நேற்று வந்தவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,913 
 
 

அன்று என் சகோதரி லலிதாவிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் எங்களுடைய தாம்பத்ய வாழ்க்கையில் அத்தகைய புயலைக் கிளப்பிவிடும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. லலிதாவும் அந்தக் கடிதத்தில் அப்படி யொன்றும் எழுதியிருக்கவில்லை. என்னையும், மன்னியையும் பார்க்க அவளுக்கு ஒரே ஆவலாயிருப்பதாயும் அதனால் என் வீட்டுக்கு வந்து பத்துநாட்கள் தங்கியிருக்கப் போவதாகவுந்தான் எழுதியிருந்தாள்-அடேயப்பா எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளுக்கு இந்த ஆவல் தோன்றியிருக்கிறது!

வரவே வருகிறாள்-இன்றோ அல்லது நேற்றோ வந்திருக்கக் கூடாதா? நாளைக்கு வருகிறாளாம். நான்தான் இன்றே ஒரு கேஸ் விஷயமாக வெளியூருக்குப் போக வேண்டியிருக்கிறதே?-திரும்பி வந்துதான் அவளைப் பார்க்கவேண்டும்-சரி, சரசுவிடம் சொல்லி விட்டாவது போவோமா?

“யார் அங்கே?”

“கொஞ்சம் இருங்கள்; பார்த்துச் சொல்கிறேன்?

நீ ஒன்றும் பார்த்துச் சொல்ல வேண்டாம்; கூப்பிடுவது உன்னைத்தான்!”

“என்ன வந்துவிட்டது, எனக்கு?”

“ஏன், ஒன்றுமில்லாததற்கெல்லாம் இப்படி அலுத்துக் கொள்கிறாய்?”

“இல்லையென்றால் இங்கே ஆனந்தம் பொங்கி வழிகிற தாக்கும்!”

“சரி, சரி எனக்கு முன்னாலேயே நீ இந்தக் கடிதத்தை படித்து விட்டாயாக்கும்?”

“இந்த வீட்டில் எனக்கு வேறு வேலை ஏதாவது உண்டா, என்ன?-உங்களுக்கு வரும் கடிதங்களையெல்லாம் படித்துக் கொண்டிருப்பதுதான் வேலை!”

“வீணாகப் பேச்சை வளர்த்து என் வெறுப்புக்கு ஏன் மேலும் மேலும் ஆளாகிறாய்? இதனால் நீயும் வாழ்க்கையில் சுகத்தைக் காணப் போவதில்லை. நானும் காணப் போவதில்லை. பேசாமல் சொல்வதைக் கேள்-நாளைகாலை வண்டியில் லலிதாவருகிறாளாம்; அதிலும் தன்னந்தனியாக வருகிறாளாம்-என்ன மனக் கஷ்டத்துடன் வருகிறாளோ, என்னமோ!-இப்போது நாம்தான் அவளுக்குத் தாயும் தந்தையும் போல. நீ நினைப்பது போல் அவள் இங்கே எஜமானியாக வரவில்லை. விருந்தாளியாகத்தான் வருகிறாள். அவள் வந்து இங்கே ஒரு பத்து நாட்கள் இருந்து விட்டுப் போவதால் உனக்கோ, எனக்கோ, பிரமாதமான நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் அதற்காக மனிதத்தன்மையை நாம் இழந்து விடுவதா, என்ன? பணம் இன்று வரும், நாளைபோகும். பெற்று எடுத்த பாசமும் உடன் பிறந்து வளர்ந்த பாசமும் போனால் வராது. அவளுடைய துரதிருஷ்டமோ-இன்று இரவே நான் அவசியம் வெளியூருக்குப் போகவேண்டியிருக்கிறது. நாளைக் காலையில் நீயே மணியுடன் ஸ்டேஷனுக்குப் போய், அவளை முகம் கோணாமல் அழைத்து வா; வஞ்சனை இல்லாமல் அவளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்!”

“செய்வதை நீங்களே செய்து கொள்ளுங்கள்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை!”

“இதோ பார், சரசு! நீ இப்படிக் கரிக்கும்படியாக அவள் உனக்கு என்ன தீங்கு செய்தாள், என்னுடன் பிறந்ததைத் தவிர!-உன்னைப் பற்றி அவள் இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தாயா? – கல்யாணத்திற்குப் பிறகு மன்னியை ஒரே முறைதான் பார்த்தேன். இன்னொரு முறை பார்க்கவேண்டுமென்று உன் உள்ளம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது. மணியைப் பெற்றெடுத்த பிறகு அவளது உடல் நிலை எப்படியிருக்கிறது, அண்ணா…..?”

“இவ்வளவுதானே?-இன்னும் கொஞ்சம் நாட்களுக்கெல்லாம் போயே விடுவாள்; நீ வந்து இங்கயே, ‘ஹாய்’யாக இருக்கலாம் என்று எழுதுங்கள்!”

“சீசீ ஒரேயடியாய் நீ இப்படிக் கெட்டுவிட்டாயே?

“நான் ஒன்றும் கெட்டுப் போகவில்லை!”

“உன்னிடம் மட்டும் அல்ல; உன்னைப்போன்ற பெண்களிடமே என்னைப் போன்றவர்கள் நியாயத்தை எதிர் பார்ப்பது மடமைதான்…..!”
“அப்படிச் சொல்லுங்கள்: அதில் உங்கள் தங்கையும் சேர்ந்தவள்தானே?”

“இப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து கொண்டிருந்தால் அதற்கு முடிவே இராது”

“அதைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்! நாளைக்கே நான் பிறந்தகம் போய் விடுகிறேன்!”

“நீ சொல்வது கொஞ்சம் கூட நன்றாகயில்லை சரசு! அவள் வரும்போது நானும் ஊருக்குப் போவது, நீயும் ஊருக்குப் போவதென்றால் அதைத் தெய்வம் கூட மன்னிக்காது!-எதற்கும் ஓர் எல்லை உண்டு; என் பொறுமையை அளவுக்கு மீறிச் சோதிக்காதே!”

“என் பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு; என்னையும் நீங்கள் அளவுக்கு மீறிச் சோதிக்கவேண்டாம்” என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு அவள் அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க நடந்தாள்.

அதற்குமேல் என்ன செய்வதென்று எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ‘இடையில் ஒரு நாள் தானே, நடப்பது நடக்கட்டும்!’ என்று துணிந்து, நான் பிரயாணத்தை மேற்கொண்டேன்.

மறுநாள் திரும்பி வந்த போது, நல்ல வேளையாக என் மனைவி பிறந்தகத்துக்குப் போய் விடவில்லை. எதையோ பறிகொடுத்தவள் போல் முகத்தை தொங்க விட்டுக் கொண்டு அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தாள். லலிதா கூடத்தில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன, லலிதா! பிரயாணமெல்லாம் செளகரியமாயிருந்ததா?” என்று அவளை நான் விசாரித்தேன்.

“இருந்தது, அண்ணா!” என்றாள் அவள்.

“ஸ்டேஷனுக்கு மன்னியும், மணியும் வந்திருந்தார்களோ, இல்லையோ?”

“இல்லை; நானே ‘டாக்ஸி’ வைத்துக் கொண்டு வந்து விட்டேன்!”
அவ்வளவுதான்; எங்கிருந்தோ இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சரசு ஒடோடியும் வந்து, “வந்ததும் வராததுமாக இருக்கும் போதே கலகத்துக்கு வழி வைத்து விட்டாயோ? இல்லையோ?-போ: இதற்குத்தான் அத்தனைதுரத்திலிருந்து இங்கே அவ்வளவு அவசரமாக வந்தாயாக்கும்?” என்றாள்.

யாரை, யார் என்ன சொன்னார்கள்? எனக்கு ஒன்றும் புரிய வில்லை. ஆனால் சரசுவுக்கு மட்டும் ஏதோ புரிந்திருக்கிறதே?-ஆச்சரியந்தான்! இப்படி எத்தனை எத்தனை ஆச்சரியமான நிகழ்ச்சிகள், அக்கிரமமான வம்புகள் நமது தாம்பத்திய வாழ்க்கையில்?

லலிதாவின் கண்கள் கலங்கின; என் மனம் தாங்கவில்லை. மாடிக்கு அழைத்துக்கொண்டு போய், “என்ன செய்யலாம், அம்மா? எல்லாம் கல்யாணம் செய்து கொண்டபலன்!” என்றேன்.

“அதனாலென்ன? மன்னிக்கு என்னைப் பிடிக்காத போது நான் ஏன் இங்கே இருக்கவேண்டும்? எதற்காக உங்கள் அமைதியைக் குலைக்கவேண்டும்? நாளைக்கே ஊருக்குத் திரும்பிப் போய் விடுகிறேன், அண்ணா!”

“ம், உன்னை, ‘இரு’ என்று சொல்லவும் எனக்குத் தைரியமில்லை; ‘போ’ என்று சொல்லவும் எனக்குத் தைரியமில்லை-என்ன செய்வேன்? உன் விருப்பம் அப்படியானால் இன்றைக்கே நான் உனக்கென்று ஒரு புடவையாவது வாங்கி வந்து வைத்து விடுகிறேன். அதைப் பெற்றுக் கொண்டு நீ சந்தோஷமாகப் போய்வா, சமயம் வாய்க்கும் போது நானே அங்கு வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்-எல்லாம் தெரிந்தவள் நீ; என்னுடைய நிலைமையைக் கண்டு கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக இரக்கமே கொள்வாயென்று நம்புகிறேன்.”

“உங்கள் மேல் எனக்கு கோபம் ஒன்றுமில்லை, அண்ணா” என்று மேலே ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் அவள்.

அதற்குள் அங்கு வந்த சரசு, “என் மேல் மட்டும் வேண்டிய கோபம் இருக்கிறதோ, இல்லையோ?” என்றாள் ஆவேசத்துடன்.

“உங்கள் மேல் எனக்குக் கோபம் ஒன்றுமில்லை மன்னி!” என்றாள் லலிதா.

என்னால் தாங்க முடியவில்லை. சரசுவின் கையை பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு போய் கீழே விட்டேன். அதற்கு மேல் ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்காமல் உடனே சென்று லலிதாவுக்கென்று ஒரு புடவை வாங்கிக் கொண்டு வந்தேன். அதைக் கண்டதும் எரிகிற தீயில் எண்ணெயை விட்டது போலிருந்தது, சரசுவுக்கு!- ஆனால் அந்தக் கோபத்தை நல்ல வேளையாக என் மீதோ, லலிதாவின் மீதோகாட்டவில்லை; தட்டுமுட்டு சாமான்கள் மேஜை, நாற்காலிகள், துணிமணிகள் ஆகியவற்றின்மீது காட்டிக் கொண்டிருந்தாள்!

எப்படியோ இராப்பொழுது பிழைத்துக்கிடந்தால் போதும் என்றுதான் தவித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பொழுது விடிந்ததும் லலிதாவை ஊருக்கு அனுப்பி வைக்கும் காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டேன். எல்லா ஏற்பாடுகளும் ஒருவாறு முடிந்தன. ‘டாக்ஸி’ வர வேண்டியதுதான் பாக்கி; அடுத்த நிமிஷம் அதுவும் வந்து சேர்ந்தது.

“லலிதா, லலிதா!”

“ஏன், அண்ணா?”

“வண்டி வந்துவிட்டது. வந்து ஏறிக்கொள்!” என்று சொல்லிவிட்டு உள்ளே போனேன். பீரோவைத் திறந்து, லலிதாவுக்கென்று வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்தேன். சரசு ஒடோடியும் வந்து, அதை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, “அவளுக்கென்று ஒருவன் வந்த பிறகுகூட நீங்கள் ஏன் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம்?” என்றாள் ஆத்திரத்துடன்.

அவ்வளவுதான், “நேற்று வந்தவள் நீ; என்னுடன் பிறந்து வளர்ந்தவள் அவள். உனக்கிருக்கும் உரிமை அவளுக்கு இல்லையா?” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டேன் நான்.

அதே சமயத்தில், “வரவில்லையா, அண்ணா?” என்று கேட்டுக் கொண்டே லலிதா அங்கே வந்துவிட்டாள்.

என்னுடைய நிலைமை தர்ம சங்கடமாகப் போய் விட்டது. “இதோ வந்து விட்டேன்!” என்று கூறிக் கொண்டே அவசர அவசரமாக அவள் கையிலிருந்த புடவையைப் பிடுங்கிக் கொண்டு வந்து டாக்ஸியில் ஏறிக் கொண்டேன்.

என் மனம் இன்னதென்று விவரிக்க முடியாத வேதனையில் சூழ்ந்தது; லலிதாவும் அதே நிலையில்தான் இருந்தாள் என்பது அவளுடைய முகபாவத்திலிருந்தே எனக்குத் தெரிந்தது.

“கூகுக்” என்று ரயில் கூவியதும், “போய் வருகிறாயாலலிதா?” என்று நான் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினேன்.
“இந்தப் புடவையையும் எடுத்துக்கொண்டுபோங்கள்!” என்றாள் அவள்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஏன் அம்மா, ஏன்?” என்று பதட்டத்துடன் கேட்டேன்.

“மன்னியை ‘நேற்று வந்தவள்’ என்று நீங்கள் சொன்னால், என்னையும் ‘நேற்று வந்தவள்’ என்று அவர் சொல்லமாட்டாரா, அண்ணா?” என்றாள் அவள்.

“நானாகவா சொன்னேன்? அவள் சொல்ல வைத்து விட்டாள்! அதனாலென்ன, இதை நீ எடுத்துக் கொண்டு போ!” என்றேன் நான்.

“வேண்டாம் அண்ணா! மன்னி சொல்வது போல் எனக்கென்று ஒருவர் வந்த பிறகுகூட நான் ஏன் உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் எடுத்துக் கொண்டு போங்கள்!” என்று அவள் புடவையை எடுத்து என் கையில் திணித்து விட்டாள்.

“லலிதா, லலிதா” என்றேன் நான்; வண்டி போயே போய் விட்டது.

வீட்டுக்கு வந்ததும் வராததுமாகச் சரசுவைக் கூப்பிட்டு, “இந்தா, இந்தப் புடவையை நீயே வைத்துக்கொள். உன்னுடைய லட்சணத்துக்கு உன்னை நான் ‘நேற்று வந்தவள்’ என்று சொன்னால், அவளையும் ‘நேற்று வந்தவள்’ என்று அவள் அகத்துக்காரர் சொல்வாராம்!” என்று சொல்லிக் கொண்டே, புடவையை வீசி எறிந்துவிட்டு, மாடிக்குச் சென்றேன். மத்தியானம் மணி வந்து சாப்பிடக் கூப்பிட்டான். “வேண்டாம்; எனக்கு என்னவோபோல் இருக்கிறது!” என்று சொல்லிவிட்டுக் குப்புறப் படுத்துக் கொண்டேன்.

அடுத்தாற்போல் சரசு வந்து, “எனக்கும் என்னவோ போலிருக்கிறது; மணியை அழைத்துக் கொண்டு நான் ஊருக்குப் போய் நாலைந்து நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன்!” என்றாள்.

“எங்கேயாவ்து போ, எப்படியாவது போ!” என்றேன் நான்.

அவள் போய்விட்டாள். “உனக்கு மனம் என்றுகூட ஒன்று இருக்கிறதா?” என்று எண்ணியது என் மனம். ஆனால் “எனக்கும் மனம் என்று ஒன்று இருக்கத்தான் இருக்கிறது!” என்பதை நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவள் நிரூபித்து விட்டாள்!

ஆம், ஊரிலிருந்து திரும்பி வரும்போது, அவனும் மணியும் மட்டும் வரவில்லை; அவர்களுடன் லலிதாவும் தன் கணவனுடன் சேர்ந்து வந்தாள். வந்த லலிதா சும்மா வரவில்லை; முன்னால் நிராகரித்துவிட்டு சென்ற புதுப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்தாள்.

எனக்கு அப்போதுதான் தெரிந்தது-சரசு தன் பிறந்த வீட்டுக்குப் போகவில்லை. லலிதாவின் வீட்டுக்குத்தான் போயிருந்தாள் என்று.

“வாருங்கள்; உட்காருங்கள்!”என்று நான் மைத்துனரை வரவேற்றேன். எங்கள் இருவரையும் நோக்கி, “உங்களுக்கு நாங்கள் ‘நேற்று வந்தவர்களா’னால் எங்களுக்கு நீங்கள் ‘நேற்றுவந்தவர்கள்’தானே?” என்றாள், சரசு சிரித்துக்கொண்டே.

“ம், சொல்லுங்கள்!” என்றாள் லலிதாவும், அவளுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே.

எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போனோம்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *