(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘…இவங்கள் எல்லாரும் போட்டு இழுக்கிற வலைக்கு முன்னால அவன் ஒருத்தன் பெரிய கரவலையைக் கொண்டு வந்து போட்டு எல்லா மச்சங்களையும் பிடிச்சுக் கொண்டானாம். அதால இவங்கள் ஆத்திரப்பட்டு அவன் பாவிக்கு நல்லா அடிச்சுப்போட்டாங்கள்…’
“ஐயா, உங்க இருக்கிறியளோ?”
குரல் கொடுத்துக் கொண்டு விறாந்தைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான் சின்னத்துரை.
“என்னடாப்பா?” என்று கேட்டவாறு வெளியே வந்தார். ‘சக்கடத்தார்’ குருசுமுத்தர்.
“அவே, உங்களைத் தான் கூட்டியரட்டாம்”
“ஆற்ராப்பா?”
“மரியானண்ணையும் பாக்கியமப்பாவும்”
மதியூகமில்லாதவன் தனது பலவீனத்தைக் காட்டிக் கொள்ளும் போது, அதில் கணை தொடுப்பது எளிது என்பதை அவர் அறிவார். சின்னத்துரையின் பேச்சிலிருந்து அவர்களை முற்றாகப் புரிந்து கொண்ட குருசுமுத்தர் அதை வாறாகப் பயன்படுத்திக்கொண்டார். ‘மொக்குக் கழுதை’ என்று பெயரெடுத்த சின்னத்துரையின் ‘திறமை’ யையும் அவர் தெரிந்து வைத்திருந்ததால், எல்லாவற்றையும் அநுமானித்துக்கொள்வதில் அவருக்கு ஒன்றும் சிரமம் இருப்பதில்லை .
அவர் இருந்த இடத்தை விட்டு எழுந்துவர ஐந்து நிமிஷங் களாவது பிடிக்கும். இந்த அளவிற்காவது இவரைப் பற்றித் தெரி யாதவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் அசல் ‘மண்டூகங்கள்; அதாவது, ஒன்றுமே தெரியாத கிணற்றுத் தவளைகள்.
சின்னத்துரை ‘மொக்குக் கழுதை’ என்றாலும் குருசு முத் தரைப் பற்றிய எடுபிடிகள் எல்லாம் தெரிந்துதான் இன்னும் அவர் ‘கேற்’றடியில் நின்று கொண்டிருந்தான்.
‘என்ரா’ப்பா, ‘நான்’ இல்லாட்டி இனி ஊருக்க ஒண்டுமே நடக்காதா?”
‘சும்மா’ எரிந்து விழுந்து கொண்டே, சின்னத்துரையைப் பார்த்து, “சரி, நீ போ. நான் உனக்குப் பிறகாலவாறன். நீ போற கையோட மரியானையும் அங்க கூட்டிக் கொண்டு வந்துவிடு” என்றார்.
அவர் மனசில் உள்ளூர ஒரு மகிழ்ச்சி. ஊர் விவகாரங்களில் தலையிட்டுத் தீர்ப்பளிக்கக்கூடிய ‘புரக்கிராசி’ வேலையும் தெரியு மாதலால், அதையிட்டும் அவருக்கு ஒரு பெருமை.
ஒரு காலம் அவர் பொடியனாய் இருந்தபோது வயிற்றுப் பசி தாங்காது இறங்கிய தரகுத் தொழில் மூலம் ஓரளவு முன்னுக்கு வந்தாரென்றாலும், அதனால் அவர் கடைசியில் வெறுப்பும் விரக்தியும் கொண்டார் ஆயினும், அந்தத் தொழில் மூலம் கிடைத்த அனுபவமே அவரை இந்தளவுக்குக் ‘கெட்டிக்கார’னாக்கியும் விட்டது. அவர் எந்தத் தொழில் மூலம் அனுபவம், கெட்டித்தனம், பெண் ஆகியவற்றை அடைந்தாரோ அந்தத் தொழிலே கடைசி யில் அவர் மானத்தையும் பறித்து நடு றோட்டில் விட்டுவிட்டது.
குருசுமுத்தருக்கு அப்போது பத்தொன்பது இருபது வயதி ருக்கும். வழக்கம் போல இரணைதீவுக் கடலுக்குச் சென்று மீன்கள் வாங்கிக் ‘காவுதடி’ யில் போட்டுக் கொண்டு அப்படியே நாச்சிமார் கோயிலடி, சிப்பித்தறை, தட்டாதெருவுக் கூடாக, குருநகரைத் தாண்டி வீட்டுக்குத் திரும்பும்போது; தோளின் பாரம் குறைந்து மடிப் பணம் பாரமாகிவிடும்.
எந்தக் கிராமத்துக்குப் போகாவிட்டாலும் குருநகருக்குள்ளால் செல்லவில்லையென்றால் அன்றைக்கு ‘யாவாரம்’ நடக்காத மாதிரித்தான். ஆகையால் அந்த ஊருக்குள்ளால் வராமல் யாவராம் செய்யவேமாட்டார். அவருடைய விடலைப் பருவத்திற்கேற்ப ஒரு ‘வாலைக் குமரி’ தனது தாயோடு சேர்ந்து நின்று தெருப் படலையோடு ஒட்டிக் கொண்டு அவரைப் பார்த்து வந்த பழக்கம், கடைசியாகக் காதலாக மாறியது. எப்படியும் அவளைக் குருநரி லிருந்து தமது ஊருக்கே ‘கிளப்பிக் கொண்டுவர வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டதினால், அவர் தேன் சுவைக்கும் வண்டாக மாறினார்.
காவு கோலுடன் நெடுந்தூரம் நடந்து அலைந்த களைப்பில் வீட்டுக்கு வந்ததும் அவருடைய ஆச்சிக்குப் ‘பெற்ற கடமை’க்காக ஏதாவது கொடுத்துவிட்டு, மேல் காலைக் கழுவிக் கொண்டு, ‘காத்தான் கொட்டில்’ கள்ளுத் தண்ணியையும் ‘மண்டி’ விட்டு, அப்படியே கிப்பித்தறைப் பக்கம் போய் முஸ்பாத்தி பண்ணி விட்டு, இரவு பத்துப் பதினொரு மணிக்கே வீடு திரும்புவார்.
எப்போதாவது யாவாரம் நயமில்லாவிட்டால் தனது தம்பி ராசப்புவையும் கூட்டிக்கொண்டு கடலுக்குப் போவார். அங்கே பெரியபாடு, சித்தோடை, அகலமுனை, ஓடத்தலை, சேத்துப் புட்டி, மடத்துக்கரை, வெட்டோடை, கொடுக்கடி ஆகிய கடற் பரப்புக்களில் நீர் வகையைப் பார்த்துப் பத்துப் பதினைந்து பாடுகள் இழுத்துவிட்டு, வெள்ளம் வந்து ஆற்றில் விழுந்தவுடன் தோணியைச் சாய்த்துக் கொண்டு கரைக்கு வந்துவிடுவார்.
ஒரு நாள் காற்றும் மழையும் சீறிக் கொண்டதால் யாருமே அன்று கடலுக்குப் போகவில்லை. இதையறிந்த குருசுமுத்து ராசப்புவையும் கூட்டிக்கொண்டு எவருக்கும் தெரியாமல் ‘தனித் தோணி’ தாங்கிக்கொண்டு போனார்.
தனி உழைப்பில் பிடிக்கும் மச்சங்கள் மறுநாள் துறைமுக வாடியில் நல்ல விலைபோகும் என்ற ‘வியாபாரமூளை’ அவருள் ஆசைத் தீயை மூட்டிவிட்டது.
அன்று செக்கல் பொழுதோடு தொழில் செய்யக் கடலுக்குள் இறங்கியவர்கள், நடுச்சாமத்துக்கு மேலாகியும் சோறும் தின்னாமல் ‘ஒரேபிடி’ யில் நின்று வலை இழுத்தார்கள்.
காற்று அடங்கவில்லை; மழையும் நிற்கவில்லை. தம்பி ராசப்புவுக்குச் சலிப்புத் தட்டிவிட்டது. நித்திரையும் வந்து கண் களை மயக்கியது.
கப்பல் களத்தில் ஒருபாடு இழுப்பதென்றால் பெரும் ‘பிர சவவேதனை’ யாகும். எப்படியோ ‘முக்கித்தக்கி’ இழுத்துக் கொண்டே பாட்டைக் கூட்டி உமலுக்குள் போடுவதற்குப் பதி லாகக், கை தவறிக் கடலுக்குள் போட்டுவிட்டான். ராசப்பு. குருசுமுத்தருக்கு நெருப்புப் போலக் கோபம் வந்துவிட்டது.
“டேய் சனியனே, இந்தப்பாடுபட்டு ரத்தம் புழிஞ்சு பிடிச்ச மீனை அப்படியே கடலுக்குள்ள போட்டிட்டியேடா மடையா. டேய், கலியாணம் செய்து தந்தால் உன்ர பொஞ்சாதியையும் இப்படித்தான்ரா கை விடுவாய், என்ன?”
வாயில் வந்தபடியே ‘புறு புறு’த்துக்கொண்டு வெற்றிலை வாயைக் குதப்பி, ‘பொழிச்’ சென்று வலைக்குள் துப்பினார், முத்தர்.
ராசப்பன் இளையவன் என்றாலும் இளந்தாரியல்லவா? ‘சுரீர்’ என்று அவனுக்கு மூக்கு முட்ட ஏறிவிட்டது.
“சரியண்ணை பறஞ்சதுகாணும், இனி பேசாம உன் பாட்டில வலையை இழு. இல்லாட்டி அடி துறைக்குப் போவம்”
சினப்பு மேலிட, சீறிக்கொண்டு சொன்னான், ராசப்பு.
“என்னடா பயலே, என்னோட எதிர்த்துக் கதைக்க வெளிக் கிட்டிட்டியோடா?”
“உப்பிடிப்பட்ட உனக்கு என்ன மரியாதை செய்யிறது?”
“என்னடா சொன்னனி, இன்னொருக்கா அப்பிடிச் சொல் லடா பாப்பம்”
“அது தான் சொல்றன், என்ன மரியாதையெண்டு”
‘பளார்’
எடுத்த வீச்சில் ராசப்புவின் கன்னத்தில் ஒன்று விட்டார், முத்தர்.
“என்ர ஐயோ! என்ர காதுக்குறிஞ்சி வெடிச்சுப்போச் சுதணை, என்ரை ஆச்சியோய்…”
குழறிக்கொண்டு கடலுக்குள் ‘தொப்’ என்று விழுந்தான், ராசப்பு.
அந்த அடியோடு ராசப்புவின் காது உண்மையில் செவி டாய்த்தான் போய்விட்டது. அதற்குப் பின் ஊரில் எல்லோரும் “செகிட்டு ராசப்பு, செகிட்டு ராசப்பு” என்று தான் அழைப்பார்கள்.
அன்றையோடு அவர் பாடு தொழில் மந்தம்; பிடிபாடும் அருந்தல்.
குருசுமுத்தர் அந்தச் சம்பவத்துக்குப் பின் நாளாவட்டத்தில் தொழிலையும் விட்டு விட்டார். தடி காவுவதையும் நிறுத்திக் கொண்டார்.
அது ஒரு ‘எழிய தொழில்’ என்று தனக்குள் தீர்மானித்தே விட்டார்.
கொஞ்ச நாள் கழிய வயிறு கடித்தது. அந்த உபாதையால் ‘சுறுட்டுச் சுத்திப் பாப்பம்’ என்று கொழும்புத்துறைப்பக்கம் உள்ள சுறுட்டுக் கொட்டில்களுக்கு ‘விஜயம்’ செய்யத் தொடங்கினார். அவை கூட அவர் வயிற்றை நிரப்பவில்லை. ஆனால் அவர் கண்போட்ட பெண்மணி இருந்தாளே, அந்த ‘வைப்பு’க்கு மட்டும் என்னவோ வயிறு நிரம்பிக்கொண்டு வந்தது.
இந்த விஷயம் வெளிக்குத் தெரிந்து கை காலுக்குப் பொல் லாப்பு வந்து சேரமுன் புத்திசாலித்தனமாக அவர் தனது ஊருக்கே இரகசியமாக வந்து விட்டார். அவளும் ‘இதை விட்டால் இனிக் கிட்டாது’ என்று ஓடி வந்துவிட்டாள். கூடி வந்தவளை ஊரில் வைத்திருக்கக்கூட அவரால் முடியவில்லை. எனவே, கொழும்பு மா நகருக்குப் புறப்பட றெயில் ஏறிவிட்டார்.
அதற்குப் பின் அவருக்குக் கைகொடுத்து உதவியது ஒரு ‘ஊர்ச்சக்கிடத்தார்’ வேலை. அதிலிருந்து கொண்டே அவர் ‘ஊர்த் தொண்டு’ புரியலானார்.
சக்கடத்தார் குருசுமுத்தர் நடுக்குறிச்சிக்கு வந்து விட்டார். கூட்டம் பாக்கியக் கிழவன் வீட்டு முற்றத்தில் ‘கலகல’ப்பாக நடந்து கொண்டிருந்தது.
முத்தர் மெதுவாக நாரியை வளைத்துக் கைகளால் பிடித்துக் கொண்டு முன்னே வந்து கொண்டிருந்தார்.
பொறுத்த நேரத்தில் மூத்தர் வந்திருக்காவிட்டால் இந்நேரம் மாரியானும் பொன்னுத்துரையும் பொல்லுகளால் மண்டை உடைபட்டிருப்பார்கள். அவரைக் கண்டதும் அமைதி நிலவியது.
“என்னடாப்பா, நீங்கள் மனிசர்களா அல்லது மிருகங்களா?” என்றவர், ‘கடல் நனைஞ்ச கால்புத்தி, இவங்களை விட்டுப் போகாது’ என்று முணுமுணுத்துக் கொண்டார்.
யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இதைக் கண்ட தும் அவர் முகம் மகிழ்ச்சிப் பிம்பம் ஆகியது.
தம்முடைய கோட், சூட், ரை, சப்பாத்து ஆகியன அவர் களை ஊமைகளாக்கி விட்டன என்று யூகித்துக் கொண்ட அவர் முகத்தில் புன்னகை ஒன்று அரும்பியது.
சுமார் ஒருமணிநேரம் பேசிவிட்டு மரியானுக்கு மட்டும் ஏதோ ‘சமிக்ஞை’ காட்டியபின் எழுந்து சென்றார்.
அன்று இரவு அவருக்குத் தூக்கம் வரவில்லை. ‘ஊர் குழம்பினால் உடையாருக்குத் தாயம்’ என்பது அவருக்குத் தெரியும்.
அவரே ஊர்ப் புரக்கராசி – சக்கடத்தார்.
மரியானைப் புகழ்ந்து பேசிவிட்டால் அவன் தனக்கு உடந் தையாக இருப்பான் என்பதை அவர் அறிவார்.
மரியானோ அவர் புகழ்ந்த பேச்சில் மயங்கி விட்டான்.
“அது உண்மைதானண்ணை. இவங்கள் எல்லாரும் போட்டு இழுக்கிற வலைக்கு முன்னால அவன் ஒருத்தன் பெரிய கரவலையக் கொண்டு வந்து போட்டு எல்லா மச்சங்களையும் பிடிச்சுக் கொண்டானாம். அதகால இவங்கள் ஆத்திரப்பட்டு அவன் பாவிக்கு நல்லா அடிச்சுப் போட்டாங்கள்” -”அவன் இவங்களில் வழக்கு வச்சிட்டான். வழக்கு இப்ப பெலப்பட்டுப் போச்சு. இந்த வழக்கில கட்டாயம் நாலைஞ்சு பேர் அம்புடுவாங்கள் போல கிடக்கு”
“அது சரி, இதில் என்ன வில்லங்கம் இருக்கு?”
“இதில் ஒரு சங்கடம். இந்த வழக்குக்காகச் சேர்த்த காசு. என்னட்ட இருக்கட்டு உன்னட்ட இருக்கட்டுக் கொண்டு ஒருத் தனை ஒருத்தன் அடிச்சுக் கொண்டு சாகிறாங்கள். அதுக்காகத்தான் சின்னத்துரையை உங்களிட்ட அவசரமாக அனுப்பினனாங்கள்”
“ஓகோ அப்படியா சங்கதி? ‘பெட்டியையும் திறப்பையும் சக்கடத்தார் குருசுமுத்தண்ணையிட்டக் குடுத்துவிடுங்கோ’ வெண்டு நீ சொன்னால், அந்தப் பயல்களில் ஆர் மறுப்பான்?”
“அப்படித்தானண்ணை இப்ப எண்ணியிருக்கிறம்” குருசுமுத்தர் வைத்த கண்ணியில் மீன்கள் சிக்கிவிட்டன.
எப்படியோ வழக்குகள் அமர்க்களமாக நடந்தன. ‘எல்லாம் சக்கடத்தார் குருசுமுத்தரின் வாய் வீச்சுத்தான்’ என்று ஊர் முழுக்கப் பேசிக்கொண்டார்கள்.
‘இந்த வழக்குக்கு எப்படியும் பத்துப் பதினையாயிரமெண் டாலும் கட்டாயம் வேணு’ மென்று அவர் கண்டிப்பாகக் கூறி விட்டார். அவர்களோ வழிதெரியாது விழித்தனர்.
ஆனால், இந்த வழக்கிலிருந்து தப்ப வேணுமே? இப்பொழுது குருசுமுத்தர் வீட்டில் ஒரே கும்மாளம்
‘மாதக் கடைசியில் அவருடைய கடைக்குட்டிப் பெண் ணுக்குத் திருணம்’ என்ற பேச்சு அடிபட்டது.
வழக்கு இறுகவில்லை. எல்லோரும் விடுதலை!
இந்தச் செய்தியால் மகிழச்சிப் பெருக்கில் உந்தப்பட்ட அவர்கள் தங்கள் அபிமானத்துக்குப் பாத்திரமான ‘சக்கடத்தார்’ குருசுமுத்தரைச் சூழ்ந்துவிட்டார்கள்.
“சக்கடத்தார் குருசுமுத்தருக்கு, ஜே!”
“எங்களுக்கு விடுதலை அளித்த வீரன் வாழ்க”
தெருவில் ஜனக்கூட்டம் நிறைந்துவிட்டது. யாரோ சனத்தை முடுகி வருவது தெரிந்தது.
கூட்டத்தை ஊடறுத்துக் கொண்டு ராசதுரை சக்கடத்தார் குருசுமுத்தரைத் தேடி வந்து கொண்டிருந்தான்.
“ராசதுரை, என்னப்பா சங்கதி?”
ராசதுரை ஒரு வெள்ளைக் காகிதத்தை அவரிடம் நீட்டினான்.
‘வாழ்த்துப் பத்திரங்கூட நேரத்தோடு தயார்பண்ணி வைத் திருக்கிறான் நாலுபேருக்கு முன்னாலயல்லோ தரவேணும்…. மோட்டுப் பயல்’
அந்த வாழ்த்துப் பத்திரம் ஜனநெரிசலால் கை நழுவிக் கீழே விழுந்தது.
“என்ராப்பா விஷயம்?” என்று மறுபடியும் ராசதுரையைக் கேட்டார், சக்கடத்தார்.
“அதிலதான் அம்மா எல்லாம் எழுதியிருக்கிறா, பாருங்கோ”
“உது கடிதமே? அம்மா என்ன எழுதியிருக்கிறா; வாயாலை சொல்லித் தொலையனப்பா”
“அது ஒரு கவலையான சங்கதி”
முத்தர் நெஞ்சு குபீரித்தது.
“அது என்ராப்பா கவலை, எங்க எடடா கடிதத்தை?”
“அந்தக் கடிதம், அவங்கட கையில் அம்புட்டுப் போச்சுது” சக்கடத்தார் பேச வாய் எடுக்காமல் மௌனியாகினார்.
அந்தக் கடிதத்தை ஒருவன் தூக்கிப் பிடித்துக் கொண்டு வெறி பிடித்தவன் போல் ஆவேசமாக உரக்க வாசித்தான்;
பட்சமுள்ள பிராண நாயகருக்கு,
அவசரமாக எழுதுவது. இண்டைக்குக் காலத்தால் நீங்கள் கோட்டடிக்குப் போன பிறகு, பெட்டியிலிருந்த பத்தாயிரத்தையும் காணவில்லை. எங்கட வெறிக் குட்டியன்ர பொடியன்தான் களவாண்டிருப்பான். அந்தக் கள்ள வடுவாவை விடப்படாது. உடன் பொலிசில ‘என்றி’ பொட்டு அவனைப் பிடிச்சு ‘லொக் கப்பில போடச் சொல்லுங்கோ. பாவம், பாடுபட்டுழைச்சது களின்ர பணத்தை அதுகளுக்கே கொடுத்துவிடலாம். நாங்கள் அந்தச் சனங்களை ஏமாத்தினம். இப்ப இவன் எங்களை ஏமாத்திப் போட்டான். கொஞ்சமா, பத்தியிரம் ரூபாயல்லே?
உங்கள் பட்சமுள்ள
கு. சின்னம்மா
சக்கடத்தார் சதிரம் குல்லிட்டது.
மரியானையும் ராசதுரையையும் தவிர, அவருடன் அப்போது அங்கு எவரையுமே காணவில்லை.
சக்கடத்தாரின் ‘பொடிச்சி’க்கு மாதக் கடைசியில் திட்டமிட்டிருந்த கலியாணம் நடக்கவில்லை.
– 1953 வீரகேசரி
– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.