போட்டா போட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 4,547 
 

நுங்கும் நுரையுமாகக் குமிழியிட்டுச் சென்றிருந்த காவிரியின் புதுவெள்ளப் பூரிப்பில் மனம் விட்டு லயித்திருந்த அவள், காற்றில் கலந்துவந்த குழல் ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். நினைத்தபடி முத்தையனைக் காணவில்லை. குணவதிக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. வழக்கமாக வரும் அந்த ஒற்றையடிப் பாதையை மீண்டும் ஒருமுறை நோக்கினாள். செடி மறைவிலிருந்து மெல்ல எழுந்த முத்தையனைக் கண்டவுடன் குணவதிக்குச் சந்தோஷம் எல்லை கடந்தது. தன்னை வழக்கம் போல ஏமாற்றி வேடிக்கை பார்க்கவே இப்படிச் செய்திருக்கிறான் முத்தையன் என்பதை அறிந்த குணவதி, சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க விரும்பாதவள் போல மறுபடியும் அலைபாய்ந்து ஓடிக்கொண்டிருந்த புதுப்பனலின் பரப்பில் கால்களைப் பதித்து விளையாட ஆரம்பித்தாள்.

“ஏலே, குணவதி.”

குழந்தை அக்குரலின் மோகனநாதம் அவளை என்ன செய்ததோ? சற்றுமுன் கொண்ட திட வைராக்கியம் எங்கு ஓடி ஒளிந்ததோ? மெதுவாகத் தலையைத் திருப்பிப் புன்னகை பூத்தாள். தன் எதிரே ஒயிலுடன் நின்று கொண்டிருந்த முத்தையனைப் பார்த்து. ஆனால் மறுவினாடி அவளுடைய மலர்ந்த முகம் குவியக்கண்ட முத்தையன், காரணம் ஒன்றும் விளங்காதவனாய்க் கதிகலங்கினான்.

“குணவதி எம்மேலே கோவமா ஒனக்கு? ஏதுக்கு இப்படித் திடீர்னு ஒன் முகம் மாறிடுச்சு?”

“மச்சான், ஒங்களுக்கு விசயமே தெரியாதாங்காட்டியும்? ஆளு செத்தானா பொளைச்சனாங்கற சேதிகூட இம்பிட்டு வருசமாப் புரியாம இருந்த ஓட்டு வீட்டு மேஸ்திரியாரு மகன் மாரி நேத்திக்கு ரங்கூனிலேருந்து வந்திருக்கானாம். எல்லாங்கிடக்க அம்மாவையும் மத்தியான்னம் ஒரு ஆளு அனுப்பி மேஸ்திரி கூப்பிட்டுருக்காரு. என்ன கதையோ …..?”

‘குணவதி’ என்று மேற்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தான் முத்தையன். அதற்குள் கண்கலங்க நின்று கொண்டிருந்த குணவதியின் வயதான தாயைக் கண்டதும் இருவர் நிலையும் மோசமானது.

“சோடிப் புறா கணக்கா நீங்க ரெண்டு பேரும் என்னைக்கும் இருப்பீங்கன்னு கொண்டிருந்த என் ஆசைக்கு மோசம் வருமின்னு துளி கூட நினைக்கலையே? மேஸ்திரி தன் மகனுக்குத்தான்

ஒன்னைக்கட்டிக்கொடுக்க வேணுமாம். மொறைப் பொண்ணாம். அதேதான் நம் சாதிக்கட்டுப்பாடாம். இப்படி ஒரே மூச்சா என்னென்னமோ சொன்னாரு. மாரிக்கு ஒன்னைக் கண்ணாலம் பண்ணினா நாம்ப தப்பிச்சோமாம். இல்லாட்டி நம்பளை ஒரு கை பார்த்துடுவாராம்….” என்று குணவதியிடம் விம்மலுடன் கூறி முடித்தாள் அவள் தாய்.

முத்தையனுக்கு மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நின்றுகொண்டிருந்த தன் அம்மா போனபிறகு தணிந்த குரலில் ‘மச்சான்’ என்றாள் குணவதி.

“குணவதி நீ கண் கலங்காதே. எதுக்கும் கொடுத்து வைக்க வேணும். அவங்க அவங்க தலையெழுத்தை மாத்திப்போட யாராலேதான் ஏலும்? ஒண்ணுக்கும் உதவாத இந்த ஒண்டியாலே, பாவம் ஓறமொறைக்குள்ளார ஏதுக்கு , வீணாதவசலும் சண்டையும்? நான் ஒண்ணு மாத்திரம் கேட்கிறேன். என்னைப்பத்திய நெனைப்பு மட்டும் மாறாம் உனக்கு இருந்தா அதுவே போதும். மறு பேச்சாடாமல் மாரியைத்தானே கண்ணாலம்….”

வார்த்தைகளை முடிப்பதற்குள் குணவதி இடைமறித்து, “மச்சான் வெந்த புண்ணிலே வேலிடவா வேணும்? இவ்வளவு வருசமாப் பழகியுங் கூடக் குணவதியை நீங்க புரிஞ்சுக்கலையா? மொறப்பொண்ணாமில்லே மொறைப்பொண்ணு, அன்னிக்கு அப்பாரு சாகக் கிடக்கிறப்போ ஒரு உதவி ஒத்தாசை செய்யத் துப்பில்லை. அன்னிக்கு விட்டுப்போன சொந்தம் இப்ப எப்படிப் புதுசா முளைச்சுதாம்? மச்சான், ஒரு யோசனை தோணுது. மூணாம் பேருக்குத் தெரியாம ராவோடு ராவா கண்டிச் சீமைப் பக்கம் ஓடிடலாமே….” என்று பதட்டமாகக் கேட்டாள்.

“குணவதி, அவுங்களுக்குப் பயந்து ஏதுக்கு ஓடணும்? உன் அன்பு எம்மேலே உள்ளவரைக்கும் அதுவே எனக்குப் பத்து ஆளு பலத்தைக் கொடுக்கும்! பார்த்துக்கலாம்” என்று ஆத்திரத்தோடு மொழிந்த முத்தையனைக் கண்டதும் குணவதி ஆச்சரியப்பட்டாள்.

“குணவதி, ஏந்திரு. மஞ்சள் வெய்யல் மறையறதுக்குள்ளே ஒரு ஓட்டம் படகிலே போயிட்டுவரலாம்.”

மறுமலர்ச்சியடைந்தவர்களைப் போன்று குணவதியும் முத்தையனும் படகைத் தள்ளினார்கள். காவேரியின் அன்பணைப்பில் மிதந்தது பரிசல்!
அடுத்த நாள்!

நொந்த மனத்துடன் தெருவில் போய்க்கொண்டிருந்ததான் முத்தையன். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. தெருக்கூத்தில் வரும் ராஜபார்ட் மாதிரி உடையணிந்து குஷாலாக வந்து கொண்டிருந்தான் மேஸ்திரி மகன் மாரி. குணவதிக்குப் போட்டியிடும் அவனைக்கண்ட முத்தையனுக்கு நெஞ்சு படபடத்தது. மேலும் அன்று குணவதியின் தாய் சொன்ன விஷயங்களும் நினைவுக்கு வந்தன.

விவரம் தெரிந்த நாள் முதலாக முத்தையனும் குணவதியும் அன்னியோன்யமாகப் பழகி வந்திருக்கின்றனர். அந்நாள் தொட்டே குணவதி முத்தையனுக்குத்தான் என்று திட்டமிட்டாள் குணவதியின் தாய், தந்தை தாயற்ற தன்பேரில் தனித்த பரிவு காட்டும் அக்குடும்பத்தில் முத்தையனுக்கு இனம் தெரியாத பாசம் ஏற்பட்டதில் வியப்பில்லைதான்.

காவேரியை அடுத்திருந்தது குடியிருப்பு. அதற்கெல்லாம் மேஸ்திரிதான் தலைக்கட்டு. கொஞ்சம் பசை யான பேர்வழி. பணப் புழக்கம் குலுங்கும் இடம். அப்புறம் கேட்பானேன்? மேஸ்திரி மகன் மாரி நாலைந்து வருஷங்களுக்கு முன் பர்மா போயிருந்தான். அவனைப்பற்றி அன்று வரை யாதொரு தகவலும் கிடைக்காததால் மேஸ்திரியும் குணவதி விஷயத்தில் ஒன்றும் குறுக்கிடவில்லை. ஆனால் குணவதியும் முத்தையனும் என்றோ கைபிடித்த தம்பதிகளாக வேண்டியவர்கள். அதுவேதான் வயதான குணவதியின் அம்மா கண்டுவந்த கனவும் ஆகும். எதற்கும் காலமும் வேளையும் கூடிவரவேண்டாமா?

“முத்து அண்ணே ”

“வா மாரி, இப்பத்தான் ஒன்னை நெனச்சேன், ஆயுசு நூறு” என்று மேல் பூச்சாக ஏதோ பேசினான் முத்தையன்.

“குணவதியை எம்மகனுக்குக் கட்டிக்கொடுக்காட்டி அப்பறம் ஒரு கை பார்த்துக்கலாம்” என்று மேஸ்திரி எச்சரித்த விஷயமும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

“அண்ணே , ஒன்னைக் கண்டு சேதி பேசத்தான் ஓடியாந்தேன். தேடிப்போன மூலிகை காலிலே சிக்கின கதையா நீயே குறுக்கே வந்துப்புட்டெ, விசயம் அல்லாம் புரிஞ்சுக்கிட்டேன். அத்தைமவள், குணவதியைக் கட்டிக்க வேண்டியது நான். ஆனா அதுக்குப் போட்டியா நீ இருக்கே. இப்ப எல்லோருமாக் கூடி ஒரு முடிவு கட்டியிருக்கோம். அதாவது நம்ப காவேரியிலே கோடி முக்கம் வரைக்கும் நாம்ப ரெண்டு பேரும் பரிசல் ஒட்டி அதிலே யாரு முதலிலே வந்து செயிக்கிறாங்களோ அவனுக்குத்தான் குணவதி. நல்லா யோசிச்சு முடிவு சொல்லிப்பிடு. முத்து, அப்பறமாப் பேச்சை மாத்தப்படாது.”

சாதுரியமாகப் பேசிய மாரியின் வார்த்தைகளில் முத்தையனுக்கு நம்பிக்கை பிறந்தது. அவன் சொல்லும் முடிவும் நியாயமானதாகவே பட்டது. உடனே சம்மதம் தெரிவித்தான்.

“என்னிக்குப் பந்தயம் வச்சுக்கிடலாம்?” என்று கேட்டான் முத்தையன்.

“அடுத்த கிளமை இன்னேரமா” என்று பதில் கொடுத்தான் மாரி.

மாரியை அனுப்பிவிட்டுத் திரும்பினான். வழியில் குணவதி குதூகலத்துடன் வந்து கொண்டிருந்தாள். இடுப்பில் கூடையுடன்.

“குணவதி, கூடையெல்லாம் பெலமா இருக்கே புதுசா” வேடிக்கையாக வினவினான் முத்தையன்.

“ஆமா மச்சான், ஒங்க அதிர்ஷ்டம் பெலமா இருக்கணுமேன்னு அரசமரத்துப் பிள்ளையாருக்கு நெதம் பூச்சாத்தரேன்னு வேண்டிக்கிட்டிருக்கேன்.”

“நீ சொல்றது ஏதும் புரியலையே”

“மச்சான், ஒங்களுக்குத் தெரியாதா? அந்த நாளிலே சனக மவராசா தம் வில்லை ஒடிக்கறவுங்களுக்கத்தான் தம்மவ சீதையைக் கொடுக்கிறதாச் சொன்னாருன்னு கதை கேட்டிருக்கேன். இப்ப என்னாடான்னா பரிசல் பந்தயம்”

“இப்பல்ல புரியுது. குணவதி கொஞ்ச முந்தித்தான் மாரிப்பயவந்து சேதி பூராவையும் சொன்னான். நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்றான் முத்தையன் சன்னக் குரலில்.

“மச்சான் கண்ணாலம் கட்டிக்கிறதிலே எனக்கும் பாத்தியம் இருக்கு. ஒங்களை நெனைச்ச மனசு இனிக் கனாவிலே கூட அந்த பயமவன் மாரியை நெனைக்காது. அப்படியிருக்க என்னத்துக்குப் பந்தயமும் மண்ணாங்கட்டியும், மாரிப் பய என்னமோ சூது பண்ணி”

“உஸ், சத்தம் போடாதே குணவதி. அவங்க ஒருவளிக்குத் தோதா வர்றபோது நாமும் கொஞ்சம் விட்டுக்கொடுக்கத்தான் வேணுமாக்கும். நீ ஒன்னுக்கும் கவலைப்படாதே. இப்பச் சொல்றேன்னு பாரு. கடைசிவரை நீ மட்டும் என் குணவதிதான்” என்றான் முத்தையன்.

குணவதிக்கு முத்தையன் கூறின வார்த்தைகள் தெம்பை ஊட்டின. அவள் கன்னங்களில் நாணம் தடம் பதிந்தது. சூரியனின் இளங்கதிர்கள் அவள் வதனத்தைப் பின்னும் சோபிக்கச் செய்தன.

அக்காட்சியில் தன்னை மறந்தான் முத்தையன்.

அந்தி வானில் விந்தைக் கோளங்கள் மலர்ந்திருந்தன. அன்று தான் முத்தையனும் மாரியும் ஒப்பந்தம் செய்து கொண்ட பந்தயநாள். காவேரிக் கரையில் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்தனர். குணவதி படிக்கட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். நாலைந்து நாட்களுக்கு முன்னிருந்த தைரியம் அவங்களுக்குத் தற்சமயம் இல்லை. எப்படியும் வெற்றிதன் மச்சான் முத்தையாவுக்குத்தான் என்பது நிச்சயமானாலும், ஒருக்கால் கெட்ட காலமாக மாரி பக்கம் அதிர்ஷ்டம் திரும்பிவிட்டால் தன் கதி என்னாகும் என்பதை நினைத்துப்பார்த்த அவளுக்கு அதிர்ச்சி உண்டாயிற்று. காதல் பரீட்சை அப்புறம் விஷப்பரிட்சையாகிவிடுமோ என்று மனம் நொந்தாள். இத்தைகைய இக்கட்டான நிலையில் கடவுள் பேரில் பாரத்தைப் போட்டுக் காணிக்கை வேண்டிக்கொண்டாள் குணவதி.

கண் மூடிக் கண் திறக்கும் போதில் கூட்டத்தில் அமைதி நிலவியது. முத்தையனைக் கண்டவுடன் ஓடிவந்து தைரிய மூட்டினாள் குணவதி. புத்துயிர் பெற்ற முத்தையன் சுதாரிப்புடன் படகில் தாவினான். அதே சமயம் மாரியும் ஜாடையாகக் குணவதியை நிமிர்ந்து நோக்கினான். ஆனால் அவள் இவனைச் சட்டை செய்யாமல் முகத்தை அப்பால் திருப்பிவிட்டாள். எதிர்பாராத ஏமாற்றத்தால் வேதனையடைந்த மாரி படகில் அமர்ந்தான். இரண்டுபேரும் மறுகணம் துடுப்பைத் தள்ள ஆரம்பித்தனர். ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் படகுகள் நீரைக் கிழித்தோடின. அக்கரை மூலையில் எல்லையிடப்பட்டிருந்தது கொடி ஒன்று.

அந்த வட்டாரத்தில் படகு ஒட்டுவதில் முத்தையன் ரொம்பவும் அனுபவம் பெற்றவன். ஆதலால் எவ்விதத்திலும் மாரியைத் தோற்கடித்துவிடலாமென்ற நினைப்பு. வரவர அவனுக்கு ஷோக்கு பிறந்தது. ஆனால் மாரியின் படகும் சளைக்கவில்லை.

கொஞ்ச நாழிகை சென்றது. எல்லையைத் தொட்டுத் திரும்பிய படகுகள் இரண்டில் ஒன்று மட்டுமே கண் பார்வையில் தெரிந்தது. ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். குணவதி கண்களைத் தீட்டிக்கொண்டு ஆதுரம் ததும்ப உற்று நோக்கினாள். அவளுக்கு அக்காட்சி உயிரையே மாய்த்துவிடும் போலாகிவிட்டது. ‘யாரு மாரிப் பயலா? என்று அலறினாள் குணவதி.

திரும்பும் படகு கட்டாயம் முத்தையனுடையதாகவே இருக்கும் என்று எண்ணிய அவள், மாரியின் படகு வந்து நின்றதைக் கரையில் ஓடிவந்து பார்த்தாள். ‘அப்படின்னா என் மச்சான்’ என்று மனதில் கேட்டுக்கொண்டாள்! மாரிதோளில் முத்தையனை அணைத்து வருவதைக் கண்டாள். ‘மச்சான்’ என்று அலறி விழுந்தாள். முத்தையனுக்குச் சுவாசம் மிகவும் லேசாக வந்து கொண்டிருந்தது. எல்லாம் ஏதோ சூழ்ச்சி என்பது அப்போதுதான் குணவதிக்குப் புலனாயிற்று.

“குணவதி, ரெண்டு பேரும் முக்கத்தைத் தாண்டி திரும்பையிலே, முத்து படகு ஓட்டையாப் போச்சு. தண்ணி படகிலே ரொம்பினதைக் கூடக் கவனிக்காமத் திரும்பவும் படகைத் தள்ளி முந்த ஆரம்பிச்சுச்சு. திடீர்னு அப்பறம் பரிசல் தண்ணியிலே கவிழ்ந்து போச்சு. தண்ணியிலே தத்தளிச்ச முத்தையனை நான் கஷ்டப்பட்டுத் தூக்கி எம்படகிலே கொண்டாந்தேன். எதுக்கும் தலை எழுத்துன்னு ஒன்னு இருக்கில்லே. நான் சொல்றதைக் கேளு, இதிலேருந்து புரியலையா நீ எனக்கே தான் பூமியிலே பொறந்தவளுன்னு….” என்று சொல்லி மெல்ல நெருங்கினான் மாரி. அவன் பார்வையில் வெற்றியின் மிடுக்கு!

இமைப் பொழுதிற்குள் எவ்வளவு கோர சம்பவம் நிகழ்ந்துவிட்டது? பித்துப் பிடித்தவள் போலான குணவதி மற்றும் ஓர் தவணை முத்தையனைப் பார்த்தாள். பேசவும் திராணியிழந்து விழுந்து கிடந்த முத்தையனைக் காண அவளுக்கு அழுகை பீறிட்டது. கடைசியில் எல்லாம் கனவு தானா என்றெண்ணிய அவளுக்கு ஓர் நினைவு மின் வெட்டிற்று.

“மாரி முத்தையன் மேலே உனக்கிருந்த வஞ்சம் தீர்ந்து போச்சில்லையா? ஆனதாலே ஒம்மேலே எனக்குள்ள பழியைத் தீர்த்துவிட வேண்டியதுதான் பாக்கி. பாவிப்பயல்…” என்று வெறிப்பிடித்தவள் போலக் கர்ஜித்த குணவதி ஒரே மூச்சில் மாரியைப் பிடித்துத் தள்ளினாள். மாரியின் தலை கரையிலுள்ள படிக்கல்லில் படாரென்று மோதியது. அவ்வளவுதான். ரத்தம் பீறிட்டது. பிறகு முத்தையனைத் தொட்டுப் பார்த்தாள். உடல் ஜில்லிட்டிருந்தது. அதே சமயம் அமைதியுடன் ஓடிய ஆற்றில் சரண் புகுந்தாள் குணவதி.

“குணவதி, குணவதி”

தொடர்ந்து கேட்ட குரலைக் கண்டு விழித்தெழுந்தாள், கனவு கண்டு விழிப்பவள் போல.

‘சந்தேகமில்லை. நிச்சயமாக மச்சானேதான் இப்படிக் குணவதி தன்னுள் முனகினாள். சற்று முன் கண்டது பூராவும் வெறும் கனவு என்பது அப்பொழுதான் அவளுக்குப் பிடிப்பட்டது.

“மச்சான்!”

ஆச்சரியம் தொனிக்க ஆர்வத்துடன் அலட்டினான்.

“குணவதி, அன்னிக்கு நானும் மாரியும் பந்தயம் வச்சிக்கிறதா ஒப்பந்தம் கட்டினோமில்லையா? அதெல்லாம் அந்தப் பயமவன் மாரி செஞ்சிருக்கிற கபடம். இப்பத்தான் ஒவ்வொண்ணாத் துப்பு துலங்குது; விடிஞ்சதும் தானே படகுப் பந்தயம். அப்ப நான் படகு ஓட்டத் தொடங்கினதும் என்னை அப்படியே நடுத் தண்ணியிலேயே படகைக் கவிழ்த்துத் தள்ளி ஆளை முடிச்சு’ ப்பிடத் திட்டம் போட்டிருக்கானாம்; அப்புறம் ஒன்னை வலுக்கட்டாயமாக் கண்ணாலம் பண்ணிக்கிற முடிவாம்…” என்று நிறுத்தி மேற்கொண்டு அவள் காதில் ஏதோ மெதுவாகக் கூறினான் முத்தையன். குணவதிக்கு முகமலர்ச்சி ஏற்பட்டது. தான் கண்ட பொல்லாத சொப்பனத்துக்கும் இப்போது மச்சான் சொல்லும் சமாச்சாரத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போலத் தோன்றிற்று அவளுக்கு.

“சாமி கிருபையாமே இந்த மட்டும் உயிர் தப்பினது புண்ணியந்தான்” என்று நினைத்துக்கொண்டாள் குணவதி.

அடுத்த நாள் உச்சிப்பொழுது.

அன்றுதான் குறிப்பிட்டபடி முத்தையனும் மாரியும் பந்தயம் வைத்துக்கொண்ட தினம்!

வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த மாரி குணவதியின் குடிசையின் முன் வந்து அலட்டினான். குணவதி வரவில்லை . அதற்குப் பதில் அவள் தாய் தள்ளாடிய வண்ணம் வெளியே வந்தாள்.

“அத்தை குணவதி எங்கே?” என்று கேட்டான் மாரி.

கிழிவிக்கு ஆத்திரம் பொங்கியது. கோபம் ரெளத்திரகாரமாக வந்தது.

“மாரி, குணவதியையா தேடறே அம்பிட்டுப் பாசத்தோட ; போதும்; நீயும் ஒங்க அப்பனும் எங்களைச் சாதிச்சது, ஒங்க வஞ்சகமும் சூதும் எங்களுக்குப் புரியாம இல்லே ஆமா! எதுக்கும் மேலே கடவுள் இருக்காரே… ஊம்… பந்தயமின்னு சாக்குப் பண்ணிட்டு அந்தப் புள்ளே முத்தையனைக் கொன்னுபுடச் செஞ்சிருக்கிற சூழ்ச்சி வெளங்கிச்சு…”

“அத்தை, நம்ம குல தெய்வத்து மேலே ஆணையாச் சொல்றேன். இப்பச் சொல்றதெல்லாம் சாடா நெசம். என்னமோ குணவதி மேலே இருந்த பிரியத்திலே …. அதை எப்படியும் கட்டிக்கிடணும்னு மனசிலே கொண்ட ஆசையாலே என்னமோ பாவம் செஞ்சுப்புட இருந்தேன். ஆனா தெய்வம் சமயத்திலே எனக்குக் கனவுலே சோதனை காட்டிடுச்சு. என் கண்ணும் திறந்து பூட்டுது. ஆனா அப்பாருக்கு இந்தச் சேதி தெரியவே தெரியாது. மேலும் குணவதி முத்தையனைக் கட்டிக்காமப் போனா கட்டாயம் ஆத்திலே விழுந்து மாண்டு போயிடறதா ஊரிலே சொல்லியிருக்குதாம். அதுக்கு முத்தையன் மேலே இவ்வளவு உசிரு இருக்குமின்னு நெனைக்கலே. அப்படி உள்ளதை வலுக்கட்டாயப் படுத்தக் கட்டிக்க நான் நினைச்சது எம்புட்டு முட்டாள் தனமிங்கறது இப்பத்தான் புரியுது அத்தை. ஏன் இப்படி வெயிலிலே ஓடி வந்தேன் தெரியுமா? குணவதிக்கும் முத்தையனுக்கும் நாங்களே இருந்து கண்ணாலம் கட்டி வைக்கிறோம். அப்பத்தான் என் மனசு அடங்கும். தணவதி எங்க…?” என்று கேட்டான் மாரி ஆர்வத்துடன்.

இன்னும் அவன் பேச்சில் நம்பிக்கை விழவில்லை கிழவிக்கு. எப்படி ஏற்படும் நம்பிக்கை?

“மாரி வாய் கடுக்கப் பேசாதே. ஒங்க பணத்துக்கும் காசுக்கும் நாங்க ஏழைங்க, பயப்படத்தானே வேண்டியிருக்குது. இனி எனக்குக் கவலையில்லை. எப்படியும் குணவதியும் முத்தையனும் பொளைச்சுப்பூடுங்க. அதுக ரெண்டுபேரும் இதுக்குள்ளே கண்டிச் சீமைக்குக் கப்பல் ஏறியிருப்பாங்க…”

கண்கலங்க, ஆனால் குரலில் கண்டிப்புத் தொனிக்கக் கிழவி சொன்னதைக் கேட்டான் மாரி. அவனுக்கு உலகமே சுழன்றது. தன் நினைவு வந்ததும் விம்மிய உள்ளத்துடன் முகத்திலே தோல்வியின் சின்னம் தோன்ற வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான் மாரி!
.
– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *