இன்னொரு கடவுளின் தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2012
பார்வையிட்டோர்: 11,570 
 
 

மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும் நினைக்கவில்லை, மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று.

வழக்கம் போல இன்றும் கடவுள் தன் வேலையைத் தொடங்கினார்.. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் மனதை ஊடுருவிப் பார்த்தார் – தாம் எந்த அளவு அங்கே இருக்கிறோம் என்று அறிவதற்காக. சிலர், மனதிற்குள் அடடா ! பகவான் என்ன ஒரு அழகு ! என்ன ஒரு அலங்காரம் ? என்று சிலாகித்தார்கள். அழகுதான் கடவுளா ? அழகு மட்டும்தான் பாராட்டுக்கு உரியதா ? அப்படியானால், என்னால் படைக்கப்பட்ட அழகில்லாத மற்றவைகள் மனிதன் கண்ணோட்டத்தில் கடவுளின் சொரூபம் இல்லையா ? சாதாரண மனிதர்களைத்தானே நான் அதிக எண்ணிக்கையில் படைத்திருக்கிறேன். அதிலிருந்தே, எனக்கு அதுதான் விருப்பம் என்று மனிதன் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை ?

அந்தக் கூட்டத்தில், கடவுளே ! எனக்கு இதைக் கொடு ! அதைக் கொடு என்று கைகூப்பி மனம் உருகி கேட்டவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். சிலர் தேங்காய் உடைக்கிறேன், மொட்டை போடுகிறேன், தங்கக் கலசம் வைக்கிறேன் என்று என்னிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்பதை எல்லா வேதங்களும், திருமறைகளும் எடுத்துச் சொல்லியும் கூட மனிதன் இன்னமும் உணரவில்லையா ? எனக்குக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே நானும் திருப்பிக் கொடுத்தால் அது மிகச் சாதரணமான மனித குணம்தானே ? அதில் தெய்வீக குணம் எங்கே உள்ளது ?

கடவுள், அந்தக் கூட்டத்தில் மூன்று குழந்தைகளோடு நின்று கொண்டிருக்கும் அந்த தாயை பார்த்தார். ஒரு தாயானவள் தன் குழந்தைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. கேட்ட பிள்ளைக்கு அதிகமாகவும் கேட்காத பிள்ளைக்கு குறைவாகவும் செய்யும் சுபாவம் ஒரு தாய்க்கு வருவதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் என்ன தேவையோ அதைக் கேட்காமலே அறிந்து செய்பவள் தாய். அதனால்தான் தாய்மை, மனித குணங்களிலேயே மேன்மையாகப் பேசப்படுகிறது. எல்லோரையும் படைத்து எல்லோருக்கும் கடவுளாக இருக்கும் நான் மட்டும் எப்படி ஒரு தாயை விட கீழாக நடந்து கொள்ள முடியும் ? தனக்குத் தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னிடம் கேட்டால் மட்டுமே நான் கொடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் நிற்கும் இவர்கள் என் தெய்வீகத்தன்மையை அல்லவா இழிவு படுத்துகிறார்கள் ? நியதியின் அடிப்படையில் ஒருவனுக்கு உரிமையான ஒரு பொருளை என்னிடம் கேட்பதால் மட்டுமே நான் வேறொரு பக்தனுக்கு கொடுத்து விட முடியுமா ? அது முறையா ? என்னை ஏன் தெய்வ நிலையில் இருந்து இறக்கி, சாதாரண மனித நிலைக்குக்கும் கீழே தரம் தாழ்த்துகிறார்கள் இந்த பக்தர்கள் ?

அதோ ! மீதமிருக்கும் வேறு சிலர் தன் மன பாரத்தை என்னிடம் இறக்கி வைப்பதாக சொல்லிக் கொண்டு அவர்களுடைய வேலைகளையெல்லாம் என்னிடம் தள்ளிவிட்டுப் போகிறார்கள். நான் மனிதனைப் படைத்ததே அவன் செயல்படத்தானே ? கடவுள் இல்லாமல் மனிதன் இயங்குவதில்லை அதே போல் மனிதன் இயங்காமல் கடவுள் செயல்பட மாட்டார் ? இதை ஏன் மனிதன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை ?

அந்தக் கூட்டத்தில் மிகச் சிலர் தன்னை உணர்ந்து, தன்னில் என்னையும் உணர்ந்து ஆன்மீகத்தின் உச்ச நிலையை அடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அதோடு மட்டும் முற்றுப் பெறவில்லையே ? இந்த உலகில் உள்ள உயிருள்ளவை, உயிரில்லாதவை எல்லாமே என்னால் படைக்கப்பட்டவைதானே ? நான் இவை அனைத்திலும் ஒரு அங்கம் என்றால் இதில் எதைப் பார்த்தாலும் அதற்குள் என்னைப் பார்க்கத்தானே வேண்டும் ?. அதுதானே முழுமையான தேடல் ? அதுதானே உண்மையான உணர்தல் ? போகட்டும் ! குறைந்தபட்சம் தான் சந்திக்கும் சக மனிதனிடமாவது என்னைப் பார்க்கலாமே ? ஆனால் இந்த மனிதர்கள் சாதி, மதம், நிறம், மொழி, பணம், பலம்,என்று ஏதாவது ஒன்றைக் காட்டி தன்னை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தனிமைப்படுத்தும் செய்கைகளால் அவர்கள் என்னையே பார்க்க மறுக்கிறார்கள் என்பதுதானே உண்மை. அட மனிதா ! என்னால் படைத்த மனிதனை என் பாகமாக பார்க்கத் தவறிவிட்டு உன்னால் உருவாக்கிய பேதங்களால் சக மனிதர்களை அளவிடுகிறாய் ? இது ஆணவமா ? இல்லை அறியாமையா ? உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இது பக்தியோ தெய்வீகமோ இல்லை என்று மனிதன் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை ?

கடவுள் யோசித்தார். ஒரு வேளை இன்றைக்கும் நான் ஏமாந்து போவேனோ ? இன்றைக்குக் கூட என்னை ஒரு மனிதனின் மனதில் முழுமையாக பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று யோசித்துக் கொண்டே இருந்த போது அந்தக் கூட்டதினிடையே அந்த நான்கு வயதுக் குழந்தை கடவுளின் கண்ணில் பட்டது.

அந்தக் குழந்தை அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தது. அம்மாவின் சொல்லைக் கேட்காமல் வரிசைக்காக ஊன்றியிருந்த கம்பியில் தொங்கி விளையாடியது. எதிர் வரிசையில் இருந்த இன்னொரு குழந்தையைப் பார்த்து அம்மாவின் சேலையில் ஒளிந்து பூச்சாண்டி காட்டியது. எதிரே சுவற்றின் மீது வாலை ஆட்டிக் கொண்டே நின்று கொண்டிருந்த பூனையைப் பார்த்து ‘மியாவ் ! என்று கத்திச் சிரித்தது. அந்தக் கூட்டத்தில் தன்னைப் பார்த்து சிரித்தது எவராயிருந்தாலும் பேதமில்லாமல் அவரைப் பார்த்து சிரித்தது. கடவுள் அதன் மனதை ஊடுருவிப் பார்த்தார். அந்தப் பிஞ்சு மனதில் அந்த நொடியின் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது. கடவுளின் அலங்காரமோ, அழகோ தெரியவில்லை. அதன் மனது ஒரு பொருளை விரும்பவோ விலக்கவோ அழகு ஒரு காரணமாக இருக்கவில்லை. அதன் மனதில் எதையும் கேட்டுப் பெறும் சுய நலம் இன்னமும் உருவாகவில்லை. எதையும் கொடுத்து வாங்கும் வியாபார உத்திகள் தெரியவில்லை. இந்த சமூகத்தில் புரையோடிப் போன சாதி, மதம், பணம், பதவி, மொழி, இனம், போன்ற பேதங்களும் , வேற்றுமைகளும் இன்னும் அந்த மனதில் உதிக்கவில்லை.

அப்போது திடீரென்று மணியை ஒலித்து கற்பூரத்தை ஏற்றி எனக்கு ஆரத்தி காட்டினார்கள். அந்தக் குழந்தை மனதில் இப்போது சாமியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

அந்தக் குழந்தை, குடு குடுவென ஓடி வந்து இரண்டு வரிசைக்கும் நடுவில் நின்று கண்களை மூடி, கைகளைக் கூப்பி சாமி கும்பிட்டபோது கடவுளுக்குக் கிடைத்தது இன்னொரு கடவுளின் தரிசனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *