வாணியைச் சரணடைந்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 3,477 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

ஒரு சில கணங்கள் வாணிக்கு ஒன்றும் புரியாத நிலைதான். முதலில், அந்த வித்யாசாகரனுக்கு அவள் சென்னை வாசியாக இருந்தவள் என்று எப்படித் தெரியும் என்ற குழப்பம்.

அது தெளியுமுன், தன்னையறியாமல் எட்டிப் பார்த்து விட்டு, அவள் எட்டிப் பார்த்ததை அவன் கண்டு விட்டானே என்று, அது இன்னமும் பெரிய குழப்பமாகப் போயிற்று. 

பதவிசாகப் பின் சீட்டில் போய் உட்கார்ந்து விட்டவள் அங்கிருந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாளா என்று கேவலமாக நினைப்பானே என்று உள்ளூரக் குன்றிப் போனாள் அவள். 

ஆனால், இவை அனைத்துக்கும் மூல காரணம், அவளது சென்னை வாசம் பற்றி அவன் சொன்னதுதான், அது அவனுக்கு எப்படித் தெரியும்? 

பெரிய ஊகம் தேவையில்லை, தாத்தாதான் ஏதோ அளந்திருக்கிறார். 

அதுவும், அவனிடம் கடுத்துவிட்டு வித்யாசாகரன் சென்றபின் நிலாவின் காக்காய். குயில் கதையின் கடைசிப் பகுதியை அவள் படித்து முடித்துவிட்டு திரும்பி வந்த அந்த சில நிமிஷங்களுக்குள். 

அகப்பட்டான் ஒருவன் என்று அளந்தார் போலும்.

ஆனால், அவருடைய அருமைப் பேத்தியைப் பற்றி தாத்தா பொய்யாகவேனும் பெருமையாகத்தான் பேசுவார் என்று ஒதுக்காமல் அதை எப்படி ஒத்துக் கொண்டான். 

அப்படி, அவளுடைய தாத்தா என்னதான் சொன்னார்?

ஆனால், அது பற்றி இப்போது அவரிடம் ஒன்றும் கேட்க முடியாது. 

காருக்குப் பின்னே வருவனவற்றைப் பார்ப்பதற்கான கண்ணாடியை அவன் சரி பண்ணாமல் வைத்திருக்கும் விதத்துக்கு தாத்தாவிடம், சைகையால் கூட ஒன்றும் கேட்பதற்கில்லை அதுவும், அவனது பார்வையில் பட்டு விடும். 

பெரிய கடைவீதியில் விருப்பமற்று இறங்கிய நீதா, காரில் இருந்த மற்றவர்களைப் பார்வையால் கூடக் கண்டு கொள்வதாக இல்லை. 

வித்யாசாகரனிடம் குழைந்து வழிந்து, கொஞ்சிப் பேசி விடை பெற்றவள், அதற்கு மேல் விருட்டென்று அருகில் இருந்த கடை ஒன்றில் புகுந்து விட்டாள். 

அவளுக்குப் பழக்கப்பட்ட கடை என்பது கல்லாவில் அமர்ந்திருப்பவர் அவளை வரவேற்ற விகிதத்திலேயே நன்கு தெரிந்தது. 

இங்கே வாங்கிப் பழகியவள்தான். எதற்காக அப்படி இங்கே ஒன்றும் இல்லாதது போல இகழ்ந்து பேச வேண்டும்? 

தேவையற்ற பொய் என்று அருவருப்புடன் நினைத்தாள் வாணி. 

வாசகசாலைக்குச் சென்றதும், காரிலிருந்து இறங்கி, நன்றி, கூற முற்பட்டால், வித்யாசாகரனும் இறங்கி, தாத்தா பேத்தியோடு கூடவே சென்றான். 

தாத்தாவும் அழைத்தார்தான். ஆனாலும் இவன் வந்தாக வேண்டும் என்று என்ன அவசியம்? 

காரணம் புரியாததோடு, வாணிக்கு இது பிடிக்கவுமில்லை! 

அன்று அவன் பேசிய பேச்சுக்கு இந்த வாசகசாலை யின் உள்ளே அவனது கால் படுவதே பாவம் அல்லவா? 

ஆனால் பெரியவராக மணிவாசகம் ஒன்று செய்யும் போது நேரடியாகத் தட்டிப் பேச முடியாமல் “தாத்தா அவர் யாரோ ஆடிட்டரைப் பார்க்க அவசரமாகச் செல்ல  வேண்டும் என்றாரே” என்று நினைவு படுத்தினாள் இருவருக்குமே. 

புன்னகை செய்து “உன் அப்பா கதிரின் கார்டு ஒன்று தம்பிக்கு தருவதாகச் சொன்னேன். குட்டிப் பாப்பாவுக்குத் தொட்டில் போடுவதற்காகச் சில முக்கிய பொருட்கள் வாங்க வேண்டுமாம். இங்கே இருந்து பெண்கள் செல்ல முடியாத நிலை என்பதால், உன் அம்மாவிடம் கொஞ்சம் உதவி பண்ணச் சொல்லலாம் என்று ஒரு யோசனை’ என்றார் பாட்டனார். 

தன்னைப் போலவே இந்தப் பகுதியில் முதலில் இருந்து வசிப்பவர்கள் என்பதாலோ என்னவோ. இந்த வித்யாசாகரனுடைய குடும்பத்தைத் தாத்தாவுக்கு ரொம்ப பிடித்து விட்டது என்று வாணிக்குத் தோன்றியது. ஆனால், அதற்காக சென்னையில் சாமான் வாங்குவதற்கு, அவள் தாயார் உதவி பண்ண வேண்டுமா? 

அதிலும் இவனுக்கு. 

“அப்படி என்ன, இங்கே கிடைக்காத முக்கிய பொருள், அங்கே மாத்திரமாகக் கிடைக்கப் போகிறது?” என்றாள் அவள் ஒரு மாதிரி குரலில். 

அந்த நீதாவே போல புத்தியா என்று கேளாமல் கேட்டது குரல். 

ஆ “இங்கேயே நிறைய கிடைக்கும்தான். ஆனால். தங்கம் வைரம் நகைகள் எல்லாம் இன்னமும் இங்கே பெரிதாகச் சொல்லும் அளவுக்கு வரவில்லைதானே? ஆசையாக மகள் வயிற்றுப் பேத்திக்குச் செய்ய விரும்புகிறார்கள். தேவகி அம்மா, சுபாவுடைய புகுந்த வீட்டாருக்கும் திருப்தியாக இருக்க வேண்டும் என்றால், இப்போதைக்கு சென்னைதான் சரி. அத்தோடு யாராவது பெண்கள் பார்த்து வாங்குவது நல்லது என்றுதான், தாரிணியிடம் கேட்கச் சொன்னேன். இது போன்ற விஷயங்களில், உன் அம்மா மிகவும் கெட்டிக்காரி அல்லவா?” 

மறுத்துப்பேச முடியாத ஒன்று. 

அது மட்டுமல்ல நகை. நல்ல துணிகள் யாருக்கு வாங்க வேண்டும் என்றாலும் சலிப்பின்றி கூட அலைந்து திரிந்து தேர்ந்தெடுத்துக் கொடுக்க, அவள் தாய் தயங்கவே மாட்டாள். 

அப்படி ஒரு ‘ஷாப்பிங்’ பைத்தியம் அவள். 

“இப்படி நாலு இடங்களில் சுற்றிப் பார்த்தால்தானே, நமக்கு வாங்கும்போது நல்லதாக, நம்பமாக எங்கே வாங்கலாம் என்று தெரியும்” என்று ஏதோ காரணமும் சொல்லுவாள். 

ஆனால், முக்கியமான காரணம் நிறைய புதுப் புதுப் பொருட்களை ஆராய்வது மட்டுமல்ல. அவள் வைத்திருக்கும் ‘பொட்டிக்’ துணிமணிகளை மற்றவர்கள் பொருட்களோடு ஒப்பிட்டு விலையைக் கூட்டுவது, குறைப்பது செய்யவும். அதற்குத் தேவையானது மலிவாக எங்கே கிடைக்கும் என்று கண்டு கொள்ளவும் தான் என்பது வாணி அறிந்ததே. 

அதற்காகவே எல்லா இடங்களுக்கும் இழுத்துக் கொண்டு போவாள். 

எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஏதாவது ரொம்பப் பிடித்தால், சட்டெனத் தனக்கென்று வாங்கியும் விடுவாள். 

மருமகளைப் பாராட்டுவதோடு முடிக்காமல் “உன் அம்மாவினது போலவே உன் தேர்வும் மிகவும் பிரமாதமானதாகத்தான் இருக்கும். இன்றைய இளைய தலை முறைக்கு இன்னமும் ஏற்றதாகவும் இருக்கும். நீயும் சென்னைக்கு போவதாக இருப்பதால்… முடிந்தால்…” என்று அவர் இழுத்தபோது, என்ன வரப் போகிறது என்று புரிந்து, வாணி சட்டெனக் குறுக்கிட்டுப் பேசினாள். 

“எனக்கு அதற்கெல்லாம் அவகாசம் இராது தாத்தா. நான் வாங்க வேண்டியதே நிறைய இருக்கிறது” என்றாள் கறார்க் குரலில். 

“அதுவும் சரிதான்” உடனே ஒத்துக் கொண்டார் பெரியவர். 

அவள் ஐயமாய்ப் பார்க்கும்போதே “நீயும் அங்கே போவதாய் இருப்பதால், ஒரு சின்ன யோசனை சொன்னேன் அவ்வளவுதான். நீங்கள் உள்ளே வந்து உட்காருங்கள் தம்பி. நான் என் பையனின் விசிட்டிங் கார்டை எடுத்து வந்து தருகிறேன்” என்று உள்ளே செல்லத் திருமபினார் மணிவாசகம். 

தாத்தா சென்று விட்டால், பிறகு மரியாதை நிமித்தமாகவேனும் இவனோடு நின்று பேச நேருமே. 

அவசரமாக எட்டிப் பார்த்து “என்ன சுந்தரி இதோ வருகிறேன்” என்று உரக்கக் கூறியவாறு மணிவாசகத்துக்கு முன்னதாக இடத்தைக் காலி செய்தாள் வாணி. 

“வாசகசாலை வேலை என்றால் எங்கள் மதுரவாணிக்கு உயிர். அவள் பாட்டியும் அப்படித்தான். நீங்கள் உள்ளே வாருங்கள் தம்பி அங்கேதான்…” என்று பேசியவாறே வாசகசாலையின் பின்புறம் இருந்த வீட்டுப் பகுதிக்குள் வித்யாசாகரனை அழைத்துச் சென்றார் மணி வாசகம். 

இப்படித்தான், அவன் வீட்டிலும் தாத்தா ஏதாவது சொல்லியிருப்பார். அதனால்தான் என்று எண்ண மிட்டவாறே குறிப்புப் புத்தகத்தைப் பார்வையிடத் தொடங்கிய வாணி சட்டென நிமிர்ந்தாள்.

அதனால்தான் என்ன? என்ன பெரிதாக நடந்து விட்டது? 

வாணி… அதிலும் மிஸ் மதுரவாணி சென்னை வாசியே என்று வித்யாசாகரன் சொன்னான் அவ்வளவுதானே? 

என்னவோ அவளுக்காக அவன் மலையைப் புரட்டி விட்ட மாதிரி. அவள் ஏன் அதையே பெரிதாக நினைக்க வேண்டும்? 

ஒரு சாதாரண உண்மை! அதை, அவன் சொன்னான். அவ்வளவுதான்! 

இதற்குப் போய்… இப்படி இருக்குமோ… தாத்தா அப்படிக் கூறியிருப்பாரோ… அவன் எப்படி ஏற்றான்… என்று அதையே யோசித்து ச்சே… எவ்வளவு நேரத்தை விரயம் செய்திருக்கிறாள். 

மட்டித்தனம்! 

தன்னைத்தானே குட்டிக் கொள்ள கையை பாதி உயர்த்தி விட்டவள் சுந்தரி பார்த்துக் கொண்டு அருகில் நிற்பது நினைவு வர. முன் நெற்றியில் கிடந்த கூந்தல் சுருளை ஒதுக்குவது போன்று பாவனை செய்துவிட்டு, சுந்தரி எழுதி வைத்திருந்த குறிப்புகளை மறுபடியும் பார்வையிடத் தொடங்கினாள். 

“இந்தப் புத்தகம் எல்லாம் இரண்டு மூன்று பேர் கேட்டு இல்லை என்று சொல்லும்படி ஆகி விட்டதுக்கா… இரண்டு செட் வெளியே போயிருக்கிறது. ஆனால், இன்னும் இரண்டு செட் வாங்கி வைத்தாலும் தங்காமல் போகும். அத்தனை பேர் கேட்கிறார்கள் அக்கா” என்று சுந்தரி கூற, சென்னையில் வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் அவைகளையும் சேர்த்து எழுதி வைத்தாள் வாணி. 

“கல்கி, லட்சுமி.. சாண்டில்யன்… இவர்களுடைய படைப்புகளுக்கு என்றென்றும் ரசிகர்கள் பெருகிக் கொண்டேதான் இருப்பார்கள். அப்புறம், புத்தகங்களின் பெயர்க் குறிப்பு எழுதவும், பணக் கணக்கு எழுதவும் நீள நோட்டுப் புத்தகங்கள் இங்கேயே வாங்கி விடு சுந்தரி, அவைகளை அங்கிருந்து சுமந்து வர வேண்டாம்” என்று சுந்தரியிடம் பேசியவாறே, சென்னைக்கு எடுத்துப் போக வேண்டிய பட்டியலை எழுதி முடித்தாள் அவள். 

ஓரக் கண்ணால் பார்வை வட்டத்தில் வித்யாசாகரன் தாத்தாவிடம் விடை பெற எழுவது தெரிந்தது. மெல்ல எழுந்து, நழுவிப் போய் புத்தக அடுக்குகளுக்கு இடையில் சென்று, சட்டெனக் கண்ணில் படாத விதமாக நின்று கொண்டாள். 

மணிவாசகம் இருமுறை கூப்பிட்டது கேட்டும் அவள் கண்டு கொள்வதாக இல்லை. 

“இருக்கட்டும் சார். ஏதாவது வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் சொல்லவில்லையா. கருமமே கண்ணாயினர். பாடலில் வருகிற மாதிரி. வாணி முழுக் கவனத்துடன்தான் எதையும் செய்வாள் என்று. இடையூறின்றிச் செய்யட்டும். அடுத்த தடவை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் இப்போது வருகிறேன் சார்” என்று கிளம்பிச் சென்றான் வித்யாசாகரன். 

வித்யாசாகரனின் பேச்சு ஒரு வழியைக் காண்பித்து விட, மணிவாசகம் சற்று கண்டிப்பான பார்வையுடன் பேத்தியை நாடி வந்தபோது, அவள் தனித்தனியாக தாள்களாகப் பறந்து கொண்டிருந்த ஒரு புத்தகத்தைப் பைண்டிங் செய்யக் கொடுப்பதற்காகக் கவனத்துடன் பக்கம் பார்த்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். 

“என்னம்மா வித்யாசாகரனை வழியனுப்புவதற்காக தேடினால் ஆளையே காணோமே! ஒரு மனிதர் வீடுவரை கொணர்ந்து ஒரு நன்றி சொல்ல வேண்டாமா? குறைந்த பட்சம் வழியனுப்பவாவது வந்திருக்கலாமே” என்று. சன்னக் குரலில் லேசாகக் கண்டித்தார். 

அவர் பேத்தியைக் கண்டிப்பது சுந்தரி. முத்தையாவுக்குத் தெரிந்து விடக் கூடாதாம். 

ஆனால், யாருக்காகக் கண்டிக்கிறார்? 

அன்று அவன் கத்தியது மட்டும் தெரிந்திருந்தால்..

இப்படியெல்லாம் இந்த வாசகசாலையைப் பேசுவதா என வருத்தப்படுவாரே என்று மறைத்ததுதான் தப்பாகி போய் விட்டது. 

இப்போதும் அதே காரணத்தினாலேயே, அவரிடம் விவரத்தைச் சொல்ல, அவளுக்கு மனம் வரவில்லை. எனவே “இதை இடையில் விட்டால் காகிதங்கள் பறந்து, இவ்வளவு நேரம் செய்த வேலை வீணாகிப் போகாதா தாத்தா? அதற்கென்ன இன்னொரு தரம் பார்க்கும்போது, விளக்கம் சொல்லிவிட்டால் போகிறது?” என்று அவருக்கு ஆறுதல் கூறினாள் அவள். 

“அதுவும் சரிதான். வேலை செய்யும்போது தொந்திரவு செய்ய வேண்டாம். அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் அந்தத் தம்பியும் சொல்லிவிட்டுப் போனார். பொறுமையான நல்ல குணம்” என்று தாத்தா அவனை உயர்வாகப் பேசவும், தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு. 

பொறுமையாம்! யாருக்கு? 

ஒரு வார்த்தை விளக்கம் சொல்ல இடம் கொடாமல், தானாக ஏதேதோ முடிவு செய்து, கண்டபடி கத்தித் தீர்த்து விட்டுப் போனவனெல்லாம் பொறுமைசாலி என்றால், உண்மையாகவே பொறுமையைக் கடைப்பிடிக்கிறவனை, என்னவென்று அழைப்பது? 

எப்படியோ போகட்டும், இன்னொரு தரம் பார்க்கும் போதுதானே விளக்கம் சொல்வது? அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்து, அவனைப் பார்க்காமலே இருந்து விட்டால்? 

பேசாமல் வேலையில் கவனத்தைச் செலுத்தினாள் அவள். 

மறுபடியும் வித்யாசாகரனைச் சந்திக்க வேண்டியிராது என்றுதான் வாணி உள்ளூர நிச்சயமாய் நினைத்திருந்தாள் 

நிலாவின் மூன்றாவது கதைக்காக, ஏதோ ஒரு வகையில் அழைப்பு வரும் என்பது, அவள் எதிர்பார்த்ததே… ஆனால் அவளை இங்கே வரச் சொல்ல வேண்டும், அல்லது கதையை மட்டும் யார் மூலமேனும் அனுப்பச் சொல்லி சரி பார்த்துக கொடுக்க வேண்டும், என்ன ஆனாலும், அந்த வீட்டுக்குப் போகவே கூடாது என்று, அது பற்றி அவள் ஒரு முடிவே செய்து வைத்திருந்தாள். 

ஆனால், நிலாவின் கதைக்குச் சம்பந்தம் ஏதும் இல்லாமலே, மறுநாளே, அவள் அவனது வீட்டுக்குச் செல்லும்படி நேரும் என்று வாணி சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. என்றாலும், அதுதான் நடந்தது. 

அதுவும் மறுப்பே இல்லாமல். 

முன் தினம் சந்தித்த நிலாவையும், அவளுடைய உறவினர்களையும் மறந்து, அன்றாட வேலையில் முயன்று மனதைச் செலுத்திச் செய்து கொண்டிருந்தாள் வாணி. 

‘டின்டின்’ படக் கதைப் புத்தகம் ஒன்றில், கடைசிப் பக்கத்தை அழகாக யாரோ வெட்டி எடுத்திருந்தார்கள். அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சி… அவர்களது சொந்தப் புத்தகத்தில் இந்தப் பக்கம் கிழிந்து எப்படியோ வீணாகிப் போயிருக்கும். சத்தமின்றி வாசகசாலைப் புத்தகத்தில் இருந்து அந்தப் பக்கத்தை வெட்டியெடுத்து, அவர்கள் புத்தகத்தில் ஒட்டிவிட்டு ஒன்றும் நடவாதது போல, இங்கே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள். 

அதற்காகவே சற்றே அதிக வேலை என்றாலும், புத்தகங்கள் ஒவ்வொன்றையும் யார் யார் எடுத்துப் போகிறார்கள் என்ற விவரங்களையும் குறித்து வைத்து, இது போலப் பக்கங்கள் காணாமல் போயிருந்தால், அதற்குரிய பணமும் தனியாக வசூலிக்கத் தொடங்கியிருந்தாள் வாணி. 

அதன் பிறகு, இந்தக் குற்றம் வெகுவாகக் குறைந்திருந்தது. 

ஆனாலும், அதற்காகப் புத்தகங்களைச் சரி பார்த்து வைக்கும் பழக்கத்தை வாணி விட்டு விடவில்லை. வெகு நாளைக்கு பிறகு இந்த ‘டின்டின்’ புத்தகம் இப்படியாகி இருந்தது. 

அந்த புத்தகத்தை முன்பு யார் எடுத்துப் போனார்கள் என்பதைக் கண்டு பிடித்து பெயர், முகவரியைக் குறித்து வைத்து விட்டு அவள் நிமிர்ந்தால், எதிரே தேவகி புன்னகையோடு நின்று கொண்டிருந்தார். 

ஒரு சில கணங்கள், வாணிக்கு ஒன்றுமே ஓடவில்லை. ஒருவாறு சமாளித்து “வா… வாருங்கள்” என்று வரவேற்று…ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரச் சொல்லி உபசரித்துவிட்டு, சுந்தரியை அழைத்தாள். 

“என்னக்கா?” என்று வந்தவளிடம் “தாத்தாவிடம் போய் நிலாவுடைய பாட்டி வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு வா” என்று சுந்தரியை அனுப்பினாள். 

அவள் சென்றதும் “இதோ தாத்தா வந்து விடுவார். எ… என்ன விஷயம்? நிலா அடுத்த கதையை, அதற்குள் எழுதி விட்டாளா?” என்று வினவினாள். 

இன்னமும் அவளுக்கு படபடப்பு முழுதாக மறைய வில்லை! 

சரியாகச் சொல்வதானால், இந்தப் படபடப்புக்கு அவசியம் இல்லை. 

முன்பே நிலாவோடு, இந்த வாசகசாலைக்கு தேவதி அம்மாவும் வந்திருக்கிறார்கள்தானே? 

ஆனாலும், முன் தினம் அவர்கள் வீடு வரை சென்று வந்த பிறகு அந்தப் பெண்மணியின் எதிர்பாராத வரவு, வாணியைச் சற்று வெலவெலக்க வைத்து விட்டது எனலாம். 

மீண்டும் புன்னகை செய்து “எனக்கு ஓர் உதவி தேவைப் படுகிறது வாணிம்மா, அதற்காகத்தான் வந்தேன்” என்றார் நிலாவுடைய பாட்டி. 

தேவகி அம்மாளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த மணிவாசகம் “அதற்காக வீட்டை, வீட்டில் பச்சைக் குழந்தையை விட்டு விட்டு நீங்கள் வர வேண்டுமா? போனில் சொல்லியிருக்கலாமே?” என்றவாறே இன் னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். 

“அப்படி தேவை என்றால், வாணியை வரச் சொல்லி யிருப்பேன்” என்று தாத்தா தொடர்ந்து கூறியது அவ ருடைய பேத்திக்கு பிடித்தமாக இல்லை என்றாலும், அவரை மறுத்துப் பேச மனமின்றி பேசாமலே இருந்தாள். 

ஆனால் அவளது மௌனம் வெளியே தெரியு முன்பாகத் தேவகியே பேசத் தொடங்கி, “நீங்கள் பெருந் தன்மையாகச் சொல்லுகிறீர்கள் மணிவாசகம் சார். ஆனால் எனக்கு வேலை ஆக வேண்டும் என்றால் நானே வருவது தானே நியாயம்?” என்று சொல்லவும் அந்தப் பெண்மணியின் மீது வாணிக்கு மதிப்பு ஏறியது. 

அவன் அண்ணன் மகளுக்கு உதவச் சென்றவளிடமே கடுகடுத்த மகனைப் போல இல்லை என்று தோன்ற “என்ன வேலை ஆன்ட்டி?” என்று இயல்பாகக் கேட்டாள்.

“பாப்பாவுக்கு உடை, வாணி! தொட்டில் போடுகின்ற அன்று அணிவதற்கான உடை ஒன்று தைக்க கொடுக்க வேண்டும். உன்னிடம் விளக்கிச் சொன்னால் உன் அம்மாவிடம் நீ சொல்லி, அதன்படி தைக்கக் கொடுத்து விடலாம் என்றுதான்… நீ கூட நாளையோ, நாளனன்றோ சென்னைக்குச் செல்லப் போவதாக அன்று மணிவாசகம் சார் சொன்னார். அதனால்தான் அவசரமாக ஓடி வந்தேன். ஆனால், இது எந்த அளவு பயன்படும் என்றுதான் புரியவில்லை?” என்று கையிலிருந்த ஒரு போட்டோ ஆல்பத்தை காட்டினார் தேவகி. 

பெரிய காரியம் இல்லை. 

ஆனால், “திங்களன்று…” என்று சொன்னபடி, ஆல்பத்தை திறந்து பார்த்தால் அதில் தேவகி அம்மாளின் தேவைக்கு உதவியாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

சின்ன வயது தேவகி ஆன்ட்டி, நல்ல அழகி என்று தெரிந்தது. 

அவர் கையில் இருந்த குழந்தை பயங்கரமாக அழுதது போலும், அதைச் சமாளித்து ஒவ்வோர் உறவினருடனும் படம் எடுப்பதில், குழந்தையின் உடை விளக்கொளியில் பளபளத்தது. தவிர, இன்ன மாதிரி என்று சொல்லுகிற விதமாக ஒன்றும் தெரியவில்லை. 

ஆல்பத்தை மூடிய வாணியின் முகத்திலிருந்தே ஊகித்து “எனக்கும் இது பயன்படாதோ என்று சந்தேகமாகத்தான் இருந்தது” என்றார் தேவகி. “தெளிவாக சிலது இருந்தது. அவைகளையும் அப்புறம் சுபா வளர வளர எடுத்தவைகள் எல்லாவற்றையும் தனி ஆல்பமாக ஒட்டி வைத்திருந் தேன். அதைத் திருமணமானதும் மாப்பிள்ளை கேட்கிறார் என்று எடுத்துப் போனாள். அவள் வீட்டிலேயே இருக்கிறது. இப்போது கிடைக்காது.” 

“ஆனால் நிலாவை தொட்டில் போட்ட படங்கள் இருக்குமல்லவா?” என்று கேட்ட வாணிக்கு இந்தக் கேள்வியை ஏன் கேட்டோம் என்று தோன்றும் அளவுக்கு முதியவளின் முகம் வாடிப் போயிற்று. 

“நிலா பிறக்கும்போதே பெரிய பிரச்சினை. அப்படியும் ஏதோ செய்தோம். ஆனால், இரண்டு வருஷங்களுக்கு முந்தையது வரை அவளது படங்கள் எதுவும் எங்களிடம் இப்போது இல்லை” என்று வருத்தத்துடன் உரைத்தவர் ஒரு கணம் பேசாதிருந்துவிட்டு “ஆனால் சுபாவின் படம், நான் தூக்கி வைத்திருப்பது போலப் பெரியதாக ஒன்று – எங்… மாடி அறையில் மாட்டியிருக்கிறது. வாணியம்மா… நீ… உன்னால்… என்னோடு வர முடிந்தால், அதைப் பார்த்துவிட்டு, உடனேயே திரும்பவும் இங்கே கூட்டி வந்து விட்டு விடுகிறேன்.” 

வாணியின் மனம் பல வகையிலும் உருகிப் போயிருந்தது. 

நிலாவுடைய சிற்றன்னை சரியாக இல்லை என்று சுபா சொன்னாள்தான். ஆனால், அது எந்த அளவு என்பது அவளது இரண்டாண்டுகளுக்கு முன்பு வரையிலான படங்கள் எதுவும் இல்லாது போனதிலிருந்து தெளிவாகப் புரிந்தது. அது ஓர் உருக்கம்! 

அதைச் சொல்லி, அந்த மருமகளை, இந்த மாமியார் எவ்வளவோ திட்டியிருக்கலாம். ஆனாலும், மகனுடைய மனைவி என்பதால், அதை அந்தப் பெரியவள் மனதிற் குள்ளேயே விழுங்கிக் கொண்ட விதமும், அவளை பாதித்தது. 

எல்லாவற்றையும் விட, எங்கள் அறை என்று சொல்லத் தொடங்கி விட்டு, அதை அவர் மாடியறையாக மாற்றியது. 

தேவகி அம்மாளுடைய கணவர் சிவப்பிரகாசம் இறந்து இரண்டு மூன்று ஆண்டுகள் இருக்கும் என்று மணி வாசகம் அவளிடம் சொல்லியிருந்தார். 

ஆனால், இந்த இரண்டு மூன்று நீண்ட ஆண்டுகளுக் குப் பிறகும் ‘என் அறை’ என்று அதைச் சொல்ல இந்தப் பெண்மணிக்கு மனம் வரவில்லையே. கணவரிடம் எவ்வளவு அன்பு இருந்திருக்க… இன்னமும் இருக்க வேண்டும். 

தாத்தா பாட்டி போல அதே அன்பு! 

தேவகியிடம் மறுக்கும் எண்ணமே வாணிக்கு வர வில்லை. 

எனவே, அவளை உந்துவது போல, “இப்போது அதிகக் கூட்டம் வருகிற நேரம் இல்லாததால், நானே பார்த்துக் கொள்வேன்” என்று மணிவாசகம் குறிப்பாகச் சொன்னது, அவளுக்கு வேடிக்கையாகவே இருந்தது.

கூடவே, தன்னை நினைத்து வியப்பாகவும்!

தேவகி அம்மாள் கூப்பிட்டதும் அது வித்யாசாகரனின் வீடு என்பது கூட இல்லாமல் உடனே உடனே கிளம்பி விட்டாளே. 

என்ன செய்வது? 

அந்த வீட்டில் பெரியவர், தேவகி, கிட்டத்தட்ட உடனொத்த தலைமுறை சுபா, சின்னப் பெண் நிலா எல்லோரையும் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டிருந்தது. இவர்கள் எல்லோரும் எவ்வளவு பிரியமாக, இனிமையாக பேசுகிறார்கள். 

ஆனால், கடுகடுப்பும் கோபமுமாக வித்யாசாகரன் மட்டும் விதிவிலக்கு. 

அத்தியாயம்-8

தேவகி அம்மாள் அழைத்ததும் அவரோடு காரில் ஏறிக் கிளம்பி விட்டபோதும், வீட்டை அடைவதற்கான சுமார் பதினைந்து இருபது நிமிடங்களுக்குள் வாணியின் மனம் ரொம்பவே அலை பாய்ந்து விட்டது. 

அந்த வீட்டில் வித்யாசாகரன் இருப்பானோ? இருந்தால் மறுபடியும் வந்தாயா என்பானா? ஆனால், அவனுக்கு அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும் தானே? இப்போது சென்றிருக்க மாட்டானா? 

முன்தினம் போல வீட்டில் இருந்து இன்றும் ஏதாவது சொன்னால்? 

தாயார்தான் கூட்டி வந்தாள் என்று சொன்னாலும், முந்தைய நாள் போலவே, அவன் நம்பப் போவது இல்லை. 

வழி நெடுகிலும் தேவகியும் தன் வேலை ஆயிற்று என்று மௌனமாகி விடவில்லை. 

இந்த ஊர் பிடித்திருக்கிறதா? பெற்றோரை அடிக்கடி சந்திப்பதுண்டா? அவர்கள் வருவார்களா? அவள் அடிக்கடி போவாளா? தாத்தா கூட வருவார் என்றால் அவருக்குப் பயணம் சிரமமாக இராதா? 

இப்படி ஏதேதோ கேட்டுப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தார். 

உரியவாறு பதில் சொன்னாலும் வாணியின் உள் மனம் தன் போக்கில் குழம்பிக் கொண்டேதான் இருந்தது. 

“தாத்தாவுக்குக் கஷ்டமாக இருக்கும்போலத் தோன்றினால் பக்கத்தில் ‘ட்ராவல்’சில் சொல்லி ஒரு காரை எடுத்துக் கொண்டு போய்விடுவோம். தாத்தாவுக்கு என்றால், அவர்கள் ரொம்பவும் ரேட் குறைத்துப் போடுவார்கள்” என்று தேவகியின் கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லும்போதே ஏன் வந்தோம் என்று அவளுக்கு ரொம்பவும் தோன்றத் தொடங்கியிருந்தது. 

நிலா பள்ளிக்குச் சென்றிருந்தாலும், சுபா சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு வரவேற்றாள். 

அவளது குழந்தை கூட, அன்றுதான் முகம் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்லிக்காட்ட, அதுவும் தான் புதிதாகப் படித்திருந்த வித்தையைக் காட்டுவதாக, வாணியைப் பார்த்ததும் பொக்கை வாயைக் கட்டி சிரித்து மயக்கியது. 

இந்தக் குட்டிக் குழந்தை உட்பட, இத்தனை பேர் அவளை மகிழ்ச்சியோடு வரவேற்கும்போது, ஒரே ஒருவனின் முகச் சுளிப்பை அவள் ஏன் பெரிதாகக் கருத வேண்டும்? 

குழந்தையின் முகவாயைத் தொட்டு விளையாட்டுக் காட்ட, அது மேலும் சிரிக்க சற்று நேரம் இனிமையாகக் கழிந்தது. 

குழந்தையைத் தூக்கிக் கொண்டு சுபாவும் கூடவே வந்து மாடியறைப் படத்தைக் காட்டினாள். 

கணவர் சிவப்பிரகாசம் அருகில் நிற்க தலை சுமக்காத குழந்தை சுபாவைக் கை வளைவில் தூக்கியபடி, சிறு வயது தேவகி பெருமையோடு நின்றிருந்தார். 

போட்டோவைப் பெரிதுபடுத்தி, தனிச் சித்திரம் போலத் தீட்டப்பட்டிருந்தது. 

அதிலும் சுபாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவளது முகம், உடை எல்லாம் தெளிவாகத் தெரியுமாறு படம் எடுத்திருந்தார்கள். 

“என்னை மட்டும் எடுத்த படங்களும் உண்டு வாணி, ஆனால்…” 

“அவையெல்லாம் உங்கள் புகுந்த வீட்டில் இருக்கின்றனவாம். ஆன்ட்டி சொன்னார்கள்” என்று வாக்கியத்தை முடித்துச் சிரித்தாள் வாணி. 

அசடு வழிய “ஆமாம் அவருக்கு அந்தப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதில் ஆசை! அதனால் அங்கேயே வைத்துக் கொண்டார்” என்றாள் சுபா. தொடர்ந்து “அவர் வீட்டில் அது போதெல்லாம் எடுப்பது இல்லையாம். உங்கள் வீட்டில் போல நம் பிள்ளைகளையும் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் படம் எடுத்து வைக்க வேண்டும் என்பார்” என்றாள் பெருமையோடு. 

நமக்கு இல்லாதது, மனைவிக்கு இருப்பதா என்று வறட்டு கௌரவம் பாராமல், மனைவி வீட்டுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறிய சுபா கணவனிடமும் வாணிக்கு மதிப்பு ஏற்பட்டது. 

மற்றவளின் பேச்சைத் தொடர்ந்து “அப்படியானால், உங்கள் வீட்டில் எல்லோருக்கும் தனித்தனியே அது போல ஆல்பம் உண்டு போல?” என்று வினவினாள் வாணி. 

“ம்… ஆமாம். அம்மா அருமையாகச் செய்து வைத்திருக்கிறார்கள். பிறந்தது முதல் ஓர் ஆண்டுக்கு ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாகக் குழந்தை கற்றுச் செய்வது, வளர்ச்சி எல்லாம் பின் பக்கம் சின்னக் குறிப்போடு படமாக எடுத்து, வரிசையாக ஆல்பத்தில் வைத்திருப்பார்கள். அதன் பிறகு, அவ்வப்போது நடப்பது… முதல் நாள் பள்ளிக்குப் போவது, பள்ளிச் சீருடை, பரிசு வாங்குவது… இப்படி படத்துடன் கூடிய குறிப்புப் புத்தகம் போல, இவளுக்கும் அதே போலப் பண்ண வேண்டுமாம். அதனால், இந்தக் குட்டி செல்லம் இன்று சிரித்ததையும் படம் பிடித்து வைத்து விட்டேன்…” என்று ஓர் இளம் தாயின் பெருமையோடு சுபா கூற, கூடச் சேர்ந்து சிரித்த வாணியின் முகம் வேறு நினைவில் மாறியது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான நிலாவின் படங்கள் எதுவும் இல்லை, என்று தேவகி ஆன்ட்டி சொன்னாரே. அதுவும் வருத்தத்துடன். 

நிலாவின் இந்த ஆல்பம் கூட இல்லை என்றால் என்ன அர்த்தம்? ஆன்ட்டி செய்யாமல் விட்டிருக்க மாட்டார். 

செய்து வைத்தது, வேண்டும் என்று அழிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே பொருள்? 

மூத்தாள் குழந்தையைப் பிடிக்காமல் போகலாம். தன் கணவன் இன்னொருத்தியின் சொந்தமாக இருந்தான் என்பதன் அடையாளம் என்று. அந்த வெறுப்பு இயற்கையாகக் கூட இருக்கலாம். ஆனால் சின்னக் குழந்தையிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை கூட இல்லாமல் ஆக்குவது என்றால் அது வக்கிரமாகத் தோன்றியது வாணிக்கு. அப்பாவிடம் பேசினாலே சித்தி திட்டுவாள் என்று நிலா அச்சத்துடன் கூறியது இப்போது இன்னும் அதிகமாக அவளைப் பாதித்தது. 

இந்தச் சிற்றன்னை, அவளுக்குத் தலையாட்டும் தந்தை, இவர்களிடம் நிலாவின் எதிர்காலம் என்ன ஆகும்?

ஆனால், இந்த இரண்டு ஆண்டுகள்! 

அதற்கு முன் உள்ளதுதான் இருட்டிட்டு செய்யப் பட்டிருக்கிறது. 

என்ன மாதிரி அருமையான குழந்தை இந்த நிலா, அவளது கடந்த காலத்தை இருட்டடிப்பு செய்வதா? அத்தோடு, அதென்ன இரண்டு ஆண்டுகள்? 

நிலாவைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் போல, அடக்க மாட்டாமல் ஒரு வேகம் வாணிக்கு உண்டாயிற்று. 

அதற்குள் வாணியின் முக மாறுதலையும் தன் பேச்சில் அவளது கவனம் இல்லை என்பதையும் கண்டு விட்ட சுபா, “என்ன வாணி?” என்று கேட்க தன்னை மீறி “நிலா” என்றாள் அவள். 

ஒரு கணம், சுபாவின் முகத்தில் ஒன்றும் புரியாத பாவமதான். 

அவளுடைய அருமைக் குழந்தையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அதனுள் நிலா எங்கே வரக் கூடும்? 

ஆனால், அவள் யோசித்தது ஒரு வினாடிதான்! 

உடனே புரிந்து “நிலாவின் ஆல்பமா?” என்று கேட்டாள். 

கேட்கும்போதே, வாணியின் முகத்தில் இருந்த வலியையும், கவலையையும் குறித்துக் கொண்டவளின் கண்களில் யோசனை தெரிந்தது. 

“படத்தில் என் உடையைப் பார்த்துக் கொண்டாயல்ல… வாணி, எப்படியும் என்னைவிடச் சில ஆண்டுகள் நீ இளமையாகத்தான் இருப்பாய், அத்தோடு உன்னைப் பார்க்கும்போது, நன்கு பழகிய சினேகிதியைப் போலவே தோன்றுகிறது. அன்றைக்குப் பத்திருப்பது ரூபாயில் பங்களா கார் பற்றிப் பேசியதில் இருந்தது, அடிக்கடி அப்படியே நினைக்கிறேன். இந்த ‘ங்களை’ விட்டுவிட்டு நாம இருவரும் ஒருமையில் பேசிக் கொள்ளலாமா? ப்ளீஸ்யா?” என்று குரலில் ஓர் உரிமைக் கெஞ்சலுடன் சுபா கேட்க, வாணியும் தடையற்று ஒப்புதலாகத் தலையாட்டினாள். 

அவளும்தான், அன்றையப் பேச்சை எத்தனையோ முறை நினைத்து மகிழ்ந்திருக்கிறாள்! 

அத்தோடு இந்த வீட்டில் ஒரே ஓர் ஆளைத் தவிர எல்லோரிடமும் அவளுக்கும் பிரியம்தானே? அதனால், சுபா கேட்டதில் ஆட்சேபிக்க எதுவும் இருப்பதாக, அவளுக்குத் தோன்றாததால், தயக்கமே இல்லாமல் உடனே தலையாட்டி விட்டாள். 

கூடவே படத்தை இன்னொரு தரம் பார்த்த பின், அந்த உடை பற்றிய கேள்விக்கும் அதே தலையாட்டலில் தான் பதில். 

“அப்படியானால், கீழே என் அறைக்குப் போய் பேசுவோம் வாணி, இவளையும் கையிலேயே வைத்திருந்தால் சூடு என்று அம்மா சொல்லுவார்கள். வா” என்று வாணியை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள் சுபா. 

மாடியிலிருந்து இறங்கி வந்தவர்களைப் பார்த்ததும் “சுபா பாப்பாவைக் கையிலேயே வைத்திராமல் கீழே கிடத்து. ஒரே சூடாகி விடும்” என்று தேவகி கூறவும். சுபா வாணியைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தாள். 

“நான் சொன்னேனில்லையா?” என்று அவளிடம் கூறிவிட்டு. “நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று இப்போதுதான் வாணியிடம் சொன்னேன்மா. குட்டிச் செல்லத்தைக் கீழே படுக்க வைப்பதற்காகத்தான் முக்கியமாகக் கீழே வந்தோம்” என்றாள் தாயிடம். 

“ஆனால் உடை? அதைப் பார்த்தீர்களா. இல்லையா?”

“பார்க்காமல் வாணி கீழே வர. நான் விடுவேனாம்மா? என் அறையில் உட்கார்ந்து செல்லக் குட்டி உடை பற்றி இன்னும் கொஞ்சம் நாங்கள் பேசப் போகிறோம். குடிப்பதற்கு ஏதாவது அனுப்புகிறீர்களா, அம்மா?” என்று மகள் கொஞ்சலாகக் கேட்க “இதோடா” என்று உள்ளே சென்றார் தாயார். 

“எனக்கு எதுவும் தேவையில்லை சுபா” என்றாள் நிலாவைப் பற்றிய நினைவிலேயே உழன்று கொண்டிருந்த வாணி. 

“இனிப்பு போடாத பழச்சாறு போலத்தான் அம்மா ஏதாவது அனுப்புவார்கள். சும்மா சாப்பிடுங்… ஊகூம், சும்மாக் குடிக்கலாம் வாணி… அந்தக் கட்டிலிலேயே உட்காருகிறாயா? நான் முதலில்… இவளைப் படுக்க வைத்து விடுகிறேன். என்னடாச் செல்லம் கெட்டிக்காரியாகச் சும்மாப் படுத்திருக்க வேண்டும். உன் செல்ல அக்காவைப் பற்றிப் பேசப் போகிறோம். அதனால், நோ தொல்லை, நோ சத்தம், என்னடாம்மா?” என்று மகளைக் கொஞ்சிப் படுக்க வைத்துவிட்டு வாணியின் அருகே சென்று அமர்ந்தாள். 

“வாணி… நிலாவின் போட்டோ ஆல்பம்… ஏன் போட்டோக்களே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த எதுவும் இங்கே இல்லை.” 

“முதல் பேரக் குழந்தை என்று சகட்டு மேனிக்கு எடுத்துத் தள்ளியிருந்தோம். ஆனால், நெகடிவ் உள்பட எதுவுமே இப்போது இல்லை. இங்கே இருப்பது.. இந்த இரண்டு வருஷங்களாக எடுத்தவைதான்… மற்றதை யெல்லாம் இரண்டாவதாக வந்த அண்ணி, சத்தமே இல்லாமல் அழித்து ஒழித்து விட்டாள். 

“என்ன அழகான குழந்தை நிலா… அந்த அழகின் பதிவுகளை, அடையாளமே இல்லாமல் அழிப்பது என்றால்… நிலாவின் மேல் அந்த ராட்ச… அவளுக்கு இருக்கும் வெறுப்பின் அளவு எங்களுக்குப் புரிந்ததே அதன் பிறகுதான்!” 

“ஒத்துக் கொண்டார்களா போட்டோக்களை அழித்ததை?” 

“அந்தப் பே… அ… அண்ணியா? உலகம் மாறிச் சுழன்று விடாதா? ஒன்றுமே தெரியாது என்று அண்டாக் கண்ணீர் விட்டாள். விபரீதம் என்னவென்றால், பெரியண்ணனும் அதை நம்பி விட்டதுதான். நம்பியதால் தன்னையும் மனைவியையும் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி… அப்பாவுக்கு முதல் ‘ஸ்ட்ரோக்’ வந்தது. அப்போதுதான். 

“அருமைப் பேத்தி நிலா கஷ்டப்படுவதும், மூத்த மகன் அன்னியனாகிப் போனதும், அப்பாவை ரொம்பவும் பாதித்து விட்டது. தொழிலிலும் பாதியைப் பிரித்துக் கொடுத்ததால் மீதி சின்னதாகி முடங்கிப் போய் விடாதா என்று அது வேறு. ஆனால் வித்தியாண்ணன்…” என்று சுபா தொடர்ந்தபோதுதான் ஒருவாறு வாணிக்கு சுய உணர்வு வந்தது எனலாம். 

அடுத்தவர் விஷயத்தில் வேண்டுமென்றே மூக்கை நுழைப்பது ஊர் வம்பு பேசுவது எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகச் செய்து கொண்டிருக்கிறாளே. 

இது மட்டும் அந்த வித்யாசாகரனுக்குத் தெரிந்தால், அவளைப் பற்றி என்ன நினைப்பான்? 

அவன் நினைப்பது இருக்கட்டும். நிலாவைப் பற்றி கேட்டு இந்தக் குடும்ப விஷயத்தில் ஆர்வம் காட்டியதை எண்ணி, அவளுக்கு குன்றலாகத்தான் இருந்தது. 

அடுத்தவரைப் பற்றிப் பேசக் கூடாது என்று அவ்வளவு உறுதியாக இருப்பவள். 

சட்டென சுபாவின் வாய் மேல் விரலை வைத்து “வேண்டாம் சுபா. இந்தப் பேச்சை நான் எடுத்ததே தப்பு. நிலாவைப் பற்றி அறியும் ஓர் ஆசையில் கேட்டு விட்டேன். அவளை மிகவும் பிடித்துப் போனதால். என்னை மீறி எல்லை மீறி, உங்கள் குடும்ப விஷயத்தில் ஆர்வம் காட்டி… சாரி நான் இப்படி கேட்டது உன் அண்…. அம்மாவுக்குத் தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். ஊர் வம்புக்கு அலைவதாக… அதற்காகவே இங்கே வந்ததாக… சேச்சே..” என்று திணறி தவித்தாள் அவள். 

வாயைப் பொத்தியிருந்த வாணியின் கையை அகற்றி “இதெல்லாம் என்ன பேச்சு வாணி? நிலாவைப் பற்றி அக்கறை இருந்து கேட்கிறாய் என்று சந்தோஷப் பட்டால் என்னென்னவோ பேசுகிறாய். ஒரு மாதிரி. நத்தையாகச் சுருட்டிக் கொண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தாள் குழந்தை. உன்னிடம் பழகத் தொடங்கிய பிறகுதான், அவளிடம் பழைய ஆர்வம், சிரிப்பு எல்லாம் மீண்டும் தெரியத் தொடங்கி இருக்கின்றன என்று நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவளைப் பற்றி, உனக்கு இன்னும் தெளிவாகப் புரிய வேண்டும் என்பதற்காக, நானேதானே நிலா பற்றி விவரங்களைச் சொன்னேன்? இதில் ஊர் வம்பு எங்கிருந்து வந்தது?” என்று கேட்டாள் சுபா. 

ஏதோ சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பதாக சுபா சொன்னாள். அந்த ‘நாங்க’ளில் யார் யார் அடக்கம் என்று வாணியின் மனம் யோசித்தது. 

நிச்சயமாக வித்யாசாகரன் அதில் இருக்க மாட்டான் என்கிற உறுதியோடு “எப்படியும் உங்கள் குடும்ப விஷயத்தை நான் கேட்டது தப்புதானே?” என்றாள் வாணி. தலை சரித்து வாணியைக் கூர்ந்து பார்த்து விட்டு “நான் உன் சினேகிதிதானே. வாணி?” என்று சுபா வினவினாள்.

“நிச்சயமாக ஆனால்…” 

“நிலாவிடம் உனக்கு அக்கறை உண்டுதானே?”

“உண்டுதான்.. ஆனால்…” 

“இதெல்லாம் நிஜமானால், உங்கள் குடும்பம். எங்கள் குடும்பம் என்று பிரித்து பேசுவதே தப்பில்லையா? அத்தோடு, உனக்கு பிரியமானவர்களைப் பற்றி அறிவது எப்படி ஊர் வம்பு ஆகும். இங்குள்ள பின்னணி தெரிந்தால்தானே, யாருக்கு எது நல்லது என்று தெரிந்து, அதற்குத் தக்கபடி நீ நடக்கவும் முடியும்? நிலாவுக்கு உன் உதவி ஏன் தேவை என்றால், இயல்பான உதவி அவளுக்கு மறுக்கப்பட்டு விட்டது தெரிந்தால் தானே, அதன் தீவிரம் உனக்கு புரியும்? என் பட்டுக் குட்டிக்கு, நீ சட்டை வாங்கித் தர வேண்டும் என்றால், நானோ, அம்மாவோ அதைச் செய்ய முடியாமல் எப்படித் திண்டாடுகிறோம் என்று உனக்குப் புரிந்தால் தானே செய்யத் தோன்றும்? சும்மா எங்களுக்காக, நீ சிரமப்படு என்றால் சரி வருமா? என்னிடமெல்லாம் யாராவது அப்படிக் கேட்டால், முடியாது என்று முகத்துக்கு நேரேயே மறுத்து விடுவேனாக்கும். நம்பி உண்மையைச் சொல்ல முடியாதவர்கள் நம்மவர்களே அல்ல… அவர்களுக்கு நான் ஏன் செய்ய வேண்டும்?” என்று படபடவென்று பேசினாள் சுபா. 

“அப்பாடியோவ்” என்று அஞ்சுவது போலப் பாவனை செய்தாள் வாணி. “உன்னிடம் உதவி கேட்கு முன் என் சரித்திரத்தை முழுதாக ஒப்பித்து விட வேண்டும்! அவ்வளவு தானே? நிச்சயமாக செய்கிறேன்” என்றாள் வேடிக்கை போல. 

பார்வையின் கூர்மை குறையாமலே “அவ்வளவு தானா?” என்று கேட்டாள் மற்றவள். 

கொஞ்சம் லொடலொடக்கிறவள் போலத் தோன்றினாலும் சுபா ஒன்றும் வெகுளி அல்ல என்று தெளிவாகத் தெரிந்தது. 

நிலாவைப் பற்றியும், அந்தக் குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள, வாணிக்கும் மிகுந்த ஆவல்தான்… ஆனால் அந்த ஆவல் காரணமாக அடுத்தவரின் சொந்த விஷயத்தில் தலையிட்டு விடக்கூடாது என்று எண்ணியே அவள் தயங்கியது. 

ஆனால், இப்போது சுபாவின் பேச்சு, அந்தத் தயக்கத்தை பெருமளவு விலக்கி, விரட்டி விட “நிலா… நிலாவுடைய அப்பா எப்போது மறுமணம் செய்து கொண்டார்?” என்று கேட்டாள் அவள். 

முகம் பளிச்சென்று மலர சுபா தொடர்ந்தாள். 

“பெரியண்ணி இறந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, ஆனால் அதற்குக் கொஞ்சம் முன்பாகவே இந்த அம்மாள் அண்ணனை வலையில் பிடித்து விட்டாள் என்பது என் ஊகம், மதுமிதாண்ணியின் நினைவு நாளன்று. அவர்களுக்கு கும்பிட்டு முடித்ததுமே இப்படி என்று நித்தியண்ணன் சொல்லிவிட்டார். 

“ஆனால் யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணன் தனிமரமாகியிருந்த வருத்தம் தீர்ந்தது, என்று எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். 

“நிலாக் கண்ணுக்கு இந்த மாதிரி உடை, அந்த மாதிரி நகை, என்று நிலா குட்டி மேல் பாசம் போல அந்த சுலேகா நடித்ததை முதலில் எல்லோரும் நம்பி விட்டோம். நாங்களே நம்பிய பிறகு அண்ணனைப் பற்றிக் கேட்பானேன்? 

“ஆனால், அப்படி அவள் தேர்ந்தெடுத்த எதுவும் நிலாவுக்குப் பொருத்தமாகவோ, அழகாகவோ இல்லை என்று எனக்கும் அம்மாவுக்கும் அப்போதே லேசாகத் தோன்றியது. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. 

“நிலாவை அசிங்கமாகக் காட்ட முடியாது என்பதோடு, சுலேகாவின் ரசனை அப்படி. கொஞ்ச நாளில் இங்கே பழகப் பழகப் புரிந்து கொள்வாள் என்று நினைத்தோம். 

“எங்களைப் பொறுத்த வரையில் ஒரே வருஷத்தில் சாயம் முழுதாக வெளுத்து விட்டது. ஆனால் பெரியண்ணனுக்கு நடந்த சலவையில் அவருக்கு வேறு மாதிரி மூளை வெளுத்துப் போயிற்று. நாங்கள் எல்லோரும் வேண்டாதவர்கள் ஆகி விட்டோம். நாங்கள் சொல்லிக் கொடுத்து நிலாவைக் கெடுத்து விட்டோமாம். என்னென்னவோ வார்த்தைகள். வீட்டில் நாங்களெல்லாம் அது போலப் பேசியதே கிடையாது. 

“கடைசியாக விஷயம் வெளியே வந்தது. சொத்தைப் பிரித்துக் கொடுத்து, அவருடைய குடும்பத்தை நிம்மதியாக வாழ விடச் சொன்னார். 

“அப்பா. அம்மா வருத்தப்பட்டபோது, பன்றியுடன் சேர்ந்த கன்று என்று வித்தியண்ணன் சொன்னார். நிலாவைப் பற்றிதான் எல்லோருக்கும் அதிக கவலை. இந்த ஓர் ஆண்டுக்குள் அவளது வளர்ச்சி குன்றி, . சிரிப்பே மறைந்து போயிருந்தது. இன்னும் அவர்களுடனேயே  இருந்தால், எங்கள் செல்லம் என்ன ஆவாள்?

“ஆனால், சொத்துப் பேச்சு வந்ததும், சின்ன அண்ணன் அதிலே ஒரு வழி கண்டு பிடித்தார்…” என்று வீட்டுப் பொருளாதார விஷயத்தையும் சுபா வெளிப்படையாகப் பேசத் தொடங்கியது. வாணிக்கு ரொம்பவே அதிகப்படியாகத் தோன்றியது. 

எனவே குறுக்கிட்டு “சுபா இது உன் அண்ணன்மாரின் பணம், பொருள், வீட்டுப் பண விவகாரம் சம்பந்தப்பட்டது. இதை நான் அறிவது அவர்களுக்குச் சம்மதமாக இருக்குமா யோசி. இருக்காது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால் இந்த விவரம் வேண்டாமே” என்றாள் உள்ளூரக் கலக்கத்துடன். 

சும்மாவே அவளைப் பற்றி தவறாக எண்ணுகிறவன் வித்யாசாகரன். இந்த விவரம் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் என்று தெரிந்தால், என்னவோ அவனுடைய அறியாத் தங்கையை ஏமாற்றி எல்லா விவரங்களையும் வாணி பிடுங்கி விட்டதாக அல்லவா எண்ணுவான்? 

“அண்ணன்மாருக்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்பது இரண்டாம் பட்சம், வாணி! இன்றைக்கு இங்கே வேவு பார்க்கவும் உள்ளே இடம் பிடிக்கவும் அலைகிற ஜென்மங்கள் பற்றியும் நீ புரிந்து கொள்ள வேண்டும்! அது புரிவதற்கு, இதுவும் அவசியம்!” என்றுரைத்து மறுபடியும் பிடிவாதமாகச் சொல்லத் தொடங்கினாள் சுபா. 

அவளை தடுக்க இயலவில்லை என்பது ஒருபுறம். இருந்தாலும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் வாணிக்கும் இருக்கத்தான் செய்தது. எனவே, இது அடுத்தவர் வீட்டு விஷயம் என்பதை மறந்து, சுபாவின் பேச்சைக் கவனத்துடன் கேட்கலானாள். 

சுபாவுடைய சின்ன அண்ணன், இதிலே என்ன வழியைக் கண்டுபிடித்திருப்பான்? 

பெருமைக் குரலிலே சுபா சொன்னாள். 

“எங்கள் எல்லோருக்குமே, மற்ற எதையும் விட, நிலாவைப் பற்றிய கவலைதான் அதிகமாக இருந்தது! பெரியண்ணனும், அந்தப் பேயும் சுற்றி வளைத்துப் பணத்துக்காகத்தான் வந்து நிற்கிறார்கள் என்று புரிந்து வித்யாண்ணன் ஓர் ஐடியா பண்ணினார். பணம் போனால் போகட்டும் என்று சொல்லி, தொழிலில் பெரியண்ணனின் பங்கின் மதிப்பைப் பணமாகவும், வீடு, நிலம் போன்ற மற்றவைகளைச் சொத்தாகவும் பிரித்துக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு, பதிலுக்கு நிலா அவளுடைய தாத்தா பாட்டி பொறுப்பில் இங்கே வளர ஒப்புக் கொண்டு, எழுதித் தர வேண்டும் என்று பெரியண்ணனைப் பிடிக்கலாம்” என்றார். 

“அப்பாவுக்கு இந்தத் திட்டத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. எப்படியும் பெற்ற மகளைத் தகப்பன் எப்படி விடுவான் என்ற எண்ணம்.

“ஆனால் அரை நாள் சுலேகாவின் முணுமுணுப்பை கேட்டிருந்துவிட்டு பெரியண்ணன் சரி என்றதும், அவர் இன்னமும் அதிர்ந்து போனார். பெரிய அதிர்ச்சி. 

“பெற்ற மகளை அவருடைய பிள்ளை, பணத்துக்காக விடத் துணிந்தது ஓர் அதிர்ச்சி என்றால், பெரியண்ணனின் பங்குக்கு பணமாக எப்படிக் கொடுப்பது என்று அது வேறு பெருங்கவலை அவருக்கு. கோடிக்கணக்கில் கொடுக்க நேருமே! 

“ஆனால் அம்மா சின்ன அண்ணன் கட்சி.. மற்ற எதையும் விட நிலாதான் முக்கியம் என்பதில். வீட்டு நகைகள் அனைத்தையும் விற்று விடலாம் என்றார்கள். ஆனால், நகைகளைத் தொடாமல் வித்யாண்ணன் எப்படியோ சமாளித்தார். வீட்டில் மற்ற எல்லோரின் பங்குச் சொத்துக்களைப் பாதி விற்றும், பாதி அடமானம் வைத்தும், கம்பெனி பங்குகள் மேல், பாங்கில் கடன் வாங்கியும், பெரியண்ணனுக்குக் கணக்குப்படி. பைசா குறையாமல் பணத்தையும் அவர் பங்குச் சொத்தையும் கொடுத்து விட்டார். 

“நிலா பற்றி எழுதிக் கொடுப்பதற்குப் பெரியண்ணன் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அண்ணனுக்கு மகள் என்பதே இல்லையே என்று அது அப்பாவுக்கு நெஞ்சு வலியாகவே மாறிப் போயிற்று. அப்பாவின் விருப்பப்படி அவள் இங்கே வளரட்டும். ஆனால் அது பெற்றவர்களின் விருப்பப்படி நடக்கட்டும்; அவரும் அவ்வப்போது வந்து மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று எழுதினார்கள். 

“என்றேனும் நித்யாண்ணனுக்கு மகள் பாசம் வந்து விடும் என்று அவருக்கு நம்பிக்கை. அப்போது, அண்ணன் உரிமையற்று வருந்தக் கூடாது என்ற கருத்து. ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு போன பெரியண்ணன் அதன் பிறகு, அப்பா மறைவுக்குத்தான் வந்தார். 

“அப்போதும் தகப்பன் என்பது இல்லாமல் போய் விடக்கூடாது என்று அப்பா விரும்பினாரே என்று, நிலாவை அண்ணனிடம் அனுப்பிப் பேச விட்டுப் பார்த்தோம். ஆனால்… ஆனால்… அவரிடம் சுலேகாவின் ஆதிக்கம் ரொம்பவும் மேலோங்கியிருந்தது. மகளையே தவிர்த்தார். 

“சின்ன அண்ணன் வேறு, பெரிய அளவில் இவர்களுக்கு வழித்துக் கொடுத்துவிட்டு தொழிலில் அன்றாடப் புழக்கத்துக்கே பணத்துக்கே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். 

“தொட்டால் ஒட்டிக் கொண்டு விடுமோ என்பது போலக் காரியம் முடிந்ததுமே, பெரியண்ணனும் சுலேகாவும் ஓடி விட்டார்கள். 

“நல்ல வேளையாக, வித்யாண்ணனின் கடின உழைப்பும், புத்திசாலித்தனமும் பலன் தரத் தொடங்கி, தொழில் நல்ல நிலைக்கு உயர்ந்து, பழைய மாதிரி சொத்து பத்துக்களும் விரைவிலேயே வந்து சேர்ந்து விட்டன. ஆனால் அது இன்னோர் ஆபத்தையும் சேர்த்துக் கொண்டு வந்து விட்டது” என்ற கவலையோடு கூறினாள் சுபா.

ஆபத்தா? என்ன அது? 

– தொடரும்…

– வாணியைச் சரணடைந்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *