காலத்தின் முடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 3,999 
 

ஓரளவுக்கு வசதியான மருத்துமனை அது, அந்த ஊரில் பிரபலமானது புற்று நோய் சிகிச்சைக்கு மிகுந்த பெய்யர் பெற்றது.

டாகடர் “டேவிட்” போர்டு போட்டிருந்த அறை வாசலில் டாக்டரை பார்க்க ஒரு முகமதிய தம்பதியர் உட்கார்ந்து இருந்தனர். உள்ளிருந்து ஒரு தம்பதியர் அழுது கொண்டே வெளியில் செல்ல. நர்ஸ் இவர்களை உள்ளே அழைக்க, நுழையும் போதே இந்த தம்பதியர் இருவரின் கண்களிலும் கண்ணீர்.

எழுந்து வந்த டாக்டர் ப்ளீஸ் மனசை தளற விடாதீங்க. நம்மால முடிஞ்சதை செய்யலாம்.

எங்க குடும்பத்துலயே இவன் ரொம்ப சூட்டிகையான பையன், டாக்டர். எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஸ்கூல்ல படிக்கும்போது எப்பவும் முதல் மார்க்தான். நான் பெரிய இஞ்சீனியர் ஆகணும்னு சொல்லிகிட்டே இருப்பான். அவனுக்கு ஏன் டாக்டர் இந்த மாதிரி. பொங்கி வரும் அழுகையை அடக்க கணவன் மனைவி கையை பிடித்துக்கொள்கிறார். எங்க கிட்டே எவ்வளவோ வசதி இருக்கு டாக்டர், ஆனா..இவனுக்கு இப்படிங்கும்போது. அழுகையினால் குரல் பிசிறுகிறது.

டாக்டர் அவரின் தோளை தொட்டவர் வியாதிக்கு வசதி, ஜாதி, மதம் இது எதுவும் கிடையாது சார். இப்ப உங்களுக்கு முன்னாடி ஒரு குடும்பம் எந்திரிச்சு போனாங்க பாத்தீங்கில்ல. அவங்க பொண்ணு பத்து வயசுதான் ஆகுது. நல்ல பிரில்லியண்ட் கேர்ள், அதுக்கும் திடீருன்னு இப்படி ஒரு பிரச்சினை. என்ன பண்ணறது, எங்களால முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்வோம்.

கட்டிலில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த சலீம் அரவம் கேட்டு தலையை நிமிர்த்தி பார்த்தான். நல்ல நிறமாய் பத்து வயது பெண் ஒன்று எதிரில் உள்ள கட்டிலில் வந்து உட்கார்ந்தாள்.பக்கத்தில் அவர்கள் பெற்றோராய் இருக்க வேண்டும். கண்களில் வடியும் நீருடன் நின்று கொண்டிருந்தனர்.

காலை பரபரப்பு ஒய்ந்த நேரம். சலீம் எதிரில் இருந்த பெண்ணை பார்த்து ‘ஹலோ

என்றான். “ஹலோண்ணா” புன்னகையுடன் பதில் சொன்னாள். உன் பேர்? வசந்தி பளிச்சென்று சொன்னாள். சலீமுக்கு உற்சாகமாகி விட்டது. அழகான பேர். உங்க பேர் அண்ணா? “சலீம்” கம்பீரமாய் சொன்னான். சூப்பர் என்றாள். ‘யேய்’ சும்மா சொல்லாதே, நிசமா, சலீம் அழகான பேர்தான். என்ன படிக்கிறே? “பிப்த்” ஸ்டேண்டேர்டு, தட்ஸ் குட், நீங்க என்ன படிக்கறீங்க? மீண்டும் எதிர் கேள்வியை கேட்டாள், நான் இஞ்சீனியரிங் “தேர்ட் இயர்”.புன்னகையுடன் சொன்னான்.

“ஹலோ” குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்பினர், ஐ ஆம் டாக்டர் “டேவிட்” என்னையும் விசாரிக்க மாட்டீங்களா?

இருவரும் சிரித்தனர்.சலீம் எப்படி இருக்கறே? டாக்டர் சில நேரம் உயிர் போற மாதிரி வயிறு வலிக்குது டாக்டர், அப்புறம் மாத்திரை போட்டு ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் வலி அடங்குது, வருத்தத்துடன் சொன்னான்.

கமான்யா” இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது, சரியாயிடும், அப்புறம் குட்டிப்பெண்ணே உனக்கு ஒரு தொந்தரவும் இல்லையா? டாகடர் இராத்திரி மூச்சு விட முடியாம ரொம்ப சிரமப்பட்டேன், அம்மாதான் சிஸ்டரை கூட்டிகிட்டு வந்து முகத்துல மாஸ்க் போட்டு விட்டாங்க, காலையில நார்மலாயிடுச்சு. உனக்கும் அதேதான் சொல்றேன், இரண்டு பேரும் கொஞ்சம் சமாளிச்சுங்குங்க. சரியாகி உங்களை அனுப்பி வச்சுடறேன் சரி அதை விடுங்க, சலீம் என்னமோ இஞ்சீனியரிங் பத்தி சொல்லிகிட்டிருந்தான், அது என்ன?

வசந்தி “அங்கிள் அண்ணன் இஞ்சீனியரிங்க் ஸ்டூடண்ட் அப்படீன்னு சொல்லி கிட்டிருந்தாரு.

அப்படியா குட், சலீம் நீ இஞ்சீனியரிங்க் முடிச்சிட்டியின்னா எனக்கு ஒரு வீடு கட்டி தரணும், ஆனா ஒண்ணு உன்னைய மாதிரி நான் வசதியானவன் இல்லே, இருபதிலிருந்து முப்பது லட்சத்துக்குள்ள கட்டி தரணும் முடியுமா?

ஏன் முடியாது டாக்டர், எங்க “வாப்பா” சொல்வாரு, காசு பணத்தை கொட்டறதுல திறமை தெரியாது, ஒரு செயலை செய்யணும்னா அதுக்கு நம்ம மனசு முழு ஈடுபாடோட இருந்தா போதும், அந்த செயல் உசந்து நிக்கும்னு.

நான் அருமையா கட்டித்தர்றேன் டாக்டர். உங்களுக்கு எப்படி வேணும்னு மட்டும் சொல்லுங்க போதும்.

வெரி குட், நீ டிஸ்சார்ஜ் ஆகி போகும்போது நான் என் வீட்டு பிளான் அவுட் லைன் மட்டும் சொல்றேன். நீ கோர்ஸ் முடிச்சுட்டு வந்து எனக்கு செஞ்சு கொடு. ஓகேயா? ஓகே டாக்டர்… வசந்தி நீ அண்ணன் கூட பேசிகிட்டு இரு, நான் மதியம் வர்றேன்.

மீண்டும் சலீமுடன் வசந்தி சுவாரசியமாய் அரட்டையை தொடங்கினாள்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. இப்பொழுது வசந்தியும், சலீமும் அந்நியோன்யமாய் ஆகியிருந்தார்கள். இவளின் கற்பனை கதைகளை சலீம் முகம் விரிய கேட்பான். தினம் ஒரு கதை சலீமும் சொல்ல வேண்டும் என்று வசந்தி அடம் பிடித்தாள். சலீம் அவளுக்காக கதைகளை தன் மனதுக்குள் செதுக்கி வரி வரியாய் சொல்வான். டாக்டரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவர்களுடன் கலந்து கொள்ள வந்து விடுவார்.

இரவு முழுக்க வலியினால் துடித்துக்கொண்டிருந்த சலீமுக்கு வலி தெரியாமல் இருக்க இரவு கொடுத்த மருந்தினால் காலையில் வெகு நேரம் கழித்தே விழித்தான். விழித்தவன் வழக்கம் போல வசந்தி படுக்கையை நோக்கினான்.

வசந்தி எந்த சலனமில்லாமல் உறங்குவது போல் படுத்திருந்தாள். அவளை சுற்றி பெற்றோர் அழுது கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

சலீம் குழப்பமுடன் அங்கு வந்த சிஸ்டரை கை அசைத்து கூப்பிட்டு வசந்தி ஏன் இன்னும் எந்திரிக்கலை? அவள் இனிமேல் எந்திரிக்க மாட்டா? கண்களில் நீர் வடிய சிஸ்டர் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்.

சலீம் அவன் வேதனையையும் மீறி அதிர்ச்சியாகி விட்டான். அப்பொழுது டாக்டர் உள்ளே வர, “டாக்டர் ப்ளீஸ்” என்னைய வசந்தி கிட்டே கூட்டிகிட்டு போங்க,

டாக்டர் நர்ஸ்ஸிடம் கண்ணை காட்ட மருத்துவமனை ஊழியர்கள் இருவர் மெல்ல சலீமை எழுப்பி வசந்தியின் அருகில் கொண்டு சென்றனர்.

ரோஜாப்பூ உறங்குவது போல் படுத்திருந்த வசந்தியின் கையை அப்படியே இறுகப் பற்றி அந்த கட்டிலின் மேலேயே படுத்து அழுதான் சலீம்.

டாக்டர் அங்கிருந்தால் நாமும் உணர்ச்சி வசப்பட்டு விடுவோம், என்று சலீமை அவன் படுக்கைக்கு கொண்டு செல்ல சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.அவர் மனம் சலீமை நினைத்து பரிதாபப்பட்டது. வசந்திக்கு சலீம் இருந்தான். நாளையோ அல்லது மறுநாள் சலீமுக்கு?

டாக்டர் டேவிட் இருந்த அறையின் கதவை திறந்த நர்ஸ் அதிர்ந்து விட்டாள். டாக்டர் இரு கண்களில் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தார்.

டாக்டர் ப்ளீஸ் அழுகாதீங்க, விடும்மா ஒரு ஐந்து நிமிடம் அழுது விடுகிறேன். அந்த ரூமுக்குள்ள போகும்போதெல்லாம் எனக்கு சலீமும், வசந்தி இவங்க இரண்டு பேர் ஞாபகம்தான் வருது. அதுதான் நான் டாக்டர்ங்கறதை ஒரு அஞ்சு நிமிசம் மறந்து அழுது என்னைய ஆறுதல் படித்திக்கறேன். சோகத்துடன் சொன்னார்.

சாரி டாக்டர், உங்களுக்கு சந்தோசமான நியூஸ் ஒண்ணு சொல்லாமுன்னு வந்தேன், ஆனா..நீங்க..

கேள்விக்குறியுடன் நர்ஸின் முகத்தை பார்க்க, டாக்டர் உங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கு…இப்பத்தான் போன் வந்துச்சு, ஒரு பையன், ஒரு பொண்ணு.

சலீமும், வசந்தியும் அவர் மனதில் வந்து போனார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *