கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 15,711 
 

ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார். இணைப்பு கிட்டவில்லை. கணினியில் அப்படி இப்படி என்று முயற்சி செய்து பார்த்தார். மின்சாரம் எப்போ போகும், எப்போ திரும்ப வருமோ…

அதற்குள் செய்திகளை அனுப்பி விட வேண்டும். பரபரப்பும் பதற்றமும் கூடிக்கொண்டது. இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மழையில் நனைந்தபடி அலைந்ததில் நீர் கோர்த்துக் கொண்டது. குனிந்தால் மூக்கின் நுனிவரை சளிநீர் திரண்டு வந்து மூக்கு முணுமுணுத்து நச்சரித்தது. வாசலுக்கு வந்து சளியைச் சிந்தினார். விரலில் ஒட்டிய அட்டைப் பூச்சியை உதறி எறிந்த நிம்மதி, நிமிர்ந்தார். சாலையில் ஒரு மஞ்சள் பை கிடந்தது. உள்ளே ஏதோ இருப்பது மாதிரி தெரிந்தது. தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

மீட்புபருந்து பட்டென்று இறங்கும் வேக லாவண்யத்தில் வாசலைவிட்டு இறங்கிப் போய் பையை எடுத்தார். கனமாக இருந்தது. தூறலில் நடுச்சாலையில் பையைத் திறந்து பார்க்கக் கூச்சமாக இருந்தது. விருட்டென்று அறைக்குள் போனார். பைக்குள் ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள் நான்கு இருந்தன.

மீண்டும் படபடப்பும் பரபரப்பும் பற்றிக் கொண்டது. நெற்றியில் ஒட்டிய மழைத் துளிகளோடு வியர்வைத் துளிகளும் சேர்ந்து திரண்டு துன்புறுத்தின. வெளியில் வந்து பார்த்தார். இவர் பையை எடுத்து வந்ததை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஐநூறு ரூபாய் கட்டுகள் நாலு! அடேயப்பா இரண்டு லட்ச ரூபாய்! ஒரு செய்தியாளன் என்ற நிலையில் உடனே காவல்நிலையத்தில் ஒப்படைத்து விடலாமா…?

கைப்பேசியை எடுத்தார். அறைக்குள் ஒரு சிட்டுக்குருவி குறுக்கே பறந்தது போல் ஒரு நினைவு துளிர்த்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு செய்தி சேகரிக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது; ஓர் ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் வந்த பயணி ஒரு பையை விட்டுவிட்டு சென்று விட்டதாகவும், அந்தப் பையில் ஐம்பதாயிரம் ரூபாய் இருப்பதாகவும் காவல் ஆய்வாளரிடம் கொடுத்தார்.

காவல் ஆய்வாளர் ஆட்டோக்காரரிடம் பல குறுக்குக் கேள்விகளைக் கேட்டார். “என்னடா வண்டியில் யாரோ விட்டுட்டுப் போன ரூபாயை நேர்மையாகக் கொண்டுவந்து கொடுத்தால் இத்தனைக் கேள்விகள் கேட்டுத் துளைக்கிறாரே’ என்ற எண்ணம் ஆட்டோக்காரரின் முகத்தில் ஓடியது தெரிந்தது.

“”சரி, யாரும் பணம் தவற விட்டதாகப் புகார் வந்தால் விசாரித்துக் கொடுக்கிறோம்.

உனக்கும் தகவல் சொல்றோம். நல்ல காரியம் செஞ்சிருக்கே. இப்படித்தான் காவல்துறைக்கு உதவியாக இருக்கணும். நன்றி. வாழ்த்துகள்! ஒரு வெள்ளைப் பேப்பர்ல எந்த இடத்தில் பயணி ஏறினாங்க, இறங்கினாங்க. உத்தேசமா அவங்க அடையாளம், பையை பார்த்தப்ப மணி எத்தனைங்கிற விவரத்தோட உன் ஆட்டோ நம்பரு, செல் நம்பரு, வீட்டு விலாசத்தையும் சேர்த்து எழுதிக் கொடுத்திட்டுப் போ…!

ஏட்டையா, ஆட்டோகாரர்கிட்ட விவரத்தை எழுதி வாங்கிட்டு அனுப்புங்க!” } ஆய்வாளர் சொன்னார். ஆட்டோக்காரர் அலுத்த மனதோடு ஏட்டையாவிடம் போனார். ஆற்றங்கரையில் வாயைத் திறந்தபடி ஒரு முதலை படுத்துக் கிடந்தது. அதன் பற்களில் சிக்கிய மாமிசத் துணுக்குகளை ஒரு குருவி தன் அலகால் எடுத்து எடுத்துத் தின்றது. முதலை சுகமாக வாயைத் திறந்து கிடந்தது. பல்லில் சிக்கிய எல்லா மாமிசத் துணுக்குகளும் குருவி தின்று விட்டது என்று முதலை உணர்ந்ததும் பட்டென்று வாயை மூடிக் கொண்டது. குருவியின் கதி அதோ கதிதான்! தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அதற்கப்புறம் பணம் தொலைந்த புகார் வந்ததா, தவறவிட்டவரிடம் எல்லாப் பணமும் போய்ச் சேர்ந்ததா, ஆட்டோக்காரருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

கைபேசியை வைத்தார். திடீரென்று காருண்யனின் மனைவி முகம்! நைந்த சிரிப்போடு, “”ஏங்க நமக்கு ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள். ஆளுக்கு ஒரு இலட்சம்னு ஆண்டவனாப் பார்த்து கொடுத்திருக்காரு. உங்க பத்திரிகை நிருபர் உத்தியோகத்தில் என்னைக்கு முழுசா ரெண்டு லட்சத்தைப் பார்க்கப் போறோம்…? என்னங்க, பிழைக்கத் தெரியாம இருந்திராதீங்க, நல்ல முடிவா எடுங்க…”

இன்னொரு உருவம். தலையில் அடித்துஅடித்து அழுதபடி, “”இந்த ரெண்டு லட்ச ரூபாயை எப்படி திருப்பிக் கட்டப் போறேன். ஒரு வருஷம் பூராம் சம்பளம் இல்லாம வேலை பார்த்துதானே கழிக்க முடியும்? படிக்கிற பிள்ளைகளுக்குச் சோறு தண்ணீ, வீட்டு வாடகைக்கு எங்கே போவேன்…?” என்றபடி கைநிறைய தூக்க மாத்திரகளைப் போட்டு விழுங்கிக் கொண்டிருந்தது.

மற்றொரு உருவம் மனைவி சேலையை உத்தரத்தில் கட்டி அதில் தூக்குப் போட்டு தொங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. விபரீதமான முடிவுகள், விளைவுகள் மனசை உறுத்தின.

காருண்யனுக்கு கைகால்கள் நடுங்கின. உடம்பெல்லாம் வியர்வை ஊற்றெடுத்து நம நமத்தது. முகத்தை துடைத்து குப்பியிலிருந்து இரண்டு மிடறு தண்ணீரை விழுங்கினார். பதற்றம் தணிந்தது. நனைந்த ரூபாய் நோட்டுகளைப் பையிலிருந்து எடுத்து உலர்ந்த துணியால் ஒற்றி காற்றாடியின் கீழ் பிறர் கண்களுக்குப்படாத இடத்தில் வைத்தார். அந்த மஞ்சள் பையில் ஒரு வங்கிச் சலான் தென்பட்டது. எடுத்துப் பிரித்தார். பாரத வங்கி செலுத்துச் சீட்டு.

உடனே பாரத வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டார். “”சார் வணக்கம். பிரஸ் ரிப்போர்ட்டர் காருண்யன் பேசுறேன். பேங்கில் எதுவும் பிரச்னையா…? ஒரு தகவல் வந்தது.”

“”இல்லை சார். ஒண்ணுமில்லையே. ஒருமணி நேரத்திற்கு முன்னால்தான் ஒருத்தர் பணம் கட்ட வந்த பை தொலைந்ததுன்னு சொன்னார். நாங்க எங்க உள்ளிணைப்பு காமிராவில் செக் பண்ணினோம். அந்த நபர் வெறும் கையோடதான் கவுன்ட்டர்கிட்ட வந்தது பதிவாகி இருந்தது. அந்த நேரத்தில் வேறு எவரும் அவர் சொல்ற மாதிரி பையை எடுத்ததாகவோ, கொண்டு போனதாகவோ பதிவில்லை.”

“”சரி சார். ரொம்ப நன்றி. அந்த கம்பளைன்ட் பண்ணினவர் பற்றிய விபரம் சொல்ல முடியுமா? ப்ளீஸ் சார்.”

“”சார், எங்க அக்கவுண்ட்ஸ் மேனேஜர்தான் இதை டீல் பண்ணினார். அவர் சாப்பிடப் போயிருக்கார். ரெண்டரை மணிக்கு வருவாரு. அவரு வந்தவுடன் பேசுங்க சார். அவரு எல்லா விவரமும் சொல்வாரு!”

“”சரிங்க சார், ரொம்ப நன்றி சார்.”

மழையில் நனைந்த வங்கிச் செலுத்து சீட்டைக் காருண்யன் மெல்லக் கிழிந்துவிடாமல் விரித்தார். அதில் முருகப்பன் என்ற பெயர் இருந்தது. செல்பேசி எண் இருந்தது.

கைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டார். தொடர்ந்து மணி ஒலித்தது. பதில் இல்லை. திரும்பத் திரும்பத் தொடர்பு கொண்டார்… நான்காவது முறையாகத் தொடர்பு கிடைத்தது.

“”யாருங்க அது. நிலைமை தெரியாமத் தொந்தரவு பண்றது.” ஆண்குரல் பதற்றமும் கடுப்பும் கலந்து ஒலித்தது.

“”சார் வணக்கம். நான் பிரஸ் ரிப்போர்ட்டர் காருண்யன் பேசறேன். ஒரு விஷயமா பேசணும் ப்ளீஸ்.”

“”என்னங்க, நேரம் காலம் தெரியாம, என்ன விஷயம்?”

“” சார் பதட்டப்படாதீங்க. ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.”

“”என்னய்யா கேள்விபட்டீக. நேரம் காலம் புரியாம…? எங்க கணக்குப்பிள்ளை ரெண்டு லட்சத்தை தொலைச்சிட்டு மாரடைப்பு வந்து துடிச்சுக்கினு இருக்கான்…”

“”சாரி சார், அந்த விஷயமாத்தான் பேசுறேன். பதட்டப்படாம என் ஆபிசுக்கு வாங்க. பணம் இருக்கு.”

காருண்யனும் பதற்றம் வடிந்து இயல்பான நிலைக்கு வந்தார். முகத்தைக் கழுவிவிட்டு அறையில் உட்கார்ந்தார். மனதில் சொல்லவியலாத அமைதியும் திருப்தியும்!

பத்தாவது நிமிஷத்தில் கார் வந்து நின்றது. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் ஒருவர் இறங்கி வந்தார். காருக்குள் ஒருவர் படுத்திருந்தார். ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது.

“”வணக்கம். முருகப்பன் முதலாளி அழகப்பன். பள்ளத்தூரில் ரைஸ் மில் வச்சிருக்கேன்.”

“”வணக்கம், வாங்க உட்காருங்க” என்றபடி, வங்கி செலுத்து சீட்டைக் காண்பித்து இது யாருடைய கையெழுத்து?”

“”எங்க வூட்டு கணக்குப்பிள்ளை முருகப்பன் கையெழுத்துதான்! ஸ்டேட் பேங்ல லோன் பணம் கட்ட வந்தான். சக்கரை வியாதிக்காரன் டீ குடிக்கப் போனவன் கையிலிருந்த மஞ்சள் பையை தவறவிட்டுட்டான்.”

“”இப்போ எங்க அவரு?”

“”அதோ வண்டியில படுத்திருக்கான். மாரடைப்பு வந்திருச்சு. அவனைக் காப்பாத்தியாகணும். இல்லையின்னா என் முதலெல்லாம் மோசம் போயிரும். எல்லா கணக்கு வழக்குகளும் அவன்கிட்டத்தான் இருக்கு.”

நிலைகுலைந்து பதறினார் அழகப்பன்.

“”பதறாதீங்க சார், பணம் எவ்வளவு கொண்டு வந்தார்? நாணயம் வாரி சொல்ல முடியுமா?’

“”எல்லாம் ஐநூறு ரூபாய் நோட்டுகள். நாலு கட்டுகள் கொடுத்தனுப்பினேன்.”

“”சரி வண்டிக்குப் போங்க, வர்றேன்.”

அழகப்பன் பதறிக் கொண்டே, திரும்பித் திரும்பி பார்த்தபடி காருக்குள் போனார்.

மஞ்சள் பையில் பணத்தோடு காருண்யன் காருக்குள் போனார். முருகப்பன் அரை உணர்வில் கையெடுத்து கும்பிட்டபடி இருந்தார். மனைவி “”அய்யோ சாமி, சீக்கிரம் எம் புருசனைக் காப்பாத்துங்களேன். நானும் என் ரெண்டு பொட்டப் பிள்ளைகளும் தெருவில நிற்கப் போறோமே…”

காருண்யன் கண்களில் நீர் திரண்டு வந்தது.

முருகப்பனிடம் மஞ்சள் பையைக் கொடுத்து, “”இந்தாங்க உங்க பணம். போயி முதல்ல டாக்டரை பாருங்க. நீங்க பிழைச்சிட்டிங்க. அழகப்பன் சார் சீக்கிரம் டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போங்க. நானும் அங்க வர்றேன்”.

வண்டி விரைந்தது. கூட்டம் கூடி நின்றவரில் ஒருவர் முனங்கினார்.

“”பிழைக்கத் தெரியாதவன்யா” இன்னொரு குரல் மறுத்தது. “”சேச்சே ஒரு குடும்பத்தைக் காப்பாத்திட்டாருய்யா,காசா பெரிசு, மனுசன் உசுரு வருமா?”

“”ஆத்ம திருப்தி, மனிதநேயம்ன்னு சொல்ற வார்த்தைகளுக்கு அர்த்தத்தை இன்னிக்குத்தான் உணர்ந்தேன்” என்றபடி ஆஸ்பத்திரியை நோக்கி வண்டியை விரைவுபடுத்தினார் காருண்யன்.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *