1
சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் – எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும், வேலைக்காரர்களையும் பொற் பிரம்பின் சமயோசிதப் பிரயோகத்தால் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் என்றுமில்லாத கூட்டம்!
அஸ்தமன சூரியனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது, கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது, கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும் வாலிலும் பிரதிபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது.
இந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில், பைலார்க்கஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். நீண்ட போர்வையான அவனது டோ கா காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சில சமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப் பின்னியது. பெரிய அலைகள் சமயா சமயங்களில் அவனது பின்னிய தோல்வார்ப் பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகத்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்ய முடியும்?
பைலார்க்கஸின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப் போல் விழிக்கச் செய்தன.
திடீரென்று, “சிவா!” என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி!
“யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ? நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா? எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம்! கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான்! எல்லாம் ஒன்றில் லயித்தால்…?”
“உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சை மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை… அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக் கொண்டால், உமது கட்டுக் கோப்பில் தவறு கிடையாதுதான்… அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய மனப் பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்.. எனக்கு அது வேண்டாம்… நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்…”
“சிவ! சிவ! இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை… உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது?”
“உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால் தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜுபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை…” என்று சிரித்தான் பைலார்க்கஸ்.
“சிவ! உம்மிடம் பாசத்தை வைத்தான். அதுவும் அவன் விளையாட்டுதான்!” என்று தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்து கொண்டார் பரதேசி.
“நாளங்காடிப் பக்கம் போகிறேன், வருகிறீரா?” என்றார் மீண்டும் அச்சந்நியாசி.
“ஆமாம்! அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்கலாம். அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு… அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்…”
“ஓஹோ! அந்தச் சிலை செய்கிற கிழவனையா? உமக்கு ஏற்ற பைத்தியக்காரன் தான்… ஏதேது! அவனே அதோ வருகிறானே!” என்றார் சாமியார்.
பைலார்க்கஸ் எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான்.
சாத்தனுக்கு எண்பது வயதிருக்கும்; தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, “பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடி வந்தேன்! வீட்டிற்கு வருகிறாயா? எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது…!” என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவியழைத்தான்.
“இவரைத் தெரியுமா? பாண்டிய நாட்டு, உங்கள் பரதேசி… அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித்துப் பார்த்தார்… பைலார்க்கஸிடம் முடியுமா?” என்று கேலியாகச் சிரித்தான் யவணன்.
“சுவாமி வரணும், இன்று என் குடிசையில் அமுது படி கழிக்க வேண்டும்” என்று பரதேசியைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான் சாத்தன்.
“என்ன, என்ன! நீயுமா?” என்றான் பைலார்க்கஸ்.
“பைலார்க்கஸ்! நீ நிரீசுவரவாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே…”
“அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன், அப்பா! எனது வேலை அது…”
“சரி, வாருங்கள் போகலாம், சுவாமி வரணும்!” என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி.
வண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை, பொதி மாடுகளும், துறைமுகத்தை நோக்கிவரும் நேரத்தில் தீப்பந்தம் பிடித்துச் செல்லும் மக்களை விலக்கிக் கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன்? அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரதத்தின் அடியில்தான்! சாத்தனின் வண்டி அதில் முட்டிக் கொள்ளவிருந்தது.
“தெய்வச் செயல்!” என்றான் சாத்தன்.
“உன் சிருஷ்டி சக்தி!” என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக் கொண்டு.
“பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன்… கூத்து!… அதில் எவ்வளவு அர்த்தம்! மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்… இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று… இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்… சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்… உலகத்தின் அர்த்தத்தை… ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது… அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை – பைலார்க்கஸ், உனக்கென்ன! நீ கேலிக்காரன் – உப நிஷத்தில் தேடியலைந்தேன்… ஹிமயத்தில் தேடியலைந்தேன்… சாந்தி அந்த இரவு… என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது… பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை! என்ன ஏமாற்றம்!… ஆசை தான் வழிகாட்டியது. அந்த ரூப சௌந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன்!… அதன் ஒரு சாயை… நீலமலைக் கொடுங்கோலன் – பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே – அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்… தெய்வம் ஒன்று உண்டு… அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்… இந்தக் கைகளால்… பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்… அதைச் சாதிக்க முடியும்?”
“நீதான் சாதித்தாய்! நீதான் பிரம்மா! உன் சாதனை தான் அது. சிருஷ்டி! மயங்காதே! பயப்படாதே! நீதான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்!” என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டே போனான்.
சாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக்கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது.
மூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர். ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான்.
“சுவாமி, வரவேண்டும்! பைலார்க்கஸ், இப்படி வா!” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குள் சென்றான் சாத்தன்… அவன் வயதிற்கு அவ்வளவு துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்!
“மூபாங்கோ, தீபம்!” என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழை போல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது.
“இங்கு கூடவா விளக்கு இல்லை! திரையை ஒதுக்கு! ஸ்வாமி, பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை!” என்று திரையை ஒதுக்கினான்.
இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபவொளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனித விக்ரகம்! விரிந்த சடையும் அதன் மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக் காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வப் புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடிதுடிப்பு!
சந்நியாசி, தம்மையறியாமல் பாட ஆரம்பித்தார்…
பனித்த சடையும், பவளம்போல்
மேனியும், பால் வெண்ணீறும்,
குனித்த புருவமும், கொவ்வைச்
செவ்வாயும், குமிண் சிரிப்பும்,
இனித்தங்கசிய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மா நிலத்தே!
“சுவாமி, அப்படிச் சொல்லக் கூடாது!”
“சாத்தா! அவர் சொல்லுவதுதான் சரி! இது கலையா! இது சிருஷ்டி! இதை என்ன செய்யப் போகிறாய்?”
“அரசன் கோவிலுக்கு… இதென்ன கேள்வி?”
“என்ன! இந்த அசட்டுத்தனத்தை விட்டுத் தள்ளு… அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு… இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு…” என்று வெறி பிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ்.
“சீ, பைலார்க்கஸ்! உனது வெறி பிடித்த கொள்கைகளுக்கு யவனந்தான் சரி! அகஸ்தூஸா – அந்த உங்கள் சாம்ராட் – அவனுக்குத் தான் சரி உன் பேத்தல்!”
“சாத்தனாரே! உமது இலட்சியத்திற்கு அரசன் கோரிக்கைதான் சரியான முடிவு. இனி ஏன் இந்த ஜைனர்கள் தலைதூக்கப் போகிறார்கள்…!” என்றார் சாமியார்.
“இந்த வெறிபிடித்த மனிதர்களை விட, அந்தக் கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது…” என்று கோபித்துக் கொண்டு பைலார்க்கஸ் வெளியேறிவிட்டான்.
2
அன்று தான் கும்பாபிஷேகம். சிலையைப் பிரதிஷ்டை செய்த தினம். சோழ தேசத்திலேயே அது ஒரு பெரும் களியாட்டம் என்று கூறவேண்டும். சாத்தனுக்கு இலட்சியம் நிறைவேறிற்று. அன்று பைலார்க்கஸ் தனது குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சாத்தனுக்கு அதிகம்.
புதிய கோவிலிருந்து வீடு சேரும்பொழுது அர்த்தஜாமமாகி விட்டது.
வயதின் முதிர்ச்சி அன்றுதான் அவனைச் சிறிது தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்துவிட்டான்…
அப்பா! என்ன ஜோதி! அகண்டமான எல்லையற்ற வெளி! அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்தமற்ற, ஆனால் அர்த்தபுஷ்டி மிகுந்த, ஒரு புன்சிரிப்பு! மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம்! என்ன ஜீவன்! என்ன சிருஷ்டி!
திடீரென்று எல்லாம் இருண்டது! ஒரே கன்னக் கனிந்த இருள்! ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு!
பிறகும் ஒளி… இப்பொழுது தங்கத்தினாலான கோவில்! கண்கள் கூசும்படியான பிரகாசம்!… கதவுகள் மணியோசையுடன் தாமே திறக்கின்றன… உள்ளே அந்தப் பழைய இருள்!
சாத்தன் உள்ளே செல்லுகிறான். இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது! என்ன! இதுவா பழைய சிலை! உயிரில்லை! கவர்ச்சிக்கும் புன்னகையில்லையே!… எல்லாம் மருள்… மருள்…!
அந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன.
“எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்!” என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை! இப்படியே தினமும்…
நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன. அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே!
“எனக்கு மோட்சம்…!” இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்!
சாத்தன் நிற்கிறான்…
எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. “உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைந்துவிடு! நீ உடைந்து போ! அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து…!” இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது – சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது… ரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை!…
சாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.
“என்ன பேய்க் கனவு, சீ!” என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.
“பைலார்க்கஸ் – பாவம் அவன் இருந்தால்…” சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.
– மணிக்கொடி, 25-08-1935