கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 5,745 
 
 

டேய், முத்து, “இன்னிக்கி நீ கேட்டபடி கூளயனை நீ கூட்டிக்கிட்டு போ. நூத்தம்பது ரூபாய் அக்காட்ட கொடுத்திட்டு போயிடு. ராத்திரி 9 மணிக்கு கூளையனை கொண்டு விட்டுறணும். மத்ததெல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான்”. அண்ணாச்சியிடமிருந்து போன் வந்ததும் முத்துவிற்கு சந்தோசம். பதுவா அண்ணாச்சியோட அக்கா, கூளயனை சுப்பம்மாவுக்குத்தான் வாடகைக்கு கொடுப்பார். இன்னிக்கு என்னமோ தெரியலை கூளயனை அவன் கூட அனுப்ப அண்ணாச்சி சம்மதித்தது அவன் அதிருஷ்டம்தான். கூளயன் நல்ல உருப்படி. அவன் வாடகை, சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் போக கையில் முழுசா குறைந்து ஐநூறு ரூபாயாவது சம்பாதித்துத் தரக் கூடிய உருப்படி.

கூளயன் தலை மற்றும் தலைக்குக் கீழே உடம்பு என்று சொல்ல முடியாத தசைப் பிண்டம். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் ஒரு ஊனமுற்ற பிறவி. அண்ணாச்சி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் உருப்படிகளை அவரே வைத்து தொழில் செய்து கொண்டிருந்தார். இப்போது அரசியலுக்கு வந்த பின் நேரடியாக தொழில் செய்வது கௌரவக் குறைவு என்பதால் இப்போதெல்லாம் உருப்படிகளை வாடகைக்கு விடுகிறார். தொழிலை அவரது துணைவிக்கு காதல் பரிசாக கொடுத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எப்போதாவது பிரச்சனை இந்த போலீஸ், மனித உரிமை அப்படி ,இப்படி வந்தால் தன் அரசியல் செல்வாக்கால் துணைவியை பிரச்சனையிலிருந்து மீட்பதோடு அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு நேரமும் அவருக்கில்லை. முத்து அவரது ஆரம்ப காலங்களிலிருந்தே அவருடன் இருந்த விசுவாசி. இருந்தாலும் துணைவியாருக்கு முத்துவை பிடிக்காது. தொழில் கைமாறியதும் பழைய ஆட்களுடன் நிறைய புது ஆட்களை அக்கா வேலைக்கு எடுத்தார். புதிய ஆட்கள் வேலை கற்றுக் கொண்டது. அப்படியே பழைய ஆட்களுக்கு கல்தா கொடுத்தார். அப்படி வெட்டி விடப்பட்ட ஆட்களில் முத்துவும் ஒருத்தன்.

அண்ணாச்சியிடம் வந்து அழுது புலம்பி, அண்ணாச்சி அக்காவிடம் சிபாரிசு செய்ததில் தினம் நூறு ரூபாய் வாடகைக்கு மூன்று உருப்படிகள் தர அக்கா சம்மதித்தார். அந்த மூன்று உருப்படிகளும் சேர்ந்து தரும் ஒரு நாளைய வருமானத்தை கூளயன் ஒருத்தன் ஒரே நாளில் சம்பாதித்துத் தருவான்.

வழக்கமாக ஒரு உருப்படிக்கு நாள் வாடகை தினத்திற்கு தினம் வேறுபடும். விஷேச நாட்களில் ஒரு வாடகை. வெளியூருக்கு ஒரு வாடகை இப்படி. இந்த குறைபாடுள்ள மனித ஜீவன்களுக்கு சோறு, தண்ணி, இருப்பிடம் எல்லாம் கிடைக்கிறது. இவர்களால் முத்து போன்ற ஆட்களுக்கு ஜீவனம் நடக்கிறது.

அண்ணாச்சியின் போன் வந்த மறு நிமிடமே முத்து அக்கா வீட்டிற்கு கிளம்பி விட்டான். முத்து தொழிலுக்காக ஒரு ஆட்டோ வைத்திருக்கிறான். தினம் காலையில் உருப்படி என்ற அந்த ஜீவன்களை விடியலுக்கு முன்பாகவே அவனுக்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேசனில் நிறைய மக்கள் வந்து போகும் பாதையில் கொண்டு இறக்கி விடுவான்.

அந்த ஸ்டேசன் காவலர்களை மாதா மாதம் மாமூலாக கவனித்து விடுவான். அவர்களும் மாசத்தில் ஒரு சின்ன கேஸ் போட்டு உருப்படியை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்துவார்கள். அங்கே அக்கா அனுப்பும் ஒரு ஆள் அபராதத்தைக் கட்டி கூட்டிப் போய் விடுவார்கள். நீதிபதி அந்த ஜீவனை அரசாங்க காப்பகத்தில் விடச் சொன்னால் உருப்படியின் அம்மாவாக நடிக்க ஏற்பாடு செய்யப்படும் பெண், நீதிபதியிடம், “ அய்யா வயத்துக் கொடுமை அதானால செஞ்சிட்டேன். இனிமேல அப்படி பிச்சை எடுக்க விடமாட்டேன் அய்யா. என் புள்ளையை நானே வளர்க்கிறேன். காப்பகத்திற்கு அனுப்ப வேண்டாம். அங்க என் புள்ளையின் மூத்திரத்துணி கூட மாத்த அருவருப்புப் படுவாங்க அய்யா” என்று சொல்ல நீதிபதியும், மனிதாபிமான அடிப்படையில் “சரி இனி மேல் இப்படி செய்யாதே. அபராதம் கட்டிட்டு போ”. தீர்ப்பு வந்ததும் அபராதம் கட்டி மறுபடி தொழில் பழையபடி கோலாகலமாக ஆரம்பித்து விடும்.

முத்து அக்கா வீட்டிற்கு வந்த போது காலை மணி ஐந்தரை. அக்கா வழக்கமான இரண்டு ஊனமான ஜீவன்களுடன் அண்ணாச்சி சொன்ன கூளயனையும் முத்து எடுத்துப் போக தயார் நிலையில் வைத்திருந்தாள்.

“ முத்து அவுக சொல்லிட்டாவ. என்னால மீற முடியலை. இன்னும் ஒரு வாரம் கூளயனை ஒனக்கு தாரேன். ஏழு நாளுக்கு தினம் நூத்தம்பது வீதம் ஆயிரத்தியம்பது. ஆயிரம் மொத்தமா கொடுத்திடு. அம்பது ரூவா தள்ளியிருக்கேன். ஆக வழக்கமான மூன்றுக்கு முன்னூறும், கூளயனுக்கு ஆயிரம், ஆயிரத்தி முன்னூறு கொடு என்றாள். “சரிங்க அக்கா” என்றபடி அந்த பணத்தை எண்ணி அக்காவிடம் கொடுத்து விட்டு உருப்படிகளை தூக்கிக் கொண்டு போய் ஆட்டோவில் உட்கார வைக்கும்போது தான் கவனித்தான் கூளயனுக்கு உடம்பு அனலாகக் கொதிப்பதை.

“அக்கா, கூளயனுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கே. நான் அதுக்கு உடம்பு சரியானதும் இரண்டு நாளு கழிச்சி எடுத்துக்கிறேன்”

“நீ எப்பம் வேணா எடுத்துணு போ. ஆனா இப்போலேர்ந்து கரிட்டா ஒரு வாரம் ஏழு நா கணக்கு. அதை குறைக்க முடியாது”.

“என்னக்கா, அதுக்கு உடம்பு சரியில்ல. அதாலதானே சொல்றேன். இப்படி சொன்னா எப்படி”

“ இதான் அண்ணாச்சி சொன்னாவளேன்னு கொடுத்தா விவகாரம் பன்ணுறெ. சரி, கூளயனை வுட்டு வழக்கமான உருப்படிகளோட போ. நா வழக்கம் போல சுப்பம்மா கிட்ட கொடுத்துக்கிறேன். இந்த கரச்சல் அவகிட்ட இல்லை. நீ கூளயனை வுட்டுட்டு கிளம்பு நைனா. இந்தா நீ கொடுத்த ஆயிரம்”. என்ற அக்காவிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

திரும்ப அண்ணாச்சியிடம் போனால் அவருக்கு உள்ள பிரச்சனைகளில் இது மிகச் சின்னது. “ஆ, அப்படியா. சரி பேசிப் பார்க்கிறேன்” என்று வெட்டிக் கொள்வார். என்னடா எது கைக்குக் கிடைத்தது வாய்க்கு கிடைக்காம போயிடும் போலிருக்கே. சரி போற வழியில் இந்த மாதிரி ஜீவன்களுக்கு வைத்தியம் செய்யும் அந்த சேட்டுமார் தர்மாஸ்பத்திரியில் காட்டி மருந்து வாங்கிட்டுப் போகலாம்.அப்படி அங்கே பார்க்க முடியாவிட்டால் ஒரு குரோசின் வாங்கி கொடுத்து கொஞ்சம் காலை பத்து மணிவரை தாக்காட்டி விட்டால் அப்புறம் நான்கு மணிவரை கூட்டம் அதிகம் இருக்காது.

அந்த நேரத்தில் எதாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்டி மருந்து வாங்கிவிடலாம் என்ற தீர்மானத்தோடு கிளம்பி விட்டான். அந்த பெரிய ரயில் நிலையத்தில் ஓரமாக ஆனால் எல்லோர் பார்வையும் படும் இடத்தில் மற்ற மூன்று ஜீவன்களை கீழே துண்டு விரித்து ஒரு வசதியான கோணத்தில் உட்கார வைத்துவிட்டு, இவற்றைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி சின்னப் பொண்ணுவிடம் 20 ரூபாய் கொடுத்துவிட்டு, ஆட்டோவில் தர்மாஸ்பத்திரிக்கு கூளயனை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆஸ்பத்திரி நல்ல மனமுள்ள, தர்ம சிந்தையுள்ள மனிதர்கள் மேற்பார்வையில் நடத்தப் படுகிறது. கூளயனை பார்த்துப் பரிதாபப்பட்டு முதலில் கூப்பிட்டனர். டாக்டரிடம் முத்து கூளயனை தன் மகன் என்று சொல்லி யதும் பரிதாபப் பட்ட டாக்டர் கூளயனுக்கு சத்தான உணவு, மாத்திரைகளை ஆஸ்பத்திரி செலவில் வாங்கிக் கொடுத்தனுப்பினார். கொஞ்சம் நல்ல ஆகாரமும், மருந்தும் சாப்பிட்டதில் கூளயன் காய்ச்சல் குறைந்திருந்தது.

மனசு தடுத்தாலும் முத்துவின் தொழிலில் இரக்கத்திற்கு இடம் இல்லை. பெற்றவள் என்ன காரணத்தினாலோ அவனை பிறந்த நாளிலேயே குப்பைத் தொட்டிக்குப் பரிசாக அளித்தாள். அவ்வழியாக வந்த ஒரு குப்பையிலிருந்து பிளாஸ்டிக் கழிவு பொறுக்கி விற்று வாழ்வு நடத்தும் மனிதன் ஒருவன் பச்சிளம் பிள்ளையின் அழுகுரல் கேட்டு தொட்டியைக் கிளற முத்துவைக் கண்டான். அவன் அண்ணாச்சியிடம் கொடுக்க முத்துவிற்கு அன்ணாச்சிதான் நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா, முதலாளி மற்றும் ஆசான் எல்லாம். ஆரம்பத்தில் சரோஜா அக்காவுக்கு இடுப்பில் பிள்ளையாய், அப்புறம் ராதாஅக்காளுடன் பிச்சை எடுக்கும் போது கூடப் போவது இப்படி படிப்படியாக தொழிலில் எல்லா நிலைகளையும் பார்த்தவன். அவன் உலகத்தில் அம்மா கிடையாது. அண்ணாச்சிதான் எல்லாம். அப்போது அவனுக்கு பதினைந்து வயது இருக்கும். ஒருநாள் நல்ல போதையில் அண்ணாச்சி அவனைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த கதையை எல்லாம் சொல்ல மனித இனத்தின் மீதே ஒரு வெறுப்பு உருவானது. அப்புறம் பெண்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று தன் தாய் பற்றி நினக்கும் போது தோன்றும். ஆனால் அது தவறு எல்லாரும் அப்படியில்லை என்று மனத்தில் சரோஜா அக்காவை நினைத்துக் கொள்வான். சரோஜா அக்கா இடுப்பில் அவனை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் போது எது கிடைத்தாலும் முதலில் அவனுக்குத்தான் தரும். ரொம்ப நாள் வரை சரோஜா அக்காவைத்தான் தன் அம்மா என்றே நினைத்திருந்தான். இப்போது உலகம் புரிய ஆரம்பித்ததும் அவனுக்கு அன்பு , பாசம் இதெல்லாம் வயிற்றுடன் சம்பந்தப்பட்டது என்றானது. கூளயனை பார்த்து சிரிக்க கூளயன் புரியாத ஒலி எழுப்பினான்.

ஆட்டோவிலிருந்து அந்த பழைய பால் பேரிங்க் பொருத்திய தள்ளு வண்டியில் கூளயனை வயிற்றுப் பக்கமாக , தலை மேல் நோக்கி இருப்பது போல் படுக்க வைத்து தண்டவாளத்தை கடக்க உள்ள வழிபாதையின் ஓரமாக வழக்கம் போல் துண்டு விரித்து அலுமினிய கப்பரையை வைத்து விட்டு ரயில்வே பெஞ்சில் நான்கு உருப்படிகளும் கண்ணில் படுவது மாதிரி தோதான இடத்தில் வந்து உட்கார்ந்தான். இப்பொது மணி ஏழு. நல்ல கூட்டம் வரும் நேரம். பத்து மணிக்கு மேல் சிறிது கூட்டம் குறைந்ததும் அந்த ஜீவன்களுக்கு எதாவது சாப்பிடக் கொடுக்க வேண்டும். எட்டு மணிக்கெல்லாம் சரியான கூட்டம். பிளாட்பாரத்தில் நிற்க இடமில்லை. எட்டரை மணியிருக்கும்.

“அய்யோ, காப்பாத்துங்க, சத்யா ஓடி வா” என்று பலரும் ஏக காலத்தில் போட்ட சப்தத்தில் ஒரு குழந்தை மிரண்டு போய் டிராக்கில் நின்று கொண்டிருந்தது. குரல் கேட்ட நேரத்தில் முத்து உட்கார்ந்திருந்த பிளாட்பாரத்தை அடுத்த விரைவு வண்டிகள் மற்றும் கூட்ஸ் வண்டிகள் வரும் டிராக்கில் படு வேகமாக ஒலிப்பான் ஒலித்தபடி வந்து கொண்டிருந்தது ஒரு அதி விரைவு வண்டி. டிராக் அருகில் அம்மா கையைப் பிடித்தபடி நின்றிருந்த குழந்தை ஒன்று கையை விட்டு ஓடி விபரீதம் புரியாமல் நட்ட நடு டிராக்கில் நின்றபடி அழ ஆரம்பித்ததுதான் அந்த சப்தம் கேட்கக் காரணம். என்ன தோன்றியதோ டிராக் அருகே இருந்த கூளையன் உடம்பை வேகமாகத் தள்ள பால் பேரிங்க் வைத்த அந்த வண்டி வேகமாக ஓடி குழந்தையை ட்ரக்கின் மறுபுறம் தள்ளி விட்டது, அது ட்ரக்கில் நின்றது, விரைவு வண்டி கூளயனின் சக்கர வண்டியைத் தூக்கி அடித்து சென்றது எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. விஷயம் தெரிந்ததும் முத்து, அண்ணாச்சிக்குத் தகவல் தர அண்ணாச்சி, மற்ற விஷயங்களை அவர் அதிகம் பிரச்சனையில்லாது முடித்தார். காப்பாற்றப்பட்ட குழந்தையின் வீட்டில் பூசை அறையில் கூளயனின் படம் மாட்டப்பட்டு, தினம் வணங்கப்படுவதென்னவோ உண்மை. சத்யாவின் மகள் ஒரு நாள் கூளயன் படத்தைக் காட்டி “ யாருமா இது” என்ற போது “ எனக்கு மூத்த அண்ணனாம், அவர் என் உயிரை காப்பாற்றினாராம், அப்படின்னு அம்மா எனக்குச் சொல்லியிருக்காங்க” என்று சத்யா சொன்னதும் நிஜம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *