ஒரு பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 881 
 
 

“உள்ளே நகருங்க சார்.. ஏறினவங்க எல்லாரும் படியிலேயே நின்னுகிட்டா மத்தவங்க எப்படி ஏர்றது”

நடத்துனரின் குரலில் தெரிந்த கோபம் யாரையும் பாதித்த மாதிரி தெரியவில்லை. அவரவர் நின்ற இடத்திலேயே லேசாக அசைந்து கொடுத்துக் கொண்டார்கள்.

“டிக்கட்.. டிக்கட்”

“சில்லறையாக் கொடுங்க.. எல்லாரும் பத்து ரூபாயை நீட்டினா?”

எனக்கு கடைசி ஸ்டாப். ஏறியதோ பஸ் ஸ்டாண்டிலேயே. வசதியாய் ஒரு சீட் பிடித்து அமர்ந்து விட்டேன். ஆறு ரூபாய் சில்லறையாய்க் கொடுத்து டிக்கட் வாங்கினேன். நடத்துனரிடம் அதற்காக சர்டிபிகேட் கிடைக்கவில்லை. ஒரு புன்முறுவல் கூட கிடையாது. பத்துரூபாய் கொடுத்தவர் டிக்கட் வாங்கிக் கொண்டு மீதிக்கு கை நீட்டினார்.

“ஒரு ரூபாய் கொடுத்துட்டு அஞ்சு ரூபாய் வாங்கிக்குங்க”

“சில்லறை இல்ல”

“அப்ப வெயிட் பண்ணுங்க.. சேஞ்ஜ் வந்தா தரேன்”

நடத்துனர் முன்னால் போய் விட்டார்.சினிமா பாட்டு அலறியது. அது ஏன் எல்லாப் பேருந்துகளிலும் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் மனதைக் கெடுக்கும் வார்த்தைகளோடு டப்பாங்குத்து இசையில் பாட்டைப் போடுகிறார்களோ.

என் அருகில் அமர்ந்திருந்தவன் கையால் தாளம் போட்டுக் கொண்டு வந்தான். முன் சீட்டுக் காரருக்கு கைபேசியில் அழைப்பு வர ஹலோ ஹலோ என்று அலறினார்.

“பஸ்ல வந்துகிட்டிருக்கேன்.. இறங்கிட்டு பேசவா”

செல்லை அணைத்துவிட்டு முனகினார்.

“பேச்சே கேட்கலே.. என்ன சொல்ல வந்தானோ..”

“டவுனுக்கு டிக்கட் கொடுங்க”

நடத்துநர் விசில் அடித்தார்.

“போர்டைப் பார்த்து ஏறமாட்டீங்களா.. இறங்குய்யா”

அடுத்த ஸ்டாப்பில் பத்து பேர் ஒரே குடும்பமாய் ஏறினார்கள்.

“ஏய் புள்ளைய புடிடி..”

“டிக்கட்.. “

“பத்து ஜங்ஷன் கொடுங்க”

“அந்தப் பையனுக்கு எடுத்தீங்களா”

“அவனுக்கும் சேர்த்துத்தான்”

முன்சீட்டு செல்காரர் இறங்கிப் போக இப்போது எனக்கு முன் சீட்டில் புதிதாய் கல்யாணம் ஆன ஜோடி.

“உன் தம்பியும் கூட வந்திருவான்னு நினைச்சேன்”

“வந்தா நல்லா இருந்திருக்கும்”

“நீங்க ரெண்டு பேரும் போங்கன்னு நான் வீட்டுல இருந்திருப்பேன்..”

“அப்பவே சொல்லியிருந்தா அவனைக் கூட்டி வந்திருப்பேன்ல”

“என்ன.. விளையாடுறியா”

“யாரு விளையாடறது..நீங்களா.. நானா”

பட்பட்டென்று வார்த்தைகள். இருவரிடமும் யார் சீண்டலில் முந்துவது என்கிற போட்டி. கைக்குழந்தையோடு ஒருத்தி வர முன் சீட்டுக்காரன் புது மனைவியை விட்டுப் பிரிய மனசில்லாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். என் அருகில் இருந்தவன் எழுந்திருக்க கைக்குழந்தைக்காரி என் அருகில் அமர்ந்தாள்.அது என் சட்டைப்பையை இழுத்தது.

“ஏய்.. தொடாதே..”

மார்க்கட் பகுதியைத் தாண்டிப் போகும் போது மிளகாய் நெடி கமறியது.மேம்பாலத்தின் மீது போகும் போது காற்று வேகமாய் முகத்தில் அறைந்தது. பேக்கரியைத் தாண்டும்போது கேக் வாசனை. கைக்குழந்தைக்காரி இறங்கிப் போக நடத்துனர் என் சீட்டுக்கு அருகில் வந்து எட்டிப் பார்த்தார்.

“சீக்கிரம் இறங்குங்க..”

“இறங்கறதுக்குள்ள என்ன அவுதி..”

யாரோ ஒரு பெண்மணி கத்திக் கொண்டே போனாள்.ஒன்றேகால் மணி நேரம் பயணம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது. சோழன் நகர் பஸ் நிறுத்தம். கடைசி ஸ்டாப். எல்லோரும் இறங்கிப் போக ஓட்டுனர் இறங்கி சிகரட் பற்ற வைத்தார். நடத்துநர் எதிர் டீக்கடைக்குள் போனார். நடத்துனர் மேலே வந்ததும் என்னைப் பார்த்தார்.

“என்ன இறங்கலியா”

நான் முன்பு ஏறிய பஸ் ஸ்டாப்பைச் சொல்லி மறுபடி டிக்கட் கேட்டேன்.இந்த முறையும் சில்லறையாகக் கொடுத்தேன்.என்னை ஒரு மாதிரி விழித்துப் பார்த்துவிட்டு டிக்கட் கிழித்து கொடுத்தார். பதினைந்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் பஸ் வந்த ரூட்டிலேயே விரைய ஆரம்பித்தது.

இப்போது வேறு மாதிரியான பயணிகள். சம்பாஷணைகள். இப்போது நடத்துனர் என்னைக் கடக்கும்போதெல்லாம் ஒரு பார்வையை வீசிவிட்டுப் போனார்.

மறுபடி மேம்பாலம்.. மிளகாய் நெடி.. கேக் வாசனை.. சில்லறை சண்டை.. ஆற்றுப்பாலம்.. ஏறிய இடத்திற்கே வந்து நின்றது.

நடத்துனர் என் அருகில் வந்தார்.

“இறங்கப் போறீங்களா.. டிக்கட் போடவா” என்றார் பாதி கேலியாக.

சிரித்தேன் மனம் விட்டு. அதே நேரம் என் தம்பி பஸ்ஸுக்குள் வந்தான்.

“போலாமா”

“ம்”

கைலாகு கொடுத்து குழந்தையைப் போல அள்ளிக் கொண்டான். கீழே வேட்டி காற்றில் ஆடியது. துவண்டு போன இரு கால்கள் நிற்கும் பலமிழந்து தொய்ந்திருந்தன.என்னை அவன் ஆட்டோவில் ஏற்றி அமர வைத்தபோது நடத்துனர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்த அதிர்ச்சி.

“வந்து.. நான்..”

அவர் தோளைத் தட்டினேன்.

“எனக்கு வீட்டுலேயே அடைஞ்சு கிடக்க முடியல.. அதனால எப்பவாச்சும் ஒரு ரவுண்டு இப்படி.. தேங்க்ஸ்..”

ஆட்டோ கிளம்பியபோது நடத்துனர் கையாட்டுவது தெரிந்தது. பதிலுக்கு நானும் புன்முறுவலுடன் கையாட்டினேன்.

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *