மூட நம்பிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 757 
 

“ஒரு மாதமாய்ப் படித்துப் படித்துச் சொல்கிறேன். நீங்கள் காதில் போட்டுக் கொண்டால்தானே?”

“எதைச் சொல்கிறாய் ராஜம்?”

“எல்லாம் தெரிந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போலப் பாவனை பண்ணுவதுதான் உங்கள் வழக்கமாயிற்றே! நீங்கள் கதாசிரியர் இல்லையா?”

“இந்தா! அநாவசியமாக வந்ததும் வராததுமாக என்னை வம்புக்கு இழுக்காதே… சுற்றி வளைத்துக் குத்திக் காட்டாமல் விஷயத்தைச் சொல்… கேட்கிறேன்.”

“இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து நோயும் நொடியுமாகப் பிடுங்கித் தின்னுகிறது. இது நமக்கு ஆகவில்லை. மருந்துக்கும் டாக்டருக்குமாகக் கொட்டிக் கொடுத்துக் கடன் ஏறினதுதான் கண்டது. தப்பினோம் பிழைத்தோம்’ என்று பேசாமல் வேறு வீடு பாருங்கள்”

“இதெல்லாம் சுத்த அசட்டுத்தனம். எனக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கை இல்லை. நோய், நொடிகள் இந்த வீட்டை மட்டுமா குத்தகைக்கு எடுத்திருக்கின்றன? உலகம் பூராவும் நோயும் மருந்தும் வைத்தியனும் இருக்கத்தான் செய்கிறார்கள்!”

“நான் சொல்லுகிறேனே என்று நீங்கள் நம்ப வேண்டாம்! நீங்களாகவே சுயமாக யோசித்துப் பாருங்களேன். இங்கு வந்து ஆறு மாதமாகவில்லை. அதற்குள் எவ்வளவு பேர் படுத்துக்கொண்டோம்? வந்ததும் வராததுமாக எனக்கு டைபாய்டு… இருபது நாள் மருந்தும் ஊசியுமாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். வைத்தியச் செலவு இருநூறு ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. நான் பிழைத்து எழுந்திருந்தேனோ இல்லையோ மறு வாரம் உங்களுக்கு நிமோனியா, நீங்கள் படுத்துக் கொண்டுவிட்டீர்கள் ! ஒரு மாதத்திற்கு மேல் ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டுக் கிடந்தீர்கள். முந்நூறு ரூபாய் வைத்தியச் செலவோடு எலும்பும் தோலுமாகக்

கொத்தவரக்காய் வற்றல் மாதிரி பிழைத்து எழுந்திருந்தீர்கள்…”

“சே! சே! இது என்ன? ஓயாத தொந்தரவாகப் போச்சு உன்னோடு; உடம்புக்கு வந்ததெல்லாம் கூட அதிகக் கஷ்டமாகத் தோன்றவில்லை. நீ சொல்கிற காரணந்தான் சகிக்கவில்லை .”

“இன்னும் கேளுங்கள்! என்னோடும் உங்களோடும் போயிருந்தால் கூடப் பரவாயில்லையே? மறு மாதமே குழந்தைக்கு ‘வைசூரி ‘ போட்டுப் பிழைத்தது மறுபிழை என்று ஆகிவிட்டது. நீங்கள் நம்பினால் நம்புங்கள் நம்பாவிட்டால் போங்கள். நாள் தவறாமல் நோயும் நொடியும் அலைக்கிறதைப் பார்த்தால் கண்டிப்பாக இந்த வீட்டில் ஏதோ ‘தோஷம்’ இருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.”

“நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்கு இருக்கிற அலைச்சல் போதாது என்று மறுபடியும் என்னை வீட்டுக்காக வேறே அலையச் சொல்கிறாயா? என்னால் கண்டிப்பாக முடியாது…”

“முடியாவிட்டால் யாருக்கு என்ன? இதோ உங்கள் அருமைப் பிள்ளை பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் சுருட்டிப் போர்த்திக் கொண்டு படுக்கையில் விழுந்துவிட்டான். தொட்டுப் பார்த்தால் ஜுரம் நெருப்பாய்க் கொதிக்கிறது. போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்.”

“என்ன?… இதை ஏன் வந்ததுமே சொல்லவில்லை?” “நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள் நீங்கள் தான் வரிந்து கட்டிக் கொண்டு என்னோடு வாய்ச் சண்டை போட வந்துவிட்டீர்களே?”

“என்ன இழவு சனியனோ! வீட்டுக்குத் தோஷமானால், ‘நிமோனியாவும், டைபாய்டும்’ பாழய்ப்போன வீட்டுக்கல்லவா வரவேண்டும்? மனிதர்களுக்கு ஏன் வந்து தொலைக்கிறது?”

“நன்றாயிருக்கிறதே உங்கள் தர்க்க நியாயம்? யாராவது கேட்டால் சிரிக்கப் போகிறார்கள்! பேசாமல் போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். என்னோடு விவாதம் செய்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்!”

“சரி! காப்பியைக் கொண்டு வா. சாப்பிட்டு விட்டுப் போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வருகிறேன்.”

ராஜம் காப்பியை எடுத்துக்கொண்டு வருவதற்காக உள்ளே சென்றாள். நான் படுக்கையில் போர்த்திப் படுத்துக்கொண்டிருந்த பையன் அருகிற் சென்றேன். போர்வையை ஒதுக்கிவிட்டு நெஞ்சில் கையை வைத்துப் பார்த்தேன். காய்ச்சல் அனலாகக் கொதித்துக்கொண்டிருந்தது. பையனுக்குத் தன் நினைவு இருந்ததாகத் தெரியவில்லை .

“போன ஜன்மத்தில் டாக்டருக்கும் மருந்துக் கடைக்காரனுக்கும் எந்த வகையில் கடன்பட்டேனோ? பொழுது விடிந்து பொழுது போவதற்குள் டாக்டருக்கும் மருந்துக்கும் செலவாகிற பணத்துக்குக் கணக்கு வழக்கே இல்லை!”

காப்பியைச் சாப்பிட்டுவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்குள் கிளம்பினேன்.

டாக்டர் வந்தார், பார்த்தார். “பையனுக்கு மலேரியா ஜுரம் சார்.” “ஐயையோ! மலேரியாவா?.”

“ஜுரம் கடுமையாகத்தான் இருக்கிறது! ஆனாலும் கவலைப்படாதீர்கள். இரண்டு ஊசி போட்டுவிட்டுப் போகிறேன். இராத்திரிப் பொழுது கடந்துவிட்டால் கவலை இல்லை . விடிவதற்குள் அநேகமாக இறங்கிவிடும்.”

டாக்டர் ஊசியைப் போட்டு விட்டுக் கிளம்பினார். அப்போது மாதக் கடைசி. கையில் வறண்ட நிலைமை. பையனின் வைத்தியச் செலவுக்கு யாரிடமாவது கைமாற்றாகப் பணம் வாங்கிக் கொண்டு வரலாம் என்று நானும் வெளியே கிளம்பினேன்.

நாராயணன் நெருங்கிய நண்பர். இந்த மாதிரி விஷயம் என்றால் உடனே உதவி செய்வார். நான் அவர் வீட்டுக்குத்தான் சென்றேன்.

“என்ன சார்! வாருங்கள்! ஏது இப்படி? அடியேனைத் தேடிக்கொண்டு…?” நாராயணன் மகிழ்ச்சியோடுதான் வரவேற்றார்.

மென்று விழுங்கிக் கொண்டே வந்த காரியத்தைச் சொன்னேன். ”பணத்துக்கென்ன சார்? இதோ தருகிறேன்…. சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போகிறீர்கள். இந்தப் புதுவீட்டிற்கு வந்ததிலிருந்து உங்கள் வீட்டில் யாருக்காவது ஏதாவது நோக்காடு வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. பணத்துக்குப் பிடித்த செலவு…” அனுதாபப்பட்டுக் கொண்டே நான் கேட்ட தொகையை எண்ணிக் கொண்டு வந்து கொடுத்தார் நாராயணன்.

”நம்ம போதாத காலத்துக்கு வீடு என்ன செய்யும்? வாசல் என்ன செய்யும்? ‘அவள்’ கூட அடிக்கடி இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். எனக்கென்னவோ இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நீங்கள் கூட இதையெல்லாம் நம்புகிறீர்களா நாராயணன்?”

“நம்புவதிலும் நம்பாததிலும் என்ன இருக்கிறது? இதெல்லாம் ஒரு ஆசாபாசம்தான். தொடர்ந்து ஒரு மாறுதல் இருந்தால் அதைப் பற்றி எப்படியாவது சிந்திக்க வேண்டித்தானே இருக்கிறது?”

இதற்கப்புறம் பதினைந்து நாட்கள் கழித்துப் பையன் தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டான். மெடிகல் சர்டிபிகேட் வாங்கி மறுபடியும் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டு வந்தேன்.

பையன் எழுந்து நடமாடத் தொடங்கி முழுசாக இரண்டு நாட்கள் ஆகவில்லை. கைக்குழந்தைக்கு ஒரு பயங்கரமான வியாதி வந்துவிட்டது.

இருந்தது இருந்தாற்போல் திடீரென்று மூச்சுப் பேச்சு இல்லாமல் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் கட்டைப்போலக் கிடந்தது. “சரி! கொடுத்து வைத்த ஆயுள் அவ்வளவுதான்! இனிமேல் மூச்சாவது, பேச்சாவது” என்று நினைத்தபோது திடீரென்று வீரிட்டு அழுதது. அரை மணி முக்கால் மணி நேரம் அது மாதிரி வீரிட்டு

அழுது விட்டு மீண்டும் பழையபடி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தது.

டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து காட்டினேன். அவர் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார்.

“சார், இது சிறு குழந்தைகளுக்கு வருகிறதுண்டு! ‘கணை’ என்று பெயர். எங்களை விட நாட்டு வைத்தியர்களிடம் தான் இதற்குச் சரியான மருந்து இருக்கும். நீங்கள் எதற்கும் உடனே நல்ல நாட்டு வைத்தியராக ஒருவரைப் பார்த்துக் காண்பியுங்கள்.”

டாக்டர் கண்ணியமான மனிதர். ஒளிவுமறைவில்லாமல் தம்மால் முடியாது, தமக்கு அது தெரியாது என்பதை ஒப்புக் கொண்டு போய்விட்டார்.

ஓடோடிச் சென்று கைராசியும் நல்ல பெயரும் பெற்றிருந்த ஒரு நாட்டு வைத்தியரை அழைத்து வந்தேன். அவர் நாடி பிடித்துப் பார்த்தார். பின் பச்சை நிறமுள்ள ஒருதைலத்தைக் குழந்தையின் கை கால்களில் உள்ளங்கைகளினால் தடவிச் சூடு பறக்கத் தேய்த்தார். ஏதோ ஒரு செந்தூரப் பொடியைத் தேனில் குழைத்துக் கொடுக்கும்படி சொன்னார்.

அவரை வாசல் வரை கொண்டு போய் விட்டு வழி அனுப்பிய பின் ஒன்றும் தோன்றாமல் வாசற்படியிலேயே நின்றேன். தெருவில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். “சார்! குழந்தைக்கு இப்ப எப்படி இருக்கு? தேவலையா?” – குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்து வீட்டுக்காரர் தம்முடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

“எப்படி இருக்கு?”

“அப்படியே தான் இருக்கு ! வைத்தியர் வந்து ஏதோ தைலத்தைத் தேய்த்தார். உள்ளுக்கும் மருந்து கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். குழந்தைக்கு இன்னும் பிரக்ஞைதான் வரவில்லை …”

“அட்டா! என்ன கஷ்டம் உங்களுக்கு? ஒரு நாளாவது நீங்கள் நிம்மதியா இருக்க முடியறதில்லே. சனியன் பிடிச்ச வீடு குடி வந்த நாளிலிருந்து உங்களைப் பாடாய்ப் படுத்துகிறது…”

“நம்ம கஷ்டத்துக்கு வீடு என்ன செய்யும்?.”

“அதென்ன அப்படி அலட்சியமாகச் சொல்லிட்டீங்க! இதிலெல்லாம் உண்மை இருக்கு சார். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன்”

அடுத்த வீட்டுக்காரர் நிறுத்துகிற வழியாகக் காணோம். நான் அவருடைய அனுபவத்தை மேலும் கேட்டுக் கொண்டிருக்கத் தயாராக இல்லை.

“நான் வரேன் சார்! உள்ளே காரியம் இருக்கு…”

“ஆமாம்! ஆமாம்! போய்ப் பக்கத்திலிருந்து குழந்தையைக் கவனியுங்கள். எதற்கும் நான் சொன்ன விஷயத்தைக் கொஞ்சம் யோசனை பண்ணிக்குங்க. வேறே வீடு…”

நான் உள்ளே வந்துவிட்டேன். நின்று கொண்டே இருந்தால் அவரும் பேசிக்கொண்டேதான் இருப்பார்.

“என்ன ராஜம்? குழந்தைக்கு எப்படி இருக்கு?”

“இருக்கு! உயிர் மட்டும் மிச்சம் இருக்கு… இந்தச் சனியன் பிடித்த வீட்டை நீங்க காலி பண்றதுக்குள்ளே அதுவும் என்றைக்காவது ஒரு நாள் போய்விடும்…”

“உன் பேச்சு உனக்கே நன்றாகயிருந்தால் சரி! தென்னை மரத்திலே தேள் கொட்டினால் பனை மரத்திலே நெறி பிடிக்கும் என்கிற கதையாக அல்லவா இருக்கிறது?”

“இந்தாருங்கள்! உங்களைப் போல உபமான, உபமேயங்கள் சொல்லி அழகாகப் பேச எனக்குப் படிப்பு போதாது. மனசிலே பட்டத்தைச் சொல்லத்தான் தெரியும்! இந்த வீட்டுக்கு வந்ததிலேயிருந்து எதுவுமே விளங்கவில்லை. குடும்பத்திலே ஒருத்தர் விடாமல் வியாதி பிடுங்கித் தின்னுகிறது. நிம்மதியே இல்லை. காலி பண்ணிவிட்டு வேறே எங்கேயாவது போனால்தான் பிழைக்கலாம். இவ்வளவுதான் எனக்குச் சொல்லத் தெரியும்…’

“சொல்லு! சொல்லு! உனக்கு வாய் அலுக்கிறவரை சொல்லிக் கொண்டே இரு. நான் கேட்டால்தானே? விட்டிலுக்குப் பயந்து விளக்கை அணைக்க என்னால் முடியாது! இப்போதைக்கு இந்த வீட்டைக் காலி செய்கிற நினைவே எனக்குக் கிடையாது”.

விவாதத்தை மேலும் தொடரவிடாமல் அப்படியே நிறுத்தினேன். அவளும் பேச்சை நிறுத்திவிட்டாள். பத்துப் பன்னிரண்டு நாட்கள் ஆயிற்று. குழந்தை அந்த அவஸ்தையிலிருந்து ஒரு மாதிரிப் பிழைத்து எழுந்தது. அது ஒரு பயங்கரமான ‘கண்டம்’ என்று தான் சொல்ல வேண்டும். எப்படியோ ஆண்டவன் காப்பாற்றிவிட்டான். தங்கச் சிலைமாதிரி இருந்த குழந்தை விலா எலும்பு குத்திட்டுப் பார்க்க அருவருப்பான தோற்றத்தை அடைந்துவிட்டது.

வீட்டில் அவளுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்லை. உடனடியாக வேறு வீடு மாற்றியாக வேண்டுமென்பது அவள் கட்சி. மலையே புரண்டு வந்தாலும் சரி, இந்த மாதிரி ஒரு அசட்டு நம்பிக்கைக்காக வீடு மாற்ற முடியாது’ என்பது என் கட்சி. அவள் கட்சிக்குச் சுற்றுப்புறத்திலும் அக்கம் பக்கத்தார்களிடமும் ஆதரவு அதிகம். என் கட்சிக்கு நான் மட்டும் தான் ஆதரவாளன்.

தன் சபதப்படியே குழந்தை பிழைத்தெழுந்ததும் அப்பாவுக்குக் கடிதம் எழுதிப் பிறந்த வீட்டுப் பிராயணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டாள் அவள். என் மாமனாரிடமிருந்து அவளையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போகப் புறப்பட்டு வருவதாக எனக்குக் கடிதமும் வந்து விட்டது. ஆனால் என் பிடிவாதத்தை நான் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு நான் கூறினேன்… “இங்கே பார் ராஜம்! ஒன்றுமில்லாத விஷயத்திற்காக வீண்கோபம் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போகிறாய்! கடைசியாகச் சொல்கிறேன். எனக்கும் ரோஸம் உண்டு. உன் முகத்தில் கூட விழிக்கமாட்டேன். அப்புறம், நாம் போன பின் நாளைக்கே இருப்புக் கொள்ளாமல் தவித்துப் போய் வேறு வீடு மாற்றி விட்டு உடனே நம்மை அழைத்துப் போக ஓடி வருவார்’ என்று கனவில் கூட நினைக்காதே! உனக்கு எவ்வளவு அகம்பாவமும் பிடிவாதமும் உண்டோ, அதைவிட ஒரு படி அதிகமாகவே எனக்கும் உண்டு. இவ்வளவுதான்! இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. புறப்படுவதற்கு முன் இன்னும் நன்றாக யோசித்துக்கொள்…”

அவள் பதிலே சொல்லவில்லை. கடிதத்தை வாங்கிக் கொண்டு பேசாமல் சமையலறைக்குள் போய்விட்டாள். நானும் பேசாமல் ஆபீஸுக்குப் போய் விட்டேன். ‘வந்தது வரட்டும், எந்த விதத்திலும் அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ, காரண காரியங்களுக்கோ பொருந்தாத இந்த மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதில்லை’ என்று எனக்குள் உறுதி செய்து கொண்டேன்.

அன்று முதல் தேதி. சம்பளம் கிடைத்ததும் நேரே நண்பர் நாராயணன் வீட்டிற்குச் சென்று அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன்.

“என்ன சார்? நான் சொன்னதைக் கவனித்தீர்களா?” அவர் கேட்டார்.

“எதைச் சொல்லுகிறீர்கள்?”

“இந்த வீடு உங்களுக்கு ஆகிவரவில்லை; வேறு வீடு பாருங்கள் என்று முன்பே சொன்னேனே?”

“நீங்கள் சொன்னீர்கள்! நான் இதை பெரிய காரணமாக நினைக்கவில்லை… வீடு’ என்ன சார் செய்யும்?”

“சரி! உங்கள் இஷ்டம். இதற்கு மேல் நான் வற்புறுத்தமாட்டேன்.”

படித்தவர், சிந்தனை ஆற்றலுள்ளவர், இவர்கூட ராஜத்தைப் போலவே அசட்டுத்தனமானதை எல்லாம் நம்புகிறாரே! என்று நாராயணனைப் பற்றி எண்ணிக் கொண்டே அவர் வீட்டிலிருந்து வெளியேறினேன் நான் நாராயணன், ராஜம், அடுத்த வீட்டு அனுபவஸ்தர், இவர்களைப் போலவே இன்னும் அநேகர் வீட்டை ஒரு காரணமாக என்னிடம் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். அவர்களிடம் எரிந்து விழுந்து காரசாரமாகப் பதில் கூறினேன். சிலரிடம் பெரிய பெரிய பிரசங்கங்களைப் போலக்கூட வெளுத்து வாங்கி விட்டேன். இது ஒரு முரடு, சுமுகமாகப் பேசத் தெரியவில்லை’ என்று என்னைப் பற்றி அவர்கள் எண்ணிக் கொண்டால் எண்ணிக் கொள்ளட்டுமே! அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

அன்று காலை ராஜத்தின் தகப்பனார் அதாவது என் மாமனார் அவளை அழைத்துக் கொண்டு போக ஊரிலிருந்து வந்துவிட்டார். எனக்கும் அவளுக்கும் இடையே வீடு மாற்றல் காரணமாக மனஸ்தாபம்; அதனால்தான் ஊருக்குக் கிளம்புகிறாள் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விடாமல் சாமர்த்தியமாக ஏற்பாடு செய்திருந்தாள் அவள்.

“மாப்பிள்ளை ! ராஜமும் குழந்தைகளும் இரண்டு மாசம் ஊரில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் சீக்காய்க் கிடந்த உடம்பு தேறும் கூட்டிக் கொண்டு போகட்டுமா?”

இப்படி சுபாவமாக என்னிடம் கேட்டதிலிருந்தே இதை நான் புரிந்து கொண்டேன். “தாராளமாகக் கூட்டிக் கொண்டு போங்கள் ” என்று சுபாவமாகவே பதிலும் சொல்லிவிட்டேன். காலையிலிருந்தே அப்பாவும் மகளுமாகப் பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். நான் அதை கவனித்தும் கவனிக்காதவன் போல் ஆபீஸுக்குக் கிளம்பிவிட்டேன். எனக்கு வேறு ஒரு வேதனையும் சேர்ந்திருந்தது. முதல் நாள் மாலையிலிருந்து குடலைப் புரட்டிப்புரட்டி எடுத்தது ! வலி தாங்க முடியவில்லை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ‘விதியே’ என்று சகித்துக் கொண்டிருந்தேன். குடலின் மெல்லிய தசையில் ஊசியை ‘நறுக் நறுக்’ கென்று குத்தி எடுப்பது போல வலித்தது.

வழக்கமாக என் வீட்டுக்கு வருகிற டாக்டரைத் தேடி ஓடினேன். நல்லவேளை! டாக்டர் டிஸ்பென்சரியில் தான் இருந்தார்.

நிலைமையை டாக்டரிடம் சொன்னேன்.

“புகையிலைப் பழக்கம் உண்டா ?”

“உண்டு !”

“அடிக்கடி காப்பி சாப்பிடுவீர்களா?”

“ஆமாம்!”

“அப்படியானால் இது அல்ஸர்’ (குடற்புண்) ஆகத்தான் இருக்க வேண்டும்.”

“அல்ஸரா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் டாக்டர்!”

“சந்தேகம் எதற்கு? எக்ஸ்-ரே எடுத்தே பார்த்து விடுகிறேன்.”

எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது.

“படம் நாளைத் தெரியும். நீங்கள் இப்போதைக்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்கள். வீட்டிற்குப் போய்ப் பூர்ண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். காரமாக எதையும் சாப்பிட வேண்டாம். சூடும் ஆகாது. உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுக்கையில் படுத்திருங்கள்…”

டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

“மிஸ்டர்…. ஒரு நிமிஷம் ! உங்களை ஒன்று கேட்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்களே?” புறப்படும் போது டாக்டர் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு இப்படிக் கேட்டார்.

“என்ன டாக்டர்?”

“ஒன்றுமில்லை! இந்த வீட்டிற்குக் குடி வந்ததிலிருந்து உமக்கோ, குழந்தைக்கோ, மனைவிக்கோ, ஏதாவது வந்து கொண்டே இருக்கிறதே? வீட்டில் ஏதாவது ‘தோஷம்’ உண்டோ?”

“என்ன டாக்டர்! நீங்கள் கூடவா இதை எல்லாம் நம்புகிறீர்கள்? மனுஷனுக்கு உடம்புக்கு வந்தால் அதற்கு வீடா பழி?”

“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை எப்போதுமே உண்டு! உடனே வேறு வீடு மாற்றிவிடுமே ஐயா! அதில் உமக்கென்ன கஷ்டம்?”

“பார்க்கிறேன் டாக்டர்…”

“பாரும்! அதுதான் நல்லது. எனக்கு அன்றே உம்மைக் கேட்க ஆசை. நீர் இங்கே வந்து முழுசா அரைவருஷம் ஆகலே! அதற்குள் நோய் அதிகமானால் எனக்கு லாபம்தான். அதுக்காக…” டாக்டர் சிரித்துக்கொண்டார்.

நான் வீட்டுக்கு வந்தேன். சுருட்டிப் போர்த்துக்கொண்டு படுக்கையில் படுத்துவிட்டேன். குடல் வலி, வாயைத் திறந்து அலறவேண்டும் போல் தோன்றியது. பொறுத்துக்கொண்டேன். ராஜத்தின் பிரயாணம் தடைப்பட்டு விட்டது. அவள் எனக்கு என்னவோ, ஏதோ என்று பதறிவிட்டாள். மாமனாரும் அதே நிலையை அடைந்தார். விடிய விடிய என் அருகே தூக்கம் விழித்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். ஆனால் ஒரு தரமாவது வீடு மாற்றும் பேச்சை எடுக்கவில்லை. மாமனார்தான் இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டார்.

“மாப்பிள்ளை ஸார்! முதலில் இந்த நாசமாய்ப் போகிற வீட்டைக் காலி பண்ணிவிட்டு மறுவேலை பாருங்கள். வந்ததிலிருந்து ஒருவருக்காவது சுகம் கிடையாது” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

என் வியாதியை நாலைந்து நாளில் குணப்படுத்திவிட்டார் டாக்டர். இதையெல்லாம் விடப் பெரிய ஆச்சரியம் அந்த ஐந்து நாட்களில் மறந்தும் கூட ராஜம் வீட்டைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. என் பிடிவாதம் தான் கரைந்து போயிருந்தது. பொய்யோ, மெய்யோ, இந்த வீடு நமக்கு இனி ஒத்து வராது என்கிற மாதிரி ஓருணர்வு எனக்குள் மெல்லக் கிளை விட்டுப் படர்ந்து கொண்டிருந்தது!

அப்போது சாயங்காலமாகியிருந்தது. முதல் நாள் மாமனார் ஊருக்குப் போய்விட்டார்.

“ராஜம்! புறப்படுகிறாயா? போகலாம்.”

“எங்கே? நான் எதற்காக வரவேண்டும் ?”

“அடுத்த தெருவில் நல்ல வீடு ஒன்று வாடகைக்குக் காலியாக இருக்கிறதாம்…”

“என்ன! பேசுகிறது நீங்கள் தானா? என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லையே?”

“கேலி பண்ணாதே! நேரமாகிறது, புறப்படு ராஜம்.”

“வீடு என்ன செய்யும்? இதெல்லாம் சுத்த அசட்டுத்தனம்!”

“இன்னும் கேலி பண்ணினால் எனக்குக் கோபம் வரும்!” நான் அதட்டினேன். அவள் புடவை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். எல்லாம் உடனடியாகவே முடிந்து விட்டன. அன்றே புது வீட்டுக்கு ‘அட்வான்ஸ்’ கொடுத்துவிட்டுத்தான் திரும்பினோம்.

(கலாவல்லி , மார்ச், 1957)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *