கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 7,036 
 

தன் மகன் ஜேம்ஸின் முடிவைக் கேட்டு அதிர்ந்து போனாள் சூஸன்.

“டேய் ஜேம்ஸ், பாரதி பிராமண வகுப்பைச் சேர்ந்தவள்… நாமளோ கிறிஸ்டியன், நமக்கு இந்தச் சம்பந்தம் ஒத்து வராதுடா, என்னோட கதைதான் உனக்குத் தெரியுமே, நான் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் எத்தனை… அது மாதிரி பாரதியும் கஷ்டப்படக் கூடாது ஜேம்ஸ்.”

அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த ஜேம்ஸ், :அம்மா, உன்னோட கஷ்டங்கள் வேற மாதிரி… மேலும் உனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நாற்பது வருடங்களுக்கு முன்னால். இப்ப நாம இருக்கறது ரொம்ப மாடர்ன் சொஸைட்டி. பாரதி கிறிஸ்துவ மதத்திற்கு மாற சம்மதித்து விட்டாள், அவளுடைய பெற்றோர்களின் சம்மதத்துடன்தான் எங்க கல்யாணம். அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டியது பாரதியின் பொறுப்பு. எனக்கு வேண்டியது உங்களுடைய அனுமதி.” காரில் ஏறி அமர்ந்தான்.

சூஸன் பதில் பேசாது அவனை அனுப்பிவிட்டு வீட்டினுள் வந்தாள்.

டிரெஸ்சிங் டேபிள் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

பாலாக நரைத்திருந்த தலையும், முகத்தின் சுருக்கங்களும் அவளுக்கு அறுபது வயது என்பதை கட்டியங் கூறியது.

அடேயப்பா, எவ்வளவு கஷ்டங்கள் நம் வாழ்க்கையில்… அத்தியாயம் அத்தியாயமாக ஒவ்வொரு நரை முடியும் ஒரு சோகக் கதை சொல்லுமே. அடுத்த அத்தியாயம் ஜேம்ஸ் மூலமாகத் தொடர்ந்து அதில் தனக்குத் தாய் வேடமோ…! என்று நினைத்துக் கொண்டாள்.

அவளது மனம் நாற்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்று அசை போடலாயிற்று…

வசதியுள்ள குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்தாள் சுசீலா. அவளுடைய இருபது வயதில் லெளகீக முறைப்படி அவளுக்கு சிவகுமாருடன் சிறப்பாகத் திருமணம் நடத்தி வைத்தார்கள் சுசீலாவின் பெற்றோர்கள். வருடங்கள் ஓடினாலும் மழலைப்பேறு மட்டும் அவர்களுக்கு கிட்டவில்லை.

அரச மரத்தை வலம் வந்தார்கள், சிறந்த மருத்துவரைப் பார்த்தார்கள், புனித யாத்திரை மேற் கொண்டார்கள், சாமியார்களை வணங்கினார்கள்… குழந்தை மட்டும் பிறக்கவேயில்லை.

திருமணமாகி ஐந்தாவது வருடத்தில் மஞ்சள் காமாலை என்று படுத்த சிவகுமார், அவளை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டான்.

தன் வாழ்க்கையில் சோகம் என்பதின் முழு அர்த்தத்தை அப்போதுதான் புரிந்து கொண்டாள் சுசிலா.

சிவகுமாரின் அலுவலக நண்பர் மரியதாஸ் சுசிலாவுக்கு கிடைக்க வேண்டிய பி.எப்., இன்ஷூரன்ஸ் போன்றவைகளை வாங்கிக் கொடுத்ததின் மூலம் சுசீலாவின் வீட்டிற்கு அறிமுகமாகி அவர்களின் குடும்ப நண்பரானார்.

சுசீலா நன்றாகப் படித்திருந்ததால், அலுவலக விதிப்படி, சிவகுமாரின் அலுவலகத்திலேயே அவளுக்கு ‘டெஸ்பாட்சிங் கிளர்க்’ வேலை அளித்தனர்.

குடும்பத்திற்கு பாரமாக வீட்டில் அமர்ந்து கசப்பான நினைவுகளை அசைபோடுவதை விட, அலுவலகம் சென்று வந்தது அவள் மனதுக்கு ஆறுதலையளித்தது. முதலில் சில நாட்கள் முற்றிலும் புதிய அலுவலக சூழ்நிலையில் ‘தண்ணீரிலிருந்து வெளிப்பட்ட மீனாகத்’ தவித்தாலும் – நாளடைவில் மரியதாஸின் உதவியுடன் தன் வேலைகளை திறம்பட கற்றுக் கொண்டாள்.

மரியதாஸ் அவ்வப்போது சுசீலாவின் வீட்டிற்கு வந்து, அவளுடைய பெற்றோர்களுடன் ஆறுதலாகப் பேசிவிட்டுப் போவதுண்டு. அவருடைய கண்ணியமும், நல்ல குணங்களும் சுசிலாவுக்கும் அவளுடைய பெற்றோர்களுக்கும் அவரிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

இதே ரீதியில் இரண்டு வருடங்கள் அமைதியாகச் சென்றது.

அன்று அலுவலகத்தில் மதிய உணவு இடைவெளியின்போது மரியதாஸ் சுசீலாவிடம், ‘தான் அவளை மணக்க விரும்புவதாக’ மிக பக்குவமாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அவள் தன் முடிவை உடனே தெரிவிக்க வேண்டாமென்றும், அமைதியாகச் சிந்தித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு கூறினால் போதும் என்றும் சொன்னார்.

அவருடைய இந்த வேண்டுகோள் முதலில் கலக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தினாலும், அவள் தன்னை நிதானப் படுத்திக்கொண்டு அடுத்த பத்து நாட்கள் மரியதாஸ் பற்றித் தீவிரமாக சிந்தித்தாள்…

‘முப்பத்தைந்து வயது நிரம்பிய உண்மையான கிறிஸ்தவர்; மறைந்த தன் கணவருக்கு நல்ல நண்பர், நல்லவர்; பொறுமையும் நிதானமும் உள்ள ஒரு சிறந்த பண்பாளர்…’ என்கிற ரீதியில் மரியதாஸ் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள்தான் அவள் மனதில் தோன்றியது.

அடுத்த கணம், தனக்கு அடுத்தாற்போல் திருமணத்துக்கு தயாராய் இருக்கும் தங்கை கல்யாணியையும், கல்லூரியில் படிக்கும் தம்பி ஜெயராமனையும் நினைத்துப் பார்த்தாள்.

அதே சமயம், குழந்தைப் பேறில்லாமல் கணவனையும் இழந்து நிற்கும் தனது தனிமை அவளுக்கு மிகக் கொடியதாகத் தோன்றியது. சில வருடங்களில் கல்யாணிக்கும் அடுத்து ஜெயராமனுக்கும் திருமணமாகி அவர்களுக்கென்று ஒரு குடும்பம் தோன்றி, பின்பு தன் தாய் தந்தையரும் இயற்கை அடைந்து விட்டால், தன் கதி நிர்கதிதான், தான் அனாதையாகிப் போய் விடுவோம் என்கிற அப்பட்டமான உண்மை அவளை அச்சுறுத்தியது.

மரியதாசை மணந்து கொள்வது தன் எதிர் காலத்திற்கு நல்லது என்கிற முடிவுக்கு அவளைத் தள்ளியது.

தனது முடிவை மரியதாசிடம், “தன் தங்கை கல்யாணியின் திருமணத்திற்குப் பிறகுதான் தன்னால் அவரை மணக்க முடியுமென்றும், அதுவரை அவர் காத்திருக்கத் தயாரா?” என்று கேட்டபோது அவர் உடனே ஒப்புக் கொண்டபோது சுசீலாவுக்கு மரியதாஸின் தூய அன்பையும், பெருந்தன்மையையும் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதற்கிடையில் இவர்களின் திருமணத்திற்கு பூரண சம்மதமளித்த மரியதாஸின் தாயாரையும் சுசீலா அவ்வப்போது சென்று பார்த்தாள்.

அடுத்த இரண்டு வருடங்களில் கல்யாணியின் திருமணம் சிறப்பாக நடந்தது. குடும்ப நண்பர் என்ற முறையில் மரியதாஸ் தன் தாயாருடன் அத் திருமணத்திற்கு வந்திருந்தார்.

கல்யாணி தன் கணவருடன் திருச்சியில் குடி புகுந்தாள்.

மூன்று மாதங்கள் சென்றன.

சுசீலா தன் வீட்டில் ஒரு பூகம்பத்தை எதிர்நோக்கத் தயாரானாள்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய சுசீலா, தன் தாயிடம் மரியதாசை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்னபோது, அவள் தாய் கமலாம்பாளுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. மிகுந்த கோபத்துடன், “என்னடி நாயே, நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறயா? முப்பது வயசு மூளிடி நீ, உனக்கு கல்யாணம் பேசறதே அபச்சாரம், இந்த லட்சணத்தில் ஒரு கிறிஸ்டியன பண்ணிப்பேன்கற…உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இத எங்கிட்டயே வெட்கமில்லாம சொல்லுவ..” என்றவள் “ஏன்னா, உங்க பொண்ணு பைத்தியம் மாதிரி ஏதேதோ சொல்றாளே” என்று ரேழியைப் பார்த்து வறட்டுத் தொண்டையில் உடம்பு படபடக்க கத்தினாள்.

சுசீலாவின் தந்தை பரசுராமனும், தம்பி ஜெயராமனும் அங்கு ஓடி வந்தார்கள்.

கண்கள் கலங்கி நிற்கும் கமலாம்பாளைப் பார்த்து பதட்டமுற்ற பரசுராமன்
“என்னடி, என்ன ஆச்சு? என்ன ரகளை இங்கே?” என்று கேள்விகளை அடுக்கினார்.

எப்பேர்ப்பட்ட பூகம்பத்தையும் எதிர்நோக்க தயாராய் இருந்த சுசீலா, மரியதாசை மணக்க விரும்பும் தன எண்ணத்தை மீண்டும் அழுத்தமாக தன் தந்தையிடம் வெளிப் படுத்தினாள்.

பரசுராமன் செய்வதறியாது திகைத்து நின்றார். ஜெயராமன் அவளை கை நீட்டி அடிக்காத குறையாக வாயில் வந்தபடி திட்டினான்.

கமலாம்பாள் புலம்பலைத் தொடர்ந்தாள், “அந்தக் கிறிஸ்டியன் இவளுக்கு என்னவோ சொக்குப் பொடி போட்டிருக்கான்… இப்பத்தான் புரியறது அவன் நம்மாத்துக்கு அடிக்கடி வந்ததின் ரகசியம். நம்மாத்துப் பொண்ணுக்கு உதவி செய்யறேன் செய்யறேன்னு சொல்லி இப்ப அவளையே அபகரிச்சுக்கப் போறான். நம்மாத்து மானம் மரியாதையெல்லாம் தெருவோட போகப் போறது.”

வெள்ளிக்கிழமை விளக்கேற்றும் சந்தியான வேளையில் அந்த வீடு அழுகையும் கூச்சலுமாக அல்லோகலப் பட்டது.

மறுநாள் காலையில் கமலாம்பாளும் ஜெயராமனும், சுசீலாவை ஒரு அறையினுள் தள்ளி கதவைச் சாத்தி வெளியே பூட்டிவிட்டு, “இந்தத் தட்டுவாணி இனிமே வேலைக்கே போக வேண்டாம். வெளியே போனால்தானே அந்தக் கம்மனாட்டி இவளைப் பார்த்து பேசுவான்” என்று கமலாம்பாள் இரைந்தாள்.

பரசுராமன் தன் மனைவியின் செயலைத் தட்டிக் கேட்க முடியாமலும், மகளின் முடிவை ஜீரணிக்க முடியாமலும் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தார்.

கொதித்துப் போன சுசீலா, “இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் கதவைத் திறக்கணும், நான் மரியதாசைப் பார்த்துப் பேசணும்… கதவைத் திறக்கலேன்னா என்னோட பிணம் உத்திரத்தில் தொங்கும்” என்று மிரட்டினாள்.

பரசுராமன் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார்.

மகள் தற்கொலை செய்துகொண்டு போலீஸ் வந்து பின்பு போகும் மானத்தைவிட, மரியதாசை திருமணம் செய்து கொள்வதினால் போகப்போகும் மானம் சிறியதுதான் என்பதை மனைவியிடம் விளக்கிச் சொல்லி அவளின் அனுமதியுடன் கதவைத் திறந்தார்.

சுசிலா வெளியே வந்ததும் ஜெயராமன் மிகுந்த ஆவேசத்துடன் அவள் தலைமயிரைப் பற்றி, “ஏண்டி நம்மாத்து மானம் போறதவிட, அவனுடன் படுக்கறதுதான் உனக்கு பெரிசா போச்சுல்ல? உனக்கு விதவா விவாகம் ஒரு கேடா?” அவளை தரதரவென்று இழுத்து சுவற்றில் மோதித் தள்ளினான்.

நெற்றியிலிருந்து ரத்தம் அருவியாகப் பீரிட, அதை இடது கையினால் அமுக்கியபடி வெறி வந்தவள் போல் வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். எதிர்பட்ட ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி நேராக மரியதாஸ் வீட்டிற்கே சென்று விட்டாள்.

கட்டிய புடவையுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுசிலா மறுபடியும் தன் வீட்டிற்கு போகவேயில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மரியதாஸ் யோசனையின்படி தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுசிலா என்கிற தன் பெயரை சூஸன் என மாற்றிக்கொண்டு ஞானஸ்தானம் வாங்கிக்கொண்டு கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து மரியதாசை மணந்தும் கொண்டாள்.

சிவகுமாரின் மூலம் ஐந்து வருடங்களாக பெறமுடியாத குழந்தைச் செல்வத்தை, மரியதாஸ் பத்தே மாதத்தில் அளித்தபோது மிகவும் பூரித்துப் போனாள். ‘ஜேம்ஸ்’ என்று குழந்தைக்குப் பெயரிட்டு அதைச் சீராட்டினாள்.

வருடங்கள் ஓடின.

மூப்பின் காரணமாக மரியதாஸின் தாய் மறைந்தாள். தம்பி ஜெயராமன் திருமணத்திற்கு வெறும் பத்திரிகை மட்டும் அவளுக்கு வந்தபோது, அதை ஒரு அழைப்பாக ஏற்காது அறிவிப்பாக மட்டும் எடுத்துக்கொண்டு போகாமலிருந்து விட்டாள்.

வருடங்கள் மேலும் உருண்டன…

ஜேம்ஸ் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் படித்துவிட்டு வெளியேறியபோது, அவனை சென்னையில் உள்ள ஒரு பெரிய கம்பெனி தன் பால் இழுத்துக் கொண்டது. கம்பெனியிலிருந்தே பெரிய வீடும் காரும் அளித்தனர்.

அடுத்த மூன்று வருடங்களில் மரியதாஸ் திடீரென மாரடைப்பினால் காலமானபோது, சூஸன் தன் வாழ்வில் இரண்டாவது முறையாக விதவையானாள். தனக்கு இருந்த ஒரே பிடிப்பான மகன் ஜேம்ஸுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

ஜேம்ஸ் தன் தாயாரிடம் அன்றாடம் தன் அலுவலகத்தில் நடக்கும் சுவாரஸியமான விஷயங்களைச் சொல்லும்போது ‘பாரதி’ என்கிற பெயரை அடிக்கடி சொல்வதுண்டு. அப்போதெல்லாம் சூஸன் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று காலை, பாரதியைத் தான் மணக்க விரும்புவதாக ஜேம்ஸ் சொன்னபோது சூஸன் அதிர்ந்துதான் போனாள்.

தன் மகன் சந்தோஷமே தன்னுடைய விருப்பம் என்று அவள் சம்மதிக்கத் தயாராய் இருந்தாலும் – மதம் மாறி திருமணம் செய்துகொண்ட தன்னுடைய கசப்பான பாதிப்புகள், தன் எதிர்கால மருமகளுக்கும் ஏற்படக் கூடாது என்கிற எண்ணமே அவளுள் மேலோங்கியது.

“அம்மா பாரதி தன் பெற்றோர்களை சம்மதிக்க வச்சுட்டா, ஆனால் நாமதான் அவள் வீட்டிற்கு முறையாகப் பெண் கேட்கப் போகணுமாம்… எனக்காக நீ நாளைக்கு என்னுடன் அவங்க வீட்டுக்கு வாம்மா” என்று ஜேம்ஸ் அவள் கையைப் பிடித்துக்கொண்டு அன்புடன் கெஞ்சியபோது சூஸன் ஒப்புக் கொண்டாள்.

வாசலில் திடீரென்று கார் வந்து நிற்பதும் அதிலிருந்து ஒரு பெண்மணியும், இளைஞனும் இறங்கி தன் வீட்டு வாசற்படி ஏறி வருவதையும் பார்த்த பாரதியின் அப்பா, அவசரமாகத் துண்டை எடுத்து தோளில் போட்டபடி, “வாங்க” என்று அழைத்தார்.

வீட்டினுள் நுழைந்த சூஸனை அருகில் பார்த்ததும் திகைத்துப்போய், “நீயா?” என்றார்.

சற்றும் எதிர்பாராது தன் தம்பியின் வீட்டிற்கே தான் பெண் கேட்க வந்து விட்டதை உணர்ந்த சூஸன் அதிர்ச்சியும் திகைப்புமுற்றாள்.

தன்னை சமாளித்துக்கொண்ட ஜெயராமன், அவர்களை வரவேற்று வீட்டின் கூடத்தில் ஊஞ்சலில் அமர வைத்த போது, ஜெயராமனின் மனைவியும், பாரதியும் அவளது இரண்டு தங்கைகளும் அங்கு கூடிவிட்டனர்.

தம்பியின் விக்கிரகம் போன்ற மனைவியையும், மத மதவென்று திருமணத்திற்கு தயாராய் வளர்ந்து நிற்கும் மூன்று பெண்களையும் பார்த்து திகைத்துப் போனாள் சூஸன்.

“என்னடா ஜெயராம், செளக்கியமா ?” என்று அன்புடன் வினவினாள்.

வறட்டுக் கெளரவத்துடன், “ம்..ம்..” என்றார் விரைப்பாக.

“அம்மா, அப்பாவெல்லாம்?”

“அவா போய் பத்து திவசம் போட்டாச்சு.”

இவர்களுக்குள் நடைபெற்ற சம்பாஷனை அங்கிருந்த அனைவரையும் குழப்பத்திலாழ்த்தியது.

“ஜெயராம், நான் உன்னோட கூடப் பிறந்த அக்கா, இன்னமும் என் மேல் உள்ள கோபம் உனக்கு தீரலையா? இதோ இவன் என் ஒரே பையன் ஜேம்ஸ். உன் மூத்த மகள் பாரதியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப் படறான். நீ என்னடா சொல்ற?”

“என்னிடம் அவள் அனுமதி கேட்டபோது நான் அரைமனதுடன்தான் சம்மதித்தேன். அவள் அவசரப்பட்டு ஜேம்ஸுடன் ஓடிப்போய் சரித்திரம் மறுபடியும் திரும்பி என்னுடைய மானம் காற்றில் பறப்பதைவிட, இத் திருமணத்திற்கு சம்மதித்தால், காலத்திற்கேற்ற முற்போக்கு எண்ணமுடையவன் என்கிற போர்வையில் ஒளிந்துகொள்ள எனக்கு இடம் கிடைக்கும் என்கிற அளவில்தான் நான் இதற்கு சம்மதித்தேன்… ஆனால் இப்பத்தான் ஜேம்ஸ் உன்னோட மகன்னு தெரியறது… என்னோட மூத்த மகளை உனக்கு மருமகளாகவும், கிறிஸ்தவ மதத்திற்கும் தாரை வார்த்துக் கொடுப்பது பற்றி சம்பந்தப்பட்ட அவளுக்கு வெட்கமோ கூச்சமோ இல்லையெனில், அவளை உன் மருமகளாக ஏற்றுக்கொள்.”

இதற்கிடையில், ஜேம்ஸின் தாயார் தன் சொந்த அத்தை என்பதைப் புரிந்துகொண்ட பாரதி, மிகுந்த தைரியமுற்று, “என்னோட அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்கொள்ள நான் ஏம்பா வெட்கப்படணும்?” என்றவள் சூஸன் அருகில் போய் நின்று அன்புடன் ஈஷிக் கொண்டாள்.

பாரதியின் மற்ற இரண்டு சகோதரிகளும் திகைத்துப்போய் தன் அத்தையையும் அவளின் அழகான மகனையும் கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெயராமனின் மனைவி, “சித்த ஒரு நிமிஷம் உள்ளே வாங்க” என்று ஜெயராமனை உள்ளே அழைத்துச் சென்று, வெட்டியாக வறட்டுக் கெளரவத்துடன் இருப்பதைவிட, இத் திருமணத்தில் இருக்கும் பாரதியின் முழு விருப்பத்தை விளக்கிப் புரிய வைத்தாள்.

திரும்பி வந்த ஜெயராமன், “தான் இத் திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதிப்பதாகவும், அனால் உடனடியாக தன்னிடம் அதற்கு வேண்டிய பணம் இல்லாததையும் எடுத்துச் சொன்னபோது, “மாமா, நீங்க ஏன் அதைப் பற்றி கவலைப் படறீங்க? என்னோட முறைப்பெண்ணை எனக்கு கட்டிக் கொடுங்க அது போதும்” என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜேம்ஸ் சொல்லவும், அனைவரும் சந்தோஷத்துடன் சிரித்தனர்.

அடுத்த ஒரு மாதத்தில் ‘ஜேம்ஸ்-பாரதி ரெஜினா’ திருமணம் தேவாலயத்தில் சிறப்பாக நடந்தது.

திருமண தினத்தன்று தனியாக தன் அறைக்கு வந்து கதவைத் தாழிட்டாள் சூஸன். ‘தனக்கு புனர் ஜென்மம் கொடுத்து, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய’ மரியதாசை நினைத்துக் கொண்டு அவர் படத்தின் முன் நின்று கண்ணீர் விட்டாள்.

பின்பு, கண்களில் பரிவும், முகத்தில் சாந்தமுமாக காட்சியளித்த இயேசுநாதரின் படத்தை கண்களில் நீர் மல்க நன்றியுடன் நோக்கினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *