கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 5,563 
 

சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட கூரைவீடுதான் வசந்தியின் இடம்.

வசந்தி என்னைவிட ஒருவாரம் மூத்தவள். எங்கள் வயதொத்தவர்கள் ஊரில் யாரும் இல்லாததாலோ என்னவோ, இருவரின் வாழ்க்கைகளும் ஒரே பாதையில் பயணித்தன. பக்கத்துக் கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு, எங்களின் கல்விப்பயணங்களை அருகிலுள்ள ஒரு பேரூராட்சி ஊரின் ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு இலக்காக்கிக் கொண்டிருந்த காலம் அது.

அந்தப் பேரூராட்சி பள்ளியின் எங்கள் வகுப்பில், முதல் இரண்டு ரேங்குகளை நானும் வசந்தியும் தக்கவைத்துக் கொண்டிருந்தோம். நன்றாகப் படிப்பதாலும், இன்றைய வகுப்புத் தலைவன் – நாளைய மாணவத் தலைவன் என்ற காரணத்தாலும் மாணவர்கள் மத்தியில் எனக்கு மதிப்பிருந்ததெனவும், வசந்திக்கும் சேர்த்தே எனவும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். குக்கிராமவாசிகள் தங்களூர் பள்ளியில் ஆதிக்கம் செலுத்துவதை உள்ளூரின் சில மாணவர்கள் விரும்பாததையும், அப்பொறாமை உணர்வு புற்றுநோய்க்கட்டி போல் சேகர் – வசந்தி நட்பைக் கொச்சைப்படுத்தி வளர்ந்து கொண்டிருந்தது எனவும் எனக்கு அப்போது தெரியவில்லை.

ஐந்து வருடங்கள் என்னோடு முழங்காலுரச படித்தவளும், முன்றரை வருடங்களாக தினமும் தோளுரச பஸ்ஸில் பயணிப்பவளுமான வசந்தி என்னிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டவள் என்று அந்த 19ம் தேதியன்றுதான் தெரிந்தது. முதல்நாள் இரவு என்னோடு தந்திக் கம்பத்திற்கடியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி குவியதூரமும் கானல்நீரும் படித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் குடிக்கப் போனவள் திரும்பவேயில்லை. புத்தகங்களை அவளின் அம்மா வந்து எடுத்துப் போனாள். நான் சிறுவனா என்று தெரியவில்லை; ஆனால் அன்றிலிருந்து வசந்தி சிறுமியில்லை.

வசந்தி இல்லாத முதல் வாழ்நாள் அது. பஸ்ஸில் சாந்து சட்டியுடன் ஒரு பாட்டி தோள் சாய்ந்தாள். வசந்தியைப்பற்றி வகுப்பாசிரியர் கேட்டது முதல், அன்றைய எல்லாக் கேள்விகளுக்கும் தெரியாதென பதில் சொன்னேன். தமிழாசிரியை சலசலத்தது எல்லாம் இரட்டைக்கிளவியாகவே கேட்டன. இங்கிலிஷ் டீச்சர் கோர்த்தெழுதியதெல்லாம் நேர்மறையும் எதிர்மறையும் சேர்ந்தே திரியும் Cleave ஆகவே தெரிந்தன. நாண்களெல்லாம் இணைகோடுகளாயின. புத்திரனாய் போர்தொடுத்த அவுரங்கசிப்,புத்தமாகி போர்தடுத்த அசோகரானார். ஓர் எலக்ட்ரானுக்காக அலையும் குளோரினுக்கு, ஹீலியத்தின் அஹிம்சை போதித்தேன்.

வசந்தி இல்லாமல் இரண்டு நாட்களாகத் தனியனாய்ப் படித்துக் கொண்டிருந்த எனக்காக தந்தி மரத்தின் டியூப்லைட் தலைகுனிந்து வருத்தப்பட்டது. தவிர்க்க முயலும் பார்வைச் சந்திப்புடன் என்னை வசந்தி சந்தித்தாள். எச்சலனமும் இல்லாமல் என்தலைமேல் இருந்த பூச்சியைத் தட்டிவிட்டு அதே பழைய இடைவெளியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி நடத்தப்பட்ட பாடங்கள் கேட்டாள். ஒற்று மிகும் இடங்கள் பற்றியும், தாலஸ் என்றால் தலைகால் புரியாதது எனவும், ஷாஜகானுக்கு மும்தாஜ் முதல்மனைவி இல்லை எனவும் சொன்னேன். மறுநாள் அதே பஸ்ஸில் ஒரே சீட்டில் அமர்ந்து என்னைச் சிறுவன் என நிரூபித்தாள். அவளும் சிறுமியில்லாமல் இல்லை.

இரண்டு நாட்களை நிமிட நேரத்தில் புரிந்துகொள்ளும் வசந்திக்கே புரியாமல், கண்ணுக்குத் தெரியாமல் அவள் வீட்டினுள் அப்படியொன்று இருப்பது அன்றுவரை யாருக்குமே தெரியாது. படித்துக் கொண்டிருக்கையில் தண்ணீர் குடிக்க எழுந்தவளைப் போனமாதம் இதே தேதியில் தண்ணீர் குடிக்கப்போய் திரும்ப வராததைக் கிண்டல் செய்தேன். முன்பற்கள் கடிந்து, புருவம் சுருக்கி, தலைதாழ்த்தி முறைத்துவிட்டுப் போனாள்.

இன்றும்கூட வசந்தி சீக்கிரம் திரும்பவில்லை. Direct – Indirect Voiceகளை மூடிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றேன். நிலைப்படியில் குனிந்து தலைநிமிர்ந்தபோது நான் கண்ட காட்சி என்னை உலுக்கிப் பார்த்தது. சட்டென திரும்பப்போய் நெற்றியில் இடித்துக்கொண்டேன். நான் சிறிதுநேரம் அங்கேயே நின்றும்கூட வசந்தி ஒன்றுமே பேசாததிலிருந்து, எனக்கு அங்கு வேலையில்லை என்று உணர்ந்து கொண்டவனாய்த் தந்திமரத்தடியில் தஞ்சம் கொண்டேன்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். பேரமைதி. ஓர் அந்நிய மொழி வாக்கியங்களை Simple-Compound-Complex எனப் பிரித்துப் போடவும், இடதுபக்கங்கள் எல்லாம் வலதுபக்கங்களுக்குச் சமமென நிரூபித்துக் காட்டவும் சொல்லித்தந்த கல்வி, அறிவு, அது, இது எல்லாமும் சேர்ந்தும்கூட, எனக்குப் பக்கத்தில் இருப்பவளின் தாய் வெற்று மார்புடன் படுத்துக் கிடந்த காரணத்தை நேரிடையாக கேட்கும் பக்குவத்தைத் தந்திருக்கவில்லை.

“அம்மாவுக்கு ஒரு வாரமா ரொம்ப முடியல. திடீர்னு இன்னக்கி இருமல் சாஸ்தியாயிடிச்சு. நெஞ்சு கரிக்குதுன்னு சொல்லி அமர்த்தான்ஜனம் (Amrutanjan) தடவச் சொன்னுச்சு “.
வசந்தி சிறுமியில்லை.
“அப்பா சனிக்கெழம ராத்திரிதான் வருவாரு. நான் அம்மாவ நாளைக்கிப் புதுக்கோட்ட பெரியாஸ்பத்திரி கூட்டிட்டுப் போய்த்து வரேன். லீவு சொல்லிடு. எதுவும் மனசில வெச்சிக்கிடாதே”.
நான் சிறுவனில்லை.
“ஸ்கூல்ல யாராவது கேட்டா எனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொல்லு. அம்மாவப் பத்தி ஏதும் சொல்லாதே”.
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திரும்பிப் போனாள்.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

வசந்தி இல்லாத இரண்டாவது 19ம் தேதி அது. இருட்டிய பிறகே வசந்தி தனது தாயுடன் திரும்பினாள். தந்திக்கம்பத்தில் சாய்ந்துகொண்டிருந்த என்னைத் தவிர எல்லாரும் வசந்தி வீட்டில் கூடினார்கள். TB, நெஞ்சுருக்கி, காசம், எலும்புருக்கி, Tuberculosis என்ற வார்த்தைகள் அடங்கிய வாக்கியங்களுடன் பேசி, தனது தாயுடன் யாரும் பழகவேண்டாம் என் சொல்லி அனுப்பிவைத்தாள்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியைவிட இன்னும் கொஞ்சம் தூரத்தில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். அன்றைய பாடம் கேட்டாள். நான் எந்தவொரு சலனமும் காட்டிக்கொள்ளவில்லை. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விளக்குமென காந்தவியல் சொன்னேன். ஒற்று மிகா இடங்கள் சொன்னேன். ஆசையாய்க் கட்டிய தாஜ்மகாலை ஷாஜகான் தூரப்பார்த்தே இறந்துபோனதைச் சொன்னேன்.

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி சானடோரியத்தில் மாதாமாதம் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென வசந்தியின் அம்மாவுக்கு டாக்டர்கள் சொல்லியிருந்தனர். ஒவ்வொரு மாதமும் 19ம் தேதி என்பது வசந்திக்கு எழுதப்படாத விடுமுறை நாளானது. என்னையும் வசந்தியையும் பிடிக்காத மாணவர்கள் உண்மைநிலை தெரியாமல், எல்லா 19யும் முதல் 19தோடு முடிச்சுபோட்டு, வசந்திக்குக் கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சனையென கதைகட்டிவிட்டார்கள். மாதவிலக்குச் சரியாக வருவதில்லை எனவும், அதைச் சரிசெய்யத்தான் தஞ்சாவூர் பக்கம் ஏதோவொரு லாட்ஜ் டாக்டரிடம் பிரதிமாதம் இன்ன தேதி இன்ன நேரத்திற்குப் போய்வருவதாகவும் வசந்தியின் பெயரில் வதந்தி. இதெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது.

டிசம்பர் 19. மார்கழிப்பனி நோயைத் தீவிரப்படுத்தி இருந்ததால், அன்று சானடோரியம் செல்லவில்லை. வேல்ஸ் என்ற இடம் எங்கு இருக்கிறதென்று கண்டுபிடிப்பதற்காக நண்பன் ஒருவனிடமிருந்து அட்லஸ் புத்தகம் வாங்கி வந்திருந்தேன். நான் இடதுபக்கங்களிலும், வசந்தி வலதுபக்கங்களிலும் இந்தியாவிற்கு வெளியே தேடினோம். ஏதோ உணர்ந்தவளாய்ச் சட்டென வசந்தி வீடு புகுந்தாள்.

“ஐயோ வேல்ஸ் இங்க இருக்கு பாரு”. மெய்மறந்து சொன்ன பொழுதில் வசந்தி அருகிலில்லை. உலகம் தூக்கிய அட்லஸ் தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். நிலைப்படியின் மேல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். வீட்டை இருள் பூட்டி இருந்தது.

“என்ன ஆச்சு வசந்தி? இங்க பாரு வேல்ஸ். நீ பாத்த பக்கத்துலதான் இருந்துச்சு”
“ஒண்ணுல்ல. ஒண்ணுல்ல. அந்த சன்னல்ல டார்ச் லைட் இருக்கு. கொஞ்சம் எடு”
எடுத்துக் கொடுத்தேன்.
“கத்தி பிளேடு அருவா எல்லாத்தையும் பூட்டி வெச்சேன்”
பின்பக்க மூடி திறந்தாள்.
“மண்ணென்ன வாங்குறத நிப்பாட்டுனேன்”
பேட்டரியைத் திருப்பிப் போட்டாள்.
“பூச்சி மருந்து அரளி வெத சாமானியமா கெடைக்காதுன்னு நெனச்சேன்”
பின்பக்க மூடியை மூடினாள்.

“பனியில நனையிதுன்னு தாவணிய வீட்டுக்குள்ள காயப்போட்டது என்னோட விதியா?”
“என்ன ஆச்சு வசந்தி?”
“தாவணியில என்னப் பாக்கனும்னு சொல்லுவியே. நான் கட்டுன மொத தாவணிப் பாரு”
வீட்டுக்குள் டார்ச் அடித்தாள்.
தாவணி உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. ‘அது’ தாவணியில் தொங்கிக்கொண்டிருந்தது. அட்லஸ் நழுவியது. உலக நாடுகள் காலடியில் சிதறின. உதவிக்குக் கூப்பிடக்கூட யாருமில்லை. பஞ்சாயத்து தலைவர் சபரிமலை குருசாமியாகி பதினெட்டாம் வருஷ மலைக்குப் போகும் விஷேசத்திற்கு ஊர் சென்றிருந்தது.

எவ்வளவு நேரம் அழுதோம் எனத் தெரியவில்லை. இந்தியப் பெருங்கடல் நனைந்திருந்தது. கொஞ்சம் தைரியம் வரவழைத்து டார்ச் எடுத்து உள்ளேபோக எத்தனித்தேன். டார்ச்சைப் பிடுங்கினாள். அழுகை பீறிட சொன்னாள்.
“நீ பாக்க வேணாம் சேகரு. ஒத்த சேலமட்டுந்தான் கட்டியிருக்கு”.

எந்த வெளிச்சமும் இல்லாமல் அரிவாள்மனையால் தாவணியை நான் அறுக்க, வசந்தி தன் தாயைச் சுமந்து இறக்கினாள். முத்திரக் கவுச்சையும், கட்டில்லாமல் வடிந்திருக்கும் உடல் திரவங்களையும் காலடியின் பிசுபிசுப்பில் உணர்ந்தேன். நடுவீதியில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஷோடனை செய்து தற்கொலையை மறைத்தாள் வசந்தி. மூன்று மணிநேரம் பிணத்துடன் அமர்ந்திருந்தோம். ஊர் திரும்பியது. நோய் தொற்றும் பயத்தில் யாரும் நெருங்கவில்லை. அதன்பிறகு எல்லா நாட்களும் வசந்தி பள்ளி வந்தாள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்குள், ஒரு செருப்புக் கடைக்காரருக்கு இரண்டாம் தாரமாகியிருந்தாள்.

வசந்தி இல்லாமல் போனபோதுதான் அவள் என்னிலிருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறாள் எனப் புரிந்தது. அவள் இறந்தால் எரிப்பார்கள்; நான் இறந்தால் புதைப்பார்கள். சமூகத்தில் அவள் வினைச்சொல்; நான் பெயர்ச்சொல். வாழ்க்கை என்னைத் தசமப்புள்ளிக்கு இடதுபுறம் பயணிக்கச் சொல்கிறது; அவளை வலதுபுறம் அனுப்புகிறது. சுருக்கமாக என்னை ஆண் என்கிறது; அவளைப் பெண் என்கிறது.

வசந்தியின் தாய்க்குப் பிறகு எனக்குத் தெரிந்து இதே காரணத்திற்காக இதே போல் ஆறுபேர் இறந்துகொண்டார்கள். இந்தியா முழுவதும் இதே காரணத்திற்காக நான்கு லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த போது கூட ஏறத்தாழ இதே எண்ணிக்கைதான். பெரியம்மை ஒழித்தோம்; போலியோவைக் காலியாக்கினோம்; விமானமேறி வரும் வியாதிகளைச் செய்தியாக்கி பக்கத்தில் இருமுபவனையும் தும்முபவனையும் மறந்துபோனோம்.

எங்கோ ஒருவன் இருமினால், இன்னொருவன் பதறவேண்டுமென்பதெல்லாம் பாரதியார் பாடலில்தான் என உதாசீனப்படுத்தினால், வரலாறு இன்னொருமுறையும் சிரிக்கும். ஒருவன் காறித் துப்பியதை உதாசீனப்படுத்தியதால் வந்ததுதான் முதல் உலகப் போர்!

– ஞானசேகர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *