சந்தியா கால ஆசை

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 138 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சே… இந்தக் கிழவிக்கு என்ன, பைத்தியம் பிடித்து விட்டதா…? இந்த வயதில் இப்படி ஓர் ஆசையா!… என்ன ஆயிற்று இவளுக்கு? வயசான காலத்தில் கோவில், குளம், என்று போவார்கள் என்று பேர். இவள் என்னடான்னா…” அவளை முழுவதுமாக மறுக்கவும் மனம் வரவில்லை.

“இதில் என்ன தவறு…” என்றும் தோன்றியது. “பாவம் கிழவி! ஆசைகளை என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவாள்? இருந்தாலும் நாலு பேர் பார்த்தால் எதாவது நினைத்துக் கொள்வார்களே… என்ற உதைப்பு. இத்தனை வயசுக்கு மேலே…’

“இத்தனை நாள் வீடு, வாசல், புள்ளை, குட்டின்னு இருந்துட்டோம். எந்த நினைப்பும் வரலை. இப்பக் கொஞ்ச நாளாத் தான் தோணித்து. தப்புன்னா, மன்னிச்சிடுங்க. “நான் திரும்பவும் கேட்கலை” என்று பங்கஜம் உள்ளே போய்விட்டாள். மற்றவர்கள் திரும்பவும் எதையாவது சொல்லிக் குழப்பிவிட்டுட்டுப் பேசாமல் இருந்து விடுவார்கள். பின்னாலே நாமதான் நம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேணும். எல்லாம் பக்கத்துத் தெரு சிவகாமி பண்ற வேலையாத் தான் இருக்கும்” இருந்தாலும் மனைவியைத் திட்ட மனம் வரலை.

“தோளுக்கு மேலே உசந்த புள்ளைங்க, பேரன், பேத்திங்க தெரிஞ்சாச் சிரிக்க மாட்டாங்களா..? இந்தக் கிழ வயசில இதுகளுக்கு இது தேவை தானா என்று அக்கம், பக்கம் முகத்தைத் தோள்பட்டையில இடிச்சுக்க மாட்டாங்களா…? ஏன் இதை யெல்லாம் இவள் நினைக்கலை… எனக்கும் உள்ளுர ஆசைதான். ரொம்ப நாளாச் சொல்லலை. இப்பப் பங்கஜமே சொன்னதுனால, யோசிக்க வேண்டியதா இருக்கிறது.”

சாப்பிட்டபோது அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன் அமைதியாக இருந்தாள் பங்கஜம்…!

“…!”

“ஏண்டி… உனக்கு இப்படி ஓர் ஆசை…?”

“தப்பா…?”

“இல்ல, நம்மப் போல வயசானவங்க கோவில் குளம்னு” போதும் நிறுத்துங்க! அதை எல்லாரும் தான் செய்யறாங்க மத்தவங்க மாதிரி நான் இருக்க விரும்பலை. கடவுள் குடுத்த வாழ்க்கைைைய முழுசாப் பயன்படுத்த விரும்பறேன், அப்புறம் உங்க விருப்பம், யோசனை பண்ணுங்க.”

“எனக்கு வெட்கமா இருக்கு…!” “எனக்கு இல்லை…!”

“அடிப்பாவி..!”

“போங்கோன்னா…” உள்ளே ஓடிவிட்டாள். “பங்கஜம்..!”

“ம்…!”

‘நீ சொன்ன செய்தியைப் பத்தி இராத்திரி யெல்லாம் யோசிச்சுப் பார்த்தேன்… அப்படி என்ன கேட்கத் கூடாததைக் கேட்டுட்டே மத்தவங்க என்ன நினைச்சாலும் நினைக்கட்டும். அது நம்ம உரிமை. நம்ம உரிமையை நாம யாருக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.’

பங்கஜம் முகம் பூவாய் மலர்ந்தது.

“ஆமான்னா..!”

“மத்தவங்களைப் போல வெட்டியாப் பொழுதைப் போக்கிட்டு, வேண்டாததை யெல்லாம் எண்ணிக் கிட்டு வீட்ல முடங்கிக் கிடக்காம… உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உபயோகமா வாழ்ந்து காட்டணும்.”

“என்ன…கொஞ்ச நாள் கேலி பண்ணுவாங்க. அப்புறம் மத்தவங்களும் நம்பளைப் போல மாறிடுவாங்க. நாம மத்தவங்களுக்கு எடுத்துக் காட்டா இருக்கணும். இதோ பார், என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு! பையில் இருந்து எடுத்துக் கொடுத்ததை ஆசையோடு வாங்கிக் கொண்டாள் கிழவி” ஏன்னா.. நான் ரொம்பக் கொடுத்து வச்சவட: என் மனசைப் புரிஞ்சுண்டு நடக்கற கணவரைப் பகவான் எனக்குக் கொடுத்திருக்கார்.’ உன்னைப் போலப் புத்திசாலிப் பெண்டாட்டி கிடைக்க நான்தான் குடுத்து வச்சிருக்கனும் போடி.! சீக்கிரம் வா… நாழியாகிறது…”

சிறிது நேரத்தில் தலை வாரிப் பூச்சூடி நெற்றிக்குப் பொட்டிட்டு நேர்த்தியாக வந்து நின்றாள் கிழவி “என்ன தயாரா ?”

“ம் கிளம்ப வேண்டியது தான்…” இருவரும் புதிதாக வாங்கி வந்த அரிச்சுவடிப்புத்தகம், புதுக் கற்பலகை, பலப்பத்துடன், பக்கத்துக் தெருவில் சிவகாமி ஆசிரியை நடத்துகிற முதியோர் கல்வி நிலையத்தை நோக்கி உற்சாகத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்களுடைய சந்தியா கால ஆசை நியாயமனாதுதானே…?

– இரத்தினமாலா, பிரம்பூர், சென்னை-11

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *