கிரீடத்தைக் கழட்டி வை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 3,162 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பரமக்குடி.

காரைக்குடிக்கு அடுத்தபடியாய், செட்டிநாட்டுக் கொடி உயரப் பறக்கிற பரமக்குடி.

ஊருக்கு நடுவிலே, மெய்ன் ரோடிலே, ஜெய்ஹிந்த் த்யேட்டர் நிமிர்ந்து நின்ற பரமக்குடி.

ரேவதி, ரவி என்கிற ரெண்டு டூரிங் ரெண்டு டூரிங் டாக்கீஸ்கள் ஆற்றுக்கு அந்தப்புறம் ஆறுமாசத்துக்கொருதரம் வந்து வந்து போன பரமக்குடி.

ளையாங்குடி மீன் சைக்கிள்கள் சர்ர் சர்ர்ரென்று கடந்து போகிற பரமக்குடி.

அய்யாச்சாமிச் செட்டியார் ஆயிர வைஸ்ய ஹைஸ்கூலைக் கேம்ப்ரிஜ்ஜாய்க் கொண்ட பரமக்குடி.

அந்தப் பரமக்குடிக்குத்தான் நம்ம கதாநாயகன் குடிவந்தான், 1950களின் ஆரம்பத்தில்.

பரமக்குடி மதுரை சாலையில், ஊரிலிருந்து ரெண்டரை மைல் மாட்டு வண்டியிலோ, சைக்கிளிலோ அல்லது மின்சார இலாக்கா ஜீப்பிலோ வந்தால் காட்டுப் பரமக்குடியை அடையலாம்.

அந்தக் காட்டுப் பரமக்குடிக்குப் பெருமை சேர்க்கிற புண்ணியஸ்தலம், சென்னை மாகாண மின்சார இலாகாவின் ஸப் ஸ்டேஷன். ஸப் ஸ்டேஷனுக்கு இந்தப் பக்கம் மதுரை தனுஷ் கோடி நெடுஞ்சாலை, அந்தப்பக்கம் ரயில் தண்டவாளம்.

போட் மெய்ல் போகிற தண்டவாளம். தனுஷ்கோடிக்குப் போகிற போட் மெய்ல்.

இப்போது போட் மெய்லுமில்லை, தனுஷ்கோடியு மில்லை.

காட்டுப் பரமக்குடி ஸப் ஸ்டேஷன் வளாகத்தில், மின்சார இலாகா அஸிஸ்ட்டன்ட் இஞ்சினியருக்கும் அவருக்குக் கீழே பணியாற்றுகிற சூப்பர்வைசர், எல்.ஐ., வயர்மேன், லயன்மேன், பிரமாண்டமான பென்ஸ் லாரி ஓட்டுகிற டிரைவர் கன்னையா நாயுடு – எல்லோருக்கும் வீடுகள் உண்டு.

ஸெயின்ட் ஜோஸப்ஸ் காலேஜுக்குப் படிக்கப் போன அப்துல் கலாம், ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பி, பாம்பன், மண்டபம், ராம்நாட், பரமக்குடி, காட்டுப் பரமக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர், மானாமதுரை, மதுரை, மேலூர், விராலிமலை, துவரங்குறிச்சி வழியாய்த்தான் திருச்சி போய்ச் சேர்ந்திருப்பார்.

பாம்பன் பாலத்தில் ரயில், மதுரை வரைக்கும் வாஹித் பஸ், மதுரையிலிருந்து திருச்சிக்கு ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் பஸ் (நாகர் கோவில் ட்டு திருச்சி, தடம் எண் 511).

ராமேஸ்வரம் திருச்சி ரூட்டிலிருக்கிற காட்டுப் பரமக்குடி ஸப் ஸ்டேஷனில் அஸிஸ்டன்ட் இஞ்சினியருக்கு மகனாய் நம்ப கதாநாயகன் குடி வந்தான்.

பதினோரு வயசுப் பையன். பெயர் இப்போது தேவையில்லை. எக்ஸ் என்று குறிப்பிடுவோம்.

நிற்க.

இப்போது களம், செட்டியார் ஸ்கூல் என்று அறியப்பட்ட அய்யாச்சாமிச் செட்டியார் ஆயிரவைஸ்ய உயர்நிலைப் பள்ளியின் ஆண் ஆசிரியர்களின் ஸ்டாப் ரூம்.

கணக்கு ஆசிரியர் பாண்டியன் கடுகடுவென்றிருந்தார். அவருடைய கடுகடுப்பைப் புரிந்து கொள்ள அல்லது மேலும் கடுப்பேற்ற சக ஆசிரியர்கள் குணசீலன், ராஜமாணிக்கம், மற்றும் இளங்கண்ணன்.

இளங்கண்ணனின் பெயர் அவர் தமிழ்ப்பற்று மிக்கத் தமிழாசிரியர் என்று பறை சாற்றும். தன்னுடைய அதீத தாய்மொழிப் பற்றினால், பாலகிருஷ்ணன் என்கிற தன்னுடைய இயற்பெயரை இளங்கண்ணன் என்று தமிழ்ப்படுத்திக் கொண்டவர்.

“நமக்கெல்லாம் வில்லனா வந்து வாச்சிருக்காம்ப்பு இந்தச் சின்னப் பயல். நம்மள வீட்டுக்கு அனுப்பிச்சிட்டுத் தான் மறு வேல பாப்பம் போல” என்று பாண்டியன் பொருமியதற்குத் தூபம் போட்டார் ராஜமாணிக்கம்.

“அந்த ஸ்டெல்லா டீச்சர் அவனத் தலையில தூக்கி வச்சுக்கிட்டு கூத்தாடற அசிங்கம் இருக்கே, ஐயோ கன்றாவிப்பு.”

“அத விடுங்கப்பு. இன்னிக்கி இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த ஸ்கூல் இன்ஸ்பெக்டர்ட்டல்ல இந்தப் பய நம்மள மாட்டி விட்டுட்டான்! இன்ஸ்பெக்டர் பதிமூணாம் வாய்ப்பாடு கேட்டார். ஒரு பயலுக்கும் சொல்லத் தெரியல. இந்தப்பய எந்திரிச்சி பதிமூணாம் வாய்ப்பாடு மள மளன்னு ஒப்பிக்கிறான், அதுவும் இங்லீஷ்ல. நீ மட்டும் எங்கப்பா படிச்சன்னு இன்ஸ்பெக்டர் கேட்டதுக்கு இந்தப் பயல் சொல்றான், இந்த வாத்தியார் சொல்லித் தரல, நா பழைய ஸ்கூல்ல படிச்சதுங்கறான்.”

“எந்த ஸ்கூல்ல படிச்சானாம்?”

“ஊட்டியில படிச்சானாம், என்னமோ ப்ரீக்ஸ் ஸ்கூலாம். அவங்கப்பா ஈபில ஏஇயாம், ஊட்டியிலயிருந்து ட்ரான்ஸ்பர் ஆகி இங்க வந்திருக்கார். இந்தப் பய, தர்ட் டர்ம்ல வந்து சேந்துக்கிட்டு நம்மக் கழுத்த அறுக்க வந்திருக்கான்”.

“அதிருக்கட்டும். நீர் ஏம்ப்பு பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லித்தரல?”

“ட எனக்கே தெரியாதேப்பு. நா படிக்கிற காலத்துல பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லித் தந்த அன்னிக்கி நா பள்ளிக்கூடத்துக்குப் போகலல்ல!”

இளங்கண்ணன் ‘குபுக்’ கென்று சிரித்தது பாண்டியனுக்கு மேலும் கடுப்பு.

“கண்ணா, சிரி. நாளக்கி மதியத்துல சோத்துக்கு வெஞ்சனம் இல்லன்னுட்டு நீ திரும்ப எங்கிட்டதான் வருவ. அப்பப் பேசிக்கிறோம்ப்பு.”

பாண்டியன் இளங்கண்ணனைக் கருவிக் கொண்டிருந்த போது, சோர்ந்து போய் உள்ளே பிரவேசித்தார் ஆங்கில ஆசிரியர் அம்புரோஸ். எக்ஸ் குறித்து அவரிடமும் ஒரு பிராது இருந்தது.

“பயல், இ இன்ஸ்பெக்டர் முன்னால என்னத் தலகுனிய வச்சுட்டானே. செகண்ட் பார்ம் படிக்கிற பயலுக்கு ஷேக்ஸ்பியர் எதுக்குப்பு? பய டெம்பஸ்ட்லயிருந்து ஏரியல்ஸ் ஸாங் எடுத்து வுடறான். இன்ஸ்பெக்டர் மெய்ம்மறந்து கேட்டுட்டு இருந்துட்டு, போகும்போது, ஓங்களவிட இந்தப் பையன் நல்லாக் க்லாஸ் எடுப்பாம் போல இருக்கே சார்ன்னுட்டுப் போறார்.”

பாண்டியனுக்குத் துணைக்கு ஆள் கிடைத்ததும் அவர் துள்ளினார்.

“அப்பு, இத நாம் சும்மா விடக் கூடாது. ஹெட்மாஸ்டர்ட்ட போய் சொல்லுவோம். இந்தப் பயலுக்கு ட்டி ஸி குடுத்து அனுப்பச் சொல்லுவோம். அவங்க அப்பா வசதியானவர் தான். மதுர கிதுரயில போய் படிக்கப்போடட்டும். நம்ம பள்ளிக்கூடத்துக்கு இந்த மாதிரி பிஞ்சுல பழுத்ததெல்லாம் லாயக்குப்படாதுப்பு.”

ஹெட்மாஸ்டரிடம் போனார்கள்.

‘இந்த மாதிரி ஒரு அதிகப்பிரசங்கிப் பையன் இந்த ஸ்கூலில் இருப்பது மற்ற மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும், அது அவ்வளவு நல்லதல்ல’ என்று தங்களுடைய வாதத்தை முன் வைத்தார்கள். “தாழ்வு மனப்பான்மை மற்ற மாணவர்களுக்கா இல்லை ஆசிரியர்களுக்கா” என்று ஹெட்மாஸ்டர் சங்கர நாராயணன் எதிர்க்கேள்வி கேட்டார். “இந்தப் பையன் ஒரு ஜீனியஸ் சார், ஒரு ப்ராடிஜி சார்” என்று அகமகிழ்ந்து சொன்னார் தலைமையாசிரியர்.

“இந்த மாதிரி ஒரு பையன் நம்ம ஸ்கூல்ல வந்து சேந்தது நமக்கெல்லாம் பெருமை சார். நீங்க சொல்றீங்கங்கறதுக்காக நா அவனுக்கு ட்டி ஸி குடுத்து அனுப்பப் போறதில்ல” என்று ஆணித்தரமாய்ச் சொன்ன ஹெட்மாஸ்டர், அடுத்த படியாய் ஓர் அணுகுண்டைத் தூக்கி டமாலென்று போட்டார்.

“இப்பத்தான் ஸ்டெல்லா டீச்சர் வந்துட்டுப் போறாங்க. இந்தப் பையனுக்கு ஸெகண்ட் பாம்லயிருந்து போர்த் பாமுக்கு டபுள் ப்ரமோஷன் குடுக்கணும்னு கேட்டுட்டுப்போறாங்க. இதப்பத்தி நா கரஸ்பாண்டன்ட் கிட்டப் பேசலாம்னு இருக்கேன்.”

இது ஏதுடா முதலுக்கே மோசமாப் போச்சே என்று அம்புரோகம் பாண்டியனும் ஒரே குரலில் “நோ நோ” என்றார்கள்.

“சார் நீங்க அவனுக்கு ட்டி ஸி குடுக்காட்டிப் பரவாயில்ல, ஆனா, டபுள் பிரமோஷன் மட்டும் குடுத்துராதீங்க” என்று மன்றாடினார் பாண்டியன்.

“நீங்க நெனக்கிற மாதிரி அவன் ப்ராடிஜியெல்லாம் ஒண்ணுமில்ல சார். ஊட்டியில் அவன் ஒரு இங்லீஷ் ஸ்கூல்ல படிச்சிருக்கான். ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சக்கரன்னு இங்க வந்து அவனோட மேதாவித்தனத்தக் காட்டிட்டிருக்கான், அவ்ளோதான் சார்.”

பாண்டியன் சொன்னதற்கு பலம்மாய் மண்டையை ஆட்டி ஆமோதிப்பைத் தெரிவித்தார் அம்புரோஸ்.

ஹெட்மாஸ்டர் அவர்களை சமாதானப்படுத்தினார். “இந்தப் பையன் டபுள் ப்ரமோஷன்க்குத் தகுதியுள்ளவனா இல்லியாங்கறதுதான் இப்ப கேள்வி, இல்லியா? அதுக்கு ஒரு டெஸ்ட் வச்சுப் பாப்போம். நீங்க ஒரு ஸப்ஜெட் குடுங்க. அத அவன்ட்ட சொல்லி அந்த ஸப்ஜெக்ட்ல டீச்சர்ஸ்க்கு க்லாஸ் எடுக்கச் சொல்வோம். அவன் வெற்றிகரமா க்லாஸ் எடுத்துட்டான்னா. அவன் உண்மையிலயே மேதைதான், அவனுக்கு டபுள் ப்ரமோஷன்தான். அவன் இந்த டெஸ்ட்ல ஜெயிக்கலன்னா டபுள் ப்ரமோஷன் இல்ல. என்ன ஸப்ஜெக்ட் சொல்லுங்க.”

இளங்கண்ணன் ‘ஷேக்ஸ்ப்பியர்’ என்றார். குணசீலன் ‘பதிமூணாம் வாய்ப்பாடு’ என்றார். “நீங்க ரெண்டு பேரும் சித்த சும்மாயிருக்கப்பு” என்று அடக்கிவிட்டுப் பாண்டியன் ‘ஜியாக்ரபி’ என்றார். “அது வேண்டாம்பு. “ஜியாலஜி” என்றார் அம்புரோஸ்.

ஒப்புக் கொள்ளப்பட்டது.

போகிற போக்கில் பாண்டியன் ஹெட்மாஸ்டரைப் பார்த்துச் சொன்னார்: “சார் இந்த ஸ்கூல்ல ட்டை கட்டிட்டு வர்றதுக்கு ஒங்களுக்கு மட்டுந்தான் ரைட் இருக்கு. இந்தச் சின்னப்பய டெய்லி ஒங்களுக்குப் போட்டியா ட்டை கட்டிட்டு வர்றான் சார்.’

“இந்தச் சின்னப்பையன் எனக்குப் போட்டியில்ல பாண்டியன், நீங்க ட்டை கட்டிட்டு வந்தாத்தான் எனக்குப் போட்டி. சரி நீங்க கெளம்புங்க” என்று ஹெட்மாஸ்டர், பாண்டியனை மட்டந்தட்டி வழியனுப்பி வைத்தார்.

பழனி சேர்வை. நம்ம எக்ஸ்ஸுடைய தேர்ச் சாரதி.

பழனி சேர்வையுடைய ஜல்ஜல் ஒற்றைமாட்டு வண்டியில் தான் தினமும் எக்ஸ்ஸுக்கு சவாரி. வண்டிக்குள்ளே எக்கச்சக்கமாய் இடமிருந்தாலும் முன்னால், வண்டிக்காரருக்கு சமமாய்க் கோஸ்பெட்டியில் உட்கார்ந்து காலைக் கீழே தொங்கப்போட்டுக் கொண்டு வருவது தான் எக்ஸ்ஸுக்குப் பிடிக்கும்.

பழனி சேர்வை ஒரு சிவாஜி ரசிகர்.

ஸ்கூலுக்குப் போகிறபோதும் வருகிற போதும் ரெண்டு பேரும் பேசிக் கொண்டே தான் போவார்கள். ரெண்டு பேருக்கும் பொதுவான சப்ஜெக்ட் சினிமா. ஆனால் தனக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் சினிமா பற்றியும் சிவாஜி கணேசன் பற்றியும் இந்தச் சின்னப் பயலுக்கு அதிக விவரங்கள் தெரிந்திருப்பது பழனி சேர்வையைப் பொறாமைப் படுத்தும்.

போன ஞாயிற்றுக் கிழமை மெனக்கெட்டு மதுரைக்குப் போய்ப் பரமேஸ்வரி டாக்கீஸீல் ‘தூக்குத் தூக்கி’ பார்த்து விட்டு வந்திருந்தான் பழனி சேர்வை. அதை வைத்துத்தான் சாயங்காலம் இந்தச் சிறுவனை மடக்க வேண்டும்.

சாயங்காலம் பள்ளிக்கூட வாசலில் வண்டி பூட்டி ரெடியாயிருந்தது. நம்ம எக்ஸ் வண்டியில் ஏறுவதற்காக வந்த போது பின்னாலேயே ஓடிவந்தாள் ஸ்டெல்லா டீச்சர். எக்ஸுக்கு நடக்கவிருக்கும் டெஸ்ட்டைப் பற்றிச் சொன்னாள். நாற்பத்தெட்டு மணி நேரத்தில் எக்ஸ், ஜியாலஜி வகுப்புக்குத் தயார் பண்ணிக் கொண்டு வந்து, வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகள் முகத்தில் கரியைப் பூசி மகிழ வேண்டுமென்றாள்.

நாற்பத்தெட்டு மணி நேரம் அநாவசியம். நாளைக்குக் காலையிலேயே நான் ரெடி யென்று நெத்தியடி அடித்த எஸ்க்ஸைப் புளகாங்கித மிகுதியால் ஸ்டெல்லா டீச்சர், ஸ்கூல் வாசலில் வைத்தே இறுக்கிப் பிடித்து நெற்றியில் ஆவேசமாய் ஒரு முத்தம் பதித்தபோது, கழண்டு விழப்போன எக்ஸுடைய விசாலமான கண்ணாடியைப் பழனி சேர்வை மின்னல் வேகத்தில் வந்து காட்ச் பிடித்துக் காப்பாற்றினான்.

அடுத்த நாள், ஸிக்ஸ்த் பாம் வகுப்பறையில் எக்ஸுடைய க்லாஸ்க்கு ஏற்பாடாகியிருந்தது. வகுப்பு ஆரம்பிக்கு முன்னால், ஜியாலஜிக்குத் “தமிழ்ல என்னப்பு” என்று அம்புரோஸின் காதைக் கடித்தார் பாண்டியன்.

“மானத்த வாங்காதப்பு. வகுப்பக் கவனி” என்று அம்புரோஸ் தன்ஆசனத்தில் அமர்ந்தார்.

மாணவர்களாய்ப் பாண்டியன், குணசீலன், அம்புரோஸ், ராஜமாணிக்கம், மற்றும் ஸ்டெல்லா டீச்சர்.

ஸ்டெல்லா டீச்சருக்குப் பக்க பலமாய், கண்ணாடியணிந்த கமலா டீச்சர்.

ஆங்கிலமும் தமிழும் கலந்து க்லாஸ் எடுத்தான் எக்ஸ்.

“நம்முடைய பூமி, அதாவது எர்த்” என்று ஆரம்பித்தான். “நாம் வசிக்கிற இந்த பூமி, எழுபது சதவீதம் நீர்ப்பரப்பாலும், முப்பது சதவீதமே நிலப்பரப்பாலும் ஆனது” என்று கரும்பலகையில் எழுதினான். பிறகு, “பூமி என்றால் என்ன?” என்கிற கேள்வியை முன் வைத்தான்.

“பூமியானது, அதில் வாசம் செய்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் அர்த்தப்படுகிறது. ஓர் உழவனுக்கு, பூமியென்பது வளமான மண். சாலை அமைக்கிற தொழிலாளிக்கு, பூமி என்பது கடினமான பாறை. ஒரு கடல் மாலுமிக்கு, பூமி என்பது நாற்புறமும் நீர்ப்பரப்பு, ஓர்ஆகாய விமானிக்கு, பூமி என்பது கொஞ்சம் கடல், கொஞ்சம் மலை, கொஞ்சம் பச்சைப்பசேலென்கிற வயல் வெளி. வருங்காலத்தில் சந்திரமண்டலத்துக்குப் போகப் போகிற விண்வெளி வீரனுக்கு, பூமி என்றால் கோலப் பரப்போடு கூடிய ஒரு கூடிய ஒரு கோளம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு விதமாய் விதமாய் அர்த்தப்படுகிற பூமியைப் பற்றிய சரியான கணிப்பை யாரும் சொல்கிறார்களில்லை.”

ஆரம்பமே அசத்தல்.

ஆசிரியர்கள் அசந்து போய் உட்கார்ந்திருக்க, நம்ப எக்ஸ், பூலோகத்திலிருந்து எம்பி, வான் வெளிக்குப் போனான். சூரியனை ஒன்பது கோளங்கள் சுற்றி வருகிற ஸோலார் ஸிஸ்டமைச் சொன்னான்.

அதைப் போல, பல கோடிக்கணக்கான ஸோலார் ஸிஸ்டம்களை உள்ளடக்கிய காலக்ஸியைப் பற்றிச் சொன்னான். இந்த காலக்ஸியைப் போல கோடானு கோடி காலக்ஸிகளை உள்ளடக்கிய யுனிவர்ஸைப்பற்றிச் சொன்னான். பிறகு திரும்ப பூலோகத்துக்குத் திரும்பினான்.

12 கோடி வருஷங்களுக்கு முந்தின க்ரிடாஷியஸ் காலத்துக்கும், 18 கோடி வருஷங்களுக்கும் முந்தின ஜுராஸிக் காலத்துக்கும், 35 கோடி வருஷங்களுக்கு முந்தின மிஸிஸிப்பியன் காலத்துக்கும், இவன் முன்னால் வாய் பிளந்து உட்கார்ந்திருந்த அனைவரையும் அழைத்துப்போய்த் திரும்பக் கொண்டு வந்து விட்டான்.

நிலநடுக்கம் மற்றும் பூகம்பங்கள் பற்றிய விளக்கங்களைப் புட்டுப்புட்டு வைத்தான்.

வாசலில் நின்று இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஹெட்மாஸ்டருக்கும் கரஸ்பாண்டன்ட்டுக்குமிடையே கிடைத்த இடைவெளியில் முகத்தை நுழைத்து இளங்கண்ணன் சிரித்துக் கொண்டிருந்தார். அம்புரோஸும் பாண்டியனும் உள் வெப்பத்தில் பொருமிக் கொண்டிருக்க, ஸ்டெல்லா டீச்சருக்குப் பெருமையோ பெருமை.

வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது.

அதன் பிறகு, எஸ்.எஸ்.எல்.ஸிக்கு அண்டர் ஏஜ் என்று எக்ஸ் ஒரு வருஷம் காத்திருந்தது, அவன் எஸ்.எஸ்.எல்.ஸி. எழுதின வருஷம் மாநிலத்திலேயே முதல் மாணவனாய்த் தேறி, செட்டியார் ஸ்கூலின் பேரை நாடறியச் செய்தது, அம்புரோஸ், பாண்டியன் உட்பட எல்லாஆசிரியர்களும் மனம் மாறி எக்ஸைக் கொண்டாடியது, எக்ஸ் பள்ளியை விட்டுப் போன போது ஸ்டெல்லா டீச்சர் அவனைக் கட்டிக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது, எல்லாம் ஐம்பது வருஷப் புராதனக் கதை.

புராதனம் என்றால் பழசு என்று அர்த்தமல்ல. பழம் பெருமை வாய்ந்தது என்று அர்த்தம்.

சரி, இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டு.

“என்னுடைய புத்திக் கூர்மையாலும் திறமையாலும் ஐ.ஏ.எஸ். தேறி மாநில அரசிலும் மத்திய அரசிலும் பல உயர்ந்த பதவிகள் வகித்து, பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு, பிறகு ரிட்டயராகி, இதோ நான் என்னுடைய பேரக் குழந்தைகளோடு உட்கார்ந்திருக்கிறேன், சென்னையில், ஷெனாய் நகரில்.

நான் என்றால் யார்?

நான் தான் உங்கள் எக்ஸ்.”

இந்தப் பேரக் குழந்தைகளுக்கு இந்த எக்ஸ் கதை சுவாரஸ்யமாகவே இல்லை. “இந்த ஜியாலஜி சமாச்சாரம் எல்லாம் இப்ப கம்ப்யூட்டர்ல இருக்கே தாத்தா” என்றான் ஒருவன்.

“இன்ட்டர்நெட்டுக்கு உள்ள போனா ஒங்களுக்கு என்னென்ன வேணுமோ அதெல்லாம் கெடைக்குமே.”

“பதிமூணாம் வாய்ப்பாடு கூட.”

“கம்ப்யூட்டர்லயும் இன்ட்டர்நெட்லயும் இல்லாத விஷயமே ஒலகத்துல இப் கெடையாது தாத்தா.”

“ஏன் தாத்தா, நீங்க ஸ்கூல்ல படிக்கிற காலத்துல கம்ப்யூட்டர் கெடையாதா?”

“நீ ஒண்ணு, பாட்டி சொன்னாங்க, தாத்தா படிக்கிற காலத்துல கால்க்குலேட்டரே கெடயாதாம், அப்புறம் எங்க கம்ப்யூட்டர்!”

“தாத்தா ஒங்களுக்குக் கம்ப்யூட்டர் தெரியுமா தாத்தா? நா வேணா கத்துத்தறேன் தாத்தா.”

தப்பு. இந்த வாண்டுகளிடம் வாயைக் கொடுத்து என்னுடைய வீரப் பிரதாபங்களைப் பிரஸ்தாபித்ததே தப்பு.

தப்பித்தாக வேண்டும் இங்கேயிருந்து உடனடியாய். தப்பிக்க யத்தனித்த போது ஒரு வாண்டு கிண்டலாய்க் கேட்டது, “தாத்தா, கம்ப்யூட்டருக்கு ஸ்பெல்லிங்காவது ஒங்களுக்குத் தெரியுமா தாத்தா?”

“ஹ. பெரிய கம்ப்யூட்டர்! பெரிய ஸ்பெல்லிங்!”

வாண்டுகளை நோக்கி வீரத்துடன் திரும்புகிறேன். வாயைத் திறக்குமுன் வாய்க்குள்ளே சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன் ஸ்பெல்லிங்கை.

கடைசி ரெண்டு எழுத்து உதைக்கிறது. ஓ ரா அல்லது இ ரா? இ ரா அல்லது ஓ ரா?

ம்ஹூம். எட்டவில்லை.

என்னுடைய அவஸ்தையைப் பார்த்து என் பத்தினி என் உதவிக்கு வருகிறாள்.

“கொழந்தைங்களா, எல்லாரும் ஹோம் ஒர்க் செஞ்சாச்சா, போங்க போய்ப் படிக்க ஒக்காருங்க. தாத்தா படுக்கப் போறார்.”

பிறகு என்னிடம் சொல்கிறாள்:

“ஒங்க காலம் மாதிரி இல்லிங்க இது, இந்த ஜெனரேஷன் வேற. இப்ப ஒவ்வொரு கொழந்தையும் ஒரு ஜீனியஸ். ஒவ்வொண்ணும் ஒரு ப்ராடிஜி. ஒங்க பழம் பெருமைய நீங்க இந்த இளைய தலைமுறைகிட்ட பேசிட்டிருக்காதீங்க.”

ஆமாம். இவள் சொல்வது உண்மைதான். இது அறிவு செறிந்த ஒரு தலைமுறை. பிரகாசமான தலைமுறை. இந்தத் தலைமுறையின் ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை.

நான் பின்புறந் திரும்பி, இந்தியாவின் இளைய தலைமுறையைப் பெருமை பொங்கப் பார்க்கிறேன்.

மனசுக்கு ரொம்ப உற்சாகமாயும் சந்தோஷமாயுமிருக்கிறது.

– 15.12.2002

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *