எங்கிருந்தோ வந்தாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 13,298 
 

“ஹலோ… ஏ 9840071…. ஹேனா?” என்கிற பெண்ணின் கரகர குரல், சற்றே பதற்றத்தோடு, ஹிந்தியில் பேசியது. யாராக இருக்கும் என்று கேட்க ஆவலாக இருந்தாலும், ஆபீஸ் மீட்டிங்கில் இருந்ததால், பதில் எதுவும் பேசாமல் போனை கட் செய்தேன்.

அடுத்த அரை மணி நேரத்தில் மூன்று கால்கள் அதே நம்பரில் இருந்து. மீட்டிங் முடிந்து, அன்றைய மண்டகப்படியை வாங்கிக்கொண்டு வெளியே வந்ததும், மிஸ்டு கால் நம்பருக்கு டயல் செய்தேன்.

”ஹலோ…”

“யாரு சார்..?”

“சார்… இந்த நம்பர்லேர்ந்து மிஸ்டு கால் வந்திருக்கு…”

”சார்… இது பிசிஓ.. உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தவங்களைப் பார்க்கறதா என் வேலை..?” என்று போனை வைப்பதற்கு முன், என் பரம்பரை பற்றிய சந்தேகத்துடன் வைத்தான்.

‘இது எனக்குத் தேவையா?’ என்று அன்றைய பேங்க் வேலைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப, மறுபடியும் போன் அடித்தது. மீண்டும் அதே ஹிந்திக் குரல்; அதே கேள்வி!

“யெஸ்… வாட் கேன் ஐ டு ஃபார் யூ?” என்று கேட்டேன். அவள் படபடவென ஹிந்தியில் சப் டைட்டில் இல்லாமல் பேச, அவளுக்கு ஏதோ பிராப்ளம், அவசரம் போன்ற மிக முக்கிய வார்த்தைகள் மட்டுமே புரிந்தன. என் பேங்க் வேலை என்னை அழைத்தாலும், அந்தக் குரலுக்கு உரிய பெண்ணைப் பார்ப்பதற்கு உள்ளுக்குள் ஆர்வம் எழவே, “ஒரு மணி நேரம் கழித்து போன் செய்” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டேன்.

பேங்க்கில் மேனேஜருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, போன் வந்தது. மீண்டும் அதே குரல், பதற்றம். அவள் அப்போலோ ஹாஸ்பிடல் அருகில், ஒரு பெட்டிக்கடையில் இருப்பதாக, தப்புத் தப்பான ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மாறி மாறிச் சொன்னாள். எனக்கு ஹிந்தி பேசும் பெண் யாரையும் தெரியாது. மேலும், ஆண்மையும் பெண்மையும் கலந்த அந்தக் கரகர ராணி முகர்ஜிக் குரல் என்னை இழுந்தது. ‘யாருன்னு தான் பாத்துடுவோமே’ என்று வண்டியைக் கிளப்பி, அப்போலோ ஹாஸ்பிடல் அருகில் பார்க் செய்துவிட்டு, அந்தப் பெட்டிக்கடையைப் பார்த்தேன். இவளா… இவளா? இவளா எனக்கு போன் செய்தவள்?

‘டேய் ரமேசு… உனக்கு சுக்ரதிசை போலிருக்கு. உனக்கெல்லாம் வாழ்வுடா!’ – ஓசியில் ஒரு ஃபுல் பிளாக்லேபிள் கிடைத்து போல இருந்தது. 17 அல்லது 18 வயசுதான் இருக்கும். எங்கேயும் எக்ஸ்ட்ராவாக கிள்ளக் கொஞ்சம்கூட சதையில்லாத, மாடல் போன்ற உடல். அழுக்கேறிய ஜீன்சும் பூப்போட்ட டாப்சும் போட்டுத் ததும்பியபடி நின்றிருந்தாள். அந்தக் குட்டியூண்டு கடை முன் பதற்றத்தோடு அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி நடந்துகொண்டே இருந்தாள்.

எனக்கு அவளைச் சத்தியமாகத் தெரியாது. ‘தெரியாதுன்னா போயிடு’ன்னு புத்திசொன்னா லும், மனசு கேட்கவில்லை. உள்ளுக்குள் ஏதோ ஓர் ஆபத்து என மணியடித்ததால், வண்டி மீது அமர்ந்தபடி அவளையும் அந்த ஏரியாவையும் வாட்ச் பண்ண ஆரம்பித்தேன். அவள் இன்னும் டென்ஷனாக இருந்தாள். காயின் பாக்ஸ் போனில் இருந்து இன்னும் இரண்டு போன் பண்ணினாள். அதே நம்பர்… உள்ளுக்குள் ஜிஞ்சர் அடிச்ச சந்தோஷம். சரி, போக லாம் என வண்டியைக் கிளப்பி அவள் அருகில் போய் நின்று, என்ன பேசுவது என்று யோசிப்பதற்குள், ஓடி வந்தவள், “9840071…..?’ என்று கேட்டு, நான் ‘ஆம்’ என்று சொல்வதற்குள், சட்டென வண்டியில் ஏறி, “ஜாவ்… ஜாவ்.. ஜல்தி…” என்று என்னை இறுகக் கட்டிக்கொண்டாள். எப்போது வண்டியை ஸ்டார்ட் செய்தேன், எப்படி கியர் போட்டேன் என்றெல்லாம் தெரியாது. இங்கிலீஷ் பட சேஸிங் ஸீனில் ஹீரோயினுடன் வண்டி ஓட்டும் ஹீரோ போல, அந்தக் குறுகிய ரோடில் எதிரே வந்த ஆம்புலன்சுக்கும் ஆட்டோவுக்கும் மத்தியில் புகுந்து வெளிவந்தேன். அப்போதுதான் பார்த்தேன், என் பின்னால் ஒரு ஆட்டோ தொடர்வதை. அது என்ன என்று புரிவதற்குள், ஆட்டோ என்னை முந்தி மறித்தபடி நிற்க, இரண்டு பேர் இறங்கினார்கள். போதை யில் இருந்தார்கள்.

”என்ன பாசு… நாலு ஹவரா உஷார் பண்ண ட்ரை பண்றோம்… சட்டுனு நீ வந்து பிக்கப் பண்ணிட்டியே..?”

இந்தச் சமயத்தில் என்ன செய்வது என்றேதெரியவில்லை. எனக்குக் கராத்தே எல்லாம் தெரியாது. இதுவரைக்கும் யாரையும் அடித்ததில்லை. ஒரே ஒரு முறை வாங்கியிருக்கிறேன், ஒரு பெ… சரி, அது அநாவசியம்… விடுங்கள். இப்போது என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், வண்டியின் சாவியை எடுக்க முயன்றார்கள்.

“ஹலோ, இவ என் ரிலேஷன்.”

”ஹை… தோடா! ரிலேஷனா? அப்ப எதுக்கு நைனா முக்கா ஹவரா நூல் உட்டுக்கினு இருந்த..?”

யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்திருந்தது எவ்வளவு மடத் தனம். பின்னால் இறுகக் கட்டிய அந்தப் பெண் மேலும் இறுக்கிக்கொண்டு அட்டை மாதிரி ஓட்டிக்கொள்ள, நான் சட்டென வண்டியை ஸ்டார்ட் செய்து இடிக்கப் போக, அவர்கள் கொஞ்சம் தடுமாறிய சைக்கிள் கேப்பில் நான் வண்டியைவிட, அவர்கள் என்னை ஆட்டோவில் துரத்த, வண்டியை நேராய் கிரீம்ஸ் ரோடில் செலுத்தி, எதிரே இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் வண்டியை நிறுத்தி, பின்னால் வந்த ஆட்டோவைப் பார்த்தேன். அவர்களும் வண்டியை சடன் பிரேக்கிட்டு நிறுத்தி, என்ன செய்யப் போகிறேன் என்று பார்த்தார்கள். சந்தடி சாக்கில் எதிர்ப்பக்கம் வண்டியைச் சடாரென திருப்பிவிட, இதை எதிர்பார்க்காத அவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள், டிராஃபிக் அதிக மாகி, திரும்ப முடியாமல்திண் டாடுவதைப் பார்த்ததுதான் கடைசி. நிமிடங்களில் வண் டியை விரட்டி, மகாத்மா காந்தி ரோடில் திரும்பிய போது, பின்னால் இருந்து “பூக் லக்தாஹே..” என்றது கிளி. வண்டியை அருகில் இருந்த ராமாஸ் ஹோட்டலுக்குள் விட்டேன்.

”என்ன வேண்டும்?” என்று கேட்டதற்கு, தோசா என்றாள். நான் அதையே வழிமொழிந்துவிட்டு, ”நீ யார்..? உன் பேர் என்ன?” என்று எனக்குத் தெரிந்த இந்தியில் வார்த்தைகள் கோப்பதற்குள், “மேரா நாம் நிஷா” என்றாள்.

அதே கரகர குரலில் அவள் பேசுவதைக் கேட்பதா… உதடுகளைப் பார்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்தபோது, தோசை வந்துவிட்டது.

இதுவரை ஒரு பெண் இப்படிச் சாப்பிட்டுப் பார்த்ததே இல்லை. ஐந்து நிமிடங்களில் இரண்டு தோசைகளையும் ஒரே மூச்சில் தின்றுவிட்டு, கொஞ்சம் ஆசுவாசமாகி, தண்ணீர் குடித்துவிட்டு… என்னை நிமிர்ந்து பார்த்து, “நீ என்னிடம் வந்திருக் கிறாயா?” என்றாள்.

வந்திருக்கிறாயாவா..? எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. யார் இவள்? எந்த மாதிரியான பெண் இவள்? தெரியாமல் பிரச்னையில் மாட்டிக்கொண் டோமோ? எப்படி என் நம்பர் இவளுக்குக் கிடைத் தது?

“நீ இவ்வளவு யோசிப்பதைப் பார்த்தால், என்னி டம் வந்ததில்லை போலிருக்கிறது. பிறகு எப்படி உன் நம்பர் என்னிடம்..?” என்றபடி பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு பேப்பரை எடுத்து, அதில் இருந்த நம்பரை எனக்குக் காட்டினாள். சட்டென்று பார்த்தால், என் நம்பர் போலவே இருந்தது. ஆனால், அது என் நம்பர் அல்ல. 9841071…. என் நம்பர் 98400ல் ஆரம்பிக்கும். ஒன்றுடன் சேர்த்த மாதிரி ஜீரோவைப் போட்டதால் இரண்டு ஜீரோ போலத் தோன்றியது.

“உன்னைப் பார்த்தால் என்னிடம் வந்து போன வன் போல் தெரியவில்லை. எனக்கு வழக்கமாக முகங்கள் ஞாபகம் இருப்பதில்லை. என்னை முதன் முதலில் மேய்ந்தவனைத் தவிர… அவன் என் அண் ணன் முறை. அவன் முகத்தை என்னால் மறக்க முடியாது. என்னை மிகப் பெரிய மாடலாக்கிக் காட்டுகிறேன் என்றான். அப்புறம் தப்பி, அங்கே இங்கே சிக்கி, சென்னை வந்தேன். இதில் இருந்தே என்னைப்பற்றிப் புரிந்திருக்கும். நான் இந்த நிலையில் தள்ளப்பட்டதைவிட, என் அண்ணனின் துரோகம் என்னைத் துக்கத்தில் அழுத்தியது. இனி அழுது பிரயோ ஜனம் இல்லை என்று புரிந்தவுடன் எப்படியாவது நாலு காசு சம்பாதித்து அடைய வேண்டியதை அடைய முடிவு செய்தேன்.

பல இடங்கள், பல வீடுகள்… அப்படி வந்த ஒருவன் இந்த நம்பரைக் கொடுத்தான். மாடல் கோ-ஆர்டினேட்டர் என்றான். உன்னைப் பெரிய ஆளாக்குகிறேன் என்றான். நான் இருந்த வீட்டில் ரெய்டு வந்துவிட்டது. இங்கேதான் ரெசிடென்ஸி ஹோட்டலுக்குப் பக்கத்தில்! அங்கிருந்து தப்பிக்கும்போது, என் உடைமைகள் எல்லாமே போய் விட்டன.

ஒரு நாள் முழுவதும் எங்கே இருக்கிறோம் என்று தெரி யாமல், ஹோட்டலின் சுவரோரமாக இருந்த ஜெனரேட்டர் ரூமில் ஒளிந்திருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். ராத்திரி அடித்த ஜின்னின் வேலை. விழித்துப் பார்த்தபோது என் ஆடைகள் கலைந்திருந்தன.

கடந்த இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. கையில் சில்லறைக் காசுகளைத் தவிர, வேறெதுவும் இல்லை. என்னிடம் இருந்த ஒரே ஒரு நம்பர் இதுதான். அதனால்தான் வேறு வழி இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.”

இதற்குள் பில் வர, செட்டில் பண்ணிவிட்டு வெளியே வந்திருந்தோம். இப்போது அவள் முகத்தில் பரபரப்பு குறைந்து, அமைதியாகி, மேலும் அழகாக இருந்தாள். ரோடில் போகிறவர்களின் பார்வையெல்லாம்… எங்கள் மீது சூடாக இருந்தது.

”இப்போது என்ன செய்யலாம்..?”

“ஒரு தம் அடிக்கலாமா? எனக்கு கிளாசிக் மைல்ட். உனக்கு..? நீ அடிப்பாயல்லவா..? நான் வாங்குகிறேன் என்னிடம் சில்லறை மட்டுமே இருக்கிறது.”

இரண்டு சிகரெட்டுகள் வாங்கிப் பற்றவைத்துஎனக்கும் பற்றவைத்து… ஆழமாக ஓர் இழுப்பு இழுத்தாள். முதன் முதலாக ஒரு பெண் தம் அடிப்பதை நேரில் பார்க் கிறேன்.

“சொன்னால் நம்ப மாட்டாய்… இதெல்லாம் இந்த மூன்று மாதங்களில் பழகியது.”

இந்தச் சின்ன வயதில் எவ்வளவு வலி மிகுந்த அனுப வங்கள். இவ்வளவு பிரச்னையிலும் அவள் உறுதியாகப் பேசுவது ஆச்சர்யமாக இருந்தது. அவள் மேல் மரியாதை வந்தது.

“சரி… இப்போ என்ன செய்யலாம்? உன்னை எங்கே டிராப் செய்யட்டும்?”

“எனக்காக ஓரு உதவி செய்வாயா? கண்டிப்பாகச் செய்ய வேண்டும். வேறு வழி இல்லை. என்னைக் கூட்டிக் கொண்டு மீனம்பாக்கம் ஏர்போர்ட் போ! ஏதாவது ஒரு ஃப்ளைட்டில் எனக்கு மும்பைக்கு டிக்கெட் எடுத்துக் கொடு. கொஞ்சம் செல வுக்குப் பணம் கொடு. போதும். மேலே தேவையென்றால் தேற்றுவது எப்படி என்று எனக்குத் தெரியும். என்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப் பாக ரயில் நிலையம் பக்கத்தில் தேடிக்கொண்டு இருப்பார்கள் அதனால்தான் ஏர்போர்ட். உன் விலாசம் கொடு… கண்டிப்பாக உனக்குத் திருப்பித் தருவேன்.”

நான் பதிலேதும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய… அவளும் ஏறிக்கொண்டாள். ரொம்ப நேரம் ஏதும் பேசாமல் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தேன். எதற்காக இவளுக்கு உதவி செய்கிறேன்? இவளுக்கும் எனக்கும் என்ன உறவு? ஏன் எதையும் மறுக்காமல் இவள் சொல்வது போல் செய்கிறேன்? ஒருவேளை இவள் அழகில் மயங்கிவிட்டேனா? என்னை ஏமாற்றுகிறாளோ? பல எண்ணங்கள் என்னைச் சுற்றி வந்ததால், யோசித்துக்கொண்டே வண்டி ஓட்ட, என்னை அணைத்தபடியே வந்தவ ளின் இறுக்கம் மேலும் அதிகமாகியது. மெள்ள என் காதோரம் வந்து அதன் நுனியைத் தன் நாக்கால் சீண்ட, எனக்குள் ஜிவ்வென்ற உணர்வு சகலமும் பரவ, கன்ட்ரோல் செய்ய முடியாமல் வண்டியை ஸ்லோ செய்தேன்.

“க்யா… கடே ஹோகயா? நீ எனக்கு உதவி செய்திருக்கிறாய். எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். செலவு செய்கிறாய். என்னதான் நான் திருப்பிக் கொடுப்பேன் என்று நம்பினாலும், என்னால் உனக்கு எதுவும் பலன் இல்லை. அதனால்தான் சொல்கிறேன்… இங்கேயே ஏதாவது ஒரு ஹோட்டலில் ரூம் எடு. அல்லது உன் நண்பர் கள் இடம் இருந்தால் சொல். உனக்கு நான் எத்தனை நாள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ, அது வரை இருக்கிறேன். யோசிக்காதே… என்னைப் பார்த்து உனக்கு ஏதும் தோன்றவில்லை என்றால், நான் நம்ப மாட்டேன்” என்றாள்.

நான் எதுவும் பேசாமல் வண்டியை ஏர்போர்ட் பார்க் கிங்கில் நிறுத்திவிட்டு, மும்பைக்கு என் கார்டிலிருந்து தேய்த்து டிக்கெட் எடுத்தேன். இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. என் கையை இறுகப் பற்றியபடி, கண்களில் ஒரு விதமான ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

லவுஞ்சில் காபி வாங்கிக் கொடுத்தேன். காபியை உறிஞ்சியபடி என்னைப் பார்த்து, “நிஜமாவே என்கூட இருக்க விருப்பமில்லையா? இப்போதுகூட நான் ரெடி! என்னால் தாங்க முடியவில்லை. ஏதோ கடன் பட்டதைப் போல் இருக்கிறது. ஒருவேளை, நான் கால்கேர்ள் என்பதால் என்னைப் பிடிக்கவில்லையா..?” என்கிறபோதே, அவள் கண்களில் கண்ணீர் பனிக்க ஆரம்பித்தது.

”ஹேய், என்ன இது… விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால், உன் பரிதாப நிலையைப் பயன்படுத்திக்கொள்ள விருப்பம் இல்லை. அதுவும் முன்பின் பழகாமல்… அதனால்தான்…” என்றபடி அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன்.

அழுத முகம் இன்னும் சிவந்து அழகானது. அப்படியே அவளை அணைத்து ஆறுதல் சொல்லத் தோன்றியது. அப்படிச் செய்தால் இன்ன மும் உடைந்துவிடுவாளோ என்று பயந்து தவிர்த்தேன்.

மும்பை ஃப்ளைட் அறிவிப்பு வர, அவள் தன் முகத்தை இறுக்க அழுத்தி, உள்ளுக்குள் பெருமூச்சுவிட்டு, “ஓகே… நான் கிளம்பறேன். பட்… கண்டிப்பா உன் பணம் உனக்குத் திரும்ப வரும். உன் அட்ரஸ் கொடு… போன் நம்பர் கொடு” என்றாள்.

அட்ரஸையும் போன் நம்பரையும் வாங்கிக்கொண்டு செக்யூரிட்டி செக் வாசல் வரைக்கும் சென்றவள்… என்ன நினைத்தாளோ, அங்கிருந்து ஓடி வந்து அந்தக் கூட்டம் இருந்த லவுஞ்சில் என்னை இறுக அணைத்து என் உதட்டோடு அழுத்தமாக முத்தமிட்டு, ”பை… எந்தவிதமான எதிர் பார்ப்பும் இல்லாமல் உதவும் ஓர் ஆணை இன்றுதான் பார்த்தேன். நன்றி… உன்னை மறக்க மாட்டேன்!” என்று சொல்லியபடி அழுதுகொண்டே உள்ளே போனாள்.

நான் அவள் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் முத்தமிட்ட உதடுகளில் லேசான வலி இருந்தது!

– ஜூன், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *