கடைசி கடிதம்

 

இப்பொழுதெல்லாம் இங்கிருக்கும் எல்லோரின் பார்வையிலும் இவனை கண்டவுடன் பரிதாப உணர்வை வெளிப்படுத்துவதை காண்கிறான்.

பார்த்து விட்டு போகட்டும், இதுவரை முரடன், கொலைகாரன், முட்டாள், இப்படி எத்தனை எத்தனை பேச்சு பேசியிருக்கிறார்கள். இப்பொழுது மட்டும் என்ன பெரிய பரிதாபம்.!

கோபம் கோபமாக வந்தது. பக்கத்தில் இருந்த சிறிய ஸ்டூலை எட்டி உதைத்தான். அருகில் இருந்தவன் முறைத்தான். இருந்தாலும் சட்டென ஒரு பரிதாப பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அவன் இவனை எதிர்த்திருந்தால் கூட கண்டு கொண்டிருக்கமாட்டான், இப்படி பரிதாபமாய் பார்த்து சென்றதுதான் இன்னும் இவன் கோபத்தை அதிகப்படுத்தியது. உறுமினான், எவனாவது கையில் சிக்கட்டும்…

பாபு..பாபு பக்கத்து அறைக்காரன் எதிரில் நின்று கொண்டிருந்தான், இந்தா உனக்கு கடுதாசி வந்துருக்கு, அருகில் வர பயந்து அங்கிருந்தே தள்ளி விட்டான்.

கடுதாசியா..! எனக்கா? எனக்கு யாரு கடுதாசி போடறது, அந்த கோபத்திலும் வியப்புடன் கீழே கிடந்த கடுதாசியை உற்று பார்த்தான்.

பாபு..அழகாக கொட்டை எழுத்தில் அச்சில் வார்த்தது போல் எழுதியிருந்தது. சட்டென ஆவலாய் அதை எடுத்து பார்த்தான்.

எனக்கு கடுதாசி, இதுவரை கடுதாசி என்பதையே காணாதவன். அதுவும் எனக்கு, யார் இருக்கிறார்கள் எனக்கு கடுதாசி போட..

கடுதாசியை தடவி பார்க்கிறான். வழு வழுவென்று இருக்கிறது, ரோசாப்பூ மணம் கூட அதில் இருந்து வந்தது போல் இருந்தது.

எப்படி பிரித்து படிப்பது என்று தடுமாறியவன் மெல்ல மெல்ல பதவிசாய் அதை உடைத்து பிரித்து படித்தான். கையெழுத்து முத்து போல் அச்சு அச்சாக..

பத்து வரை படித்தவனாய் இருந்தாலும் கடிதத்தை படிக்க ஆரம்பத்தில் சிரமப்பட்டான்.அந்தளவுக்கு கவிதை நடை போல் அவனை வர்ணித்து எழுதியிருந்தது.

அன்புள்ளம் கொண்டவரே, தோற்றம் கோபக்காரராய் இருந்தாலும் என் மனதில் நிலை கொண்ட நாயகனே…

வாசிக்க வாசிக்க இவனுக்கு தலை சுற்றியது, எனக்கா ! எனக்கா..என்னை வர்ணித்தா..?

தினமும் உங்களை இந்த தோட்டத்து வழியாக செல்லும்போது என்னை கவனிப்பீர்களா என்று திரும்பி திரும்பி பார்த்து செல்வேன். ஆனால் நீங்களோ வெறி பிடித்தது போல் மண்ணை கொத்தி கொண்டிருப்பீர்கள்.

ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று எண்ணியபடியே செல்வேன். என்றாவது உங்களை சந்தோசமான முகத்துடன் பார்க்க முடியுமா என்று ஏங்கியும் அங்கிருந்து சென்றிருக்கிறேன்.

இப்படி ஏங்கி ஏங்கி இதோ இந்த கடிதத்தை நீங்கள் என்ன நினைப்பீர்களோ என்னும் பயத்தில் எழுதிவிட்டேன்.

உங்களுக்கு என்னை பார்க்க, இல்லையென்றால் உங்களின் மகிழ்ச்சியான முகத்தை நான் பார்க்கவேண்டுமென்றால் எனக்கு என் முகவரிக்கு உங்கள் கையால் ஒரு கடிதத்தை எதிர்பார்க்கும்

இந்த பாக்கியம் பெற்றவளா, இல்லையா என்பது உங்கள் கடிதம்தான் தீர்மானிக்கும், அன்பு அமுதா..அழகான கையெழுத்தாய் முத்து முத்தாய் இருந்தது.

நம்பிக்கையிலாமல் முகவரி பக்கம் பார்த்தான், அச்செழுத்தில் அமுதா, எண்,44, இராஜதோட்டம், முகவரி தெளிவாக எழுதப்பட்டிருந்தது.

சந்தேகமில்லை, யாரோ ஒரு பெண் தினமும் என்னை கவனித்து கொண்டிருக்கிறாள்., நான்தான் அவளை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறேன்.

மனம் பரபரத்தது, அதுவரை மனதுக்குள் இருந்த வெறி, எல்லோரையும் பழி வாங்க துடித்த எண்ணம் எல்லாம் கரைவது போலிருந்தது. அட சே..எனக்காக ஒரு பெண்..

முருகா..முருகா..கத்தினான். பக்கத்து அறை முருகன் எட்டி பார்த்தான், என்ன பாபு ஏன் கத்துறே?

முருகா நீ ஒருத்தன் தான் எனக்கு உதவி பண்ணுவே,

என்ன திடீருன்னு என்னை கூப்பிட்டு ஐஸ் வைக்கிறே..

அதுக்கில்லை, நெளிந்தான்.

அட பாபு உனக்கு கூட வெக்கம் வந்திருக்கு..

முருகா எனக்கு ஒரு கடுதாசி எழுதணும்,

கடுதாசியா? உனக்கு யாரு இருக்கா கடுதாசி எல்லாம் எழுதறேங்கறே.

அதை பத்தி உனக்கென்ன, உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் இருப்பாங்களா?

இல்லை இல்லை கோபிச்சுக்காதே, இப்ப என்ன உனக்கு ஒரு லெட்டர் வாங்கிட்டு வரணும் அவ்வளவுதானே..கொஞ்சம் பொறு, வாங்கிட்டு வாறேன்.

அப்படியே பேனா…!

அடே பேனா வேற கேக்கறே, எழுத தெரியுமா உனக்கு…

போடா…. முருகன் சிரித்தபடி ஓடுகிறான்.

என்ன எழுதுவது? எழுதணும் என்று தூண்டிய மனம் என்ன எழுதுவது என்று புரியாமல் திகைத்தது.

சட்டென எல்லாவற்றையும் “மூடிவைத்து வேண்டாம் எதுவும் வேண்டாம்” அப்படியே உட்கார்ந்தான்.

மனம் கேட்காமல் அடம் பிடித்தது, பாவம் தினம் தினம் என்னை தாண்டி சென்று கொண்டிருக்கிறாள். நான் திரும்பி அவளை பார்ப்பேனா என்று ஏங்கியிருக்கிறாள், அவளை ஏமாற்ற முடியுமா?

ஐயோ விக்கி விக்கி அழுதான். கடவுளே எனக்கு இன்று பார்த்து இப்படி ஒரு கடிதம் வரணுமா? தலையிலடித்து அழுதான்.

சட்டென கண்ணை துடைத்து என்னவானாலும் சரி அந்த பெண்ணை சாந்தப்படுத்தவாவது கடிதம் எழுத போகிறேன். உண்மையை எழுதலாமா? வேண்டாம், முதன் முதலாக அறிமுகமாகும்போதே எதற்கு அமங்கலமாய் ஆரம்பிக்க வேண்டும்.

அமுதா என்னை மன்னித்து விடு, நான் ஒரு மடையன், தினமும் என்னை பார்த்து மகிழ்ந்திருக்கிறாய், நான் திரும்பி பார்ப்பேனா என்று ஏங்கியிருக்கிறாய்,

கை நடுங்கியது, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது பேனா பிடித்து எழுதி. எழுத்துக்கள் ஒழுங்காய் வராமல் சண்டித்தனம் செய்தன.

உன் முகத்தை ஒரு முறையாவது பார்க்க முடியுமா என்று என் மனம் துடிக்கிறது. ஆண்டவன் சித்தம் எதிர்பார்க்கிறேன். என்னை மன்னித்து விடு.

எழுதி கடிதத்தை மடித்து கவருக்குள் வைத்தவன் குலுங்கி குலுங்கி அழுதான். கடவுளே..

முருகா…இந்த அட்ரஸ்ல “போஸ்ட்” பண்ணி தர்றியா?

பாபு..யாரு அமுதா? இதுவரைக்கும் எனக்கு தெரியாம..

போடா…வெட்கமாய் நெளிந்தான்.

அன்று இரவு அவன் மனம் முழுக்க அமுதா எப்படியிருப்பாள்? எப்படியிருப்பாள் எண்ணத்திலேயே இருந்தது.

காலை அவனது அறையின் கம்பிகள் தட்டப்பட்டது. இரவு முழுக்க அமுதாவின் நினைவில் அழுந்தியிருந்ததால் சட்டென விழித்து விட்டான்.

எந்திரிச்சி வா..நேரமாகுது, ஓ’ இன்னைக்கா.. தடுமாற்றத்துடன் நடந்து வெளியே வந்தான்.

நான்கைந்து விறைப்பான சீருடை அணிந்த காவலர்கள் ஊடே கூட்டி செல்லப்பட்டவன், பாபு டாக்டர் உன்னை “செக்” பண்ணுவாரு.. ஒரு சீருடை அணிந்த காவலர் சொல்ல பாபுவுக்கு அதை பற்றி எந்த எண்ணமே இல்லாமல் அவன் கவலை எல்லாம் “அமுதா, அமுதா” என்றே இருந்தது.

விடியல் புலர்ந்த அந்த காலை பொழுதில் பாபுவை “தூக்கிலிட்டு” முடித்த காவல்துறை அவனது உடலை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்து கடைசியில் “அநாதை” என்று காரியங்களை முடித்து வைத்தார்கள்.

பாபுவின் அறை முன் வந்து நின்ற முருகன் கையில் பாபு “போஸ்ட்” செய்ய கொடுத்த கவர் இருந்தது. அதை கையில் வைத்தபடி தலையிலடித்து அழுது கொண்டிருந்தான்.

என்னை மன்னிச்சிரு பாபு “நாளைக்கு உனக்கு தூக்கு” அப்படீன்னு தெரிஞ்சும் உனக்கு நானே இப்படி ஒரு லெட்டர் எழுதி மனசை கெடுத்துட்டேன்.

ஆனா நான் செஞ்சது என் மனசை பொறுத்தவரைக்கும் சரின்னு நினைக்கிறேன். நீ இந்த பதினைஞ்சு வருசமா என்ன கண்டுட்டே?

யாருமே உனக்குன்னு இல்லாம, இதனாலயே இந்த உலத்து மேல வெறுப்பாகி கடைசி வரைக்கும் இந்த வெறுப்போட உலகத்தை விட்டு போயிடுவியோன்னு பயந்து, உனக்குன்னு ஒரு அமுதாவை நானே படைச்சு ஒரு நாள்..கடைசி ஒரு நாள் உன்னை சந்தோசமா வச்சுட்டேன், அது போதும், எனக்கு!

கண்களை துடைத்தபடி வார்டனின் விசில் சத்தத்தில் மைதானத்தை நோக்கி ஓடினான், அந்த கைதி. 

தொடர்புடைய சிறுகதைகள்
சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான். ராமு அந்த ஊரில் உள்ள நடு நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். மயில்வாகணன் அருகில் உள்ள ஒரு நகரத்தில் கடை ...
மேலும் கதையை படிக்க...
கண்ணபிரான் காலை பத்துமணிக்குள் ஐந்தாறுமுறை வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்து சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்துவிட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியை கேள்விப்பட்டு செல்போனில் அழைத்துக் கொண்டே ...
மேலும் கதையை படிக்க...
காவல் துறை கட்டிடம் எனற டிரேட் மார்க் இல்லாமல் சாதாரணமாய் இருந்தது அந்த கட்டிடம். உள்ளே நுழைந்த ராம் குமார் தன்னுடைய தொப்பியை சரி செய்து கொண்டு உட்கார்ந்திருக்கும் அதிகாரிக்கு உத்தியோகமான சல்யூட்டை வைத்தார். அதை மெல்லிய தலையாட்டலுடன் ஏற்றுக்கொண்ட பூபதி உட்கார் என்று ...
மேலும் கதையை படிக்க...
பரபரப்பாக அந்த சாலை இருந்தது. வாகனங்கள் பொறுமையின்றி ஒலிக்க வைத்த ஹாரன் சத்தமும், அதை விட மக்கள் அங்கும் இங்குமாக நடந்து செல்ல அவர்களை திசை திருப்பி கடைக்குள் இழுக்க நடைபாதை ஓரமிருந்த கடைகளின் ஆட்கள் கூவி அழைத்த அழைப்பும், அங்கிருந்த ...
மேலும் கதையை படிக்க...
மாதவி களைத்து வீட்டுக்குள் நுழையும் போது, குழந்தைகள் அமைதியாய் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தன.நேராக குளியலறைக்கு சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவள் பால் காய்ச்சாமல் வைத்திருப்பதை பார்த்து "அருண்" என்று கூப்பிட்டாள். படித்துக்கொண்டிருந்த அருண் உள்ளே வந்தான். உங்க அப்பா ...
மேலும் கதையை படிக்க...
என்னைப்போல் ஒரு ஜோசியக்காரன் இந்த உலகத்தில் இப்பொழுது இல்லை. எதிர்காலத்தில் பிறக்கலாமோ என்னமோ, எனக்கு தெரியாது. ஏன் அதையும் கணித்து சொல்லலாமே என்று கேட்கிறீகளா? சொல்லலாம், நானும் கணித்து பார்த்தேன் இப்போதைக்கு யாரும் இல்லை, எதிர் காலத்தில் உருவாகலாம் கோள்களின் கணக்கை வைத்து ...
மேலும் கதையை படிக்க...
கதிர். விடுமுறையில் ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.நான்கு வருடங்களாக விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது ஜேம்சை சந்திக்க வேண்டும் என்று நினைப்பான். ஆனால் அவனை எப்படி சந்திப்பது என்ற தயக்கத்திலேயே விடுமுறையை கழித்து பணிக்கு சென்று விடுவான்.ஜேம்சும் இது வரை கண்ணுக்கு ...
மேலும் கதையை படிக்க...
எதிர்த்த வீட்டு பையனை பாரு, அவன் பையன். உன்னைய மாதிரியா, ஸ்கூல் விட்டதும் “டாண்ணு” வீட்டுக்கு வந்துடறான், அவனும் விளையாடத்தானே போறான், போய் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்து படிக்க உட்கார்ந்துடறானுல்ல ! நீயும் இருக்கியே, புக் எடுப்பனான்னு அழிச்சாட்டியம் ...
மேலும் கதையை படிக்க...
இராணுவத்தில் மன நல மருத்துவராக பணி புரிந்து சலித்துப்போய் வெளி உலக மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய விரும்பி விருப்ப ஓய்வு பெற்று வெளி வந்த டாக்டர் கணேசுக்கு அரசாங்கத்தால் ஒரு இடம் சகாய விலைக்கு கிடைக்கப்பெற்று மருத்துவமனையை கட்டினார். இருந்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
நாகராஜன் சார் ஆளையே பாக்க முடியல? கடைப்பக்கமே இரண்டு மாசமா காணோம்? முகத்தில் வெளுத்த தாடியும், மீசையும் தெரிய முகத்தில் கவலையுடன் நின்று கொண்டிருந்தவர் கொஞ்சம் உடம்பு சரியில்லை நாராயணா, என்று சொன்னார். அதுக்காக கடைக்கே வராம இப்படி மீசையும் தாடியுமா இருக்கணுமா சார்? மனசு ...
மேலும் கதையை படிக்க...
ராமுவின் பெரும் உதவி
சாகித்ய அகாடமி
கேள்விக்குறியான விசாரணை
இதுவெல்லாம் குற்றமா?
எங்கே போகிறான்?
தற்பெருமையில் கணிப்பு
நான் கற்று கொடுத்த தவறு
யாரை நோக முடியும்?
மறந்தவனின் திட்டம்
சின்ன பொய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)