திடுதிப்பென்று ஒரு எதிர்பாராத நேரத்தில் மழை துவங்கியதும் இவன் அரண்டுதான் போகிறான்.’இதென்ன கொடுமை’ என்று வேதனை மண்டிற்று.
மழை சுகம்தான்.வாடிய பயிருக்கும்,வறண்ட பூமிக்கும் மழை சுகம்.ஆனால் வெயில் நம்பி பிழைப்பவனுக்கு…இந்த மழை சுகமல்ல…சோகம்.இவன் ஒதுங்க மறந்து யோசிக்கிறான்.
இந்த மழையிலும் குடை பிடித்த ஜனங்கள் கோயிலுக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.என்னமோ தெரியவில்லை.இந்த திருவிழா காலத்தில் மட்டும் மக்களுக்கு வருகிற பக்தியே அலாதியானதுதான்.
ஆயினும் இவன் கடவுளை நம்பிதான் பிழைக்க வந்திருக்கிறான்.திருவிழா தலங்களில் கடவுள்தான் இவன் மூலதனம்.வண்ண வண்ண பொடிகளும் கரித்துண்டும்தான் உபகரணம்.
இவன் முறையாய் ஓவியம் கற்றவனில்லை.பொழுதுபோக்காக கிறுக்கி,அழித்து,திருத்தி…மீண்டும் கோடு கிழித்து..பழகிப் பழகி…தனக்குத் தானே குருவானவன்.இவன் ஆரம்ப கால முயற்சிகள் ஒரு திருப்திக்காக
மட்டுமேயிருந்தது.எந்த நோக்கமும் இருந்ததில்லை.பிச்சைக்கார முடவனுக்கு பெரிதாய் என்ன நோக்கமிருந்துவிடப் போகிறது.
ஒரு நாள் சாலை ஓரத்தில் ஏதோ ஒரு படத்தை வரைந்துவிட்டு அருகில் மர நிழலில் ஒய்வாய் சாய்ந்தவன் விழித்து பார்த்தபோது அவன் ஒவியம் பணம் சம்பாதித்திருந்தது.ஏதோ சில புண்ணியவான்கள் இவன் திறமைக்காக விட்டெறிந்த சில்லறைகள்…
பிறகு…அதுவே தொழிலாயிற்று. நடக்க முடியாத ஊனத்தை மறந்தான்.சக்கர வண்டியால் உந்தி நகர்ந்து செல்லும் வேதனை மறந்தான்.பிச்சை எடுப்பதைக் காட்டிலும் இதில் ஒரு நிறைவு உணர்ந்தான்.திறமையின் வெளிப்பாட்டில் ஒரு திருப்தி இருந்தது.ஆகவே கரித்துண்டும்,கலர்பொடிகளுமாய் கூட்டம் கூடுகிற எங்கும் சென்றான்.இதோ…இந்த திருவிழா கூட்டத்திலும்…
கோயிலின் பிரதான பாதையில் நூறு மீட்டருக்கு முன்னே சாலையில் மழை ஈரத்தை ஒற்றியெடுத்து கோடு கிழிக்க ஆரம்பிக்கிறான்.அந்த பகுதி வாகன பொக்குவரத்தை அடியோடு நிறுத்தி விட்டது இவனுக்கு வசதியாய் போயிற்று.
இவன் கிழித்த கோட்டை தொந்தரிக்காமல் ஜனங்கள் விலகி ஓரமாய் செல்வதைப் பார்க்க இவனுக்கு பெருமையாய் இருக்கிறது.என்னதான் ஆனாலும் மனிதன் ரசனையை இழந்து விடவில்லை என்று நினைத்துக் கொள்கிறான்.
ஆலயத்தின் பிரார்த்தனை,வியாபார கூக்குரல்களையும் மீறி ஒலிக்கிறது.”இது என் இரத்தம்.இதை என் நினைவாகச் செய்யுங்கள்”
இவன் அப்போதே தீர்மானிக்கிறான்.சிலுவையில் தொங்குமந்த ஏசுவின் உருவம்.அவர் சிந்திய ரத்தம்.இவற்றையே சித்திரமாக்கி விடுவதென்று.
அதென்னமோ தெரியவில்லை.இவனுக்கு அந்த சிலுவை மரத்தை வரைகிறபோது மட்டும் மிகவும் நெகிழ்சியாகிவிடுகிறது.அந்த கொடூர நிலையை கனத்த நெஞ்சுடந்தான் வரைய வருகிறது.தொங்கும் அந்த வேதனை முகம்,அதில் குத்திய முள் கிரீடம்,கை துளைக்கும் ஆணிகள்,ஈட்டி பிளந்த மார்பு…அவற்றில் வடியும் இரத்தம்…
அவனுக்கு இந்த ஏசு கடவுளை மிகவும் பிடித்துபோனது.அவர் பட்ட கொடுமைகள் இவனுக்கு வலித்தன.அவர் சிந்திய இரத்தம்…வரையும் போது கை நடுங்கும், நெஞ்சு படபடக்கும்.
இவன் இந்த மதம்தான் என்றில்லை.எந்த மதம் என்று கூட தெரியாது.ஆனாலும் இந்த இயேசு இவனை நிரம்ப பாதித்திருக்கிறார்.
இப்போது இவனைச் சுற்றி கும்பல் கூடி விடுகிறது.இவன் சிலுவையில் சோர்ந்து தொங்கும் இயேசுவை வரைந்து விலாவில் ஈட்டி செருகும் காட்சி வரைகிறான்.ஈட்டி குத்தும் போது வலிக்காதா?கண்ணீர் வராதா?இவன் மாதிரிக்குப் பார்த்த எந்த படத்திலும் இயேசுவுக்கு கண்ணீர் வரவில்லை…ஏனென்று புரியவில்லை.
ஜனங்கள் இவனைப் பாராட்டும் வார்த்தைகளையும், சில்லறைகளையும் வீசிவிட்டுச் செல்ல…இவன் தன் பலகை வண்டியை இழுத்துப்போட்டு ஒரமாய் உட்காருகிறான்.வரைந்த ஓவியத்தை உற்று நோக்குகிறான்.ஒரு கரித்துண்டு வரைந்த கோடுகள் இத்தனை உணர்ச்சிகரமானவையா..?அதோ அந்த முகத்தைப் பார்க்க பரிதாபம்
பொங்குகிறதே..இந்த ஈட்டி செருகுகிறவனின் முக குருரம்…ஓ! என்றென்றும் நஞ்சிருக்கும் பாத்திரம்தான் நல்லவருக்கு
வாய்த்திருக்கிறது…ஆயாசமாயிற்று.வாழ்க்கை தியாகங்களின் அர்த்தம் புரியாமல் போகிறது.
பார்த்துக் கொண்டேயிருந்தவனுக்கு திடீரென்று அந்த வித்தியாசம் புரிந்தது…விலா காயத்தில் இரத்தம் நிறம் வரைய வில்லை..அட..எப்படி மறந்து போயிற்று.
ஆலயத்துக்கு செல்வோர் எல்லாம் இவனையும் இவன் படத்தையும் பார்த்துவிட்டு மெச்சுவதும்,காசு போடுவதுமாகச் சென்றுக் கொண்டிருக்க-
திடீரென்று பின்னால் பேச்சுக்குரல் கேட்கிறது.
“ஆமாண்ணே..இன்னிக்கு இந்த திருவிழா யார் தலைமையில நடந்திருக்கவேண்டியது.உன் தலைமையில..ஒரு ஓட்டிலே உன் பதவிப் போச்சி..”
“அத வுடு. நேத்து முளைச்ச ஒரு பரதேசிப் பய.. நான் இருக்க வேண்டிய இடத்துல இருந்துட்டு… அவனுக ஒழுங்கா எந்த காரியமும் நடத்தவிடக் கூடாது.பேரவையோ மண்ணாங்கட்டியோ… அது நடந்தா நம்ம தலமையிலதான் நடக்கணும்…என்ன சொல்ற..”
“அதானே..”
“இன்னும் என்ன பார்த்துட்டு நிக்கற…புகுந்து வெளையாடுங்க. போடுற அடில எல்லாவனும் என் கால்ல வந்து விழணும்…”
கும்பல் கூச்சலும் ஆவேசமுமாக கோயிலை நோக்கி விரைய… இவனுக்கு விபரீதம் புரிந்தது..
ஏதோ நடக்கப் போகிறது.மனிதனுக்கு மதம் பிடித்து விட்டது. உடனடியாக இடத்தை காலி செய்யவேண்டும்.
இவன் நினைத்துக் கொண்டிருக்கையிலே கூட்டம் அலைமோதியது. முன்னோக்கி நகர்ந்த கூட்டம் பின்னோக்கித் திரும்பியது. “போலீஸ் அடிக்கிறாண்டோய்” என்றொரு கூச்சல்.பக்த கூட்டம் அலறியடித்து ஓட ஆரம்பிக்க…
இவன் செய்வதறியாது திகைத்தான்.கூட்டம் இவனைக் கடந்து ஓடிக்கொண்டிருக்க இவன் படத்தில் விழுந்த காசுகளை பொறுக்க குனிகிறான்.
சரெலென்று எவனோ இவனை மிதித்துக்கொண்டு தாண்டிப் போக.. நச்சென்று முகம் குப்புற விழுந்து இரத்தம் கொட்டிற்று.வடிந்த இரத்தம் இயேசுவின் ஈட்டி குத்திய காயத்தை ஈரப்படுத்திற்று.சுதாரித்து எழுவதற்குள் மீண்டும் எவனோ மிதிக்க…மேலும் இரத்தம் கொட்டி…எங்கும் பரந்து….
நாளைய பத்திரிகையில் முழு விவரங்கள் தெரியவரலாம்.
– ஏப்ரல் 2009