பூவே சுமையாகும் போது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 9,287 
 

“பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?”

என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை அமைந்த திறந்தவெளியில் மாலையில் காலார நடந்துகொண்டே புத்தகம் படிப்பவர் சுற்றிலும் நடப்பதை முற்றிலும் மறந்துவிடுவார்!

நுழைவாயில் இரும்புக் கதவின் ஈட்டிக் கம்பியில் மாட்டியுள்ள மஞ்சள் பையினுள் பார்த்தேன். இரண்டு முழம் மல்லிகையும் ஒரு முழம் ஜாதி மல்லிகையும் இருந்தது. பூச்சரங்களை எடுத்துக் கணவரிடம் காட்டினேன்.

“பாருங்கோ, மூணாவது நாளா இன்னைக்கும் மல்லி மலர்ந்தே இருக்கு.”

“மலர்ந்தே இருப்பது நல்லதுதானே?”

“புரியலையா? மல்லிகை எந்தப் பொழுதுல மலரும்? ’அந்திக் கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ’ன்னு பாடத் தெரியுதில்ல? அந்த மல்லி சாயங்காலம் அஞ்சு மணிக்கே மலர்ந்து இருந்தால் என்ன அர்த்தம்?”

“ஓஹோ, அப்ப முதல்நாள் மலர்ந்த மல்லிகைப் பூவை இன்னிக்கு நம்ம தலைல கட்டிட்டாங்கறியா?”

“ஆமா. அதுவும் மூணாவது நாளா! எத்தனையோ தரம் சொல்லியும் வாரத்தில ரெண்டொருநாள் இது மாதிரி செய்யறா. இத்தனைக்கும் காலிங் பெல்லை அடிச்சுப் பூவை என் கையிலோ உங்க கையிலோ தரணும்னு சொல்லியிருக்கேன். ஆனாலும் சத்தம் போடாம பையில போட்டுட்டுப் போயிடறா. இன்னைக்கு நான் அவள்ட்ட பேசணும், அதனால அவள் வர்றதை வாட்ச் பண்ணுங்கோன்னு உங்ககிட்ட சொல்லிவெச்சேன்.”

“நாமதான் தினமும் அறுபது ரூபாய்க்குப் பூ வாங்கறோம், எப்படியும் மாசம் ரெண்டாயிரம் ரூபாய் மொத்தமா தர்றோம். நல்ல பூவாத் தரவேண்டியதுதானே?”

“என்கிட்டக் கேக்காதீங்கோ. இதை நாளை சாயங்காலம் அவளைத் தவறாமாப் பார்த்துக் கேளுங்கோ. நாளைக்கு எனக்கு வங்கியில கஸ்டமர் சர்வீஸ் மீட்டிங் இருக்கு. முடிஞ்சு வீட்டுக்கு வர ஆறு மணியாய்டும்.”

மறுநாள் அந்த மீட்டிங் ஒத்திவைக்கப் பட்டுவிட, நான் மாலை சீக்கிரமே வந்து தெரு முனையிலேயே பூக்காரியைப் பிடித்துவிட்டேன். மூன்றாவது வீட்டு ரமா மாமி கூடவே நடந்து வந்ததால் வீட்டுக்குள் நுழைந்ததும் செருப்பை வாசல் கிணற்றடியிலேயே விசிறிவிட்டு அவளிடம் வெடிக்க நினைத்து புஸ்வாணமாகக் கேட்டேன்.

“ஏம்மா, நீ எத்தனை நாளா எனக்கு பூ விற்கறே?”

“மூணு வருஷம் இருக்கும்மா.”

“நாங்க உன்கிட்ட மாசம் பெரும்பாலும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு பூ வாங்கறோம் இல்ல? அந்தப் பணத்தக்கூட நீ கணக்குவெச்சு மொத்தமாத் தரச் சொன்னதால மாசம் பொறந்தவுடன் மூணு தேதிக்குள்ள தந்திடறோம் இல்ல? அதுல என்னிக்காவது லேட் பண்ணியிருக்கமா?”

“நீங்க இவ்வளவு தொகைக்கு பூ வாங்கறது எனக்கு உதவியா இருக்கறதால தானம்மா நான் இந்த பெரிய பிளாஸ்டிக் கூடை நிறையப் பூவைத் தூக்கிக்கிட்டு உங்க வீட்டுக்கு மொத போணியா கேம்ப் ரோட்லேர்ந்து நடையா நடந்து வர்றேன். சமயத்தில வழியில உங்களைப் பார்த்திட்டேன்னா எனக்கு அந்த நடை கூட இல்லை. இன்னா விசயம் சொல்லுங்க?”

“அப்புறம் ஏன் வாரத்தில ரெண்டு மூணு நாளைக்கு முதல்நாள் மலர்ந்த மல்லியா போடுறே? நீ குடுக்கற ஜவ்வந்திப்பூகூட பலசமயம் ஃப்ரெஷ்ஷா இருக்கறதில்ல?”

“அய்யோ நா ஏம்மா முதல்நாள் பூவைப் போடறேன்? சாமந்தி, மல்லி, ஜாதிப் பூன்னு தாம்பரம் மார்க்கட்ல என்ன கிடைக்கறதோ அதுல நல்ல சரக்காப் பார்த்துதானேம்மா உங்களுக்குத் தர்றேன்? நீங்க ஏற்கனவே ரெண்டு மூணு வாட்டி எங்கிட்ட இதக் கேட்டு நான் இந்த பதிலைச் சொல்லியிருக்கேன். அப்படியும் உங்களுக்குத் திருப்தியில்லேன்னா நா என்ன செய்யறது?”

“அப்படீன்னா ஏன் மொட்டு மல்லியை விட மலர்ந்த மல்லிப்பூ மட்டும் ஈரமா இருக்கு?”

“தாம்பரம் மார்க்கெட்லயே தண்ணி தெளிச்சும் ஈரத்துணியப் போட்டு மூடியும் தாம்மா பூ விக்கறாங்க? அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?”

நான் அதை முழுதும் நம்பவில்லை என்பதை அவள் கண்டுகொண்டாள்.

“உங்களுக்கே தெரியும் இல்லையாம்மா? உங்க வீடு முடிஞ்சதும் நான் இன்னும் நாலஞ்சு தெரு சுத்துவேன். தினமும் இருபது ரூபாய்க்குப் பூவாங்கற வாடிக்கைக் காரங்களுக்குப் பூப்போடுவேன். கடைசியா நீங்க வர்ற வழியில இருக்கற அம்மன் கோவில் வாசல்ல உக்காந்து வியாபாரம் பண்ணிட்டு, மீந்த பூவைப் பெரும்பாலும் சாமிக்கே கொடுத்திட்டு எழறை-எட்டு மணிக்கு வீட்டுக்குக் கெளம்பிப் போவேன். அப்புறம் நா எப்படி பழைய பூவை உங்களுக்குத் தருவேன்னு நெனக்கறீங்க?”

“நீ பெரும்பாலும் நல்ல பூவாத்தாம்மா தர்ற, இல்லேங்கல. அதுவும் மாசா மாசம் எங்க சங்கடஹர சதுர்த்தி பூஜைக்காக நீயே மாலையாக் கட்டி ஐம்பது ரூபாய்க்குத் தர்ற அருகம்புல் பிள்ளையார்க்கு ரொம்ப அழகா இருக்குன்னு நானே உன்கிட்ட சொல்லியிருக்கேன். ஒரு வாரம் போய்க்கூட அது வாடாம இருக்கும். ஆனால், சேலையூர் கேம்ப் ரோடுலேர்ந்து நான் வீட்டுக்கு சாயங்காலம் வரும்போது பல பூக்காரிங்க நச்சரிப்பாங்க. நீ தர்ற விலையை விடக் கொஞ்சம் கூடவே இருந்தாலும் அந்தப் பூவெல்லாம் நல்ல மணத்தோட ஃப்ரெஷ்ஷா இருக்கு. உன்னோட பூ மட்டும், அதுவும் செவ்வாய் வெள்ளி பூஜைக்காக நீ மொதல் நாள் போடும் போது இந்த மாதிரி பழசாத் தெரிஞ்சா எனக்கு ஏமாற்றமா இருக்கு இல்ல?”

“பத்து பேர் ஒரு இடத்துல சேர்ந்து பூ விக்கறபோது வாசனையா, கவர்ச்சியாத் தாம்மா இருக்கும். வாங்கிப் பாத்தாத் தானே தெரியும்?”

அவளின் இந்த பதில் எனக்குப் பிடிக்கவில்லை. “அப்ப நான் அவங்ககிட்டேயும் பூ வாங்கிப் பார்க்கலாம்னு சொல்ற?”

“உங்க இஷ்டம்மா. நான் என்னத்தச் சொல்ல? என்னைப் பொறுத்தவரைக்கும் அக்கறையோட தாம்மா உங்க வீட்டுக்கு நான் பூ போடறேன்.”

“என்னவோம்மா. நீ போடற பூவை நாங்க பெரும்பாலும் சாமிக்குதான் சூட்டறோம். ஏதாவது குறையிருந்தா அந்தப் பாவம் உன்னையும்தான் சேரும்.”

“என்னோட பொழப்புல அப்படிப் பாவம் வருதுன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்மா? சரிம்மா, நாளன்னிக்கி ரெண்டாம் தேதி, பவுர்ணமி. நான் திருணாமலை கிரிவலம் போறேன். அதனால வழக்கம்போல நாளைப் பூவையும் சேத்து இன்னைக்கே போட்டுடறேன். போன மாசக் கணக்குப் பணத்த நான் வந்ததும் அஞ்சாறு தேதிக்கா வாங்கிக்கிறேன்.”

அந்த வார்த்தையை நான் சொல்லியிருக்கக் கூடாது என்று இப்போது பட்டது. தேதி பத்தாகியும் பூக்காரி இதுவரை மாலை வரவேயில்லை!

எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. போன மாசம் வாங்கியிருந்த பூக்கணக்கு ரூபாய் இரண்டாயிரத்து முன்னூறைத் தாண்டியிருந்தது. அந்த பாக்கி ஒரு பெரும் சுமையாக என் தலையில் ஏறியது. ’எங்கேயாவது ஊருக்குப் போயிருப்பா. எப்படியும் வந்திடுவா’ என்று என் கணவர் சொன்ன சமாதானம் எனக்குத் திருப்தியாக இல்லை.

மூன்று வருடமாக வீட்டு வாசலுக்கு வரும் பூக்காரியின் பெயர் கூட எனக்குத் தெரியாது! அவள் குடும்பம், வீடு பற்றிய விவரங்களை நான் என்றுமே அவளிடம் கேட்டறிந்ததில்லை. அவளாகவும் சொன்னதில்லை. இந்தத் தெருவில் நாங்கள் மட்டுமே இவளிடம் பூ வாங்குகிறோம். மற்ற தெருக்களில் வாங்குவோர் பற்றியும் எனக்குத் தெரியாது.

நாங்கள் மாதக் கணக்கில் தரும் பணம் அவள் பேரக் குழந்தையின் பள்ளிப் படிப்புக்கு உதவுவதாக அவள் எப்போதோ சொல்லியிருந்தது நினைவில் நெருட அன்று மாலை வீட்டுக்கு நான் நடந்து வந்தபோது, அந்த அம்மன் கோவில் வாசலில் பார்த்தேன். அங்கும் அவளைக் காணவில்லை. கோவிலில் விசாரித்தும் யாருக்கும் எதுவும் விவரம் தெரியவில்லை.

போன வருடம் ஒரு நாள் மாலை அவள் கேம்ப் ரோடைக் கடந்தபோது ஒரு மோட்டார் பைக் இடித்துவிட, நல்லவேளையாக அடி அவள்மேல் படாமல் அவள் பிளாஸ்டிக் கூடையில் பட்டுப் பூவெல்லாம் கொட்டி வீணானது என்றும் அந்த பைக்கை ஓட்டியவன் நிற்கவேயில்லை யென்றும், உடலில் நடுக்கத்துடனும், குரலில் படபடப்புடனும் அவள் சொன்னது என் காதில் ஒலித்தது: ’அந்த அண்ணாமலையார் தாம்மா என்னை இன்னைக்குக் காப்பாத்தினார்.’ அதுபோல் ஏதாவது ஆகியிருக்குமோ என்று என் மனதில் பயம் துளிர்விட ஆரம்பித்தது.

அம்பாள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறாள்? நான் தினமும் மாலை அவளுக்கும் அவள் வேழமுகப் பிள்ளைக்கும் விளக்கு-ஊதுவத்தி ஏற்றிவைத்து, எல்லா ஸ்வாமி படங்களுக்கும் வீட்டில் பூத்த செவ்வரளிப் பூவைப் பறித்துவைத்து, நித்தியமல்லிப் பூக்களைக் காலடியில் தூவி சமஸ்கிருத, தமிழ்த் துதிகள் சொல்லி வழிபட்டுவிட்டுப் பின் பூஜை அறையின் எதிரில் உள்ள திண்ணையில் அமர்ந்து அக்கறையாக ’லலிதா சகஸ்ரநாமம்’ பாராயணம் பண்ணுவதில் ஏதாவது குறையா?

அல்லது ஒவ்வொரு வெள்ளி செவ்வாய்க் கிழமை மாலையும் நான் ஏதேனும் பிரசாதம் படைத்து பூஜை செய்து கற்பூர ஆராதனை காட்டுவதிலோ, அன்று அதிகப்படியாக நான் பாராயணம் பண்ணும் லலிதா திரிச்சதி, அபிராமி அந்தாதி போன்ற துதிகளிலோ ஏதாவது குறை வைத்தேனா? எனக்கு ஏன் இந்த சோதனை, கடன்சுமை?

அந்த மாதம் முழுவதும் அவள் வரவில்லை. நிச்சயம் அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று என் உள்ளுணர்வு சொன்னது. கணவரின் ஆலோசனையின் பேரில் வரும் மாதப் பௌர்ணமி தினத்தன்று நாங்கள் இருவரும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து அவளைத் தேடிப் பார்க்கத் தீர்மானித்தோம்.

பௌர்ணமி தொடங்கும் நேரத்திலேயே அவள் பெரும்பாலும் கிரிவலம் செல்லுவாள் என்றும் அப்போதுதான் அதிகம் கூட்டம் இருக்காது என்றும் அவள் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வர, அந்த மாதப் பௌர்ணமி கிரிவலம் காலை ஏழுமணி முதல் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்ததை இணையத்தில் தேடி, அதற்கு முன் அண்ணாமலையாரையும் அம்மனையும் தரிசித்துவிட்டு எங்கள் கிரிவலத் தேடலைத் தொடங்கினோம்.

கூட்டம் சிறித்து சிறிதாக அதிகரித்தது. நாங்கள் நாலு மணி நேரம் சுற்றி அலைந்து, வழியில் உள்ள தெய்வங்களைக் கூட சரியாக தரிசனம் செய்யாமல் தேடியும் எந்தப் பலனும் இல்லை. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நாங்கள் தங்கிய லாட்ஜில் வந்து விழுந்தபோது ஆயாசமும் துக்கமும் அச்சமுமே எஞ்சி நின்றது.

எங்கள் வீட்டு வேலைக்காரி, குடுவைக் குடிநீர் தருபவர், மளிகைக் காரர், வாடகைக்கார் நிறுவனம்–இப்படி எல்லோரோட முகவரியும் செல்ஃபோன் நம்பரும் தெரிஞ்சு வைத்திருக்கும் நாங்கள் ஏன் இந்தப் பூக்காரி விஷயத்தில் அலட்சியமாக இருந்தோம் என்ற குற்றவுணர்வு தலைதூக்கி எங்களை வாட்டியது. இனி அவளைப் பார்க்கப் போவதில்லை என்ற அச்சம் மட்டும் குறையவே இல்லை.

அன்று மாலை சுவாமி தரிசனம் செய்வதற்கு முன், அவளுக்குச் சேர வேண்டிய கடன்பாக்கியான ரூபாய் 2,300-உடன் அதை உடனே தரமுடியாததற்குப் பிராயச்சித்தமாக மேலும் ரூபாய் எழுநூறு சேர்த்து, மொத்தம் ரூபாய் மூவாயிரத்தைக் கோவில் கடைகளில் அல்லாமல் சுற்றியிருந்த தெருக்களில் பூ வியாபாரம் செய்யும் பத்து பூக்காரிகளைப் பார்த்து ஒரு வேண்டுதல் என்று கூறி ஒவ்வொருவருக்கும் ரூபாய் முன்னூறு திரவிய தானமாகச் செய்தோம். பதிலுக்கு அவர்கள் தந்த ஒவ்வொரு முழம் பூவை சுவாமி-அம்பாள் காலடியில் சேர்த்து, அம்பாளுக்கு அவள் பேரிலேயே அர்ச்சனை செய்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்பினோம்.

மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் எங்கள் பூஜை-புனஸ்காரங்களைத் தொடர முடிவுசெய்து நாங்கள் காலை ஐந்து மணிக்கே எழுந்து, நான் முதலில் குளித்துவிட்டு, அம்பாளுக்குப் பூவைத்து விளக்கும் ஊதுவத்தியும் ஏற்றிவைத்த போது மனதில் சற்று பாரம் குறைந்திருந்தது. கணவர் வழக்கம்போல் தன் படிப்பறையில் கணினியில் மூழ்கியிருந்தார்.

எட்டு மணியளவில் வாசலில் அழைப்புமணி சத்தம் கேட்க, யார் என்று பார்க்கச் சென்றேன். மூன்றாம் வீட்டு ரமா மாமிதான்.

“நீங்க ரெண்டுபேரும் ஒங்க பூக்காரியைத் தேடிண்டு திருவண்ணாமலை போனேளா, அவள் நேத்து சாயங்காலம் உங்காத்துக்குப் பூப்போட வந்தா. அவள் மாமியாருக்கு திடீர்னு உடம்பு முடியாமப் போய் ஆஸ்பத்திரில சேர்த்ததால ஊருக்குக் கிளம்பிப் போய்ட்டாளாம். பத்துநாள் அட்மிட் பண்ணியும் குணமாகாம அவர் காலமாய்ட்டாராம், காரியம்லாம் முடிச்சிட்டு வர இவ்ளோ நாள் ஆய்ட்டதாம்.”

குரல் கேட்டு என் கணவர் எழுந்து வந்தார். “இன்னைக்கு சாயங்காலம் அவள் வந்ததும் முதல் வேலையா அவள் பேர், ஃபோன் நம்பர், விலாசம் வாங்கிக்கணும்.”

– ‘இலக்கிய வேல்’ ஏப்ரல் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *