காற்றுள்ள பந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 8,142 
 

இந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தது. இதற்கு முன்பு வேலை செய்த பள்ளியின் உயர்ந்த, நீண்ட கட்டிடங்களும், அகன்று, விரிந்து, பரந்த மைதானமும், தழைத்து வளர்ந்த மரங்களும் நினைவிலாடிற்று.

முழுவதும் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாதலால் சூழ்நிலை எனக்கு வித்தியாச-மாய் இருந்தது. விளையாட்டுப் பிரிவு வேளையில் கூட விளையாடாது, மரத்தடியில் பாடம் படிப்பதும் அல்லது ஓரமாய் ஒதுங்கி கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொள்வதுமாய் இருந்தனர் பிள்ளைகள்.

இன்னும் பள்ளியின் விதிமுறைகள் ஏதும் முழுதாய் எனக்குப் பிடிபடவில்லை. நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். பிள்ளைகள் அமைதியாக தேர்ந்தெடுக்காத பாதையைக் குறிக்கும் ஆங்கிலக் கவிதை ஒன்றை மனப்பாடம் செய்து எழுதிக் கொண்டிருந்தனர். மேற்கு நோக்கிய கட்டிடமாதலால் மாலை நேர வெயில் வகுப்புக்குள் பரவியிருந்தது.

சார்…. சித்திரைச் செல்வியோட மாமா வந்திருக்காரு… யாரோ ஒரு ஆள், வகுப்பறை வாசலில் நிற்பது தெரிந்தது. யார் சித்திரைச் செல்வி என்பது எனக்குத் தெரியவில்லை.

யாரும்மா… என்றேன். வெள்ளையாய் ஒல்லியாய் இருந்த அந்தப் பெண் எழுந்து நின்றாள். வந்தவர், இந்தப் பெண்ணக் கூட்டிக்கிட்டுப் போகணும்…அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல…

அவர் கேட்டவிதம் எனக்கு எரிச்சலாய் வந்தது.
ஆமா…. நீங்க யாரு…

நான் இவளுக்கு மாமா பையன்…
இன்னும் ஒரு மணி நேரத்தில பள்ளி முடியப்போகுது…. அப்புறமா கூட்டிக்கிட்டுப் போங்களேன்…

இல்ல…. சார்…இப்பவே கூட்டிக்கிட்டுப் போயாகணும்… எனக்கு சந்தேகம் கூடிற்று. தகராறு செய்வதற்கென்றே இவன் வந்திருக்-கிறானோ!

இல்லப்பா…நாங்க பள்ளி நேரத்துல யாரையும் வெளிய அனுப்பறது இல்ல… அப்படியே அனுப்பறதா இருந்தாலும் பெத்தவங்க வந்து எழுதிக் கொடுத்தாத்தான் அனுப்புவோம்… சித்திரைச் செல்வி பையை மாட்டிக் கொண்டு தயாராய் நின்று கொண்டிருந்தது எனக்கு மேலும் எரிச்சலையும் சந்தேகத்தையும் கிளப்பிற்று.

உக்காரும்மா… என்றேன் கோபத்துடன். இன்னொரு பெண்ணை அழைத்து,
இவரக் கூட்டிக்கிட்டுப் போய் தலைமை ஆசிரியர் அறை எதுன்னு காட்டும்மா… என்று அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் அந்தப் பெண் திரும்பி வந்தாள்.

சித்திரைச் செல்விய அனுப்பச் சொன்னாங்க… சார்… சித்திரைச் செல்வி பையை மாட்டிக் கொண்டு வேகமாகச் சென்று மறைந்தாள்.

புதிய ஆசிரியராதலால் எந்தவிதமான அய்யமும் கேட்காது, குறும்பும் செய்யாது அமைதியாய் இருந்தனர் பிள்ளைகள். பள்ளி முடியும் வேளையில் சித்திரைச் செல்வியின் நினைவு வந்தது. அவள் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்டேன்.
என்னம்மா… ஏதாவது பிரச்சினையா?

அவங்க அம்மாவுக்கு ரொம்பவும் முடியாம இருந்தது சார்… இன்னிக்குள்ள முடிஞ்சுரும்னு டாக்டர் சொல்லிட்டாராம்…
என்ன உடம்புக்கு…?

கர்ப்பப்பைல…புற்றுநோயாம்…சார்… தெளிவாய்ச் சொல்லிற்று அந்தப் பிள்ளை. எனக்குள் சங்கடம் பரவிற்று. அடுத்தநாள் காலை வகுப்பில் நுழைந்ததும் முதல் வேலையாய்க் கேட்டேன்.
சித்திரைச் செல்வி வரலயா…?

அவங்க அம்மா…இறந்துட்டாங்க சார்… நேற்று சாயங்காலம்…செல்வி போனதும் கொஞ்ச நேரத்துலயே உயிர் போயிடுச்சாம்…

மனதை என்னவோ செய்தது. ஒடிசலான, வெள்ளையான சித்திரைச் செல்வியின் முகம் மனதுக்குள் ஓடிற்று.

அடுத்த நாள் பள்ளியில் நுழைந்ததில் இருந்தே மனம் சித்திரைச் செல்வியைச் சுற்றி வட்டமிட்டபடி இருந்தது. எப்படியும் இன்னும் பதினைந்து நாள் அந்தப் பெண் பள்ளிக்கு வரப்போவது இல்லை. சொல்லமுடியாது. ஒருவேளை வராமலேயே போய்விடலாம். அந்த பத்தாம் வகுப்புக்கு நான் மாலையில்தான் செல்ல நேர்ந்தது. சித்திரைச் செல்வி வழக்கமான இடத்தில் வழக்கமான உடையில் உட்கார்ந்-திருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அந்தப் பிரிவு வேளை, ஆங்கிலப் பாடம் முடிந்தபிறகு அடுத்த வேளை நூலகப் படிப்புக்-கானது. எல்லோரும் நூலகப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்க… சித்திரைச் செல்வி மட்டும் ஏதும் படிக்காது அமர்ந்திருந்தாள்.

அழைத்து விசாரிக்கலாமா? மனதுக்குள் சங்கடம் பரவிற்று. அழவைத்து….மீண்டும் ரணம் கிளற வைப்பது தேவையா? இருந்தும்…
இங்க வாம்மா….

நேத்து நீ போனபிறகுதாம்மா சொன்-னாங்க… உங்க அம்மா சீரியஸா இருக்கறத…உங்க மாமா பையன் அதச் சொல்லிக் கூப்பிட்டிருக்கலாமே…

மெதுவாகத் தொடங்கினேன். நேரடியாக இறப்பு குறித்து இந்தச் சின்னப் பெண்ணிடம் எப்படி விசாரிப்பது என்று தயங்கியபடி.

அவங்களுக்கு அவ்வளவா நாகரிகம் பத்தாது சார்…கான்க்ரீட் கலக்கற வேலைக்குப் போறவங்க… எங்க அம்மா செத்துப் போச்சு சார்…தெரியுமா…?

நான் தலையைக் குனிந்து கொண்டேன். சின்னப் பெண் அழுவதை என்னால் பார்க்க முடியாதது போல உணர்ந்தேன். சிறிது நேர மௌனம். தலை நிமிர…

மூக்கைத் தேய்த்துக் கொண்டு கண்ணீரிண்றி சித்திரைச் செல்வி அமைதியாக இருந்தாள்.

என்ன உடம்புக்கு…? தெரிந்திருந்தாலும் மீண்டும் கேட்டேன். புற்று நோய்…சார்… இதுக்கெல்லாம் மருந்தே கிடையாதா…சார்…எங்கம்மா பாவம்.. அது நல்லா இருந்து நான் பார்த்ததே இல்ல… சார்… வயிறெல்லாம் வீங்கிப் போய்… நடக்க முடியாம… சாப்பிட முடியாம… பேச முடியாம….

அப்பா…என்ன செய்யறாரு…
கட்டிட வேலைதான் சார்… எனக்கு அண்ணன், தம்பி யாருமே இல்ல… நான் ஒரே பொண்ணு மட்டும்தான்…

சார்…அவங்க பட்ட கஷ்டத்துக்கு…. செத்துப் போனதே நல்லது…
நான் அவளுக்கு ஆறுதல் சொல்லத் தயங்க, அவள் எனக்கு ஆறுதல் சொல்வது போல் இருந்தது.
சரி… இன்னிக்கு மூணாவது நாள்தானே… அதுக்குள்ள பள்ளிக்கு வந்திட்டயே… காரியமெல்லாம் முடிஞ்சுதா…?

இன்னிக்குத்தான் சார்… ஆனா… நான் என்ன செய்யப்போறேன்…. நான் படிக்கணும்… ஏன் சார்… காரியம் செய்யாம பள்ளிக்கு வரக்கூடாதா? எனக்கு சுருக் கென்றது.

எங்க அம்மா இறந்து போன சான்றிதழ் வெச்சி அரசாங்கத்துக்கு விண்ணப்பிச்சா எனக்கு கல்லூரிவரைக்கும் இலவசப் படிப்பு கிடைக்குமாமே… நான் படிக்கணும் சார்… தயவு செய்து இதப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லுங்க சார்… நான் பள்ளிக்கு விடுமுறையே போட மாட்டேன்… தினமும் வருவேன்…

தூரத்தில் ஏற்காடு மலைக்குள் மெல்ல விழுந்து கொண்டிருந்தது சூரியன்.
சார்…. கவலைப்படாதீங்க…கண்டிப்பா காலை சூரியன் வரும்… சித்திரைச் செல்வியின் குரல் என் காதுகளில் ஒலித்தது போல் இருந்தது. அவள் அமைதியாக அவளுடைய வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தாள்.

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *