வெறும் கேள்விகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 12,991 
 
 

அவன் தன் அறுபத்திரெண்டாவது வயதில் ஒரு நாள், வெகுகாலமாகப் பார்க்க வேண்டுமென நினைத்து ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்த, மனிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றபோது வீட்டிலிருந்த ஒரு பெண் அவர் சில வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டதாயும் அந்தத் தகவல் அவனுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்ததாயும் சொன்னாள். அவன் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்விட்டான். காரணம் அவர் இறந்துவிட்டாரென்கிற செய்தியைவிட அதை அவன் மறந்துவிட்டானென்கிற மறைமுகமான குற்றச்சாட்டு அவனை அதிகமாகப் பாதித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே அவனும் மற்ற எல்லோரையும் போலவே, சாவுகளுடனும் சாவுச் செய்திகளுடனும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வளர்ந்தவன். சாவுடனான அவனுடைய முதல் அனுபவம் நிகழ்ந்தபோது அவனுக்கு வயது மூன்று. சர்க்கரைப் பழத்தை விண்டு வாயில் போட்டுக்கொண்டிருந்த அவனுடைய எண்பத்துமூன்று வயதுப் பாட்டனார் திடீரென்று பிளந்திருந்த வாய்க்குப் பதிலாக அதை மூக்குத் துவாரத்தில் திணித்துக்கொண்டுவிட்டதாயும் மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றிருப்பதாயும் வீட்டில் பெரியவர்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். ஓரிரு மணிநேரங்கள் சென்றபிறகு மிக அமைதியான குரலில் அவருடைய மகன்களில் ஒருவன் வந்து வீட்டிலிருந்த மற்றவர்களிடம் அவர் சிவலோகப் பிராப்தி அடைந்துவிட்டதாகக் கூறினான். யாரும் அழவில்லை. நீருக்கடியில் நீந்துவதைப் போல அந்த வயோதிக உடலை வழியனுப்பும் சடங்குகள் மௌனமாயும் உணர்ச்சிகளற்றும் நடந்துகொண்டிருந்ததை அவன் கையில் ஒரு வடையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஒரேயொருமுறைதான், அதற்குமுன் அவன் சாவைப் பார்த்ததில்லையென்பதால், பாட்டனாரின் உடலை அவர்கள் எடுத்துச் சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்த பின்னும் பலநாட்கள் திரும்பத்திரும்ப வீட்டிலுள்ளவர்களிடம் தாத்தாவைத் தன் கண்களில் காட்டும்படி கேட்டுத் தொந்தரவு செய்துகொண்டிருந்தான். சாவு என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிறுவனான அவனிடம் அதிகமாகப் பிரஸ்தாபிக்க முதலில் தயங்கினாலும் பிறகு நச்சரிப்புத் தாங்காமல் மரித்தவர்கள் திரும்ப வரமாட்டார்களென்றும் இறந்துபோன ஒரு மனிதரைச் சந்திக்க வேண்டுமென்று யாரிடமாவது போய்க் கேட்பது அபத்தம் மட்டுமல்லாமல் அவருடைய உறவினர்களைப் புண்படுத்தும் செயலாயும் அமைந்துவிடுமென்றும் அவர்கள் அவனிடம் சொல்லிவைத்தார்கள். அதற்குப் பிறகு எத்தனையோ சாவுகள், காதலில் தோல்வியென்று கூறிக்கொண்டு தீக்குளித்த, அதோடு ரகசியமாகத் தன் வயிற்றிலிருந்த இன்னொரு உயிரையும் சேர்த்து மாய்த்துக் குடும்ப மானத்தைக் காப்பாற்றிய அவனுடைய தமக்கையின் சாவு, வேலைக்குச் சென்றயிடத்தில் திடீரென்று மயங்கி விழுந்து பிரக்ஞையின்றியே மருத்துவமனையில் ஒருவார காலம் படுத்திருந்துவிட்டுப் போய்ச் சேர்ந்த தந்தையின் சாவு, சிறுவயதிலேயே சர்க்கரை வியாதி உண்டாகி அசிங்கமாக ஊதிப்பெருத்த உடலோடு சடலமாகிக்கிடந்த கல்லூரித் தோழனின் சாவு, வாகன விபத்தில் மாண்டுபோன தூரத்து உறவினரின் அகால மரணம். ஆனால் எந்தவொரு சாவையும் அவற்றில்தான் எத்தனை வகை, நேரடியாகக் கலந்துகொண்ட சாவுகள், நிகழ்ந்த கணத்திலேயே தெரிவிக்கப்பட்ட சாவுகள், சுற்றி வளைத்து யார் மூலமாகவோ கேள்விப்பட்ட சாவுகள், வெற்றுத் துக்க அனுஷ்டிப்புகள், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நகுலனின் கவிதையில் உணர்ந்ததைப் போல, ஒரு மதிய நேரத்து வண்ணத்துப்பூச்சி கடந்துசென்ற விதமாய் எளிதில் கடந்துசென்றுவிட்ட சாவுகள், அவனுடைய அறுபத்திரெண்டாவது வயதுவரை, அவன் மறந்ததேயில்லை. ஒவ்வொருவருடைய சாவும் கையளித்துவிட்டுச் செல்லும் ஏதோவொரு அடையாளம், உணரத்தக்க ஒரு வெற்றிடம், அவனுடைய அப்பாவிற்குத் தெரிந்த, அவனுக்கு எந்தச் சம்பந்தமுமில்லாத, அவன் தாயாரின் வற்புறுத்தலால் மட்டுமே தெரியவந்த, ஒரு சாவுகூட வேடிக்கையான, ஆனால் பலமான, ஒரு அடையாளத்தைக் கொண்டிருந்தது, அந்தச் சாவிற்குச் சென்றிருந்தபோது தான் அவன் தரையில் கிடத்தப்பட்டிருந்த சடலத்திற்கு மறுபக்கமாக அழுத கண்களுடனும் துக்க அனுஷ்டிப்பிற்கான கருப்பு நிறமும் குளித்த ஈரமும் அப்பியிருந்த உடைகளுடனும் தூக்க மற்ற முகத்துடனும் ஏதுமறியாதவளாய் நின்றிருந்த ஒரு யுவதியைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்துப் பிறகு குடும்பத்தினரை எதிர்த்துத் திருமணமும் செய்துகொண்டான், அவர்களுடைய இன்மையை மறக்கவிடாமல் செய்து உயிரோடிருப்பவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கும் அபத்தத்திலிருந்து அவனைத் தடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறது. ஒருவிதத்தில் சாவுகளைக் கணக்கு வைத்துக்கொள்வது தன்னை உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து உணர்வதற்கு இன்றியமையாத செயற்பாடாகக் கூட அவன் தன் ஆழ்மனதில் உணர்ந்து கொண்டிருந்திருக்கக்கூடும். அதனால் தான் அந்தப் பெண்மணியிடம் துக்க விசாரிப்புக்குப் பதிலாக நல விசாரிப்பை நிகழ்த்திவிட்டதாகத் தெரியவந்ததும், சாவுக் கணக்கைத் தவறவிட்டதையறிந்து, விதியின் கைகளில் தான் மாட்டிக்கொண்டதாக நினைத்து, அவன் கலவரப்பட்டுப் போனான். பிறகு, ஆனால் அவ்விதம் தவறுவது அதுவே முதல் தடவையென்பதால் அது தற்காலிகமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றாக இருக்குமென்று கூறி அப்போதைக்குத் தனக்குத்தானே ஆறுதலும் சொல்லிக்கொண்டான்.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அவன் அவனுடைய பால்ய காலத்தில் மிகவும் ரசித்த, காதல் மன்னன் என்கிற பட்டப்பெயரால் பிரபலமடைந்திருந்த, ஒரு நட்சத்திர நடிகரின் பழைய திரைப்படமொன்றைத் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். மிகவும் நளினமான, ஏறக்குறைய ஒரு பெண்ணின் அசைவையொத்த அவருடைய உடலசைவு, அவன் காலத்திய பல ஆண்களைப் போலவே, அவனுக்கும் நிரம்பப் பிடித்த ஒன்றாக இருந்தது. அவருக்கு அந்தப் பட்டப்பெயரைக் கொடுத்தவர்கள் காதல் கலையில் அவர் வல்லவர் என்பதற்காகவல்லாது ஆண்களாலும் காதலிக்கப்படத் தகுந்த நடையுடை பாவனைகளைக் கொண்டவர் என்பதைக் குறிக்கும் வகையில்தான் அப்படி அழைத்திருக்க வேண்டும். அவருடைய நடிப்புத் திறமையை இந்தக் காலத்து இளம் இயக்குநர்கள் சரிவரப் பயன்படுத்துவதில்லையென்றும் இன்றும் அவர் ஒரு கதாநாயகனாக நடிப்பதற்குரிய இளமையையும் துடிப்பையும் இழக்காதவராகத்தான் இருக்கிறாரென்றும் இனி வருங்காலத்திலாவது அவரை இனங்கண்டு கொள்ளும் இளைய தலைமுறையொன்று, தமிழ்த் திரைப்பட உலகின் மோட்சத்திற்காக, தோன்றத்தான் வேண்டுமென்றும் அவனைச் சுற்றிப் பொறுமையிழந்தவர்களாய், அவன் உறங்கச் செல்லும் தருணத்தைக் கடவுளிடம் பிரார்த்தித்தபடி முட்டாள் பெட்டியின் திரையைக் கவனித்துக்கொண்டிருந்த சக குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டான். உடனே அவர்களில் ஒருவன், அவனுடைய மகனோ பேரனோ, நாசமாய்ப் போயிற்று, அந்த நடிகர் இறந்து ஆறுமாதங்களுக்கு மேலாகப் போகிறது என்று கிறீச்சிட்டான். அது அவனுக்களித்த அதிர்ச்சி அவன் முதல் தடவை அந்தப் பெண்ணால் பெற்ற அதிர்ச்சிக்குச் சற்றும் குறைந்ததாயிருக்கவில்லை. அவன் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டே, அது அவரல்ல, அவரைவிட வயதில் மூத்தவரான, சாயலில் அவரைப் போலவேயிருக்கும், இன்னொரு நகைச்சுவை நடிகர் என்றான். உடனே அவனிடம் இறப்புச் செய்தியைத் தெரிவித்தவன் ஓடிச்சென்று புத்தக அலமாரியில் தேதி வாரியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த செய்தித்தாள் கட்டைப் பிரித்து அதிலிருந்து அந்த நடிகர் இறந்துபோன செய்திக் குறிப்பு வெளியாகியிருந்த தாளைக் கொண்டு வந்து அவன் கையில் திணித்தான். சந்தேகமில்லாமல் அது அவன் பணி ஓய்வுபெற்ற நாள்முதலாக அனுதினமும் கணிசமான நேரங்களைச் செலவிட்டுப் படித்துக்கொண்டிருக்கும் அதே செய்தித் தாள்தான். அதிலிருந்து ஒரு செய்தித் துணுக்கேனும் அவனுடைய பார்வையிலிருந்து தப்பித்துப் போகச் சந்தர்ப்பமேயில்லை. ஆனால் அந்த நடிகர் அதிலும் இறந்தவராகத்தான் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த இரண்டாவது சம்பவம் விதியின் கைகளில் அவன் வசமாக அகப்பட்டிருக்கிறானென்பதைச் சந்தேகத்திற்கிடமில்லாமல் அவனுக்கு நிரூபிக்கப் போதுமானதாயிருந்தது.

ஆனால் மூப்பையும் நோயையும் மனிதர்கள் அத்தனை எளிதில் ஒத்துக்கொள்வதில்லையென்று சொல்வார்களில்லையா. அதன்படி அவன் பிரக்ஞைபூர்வமாக ஒரு சோதனையை நடத்தித் தன்னுடைய விதியைத் தெரிந்துகொள்வதுவரை தன்னை அனாவசியக் கவலைகளுக்கு ஆட்படுத்திக்கொள்வதில்லையென்று முடிவுசெய்தான். இதற்காக அவன் சில நாட்களுக்கு முன் சந்தித்து அளவளாவிக்கொண்டிருந்த, அவனுக்குச் சமமான வயதுடைய, அவனுடைய பள்ளித் தோழனை மீண்டும் சந்தித்துவிட்டு வருவதென்று முடிவுசெய்து கிளம்பிப்போனான். ஆனால் அவனுடைய விதி அவனுக்கு முன்பே அங்கே சென்றுவிட்டிருந்தது. அந்த நண்பனுடைய குடும்பத்தார் அவனிடம் அந்த நண்பன் மேலிருந்த அன்பில் அவனுடைய பாடையைச் சுமந்தபடி சுடுகாடுவரை செல்லும் நான்காவது தோள் தன்னுடையதாகவே இருக்க வேண்டுமென்று அடம்பிடித்ததைக் கூடவா மறந்துபோனானென்றும் அவனுடைய இறப்பு ஒருவேளை அவனைப் புத்தி பேதலித்துப் போகச் செய்துவிட்டதாவென்றும் பரிவோடும் சந்தேகத்தோடும் கேட்டுவிட்டார்கள். இதன்பிறகும் அவனுக்குத் தன் விதியை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கைகூடவில்லை. இன்னொரு சோதனையை, இந்த முறை விசாரிப்பின் போது தன்னுடைய கேள்விகளை முற்றிலும் வேறான கோணத்தில் மாற்றியமைத்து, நடத்திப் பார்த்துவிடுவது என்று அவன் முடிவுசெய்துகொண்டான். சில நாட்கள் கழித்து அவன் வீட்டில் புதிதாகத் திருமணமான ஒரு தம்பதியினரை அழைத்து விருந்துகொடுக்கும் சம்பவம் நடந்தபோது அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது.

அப்போது வீடு முழுவதும் ஒரே கூத்தும் கும்மாளமுமாக அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. சுவையும் மணமும் மிக்க பதார்த்தங்கள் இடிச் சிரிப்புகளோடும் இப்படிச் சிரித்தவர்களில் வெட்கமற்ற பெண்களும் அடக்கம், வயதானவர்கள் இருக்கிறார்களேயென்கிற இங்கிதமும் மரியாதையும் கொஞ்சமும் தொனிக்காத இரட்டையர்த்தப் பேச்சுகளும் மூலைக்கு மூலை அவற்றைத் தாங்கிப் பிடிப்பவர்களை நோக்கித் தூக்கி வீசப்பட்டுக்கொண்டிருந்தன. அத்தனை பேச்சுகளும் அந்தப் புது மணப்பெண்ணையும் அவளுடைய சமீபத்திய இரவுகளையும் குறிவைத்தே நீண்டுகொண்டிருந்தன. வழுக்குத் தரையில் நடப்பதைப் போல அந்த வார்த்தைகளின் மீது தடுமாறிக்கொண்டிருந்த அவள் முகம் ரத்தமாய்ச் சிவந்திருக்க அவற்றைப் பாதிப் பெருமிதத்தோடும் பாதி வெட்கத்தோடும் பாதி எரிச்சலோடும் செவியுற்றபடி பார்வையை, ஒரு பற்றுக்கோலாக யார்மீது நிலைநிறுத்துவது எனத் தெரியாமல் உருட்டிவிட்ட கோலிக்குண்டைப் போல், சுழற்றிக்கொண்டிருந்தாள். விருந்து தொடங்கியதிலிருந்தே அவளை ஒரு பரிசோதனைச்சாலை எலியைக் கவனிப்பதைப் போலக் கவனித்துக்கொண்டிருந்த அவன் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவனுடைய மூலையிலிருந்து எழுந்து முன்னே நகர்ந்து அவளுடைய சலிக்கும் பார்வையை இடறும்வண்ணம் குறுக்கே வந்து நின்றான். ஒரு கணம் அந்தப் பெண் திகைத்தாள். ஆனால் மறுகணமே அவனை அடையாளம் கண்டுவிட்டாள். உடனே நீங்களும் இங்கேதானிருக்கிறீர்களா, மன்னியுங்கள், நான் கவனிக்கவில்லை, நலமாயிருக்கிறீர்களல்லவா எனக் கேட்டுக்கொண்டே, அவளைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த அபத்தங்களிலிருந்து விடுபட ஒரு சாக்குக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியுடன் சிலந்திக்கூட்டை நோக்கிவரும் பூச்சியைப்போல் சிறிய துள்ளலுடன் அவனருகே வந்து அவன் கால்களைத் தொடக் குனிந்தாள். அதுதான் சமயமென்று அவன் அவளைத் தடுத்து எழுப்பி மெலிதாக அணைத்துக்கொண்டு கண்களில் தேங்கிய கண்ணீருடன் அவளைப் பார்த்து அவள் தகப்பன் அவளுடைய தாயாரின் கைகளில் கொடுத்துவிட்டு அகால மரணம் அடைந்தபோது அவன் அவளையும் அவளுடைய சகோதரனையும் கைக்குழந்தைகளாகப் பார்த்ததாயும் இன்று பூத்துக் குலுங்கும் மலர் வனமாக அவள் தன்முன் வந்து நிற்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறதென்றும் தந்திரமாகப் பேசினான். பிறகு அவளுடைய மௌனத்தைத் தன் பேச்சை அவள் முழுவதுமாக ஒப்புக்கொண்டுவிட்டதன் அடையாளமாக எடுத்துக்கொண்டு, அந்த நல்லவருக்குச் செய்ய வேண்டிய வருடாந்திரத் திதிகளும் அவர் நினைவாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அறக்கட்டளையும் செவ்வனே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றனவா என்றும் விசாரித்தான். நல்லது, அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அந்தப் பெண் பதில் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய முகத்தை அதுகாறும் மலர்த்தியிருந்த செந்நிற வெட்கமும் சிரிப்பும் மறைந்து அது துயரத்தால் கருத்துவிட்டது. அது இயல்பானதுதான், மகிழ்ச்சிகரமான ஒரு வைபவத்தில் கலந்துகொள்கிறபோது துக்கம் விசாரிப்பது என்பது விருந்திட்ட இலையினோரம் ஒருதுளி மலத்தை வைப்பதற்கு ஒப்பானதுதான். ஆனால் அவனுடைய நிலை, தன் ஆரோக்கியம் குறித்த அவனுடைய கவலை, இந்த நாகரிகங்களையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலையிலிருந்து அவனை வெகுதூரம் தள்ளிக்கொண்டு போய்விட்டிருந்தது. குருக்ஷேத்திர யுத்தத்தைப் போல அவனுக்கும் அவனுடைய விதிக்குமிடையே நடந்துகொண்டிருந்த ரகசிய யுத்தத்தில் உறவுகளின் சுகதுக்கங்கள் குறித்த விசனத்திற்கு ஒருபோதும் இடமிருக்கப் போவதில்லை. எப்படியோ அந்தப் புது மணப்பெண்ணின், துயரத்தின் ஈரத்தில் கனத்துத் தொங்கிய, முகம் அவன் விரும்பிய பதிலை அவனுக்குத் தந்துவிட்டது, விஷயம் சாவுகளைத் தவறவிடும் நோயல்ல, சாவோடு தொடர்புள்ள வெறும் கேள்விகள், அதை எப்படி வார்த்தைகளால் அணுக வேண்டுமென்பது குறித்த பொது அறிவில், வயோதிகத்தினாலுண்டான மந்தம் காரணமாக, நிகழ்ந்துவிட்ட சிறுதடுமாற்றம், அது இப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது.

அவன் பல நாட்களுக்குப் பிறகு அன்றிரவு, அவனுடைய மகிழ்ச்சிக்காகத் தன்னுடைய மாலைப் பொழுதைப் பலிகொடுக்க முன்வந்த அந்தப் பெண்ணின்பால் நன்றியுணர்வும் இரக்கமும் பொங்கியெழுந்து மனத்தை அலைக்கழித்துக்கொண்டிருந்ததற்கிடையிலும் நிம்மதியாகத் தூங்கினான். அந்த நோய் அவனுடைய அவதானிப்பின்படியே இந்தக் கதையைத் தொடங்கிய அந்த முதல் சம்பவத்திலிருந்தே அவனிடம் இல்லாதிருந்த ஒன்றாகவே இருந்திருக்கலாம்தான். ஆனால் அதை நோக்கிய தேடல் அவனை வேறொரு புது நோய்க்கு ஆளாக்கிவிட்டதை அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. விதியோடு சூதாடும் வியாதிதான் அது. எப்போது அந்த விளையாட்டில் தன் கை ஓங்கியிருப்பதாக அவன் நினைத்தானோ அப்போதிலிருந்தே, அதன் சுபாவப்படியே, அதைத் திரும்பத் திரும்ப விளையாடிப் பார்க்கும் வெறி அவனைப் பற்றிக்கொண்டுவிட்டது.

ஓரிரு வாரங்களுக்குப் பிறகு மறுபடி ஒரு சந்தர்ப்பமும் அவனுக்குக் கிடைத்தது. தூரத்து உறவினர் ஒருவர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காகத் தொலைவிலிருந்த ஒரு கிராமம்வரை, குடும்பத்தின் மூத்த உறுப்பினன் என்கிற தகுதியிலும் அவர்களுக்கு இம்மாதிரியான உறவுகளைப் பேணும் அவசியமும் அவகாசமும் கிடையாது என்பதாலும், அவர்களின் பிரதிநிதியாக அவன் சென்று வர வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அந்தக் கிராமம் இணைக்கப்பட்டிருந்த தொகுதியில்தான் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச் சந்திரன் இரண்டுமுறை தேர்தலில் நின்று அமோக வெற்றி பெற்றிருந்தார் என்பது அவனுக்குத் தெரியும். அவன் சந்தோஷமாகக் குடும்பத்தினருடைய முடிவிற்கு ஒத்துக்கொண்டு அந்தக் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். திட்டப்படி திருமணத்தில் கலந்துகொண்டு தாம்பூலப்பையை வாங்கிக்கொண்ட கையோடு கால்நடையாகவே புறப்பட்டு அந்தக் கிராமத்தின் தெருக்களை நோட்டமிட்டபடியே வலம் வந்தான். அவன் மனம் இவர்கள்தான் அந்த மனிதர்கள் என்று சிலரை அடையாளம் காட்டும்வரை அந்த நடை தொடர்ந்தது. நெடுநேரத்திற்குப் பின் ஒரு குடிசையின் வாசலில் அமர்ந்து நடுமதியத்தை வெற்றிலையோடு ஒரு பாக்குத் துண்டைப் போலச் சேர்த்து இடித்து வாயிலிட்டு அசைபோட்டுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் முன் போய் அவன் நின்றான். பிறகு தலைக்குமேல் ஒளிர்ந்துகொண்டிருந்த கதிரவனின் பிரகாசம் அவனை அவள் நிமிர்ந்து பார்க்கிறபோது கண்களை உறுத்தாதபடி தன்னுடைய நிழலை அவள் முகத்தில் படர்த்தியபடி, பரீட்சையெழுதும் மாணவனைப் போல மனத்திற்குள் கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டே இப்படிக் கேட்டான், என்ன பாட்டி, புரட்சித் தலைவர் நலமாயிருக்கிறாரா, உங்களையெல்லாம் வந்து பார்க்கிறாரா. முதலில் அந்த மூதாட்டி அவனுக்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு சில வினாடிகள், பதற்றத்திலும் நம்பிக்கையின்மையிலும் வியர்த்து வடிந்துகொண்டிருந்த, அவனுடைய முகத்தை ஏறெடுத்துப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவன் அங்கிருந்து அகன்று சென்றுவிட்டதைப் போலத் தலையைக் குனிந்து அடுத்த வெற்றிலையைக் கிண்ணத்திலிட்டு இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டாள். சக்திக்கு மீறிய முயற்சியில் ஈடுபட்டுவிட்டோமோ என்கிற கிலி நாளங்களில் பாய்ந்து உடலை ஒரு கணம் குளிர்த்திப் பலமாக அதை நடுங்கச் செய்ய அவன் சிரித்துக்கொண்டிருந்த விதியின்முன் தலையைத் தொங்கப்போட்டபடி நகரத் தொடங்கினான். அப்போது அவனுடைய காலடியிலிருந்து ஒரு குரல், அவருக்கென்ன, அந்த அம்மாவோட மகராசனா இருக்காரு, பார்த்துத்தான் ரொம்ப நாளாச்சு, நம்பியார போலீசுல பிடிச்சுக் கொடுத்த பிறகு இந்தப் பக்கம் அடிக்கடி வர்றதில்லை என்றது.

அவனால் அவன் காதுகளை நம்ப முடியவில்லை. ஒரு கணம் வெற்றியின் எதிர்பாராத சந்தோஷத் தாக்குதலில் மூச்சுத்திணறி அசைவற்று நின்றான். மறுகணம் தன்னை மறந்து, வெறும் கேள்விகள் என் அருமை விதியே, வெறும் கேள்விகள் என்று உரக்கக் கூவினான். அன்று இரவு பேருந்துப் பயணம் பூராவும் அவனுடைய சிந்தனை இனி மேற்கொள்ளவிருக்கிற நல விசாரிப்புகளை என்ன மாதிரியான, சந்தேகத்திற்கு இடம் வைக்காத, கச்சிதமான கேள்விகளால் வடிவமைக்க வேண்டும் என்கிற யோசனையிலும் திட்டமிடுதலிலுமே கழிந்தது. பயணத்தின்போது அவனுடைய இருக்கையின் அருகே காலியிடமிருந்தும் யாரும் அதில் அமர்ந்துகொள்ளவில்லை. அவனுடன் கூடவே பயணித்துக்கொண்டிருந்த விதி அதில் அமர்ந்திருந்ததை அவர்களுடைய, கட்புலனுக்கு அகப்படாத, உள்ளுணர்வு அவர்களுக்கு உணர்த்தியிருக்கக் கூடும். நகரத்தில் பேருந்து அவனை இறக்கிவிட்டதும் அவன் நேராக எழுதுபொருள்கள் விற்கும் கடைக்குச் சென்று கோடு போட்ட வெள்ளைத் தாள் ஒன்று வாங்கிக்கொண்டான்.

அன்று அவன் வீடு வந்து சேர்ந்தபோது அகாலமாகிவிட்டது. அனைவரும் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்தார்கள். அவனுக்காக உறக்கச் சடவோடு எழுந்து வந்து வாயிற்கதவைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்த பெண்ணும் மனைவியோ மகளோ அல்லது மருமகளோ அவனிடம் பயணத்தைப் பற்றி எதையும் விசாரிக்கவில்லை. அவனைப் பார்த்துப் புன்னகைக்கக் கூடயில்லை. ஒப்புக்குச் சாப்பிட்டீர்களா என்று ஒருமுறை கேட்டாள். அவனும் வெற்றியின் எக்களிப்பிலும் அடுத்த காய் நகர்த்தலுக்கான திட்டமிடலிலும் மூழ்கிப் போயிருந்ததால், அவளிடம் எதையும் பிரஸ்தாபிக்க முயலவில்லை. சாப்பிடவுமில்லை. கதவு திறக்கப்பட்டதும் வயதுக்குப் பொருந்தாத வேகத்தோடு நடப்பதாக முதுகுப்புறம் அவள் பலமாகவே முணு முணுக்கும்வண்ணம், விரைந்து சென்று தன் அறையை அடைந்து உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டு, அதை உட்புறம் தாளிட்டுக்கொள்ள அவன் விரும்பினான், ஆனால் செய்யவில்லை, அவனுக்கு வயதாகிக்கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் மற்றவர்களுடைய உதவி தேவைப்படலாமென்றும் இனி அவனுக்கென்று அந்தரங்கமான விஷயங்கள் எதுவும் இருக்க முடியாதென்றும் அவனுடைய குடும்பத்தவர்கள் ஏகோபித்த விதமாக முடிவுசெய்திருந்ததால் அதற்கு அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, இரவு விளக்கை மட்டும் எரிய விட்டுக்கொண்டு, புழுதியாலும் வியர்வையாலும் அழுக்கேறியிருந்த உடையைக்கூட மாற்றிக்கொள்ளத் தோன்றாமல், தரையிலமர்ந்து, வாங்கி வந்திருந்த வெள்ளைத் தாளைத் தன் முன்னே தரையில் விரித்து வைத்துக்கொண்டு அரைகுறை வெளிச்சத்தில் அவன் மனத்தில் இன்னும் உயிருடன் இருப்பதைப் போன்ற பிரமையை அளித்தபடி நிழலாடிக்கொண்டிருந்த பால்யகாலத் தோழர்கள், குடும்பத்தின் மிக மூத்த உறுப்பினர்கள் மற்றும் சில, அவனுக்குப் பிடித்த பிரபலங்கள், இதில் எம். ஜி. ராமச்சந்திரனையும் அவன் மறுபடி சேர்த்துக்கொண்டான், அவர் இப்போது அவன் மனத்திலும் உயிரோடிருப்பவராகவே குடிகொண்டுவிட்டார், நம்பியாரிடமிருந்து பாமர ஜனங்களைக் காப்பாற்றியதைப் போலவே, அவர் இறந்ததற்குப் பின்னும் அவனைப் பொல்லாத விதியை வெற்றிகொள்ளச் செய்துவிட்ட அவர் அவனுடைய நன்றிக்குரியவராகியிருந்தார், என்று அத்தனை பேருடைய பெயர்களையும் விவரமாக எழுதிப் பட்டியலிடத் தொடங்கினான். முதலில் மிகுந்த தயக்கத்துடன் எழுதத் தொடங்கிய அவனுடைய கை பட்டியல் பெரிதாகப் பிரக்ஞையை மீறிய வேகத்துடன் செயல்பட்டு நனவிலியின் இண்டு இடுக்குகளிலிருந்தெல்லாம் பெயர்களைப் பிடித்திழுத்துக் கொண்டுவந்து தாளில் கொட்டியது. அவனுக்குப் பிடிக்காதவர்களையும் முன்பின் அறிமுகமற்றவர்களையும் அவனுடைய பிறப்பிற்கு முன்பே இறந்துவிட்டவர்களையும் உள்ளூரில் மட்டுமன்றி வெளியூரிலிருந்து பின் இறந்தவர்களின் பெயர்களையும்கூட அது விட்டுவைக்கவில்லை. சந்திப்பின் சாத்தியங்களைப் பற்றி அந்த, பித்துப்பிடித்த, இரவில் அவனும் ஒரு கணமேனும் கவலைப்படவில்லை. கிட்டத்தட்ட விடியும் நேரம்வரை அவன் அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தான். பிறகு, பட்டியல் ஒரு வழியாக முடிவிற்கு வந்துவிட்டதாகத் தோன்றியதும், அல்லது மேற்கொண்டு எழுதுவதற்கு இடமின்றித் தாள் காலியாகிவிட்டதாலோ என்னவோ, எழுந்திருந்து பயணப் பெட்டியை எடுத்துப் பட்டியலை உள்ளே வைத்து அதனுடன் கூடவே தன்னுடைய துணிமணிகளையும் அடைத்துக்கொண்டான். எல்லாம் முடிந்துவிட்டதாகத் திருப்தியேற்பட்டபின் மறுநாள் குடும்பத்தவர்களிடம் எப்படிப் பேசி இறந்தவர்களை உயிரோடிருப்பவர்களிடம் பல்வேறு கேள்விகளால் விசாரித்து முடிக்கும், அதன்மூலம் அவனுடைய இருப்பை உறுதிசெய்துகொண்டேயிருக்கும், முடிவற்ற பயணம் ஒன்றை மேற்கொள்வதுபற்றிய தன் முடிவை அறிவித்து அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டு மென்பதையும் ஒருமுறை நன்றாக ஒத்திகை பார்த்துவிட்டு, ஆனால் பலமுறை முயன்றபிறகும் அதை மறுத்துப் பேச முடியாதபடி அவர்களுடைய வாயைக் கட்டிவிடும் ஒரு தொடக்கச் சொல்லை மாத்திரம் அவனால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது, கடைசியில் அது அந்தச் சூழலுடன் இயைந்து காலையில் தானாகவே நாவை வந்தடையுமென்று தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான், மிகுந்த மனச் சாந்தியுடன் படுக்கைக்குப் போனான். விடியும் நேரத்தில் தூங்கச் சென்றதால், எந்தவித இடையூறும் ஏற்படாத பட்சத்தில், கடைசித் தடவையாகத் தன்னுடைய அறையில் தன்னுடைய படுக்கையில், ஆசைதீரத் தூங்கியெழ வேண்டுமென்பதே அப்போது அவனுடைய விருப்பமாய் இருந்தது.

ஆனால் உறங்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவன் தன் மகனால் உரக்க அழைக்கப்பட்டு, அது அவன் மகன்தான், ஏனென்றால் அவன் அப்போது அப்பா அப்பா என்றுதான் கூப்பிடப்பட்டுக்கொண்டிருந்தான், மேலும் அந்தக் கணத்தில், படிகளின்மீதிருக்கும் குழந்தையை நீங்கள் அழைக்க முடியாது, நீங்கள்தான் அழைக்கப்படுவீர்கள் என்று முடியும் ஷன்டாரோ தனிக்காவாவின் கவிதையும் அவன் ஞாபகத்தில் மின்வெட்டியது, அவனுடைய தூக்கம் பாதியிலேயே கலைக்கப்பட்டுவிட்டது. கண்விழித்துப் பார்த்தபோது மகன் மட்டுமல்லாமல் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவருமே தன்னுடைய படுக்கையினருகே தன் முகத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி குழுமியிருந்ததையும் அவன் கண்டான். ஒரு நொடியில் என்ன நடந்திருக்குமென்பதை அவன் புத்தி ஊகிக்கத் தலைப்பட்டுவிட்டது. சந்தேகமில்லாமல் அதுவும் விதியினுடைய வேலைதான். திறந்திருந்த அறையைக் காலையில் சுத்தம் செய்ய வந்த வேலைக்காரப் பெண்ணின் பார்வையில் அது அவனுடைய பயண ஏற்பாடுகளைக் காட்டியிருக்கும், பதறிப்போன அந்தப் பெண்ணால் அந்தக் காட்சி, பக்குவமாக அவன் வாயால் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதுவும் நன்மைக்குத்தான். எப்படி ஆரம்பிப்பது என்கிற அவனுடைய பிரச்சினை அவளுடைய அவசரத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது. இனிப் பீடிகை வார்த்தைகளைத் தேடிக்கொண்டிராமல் நேரடியாகவே தேசாந்திர முடிவைச் சொல்லிவிடலாம். ஆனால் அவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து தன்னை அழைத்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து, ஆமாம், எனக்கு வேறு வழி தெரியவில்லை எனப் பேசவாரம்பிப்பதற்குள் அவனுடைய மகன் அந்தப் பேச்சை இடைமறித்து எரிச்சலூட்டும் முழக்கத்துடன் அவனைப் பார்த்து, அன்று நம் வீட்டிற்கு விருந்தாட வந்த பெண்ணிடம் நீங்கள் என்னதான் கேட்டீர்கள் என்று கேட்டான்.

அறுபத்தியிரண்டு வயதான அந்த மனிதனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இரவு உறங்கச் செல்லும்முன் அவர்களிடம் உரையாடுவதுபற்றி நினைத்தபடியேயிருந்ததால் ஒருவேளை கனவு காண்கிறோமோ என்றுகூட அவனுக்குச் சந்தேகமேற்பட்டு விட்டது. எனவே எதிரேயிருப்பவன் சொல்வதைக் கிரகித்துக்கொண்டு பதில் சொல்வதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. அதற்குள் அந்த மகன் அவனுடைய பதிலுக்காகக் காத்திராமல் தானே தன் கேள்விக்கான பதிலை மேலுமொரு கேள்வியாக உரக்க அறிவித்தான், அவளுடைய தந்தையின் இறப்பைப் பற்றித் துக்கம் விசாரித்திருக்கிறீர்கள், அப்படித்தானே. ஆமாம் என்பதைத் தவிர வேறெதையும் அவனால் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண் என்னுடைய இங்கிதமற்ற விசாரிப்பைப் பற்றி அவர்களிடம் சொல்லியிருக்கிறாள் எனத் தன் மனத்திற்குள் பொருமிக்கொண்டான், ஆனால் என்னுடைய நிலையில் இருந்து பார்த்தாலல்லவா அதைக் கேட்காமலிருப்பதன் வாதை தெரியும். அவன், உரத்த குரல் எதிராளியைச் சற்றே பின்னடையவைக்கு மென்கிற நம்பிக்கையுடன், சற்றுத் தைரியத்துடனேயே, ஆனால் என்னுடைய ஆத்ம நண்பரான அவருடைய மறைவைப் பற்றி விசாரிக்க ஒரு சந்தர்ப்பம் பின் எப்போதுதான் கிடைத் திருக்குமென்று நீ நினைக்கிறாய் என்று பதிலுக்குக் கத்தினான். அவன் பேசி முடிக்கும் முன்பே கூட்டத்திற் குள்ளிருந்து ஒரு பெண்ணினுடைய குரல், அது அவனுடைய மனைவியோ மகளோ மருமகளோ அல்லது பேத்தியோ, அந்தப் பெண்ணின் தகப்பனார் இறந்து போனாரென்று உங்களுக்கு யார் சொன்னது எனக் கேட்டது. அவன் வெலவெலத்துப் போய்விட்டான். அப்படியானால் அந்த மனிதர் இன்னும் சாகவில்லையா, அந்தப் பெண்ணின் முகம் இருண்டு கருத்ததன் காரணம் தந்தையைப் பறிகொடுத்த துக்கமில்லையா, மாறாக துஷ்டி வார்த்தைகள் ஒரு துர்சகுனமாய்ச் செயல்பட்டு அவரைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டுவிடக் கூடுமென்கிற பீதியால்தானா. விதி மிக லாவகமாக, தேர்ந்த முன்னனுபவத்தோடு, சூதாடும் போதைக்குள் இறங்கச் செய்வதற்காகவே தன்னைப் போலியாக ஜெயிக்க விட்டுவிட்டுக் காயை நகர்த்தியிருக்கிறது என்பதை அவன் அப்போதுதான் அறிந்துகொண்டான். அவன் நிலையை உங்களால் அனுமானிக்க முடிகிறதுதானே.

தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டு அவன் ஓவென்று வாய்விட்டு, ஒரு குழந்தையைப் போல அழுதான். அவனுக்கு ஆதரவாகப் பேச, தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டு உனக்கு ஒன்றுமில்லை, கவலைப்படாதே என்று சொல்ல, யாரும் இல்லை. அனைவருமே அவனை ஒரு இறந்துபோன மனிதனாக மாற்றவே தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறார்கள். நாகரிகமான பதில்களைச் சொல்ல விருப்பமில்லாமல் அவன் கேட்கும் கேள்விகளைக் கேலிசெய்து அவற்றைக் கடந்தகாலத்திற்குள் புதைத்துவிட எத்தனிக்கிறார்கள். கேள்விகள், வெறும் கேள்விகள். அதைப் பாசக்கயிறாக மாற்றிக் கையில் வைத்துக்கொண்டு விதிதான் என்னை எப்படித் தன்னை நோக்கிச் சுண்டியிழுக்கிறது என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். பிறகு ஆம், வெறும் கேள்விகள்தான், ஆனால் வெறும் கேள்விகள் என்று தெரிந்தபிறகும் நான் ஏன் அவற்றைக் கேட்டேயாக வேண்டுமென்று இத்தனை பிரயத்தனப்படுகிறேன் என்றும் தன்னைத்தானே வினவிக்கொண்டான். அவன் மனத்தில் பின்வரும்விதமாக எண்ணங்கள் ஓடின, கேள்விகள் ஏன் என் இருப்பை உறுதிசெய்பவையாக இருக்க வேண்டும், என் எதிரே என் கண்களுக்குப் பிரத்யட்சமாகிற ஒரு நிஜ மனிதனிடம் நான் ஏன் அங்கேயில்லாத, அவன் உயிரோடு இருப்பவனாக இருக்கட்டும் அல்லது ஏற்கனவே செத்தொழிந்து போனவனாகவேதானிருக்கட்டும், ஒரு கற்பனை மனிதனைப் பற்றி விசாரிக்கிறேன், நான் ஏன் என் நிகழ்காலத்தில் இல்லாமல் எப்போதும் இறந்தகாலத்தை நோக்கியே திரும்பி நடந்துகொண்டிருக்கிறேன், விதியின் பாசக்கயிற்றை நான் எதற்காக எதிர்த்துப் போராட வேண்டும், போராடுவதன் மூலமாக அதன் இருப்பை ஒத்துக்கொள்ள வேண்டும், ஒத்துக்கொள்வதனாலேயே அதன் முடிச்சைத் திரும்பத் திரும்பச் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும், மொத்தத்தில் நான் ஏன் விதியைப் பொருட்படுத்த வேண்டும். அவனுக்கு அப்போது தான் சந்தித்த அந்தக் கிராமத்துக் கிழவியின் நினைவு வந்தது. அவர்களால் எப்படி எம்ஜியார் என்கிற இறந்த காலத்தைக்கூட நிகழ்காலமாக்கி உறவு கொண்டாடி உயிர்ப்புடன் இருக்க முடிகிறது, ஓ, நான்தான் எத்தனை பெரிய முட்டாள்.

அவன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டான். இரவு முழுவதும் கண்விழித்துத் தயார் செய்துவைத்திருந்த தன்னுடைய மூட்டைமுடிச்சுகளையும் தீர்த்த யாத்திரை முடிவையும் கால்களால் எட்டி உதைத்தான். இறந்தவர்களின் பட்டியலைச் சுக்குநூறாகக் கிழித்தெறிந்தான். பிறகு சாவு வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்தவன் பீடையைப் போக்க விரும்புவதைப் போல அழுக்கான உடைகளைக் களைந்துவிட்டுக் களைப்பும் பழைய எண்ணங்களும் கரைந்தழியும்வண்ணம் நெடுநேரம் நன்றாகக் குளித்தான். புத்தம் புதியவையும் சற்று நவீனமானவையுமான உடைகளை, அவன் நடுத்தர வயதிலிருந்து முதியவனாக மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருவிழா நேரத்தின்போது அவனுடைய மகன் அவனைத் தன் பழைய தகப்பனாகப் பார்க்க விரும்பிக் கடைக்கு அழைத்துச் சென்று தன் கைகளால் பரிசாக எடுத்துத் தந்த, ஒருமுறைக்குமேல், வெட்கம் காரணமாக, அவன் உபயோகிக்காமலேயே விட்டுவிட்ட, உடைகள் அவை, அலமாரியிலிருந்து எடுத்து அணிந்துகொண்டான். பிறகு தன் அறையை விட்டு வெளியே வந்து காலை உணவிற்கான அவர்களுடைய அழைப்பைக்கூடப் பொருட்படுத்தாமல் கால்கள் கொண்டுபோன திசையில் நடந்தான். எத்தனை காலம் எத்தனை தொலைவு எதிலெல்லாம் பயணித்து அப்படி நடந்தானென்பது எனக்குத் தெரியாது. இரண்டு வீடுகள் தள்ளியோ அல்லது இரண்டு தெருக்களைத் தாண்டியோ அல்லது இரண்டு நகரங்களுக்கப்பாலோ கால்கள் நடக்கத் தயங்கி ஒரு வீட்டின்முன் அவனைக் கொண்டுபோய் நிறுத்தும்வரை அவன் நடந்துகொண்டேயிருந்தானென்பது மட்டும் தெரியும்.

மலையாள தேசத்தைச் சேர்ந்தவளும் அவனுடைய யவ்வனப் பருவத்துக் காதலியுமான ஒரு பெண்ணின் வீடு அது. அந்தப் பிராயத்தின் எல்லாக் காதலர்களையும் போலவே அவர்களும் தீவிரமாகச் சில நாட்கள் காதலித்துவிட்டுப் பிறகு ஏதேதோ காரணத்தால் வேறு வேறு துணைகளைத் தேடிக்கொண்டார்கள். பிறகும் அவளுடைய வாழ்வை அவன் தொலைவிலிருந்தே பின்தொடர்ந்துகொண்டிருந்தான். அவள் கணவன் ஏதேதோ அச்சத்தால் பீடிக்கப்பட்டு இறந்துபோனான். அவளுடைய வாரிசுகள் தங்களுக்கான எதிர்காலத்தையும் தங்களுக்கான வாரிசுகளையும் தொலைவிலிருந்த நகரங்களில் கண்டுபிடித்துக்கொண்டு அவளை, அவள் விருப்பத்தின்பேரிலேயே, பூர்வீக வீட்டில் விட்டுவிட்டுப் பிரிந்துபோயிருந்தார்கள். அவளும் அங்கே தனிமையில் வசித்துவந்தாள். தன்னுடைய பால்யத்தின் வசந்தகாலமான அவளுடன் திரும்ப ஒருமுறையேனும் மனம் விட்டுப் பேச வேண்டுமென்று அந்த அறுபத்தியிரண்டு வயதான மனிதன் எத்தனையோ காலமாக ஏங்கிக்கொண்டிருந்தான். ஆனால் அதற்கான துணிவு மட்டும், அன்றுவரை, அவனுக்குக் கைகூடவில்லை. அன்றும்கூட, அவனுடைய கால்கள் தன்னிச்சையாக அவனை அவள் வீட்டின்முன் கொண்டுபோய் நிறுத்தியிருந்தனவேயன்றி உள்ளே நுழைவதற்கோ கதவைத் தட்டுவதற்கோ அவளைப் பெயர் சொல்லி அழைக்கவோ அல்லது ஒரு அடையாளத்திற்காகவேனும் இறந்துபோன அவளுடைய கணவனின் பெயரை விளித்துத் தன் வருகையை அவளுக்கு அறிவிக்கவோ அவசியமான தைரியம் அவனுக்கு இருந்ததென்று சொல்ல முடியாது. ஆனால் கால்கள் உடலை வந்த திசையை நோக்கித் திரும்புவதற்கு அனுமதிக்கவில்லையென்பது மட்டும் நிச்சயம். அவன் நெடுநேரம் அந்த வீட்டின் வாசலிலேயே, கடைசியில் அவளாகவே, தன் தளர்ந்துபோன முலைகளை மறைக்கும் கவனமற்றவளாய், தோளிலிருந்த ஈரத் துணிகளை முன்புறத் தோட்டத்தில் இரண்டு பலா மரங்களின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த கம்பிக் கொடியில் உலர்த்துவதற்காகக் கதவைத் திறந்துகொண்டு தன் முன்னே பிரசன்னமாகும்வரை, அதன் சீமையோடுகள் வனைந்த அழகிய மர முகப்பை உற்று நோக்கியபடி நின்றுகொண்டிருந்தான்.

முதலில் அவள் அவனைத் தெருவில், போகிற போக்கில், காலில் ஏறிவிட்டிருந்த முள்ளையோ கண்ணாடித் துண்டையோ தரையைச் சீய்த்து அகற்றிக்கொள்வதற்காக, எதேச்சையாக, தன் வீட்டு வாசலில் தயங்கி நிற்க நேர்ந்த ஒரு வழிப்போக்கன் என்று நினைத்துக்கொண்டுவிட்டாள். எனவே துணிகளை உலரப்போட்டுவிட்டு அடுக்களை நினைவில் உடனே உள்ளே திரும்பிவிடவுமிருந்தாள். அவனும் அவளைக் கண்டதும் அடைந்துவிட்ட ஒருவிதப் பரவச உணர்வில் தன்னை அறிவித்துக்கொள்ளும் பிரக்ஞையை இழந்துபோய்க் கல்லாய்ச் சமைந்து நின்றிருந்தான். பிறகு கால்களை மாற்றி மாற்றி வைத்தபடி அவன் நின்றுகொண்டிருந்த விதமே, இரக்கத்திற்குரிய வகையில், அவன் நெடுநேரமாய் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறானென்பதையும் அது தன் பொருட்டாகவேதானென்பதையும் சூசகமாகத் தெரிவிக்கும் செய்தியாக, தானே, அவளை வந்தடைந்தது. அவள் பற்பல வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக அவன் ஒரு அன்னியனாக அவளுக்கு அறிமுகமானபோது பார்த்ததைப் போலவே, தலையை இடப்பக்கமாய்ச் சரித்துத் தன் பிரபலமான காக்கைப் பார்வையால் ஒரு சில நிமிடங்கள் பார்த்து அவனுடைய உருவத்தை அவதானிக்க முயன்றபின் சற்று முன்னோக்கி நடந்துவந்து பாதுகாப்பான தொலைவில் தன்னை நிறுத்திக்கொண்டு அவன் யாரென்றும் அவனுக்கு என்ன வேண்டுமென்றும் விசாரித்தாள். அவளைச் சிறுவயதினளாகவே பார்க்கும் உணர்விலிருந்து அவனால் விடுபட முடியவில்லையென்றாலும் மீள முடியாத அளவிற்கு அதனுள் அவன் புதைந்து போய்விட வில்லையாதலால் சிறு புன்னகையுடன், உள்ளூர நடுங்கும் குரலில், தன்னை அடையாளம் தெரிய வில்லையா என்று அவளைப் பார்த்துக் கேட்டான். அவள் தன் தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டே அவனை உற்றுப் பார்க்கவாரம்பித்தாள். பிறகு சிறிது சிறிதாக அவளுடைய முகம் ஒளி பெறவும் உடல் நடுக்கம் காணவும் தொடங்கின. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கணத்தை நினைவுகூரும்போது அவள் அவனிடம் இப்படிச் சொல்லவிருக்கிறாள், அந்தக் கணத்தை அவ்விதமான அழுத்தத்தோடல்லாமல் சாதாரணமாகவே நம்மால் கடக்க முடிந்திருக்கும்தான், உடலுறவைப் போன்றே பால்ய ஞாபகங்களையும் முதுமை ஒரு அடையாளமென்கிற நிலையிலேயே நினைவின் ஆழத்திலிருந்து எழுப்பிக் கவனிக்கிறது, அது வடி வங்களை அவற்றின் ஆதார உணர்வுகளை வடிகட்டிவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ள முயல்கிறது, ஆனால் தனிமை ஒருபோதும் தன்னுலகில் அப்படியான தட்டையான நினைவுகளை அனுமதிப்பதில்லை, என் உடல் நடுங்கியதற்குக் காரணம் அதுதான். அவள் அவனை அடையாளம் கண்டுகொண்டபின் வியப்புடன் அவனை நலம் விசாரித்தாள். அத்தனை காலத்திற்குப் பிறகு தன்னைப் பார்க்க அத்தனை தொலைவு பயணப்பட்டு, அவள் சொன்னபிறகுதான் அவன் தான், எத்தனை தொலைவு என்று அவனுக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும், மேலும் இடம், காலத்தைப் பொறுத்தவரை தொலைவு என்பது மனத்தால் சிருஷ்டிக்கப்படும் ஒரு கற்பனையென்று அவன் உறுதியாக நம்புபவனென்றாலும், நெடுந்தொலைவு பயணம் செய்திருக்கிறோமென்பதையே தெரிந்துகொண்டான், வந்திருப்பது தனக்குச் சந்தோஷத்தையும் வெட்கத்தையும் கர்வத்தையும் அளிக்கிறது என்றும் சொன்னாள். பிறகு அவனை உள்ளே வரும்படி அழைத்தாள்.

அவளுடைய வீடு அதிகப் பொருட்களின்றி வெறுமையாக இருந்தது. அதிகமான அறைகளைக் கொண்ட, வசதியான, உறுதியான, பழைய காலத்து வீடு. என்றாலும் பராமரிப்பற்று ஆங்காங்கே காலத்தால் சிதிலமடைந்திருந்த, அவளுடைய வாரிசுகள் அவற்றைச் சரிசெய்யத் தயாராகவே இருந்தபோதிலும் அவள் தான் இருக்கும்வரையில் தனக்கு அந்த வசதி மட்டுமே போதுமென்று சொல்லி அவர்களைத் தடுத்துவிட்டாள், கூரைப் பிளவுகளின் வழியே நுழைந்து பிரதிபலித்துக்கொண்டிருந்த வெயிலும் சுவர்க் கீறல்களின் வழியே புகுந்து அலசிக்கொண்டிருந்த காற்றும் அங்கே அவன் அமர்ந்திருந்த நேரம் முழுவதும், சில மணிநேரங்களை அவன் அங்கே செலவழித்தான், அதை ஒரு திறந்தவெளி மைதானமாகவே அவனை உணரச் செய்துகொண்டிருந்தன. அந்தப் பின்புலத் தில் அவர்களிருவரும் அவர்கள் மட்டுமே இந்த உலகில் உயிருடன் நடமாடுவதாக உணர்ந்துகொண்டிருந்த நாட்களைப் பற்றி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்கள். அவள் அவனை, மறதியாலோ முதுமையாலோ ஒருமையில் அழைத்துப் பேசினாள், முன்பு ஒருபோதும் அவள் அப்படி அவனை அழைத்து அவன் கேட்டதில்லை, அது அவனுக்கு மகிழ்ச்சியையும் வயது குறைந்ததைப் போன்றவொரு உணர்வையும் அவளுடன் புதிதான நெருக்கவுணர்வையும் கொடுத்தது, பிறகு அவள் அவனைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தாள். அப்போது அவள் அவனோடு பழகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவனுடைய குடும்பத்திலிருந்து இறந்துபோன நபர்களைப் பற்றி விசாரிப்பதைத் தவிர்த்ததையும் அவர்களைத் தவிர மற்ற, அவளுக்கு அறிமுகமான மனிதர்களைப் பற்றி விசாரிக்கும் முன், ஞாபகமாக, அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை நாசூக்கான கேள்விகள் மூலமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டபின்பே உரையாடலைத் தொடர்ந்ததையும் அவன் ஆச்சரியத்துடன் கவனித்தான். வெறும் கேள்விகள், அதில்தான் விஷயம் அடங்கியிருக்கிறது. அவள் அவளுடைய விசாரிப்புகளை முடித்துக்கொண்டபின் அவன் தன் பங்கிற்கு, கவனமாகத் தேர்ந்தெடுத்துவைத்திருந்த, தன்னுடைய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். அத்தனை கேள்விகளும் அவளைப் பற்றியவையாக மட்டுமேயிருந்தன, அவர்கள் பிரிந்த பிறகு, அவனுக்காகவே பிரத்யேகமாகப் பழக்கப்படுத்திக்கொண்ட, கண்களுக்கு மையிடும் பழக்கத்தை அவள் கைவிட்டுவிட்டாளா அல்லது தொடர்ந்தாளா, உப்பிட்ட மீன் உணவுகளை இன்னும் விரும்பிச் சாப்பிடுகிறாளா, உடைகள் விஷயத்தில் அவளுடைய ரசனை என்ன, ஒற்றை மனுஷியாக இத்தனை பெரிய வீட்டில் வளைய வருவது அச்சத்தையோ விரக்தியையோ அவளிடம் ஏற்படுத்தவில்லையா, விரும்பித் தனிமையை ஏற்றுக்கொண்டுவிட்டபின் எப்போதேனும் அவனைப் பற்றிய நினைவுகளால் சற்றேனும் வாடியிருக்கிறாளா, முன்புறத் தோட்டத்தில் மண்டிக்கிடக்கும் மல்லிகைக் கொடியின் பூக்களை யாருக்குக் கொடுக்கிறாள், அவள் எப்போது சமைப்பாள், எப்போது சாப்பிடுவாள், எப்போது தூங்குவாள், உடல்நிலை சரியில்லாமல் போனால் யாரைத் துணைக்கழைப்பாள். அவனுடைய கேள்விகளின் தன்மையை அவளும் புரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டாள். அவன் ஏன் அவளுடைய மறைந்துபோன கணவனைப் பற்றியோ அயலிலிருக்கும் அவளுடைய வாரிசுகளைப் பற்றியோ அவனுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த, அவளுடைய தாய் தகப்பன் உள்ளிட்ட, ஏனைய உறவுகளைப் பற்றியோ எதையும் தெரிந்துகொள்ளப் பிரியப்படவில்லை, அவளை இந்த உலகத்தின் அவலங்கள் தாக்கி உருக்குலைத்து விடாதவண்ணம் பேணிக் காத்து இப்போது இப்படி அவன் கண்கள் பார்க்கும்படியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற அவர்களைப் பற்றி அவன் சம்பிரதாயத்திற்காகவாவது சில கேள்விகளைக் கேட்டிருக்கலாமே. அவன் சொன்னான், அந்தக் கேள்விகள் இறந்தவர்களைப் பற்றியதாய் இருந்தாலும் இப்போது இங்கே இல்லாதவர்களைப் பற்றியதாயிருந்தாலும் ஒன்றுதான், ஏனெனில் அவற்றில் ஒன்று இறந்தகாலத்தைப் பற்றியது, இன்னொன்று கற்பனையின்பாற்பட்டது, இரண்டுமே நிகழ்ந்து முடிந்த எதையும் மாற்றியமைக்க வலுவில்லாதவை, விதியின் பிரசன்னத்தை எப்போதும் அச்சமூட்டும் வண்ணம் பறைசாற்றுபவை, அவை உள்ளீடற்ற வெறும் கேள்விகள் மாத்திரமே, அவற்றால் உன் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கவோ அல்லது அச்சத்தால் முகங்கருக்கச்செய்யவோ நான் விரும்பவில்லை, நான் இந்தக் கணத்தில் என் முன்னே உயிர்த்துக்கொண்டிருக்கும் உன்னைப் பற்றி மட்டுமே அறிய விரும்புகிறேன். அவள் அவனை வேடிக்கையான மனிதன் என்றும் அவ்வகைப்பட்ட அவனை முன்பு தான் அறிந்துகொண்டதாக நினைவில்லையென்றும் சிரித்துக்கொண்டே கூறினாள்.

பேசிக்கொண்டே அவனும் அவளும் சந்தைக்குச் சென்று, செல்லும் வழியில் அவள் அவர்களிருவரும் காதலர்களாய் இருந்த காலத்தில் அம்மாதிரியான ஒரு பொது இடத்திற்கு, சந்தைக்குப் பரிசுப் பொருள் எதையேனும் வாங்கவோ அல்லது திரையரங்கிற்கு இருட்டில் தனியாக அமர்ந்து பேசும் இன்பத்தைப் பெறவோ, யாரேனும் பார்த்துவிடக்கூடுமென்கிற அச்சத்துடன், கைகளைக் கோத்தபடியே போய்விட்டு வந்த சம்பவத்தை அவனுக்கு நினைவுபடுத்தினாள், சமைப்பதற்கான மளிகைப் பொருட்களும் காய்கறிகளும் இறைச்சியும் வாங்கி வந்தார்கள். அவள் தடுத்தும் கேட்காமல், அது தன்னைச் சந்தோஷப்படுத்தும் என்று கூறி, அவற்றுக்கு அவனே பணம் கொடுத்தான். அவள் அவற்றைச் சமைத்து முடிப்பதற்குள் குளித்துவிட்டு வந்தான். பிறகு அவர்களிருவரும் வீட்டின் நடுக்கூடத்தில் தரையில் அமர்ந்து சேர்ந்து உணவுண்டார்கள். சாப்பிடும்போது அவள் அவனிடம் அவர்களிருவரும் ஒரு காலத்தில் காதலித்த விஷயம் அவனுடைய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தெரியுமா எனக் கேட்டாள். அவன் தெரியும் என்று பதில் சொன்னான், அவளைப் பிரத்யேகமாக அறிந்ததாக உணருமளவிற்கு அவன் அவர்களிடம் அவளைப் பற்றிப் பேசியிருந்தான், அவர்களிடம் அவன் எதையும் மறைத்ததில்லை. ஆனால் அவள் கேட்ட அந்தக் கேள்வியை அவன் அவளிடம், விதியின் இருப்புப் பற்றிய எச்சரிக்கையுணர்வால் கேட்கவில்லை. சாப்பாடு ஆனபிறகு மேலும் சிறிது நேரம், பாத்திரம் கழுவும் வேலைகளில் அவளுக்கு உதவிக்கொண்டே, உரையாடிக்கொண்டிருந்துவிட்டு அவன் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினான். அவள் அவனை வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்தாள். படியிறங்கும்முன் அவன் அவளிடம் இனியெப்போதும் தான் அங்கே திரும்ப வரப்போவதில்லை என்று கூறினான். அதற்கு அவள் அவன் இனியொருபோதும் அங்கேயிருந்து திரும்பிச் செல்லமாட்டான் என்று பனித்த கண்களுடன் பதில் கூறினாள்.

அவன் மனம் நிறைந்திருந்தது. இந்தமுறை தான் விதியை நிஜமாகவே வென்றுவிட்டோமென்று உறுதியாகவே நம்பினான். அவளிடம் அவன் கேட்டவை வெறும் கேள்விகளல்ல. அவை ஒவ்வொன்றும் உயிர்ச் சலனம் மிக்கவை. அவனால் தன் உடலில் வாலிபம் திரும்பவும் குடியேறியிருந்ததைத் தூலமாகவே உணர முடிந்தது. கடைசியிரவைப் போலவே அந்த இரவிலும் அவன் மிகத் தாமதமாகவே வீட்டிற்குத் திரும்பினான். ஆனால் முந்தைய சந்தர்ப்பத்தைப் போல இந்தமுறை அந்தக் குடும் பத்தவர்கள் தூங்கியிருக்கவில்லை. அவர்களனைவருமே கவலை தோய்ந்த முகங்களுடன் அந்த அகாலத்திலும் அவனை எதிர்பார்த்து விழித்திருந்தார்கள். அவன் தலையைக் கண்டதும் அவர்களில் யாரோ ஒரு பெண், அது அவன் பேத்தியாக இருக்கக்கூடும், சந்தோஷத்தில் பெருங்குரலெடுத்து அழக்கூடத் தொடங்கிவிட்டாள். கடைசிக் காலையில் நடந்த சச்சரவால் மனத்தாங்கலடைந்து அவன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விட்டதாக நினைத்து அவர்கள் குற்றவுணர்விற்கும் வயோதிகனான அவனுடைய பாதுகாப்பு குறித்த அச்சத்திற்கும் கவலைக்கும் ஆளாகியிருந்தார்கள். காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு வேண்டுகோளைப் பதிவுசெய்து வைக்கலாமா என்று கூட யோசித்திருந்தார்கள். நாள் முழுவதும் தாத்தாவைக் காணாமல் குழந்தைகள் அழுதது வேறு சகிக்க முடியாத பயங்கரமான நாளாக அதை ஆக்கிவைத்துவிட்டது என்றார்கள். திரும்பிவிடும் உத்தேசம் இருந்திருக்கிறபட்சத்தில் எங்கே போகிறானென்பதை அவன் சொல்லி விட்டுப் போயிருந்திருக்கலாம், மன உளைச்சல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆனால் அவர்களுடைய புலம்பல்களுக்குச் செவிசாய்க்கும் மன நிலையில் அவன் இல்லை. மாறாக அவர்களுக்கு இந்தக் கதையைச் சொல்லும் ஆர்வத்திலிருந்தான். அவன் சொன்னான், என்னால் உங்களுக்கு ஏதேனும் மனக் கஷ்டம் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னியுங்கள், ஆனால் இதுவே கடைசித் தடவையென்றும் இனி இவ்விதம் நடக்காது என்றும் நான் உங்களுக்கு உறுதிகூற முடியும். இதனால் ஒரு வழியாக அவர்களுக்குச் சமாதானம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவன் கேட்டான், அப்படி நீங்கள் எங்கே தான் போய்விட்டு வந்தீர்கள். உடனே அவன் தன்னுடைய காதலியின் பெயரைப் பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள்முன் ஒரு போர்ப் பிரகடனத்தைப் போல மீண்டும் உச்சரித்தான். அவர்களுடைய முகங்கள் குழப்பத்தில் கோணிக்கொண்டன. மீண்டும் ஒருவன் அவனிடம் புரியும்படியாகப் பேசுமாறு வேண்டிக்கொண்டான். அவன் அவளுடைய இருப்பிடத்திற்குச் சென்று அவளைச் சந்தித்தது பற்றியும் அவளுடன் உணவுண்டது பற்றியும் விலாவாரியாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். பிறகு எதற்கும் இருக்கட்டுமென்று எச்சரிக்கையாக, இத்தனை வயதிற்குமேல் தன்னுடைய முன்னாள் காதலியாயும் இன்று ஒரு விதவையாயும் இருக்கும் அந்தப் பெண்ணை, வெறும் சரீர இச்சைக்காகச் சந்திக்கச் சென்றிருந்ததாகத் தன்னைப் புரிந்துகொள்ளுமளவிற்கு அவர்கள் சந்தேகப் புத்தி கொண்டவர்களாய் இருக்கமாட்டார்களென்று தனக்கு நம்பிக்கையிருப்பதாயும் ஒரு வார்த்தை சொல்லிவைத்தான், நான் அங்கே சென்றதற்கு ஒரே காரணம் மனிதர்கள் பற்றிய என்னுடைய கேள்விகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்கிற ஆசை மட்டும்தான். ஆச்சரியத்திலும் கலவரத்திலும் நிஜமாகவே அவர்களுடைய வாய்கள் பிளந்துவிட்டன. ஒரு பெண், அவனுடைய மனைவியோ பேத்தியோ, அவனிடம் கேட்டாள், என்ன கேள்விகளைக் கேட்டீர்கள் அந்தப் பெண்ணிடம். அவன் சொன்னான், என்ன கேட்டேனென்பதை விட எதைக் கேட்கவில்லையென்று கேட்பது பதில் பெறுவதற்குத் தகுதியான கேள்வியாய் இருக்கும். சரி, அப்படியே ஆகட்டும், நீங்கள் அவளிடம் எதைக் கேட்கவில்லை. இறந்துவிட்டவர்கள் எப்படியிருக்கிறார்கள் எனக் கேட்கவில்லை, உயிரோடு இருப்பவர்களுக்குத் திதி செய்யப்படுகிறதா என்று கேட்கவில்லை, அவளுடைய மரித்துப்போன கணவர் அவளை எப்படி வைத்துக்கொண்டிருந்தார் என வினவவில்லை, அவருடைய இறப்பிற்குப் பிறகு வாழ்க்கை இனிக்கிறதா கசக்கிறதா என்று, நேற்றுவரை என் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்ததைப் போல, அசட்டுத்தனமாகக் கேட்கவில்லை, அவளுடைய உறவினர்களில் யார் யாரெல்லாம் இறந்துவிட்டார்களென்று கணக்கெடுக்கும் வேலையில் இறங்கி வெளிவர முடியாமல் திணறிக்கொண்டிருக்கவில்லை. அவன் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான். ஆனால் கூட்டத்தில் யாரும் அவன் சொன்னதை நம்பியதைப் போன்ற முகபாவத்தை வெளிப்படுத்தவில்லை. அவன் பேசி முடித்ததும் அவர்களில் ஒருவன் சொன்னான், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கேட்டிருந்தாலும் அந்த அம்மணியால் அதற்குப் பதில் சொல்ல முடிந்திருக்காது. ஏன். ஏனென்றால் நீங்கள் சந்தித்துவிட்டு வந்திருப்பது உங்களுடைய பழைய காதலியையே அல்ல. அவனுக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது. யாருடைய கரமோ தன்னுடைய இடது கரத்தை இறுகப் பற்றுவதைப் போலவும் உணர்ந்து கையை அனைவரும் பார்க்கும்வண்ணம் பகிரங்கமாகவே திருகிக்கொண்டான். அவனுக்கு இந்தப் பதில் என்ன மாதிரியான உணர்வுகளை அளித்திருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதுதானே. பொய், நீங்களென்னவோ என்னைப் பின்தொடர்ந்து வந்து பார்த்தவர்களைப் போலப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. பின்தொடர வேண்டிய அவசியமே எங்களுக்கில்லை, அந்தப் பெண்மணி உங்கள் காதலியில்லையென்பது எங்களெல்லோருக்குமே தெரியும். எப்படித் தெரியும் நாய்களே, வேசி மகன்களே, எப்படித் தெரியும். தெரியும், எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கேகூட அது தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் உங்களுடைய அந்தப் பழைய காதலி இறந்து போய்விட்டதாக சில மாதங்களுக்கு முன்பாக எங்களுக்குத் தகவல் சொன்னவரே நீங்கள்தான்.

அந்த அறுபத்தியிரண்டு வயது மனிதன் ஒன்றும் பேசவில்லை. ஒவ்வொருமுறை விதி தன் காயை நகர்த்திய பின்பு நிலவும் வழக்கமான மௌனம் அப்போதும் அங்கே நிலவியது. ஆனால் இம்முறை அது அவன் மனத்தில் எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் போதுமென மனத்திற்குள் சொல்லிக்கொண்டான். அவனுக்கு மிகவும் களைப்பாயிருந்தது. அவளை அவன் சந்தித்தது நூறு சதவீதம் கற்பனையற்ற நிஜம். ஆனால் அதை உண்மையென்று நிரூபிக்கும் ஆர்வமும் அவள் இறந்துபோனாள் என்று சத்தியம் செய்யும் யாரையும் நிறுத்தி அவர்களுடன் எதிர்வாதம் செய்யும் வேகமும் அவனிடமிருந்து வடிந்துவிட்டிருந்தன. விளையாடி விளையாடி விளையாட்டின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டுவிட்டதைப் போன்ற ஒரு பெருத்த அமைதியும் அவன் மேல் படிந்து அவனை ஆதூரத்துடன் அணைத்துக்கொண்டது. இடது கரம் பற்றப்பட்டிருக்கும் உணர்வு அப்போதும் அவனைவிட்டு நீங்கவில்லையென்றாலும் கையைத் திருகிக்கொள்வதை அவன் நிறுத்திவிட்டிருந்தான். கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இடையில் சதா தத்தளித்துக்கொண்டிருந்த மனம் சட்டென அவற்றின் மத்தியில், அவற்றை இணைக்கும், ஆனால் அவற்றுக்குத் துளியும் சம்பந்தமற்றதாகச் சுழன்றுகொண்டிருக்கும் ஒரு புள்ளியை இனங்கண்டுகொண்டிருந்தது. அது என்ன என்பதைப் புத்தியால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அதைப் பற்றி அவன் கவலைப்படவுமில்லை. ஆனால் அவனுடைய அலைச்சல்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாகப் புத்தி அறிவித்தபோது அது எப்போதோ நிகழ்ந்துவிட்டதென்று மனம் கிண்டலுடன் பதில் சொன்னதை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. மேலும் முக்கியமாக இதெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்த கணங்களில் தன்னை ஆட்டுவித்துக்கொண்டிருந்ததாக அவன் எப்போதும் கறுவிக்கொண்டிருந்த விதி என்கிற ஒன்றின் நினைவே அவனுக்கு வரவில்லை.

அவன் சற்றுத் தூங்க விரும்பினான். தூங்கியெழுந்த பிறகு குடும்ப உறுப்பினர்களுடன் விருந்துகளுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான். ஆலயங்களைத் தரிசிக்க வேண்டும். திரைப்படங்களை ரசிக்கவும் உணவகங்களில் உணவருந்தவும் மருத்துவமனைகளில் உதவிக்காக இரவு முழுவதும் கண் விழித்திருக்கவும். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும், இப்போதும், அவனுக்கு ஏற்கனவே தெரிந்த, அப்போதுதான் அறிமுகமாகிற, இனி மேல் உறவாகவிருக்கிற எத்தனையோ மனிதர்கள் அவனைச் சந்திக்கத்தான் செய்கிறார்கள், சிரிக்கிறார்கள், கைகுலுக்குகிறார்கள். அவர்களுடன் தொடர்புடையவர்களின் இருப்பை அல்லது இறப்பைத் தெரிந்துகொள்ளாமலேயே அவர்களைப் பற்றி விசாரிக்கும் குழந்தைத்தனம் இன்னும் அவனுள் குறுகுறுக்கத்தான் செய்கிறது. அப்போதெல்லாம் அந்த நாளின் அகாலத்தில் அவனை வந்தடைந்த அமைதியானது ஆரவாரிக்க முன்னும் அவனைக் கையமர்த்தி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டுத் தன்னை இன்னும் இறுக்கமாக அவன்மேல் படர்த்திக்கொள்கிறது. அவன் யாரிடமும் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. யாரும் அவனிடமும், அவனுடைய நலம் உட்பட எதையும் விசாரிப்பதில்லை. கேட்டு என்ன ஆகப்போகிறது, சொல்லியென்ன ஆகப்போகிறது. வெறும் கேள்விகள்.

Print Friendly, PDF & Email

1 thought on “வெறும் கேள்விகள்

  1. மன்னிக்கவும் நான் முழுவதும் படிக்க நேரம் இல்லை திரு வெங்கடேசன் அவர்களின் கதை 1982 இல் படித்து வியந்த நினைவில் படித்தேன் பின் ஒரு நாளில் மீண்டும் படிப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *