கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 18,440 
 

சமையலறை கதவின் மீது, சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் சங்கரி. அங்கிருந்து பார்த்தால் ஹால் நன்கு தெரியும்.

ஒரு நாற்காலியில், இரு கால்களையும் தூக்கி வைத்து உட்கார்ந்திருந்தார், அவள் கணவன் சபேசன்.

அவரெதிரே கை வைத்த ஒரு மர நாற்காலியில், சாய்ந்து உட்கார்ந்திருந்தார், அவர் நண்பர் குருசாமி.

அன்று காலையில் தான், அவர்கள் வெளியூரிலிருந்து திரும்பியிருந்தனர். இருவரது முகத்திலும் சுரத்தில்லை. போன காரியம் வெற்றியடையவில்லை என்பதை, அவர்கள் முகமே காட்டிற்று. என்ன செய்வதென்று தெரியாமல், அவர்கள் மவுனமாக உட்கார்ந்திருந்தனர்.

ஒரு ஆண்டுக்கு முன் தான், குருசாமி தம் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். எவ்வளவோ சிக்கனமாக செய்தும், செலவு எக்கச்சக்கமாகிவிடும் போலிருந்தது. முதலில் பிள்ளை வீட்டார் சொன்னதற்கெல்லாம், “சரி… சரி’ என்று குருசாமி தலையாட்டியது, தப்பாகப் போய்விட்டது. குனிய குனிய குட்டலாம் என்று நினைக்கிற சம்பந்தி, இது தான் சமயமென்று, “அதை செய்யுங்க… இதைச் செய்யுங்க…’ என்று சொன்ன போது, இது ஒன்று தானே, இது ஒன்று தானே என்று, குருசாமி ஒப்புக் கொண்டதால், திருமண செலவு அதிகப்படியாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வந்துவிடும் போலிருந்தது.

சங்கரி

கையை பிசைந்தபடி, இளவயது நண்பர் சபேசனிடம் வந்து நின்றார் குருசாமி.

“கல்யாணமும், வீடு கட்டறதும் நாம போடற பட்ஜெட்டுக்கும் மேலே செலவை இழுத்து விட்டு விடும் குருசாமி. முதலிலேயே அதிகப்படியான செலவு வந்துட்டா என்ன செய்றது என்கிற பயத்தோட, வீடு கட்டற விஷயத்தையும், பெண்ணுக்கு கல்யாணம் செய்ற ஏற்பாட்டையும் ஆரம்பிக்கணும். என்ன செய்யறது குருசாமி. பட்ட அப்பறம் தானே… புத்தி வந்தது…’ என்றார் சபேசன்.

“ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு, இப்போ எங்கே போறது…’ என்று குருசாமி கேட்கவில்லை. அவர் முகம் கேட்டது.

“என்கிட்டே இருந்தா, ஏன் எதுக்குன்னு, ஒரு கேள்வி கேட்காமல் உனக்கு தூக்கி கொடுத்திடுவேன் குருசாமி. என்ன செய்றது? பென்ஷனை நம்பிட்டு, நான் வண்டியை ஓட்டிட்டுருக்கேன்…’ என்றார் சபேசன்.

“யார்கிட்டேயாவது கைமாத்தலா கேட்டுப் பார்க்கலாமா சபேசா?’ என்று பரிதாபமாக கேட்டார் குருசாமி.

“அப்படி கேட்டா, இந்தா வைச்சுக்கோன்னு யாரும் தூக்கி கொடுத்துடமாட்டாங்க குருசாமி. கடனை அடைக்க, நமக்கு திராணி இருக்கான்னு பார்ப்பாங்க. வீடு, வாசல், நிலம் நீச்சுன்னு இருக்கான்னு பார்ப்பாங்க. ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க…’ என்றார் சபேசன்.
குருசாமியின் பெண் உமாவின், திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. தங்கம் விலை திடீர், திடீரென ஏறியதால், தேவைப்பட்ட, 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாயாகிவிட்டது. ஏற்கனவே, திக்கு முக்காடி கொண்டிருந்த குருசாமிக்கு, மூச்சே அடைத்துவிடும் போலாகி விட்டது.

“நம்ம சீனிவாசன் கிட்ட போய் வேணும்னா கேட்டு பார்ப்போமா?’ என்றார் குருசாமி.
சீனிவாசன் பணவசதி படைத்தவர். ஊரில் நிலம், காணி, வயல் வரப்பு, தோட்டம், துரவு, வங்கியில் ரொக்கம், வீட்டில் நகைகள் எல்லாம் இருந்தன. பண லேவாதேவியும், நடத்திக் கொண்டிருந்தார்.

சபேசன், குருசாமி, சீனிவாசன் எல்லாம் ஒத்தவயதுக்காரர்கள். ஒருவரையொருவர் சிறு வயது முதலே அறிந்தவர்கள்தான். ஒன்றாக பள்ளிக்கூடம் சென்று, படித்து, ஓடியாடி விளையாடியவர்கள் தான்.

சீனிவாசனிடம் போய், கை நீட்டி கடன் கேட்க குருசாமிக்கும், சபேசனுக்கும் கூச்சமாகவும், தயக்கமாகவும் இருந்தது. பணம் என்று வரும்போது, நட்பெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வட்டியுடன் எப்படி கடனை அடைப்பர் என்ற எதிர்பார்ப்பும், ஏமாந்து போய்விடக் கூடாதென்கிற, எச்சரிக்கையுமே உண்டாகும்.

“சீனிவாசன் என்னையும், இப்போ, என் பெண் கல்யாணத்துக்கு அதிகப்படியாக தேவைப்படும் பணத்துக்காக கஷ்டப்படறதையும், ஓரளவு அறிவான். அதனால், அவன் உதவி செஞ்சாலும் செய்வான்…’ என்றார் குருசாமி.

“பணமில்லைன்னு சொல்லிட்டான்னா?’ என்றார் சபேசன்.

அதற்கு பதில் சொல்லாது தலைகுனிந்து நின்றார் குருசாமி.

“அதுக்கெல்லாம் வழியில்லை. பணம் தர்றேன். கியாரண்டி கையெழுத்து யார் போடுவான்னு அந்த சீனிவாசன் கேட்டான்னா?’

“என் கஷ்டத்தை தெரிஞ்சவன்னு உன்னை விட்டா எனக்கு யாருமில்லை சபேசா… நீ தான் பெரிய மனசு வச்சு கியாரண்டி கையெழுத்துப் போடணும்…’ என்று கெஞ்சாத குறையாக கூறினார் குருசாமி.

“அவ்வளவு பெரிய தொகைக்கா…’ என்று தயங்கினார் சபேசன்.

“பணத்தை தான் ஒழுங்கா திருப்பிக் கொடுத்துடப் போறேனே சபேசா… கொஞ்சம் மனசு வச்சு, என் பெண் உமாவோட கல்யாணம் நடக்க உதவி செய்ப்பா…’ என்று சபேசனை கையெடுத்து கும்பிட்டார் குருசாமி.

அவர்கள் பேசுவதை எல்லாம், கேட்டுக் கொண்டிருந்த சபேசனின் மனைவி சங்கரி, “அவர் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்து கேக்கிறாரே… உதவி செஞ்சு, ஒரு பெண்ணோட கல்யாணத்தை நடத்தி வைங்க…’ என்றாள்.

“சரி… கிளம்பு குருசாமி. சீனிவாசன் கிட்டப் போயி கடன் கேட்கலாம். நான் கியாரண்டியாக கையெழுத்துப் போடறதா, அவன்கிட்ட சொல்றேன்…’ என்று புறப்பட்டார் சபேசன்.

இருவரும் சீனிவாசன் வீட்டிற்கு சென்றனர். விஷயத்தை அவரிடம் தெரிவித்தனர்.

“இச்சமயத்தில், உன்னை விட்டால் உதவ யாருமில்லை…’ என்றும் கூறினர்.

சீனுவாசன் வீட்டினுள்ளே போய், கட்டுக்கட்டாக, 75 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார். கடனுக்கு எவ்வளவு வட்டி, எப்போது பணத்தை கொடுப்பாய் என்றெல்லாம் கேட்கவில்லை. ஒரு பத்திரத்தில் மட்டும், எழுதி வாங்கிக் கொண்டார். அதற்கு, கியாரண்டி கையெழுத்து, சம்மதம் என்றெல்லாம் வாங்கிக் கொள்ளாமல், சபேசனிடம், ஒரு சாட்சி கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்.

“ஒரு வருஷம் முடிஞ்சதும், ஒவ்வொரு வருஷமும், 25 ஆயிரம் திருப்பிக் கொடு…’ என்றார் சீனிவாசன்.

குருசாமியின் மகள் உமா, கல்யாணம் நடந்து முடிந்தது. அதற்கு அடுத்த வருடமே, ஒரு குழந்தையை பெற்று விட்டாள்.

முதல் வருடம் முடிந்ததும், குருசாமியால், 25 ஆயிரம் ரூபாயை, சீனிவாசனிடம் திருப்பி செலுத்த முடியவில்லை.

முதல் வருடம் முடிந்து, இரண்டாம் வருடமும் முடிந்து, மூன்றாம் வருடம் பாதியாகிவிட்டது.
குருசாமி, சபேசன் இருவரையும் தேடி வந்தார் சீனிவாசன்.

“குருசாமி… சபேசா… எனக்கு முன்ன மாதிரி உடம்பில்லை. ஏதாவது ஒரு வியாதி, மாத்தி மாத்தி வந்து சிரமப்படுத்துது. சிறுநீரக கோளாறு இருக்கும் போலிருக்குன்னு டாக்டர்கள் சொல்றாங்க. எதுவுமே சொல்றதுக்கில்லை என்கிற நிலை ஏற்பட்ட பிறகு தான், நான் உங்கக்கிட்ட கொடுத்த கடனை கேட்க, வந்திருக்கேன். 75 ஆயிரம் ரூபாயை புரட்டி கொடுக்கிறது என்கிறது, சாமான்யமான காரியமில்லை. உங்களுக்கு ஆறுமாச டைம் தர்றேன். தப்பா நெனைக்காம அதுக்குள்ள பணத்தை செட்டில் பண்ணிடுங்கோ…’ என்றார் சீனிவாசன்.

“தாங்கள் சொல்லியபடி, பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் வரும் ஆறு மாதங்களில், 75 ஆயிரம் ரூபாயை எப்படி திரட்டி சீனிவாசனிடம் கொடுத்து, கடனை அடைக்கப் போகிறோம்…’ என்று, குருசாமியும், சபேசனும் கவலைப்பட்டனர்.

“”இப்படி கவலைப்பட்டுட்டிருந்தா பிரச்னை தீர்ந்து விடுமா? சீனிவாசன் நல்ல சமயத்திலே இல்லைன்னு சொல்லாம, கேட்ட பணத்தை கொடுத்தார். வட்டி கேட்கலை. கியாரண்டி கேட்கலை, பணத்தை எப்படி கொடுக்க போறன்னும் கேட்கலை. பணத்தை திருப்பி கொடுக்க, நிறைய அவகாசமும் தந்தார். அப்படிப்பட்டவருக்கு நாம சொன்னபடி சரியான டையத்துல பணத்தை கொடுக்காட்டாலும், கொஞ்சம் முன்னே பின்னே கொடுத்துருக்கலாம். நம்ம கிட்ட பணம் இல்லை. அதற்காக, சும்மா உட்கார்ந்திருந்தா பணம் எங்கேயிருந்து வரும்?” என்றாள் சங்கரி.

“”எங்கடி எங்கள போகச் சொல்றே பணத்துக்கு,” என்றார் பரிதாபமாக சபேசன்.

“”சீனிவாசன் இன்னும் ஆறுமாசம் அவகாசம் கொடுத்திருக்கார். அதை பயன்படுத்தி, நீங்க ரெண்டு பேரும் அவரவர் ஊருக்குப் போங்க. இதுவரை தெரிஞ்சவங்க, சொந்தம், பந்தம், நிறைய பேர் இருப்பாங்க. அவங்ககிட்டே நிலைமையை விளக்கி, பணம் கேளுங்க. ஆயிரமாயிரமா கிடைச்சாலும் பரவாயில்லை. “சிறு துளி பெரு வெள்ளம்’ என்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்மா கிடைச்சாலும் பரவாயில்லை. அப்பப்போ சீனிவாசன்கிட்டே கொண்டு போய் கொடுத்துட்டு வாங்க,” என்றாள் சங்கரி.

சங்கரி கூறியதை செயல்படுத்த, சபேசனும், குருசாமியும்<, மறுநாளே கிளம்பி விட்டனர். ஒவ்வொரு ஊராகச் செல்ல, பணம் தான் செலவழிந்ததே தவிர, கிடைத்த சொற்ப பணமும்… அதை ஈடுகட்டத்தான் சரியாக இருந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பின், வெறுங்கையுடன் வந்தனர்.

அதற்குள் சீனிவாசனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டது.

“”சீனிவாசனுக்கு பணம் எதுவும் கொடுக்க முடியாவிட்டாலும், பரவாயில்லை. கிட்னி ஆபரேஷனுக்கு பின், அவர் பெட்ல இருக்கார். ரெண்டு பேரும் போயி… அவரை பார்த்துட்டு வாங்க, பாவம் நல்ல மனுஷர்,” என்றாள் சங்கரி.

இருவரும் சீனிவாசனை பார்க்க போனார்கள். கடனை கொஞ்சம் கூட திருப்பி கொடுக்காமல், அவரை பார்க்க போறோமே என்று, மனசாட்சி அவர்களை குடைந்தெடுத்தது.

சிறிது நேரத்தில் சபேசனும், குருசாமியும் திரும்பி வந்தனர்.

“”கை, கால் அலம்பிட்டு ரெண்டுபேரும் சாப்பிட்ட பின் அப்புறமா பேசலாம்,” என்றாள் சங்கரி.

“”நாங்க சாப்பிட்டாச்சு…” என்றான் சபேசன்.

“”எங்கே சாப்பிட்டிங்க?”

“”சீனிவாசன் வீட்டிலே தான்,” என்றார் குருசாமி.

“”என்ன சொல்றீங்க?”

“”சீனிவாசனை பார்க்க பயந்துட்டே தான் போனோம். ஆனா, சீனிவாசன் என்ன சொன்னார் தெரியுமா? “கிட்னி ஆப்ரேஷன்ல நான் உயிர் பிழைச்சுட்டேன். லட்சம் லட்சமா, செலவழிக்க தயாராக இருந்தும், எனக்கு ஒரு கிட்னி கிடைக்கல. அப்ப ஒரு அம்மா வந்து, தன் கிட்னியை கொடுக்கிறதாகவும், ஆனால், அதை வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டு கொடுத்துட்டு போயிட்டாங்களாம். குருசாமி… உன் பெண் கல்யாணத்துக்கு நான் பணம் கொடுத்து உதவினது வீண் போகவில்லை. கடவுள் யார் மூலமாகவோ எனக்கு கிட்னி கிடைக்க வைச்சு காப்பாத்திட்டார்.

“குருசாமி… நான் உன் பெண் கல்யாணத்துக்கு கொடுத்த பணத்தை, நீ எனக்கு திருப்பி கொடுக்க வேண்டாம். அது யார் மூலமாகவோ, எனக்கு வேறு ரூபத்திலே கிடைச்சிடுச்”. இந்த சந்தோஷத்தை கொண்டாட, நீங்க ரெண்டு பேரும், என் கூட சாப்பிட்டு விட்டுத் தான் போகணும்…’ன்னு, சீனிவாசன் எங்க கூட உட்கார்ந்து சாப்பிட்டு, கடன் சுமையிலிருந்து, எங்கள விடுபட வைச்சு, எங்களை திக்கு முக்காட செய்துட்டான்,” என்றார் சபேசன்.

கண்களில் கண்ணீர் பெருக, இரு கைகளையும் கூப்பி மேலே நோக்கி வணங்கினார் குருசாமி.
தன் ஒரு சிறுநீரகத்தை வழங்கியதன் மூலம், தன்னை மணக்க விரும்பி, அதுமுடியாமல் போன சீனிவாசனையும், தான் மானசீகமாக சின்ன வயதில் காதலித்து, மணக்க முடியாமல் போன, குருசாமியின் கடன் சுமை நீங்கியதும், சாட்சி கையெழுத்து போட்டதால், தனக்கு என்னவாகுமோ என்று பயந்து கொண்டிருந்த… தன் கணவரையும், இப்போது நிம்மதியடைய செய்து விட்டதை எண்ணி, தனக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள் சங்கரி.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *