கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 7,098 
 

அம்மா

ராகவ் சரியாகத் தூங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. லேப்டாப் வந்ததில் இருந்து தான் இப்படி என்பது அவன் அம்மாவின் கருத்து. மகன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறான், அவன் படிப்புக்கு உதவியாக இருக்குமென்று அவன் அப்பா அவனுக்கு ஒரு லேப்டாப் வாங்கித் தந்தார். அதோடு நிற்காது ஒரு internet data card-ம் வாங்கித் தந்தார்.

லேப்டாப் வந்ததில் இருந்து ராகவின் போக்கே மாறிவிட்டது. ஸ்கூல் படிக்கும் காலத்தில் மாலையில் நண்பர்களுடன் நன்றாக விளையாடுவான் ராகவ். கிரிகெட் அவன் favourite கேம். அப்படி இருந்தவன் இப்போதெல்லாம் வெளியே போவதே இல்லை. காலேஜ் விட்டு வந்தால் லேப்டாப்-ஐ எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தால் மூன்று நான்கு மணி நேரம் மூழ்கி விடுவான். அப்பா ஆபீசில் இருந்து வந்தால் தான் மூடி வைப்பான். இரவு நேரங்களில் சில சமயம் அவன் ரூமில் மங்கலான வெளிச்சம் தெரியும். லேப்டாப் வெளிச்சம். அம்மாவுக்கு தெரியும். ஆனால் போகட்டும் புது மோஹம் விலகிவிடும் என்று தன் கணவனிடம் சொல்லாமல் விட்டிருந்தாள்.

ராகவ்

எல்லாம் இந்த சதீஷால் தான். ஒன்றும் தெரியாமல் நல்ல பையனாக இருந்த எனக்கு facebook identity தொடங்கி கொடுத்தது அவன் தான். அதோடு நிற்காமல் ‘கனவுகள்’ என்னும் ஒரு closed groupல் மெம்பர் ஆக்கிவிட்டதும் அவன் தான். ஆரம்பத்தில் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நானும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கேற்றார்போல நண்பர்களும் (நண்பிகளும்தான்) கிடைத்தார்கள். சென்னை, வேறு மாநிலம், வெளி நாடு என்று பலதரப்பட்ட நண்பர்கள். அந்த க்ரூப்பில் சேர்ந்த பத்தாம் நாள் தான் ஸ்ருதியின் friend request வந்தது. பெயரே கவர்ச்சியாக இருந்ததால் உடனே accept செய்துவிட்டேன். Hi, hello, good morning, good night என்று ஆரம்பித்த நட்பு, chatting, photo sharing என்று வளர்ந்து, வீடியோ chatting செய்து கொள்ளுமளவிற்கு நெருக்கமானது. Video chatting போது தான் தெரிந்தது ஸ்ருதி ஒரு தேவதை என்று. அப்பா என்ன அழகு! இவ்வளவு அழகான பெண் என்னுடைய நண்பி என்பதே என்று கர்வமாக இருந்தது. அப்புறம் அவள் ஆங்கிலப் புலமை! ஈடில்லாதது. எனக்கு ஆங்கிலம் நன்றாக வராது, தமிழ் தான் வரும் என்று அவளிடம் சொன்னபோது, கேலியோ கிண்டலோ செய்யாத அவள் பண்பு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மேலும் அவள் பேசும் போது உதட்டை சுழித்து பேசுவது எனக்கு ரொம்ப ரசிக்கத் தக்கதாய் இருந்தது. அது பற்றி ஒரு கவிதையே எழுதி இருக்கிறேன். அவள் பெயரைப் போடாது என் க்ரூப்பில் பப்ளிஷும் செய்திருக்கிறேன். ( ரோஜாப்பூ மலருந்தன் இதழானதோ? ரசிகனின் ரத்தத்தால் சிவப்பானதோ? ராஜாத்தி நீயதனை சுழித்திடும் போது, ரசிப்பதே என்னுடைய தொழிலானதோ?). அதை அவள் ரொம்ப ரசித்தாள் என்பது வேறு விஷயம். இப்படி ஆரம்பித்தது நீங்கள் யூகித்தது போல காதலில் தான் முடிந்தது. I love you என்று அவள் என்னிடம் சொன்னபோது நான் அதிர்ந்து போனேன். என்னய்யா? அவளா? நிஜமா? அதன் பின் நான் மந்திரித்து விட்ட கோழி போல் அவள் நினைவாகவே இருந்தேன். அவளோட பேசாத நாள் இல்லை. அப்பத்தான் ஒரு நாள் சதீஷ் என்னிடம் ஒரு விஷயம் சொன்னான். எங்கள் க்ரூப்பில் இருக்கும் கண்ணனோடு நட்பு வைதுக்கொள்ளதே என்று. ஏன் என்று கேட்டபோது அவன் சொன்ன விஷயம் என் ரத்தத்தை உறைய வைத்தது.

“டேய், இந்த கண்ணன் பயலோட குடும்பமே ஒரு தினுசானது. எல்லாம் மர்மமா இருக்கும் அவங்க வீட்டுல நடக்கறது. அவங்க அப்பா ஒரு மாந்த்ரீகர். பேய் பிசாசெல்லாம் விரட்டுவார்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க. அதுவும் வயசு பசங்கள மயக்கி அவங்க ரத்தத்த மாந்த்ரிகத்துக்கு உபயோகப் படுத்தராங்கனு ஒரு பேச்சு. இப்படித் தான் நான் ‘கனவுகள்’ க்ரூப்ல ரெண்டு மாசம் முன்ன ஸ்ருதினு ஒரு பொண்ணு ஜாய்ன் பண்ணிச்சாம். அவள எப்படியோ இந்த கண்ணன் மயக்கி தன் வசப்படுத்திகிட்டானாம். அப்பறம் பார்த்த திடீர்னு ஒரு நாள் அந்த ஸ்ருதி பொண்ணு தன் பெட்ரூமில பொணமாக் கெடந்துச்சாம். அதுவும் உடம்புல ஒரு துளி ரத்தம் கூட இல்லாம. நீ எதுக்கும் ஜாக்ருதையா இருந்துக்க”

என் உலகம் தலை கீழாகப் புரண்டது. விசாரித்துப் பார்த்ததில் விஷயம் உண்மை தான். ஆம். நான் தினமும் video chat செய்யும் ஸ்ருதி இறந்து ஒரு மாதமாகிறது. நான் ஒரு பேயுடன் இத்தனை நாள் பேசிக் கொண்டு இருந்தேன் என்று நினைக்கும் போதே உடம்பு சில்லிட்டு போனது. எப்படியாவது அப்பாவிடம் சொல்லி விட வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்கு வந்து லேப்டாப் ஆன் செய்தால், FB பேஜ் தானாக திறந்து video chatல் ஸ்ருதி!

அப்பா:

இந்த ராகவ் திடீர்னு ஒரு போன் செஞ்சு “அப்பா ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும், உடனே வீட்டுக்கு வாங்க” என்று சொன்னதைக் கேட்ட பிறகு அவன் அப்பாவுக்கு நிலை கொள்ளவில்லை. என்னவோ ஏதோ என்று அடித்து பிடித்து அவசர அவசரமாக வீட்டுக்கு வந்த அவர், நேராய் அவன் ரூமுக்குக் சென்று கதவைத் தட்டினார். பல முறை தட்டியும் கதவு திறக்காததால் மிகவும் பயந்து போன அப்பா கதவை உடைத்து உள்ளே சென்றார். உள்ளே ராகவ் தன் கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். மிகவும் வெளுப்பாய் ரத்தம் எல்லாம் சுண்டி சோகைப் பிடித்தவன் போல.

பக்கத்தில் சென்று தொட்டுப் பார்த்த போது தான் தெரிந்தது – அவன் இறந்திருந்தான். அருகே அவன் லேப்டாப். ‘கனவுகள்’ க்ரூப் பக்கம் திறந்திருந்தது.

– May 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *