ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பனவற்றைப் பாதுகாப்பதற்கான அமைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 8,544 
 

‘சட்டமும் நிர்வாகமும் சரியாக வேலை செய்யவேணும்;. இந்த இடத்திலை சரியான நேரத்திலை சரியான வேலை செய்திருக்கினம். இப்பிடிச் செய்தால்தான் நாங்களும் நின்மதியோடையும் பாதுகாப்பாயும் வாழலாம். பறிமுதல் செய்தது உண்மையாய் நல்ல வேலை. இப்பிடிச் செய்தால்தான் மற்றவைக்கும் ஒரு பயமிருக்கும். வந்தவன் போனவன் எல்லாரும் இந்த மண்ணை நாசப்படுத்தேலாது. அதுக்கு நாங்கள் அனுமதிக்கவும் ஏலாது இல்லையோ? ‘

மாலைநேரத்தில் காலைப்பத்திரிகையை காட்டி ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த ஞாபகமிருந்தாலும் உடனே நினைவு படுத்த முடியவில்லை. எனக்குள்ள குறைபாடுகளில் இதுவும் ஒன்று. ஓரளவு பழகிய மனிதர்களைச் சந்திக்கும் நேரங்களில் பல வேளைகளில் உடனே யாரென ஞாபகப்படுத்த முடிவதில்லை. சில வேளைகளில் ஞாபகப்படுத்தவே முடிவதில்லை. அவர்களாகவே வந்து பேசினாலும் பொதுவான பதில்களோடு பேச வேண்டியிருக்கிறது. கடந்த வருட நல்லூர் திருவிழாவில்
‘தம்பி! எப்பிடியிருக்கிறியள்,? இப்பவும் தீவிலைதான் வேலையோ?, ஊர்ப்பக்கம் போறேல்லையோ? அம்மா எப்பிடியிருக்கிறா ? தம்பி செத்ததுக்குப்பிறகு மனிசியும் நல்லா நொந்து போச்சுது என்ன? ‘ என்று தொடர் கேள்விக்கணைகளால் விசாரித்தவரை இன்று வரையில் யாரென ஞாபகப்படுத்த முடியவில்லை.
‘ஓமண்ணை சுகமாயிருக்கிறம், அடுத்த தை மாதம் தான்; இஞ்சாலை வாறது சரிவரும் எண்டு நினைக்கிறன், இந்த வருஷம் எலக்சனுகள் வந்ததாலை இடமாற்றங்கள் செய்யயில்லை. நீங்கள் இப்ப எங்கையிருக்கிறியள்’.
என்று அவரது இருப்பிடத்தை அறிய போட்ட தூண்டிலும்
‘பழைய வீட்டிலைதான் தம்பி இருக்கிறம், உலக வங்கியிலை தந்த வீடு மகளுக்கு குடுத்திட்டம்’
என்ற பதிலால் மீனில்லாமல் வெறும் ஊசியாய் போட்ட இரை கூட மிஞ்சாமல் திரும்பியது மட்டும் ஞாபகமிருக்கிறது.

இப்போதும் ஆவேசமாய் பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கும் இவரை உடனே ஞாபகப்படுத்த முடியவில்லை. அவரது பேச்சுக்கு இரண்டு பேர் அதிக பட்ச பணிவோடு வார்த்தையற்ற தலையசைப்பால் ஆமோதித்தது அவரை இன்னும் பேச உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும். தனது கருத்துச்செறிவான பேச்சுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை போதாதென்று நினைத்திருப்பாரோ தெரியவில்லை.
‘எங்கை நிண்டு என்ன செய்யிறம் எண்டது விளங்க வேணும், இந்த மண்ணுக்கெண்டு ஒரு புனிதம் இருக்குது. அதைச்சீரழிக்கேலாது தானே’
என்று என்னைப்பார்த்த பார்வையில் ரசிகர் வட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் இருந்தது. விடுப்புப்பார்க்கும் விருப்பம் இருந்தாலும் எதைப்பற்றிப்பேசுகிறார் என்று தெரியாமல் வாய்திறப்பது ஆபத்தாகப்பட்டது. அவரது தோரணையைப் பார்க்கும் போது பொதுவான பதில் சொல்வது அதைவிட ஆபத்தாகப்பட்டது. பேச்சு அரசியல் சார்ந்ததாக இருக்கும் போலப்பட்டது, சிலவேளை டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக பேசுகிறாரோ தெரியவில்லை. ஆளையும் தெரியவில்லை. ஏதாவது சொல்லப்போய் வில்லங்கமாய் முடியலாம் என்று உள்மனம் எச்சரிக்கை செய்தது. ஆம், இல்லை, தெரியாது என்ற வார்த்தைகளுக்கு பொருந்தும் விதமாக தலையசைத்தேன்.
‘எங்கடைகலாச்சாரத்தை கந்தபுராண கலாச்சாரம் எண்டு சொல்லியிருக்கினம், இது சிவபூமி தம்பி இஞ்சை இப்பிடியான சேட்டையளை அனுமதிக்கேலாது. யாழ்ப்பாணக் கொடியெண்டு நந்திக்கொடியை வச்சிருக்கிறம், கடவுளின்ரை வாகனம் எண்டு சொல்லுறம். சரி அதுகளை விடும் உழைச்சுத்தந்த சீவனல்லே ? வயது போட்டுதெண்டால் நோட்டீசடிச்சு வெட்டுறதே ? இப்பிடியானவங்கள்தான் அப்பர் அம்மாவுக்கு வயது போட்டுதெண்டு கைதடியிலை கொண்டு போய்த் தள்ளுறவங்கள்’

எனது தலையசைப்பு அவரை உற்சாகப்படுத்தியிருப்பது புரிந்தது. காலையில் பத்திரிகையில் படித்த செய்திகள் ஞாபகம் வர இப்போது விடயம் கொஞ்சம் பிடிபடுவது போலப்பட்டது. அரசியலோ டெங்கோ இல்லை, அப்படியென்றால் ஆபத்தில்லாத விடயம், பிரயோசனம் இல்லாத விடயம்தான் இருந்தாலும்;. ‘எனக்கும் கொஞ்சம் விசயம் தெரியும்’ என்று காட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை விட மனம் வரவில்லை
‘வெட்டுறது வேறை ஆனா அதுக்கு சீன் காட்டுறது பிரச்சனை தானே’.
என்று தொடங்கும் போதே குறுக்கிட்டார்

‘இல்லைதம்பி! நீங்களும் படிச்சாக்கள், பட்டிமன்றங்கள் பிரசங்கங்கள் எண்டு செய்யிறனிங்கள் வெட்டிறது சரியெண்டு கதைக்கக்கூடாது.

இப்போது எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. அவரை யாரென்று அடையாளம் தெரியாமல் நான் அவதிப்பட என்னைப்பற்றி அவர் விபரித்ததால் அல்ல. உள்ளுராட்சி மன்றங்கள், அரசாங்கங்கள் எல்லா இடங்களிலும் சட்டப்படி கொல்களங்களும் கடைகளும் அமைத்து அனுமதி வழங்கியிருக்க ‘வெட்டிறது சரியெண்டு கதைக்கக்கூடாது’ என்றால் தலை சுற்றாமல் என்ன செய்யும். ஆயிரத்து ஐநூறுகளில் போர்த்துக்கேயர் வருவதற்கு முன்பிருந்த நாட்டில் இப்படிப்பேசலாம், ஆனால் இப்போது இது யதார்த்தமான ஒன்றாக தெரியவில்லை.

‘என்ன தம்பி யோசிக்கிறீர்;, உங்களைப்போலை ஆக்கள்தான் இப்பிடியான விசயங்களைப்பற்றி எழுத வேணும், பேசவேணும், அப்பதான் எங்கடை சனம் திருந்தும்’
பேச்சின் இடையில் குறுக்கிட்டதற்கு நாசூக்காக வருத்தம் தெரிவிப்பதை உணர்த்தினார், எனக்கு இப்போதும் இவர் யாரென்பது நினைவில் வர மறுத்தது.

‘ஐயா உங்களை இதுக்கு முதலிலையும் சந்திச்சிருக்கிறன் ஆரெண்டு உடனை ஞாபகம் வரயில்லை’ குரலில் வருத்தம் தெரிவிக்கும் தோரணையினை வலிந்து உருவாக்கிக்கொள்கிறேன்.

மறுநாள் சமையல் தேவைக்கு வேண்டிய மரக்கறி போன்றவற்றை வழமையாக முதல்நாள் மாலையில் வாங்கிவைப்பது என்பது இப்போதெல்லாம் வழமையாகப்போய்விட்டது. மாதா மாதம் எல்லாப்பொருளும் பத்துப்பத்து ரூபாவால் விலை அதிகரிப்பதால் சிக்கனம் கருதி கடையில் சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டிலேயே சமைத்து அலுவலகத்திற்கு சாப்பாடு கொண்டு போக வேண்டும் என்பது என் ‘மனைவி சிந்தனை’ யின் ஓரம்சம். அவள் சிந்தனையிலும் நுணுக்கமான பல அம்சங்கள் இருப்பது அனுபவத்தில் உணர முடிந்தது. அலுவலகத்திற்கு அருகில் உள்ள கடையில் மதியச்சாப்பாட்டின் விலையை எழுபது ரூபாவிலிருந்து தொண்ணூறு ரூபாவாக திடீரென்று அதிகரித்து விட்டார்கள்.
‘என்ன கஜன் சாப்பாடும் விலை கூட்டியிருக்கிறியள் போலை’ என்று கேட்டதற்கு
‘ஓம் சேர் டீசலும் முப்பத்தைஞ்சு ரூவா கூடியிட்டுது தானே’
என்ற பதிலில் இருந்த பொருளாதாரக் கோட்பாடு நான்கு ஆண்டுகள் பொருளியலை சிறப்புப்பாடமாகப் படித்து பட்டம் வாங்கிய எனக்கு விளங்கவேயில்லை. சலூனிலும் சவரம் செய்வதற்கு ஜம்பது ரூபாவிலிருந்து எழுபது ரூபாவாக கட்டணத்தை மாற்றியிருக்கிறார்கள். மாவின் விலை எட்டு ரூபா அதிகரித்ததால் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியவில்லை என்கிறார்கள். பிரயோகப்பொருளியல் எனக்கு விளங்காத விடயமாகி விட்டது.

இந்த கட்டண அதிகரிப்பை அடுத்து ‘மனைவி சிந்தனை’ க்கு அமைவாக மாதத்தில் ஒரு தடவை சலூனுக்கு போவதில் அதிகம் தவறில்லை என்றும் ஏனைய நாட்களில் வீட்டிலேயே சவரம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பணிக்கப்பட்டேன்.

அதிகாலையில் எழுந்து சமைப்பதற்கு வசதி என்பதனை விட கடையில் மரக்கறி வாங்குவதில் இன்னுமொரு நன்மையிருக்கிறது. கையில் காசு இல்லை என்பது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கொப்பியில் கணக்கெழுதிக்கொள்ளலாம் மாத முடிவில் காசைப்பற்றி யோசிக்கலாம். இப்படி மரக்கறி வாங்குவதற்காக வந்த ஒரு மாலைப்பொழுதில்தான் ஆன்மீகமா? நிர்வாகமா? தேசியமா? என்று வகைப்படுத்த முடியாத எல்லாம் சொற்பமாகக் கலந்த இந்தப்பிரச்சினை பற்றிய சம்பாஷணையில் சிக்கிக்கொள்கிறேன்.

கடைக்காரருக்கு இந்த சம்பாஷணை கடுப்பேற்றியிருக்கும் போலத் தெரிந்தது.
‘மாஸ்ரர் மரக்கறியைப் பாத்து எடுத்திட்டு நிண்டு கதையுங்கோ, முருங்கைக்காய் முடியுது மற்ற ஆக்கள் எடுத்ததுக்குப் பிறகு முடிஞ்சுதெண்டு கேக்க வேண்டாம்.
தமிழ் சிங்களப் புத்தாண்டினால் கடைக்காரருக்கு இந்தமாதமும் காசு கொடுக்காமல் தவணை சொல்லியிருக்கிறேன். கடனைத் தரவில்லை என்ற விடயமும் சிலவேளை அவரை வெறுப்பேற்றியிருக்கலாம் என்ற எண்ணத்தை என்னால் தவிர்த்து விடமுடியவில்லை.
மரக்கறிகள் வாங்கும் போதுதான் மெதுவான குரலில்
‘ என்ன மாஸ்ரர் இவரைத் தெரியாதே ? என்று கடைக்காரர் கேட்க நான் இல்லையென்று தலையசைத்து உதட்டைப் பிதுக்கினேன்.
இவரைத் ‘தனத்தார்’ என்று சொல்லுறவை தனசேகரமோ அப்பிடித்தான் ஏதோ ஒரு பேர்
கடைக்காரர் சொல்ல எனக்கு ஞாபகம் வந்து விட்டது. இவரைப்பற்றி அடிக்கடி எனது நண்பன் பாஸ்கரன் கதைப்பதுண்டு. அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்றவர். சும்மா பேருக்கு இல்லாமல் உண்மையாகவே ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நல்லொழுக்க சம்மேளனம் உட்பட ஊரின் முக்கியமான பொதுஅமைப்புக்களில் எல்லாம் பொறுப்பான பதவிகளில் இருப்பவர். இவை எல்லாம் தனம் அண்ணாவைப் பற்றி பாஸ்கரன் அடிக்கடி கதைக்கும் போது நான் பெற்ற தகவல்கள்.

என்னை ஊரில் அதிகம் பேருக்கு தெரியாது, எனக்கும் அதிகம் ஆட்களை தெரியாது. தீவில் வேலை என்பதும் இதற்குக்காரணம் வேலையால் வீட்டிற்கு வர ஆறுமணியாகி விடுகிறது. அதன்பின் விறகு, தேங்காய், மரக்கறி, பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம், மனைவியின் பொருளாதாரத்திட்டமிடல் சார்ந்த ‘மனைவி சிந்தனை’ திருத்தச்சட்ட விவாதத்தில் கலந்து கொள்ளல் என்பவற்றிற்கே நேரம் பிரச்சினையாகி விடுகிறது. இப்போதெல்லாம் பத்து மணிக்கு நித்திரைக்குப்போக முடிந்தால்; இன்றைக்கு நேரத்தோடு படுக்க முடிந்ததே என்ற திருப்தி வருகிறது.

பாஸ்கரன் என்னைப்போல இல்லை, அவனுக்கு ஊர்வேலை பார்க்கா விட்டால் தலை வெடித்து விடும் இரண்டாவது இதயமாக கைத்தொலைபேசி பொருத்தியிருப்பான். குறைந்தது ஐந்து நிமிட இடைவேளைக்கு ஒருதடவை அது துடிக்கும், அப்படித் துடிக்காவிட்டால் இறந்து விடுவானோ தெரியவில்லை. பிரபலமான யாருடைய தொலைபேசி இலக்கமாவது தேவையென்றால் பாஸ்கரனின் தொலைபேசி இலக்கம் இருந்தால் போதுமானது. எப்போது யாருடைய இலக்கம் கேட்டாலும் சொல்லுவான். நல்ல பேச்சாளன், பாடகன், கவிஞன் என பல பரிமாணங்கள் கொண்டவன், இதில் முக்கியமான இன்னொரு செய்தி எனது பொறாமைக்குரியவன். ஆனால் அவன் கலந்து கொள்ளும் பட்டி மன்றங்களில் எல்லாம் பெரும்பாலும் நானும் பேசுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித்தருவான்.

நான் பெரும்பாலும் மூன்றாவது பேச்சாளராகவே பேச விரும்புவதுண்டு, இதற்காக அதிகம் பிரயாசைப்படத் தேவையில்லை, ஏற்கனவே எங்கள் அணியில் உள்ள இரண்டு பேரும் பேசியதை திருப்பி பேசினால் போதுமானது. கொஞ்சம் வசன அமைப்பை மாற்றப்பழகினால் சரி. சிலவேளைகளில் என்னை அணியின் தலைமைப்பேச்சாளராகவும் நிறுத்தி வேடிக்கை பார்ப்பதுண்டு. இப்படி பாஸ்கரன் மூலமாக இவருடைய ஏற்பாட்டில் ஆவரங்காலில் ஒரு பட்டிமன்றம் கூட செய்திருக்கிறோம். அப்போது பார்த்ததுதான் ஞாபகம் வராமல் அடம் பிடித்திருக்கிறது. அதைவிட அந்த ஏற்பாட்டில் எனக்கு நேரடித்தொடர்பில்லை என்பதுவும் ஞாபகத்தின் தாமதத்திற்கு காரணமோ தெரியவில்லை.

மரக்கறி வாங்கிக்கொண்டு தனத்தாருடன் மிருகவதை பற்றி தொடங்கிய பேச்சு உலகம் முழுவதும் தொட்டு மீண்டது.

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் கோழிகளும் புறாக்களும் சண்டையிடுபவர்கள் மீது வீசப்பபடுவதும் நசிபட்டு இறப்பதும், சிவாஜி படத்திற்காக சங்கர் ஆயிரக்கணக்கான கிலோ இறைச்சி வைத்துப்படம் பிடித்ததும் அந்தக்காட்சி முன்கூட்டியே வெளியே கசிந்ததால் படத்தில் இடம் பெறாமல் போனதும், இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடாத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்ததும், சேர்க்கஸ் என்ற பெயரில் மிருகங்களை துன்புறுத்துவதும் என விலாவாரியாக தனத்தார் கதைத்தபோது அவரின் உலக அறிவையும் உலகளாவிய ரீதியில் உயிர்கள் மீது கருணையுடன் சிந்திப்பதையும் கோபத்திற்கான நியாயத்தையும் விளங்கிக் கொண்ட பிரமிப்பினால் சிலிர்த்துப்போனேன்.

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இப்போது செத்த வீடுகளுக்கும் கொழுத்தும் வெடியால் பிராணிகள் எப்படி பாதிப்படைகின்றன என்பது பற்றியும் விஞ்ஞானிகள் பரிசோதனை என்ற பெயரில் வெள்ளெலிகள், முயல்கள், குரங்குகள், குதிரைகளைக் கொடுமைப்படுத்துவதைப்பற்றியும் விபரித்தபோது எனக்கு இரண்டாவது தடவை தலை சுற்றியது, ஒரு சோடா குடித்தால் நல்லது போலப்பட்டது. போன மாதமும் காசு கொடுக்கவில்லை, கடைக்காரரிடம் சோடா கடன் கேட்கலாமோ தெரியவில்லை. அப்படி வாங்குவதென்றாலும் நாலு சோடா வாங்கவேணும் ‘வீட்டிலை கடைக்கொப்பி ஓடிற் பண்ணேக்கை பிசகும்’ வேண்டாம்.

எனக்கு நோபல் பரிசு பற்றி அவ்வளவாகத் தெரியாது, இவருக்கு அது கொடுக்கலாமோ தெரியவில்லை இதைப்பற்றி யாரிடமாவது கேட்கவேண்டும். பாஸ்கரனைக் கேட்டால் சிரிப்பான், அவனை விட வேறுயாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொண்ட பின்னர் அவனோடு கதைத்து எனக்கும் விசயம் தெரியும் என்று காட்ட வேண்டும்.

‘ தம்பி ஊருக்கை நாங்கள் இதுக்காக ஒரு அமைப்பை உண்டாக்க வேணும், கோயில் நிர்வாக சபையள், சனசமூக நிலையங்கள், வேறையும் ஆர்வமுள்ள ஆக்கள் எல்லாரையும் சேர்த்து இப்பிடியான விசயங்களை தடுக்கப் பாடுபடவேணும், இல்லாட்டால் நாளைக்கு கோயில் மாட்டையும் வெட்டுவாங்கள், மற்ற இடங்களைப்பற்றி அந்தந்த இடத்து ஆக்கள் பாத்துக்கொள்ளட்டும் நாங்கள் எங்கடை ஊரிலை இருந்து ஆரம்பிப்பம் நல்ல விசயங்கள் மெல்ல மெல்லத்தான் பரவும், ஆனால் நாங்கள் அதைப்பற்றி யோசிக்காமல் தொடங்குவம்’ என்ற போது

‘ஏன் ஜயா கோயிலிலை ஆடுகள், கோழியள் வெட்டுகினம்தானே’
என்று கேட்க நினைத்தாலும்; பாஸ்கரனை நினைத்து தவிர்த்துக்கொண்டேன், வழமையாக இப்படியான விடயங்கள் அவனோடுதான் கதைப்பார்கள், முதன்முறையாக என்னோடு ஒருவர் கதைக்கிறார்.

குழப்பிப்போடக்கூடாது என்று மனம் எச்சரித்தது. அவனுக்குத்தெரியாமல் தனத்தார் சொன்னது போலை ஒரு அமைப்பை நிறுவி ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பனவற்றைப் பாதுகாப்பதற்கான அமைப்பு என பெயரிட்டு அதற்கு நானே தலைவராகி அதுக்குப்பிறகுதான் சொல்ல வேணும்
தலைவராக வேணும் என்றால் நானும் அறிவாளிதான் எண்டதை நிரூபிக்க வேணும் அப்பதான் தனத்தார் நீரே தலைவராக இருக்க வேணும் என்று சொல்லக்கூடும். இன்றைய இராசி பலனை வாசிக்கவில்லை ‘ பெரியோர் தரிசனம் எதிர்பாராத சந்திப்பு’ என்ற விதமாக ஏதாவது இருந்திருக்கும் வாசித்திருந்தால் துணிஞ்சு கதைக்கலாம். இருந்தாலும்
‘ அது தானே முன்னேஸ்வரத்திலை வெட்டக்கொண்டு வந்த ஆடு, கோழியளை லொறி விட்டு ஏத்தினவை, அப்பிடிச்செய்தால் தான் எங்கடை ஆக்களும் திருந்துவினம்’
என்று என்னுடைய உலக அறிவைக்காட்டினேன்
‘தம்பி அதுகள் பிழையான வேலை கண்டீரோ! அது எங்கடை சமய நம்பிக்கையோடை விளையாடுற வேலை, அதை நாங்கள் அனுமதிக்கேலாது, அப்பிடி ஏத்தினது சரியெண்டு கதைக்கக்கூடாது. அது கனபேரை மனம்நோகச் செய்திட்டுது. அதுகின்ரை பலனை சம்பந்தப்பட்டவை ………………………………….. என்று தனத்தார் அரசியல் பேச நான் அதை இங்கு எழுதாமல் தவிர்த்துக்கொண்டேன்.
‘இவர் எது சரியெண்டு சொல்லுறார்’ என்பது இது வரை விளங்கவில்லை.

ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பனவற்றைப் பாதுகாப்பதற்கான அமைப்பு நிறுவப்பட்டு தலைவரான பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் தலைவராக முடியுமா? என்பதை சோதித்தறிய வேண்டியிருந்தது.
‘ஓம் ஐயா நீங்கள் சொன்ன மாதிரி முதலிலை ஒரு அமைப்பை நிறுவவேணும், அதுக்கு ஒரு நல்ல தலைவரை தேடிப்பிடிக்க வேணும்.’

‘பொது வேலைக்கு இந்தக்காலத்திலை ஆர் தம்பி வருகினம்? உங்களைப் போலை ஆக்கள்தான் இப்பிடியான விசயத்துக்கு முன்னுக்கு வரவேணும்’
‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்று எழுதியதை பொருட்பிழை உள்ள கவிதை என்று சொல்லுகிறார்கள். இப்படியான செய்திகளை கேட்கும் போது இன்பத்தேன் என்று சொல்லாமல் வேறு எப்படிச்சொல்ல முடியும். இப்போதும் பாஸ்கரனை நினைத்துக்கொண்டேன்.

‘ஊருக்கை நானும் இனி ஒரு தலைவர்தான் மச்சான், உன்னைத்தேடி வாற மாதிரி இப்ப என்னையும் ஆக்கள் தேடி வருகினம்’
என்று சொல்லும் போது எப்படிச்சிரிப்பான் என்று நினைத்துப்பார்த்தேன். இதுவரையில் என்னை யாரும் தலைவராக்க முன்வரவில்லை, தொண்டனாகப் பயன்படுத்தியவர்கள் பலர், பாடசாலையில் உயர்தரம் படிக்கும் போது யாரோ ஒருவர் என்னை மாணவர் மன்ற செயலாளராகப் பிரேரிக்க சின்னத்துரை வாத்தியார் எழும்பி அவர் வரவு குறைந்த மாணவர் என்று நிராகரிக்க எனக்கு அது ‘ வலது குறைந்த மாணவன்’ என்று செவியில் விழுந்து கடும் சர்ச்சையாகிப்போய் ஒருநாள் முழுவதும் உடைந்த துண்டுக் கண்ணாடியில் என்னை நான் பார்த்துப் பார்த்து எனக்கு வலது குறைவு இல்லை என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. இந்த மனிதன் சந்தித்த முதல் நாளே இப்படி சொல்லும் போது நன்றி உணர்வு நெஞ்சை அடைக்கும் போல இருந்தது.

‘நல்ல தலைவரை எங்கை தம்பி தேடுறது கொஞ்ச நாளைக்கு நான் இருக்கிறன், பிறகு ஆரும் ஒரு நல்ல ஆளைத்தேடிப்பிடிச்சு பொறுப்பைக் குடுக்க வேணும். உம்மைத்தான் செயலாளராப் போட வேணும் எண்டு நினைச்சிருக்கிறன். கொமிற்றி கூடேக்கிள்ளை நீர் என்னை தலைவராப்பிரேரிச்சு விடும்’ காற்று நிறைஞ்ச பலூனை சாம்பிராணிக்குச்சியால் சுட்டமாதிரி உள்ளே ஏதோ சத்தம்கேட்டது.
‘இனியும் இதிலை நின்று கதைத்தால் மூன்றாம் தரம் தலை சுத்தும், வீட்டை போவம்’
என்று நினைத்த போதுதான்
‘தம்பியையும் கன நேரம் மினக்கெடுத்திப்போட்டன் சனிக்கிழமை ஒருக்கால் வீட்டை வாங்கோவன் நாங்கள் விளக்கமாய் கதைப்பம்’ என்று விடைகொடுத்தார்.

நினைக்க நினைக்க கோபமாக இருந்தது, இரவு நித்திரையும் குழப்பமாயிற்று
‘ ச்சாய் முதல் தரமாய் தலைவராகலாம் எண்ட கனவு இப்பிடிப்போச்சுது’
என்ற நினைப்பு தூக்கத்தைக்கெடுத்தது, காலையில் எழும்பத் தாமதமாயிற்று, தாமதம் பதட்டத்தைக்கொடுக்க விடிகாலையில் வீடு சின்னாபின்னப்பட்டது. பிள்ளைகள் கதிகலங்கினார்கள். காலைப்பொழுது வீட்டில் எல்லோருக்கும் கசப்பாயிற்று. ஒருகட்டத்தில் மனைவி
‘உங்களுக்கு என்னப்பா காலமை விசர்கிசர் பிடிச்சிட்டுதே’
என்று கேட்க கையிலிருந்த மகனின் பாடசாலை சாப்பாட்டுக்கூடையால் அவளை நொருக்கி விடும் நோக்கத்தோடு பாய்ந்த போது வீட்டுக்கேற்றில் யாரோ கூப்பிடுவதாக நாய் சொன்னது.
தனத்தாரை இந்த காலை வேளையில் நான் எதிர்பார்க்கவில்லை
‘ வாங்கோ ஐயா , வேலைக்கு வெளிக்கிடுகிற அவசரத்திலை , இவங்கள் பொடியளும் ……. சொல்லுங்கோ! உள்ளை வாங்கோவன்’
துண்டு துண்டாக கதைத்ததன் அர்த்தம் எனக்கே விளங்கவில்லை. அவருக்கு ஏதோ விளங்கியிருக்க வேணும்.
‘நான் உங்களை மினக்கெடுத்தயில்லை, நேற்றுக் கதைச்ச விசயத்தை ஒருக்கால் ஞாபகப்படுத்திப் போட்டு போவம் எண்டு வந்தனான். நீர்தான் செயலாளராய் இருக்க வேணும் அதுக்குரிய ஏற்பாடுகளை நான் பாக்கிறன். வாற சனிக்கிழமை பொருத்தமான ஆக்கள் எல்லாரையும் கூப்பிட்டுக் கதைச்சு அண்டைக்கே சங்கத்தை ஸ்தாபிச்சுப்போடவேணும். ஆராரைக் கூப்பிடுகிறதெண்டு நான் ஒரு லிஸ்ற் போட்டுத்தாறன் நீர்தான் எல்லாருக்கும் அறிவிக்க வேணும். சனிக்கிழமை பின்னேரம் பொதுமண்டபத்திலை ஒரு நாலுமணிக்கு சந்திப்பம் எண்டு சொல்லும். மற்றது மறந்து போகாமல் சனிக்கிழமை மத்தியானம் ஒருக்கால் வீட்டை வாரும் கொஞ்சம் வெள்ளணவாய் ஒரு பன்னிரண்டு மணிக்கு வாருமன் முக்கியமான அலுவல், எதிர்பாத்துக்கொண்டு நிப்பன். சரிசரி நீரும் வேலைக்குப்போக வேணும் நான் வரட்டே’
‘உண்மையிலை இந்தாள் செயல் வீரன்தான். பொதுவேலை எண்டு வெளிக்கிட்டால் நித்திரை கொள்ளாது போலை’ நினைக்க பிரமிப்பாக இருந்தது. என்னை விட இவர்தான் தலைவருக்கு பொருத்தமான ஆள், செயலாளர் எண்டதும் குறைஞ்ச பதவியில்லைத்தானே. பள்ளிக்கூடத்திலை செயலாளராக்க பார்த்தவைக்குத்தானே சின்னத்துரை வாத்தியார் வலது குறைவு எண்டு சொல்லி பிரச்சினை குடுத்தவர். செயலாளர் ஆனாப்பிறகு சந்தர்ப்பம் கிடைச்சால் ஒருக்கால் சின்னத்துரை வாத்தியாரையும் சந்திக்க வேணும். இப்ப எங்கையிருக்கிறார் எண்ட விபரம் அறிய வேணும் – மனம் பல விடயங்களை வேகமாக சிந்திக்க எனது சிந்தனையின் வேகம் எனக்கே பயத்தைக் கொடுத்தது.

பாஸ்கரனுக்கு சொல்லாமல் விட மனம் ஒப்பவில்லை செயலாளர் பதவி நிச்சயம் என்ற நிலையில் சொன்னால் என்ன? என்று பட்டது. விலாவாரியாக எல்லாம் சொன்னபோது கேட்டுவிட்டு சிரித்தான். அது வழமையான கேலிச்சிரிப்புப் போல படவில்லை.

‘மச்சான் இது சும்மா கிடந்த கம்பியை வளைச்சு சூலமாக்கிற வேலை. பிறகு அது பொங்கல்வை, ஆடு கொண்டுவா, கோழி கொண்டுவா எண்டு நிக்கும். உனக்கு ஊருக்கை கொஞ்சம் நல்ல பேர் இருக்குது ஏதோ யோசிச்சுச்செய்’
சொன்ன விதத்தில் இது வேண்டாம் என்ற எச்சரிக்கை தெரிந்தது. தன்னைப்போலை நானும் ஊரில் பெரியாளாகினால் தனக்கு இருக்கிற செல்வாக்கு குறைஞ்சு போய்விடும் என்று நினைக்கிறான் போலப்பட்டது. ‘இவனுக்கு சொல்லாமல் விட்டிருக்கலாம். மடைத்தனமான வேலை பாத்திட்டன் , சரி போகட்டும் விடு’ – என்னை நானே தேற்ற வேண்டியிருந்தது.

ஒரு நாய் மனிதனை கடித்து தின்ன முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் தனம் அண்ணன் வீட்டு நாய் நின்ற நிலையில் அதற்கு இதைவிட வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இவ்வளவு கொடூரமான இயல்போடு இதுவரை நான் ஒரு நாயைப் பார்த்ததில்லை. நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்திருப்பார் என்று நினைக்கிறேன்
‘வாரும் தம்பி உம்மைத்தான் நினைச்சுக்கொண்டிருக்க நாயும் குலைக்குது. அது இண்டைக்கு இறைச்சியைக்கண்ட நேரத்திலை இருந்து ஒரு மார்க்கமாய்த்தான் நிக்குது.’
என்று வரவேற்றார். ஆமோதிக்கும் விதமாக சிரித்து வைத்தேன் தனம் அண்ணனைக் கண்டவுடன் நாய் அடங்கிப்போனது.

‘இண்டைக்கு எங்கடை கோயில் வேள்வியல்லோ அதுதான் இறைச்சி எடுத்தது. நாய்ப்பிள்ளையும் கடுமையாய் நிக்கிறார். வேள்விக்கொமிற்றிக்கும் நான்தான் தலைவர். எங்கை தம்பி எனக்கு ஒண்டுக்கும் நேரமில்லாமல் கிடக்குது. மாட்டன் எண்டு சொன்னாலும் கேக்கிறாங்கள் இல்லை. வில்லங்கத்துக்கு தலைவர் எண்டு போட்டு வைச்சிருக்கிறாங்கள். பொது வேலை மறுக்கவும் ஏலாமல் கிடக்குது.’ இதற்கும் சிரிக்க வேண்டியிருந்தது.
‘எப்பிடியும் ஒரு இருநூற்றைம்பது கிடாய் விழுந்திருக்கும். எண்டாலும் நல்ல சூடு நாப்பது ரூபாயிலை இருந்து ஒண்டு வரைக்கும் போய்ச்சுது. நானும் சின்னன் ஒண்டு நாப்பத்தைஞ்சுக்கு எடுத்தனான். அதுதான் தம்பியோடை சேர்;ந்து சாப்பிட வேணும் எண்டு ஆசையிலை வரச்சொன்னனான்.’ எனக்கு இப்பொழுது உண்மையிலேயே தலை சுற்றியது.
‘இல்லை ஐயா நான் ஆட்டிறைச்சி சாப்பிடுகிறது இல்லை’
‘பாத்தீரே! எதுக்கும் இருக்கட்டும் எண்டு நான் ஒரு சேவலும் வாங்கினனான், அதுகும் நல்லதாய்ப் போய்ச்சுது, கோயிலிலை வெட்டினதுதான், இந்தமுறை கோழி கனக்க வரயில்லை .’
‘நான் அதுக்குச்சொல்லயில்லை ஐயா இண்டைக்கு சனிக்கிழமை நான் விரதம்’
பொய்மையும் வாய்மையுடைத்து என்று எண்ணிக்கொண்டேன்
‘ச்சாய் நான்தான் பிழை விட்டிட்டன் தம்பிக்கு முதலே சொல்லியிருக்க வேணும் . சரி நீர் விரதகாரனை இஞ்சை சாப்பிடச்சொல்லி என்னெண்டு கேக்கிறது. இன்னெரு நாள் பாப்பம், பின்னேரம் கூட்டம் இருக்குதல்லே எல்லாருக்கும் தவறாமல் அறிவிச்சனீர் தானே’
‘ஓம் ஐயா அறிவிச்சிட்டன் எனக்குத்தான் ஒரு சின்னப்பிரச்சினை அதுதான் உங்களிட்டைச் சொல்லியிட்டுபோவம் எண்டு நினைச்சனான்’

‘ஏன் தம்பி என்ன பிரச்சினை?

‘எனக்கு தெரிஞ்ச பெரியவர் ஒராள் தவறியிட்டார் அதுதான் எனக்கு கொஞ்சம் வாறதுக்கு சிரமம் போலை இருக்குது’ மீண்டும் பொய்மையும் வாய்மையுடைத்து
‘ கூட்டத்துக்கும் அறிவிச்சிட்டீர் அதையும் நிப்பாட்டேலாது. நீரும் நிக்கமாட்டீரெண்;டால் இப்ப என்ன செய்யிறது எண்டு விளங்கயில்லை. உம்மையும் தெண்டிக்கேலாது.’

‘ஓம் ஐயா மற்றாக்கள் மாதிரி நானும் உங்களைத்தான் கரைச்சல் படுத்திறன் போலை கிடக்குது’

‘சரி தம்பி என்ன செய்யிறது, பொதுவேலை மறுக்கவும் ஏலாது சரி நான் பாக்கிறன்’;

வீட்டிற்கு வந்து தலை முழுகிய என்னை மனைவி வினோதமாகப்பாhத்தாள்

‘ஏனப்பா எங்கையும் துடக்கு வீட்டை போனனீங்களோ? போட்ட உடுப்போடை குளிக்கிறியள்
‘ஓம் எனக்கு தெரிஞ்ச பெரியவர் ஒராள் தவறியிட்டார் அதுதான்’

இப்போது பொய்மையும் வாய்மையுடைத்து என்று நினைக்க முடியவில்லை உண்மையில் யாரோ தவறிவிட்டது போலத்தான் இருந்தது.

(யாவும் சிந்தனைக்கு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *