தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 13,658 
 
 

காலையில் கிருஷ்ணம்மாள் கல்லாவில் உட்கார்ந்தால், பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியே வந்துவிட்டதைப் போல இருக்கும். அவளின் ஹோட்டலுக்குப் பெயர் இல்லை.

அந்த சிறிய நகரத்தில் ஒரு நல்ல ஹோட்டல் என்றால் அது கிருஷ்ணம்மாவுடையது தான். சமைக்க இரண்டு பேர், மேல் வேலைக்கு இரண்டு பேர், பரிமாற இரண்டு ஆண்கள், காபி, டீ போட ஒருவர் என அனைவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறமை அவளுக்கு இருந்தது.

வெள்ளந்திஅந்த உணவகம் சுத்த சைவம். காலையில் இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், வடை, பொங்கல் மட்டுமே உண்டு. பலகாரமென்றால் லட்டு, மைசூர்பாகு, அல்வா இருக்கும். அவளின் உணவகத்தில் எப்பொழுதுமே பற்றாக்குறை தான். மீந்து போனதாகச் சரித்திரம் இல்லை. அதற்குக் காரணம் கிருஷ்ணம்மாளின் சாம்பார், சட்டினி வைக்கும் ரகசியம்.

எவ்வளவு தான் உடம்பு சரியில்லை என்றாலும், அதை மட்டும் அவள் தான் செய்வாள். சமையல்காரர்கள், “”அது என்னம்மா ரகசியம் எங்கக்கிட்ட சொல்லக் கூடாதா?” என்று கேட்பார்கள். “”சாம்பார் நான் வைச்சா மட்டும் தான் எனக்கு திருப்தியா இருக்கும்” என்று மட்டுமே சொல்வாள். கிருஷ்ணம்மாள் மெல்ல நடந்து அடுக்களைக்குள் வந்தாள். அங்கிருந்த அம்மிக் கல்லை எடுத்து அரைக்க ஆரம்பித்தாள் வெறுமையில்.

அவளுக்கு அப்பொழுது தான் திருமணம் ஆகி இருந்தது. ஒன்று விட்ட மாமாவைத் தான் கட்டி வைத்திருந்தார்கள். அம்மா வீடு திருச்சியில். இவள் வீடு மணப்பாறையில். அவளுக்கு அம்மா வீட்டை விட்டுப் பிரிவதை விட, தனக்கு இன்னமும் புடவை கட்டிக் கொள்ளத் தெரியாதே என்ற கவலை பெரிதாக இருந்தது. இருந்தாலும் ஒரே ஆறுதல் அவளின் அக்கா வீட்டிற்கு அருகிலேயே இவளுக்கு வீடு பார்த்து இருக்கிறார்கள்.

அது ஒரு காம்பவுண்ட் வீடு. உள்ளே நான்கு குடித்தனங்கள். ஒன்று மட்டும் பெரிய வீடு. அதில் வீட்டுக்காரர்கள் இருந்தார்கள். இவளுக்கு கடைசி வீடு. வீடு என்றால் இரண்டே பத்தி தான். முன்னால் அடுக்களை போகும் வழி. அதையடுத்து ஒரு சுமாரான அறை. புதுப்பெண் மாப்பிள்ளை, அதனால் அவளின் அம்மா, அப்பா, அக்கா, மாமா அனைவரும் கூட வந்து இருந்தார்கள். சீர் அவ்வளவு இல்லை. ஒரு பெரிய தலையணை, ஜமுக்காளம், பாய், பானை, குடம், விளக்கு, ஒரு பெரிய சாப்பாட்டு தட்டு மற்றும் சமைக்கத் தேவையான பாத்திரங்கள் மட்டும்.

அவளின் கணவன் சீனிவாசன் பக்கத்தில் இருக்கும் மில்லில் வேலை செய்தான். அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு, அவளின் அப்பா, சீனியிடம், “”அவளை நான் ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன். அது உனக்குத் தெரியும். விவரமும் பத்தாது. பார்த்துக்க. ஏதாவது உதவின்னா பெரிய மாப்பிள்ளை கிட்ட கேட்டுக்க” என்றார். அவளிடம் திரும்பி, “”மாமா சொல்படி நடந்துக்க. இனிமே நீ வெளியில போய் விளையாடக் கூடாது. அப்பா வரட்டா” என்று கேட்டபடி கிளம்பினார்கள்.

அவர்கள் கிளம்பிச் சென்றவுடன், வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தாள். பின்னால் கொல்லையில் மாடுகள் கட்டி போடப்பட்டு இருந்தன. அங்கே பெரிய ஆலமரம் அதனடியில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது. சற்று தள்ளி ஒரு வேப்பமரம், முருங்கைமரம், கூடவே மாமரமும் இருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குள் ஒரு துள்ளல். கணவனின் குரல் கேட்டு வேகமாக வீட்டிற்கு நுழைந்தாள். அப்பொழுது தான் முதல் முறையாக கூட்டத்தோடு இல்லாமல், தனியாக அவனைப் பார்த்தாள். அவனின் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை.

“”கிருஷ்ணம்மா இங்கே வா, உட்காரு” என்றான்.

பயத்தில் சற்று தள்ளி அமர்ந்தாள்.

“”என்ன எங்கிட்ட பேச மாட்டியா? என்னைய உனக்கு பிடிக்கலையா?”

எதற்கும் பதில் சொல்லவில்லை. பயத்தில் அழ ஆரம்பித்தாள்.

“”ஏய் ஏய் அழாதே. பயப்படாதே எங்கிட்ட. நான் என்ன புலியா? சிங்கமா? எதுனாலும் நீ எங்கிட்ட சொல்லு, புரியுதா?” என்றான்.

வெறுமனே தலையாட்டி வைத்தாள். அவன் வெளியே கிளம்பியவுடன், அந்த வேப்ப மரத்தடியில் பாண்டி கட்டம் போட்டாள். அவளாகத் தனியாக அதில் சில்லாக்குப் போட்டு பாண்டி ஆடினாள். எவ்வளவு நேரம் ஆடினாளோ தெரியாது, களைத்துப் போய் வீட்டிற்குள் நுழைந்தாள்.

இருட்டத் தொடங்கியது. அந்த இருட்டு அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவும் இல்லை. அருகில் உள்ள வீடுகளில் இருந்து நல்ல சமையல் வாசனை அடித்தது.

அக்கா வீட்டிற்குச் சென்று சாப்பிடலாம் என நினைத்தவள் அப்படியே வீட்டைப் போட்டுவிட்டு, கொல்லைக் கதவை நோக்கிச் சென்றாள். அதனைத் திறந்தவுடன் ஒரு குறுக்குச் சந்து. அதன் முடிவில் ஒரு கதவு தெரியும். அது தான் அக்காவின் கொல்லைக் கதவு.

கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த அக்கா, “”என்னடி?” என்றாள்.

“”பசிக்குது. அதான் சாப்பிடலாம்னு வந்தேன்”

“”வா சாப்பிடு. ஆனா தினமும் இந்தப் பழக்கத்தை வச்சுக்காதே”

****

அன்று இரவு. எங்கே படுப்பது என்ற பிரச்னை. இருப்பதோ ஓர் அறை. அடுப்படியில் படுக்கலாம் என்றால் காற்று வராது. பேசாமல் ஆல மரத்தடியில் படுத்தால் என்ன என்று தோன்றியது. ஒரு துண்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனித்தவளிடம், “”எங்க போற?” என்று கேட்டான்.

“”காத்து வரல. அதான் வெளியில படுக்கப் போறேன்”

“”நீ என்ன கிறுக்கு பிடிச்சவளா? பேசாம உள்ளேயே படு”

“”எனக்கு பயம்மா இருக்கு”

“”என்ன பயம். அதான் நான் இருக்கேன்ல”

“”அது தான் பயமா இருக்கு”

“”பேசுனா பேசிட்டே இருப்ப, பேசாமல் படு”

அவளுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. உட்கார்ந்தே இருந்தவள், அந்த நினைவிலேயே அப்படியே தூங்கிப் போனாள். ஏதோ சலனம் தெரிந்து விழித்துப் பார்த்தாள். அருகில் சீனி அமர்ந்து இருந்தான். அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

படக்கென்று எழுந்தவள், “”எனக்குத் தூங்கணும்” என்றாள்.

“”தூங்கு, யாரு வேண்டாமுன்னு சொன்னா?”

மறுபடியும் அங்கேயே அமர்ந்து தூங்கினாள். அவன் வெறுத்துப் போய் படுத்துவிட்டான்.

****

வெளியே ஆள் அரவம் கேட்டதும், கிருஷ்ணம்மாள் விழித்துக் கொண்டாள். முதலில் சமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தாள். சோறு மட்டும் வடிக்கத் தெரிந்தது. குழம்புக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

எதிர் வீட்டு சரசு அக்கா அம்மியில் அரைக்க சாமான்கள் எடுத்துச் செல்வதைப் பார்த்தாள். அவளிடம், “”அக்கா, நான் அரைச்சுத் தர்றேன்” என்றாள். பதிலுக்கு காத்திராமல் கையில் இருப்பதை வாங்கி அம்மியில் அரைக்க ஆரம்பித்தாள். நன்றாக அரைத்த பிறகும் அரைத்துக் கொண்டே இருந்தாள்.

“”அக்கா மசாலா அரைச்சுட்டேன். அப்படியே எனக்கும் எப்படி குழம்பு வைக்கறதுன்னு சொல்லித் தர்றீங்களா?” என்றாள்.

சரசு சிரித்துக் கொண்டே, “”இதை முதல்லேயே கேட்டு இருக்கலாம். இன்னிக்கு நான் வைக்கிறேன். நீ பாரு”

சாம்பார் வைத்தாள், சாம்பார் வைக்கும் சூட்சமம் பிடிபட்டது. நன்றாகப் பார்த்தாள். ஓரளவு புரிந்தது சமையல்.

****

அன்று இரவு. சீனி அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, துண்டை எடுத்துக் கொண்டு வெளியே படுக்கச் சென்றான். அவளுக்குத் தனியாகப் படுக்க பயமாய் இருந்தது. அடுப்படியில் ஏதோ ஓடும் சப்தம் கேட்டது. பயமாக இருந்தது. வேறு வழியில்லாமல் அவள் வெளியே வந்தாள். சீனியின் காலுக்கு அருகில் படுத்து அப்படியே உறங்கிப் போனாள்.

வீட்டுச் சொந்தக்காரர் ராஜு வீட்டிற்குள் நுழைகையிலேயே கொல்லையில் இருவர் படுத்திருந்ததைக் கவனித்தார். விசாரித்ததில் ராமுவின் கொழுந்தியாள் என்று கேள்விப்பட்டார். அன்றே ராமுவிடமும் விசாரித்தார். அன்று மாலை கிருஷ்ணம்மாவின் வாசலுக்கு வந்தார். வீட்டுக்காரர் என்ற மரியாதையில் சீனி அவரை வரவேற்றான்.

“”தம்பி, இன்னிக்குத் தான் உங்களைப் பார்க்கிறேன். ராமு எனக்கு நல்ல தோழன். எதானாலும் எங்கிட்ட சொல்லுங்க. உங்க வீடு மாதிரி நினைச்சுக்கங்க. சந்தோஷமா இருங்க”.

அவளைப் பார்த்து பாசமாக, “”கிருஷ்ணா, இது உன் வீடும்மா. பயப்படாதே. என்னை அண்ணன் மாதிரி நினைச்சுக்க. நல்லா இருங்க” என்றார்.

ராஜு – மாரி தம்பதிக்கு குழந்தை இல்லை. பொள்ளாச்சியில் அவருக்கு வேலை. வாரம் ஒரு முறை வந்து செல்வார். அவருக்கு கிருஷ்ணம்மாவின் மாசற்ற களங்கமில்லா முகம் மிகவும் பிடித்து இருந்தது. எது வாங்கி வந்தாலும் கிருஷ்ணம்மாவிற்கு கொடுக்கச் சொன்னார். பதிலுக்கு அவளும் சாம்பார் வைக்கும் போது அவர்களுக்குக் கொடுப்பாள். அதனை ராஜுவும் ரசித்து சாப்பிடுவார்.

சீனி வெளியிலேயே படுக்க ஆரம்பித்தான். அவளும் அவன் காலடியில். அன்று நல்ல மழை பிடித்துக் கொண்டது. வேறு வழியில்லை. இருவரும் ஒரே அறையில் படுக்க வேண்டிய சூழ்நிலை. அவளின் வாழ்விலும் அன்று இடி மழை.

காலையில் எழுந்த அவளுக்கு எங்காவது ஓடிவிடலாமா? என்ற எண்ணம் தோன்றியது. பெண் பிழைப்பு இத்தனை கேவலமா? என்று அழுகையை அடக்க முயன்று முடியாமல் ஓவென்று கதறினாள். சீனி எதுவுமே நடக்காதது போல வெளியே சென்றான்.

அவளின் அழுகை சப்தம் கேட்டு, கிணற்றடியில் இருந்த ராஜு, “”கிருஷ்ணா” என்றார்.

அழுது அழுது முகம் வீங்கி இருந்தது. எதுவுமே அவளுக்குப் பேசப் பிடிக்கவில்லை. “”அண்ணா என்னை அம்மா வீட்ல விட்டுருங்க எனக்கு பயமாக இருக்கு… இங்க தூங்க…”

“”அழாதேம்மா. நீ வேணும்னா எங்க வீட்ல படுத்துக்க. மாரி தனியாத் தானே இருக்கா. நான் வரும் நாளில் எங்க படுக்கறதுன்னு பார்த்துக்கலாம். அழாதே” என்றார்.

அன்றிலிருந்து அவள் ராஜு அண்ணா வீட்டிலேயே படுக்க ஆரம்பித்தாள். இரண்டு மாதம் சென்று இருக்கும். அவளுக்கு மயக்கமாக வந்தது. முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. ஏனோ களைப்பாக இருந்தது. அயர்ந்து உறங்கினாள்.

கிருஷ்ணம்மாவிற்கு மயக்கம் அதிகமாக இருந்தது. அன்று அக்கா வந்தவள், “”ஏன் ஒரு மாதிரிய இருக்கா?”

“”தெரியலக்கா. காலையில இருந்து வாந்தி வர்ற மாதிரி இருக்கு”

“”இந்த மாசம் நீ குளிச்சியா?”

“”அந்தக் கணக்கு அம்மாவுக்குத் தான் தெரியும். அவங்ககிட்டதான் கேட்கணும்”

“”ஏண்டி நீ குளிச்சது உனக்குத் தெரியாதா?”

“”இல்லக்கா. இந்த ஊருக்கு வந்த பின்னாடி நான் குளிக்கலை”

அக்கா, அம்மாவானாள். கிருஷ்ணாவை நெற்றியில் முத்தமிட்டாள்.

“”நீ உண்டாகி இருக்க. உனக்கு ரெங்கநாயகி மாதிரி பாப்பா பிறக்கப் போகுது”

****

சில தினங்களில் அம்மாவும் , அப்பாவும் வந்தார்கள். அவளுக்குப் பிடித்த சீனிமிட்டாய், சேவு, முறுக்கு, அதிரசம் எல்லாம் கொண்டு வந்தார்கள். ஆசையாய் சாப்பிட்டாள். அவர்கள் கிளம்பும் வேளையில்,””அம்மா நானும் கூட வர்றேன்” என்றாள்.

“”சரிதான். இப்பத்தான் சேர்ந்து இருக்கணும்”-அம்மா.

“”கொஞ்ச நாள் கழிச்சு அப்பா வந்து கூட்டிக்கிட்டு போறேன். அதுவரை சமர்த்தா இருக்கணும். முக்கியமாய் பாண்டி விளையாடாதே” என்றார் அப்பா.

ஆனால் அவளுக்கு அந்த பாண்டி விளையாட்டில் மோகம் குறைந்தபாடில்லை.

****

மழை காலமாதலாலும், அவளின் வீடு பள்ளத்தில் இருந்ததாலும், வீட்டிற்குள் மழை நீர் வந்தது. இப்பொழுது சீனியும் வீட்டுக்காரர்கள் வீட்டில் உறங்க ஆரம்பித்தான். மாரியும், கிருஷ்ணம்மாவும் கூடத்தில் படுத்தார்கள். சீனி வெளி அறையில் படுத்தான். ஆனால் காலை விழிக்கையில் சீனியும் கூடத்தில் படுத்து இருப்பான். அது ஏனென்று கிருஷ்ணம்மாவுக்குத் தெரியவில்லை. இப்படியே பல மாதங்கள் ஓடிற்று. அவளால் இப்பொழுதெல்லாம் சாப்பிட முடியவில்லை. நெஞ்சை அடைக்கிறது. வயிற்றில் வேறு ஏதோ அடிக்கடி அசைகிறது.

அன்று அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

அவளின் அடி வயிற்றில் தாங்க முடியாத வலி. வயிறே, இரண்டாகப் பிளப்பது போல் இருந்தது. ஆனால் அவளால் விளையாட்டைப் பாதியில் விட முடியவில்லை. கொஞ்சம் வேகமாக ஆடினாள். வயிற்றில் வலி விட்டு விட்டு வந்தது. வலி தாங்காமல் கத்தினாள்.

சப்தம் கேட்டு ஓடி வந்த சரசு அக்கா போட்ட சத்தத்தில் அவளைச் சுற்றிலும் பெண்கள், புடவையால் அவளை மறைத்தபடி. எத்தனை சீக்கிரத்தில் வெந்நீர் போட்டார்களோ தெரியவில்லை. மருத்துவச்சி வந்து குழந்தையை எடுத்து வெளியே போட்டாள். கிருஷ்ணம்மா மயக்கத்தில் இருந்தாள். யாரோ மருந்து அரைத்துக் கொடுத்தார்கள்.

மயக்கம் தெளிந்து பார்த்த போது அவளின் அருகில் குண்டாக ஒரு குழந்தை போடப்பட்டு இருந்தது.

“”உனக்கு கிருஷ்ணவிக்ரகம் மாதிரி ஆம்பளப் பிள்ளை பிறந்திருக்கு. கண் முழிச்சுப்பாரு”

அவளால் எதுவுமே முடியவில்லை. மறுதினம் அம்மாவும், அப்பாவும் வந்துவிட்டார்கள். அக்கா தான் முழுவதுமாக ஒத்தாசை. வண்டி கட்டி கிருஷ்ணம்மாவை திருச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். சீனி ஒரு முறை தான் வந்து பார்த்தான். ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. சீனி கிருஷ்ணம்மாளை அழைத்துப் போக வரவில்லை. குழந்தைக்கு மாமனாரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்தார்கள். குழந்தை மிக அழகாக வளர்ந்திருந்தான். அம்மா கிருஷ்ணாவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு மணப்பாறையில் மீண்டும் சேர்த்தாள்.

கிருஷ்ணம்மா இப்பொழுதெல்லாம் பாண்டி விளையாடுவது இல்லை. அய்யாவு அவளின் பொம்மையானான். அவனுடன் எப்போதும் பேசுவாள், சிரிப்பாள். அவனை ஒரு பெரிய மனிதனாக எண்ணி கேள்வி வேறு கேட்பாள். அய்யாவு என்ன கேட்டாலும் சிரிப்பான். அதையே பதிலாக ஏற்றுக் கொள்வான்.

சீனி எந்த மில்லில் வேலை செய்கிறான்? என்ன சம்பாதிக்கிறான்? எதுவுமே அவளுக்குத் தெரியாது. சமைப்பாள், சாப்பிடுவாள், ஊட்டுவாள், பரிமாறுவாள், வேறு எதையும் அவள் அறியவில்லை. சீனி வீட்டிற்குத் தரும் பணம் குறைய ஆரம்பித்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்காவின் வீட்டிற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள், ஏதாவது கேட்டபடி.

****

மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. அய்யாவு இப்பொழுது பாண்டி விளையாடுகிறான்.

கிருஷ்ணம்மாள் இப்பொழுதெல்லாம் பயப்படுவதே இல்லை. அய்யாவு அவளுக்குத் துணையானான். அவனுடனேயே சிறிய வீட்டில் தூங்கினாள்.

இப்பொழுதெல்லாம் சீனி அதிகமாக கோபப்படுகிறான். சிறிய வீட்டில் தான் தூங்குகிறான். அவனின் மாற்றத்திற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.

நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு விழித்தாள். வீட்டில் சீனி இல்லை. மெதுவாக வெளியே வந்து பார்த்தவளுக்கு வேப்ப மரத்தடியில் யாரோ படுத்திருப்து தெரிந்தது. அருகில் சென்று பார்த்தாள். ராஜு அண்ணா படுத்திருந்தார். அந்த நேரத்தில் சீனி பெரிய வீட்டிலிருந்து அவசரமாய் வெளியே வந்தான்.

மறுநாள் காலை கிருஷ்ணம்மாவிடம் ராஜு, “”அம்மா, நான் வீட்டை விற்கப் போறேன்” என்றார். சிறிதுநாளில் வீட்டை விற்றுவிட்டார். திடீரென மாரியைத் தனியே விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டார். மாரிக்கும் அவருக்கும் என்ன பிரச்னை என்று கிருஷ்ணம்மாளுக்குத் தெரியவில்லை.

****

அண்ணா இல்லாமல் அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

ஏனோ சீனிக்கும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. சில தினங்களில் சொத்தில் பங்கு கிடைத்தது. அதனை வைத்து பிழைப்பு நடத்த வேறு ஊருக்கு புறப்பட்டார்கள்.

ஓர் இடத்தைப் பார்த்துக் குடியேறி மூன்றாம் நாள் வெளியே போன சீனி வீட்டுக்குத் திரும்பவேயில்லை. எங்கே போனான்? என்ன செய்கிறான்? என்று தெரியாமல் விழித்தாள். பிழைக்க வழி? அவளுக்கு சமையலைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ஓட்டல்.

இத்தனை வருடங்களானாலும், கிருஷ்ணலெட்சுமிக்கு இன்று வரை சில விஷயங்கள் புரியவேயில்லை. ஏன் ராஜு அண்ணா வீட்டை விற்றுவிட்டுப் போனார்? எதற்காக சீனி தன்னை விட்டுவிட்டுப் போனான்? இப்பொழுதும் கிருஷ்ணம்மாள் வெள்ளந்தியாகவே இருக்கிறாள்.

– ஹேமா (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *