விதியின் விளையாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 3,725 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருளைப் பிய்த்துகொண்டு, பளீரென்றது ஒரு மின்னல். வானம் டமடம என்று இடித்தது. ஆகாயத்தில் பொத்தல் விழுந்துவிட்டமாதிரி தடதட என்று மழை கொட்டிக்கொண்டிருந்தது. திடீரென்று மழையின் வேகத்தை அமுக்கியவாறு.”மைதிலீ ! நீ எங்கே போய் விட்டாய்?” என்ற தீனமான குரல் ஒன்று எழுந்தது. நடுத்தெருவில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டே. ஸ்திரீ ஓடினாள். இந்தச் சம்பவத்தை நான் அடிக்கடி பார்த்திருப்பதால் எனக்கு இது ஒன்றும் அதிசயமாகத் தோன்றவில்லை. எங்கள் குடும்ப சிநேகிதர் ஒருவர் வந்திருந்தார். ஏதோ பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்த அவர் மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக்கொண்டு ஜன்னல் அருகில் போய் நின்று அவளைப் பார்த்துவிட்டு, ”என்ன இது இந்த மழையில்?” என்றார்.

“பைத்தியம்” என்றேன் நான்.

“பைத்தியமா இவளுக்கா? ஏன் அப்படி?” என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

“விதி சில சமயம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையே கோரமாய் மாற்றிவிடுகிறதே. அந்த மாதிரி இவளும் விதியின் விளையாட்டில் அகப்பட்டுக்கொண்டாள்”.

“இந்தத் தத்துவம் எனக்குத் தெரியும். கதையைச் சொல் பார்க்கலாம்” என்றார் நண்பர்.

உண்மையிலேயே அந்தக் கதை கொஞ்சம் கோரமானதுதான்.

2

ராமநாதன் கொஞ்ச நாள் வரையில் ஏதோ உத்தியோகத்தில் இருந்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டான். சிறு வயதிலிருந்து தன்போக்காக இருந்தவனை இறந்துபோன அவன் தகப்பனார் ஒரு வேலையில் நாலு பேரைப்போல் பிணைத்துவைத்தார். அது ராமநாதனுக்குச் சரிப்படவில்லை. ஊரில் நிலத்தில் கிடைக்கும் வரும்படியை வைத்துக்கொண்டு பஜனைமடத்தில் கதைபண்ணிக் கொண்டு காலத்தைக் கழித்தவனுக்கு இது கட்டிப் போட்ட மாதிரி இருந்தது.காலணாக் கடுதாசியைத் துரையிடம் நீட்டிவிட்டுப் பேசாமல் வந்துவிட்டான். ஊரில் பொழுது போவதற்கு இரண்டு மூன்று வீடுகளில் சங்கீத சிக்ஷை வைத்துக்கொண்டான். மற்ற நேரங்களில் இருக்கவே இருக்கிறாள் கோமதி. கோமதியும் ராமநாதனும் சதா சிரித்து விளையாடிக்கொண்டே இருப்பார்கள். மாமியார் நாத்தனார் என்று பயப்படுவதற்கு வீட்டில் யாரும் இல்லை.

ராமநாதனுக்கு அப்படி அபாரமான சிக்ஷை ஒன்றும் இல்லாவிட்டாலும், பாடினால் கேட்பதற்கு இன்பமாய் இருக்கும்; ரவை புரளும் கண்டம்; அந்த ஊருக்குப் பெரிய சங்கீத வித்வான் மாதிரி! நிலத்தில் வரும் வரும்படியை வைத்துக்கொண்டு சந்தோஷமாகக் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் மைதிலி பிறந்தாள். குழந்தை ‘குறு குறு’வென்று லக்ஷணமாக இருந்தது. குழந்தையைப்பற்றி அளவுக்கு மீறிப் பெருமைப்பட்டான் ராமநாதன். “நகரங்களில் ரேடியோவில் பாடும் வித்வான்களைப்போல் இவளையும் நாம் விருத்திக்குக் கொண்டுவரவேண்டும்” என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தான். மைதிலியும் அவ்வளவு புத்திசாலியாக இருந்தாள். ஒரு தடவை ஐப்பசிமாதத்து மழையில் ஆற்றில் குளித்துவிட்டுவரப் போனான். காவேரி ததும்பி வழிந்துகொண்டிருந்தாள். செக்கச் செவேலென்று போய்க்கொண்டிருந்தவள் ராமநாதனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போய்விட்டாள். ஆற்றோரத்தில் இருந்த இடைப்பையன்கள். ‘ஐயோ’வென்று அவன் கத்தினதாக மாத்திரம் கோமதியிடம் தகவல் தெரிவித்தார்கள்.

கோமதி முட்டிக்கொண்டு கதறினாள். மைதிலிக்குத் துக்கம் தெரியாவிட்டாலும், ‘ஏதோ ஒன்றை நாம் இழந்து விட்டோம்’ என்று மாத்திரம் தெரிந்திருந்தது.

கோமதியின் கண்களில் வழியும் நீரைத் தன் சொக்காயால் துடைத்துவிட்டு அவள் கழுத்தைச் சேர்த்துக் கட்டிக்கொள்வாள் மைதிலி. அப்பொழுது அவளுக்கு வயது ஐந்திருக்கலாம்.

ராமநாதன் இறந்துபோய் ஒரு வருஷம் ஆனதும் மைதிலி பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தாள். ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது நன்றாக இருட்டி விட்டது. விக்கி விக்கி அழுதுகொண்டே வந்தாள். கையெல்லாம் அடித் தழும்புகள். கோமதியின் மனம் பதைத்துப் போயிற்று.

“எந்தப் பாவிக்குத்தான் குழந்தையை இப்படி அடிக்க மனம் வந்ததோ தெரியவில்லையே. குழந்தை துடித்துப் போகிறாளே” என்று மாய்ந்துபோனாள்.

“கோடியாத்து நாணுவின் சிலேட்டை உடைச்சுட்டேன் அம்மா. அவன் என்னை வாத்தியார்கிட்டே சொல்லி அடி வாங்கி வைச்சான்” என்று கோமதி சொன்னாள்.

கோமதிக்கு ஒரே கோபமாக வந்தது.

“பாழாய்ப் போன சிலேட்டுக்கு என் குழந்தையை இப்படியா அடிக்கிறது? அந்த வாத்தியார்தான் என்ன மலடா? இல்லை அந்தப் பையனுக்குத்தான் என்ன துஷ்டத்தனம்” என்று நினைத்துக்கொண்டு அவளைச் சமாதானப் படுத்தினாள். மறுநாள் அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. மத்தியான்னம் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் ஓடிவந்தான். மைதிலி அவனைப் பார்த்து விட்டு, “நேத்திக்கி வாத்தியார்கிட்டே சொல்லி அடி வாங்கி வச்சானே அவன் வந்துவிட்டான் அம்மா” என்று கத்திக்கொண்டே உள்ளே ஓடினாள். கோமதி ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “மகாராஜா உன் சிலேட்டுக்குப் பதில் நூறு சிலேட் வாங்கிக் கொடுக்க அவள் அப்பா பணம் வைத்திருக்கிறாடா. என் குழந்தையை அநியாயமாக அடித்துக் கொன்றுவிட்டீர்களே. இப்ப எதுக்காக வந்தே?” என்றாள்.

நாராயணன் தலையைக் குனிந்துகொண்டே., “மாமி! மைதிலீ இல்லாமல் எனக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கலை” என்றான்.

“ஆமாம்; அதனால்தான் அவளுக்கு அடிவாங்கி வைத்தாயாக்கும்” என்றாள் கோமதி.

“நீங்களே சொல்லுங்க மாமி; புது சிலேட்டை உடைச்சா யாருக்குத்தான் கோவம் வராதுன்னு?”

“அதுக்கோசரம் என்னை இப்படி அடிக்கிறதோ?” என்றாள் மைதிலி.

நாராயணன் எட்டி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

“என்ன மாமி, பிரமாதப்படுத்துகிறீர்கள்” என்றவாறு அவளைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டு போனான்.

நாராயணனுக்கு உண்மையிலேயே மைதிலியின் பேரில் அன்பிருந்தாலும், ‘பள்ளிக்கூடத்தில் போடப் போகும் டிராமாவுக்கு மைதிலி இல்லாமல் முடியாது. அவளை எப்படியாவது சமாதானப் படுத்தி அழைத்துக் கொண்டு வரவேண்டும்’ என்று வாத்தியார் சொல்லியிருந்ததனால்தான் மைதிலியைத் தேடிக்கொண்டு வந்தான் அவன். இல்லாவிட்டால் ஆண்பிள்ளையான அவனுக்கு இருக்காதா?

3

பள்ளிக்கூடத்தில் நாட்டியத்துக்காக வந்திருந்த புது வாத்தியாரம்மாவுக்கு மைதிலியை நிரம்பப் பிடித்துப் போயிற்று. அவளுடைய களை பொருந்திய முகத்தில் வசீகர சக்தியிருந்தது. சாயங்காலம் வழிநெடுக அவளும் நாராயணனும் நாட்டியத்தைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தனர்.

“அந்த வாத்தியாரம்மா இன்னும் கொஞ்சம் ஒல்லியாக இருக்கக்கூடாதா? அவள் ஆடச்சே எனக்கு ஒரே சிரிப்பாய் வந்தது” என்றான் நராயணன்.

“போடா! என் எதிரில் நின்றுகொண்டு சிரிப்பு மூட்டுகிறாய். நாளைக்கு நான் ஆடச்சே நீ ஒண்ணும் வரவேண்டாம் போ” என்றாள் மைதிலி.

கோமதிக்கு இதையெல்லாம் கேட்கச் சிரிப்பு வந்தது. “இந்த மாதிரித் தங்கமான குழந்தையைப் பெறக் கொடுத்துவைத்தும், பார்த்துச் சந்தோஷப்படாமல் போய்விட்டாரே” என்று வருத்தப்படுவாள்.

மைதிலியும் தினம் ஒன்று புதுசாய்க் கற்றுக் கொண்டு வந்து ஆடிக் காண்பிப்பாள். கோமதியின் இருளடைந்த வாழ்க்கையில் மின்னும் ஒரு மின்னல் கொடிபோல் இருந்தாள் மைதிலி.

அந்த ஊரில் அவர்கள் அத்தனை நல்ல டிராமாவை ஒரு தடவைகூடப் பார்த்ததில்லை. ஈசுவரன்கோவில் மண்டபத்துக்கு எதிரில் பெரிய பந்தல் போட்டு ஆட்டம் ஆடினார்கள். முதலில் மைதிலியின் நாட்டியம் ஆரம்பமாயிற்று. சபையில் இருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.

“இந்தக் குழந்தையா இப்படி ஆடுகிறது? உடம்பு தான் என்ன வளைச்சல் வளைகிறது” என்று பேசிக் கொண்டார்கள். கோமதிக்கு ஆனந்தத்தால் கண்களில் நீர் வழிந்தது. “என் செல்லத்திற்குத் திருஷ்டிப்படாமல் இருக்கவேண்டுமே என்று பகவானை வேண்டிக்கொண்டாள். இந்தமாதிரி நிம்மதியாகக் கழிந்துகொண்டிருந்த அவள் வாழ்க்கையில் புயல் ஒன்று ஏற்பட்டது. பிரதி வருஷமும் வரும் ஆடிமாதத்தைப்போலவே அந்த வருஷமும் ஆடி மாதம் வந்தது. நதியில் புது வெள்ளம். ஊரில் எல்லோரும் காவேரிக்குக் கிளம்பினார்கள், மைதிலியும் போவதாகக் கோமதியைக் கேட்டாள். அன்று அவளுக்கு மனம் நிம்மதியாக இல்லை.

“ஆற்றங்கரைக்கா? அந்தப் பாழாய்ப்போன ஆற்றுக்குப் போகவேண்டாமடீ. உன் அப்பாவை வாயில் போட்டுக்கொண்டாள் அந்தக் காவேரி” என்றாள் கோமதி.

“நானும் போகணும் அம்மா. எல்லாரும் போறாளே” என்று பிடிவாதம் பிடித்தாள் மைதிலி.

“நம் விதிக்குக் குழந்தையின் ஆசையைக் கெடுப்பானேன். அவருக்குக் காலம் முடிந்துவிட்டது” என்று தேற்றிக்கொண்டு மைதிலியை அனுப்பினாள்.

ஆற்று மணலில் மைதிலி தன் தோழிகளுக்கு நாட்டியமாடிக் காண்பித்தாள். பொங்கிப் பிரவாகத்துடன் போகும் நதியில் ஜலம் திரட்டுகிறமாதிரி ஆடினாள். எல்லோரும் இரைச்சல் போட்டுக்கொண்டு அவள் பின்னால் ஓடினார்கள். மைதிலி கால் சறுக்கித் ‘தடா’ ரென்று விழுந்தாள். ஜலம் ஒரு சுழற்றுச் சுழற்றி அவளை அடித்துக்கொண்டு போய்விட்டது.

ஜலமட்டத்திற்குமேல் ரண்டு தடவை தலைப் பின்னல் தெரிந்தது. பிறகு அதுகூட இல்லை. கூட இருந்த பெண்கள் பயந்துபோய் ஓடிவிட்டார்கள்.

நாராயணன் மாத்திரம் இரைக்க இரைக்க ஓடி வந்தான். கோமதி தெருவில் நின்றுகொண்டிருந்தாள் “மாமி!” என்று நிறுத்தினான் அவன்.

“எங்கேடா மைதிலி?”

“மைதிலி…” என்று தடுமாறினான்.

“அவளுக்கு என்னடா வந்துவிட்டது?”

“மைதிலி ஆற்றோடே போயிட்டாள் மாமி. ஜலம் அடிச்சிண்டு போயிடுத்து. அப்பாடா! நெனச்சாலே பயமாயிருக்கு மாமி” என்று கண்ணை மூடிக்கொண்டான்.

“அடி,காவேரி! இவளையுமா உன் வாயில் போட்டுக்கொண்டாய்? ஐயோ விதியே” என்று வீடு அதிரும்படி ஒரு சிரிப்புச் சிரித்தாள் கோமதி.

“மைதிலி! என் கண்ணு” என்று தலையில் மோதிக் கொண்டாள்.

“பாவம், பைத்தியம் பிடித்துவிட்டது” என்று நிறுத்தினேன்.

திரும்பவும் அதே பிதற்றல்.

“மைதிலி! அந்தச் சனியன் பிடித்த ஆற்றுக்கா போகணும்” என்று கத்திக்காண்டே திரும்பவும் ஓடி வந்தாள் கோமதி.

“இந்தா உன் மைதிலி” என்று ஒரு பொம்மையைக் கொடுத்தேன்.

அதை வாங்கிக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தவாறே அதற்கு ஒரு முத்தம் கொடுத்தாள் கோமதி. பாவம்! அதில் ஒரு திருப்தி.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *