கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 3,700 
 

ஈஸ்வரி

சுஜா சிறு பூவாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள். இமைகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து புன்னகை மலரை உதிர்க்கின்றன. ..இனிய கனவுகள் காண்கிறாள் போலும் …

சுஜா …பத்துவயதுதான் ஆகிறது…சிறுமிதான் . ஆனாலும் வளர்த்தியில் அவள் அப்பாவைக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் என்னவோ மிகவும் விரைவாகப் பூத்துவிட்டாள். அங்கங்களில் திரட்சியும் பூரிப்பும் கொண்டபோதே ஈஸ்வரிக்கு விளங்கிவிட்டது. இவள் விரைவாகக் குந்திவிடுவாள் என்று.மகளின் கூந்தலை கோதுகிறாள் .என்ன அவசரமோ ..இந்த இயற்கைக்கு…?

ஈஸ்வரியின் மனம் குளிர்ந்து புன்னகையாய் மலர்கிறது .அவள் தன் நினைவுகளில் ஆழ்ந்து போகிறாள்

ஈசவரி பதினைந்து வயதில்தான் பருவமடைந்தாள்.

இவள் கந்தையாவுக்கும் கனகத்துக்கும் பிறந்த ஏழு பிள்ளைகளில் ஒருத்தி..நாலு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் பிறகு பிறந்தவள். இவள் பிறந்தபோது “இனியும் பெண்பிள்ளை பிறந்து விட்டால்…?” கந்தையா வெறுத்துப் போனார்.அதனால் இவளுடன் போதும் என்ற முடிவோடு இவளுக்கு மங்களம் எனப் பெயர் வைத்தார். கனகத்தின் தம்பி கணேசன் கச்சேரியில் பிறப்புப் பதிவுசெய்யப் போயிருந்தார். அவர் என்னநினைத்தாரோ என்னவோ மங்களேஸ்வரி என்று பெயர் வைத்துவிட்டார்.

கந்தையா “மங்களம்” என்ற பெயர் வைத்த முகூர்த்த்மோ என்னவோ அதற்குப் பிறகு கனகம் கருவுறவில்லை.

மங்களேஸ்வரியை கந்தையா உட்பட எல்லோரும் மங்களம் என்றே அழைத்தார்கள்.. ..ஓரளவு பருவம் வந்து தனது பெயரின் காரணகாரியத்தை அறிந்தபோது மங்களேஸ்வரிக்கு தனது பெயர்குறித்து இனம் புரியாத வருதம் உண்டானது. அதன்பின் தனது பெற்றோரையும் சகோதரரையும் மங்களம் என்று கூப்பிட வேண்டாம் ஈஸ்வரி என்று கூப்பிடுமாறு அவள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டிருக்கிறாள். கந்தையா அடியோடு மறுத்துவிட்டார், மற்றவர்களாலும் பழக்கதோசத்தாலோ என்னமோ மாற்றிக் கூப்பிட முடியவில்லை. ஆனால் பள்ளித்தோழிகளும் இப்பொழுது கணவரும் ஈஸ்வரி என்றே அழைக்கும் படி பார்த்துக்கொண்டாள்.

நாயன்மார்கட்டுச் சந்தியில் கந்தையா ஒரு சிறிய மலிகைக் கடை வைத்திருந்தார் . கனகம் அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளருக்கு இடியப்பம் ,அப்பம் ,தோசை, பிட்டு முதலான பல்காரங்களையும் முருக்கு தட்டுவடை முதலான நொறுக்குத்தீன்களையும் செய்து கொடுப்பா. இந்தக் கடையே ஏழுபிள்ளைகள் தாய் ,தகப்பன், கந்தையாவின் தாய் எனப் பத்துப் பேர் கொண்ட அவர்களது குடும்பத்துக்கு வருவாய் தேடித்தரும் ஒரே ஆதாரமாக இருந்தது.

கனகம் தன் பிள்ளைகளைப் பசிகிடக்க விட்டதில்லை . தன் கைத்திறத்தால் சுவையாகச் சாப்பாடும் செய்து கொடுத்துவிடுவா. ஆனாலும் கோதுமை மாவையும் கூப்பன் அரிசியையும் வைத்து அவவால் சத்தான சாப்பாட்டை குடுத்துவிடவாமுடியும்?. கிடைக்கும் சில நல்ல உணவும் கந்தையாவுக்கும் இரண்டு பொடியங்களுக்கும் போய்விட கனகத்தோடு சேர்ந்து ஐந்து பெண்பிள்ளைகளும் கிடைப்பதைப் பகிர்ந்து சாப்பிடவேண்டியதுதான். அதனால் எந்த டயற்றும் இல்லாமலே அவர்கள் கொடி அழகிகளாக வலம்வந்தார்கள் அதிலும் கடைக்குட்டியான ஈஸ்வரியோ எலும்பும் தோலுமாய் காணப்பட்டாள்.

ஊர்பெடியள் அவள் வில்லங்கப்பட்டு சைக்கிள் உளக்கிப்போகும்போது “பலத்து ஊதுங்கடா சருகு பறக்கட்டும்”

என்ப்பகிடிபண்ணும் போது அவளுக்கு கொபம் ஒருபுறமும் அவமானம் மறு புறமுமாய் முகம் சிவந்து கண்ணீர் எட்டிப் பார்க்கும்.

ஈஸ்வரிக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.வகுப்புத் தோழிகள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய் பருவமடைந்ததும் அவர்கள் பெற்றோர் தத்தமது தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு சடங்கு செய்ததும் , பாடசாலைக்கு வரும் பொழுது கலர் கலராய் போட்டோக்களை பெரிய அல்பங்களில் கொண்டுவந்து காட்டியதும்…அனால் அவள் மட்டும் பூப்படையாது மொட்டைமரமாக இருப்பதுவும் …….அவளுக்கு மிகுந்த வேதனையை அப்பொழுது தந்தது. தான் பூப்படைந்தால் தனக்கும் பெரியளவில் சாமத்திய சடங்கு செய்ய வேண்டும் என அவள் கனவு கண்டாள். பட்டுச்சேலை சரசரக்க ஜடைஅலங்கரங்களோடு தான் வெட்த்துடன் மணவறையில் அமர்ந்திருக்க அம்மா அப்பா உட்பட எல்லோரும் பெருமையாய் தன்னைபார்பதாக..அவள் கற்பனை விரிவடையும்.

பெரியக்காவுக்கு மட்டும் மிக நெருங்கிய உறவுகளோடும் அயல் வீட்டுக்காரரோடும் சடங்கு நடந்தது. அந்தக் கொண்டாட்டத்தின்போது ஈஸ்வரிக்கு ஐந்தோஆறோதான் வயது. அதன் ஞாபகம் நிழலாய் அவளுக்கு தோன்றும்.

ஆனால் மற்ற அக்காக்கள் சாமத்தியப் பட்டபோது மாமி தலைக்கு தண்னி வாத்ததோடும் . மாமியும் அப்பம்மாவும் செர்ந்து கழிப்புக் கழித்ததோடும் சடங்கு முடிக்கப்பட்டதற்கான காரணம் தங்கள் குடும்பப் பொருளாதாரமே என்று அவள் நினைத்திருக்கிறாள்.

“ஆனாலும் தான் கடைசிப்பிள்ளை எண்டதால அப்பா எப்படியும் தனக்கு சடங்கு செய்வார்” என்றும் அவள் நம்பியிருந்தாள்.

அவள் பூப்படைந்த செய்தியை தனது தாய்க்கு சொன்ன போது அவவின் முகம் இருண்டு போனது இன்று நினைத்தால் கூட அவள் மனதை எதோ செய்தது.

அண்ணன் ராசன் மட்டும் அப்பொழுது ஜேர்மனியில் அகதிகள் தஞ்சம் கோரி காம்பில் இருந்தான். அவனிடமிருந்து ஒரு சதமும் வருவதற்கில்லை-சின்னண்ணன் இயக்கத்துக்கு போய் விட்டான் , ஒன்றின் பின் ஒன்றாக வளர்ந்து நிற்கும் நான்கு குமருகளை கரைசேர்க்க வழியில்லையே என்று கந்தையா புலம்பிக்கொண்டிருந்தார் . பெரியக்காவுக்கு இருபத்தைந்துமுடிந்து இருபத்தாறாகிக் கொண்டிருந்தது. அவவுக்கு சம்பந்தம் பார்த்துக்கொண்டிருந்தார் கந்தையா.. ஒன்று ரெண்டு இடங்களில் குறிப்பு பொருந்திவந்திருந்தது. ஆனாலும் சீதனக் குறைவால் மட்டுமே இடங்கள் தள்ளிப் போய் கொண்டிருந்தன என ஈஸ்வரி நினைத்துக்கொண்டிருந்தாள்.

“நாலு குமருகள் எண்டே சம்பந்தம் பேச வாறாங்கள் இல்ல.இதுக்க நீயும்…” கனகம் தன் தவறை உணர்ந்ததாவோ என்னவோ வார்த்தைகளை முடிக்காமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறா…

ஈஸ்வரி தன்னுள் ஒடுங்கிப் போகிறாள். தான் பிறந்தது முதல் பிழை அதுவும் பெண்ணாகப் பிறந்தது அதனிலும் பிழை என அந்தப் பொழுதில் குமுறிவரும் அழுகையோடு நினைத்துக் கொண்டாள். அவள் கனவுகளும் ஆசைகளும் அவளது நெஞ்சத்தின் ஆழத்தில் புதைந்துபோயின.

ஒரு நீண்ட பெருமூச்சு ஈஸ்வரியிடம் தோன்றி மறைகிறது.

“பவியிண்ட சாமத்தியத்த தான் செய்ய முடியாமல் போட்டுது. சுஜாத்தாவுக்காவது சிறப்பாகச் செய்ய வேணும்”.

மனதில் தீர்மானித்தவளாய் மகளின் அறையைவிட்டு வெளியேறுகிறாள்.

செந்தில்

புள்ளிமான்போல துள்ளி ஓடும் மகளின் அழகை இரசிக்கிறான் செந்தில். ஆனாலும்…

“சுஜா இன்னும் சின்னப்பிள்ளையில்லையே…”

“இனி இவள் கவனமா இருக்க வேணும்…இவளுக்கு நல்லது கெட்டத சொல்லிக் கொடுக்க வேணும் . இது லண்டன் இங்க எங்கட ஆக்களோட எப்படி பழகவேணும்.பள்ளியில வெளியில வெள்ளக்காரப் பெடி பெட்டையளோட எப்படி நடக்கவேணுமெண்டும் சொல்லவேணும்”

ஒரு தந்தைக்குரிய பொறுப்புடன் தான் சிந்திப்பதாகத் தன்னைதானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான் செந்தில்.

இத்தாலியக் குடியுரிமைக்காக்க் காத்திருந்து அதுகிடைத்தவுடன் லண்டனில் குடியேறி எட்டு வருடங்கள் ஓடிவிட்டன.

செந்தில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தபோதே நாட்டுப் பிரச்சினைகளால் இத்தாலிக்கு வந்தவன். தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளைகள் நன்றாகப் படிக்கவெண்டும் என்ற எண்ணம் மட்டுமல்லாமல் ஆங்கில மூலம் கல்வி கற்பதே சரியானது .கௌரவமானது என்ற எண்ணத்தாலும் லண்டனில் குடியேறினான்.

லண்டனில் குடியேறிய புதிதில் பொருளாதார நெருக்கடிகளையும் அதனால் தனது சொந்தங்களுக்குள் கூட அவமானங்கள் பலவற்றையும் சந்திக்க நேரிட்டது.. நெருங்கிய உறவினர்கள் இவனோடு உறவு கொண்டாடினால் உதவிகள் செய்ய வேண்டும் என்பதற்காகவே விலகியிருந்தார்கள் .தங்களது நல்லது கெட்டதற்குக் கூட இவனை அவர்கள் அழைப்பதில்லை.

இவனுக்கோ இவனது மனைவி ஈஸ்வரிக்கோ ஆங்கில அறிவு மிகக் குறைவாகவே இருந்தது. இந் நிலையில் பவித்திராவையும் சுஜாத்தாவையும் பாடசாலையில் சேர்ப்பதற்கும் உரிய பதிவுகளை மேற்கொண்டு benefits பெறுவதற்கும் ஆங்கில அறிவும் இங்கிலாந்து நடைமுறைகள் தெரிந்தவருமான ஒருவரின் துணை அவனுக்கு மிக அவசியமாக இருந்தது.

இவனுடைய ஒன்றுவிட்ட சகோதரனான முரளி உதவுவான் என்ற நம்பிக்கையுடனேயே இவன் இத்தாலியில் இருந்து வெளியேறியிருந்தான். ஆனால் முரளி இவனை கண்டுகொள்ளவே இல்லை. பலதடவைகள் ரெலிபோன் எடுத்தும் கதைக்கவேஇல்லை. இறுதியில் இவன் வேலைக்கு சேர்ந்திருந்த பெற்றோல்செற்றில் உடன் வேலைசெய்த கஜனின் உதவியுடனேயே எல்லாவற்றையும் சாமாளித்துக் கொண்டான்.

எட்டு வருடங்களும் இரவுபகலாக உழைத்தான். ஈஸ்வரியும் தையல் மூலம் கணிசமான பணத்தை ஈட்டி குடும்ப முன்னேற்றத்துக்கு பாடுபட்டாள். இருவரது உழைப்பாலும் benefits ஆல் கிடைக்கும் பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்தியதாலும் இப்பொழுது அவர்களிடம் கணிசமான பணம் இருக்கிறது. கடந்த வருடம்second hand ஆக ஔடிக்கார் ஒன்றும் வாங்கியிருக்கிறான். இப்பொழுது இங்கிலாந்து வாழ்க்கை இவனுக்கு நன்றாகவே பிடிபட்டுவிட்டது. நண்பர்கள் பலரும் முன்பு ஒட்டாத பல உறவுகளும் இன்று ஒட்டிக்கொண்டுவிட்டன.

தான் வாழ்க்கையில் வீழந்து விடவில்லை என்பதை முரளி முதலிய உறவுகளுக்குக்காட்டுவதற்கு இதுதான் நல்ல சமயம் என செந்திலுக்கு தோன்றியது.

சுஜாவின் சாமத்தியத்தை பெரிய மண்டபம் எடுத்து ஆடம்பரமாக செய்வது என அவன் மனதில் தோன்றிய எண்ணம் அசைக்க முடியாத உறுதியாக உருப்பெற்றிருகிறது. அதற்கான் பூர்வாங்க வேலைகளில் அவன் ஈடுபட்டத் தொடங்குகிறான்.

சுஜா

தனது saree ceremony நடக்கவிருப்பதையிட்டு சுஜாவுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.. சிநேகா அக்காவின் ceremony போனமாதம் நடந்தது அதன்போது அவ மிகவும் வடிவான lehenga அணிந்து cake வெட்டிய அழகு இன்றும் அவள் மனக் கண்ணில் நிழலாடுகிறது.

சுஜாவுக்கு மேக்கப் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும். இரண்டு வயதிலேயே அம்மாவின் மேக்கப் ம்பெட்டியை எடுத்து தனக்கு தெரிந்தவகையில் அப்பி அம்மாவிடம் அடி கூட வாங்கியிருக்கிறாள்

பவித்திராவுக்கு மேக்கப், உடைகள் எதிலும் அதிக நாட்டம் இருந்ததில்லை . அவள் அப்பாவிடம் விரும்பிக் கேட்பதெல்லாம் பெரும்பாலும் புத்தகமாகவே இருக்கும். மாறாக சுஜா அப்பாவிடம் மேக்கப் செற்றை வாங்கித் தருமாறு அடம்பிடிப்பாள்.

அம்மா ஒன்றல்ல இரண்டு lehenga வாங்கித்தருவதாகச் சொல்லியிருக்கிறா.. அதற்கு பொருந்துகிற அழகான accessories வாங்க வேண்டும்.

தான் அழகோவியமாக வலம்வரும்போது எல்லோருடைய கண்களும் தன்மீது குவியும் நாளுக்காக அவள் ஆவலுடன் காத்திருக்கிறாள்.

பவித்திரா

பவித்திராவுக்கு அம்மா அபாவில் கோபம் கோபமாகவருகிறது. “முதல் முதல் பீரியட் வருவது இயற்கையாக நடக்கிற விசயம். இத எல்லோருக்கும் சொல்லி பெரிய ceremony ஆகக் கொண்டாடப் போகினமாம்” அவள் மனம் கொதித்துப் போகிறது

அம்மாவிடம் கேட்டதற்கு “சுஜா விருப்பப் படுகிறாள். நாங்கள் லண்டன் வந்த புதிதில நீ சாமத்தியப் பட்டதால எங்களால் ஒண்டும் செய்யேலாமப் போட்டுது. அவளிண்டையாவது சிறப்பாச் செய்து பாப்பம்”

“சுஜா சின்னப்பிள்ளை. அவளுக்கு மேக்கப் பண்ணி சாறி உடுத்து பாக்கவேணும் என்றால் வீட்டில செய்து பார்க்கலாம்தானே. தண்ணி வாக்க வேணும் சடங்கு செய்வது எமது கலாசாரம் என்றால் மாமி மாமாவை மட்டும் கூப்பிட்டு அந்தச் சடங்கைச் செய்யலாம் தானே.”

தேவையில்லாம் சுஜாவை வைத்து SHOW UP செய்ய இருப்பது சுஜாவின் பெண்மையை அவமதிப்பதாக அருவருப்புத் தரும் செயலாகப் பவித்திராவுக்கு தோன்றுகிறது.

Univercity தமிழ் மாணவர் ஒன்றியத்தில் நடக்கும் விவாதங்களில் தமிழர் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் செய்யும் கூத்துக்களை அவள் கடுமையாக விமர்சித்திருக்கிறாள். அவளது வாதிடும் திறனுக்காக பலரிடம் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறாள்.

ஆனால் பெற்றோரிடம் வாதிட்டு வெற்றி பெறமுடியாத அவலத்தை என்ன என்பது?

அனாலும் காலம் என்னவோ கொரோனா வடிவில் பவித்திராவின் பக்கம் சாய்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *