு விசுவாசமாய் இருக்கிறவங்களுக்கு திட்டமிட்டே கொடுக்கிற பரிசுப்பா… உனக்கும் அவருக்கும் இருக்கிற உறவு, நாளைக்கு மொட்டை மனுவாயோ அல்லது பத்திரிகை மூலமாகவோ வெளிப்பட்டால், அவன் எனக்கு எந்தவிதத்திலும் வேண்டியவன் இல்லை. முன்னாலேயே மெமோ கொடுத்திருக்கிறேன் பாருங்க… என்று சொல்வதற்கான பாவலாதான் இந்த மெமோ. நீ அவரிடமே கேட்டால், சும்மா ஒப்புக்கு கொடுத்தேன். இது ரிக்கார்டுல இருக்காதுன்னு மழுப்புவார்.”

“இனிமேல் அவனுக்கு மாமூல் வதுலிச்சு கொடுக்க மாட்டேன்.”

“உன்னால முடியாது தம்பி… நீ மட்டும் சப்ளை அண்டு சர்வீஸ் செய்யலன்னா, உன் கடமையில இருக்கிற ஒட்டைகளை பெரிசாக்கி, உன்னை, அவர் சஸ்பெண்ட் கூட செய்யலாம்.”

“அப்போ மாமூலும் தொடர்ந்து கொடுக்கணும்; மாமா வேலையும் செய்யனும், மெமோவுக்கு மேல மெமோவும் வாங்கணும். என்ன ஸார் நியாயம்…?”

“அநியாயந்தான்… எப்படியோ ஒரு சிலந்தி வலையில சிக்கிக்கிட்டே…. ஒண்ணு, சிலந்தியே வலையே அறுத்தாத்தான் உண்டு. பொதுவாக, பெரிய பூச்சிங்க சிக்கிக்கிட்டால், சிலந்தியே பயந்துபோய், வலையை அறுத்து அதைத் தப்பிக்க வைக்கும். இதனுடைய தாத்பரியத்தை அப்புறமா பேசிக்கலாம். இப்போ, எனக்கு நேரமாவுது. எங்கேயும் போகாதே… இங்கேயே இரு…”

“ஜீப்பை எடுத்துக்குங்க ஸார். என் ஆட்களையும் கூட்டிக்கிட்டு போங்க ஸார்…”

‘எல் அண்ட் ஒ’ பெருமாள், ஒரு சோகப் புன்னகையோடு, சகாக்களோடு வெளியேறினார். சாமிநாதன், மேஜையை குத்தினான்; சாமியாடுவதுபோல் தலையை ஆட்டினான்.

அந்தப் பகுதி வாசகர்களுக்கு ஒரு வார்த்தை…

“தயவுசெய்து, இப்போது மட்டும் அந்தக் காவல் நி த்திற்குப் போகாதிர்கள். உங்களை கொன்றே போட்டுவிடுவான்.”

– ஆனந்த விகடன் – 2000 – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email
சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *