வம்புப் பேச்சு வேண்டாம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 4,815 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புள்ள சுஜாதா,

‘பெண் கல்வி உலகில்’ அனேக சேவைக ளெல்லாம் புரிந்து பெண் குலத்தின் பெரும் மதிப்பைப் பெற்ற ஒரு அம்மாளிடம் நான் சில வருஷங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில் தம்முடைய அனுபவத்தில் ஒன்றைக் கூறினார். “நான் ஒரு சகோதரியைப் பற்றியும் வம்பு பேசுவதில்லை யென விரதம் வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார்.

எனக்கு அதன் உயர்வை உணர முடிந்தது. நாமும் கூடிய மட்டும் அந்த முயற்சியைச் செய்யலாமென நினைத்தேன்.

உத்தர ராமாயணத்தையே நான் நம்புவதில்லை, லோகமாதாவுக்கு ஒரு அபக்கியாதி, அதை ராமர் கேட்டார் என்பதே தவறான விஷயம். ஆயினும் கதையாகப் பாவித்தோமானால் நா அடக்கமின்றிப் பேசும் பேச்சின் பெருங் குற்றம் மனத்தை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறது என்பது தெரியும்.

சமீபத்தில் அயல் நாடுகளுக்குச் சென்று திரும்பிய என் அருமைச் சிநேகிதி அங்குள்ள அதிசயங்களைப் பற்றிச் சொன்னார். வியாபாரம். வாழ்க்கைத் தரம், குழந்தை வளர்ப்பு. பெண் கல்வி முதலிய அநேக விஷயங்களைப் பற்றி அழகாக எடுத்துச் சொன்னார். அங்கு பெண்கள் இடை விடாமல் உழைப்பதால், வம்பு பேச அவர்களுக்கு அவகாசமே இல்லை. அதுவே பழக்கமாகி விட்டது. நம்முடைய நாட்டிலும் வம்பின் கொடுமை போக வேண்டு மென்று தெரிவித்தார். அதனால் நாள் முழுவதும் வேலை செய்வதில் வருமானம் கிடைப்பதுடன், வம்புப்பேச்சுக்கும் இடமில்லாமல் போகும் தன்மை உண்டாகிறது.

ரகு வம்சத்து அரசர்களை வர்ணிக்கும் பொழுது ‘சத்தியாய மிதபாஷிணாம்’ என்று காளிதாஸன் சொல்லுகிறான். சத்தியம் என்றல் பொய் சொல்லாதது மட்டுமல்ல. பிறரைப் பற்றி அவதூறு பேசுவதும் அசத்தியத்தைவிட மிகவும் இழிவான செயல்தான்.

வம்புக்குத் தான் அங்கு பொருள். ஏனெனில் வம்பு சமாசாரத்தில் நூற்றுக்கு ஒரு பங்கு உண்மை இருக்கலாம். அல்லது அதுகூட இல்லாமலும் இருக்கலாம் அல்லவா?

பேச்சு ருசியில் தவறான பழக்கத்தில் மிகவும் லேசாக ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினதில் அந்தப் பெண்ணுடைய எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக ஆகி விட்டது. கேவலம், வம்பு பேசுவதி லுள்ள விபரீதத் தன்மையால் பிறருடைய நிலை எப்படி மாறுகிறதென்று அறிய வேண்டுமல்லவா? பொறுப்பற்ற பேச்சுக்கள் சமூகத்துக்குச் செய்யும் மகத்தான குற்றமாகும்.

முன் காலத்தில் குளத்தங்கரை வம்பு, கோவில் வம்பு என்றெல்லாம் இருந்தன. இன்று நவநாகரிக உலகில் வம்பு டெலிபோனிலாவது பேசப்படுகிறது.

ஒரு கல்யாணம் நிச்சயமா இருந்தது. ஒரு அம்மாள் “அந்தப் பெண்ணையா நிச்சயித்திருக்கிறீர்கள்? சரிதான்! இனி மேல் நான் ஒன்றும் சொல்லக் கூடாது” என்று ஒரு பொடி வைத்துப் பேசி விட்டார். நடுவில் ஒரு சின்னச் சொல்லில் கல்யாணமே நின்று விட்டது.

காற்றை விட வேகமானது மனமென்று நமக்குத் தெரியும். ஆனால் அந்த மனத்தைவிட வேகமானது வம்பு. நெருப்பை விட எரிச்சலுடையது வம்பு. அசூயையால் மட்டுமல்ல. பொறுப்பற்ற உணர்ச்சியோடு நாவடக்கமின்றிப் பேசும் பழக்கமும் ஓரளவு வம்பைப் பிறப்பிக்கிறது.

ஆண்கள் வம்பு பேசுவதில்லையாயென நீ கேட்கலாம். நான் எழுதுவதெல்லாம் நம் சகோதரிகளுக்குத்தான். நம் நாட்டில் பெண்கள் பேசும் தெய்வங்களாக மதிக்கப்பட்டு வந்திருக்கிறர்கள். நம்மை நரம் இன்னும் உயர்த்திக் கொள்ள வழி இருக்கிறது. அதற்கு அவசியமான குண விசேஷங்களை இயற்கை நமக்கு அளித்திருக்கிறது. நம்மைக் கண்டு அஞ்சலி செய்யும் வண்ணம் வானளாவ உயர்ந்து வாழ நம்மால் சாத்தியம், சுஜாதா!

இப்படிக்கு,
பூமாதேவி

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *