தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 32,288 
 

சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தமது இருக்கை எண்ணைத் தேடிப் பிடித்து அமர்ந்தார் குமாரசாமி. தோள் பையை இருக்கையில் வைத்து, சின்ன மாம்பழக் கூடையை அலுங்காமல் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தார்.

“அடடே… வாத்தியாரய்யா!’ எதிர் சீட்டில் தென்பட்ட முத்துராஜா சிநேகமாகச் சிரித்தார்.

“சௌக்கியமா அண்ணா?’ முத்துரஜாவின் மனைவி தமயந்தி வெகுவாகவே மகிழ்ந்தாள்.

“நல்ல சௌக்கியம்மா… அடேயப்பா… எவ்வளவு நாளாச்சு உஙகளைப் பார்த்து!’

“உங்க சன் வித்யாகர் எப்படியிருக்கான் ஸார்?’

“நல்லா இருக்கான். அவனைப் பார்க்கத்தான் சென்னைக்கு போயிட்டிருக்கேன்!’

“கல்யாணமாயிடுச்சா அண்ணா?’

“ஆமாம்மா! இப்பத்தான்.. ஒரு ஆறு மாசம் ஆச்சு. கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா போயிட்டான். போன வாரம்தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கான்.!’
“ஹூம்! அண்ணி செத்தப்போ வித்யாகருக்கு பத்து வயசிருக்கும். “அம்மா எழுநதிரும்மா! எழுந்திரும்மா’ என்று அவன் கதறுன கதறல் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு அண்ணா!’

“ஆமா ஸார்! எத்தனை பொண்ணு வந்துச்சு. எதையும் ஏறிட்டுப் பார்க்கலையே நீங்க! ஒத்து ஆளா நின்னு ஆளாக்கி, பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வெச்சு… உங்க மனஉறுதி, தைரியம் யாருக்கும் வராது!’ அதற்குள் டி.டி.ஈ. செக்கிங்குக்கு வந்திடவே, பேச்சு வேறு திசைக்கு மாறியது.

“குட்நைட் ஸார்… பிறகு பார்ப்போம்!’ என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டார் குமாரசாமி.

தமயந்தி சொல்வது சரிதான். வித்யாகருக்கு பத்தாவது பிறந்தநாள் வந்த மறுநாள், தலைவலி, ஜுரம் என்று படுத்தவள்தான் சிவகாமி, விஷக் காய்ச்சல் அவளை ஒரேடியாக வாரிக் கொண்டு போய்விடும் என்று யார்தான் நினைத்தார்கள்? ஒருவாரம் கூடி அழுத உறவுகள், ஒவ்வொன்றாக விலகிக் கொண்ட இரவு, சிவகாமியின் புடைவையை விரித்துக் கொண்டுபடுத்த பிள்ளையைப் பார்த்து மனசுக்குள் துக்கம் பொங்கியது குமாரசாமிக்கு.

ஒரு வாரம் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். வித்யாகருக்கு பேதி கண்டு கொஞ்சம் சீரியஸாகிப் போனதும், ஆனது ஆச்சு என்று கரண்டியைக் கையில் எடுத்துவிட்டார் குமாரசாமி. சமையற்கட்டுக்கே போகாதவராச்சே! பாத்திரம் பண்டங்களை இனம் காணவே ஒரு வாரம் ஆனது. வித்யாகரைச் சாப்பிட வைக்க அதைவிடச் சிரமப்பட்டார்.

“உம் தயிர்சாதம் வை! வேற என்ன வைக்கத் தெரியும் உனக்கு?’ எரிச்சலுடன் கத்துவான் வித்யாகர். “தாயில்லாப் பிள்ளைக்கு நாக்குக்கு ருசியாப் பண்ணிப் போட முடியாத பாவி ஆயிட்டேனே!’ என்று மனம் வெதும்பிப் போவார் குமாரசாமி.
“சமைத்துப் பார்’ புத்தகம் வாங்கி, தினுசு தினுசாக முயற்சி செய்வார். அக்கம் பக்கத்துப் பெண்கள், சக டீச்சர்களிடம் குறிப்புகள் கேட்டு வந்து பயந்து பயந்து சமைப்பார்.

பம்ப்பிங் ஸ்டவ்வின் “ப்ர்ர்’ என்ற சத்தமும் ஈர விறகின் புகையும் அவருக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது. தலைவலி வந்துவிடும். ஆனாலும், மகனுக்காக இரண்டு வேளையும், சுடச்சுட சமைத்துப் போடத் தவறமாட்டார். நெய் விட்டு தாளிப்பார், தேங்காய் அரைத்து விடுவார். இடிச்சுப் பொடிச்சுத் தூவுவார். ஆனாலும் ஆயிரம் நொட்டை சொல்வான் வித்யாகர்.

“நீ செய்யுற சப்பாத்தி வரட்டி மாதிரி இருக்கு. எனக்கு வயித்தை வலிக்குது!’ என்று முரண்டு பிடித்து மறுக்கும் அதே சப்பாத்தி – குருமாவை சக வாத்தியார்கள் “சூப்பரா இருக்கு ஸார்!’ என்று ரசித்து காலி செய்யும்போது குமாரசாமிக்கு மனசு வலிக்கும்.
ஒருமுறை அவர் ஸ்கூலுக்குக் கொடுத்து அனுப்பிய மாங்காய் சாதம் அப்படியே வைத்தது வைத்தபடி திரும்பி வரவே, கோபத்தில் இரண்டு அடி வைத்துவிட்டார் குமாரசாமி. அதற்காக அவரிடம் கோபித்துக் கொண்டு பாட்டி வீட்டுக்கு பெங்களூருக்கு ஓடி விட்டான். அவனைக் கெஞ்சி அழைத்துக் கொண்டு வந்தபோது, இனி சாப்பாட்டு விஷயமாக எதுவும் பேசக் கூடாது என்று முடிவெடுத்திருந்தார் குமாரசாமி.

நல்லவேளையாக, சென்னையில் காலேஜ் ஹாஸ்டல், அப்புறம் வேலை அப்புறம் வெளிநாடு என நாட்கள் போய்விட, எப்பவாவது சேலத்துக்கு வந்து அரை நாள், ஒரு நாள் எனத் தங்குவான். அவனுக்காகவே ஸ்பெஷலாக காளான் பிரியாணி, வடைக்கறி என்று எல்லாம் செய்து பிரியமாகப் பரிமாறுவார். ஏதோ பேருக்கு வேண்டாவெறுப்பாகக் கொறித்து விட்டு எழுந்து விடுவான் வித்யாகர். அந்த மகனைக் காணத்தான் ஆசையாகப் போய்க் கொண்டிருக்கிறார் குமாரசாமி.
வித்யாகரின் ஃப்ளாட் விசாலமாக இருந்தது.

“வாங்க மாமா!’ என்று முகம் மலர வரவேற்றாள் மருமகள் மானஸா.

“குளிச்சுட்டு வாங்கப்பா. சேர்ந்து டிபன் சாப்பிடலாம்!’ என்று அன்பொழுகு அழைத்தான் வித்யாகர்.
“பொங்கல் – சட்னி செஞ்சுருக்கேன் மாமா! பிடிக்குமில்லையா?’ என்றபடி பரிமாறினாள் மானஸா.

குழைந்து பேஸ்ட்டாகி, ஆறி அவலாகிப் போயிருந்தது வெண்பொங்கல். அதன் மீது குருகிப் போன முந்திரித் தூவல்! சட்னி திப்பித் திப்பியாக ஓடியது. “சூடா சாப்பிடுங்க மாமா!’ என்ற உபசாரம் வேறு. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகனை ஓரக்கண்ணால் கவனித்தார். அவன் மௌனமாகப் பொங்கலை எடுத்து, ஸ்பூனால் ஸ்டைலாகச் சாப்பிட்டு முடித்திருந்தான்.

சாப்பாட்டு வேளை வந்தது. அதுவும் கத்துக் குட்டி சமையல்தான். வேகாத அரிசி, ரசமா? சாம்பாரா? என தெரியாதபடிக்கு கலங்கலாய் ஒரு சமாசாரம். எண்ணெய் வழிந்த அப்பளம்…. நல்ல வேளையாக கடையில் வாங்கப்பட்ட கப் தயிர் இருந்ததால் பிழைச்சுப் போனார் குமாரசாமி.

“கத்திரிக்காய் சாம்பாரா? கொஞ்சம் காய் போடு!’ என்று வித்யாகர் கேட்டு சாப்பிட்டதைப் பார்த்து, உள்ளுக்குள் திகைத்துப் போனார்.

“எம் புள்ள தானாடா நீ?’

எப்படியோ மூன்று நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளிவிட்டு ஊர் வந்து சேர்ந்தார் குமாரசாமி. வரும் வழியெல்லாம் வித்யாகர் பற்றிய கவலையே நீடித்தது. “பாவம் எம்புள்ள! எப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பான்? என்ன செஞ்சாலும் குறைசொல்வான்? இப்ப, இப்படி எதுவும் சொல்லாம சாப்பிட்டு வெக்கிறானே! நாக்கு மரத்துப் போச்சுடா உனக்கு?’ மனசுக்குள் ஏதேதோ கேள்விகள் அலை மோத சங்கடமாய் உணர்ந்தார்.

உணர்ச்சிகளும், உறவுகளும் கூடிப் பிறந்த இரட்டையர்கள் போல! குமாரசாமி என்ன நினைப்பில் தவித்துக் கொண்டிருந்தாரோ, அதே நினைப்பு வித்யாகரையும் தகித்துக் கொண்டிருந்தது. அலுவலக விஷயமாக கோவை வந்தவன். அடுத்த பஸ் பிடித்து சேலத்துக்கு கிளம்பினான்.

“அப்பா.. கோயம்புத்தூரில் ஒரு க்ளையண்ட் மீட்டில் இதோ முடிஞ்சுடுச்சு.. உங்களைப் பார்க்க வர÷ம்பா!’ மொபைலில் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான்.

தோளில் டவலும், கையில் கரண்டியுமாக சமையல் அறையில் அப்பா வேலை செய்யும் காட்சி மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்தது.

“பாவம் அப்பா! அம்மா செத்தப்போ, நாற்பது வயசுதான். எனக்காக இரண்டாவது கல்யாணமே பண்ணிக்காம, தன் ஆசைகளை துறந்தாரே! ரியல்லி கிரேட்! இப்ப கல்யாணமான இந்த வயசுலதான் அது எவ்ளோ பெரிய தியாகம்னே புரியுது. அது மட்டுமா? நான் திருப்தியா சாப்பிடணும்னு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுச் சமைச்சார். எவ்வளவு தவிச்சுத் தவிச்சுப் பரிமாறினார்? ஆனா நான்…? எப்படியெல்லாம் அவரைக் கடுப்படிச்சுருக்கேன்?

அம்மா இல்லாத வெறுமை, ஸ்கூல்ல கணக்கு வாத்தியார் மேல இருந்த ஆத்திரம், பசங்ககிட்ட ஃபுட்பால்ல தோற்ற எரிச்சல், விஜய் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத வெறுப்பு, சைக்கிளைத் தொலைச்ச குற்ற உணர்வு… இது எல்லாத்தையும் சாப்பாட்டு மேல காட்டறதா நினைச்சு, உங்க மேலதானப்பா காட்டியிருக்கேன்? ஸாரிப்பா… ஸாரி! இப்பத்தான் என்னோட தப்பு புரியுது.. எவ்ளோ பெரிய முட்டாள் நான்! உங்களை எவ்ளோ நோகடிச்சுட்டேன்.

எனக்காக மானஸாவோட மகா மட்டமான சமையலைக் கூட பொறுத்துக்கிட்டீங்களே! யூ ஆர் ரியலி கிரேட்! என்னை மன்னிச்சுடுங்க அப்பா. நீங்க உண்மையிலேயே நல்ல குக். அன்பும் பாசமுமா சமைக்கிற உங்க கைமணம் வரவே வராதுப்பா!’ இப்படியெல்லாம் சொல்லி அவரது தோளில் சாய்ந்து அழவேண்டும். இந்தமுறை வெட்கமே படக்கூடாது என்று நினைத்த படி வீட்டுக்குள் நுழைந்தான் வித்யாகர்.

“வாப்பா… வாப்பா…. ரொம்ப சந்தோஷம்பா’ கைகள் நடுங்க அவன் கன்னத்தை வருடினார் குமாரசாமி.

“ராஜா… சாப்புட்டியாப்பா?’

“இல்லப்பா உங்க கையால சாப்பிடலாம்னு…’

“அடி சக்கை! எல்லாம் ரெடியா இருக்கு!’ பரிமாற எழுந்தவரைத் தடுத்து உட்கார வைத்தான். தட்டெடுத்துத் தானே பரிமாறி பிறகு சாப்பிட உட்கார்ந்தான்.

மல்லிகைப்பூ போல சாதம், கமகமத்த முள்ளங்கி சாம்பார், சேனைக்கிழங்கு ரோஸ்ட்.

தளரப் பிசைந்து உருட்டி, வாய் நிறைய அடைத்துக் கொண்ட வித்யாகர், தலையை ஆட்டிக் கொண்டே சொன்னான்.

“ழொம்ப நழ்ழா இழுக்குப்பா’

அவன் சொல்ல வந்த அத்தனை வார்த்தைகளும், நெஞ்சுருகி கேட்க நினைத்த மன்னிப்பும், அந்த ஒற்றை வாசகத்தில், அப்பட்டமாய் வெளிப்பட… நெஞ்சுருகி நின்றது கனிந்த தந்தையுள்ளம்!

– சாந்தி செல்வம் (ஜூலை 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *