லொல்லிம்மாவின் சொத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,236 
 
 

ரொம்பவும் ஜாக்கிரதையாக என்னாலே பதுக்கி வைக்கப்படும் எல்லாப் பொருளையும் அப்பா சாதாரணமா கண்டுபிடிச்சுடுவாரு. ஒரு வீட்ல ரகசியமான இடம்னு ஏதாச்சும் இருக்கா என்ன? புத்தகப்பை, விட்டா என்னோட துணிகளுக்கு நடுவே, இல்லன்னா என்னோட புத்தகங்களை வைக்கிற இடம் இதுக்குள்ளதான் பதுக்கி வைக்க முடியும். இந்த இடமெல்லாம் அப்பாவுக்குத் தெரியாதா என்ன? காலையில அவரு ஷிப்டு போற அவசரத்துல கட்டாயம் தேட மாட்டாருங்கிற தைரியத்துல அதை தற்காலிகமா பதுக்கி வைக்கிற இடமான தலையணை உறைக்குள்ள வைச்சிருப்பேன். ஆனா எந்நேரம் எப்பவும் எனக்கு கெட்டநேரம் தான். ஷிப்டு கிளம்புற அவசரத்துலேயும் கரெக்டா அம்மாகிட்ட ‘என் அலமாரிக்குள்ள வைச்சிருந்த பேனா எங்கே’டினு கேட்பாரு? சமையலறைக்குள்ளிருந்து அம்மா ‘தெரியலைங்கனு சொல்வாள்’. படுத்துக்கிட்டிருக்கிற என் காதில் எல்லாம் கேட்கும்.

என்னை சம்மந்தப்படுத்தி பேச்சு, திரும்பும் நேரத்தில், நானும் பொருள் வைச்சிருக்கும் தலையணையைத் தாண்டி வேறு இடத்தில் படுப்பேன். எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லைனு காட்டுவதற்கான ஏற்பாடுதான் அது. எல்லா ஏற்பாட்டையும் அப்பா ஒரு கை பார்ப்பார். புத்தகப்பை, புத்தக அலமாரி, துணிகளுக்கு நடுவே எப்போதும் கிடைத்து விடுகிற பொருள் கிடைக்காமல் போனதும் அவரின் சத்தம் உச்சத்துக்குப் போகும். அம்மா உடனே படபடன்னு கதவு, ஜன்னலை மூட ஆரம்பிச்சுடுவாங்க. அப்படின்னா சத்தம் இப்போதைக்கு நிக்காது. கூடிக்கிட்டே போகும்னு அர்த்தம். அப்பாவோட சேர்ந்து அம்மாவும் தேடுவாங்க. அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கணுங்கிறதுக்காக ஆபிஸ்லேயே விட்டுட்டு வந்து இங்க கத்தறிங்க. சாயங்காலமா வந்து பாத்துக்கலாம். இந்தாங்க இந்த பேனாவை எடுத்துட்டு போங்கனு அம்மா சொன்ன நிமிடத்தில் அப்பாவின் சத்தம் இரண்டு மடங்காகி ஜன்னல்கள் வெளியிலும் கேட்கும்.

‘எனக்குத் தெரியாதா இதுவும் பேனான்’னு. நான் பத்திரப்படுத்தி வைச்ச பேனா எங்கேனு தாண்டி கேக்குறேன். அது என்னோட முப்பது வருச நண்பன் கொடுத்ததுடி. விளக்குமாறு மாதிரி பேசறா’னு கத்திட்டு ரூமையே சுத்தி, சுத்தி வந்து பாயைத் தூக்கிப் பாத்து, பெட்ஷீட்டை தூக்கிப் பாத்து கடைசியா தலையணை உறைக்குள்ளேயிருந்து பேனாவை கண்டுபிடிச்சுடுவாரு. அது தானா கால் முளைச்சு அந்த இடத்துக்கு வரலைனு தெரிஞ்சதும், அதை எடுத்தவ நானென்று தெரிஞ்சதும், இவ்வளவு நேரம் தன்னை இப்படி தேட விட்டாளேங்கிற ஆத்திரத்தோடயும், ரொம்ப தைரியமா தன்னோட பொருளை மறுபடியும் ஒளிச்சு வைக்கிறாளேங்கிற வெறுப்பிலயும், இனி இப்படி நடக்கவே கூடாதுங்கற ஆவேசத்தோட ஃபேன்ட் பெல்ட்டை உருவிக் கொண்டு என் மீது பாய்வார்.

அதை அடிப்பதற்கு அப்பா பயன்படுத்த மாட்டார்னு எனக்குத் தெரியும். உருவப்பட்ட கணத்தில் அம்மா வந்தாங்கன்னா அடி நிச்சயம். கோபமும், வேகமும், சத்தமும் குறைந்த பிறகே அம்மா வருவாங்க. அப்பாவோட சேர்ந்து நின்னு அவங்களும் கோபமாக ரெண்டு வார்த்தை பேசுவாங்க. வாக்கிங் முடிச்சு வீட்டுக்கு வந்திருக்கும் தாத்தாவுக்கு என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிருக்கும். ரொம்பவும் அமைதியா உட்கார்ந்திருக்கிற அப்பாவுக்கு எது சொன்னால் பிடிக்கும்னு தாத்தாவுக்கு தெரியும். அவரும் சேர்ந்துக் கொள்வார்.

“வீட்ல பிரச்சனை வரதே உன்னாலே தான் பார்கவி. அவன் பொருளை எடுக்காதேனு கத்துறானே. பின்னே எதுக்கு எடுக்கறே, அடி வாங்கி சாவணும்னு உனக்கு இருந்தா என்ன பண்ண முடியும்.”

அடிப்பதற்காக பெல்ட்டை எடுத்துவிட்டு அடிக்காமல் போயிருக்கும் அப்பாவைக் காட்டிலும் தாத்தா மீது கோவம் கோவமாய் வரும். அப்பாவைச் சமாதானப்படுத்த என்னவெல்லாம் செய்யணும்னு புரிஞ்சி வைச்சிருக்கும் தாத்தா இந்த மாதிரி பிரச்சினையே வீட்ல வராம இருக்க தன்னோட பொருளுங்களை எனக்கு கொடுக்கலாம் தானே? அப்பா என்ன மாதிரியான பேனா வைச்சிருக்கார், டைரி வைச்சிருக்காங்கிறத ரொம்ப ஈஸியா பார்த்துரலாம். ஆனா தாத்தாவோட ஒரு பொருளையும் கண்ல பார்க்க முடியாது. குளிக்கப் போறப்ப, டவல் எடுக்கறப்ப பீரோவை அவசரத்தில மூடாம போயிடுவாரு. அப்ப பார்த்ததுதான் எல்லாம். அப்பாகிட்ட இருக்கிறதைக் காட்டிலும் ரொம்ப ரொம்ப அழகான டைரிகள் அவர்கிட்ட இருக்கு. அவர்கிட்ட இருக்கிற விதவிதமான பேனாக்களை பார்த்தவுடனே அதில எழுதிப் பார்க்கணும்னு தோணும். ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கப்பவே தாத்தா அவசர அவசரமா குளிச்சிட்டு வருவாரு. பொருளை பாத்ததுக்காக கத்துவாரு. சரி அப்பாதான் கொடுக்கலை தாத்தாவாச்சும் கொடுக்கலாம்ல. புது டைரில, புதுப்பேனாவுல எழுதிப் பார்க்கணும்னு ஆசைப்படற சின்னப் பொண்ணுக்கு அதைக் கொடுக்காம இதையெல்லாம் வைச்சிக்கிட்டு என்னப் பண்ணப்போறாங்க. அதில அட்வைஸ், திட்டு, திருடிப்பட்டம் இதெல்லாம் வேற.

அவங்க என்னிக்கோ வாங்கிக் கொடுத்த பேனாக்களையும் பழைய டைரிகளையும் நான் ஒழுங்கா வைச்சுக்கலைங்கிறதால அவங்களோட எந்தப் பொருளையும் இனி தரதில்லைனு முடிவு எடுத்திட்டாங்களாம். இருக்கிற பேனாவிலதான் இனிமே எழுதணும். இனி அவங்களே கொடுக்கிற வரைக்கும் அதை கண்ணுல கூட பாக்குறது இல்லனு வைராக்கியமாத்தான் இருப்பேன். கிளாஸ்ல வரலட்சுமியும், சுபாவும் புதுப் பேனாவை காட்டி வெறுப்பேத்தற வரைக்கும்.

அவளுங்க அடிக்கடி புதுப்புது பேனாவா எடுத்திட்டு வருவாளுங்க அதுலேயும் வரலட்சுமி கிட்ட புதுப்பேனா இருக்கிறது ரொம்ப சீக்கிரமா தெரிஞ்சுடும். சும்மா சும்மா ஜாமெண்ட்ரி பாக்ஸை திறந்துக் காட்டி அதில இருக்கிற புதுப்பேனாவை நம்ம கண்ணுல படற மாதிரி வெறுப்பேத்துவா. கணக்குப் பாட வகுப்பு பூரா இந்த பீத்தல் தான். வாத்தியார் போர்டுல எழுதிப் போடற மாதிரி கணக்கை நோட்புக்ல அழகா சீக்கிரமா எழுதி வாத்தியார் கிட்ட காட்டி ‘நன்று’ வாங்கிட்டு வந்து வெறுப்பேத்துவா. வாத்தியாரும் அதுக்கப்புறம், அவளை மாதிரியே அழகா எழுதிட்டு வரச்சொல்லி எல்லாப் பிள்ளைகளுக்கும் பொதுவாய்ச் சொல்லும்போது எனக்கு ஆத்திர, ஆத்திரமாய் வரும். இந்த மாதிரி ஒரு நாளைக்காவது வாத்தியார் கிட்ட ‘நன்று’ வாங்கணும்தான் அப்பாவோட பேனாக்களை எடுக்கிறேன். அது எங்க அவருக்குப் புரியுது?

அன்னிக்குகூட சுபாவையும், வரலட்சுமியையும் வெறுப்பேத்தலாங்கிற எண்ணத்தோட நான் எடுத்து வைச்ச பேனாவாலதான் வீட்ல அவ்வளவு பிரச்சனை. வீட்ல என்னால தான் சண்டைனு அம்மா சொல்லுவா. சண்டை ஆகுற அன்னிக்கெல்லாம் எனக்கு கிடைக்குற அடி, திட்டு பேச்சு இதெல்லாம் இருக்கட்டும். வேறொரு இம்சை இருக்கு. அன்னிக்கு காலையில கட்டாயம் படிச்சாவணும். காலையில எழுந்திரிச்சி படிக்கிறது கொடுமையிலும் கொடுமை. நல்ல குளிர்ல இழுத்துப் போத்திக்கிட்டு அம்மாவை கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். முன்ன எல்லாம் அப்பாவைப் பிடிச்சுக்கிட்டு தூங்குவேன் இப்பல்லாம் அம்மா பக்கத்துலதான் படுத்துக்கிறேன்.

காலைல அப்பா கொடுத்துட்டு போன திட்டை மனசுல வைச்சுக்கிட்டு எத்தினி முறை சோசியல் படிச்சாலும் ஏறாது. மனசு அப்பா பிடுங்கிட்டுப் போன பேனா மேலேயே இருக்கும். அது ஒண்ணும் அவ்வளவு விலையான பேனா மாதிரி தெரியலை. ஆனாலும் அதில எழுதினா கையெழுத்து நல்லாயிருக்கும்னு தோணுது. மனசு கிடந்து அவரோட பேனாங்க, டைரிங்க பக்கமாகத்தான் அலையுது. திருடிப்பட்டம், பேச்சு எல்லாம்தான் மறந்து போகுது. சீக்கிரமா பதுக்கி வைச்சு அதுக்கு சொந்தக்காரியாயிடணும்னு தோணுது. இந்த பழக்கம் என்னை விட்டுப் போறதாயும் இல்ல. என் திட்டம் எப்பவும் நிறைவேறுனதும் இல்ல.

வரலட்சுமியும், சுபாவும் எடுத்திட்டு வர பேனாங்க எல்லாம் அவங்க வீட்ல வாங்கித் தந்ததா இல்ல என்னை மாதிரி எடுத்திட்டு வராளுகளான்னு தெரியலை. பேனான்னு இல்ல அழகழகான டைரிங்க, கைக்கு அடக்கமான நோட்டுங்கனு எல்லாந்தான் எடுத்துட்டு வருவாளுங்க. இந்தாடி பாத்துட்டு கொடுடினு எதையும் எனக்குத் தந்ததில்லை. ஆனா அவளுககிட்ட இருக்கிற பத்து பேனாவும் சரி அப்பாகிட்ட இருக்கிற ஒரு பேனாவும் சரி. கிட்டக்கயே நிக்க முடியாது. அதுல அப்பா டைரி எழுதறப்ப பாத்துருக்கேன். நல்ல விசயங்களை டைரில எழுதுவாரு. அந்தப் பேனாவுல எழுதுனாத்தான் பிடிக்கும்னு சொல்வாரு. ஆனா நா எழுதுனாதான் அவருக்குப் பிடிக்கல. அது என்னப்பா நியாயம்னு அவரு நல்ல மூடுல இருக்கறப்ப கேட்கணும். நல்ல மூடுல இருக்கறப்ப பரிட்சைக்கு எழுதறதுக்கு நல்ல பேனா வேணும்பானு கேட்டா கூட்டிட்டு போயி ஜெல்பேனா, இங்க் பேனாவெல்லாம் நிறைய வாங்கித் தந்திருக்காரு. எதுவுமே ரொம்ப நாளைக்கு வராது. இங்க் பேனாங்க ஒரு வாரத்துக்கு மேல வந்ததில்ல. பூரா லீக் ஆகும். பேனாவைப் பிடிச்சு எழுதுனா கையெல்லாம் நீலமாயிடும். ஐம்பது ரூபாய்க்கு மேல உள்ள பேனாதான் கொஞ்ச நாளைக்காவது நிக்கும்னு கடைக்காரன் சொல்லியிருக்கான்.

ஒரு நாள் அப்பாகிட்ட தைரியமா கேட்டுட்டேன். அவர்கிட்ட இருக்கிற ஒசத்தியான அழகான பேனாவை ரொம்பத் துணிச்சலா கேட்டேன். என்ன நினைச்சாருன்னு தெரியலை ‘சரி வைச்சுக்கோ’ன்னு எடுத்துக் குடுத்திட்டாரு. அம்மாகூட கிண்டலா ‘வெளியே பாருடி வானம் கூட மந்தமா இருக்குதுல்ல’னு கேலி பண்ணாங்க.

நல்ல பேனாவுக்கும் எனக்கும் எப்பவும் ராசியில்ல. அப்பா கொடுத்த பேனாவை எழுதிப் பாக்கலாம்னு அப்பதான் முதன் முதலா கவரைப் பிரிச்சேன். கை தவறி விழுந்து முள்ளு வளைஞ்சிப் போச்சு. தகவல் தெரிஞ்ச அப்பா கோபமா கத்துனாரு. பயத்துல அப்படியே நின்னுட்டேன். அம்மாவும் கூட சேர்ந்து கத்துனாங்க இரண்டு பேரு கத்தி முடிக்கவும் டிவியில சன் செய்திகள் முடியறதுக்கும் சரியா இருந்துச்சு. கத்துனதுல அம்மா டயர்டாகி சமையலுக்குத் தயாரானாங்க.

அப்பா அதுக்கப்புறமும் விடலை. உள்ள ஓடிப்போயி அவரோட அலமாரியை திறந்து ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டாந்து ஹாலில் கொட்னாரு. தலை இல்லாத, உடல் இல்லாத, முள் இல்லாத, நூறு விதமான பேனாக்கள் ஹால் முழுக்க இறைஞ்சிக் கிடந்தது. இத்தனை பேனாக்களையா அப்பா வாங்கிக் கொடுத்திருக்கார்னு ஆச்சர்யமாயிடுச்சி. அதுல அவரு பயன்படுத்துனதும் இருந்தது. பயன்படாத பேனாவை எல்லாம் தூக்கி போட்ருப்பார்னு நினைச்சேன். இவ்வளவு நாளா எப்படித்தான் பாதுகாத்து வச்சிருக்காரோன்னு தெரியலை. பயன்படுத்தி தூக்கி எறியணும்னு கடைக்காரன் சொல்லிக் கொடுத்த பேனாங்க கூட சிலது அதில இருந்தது. அதைப் பாதுகாத்து வைச்சிருந்த அப்பாவை நினைச்சா எனக்கு சிரிப்பு, சிரிப்பா வந்தது.

அதில் இருந்த பேனாக்களுக்கு பின்னால் அடிபட்ட எனது முதுகின்வலி ஞாபகத்துக்கு வந்தது. இந்த பேனாவெல்லாம் சிதறிக் கிடக்கிறதுக்கு காரணமான முள்வளைஞ்ச பேனா அவ்வளவு சீக்கிரம் இந்த குப்பையில வரவே முடியாதுன்னு எனக்குத் தெரியும். எப்படியும் அப்பா இரண்டு, மூணு முறையாவது பேனாவோட முள்ளை மாத்த முயற்சிப்பாரு. எல்லாத்திலேயும் தோத்த பிறகு தான் அது பிளாஸ்டிக் பைக்குள்ள வரும். நல்ல பேனாக்களுக்குனு ஒரு பை வைச்சிருப்பாரு. இது தவிர காஸ்ட்லியான பேனாவுக்குனு பாக்ஸூம் வைச்சிருப்பார்.

“ஏம்பா இவ்வளவு பேனா வைச்சிருக்கீங்க. மறுபடியும் புதுசு, புதுசா ஏன் வாங்கறிங்க”னு கேட்டா,

“எனக்கு எழுத உட்காறப்ப நல்ல பேனா இருக்கணும். அதான் ஒண்ணுக்கு ரெண்டா வாங்கி வைக்குறேன். எதை விட்டு வைக்கிற, எத்தனை வாங்கித் தந்தாலும் உனக்கு என் பொருளுங்க மேலதான் கண்ணு”.

அப்பா சொல்றதுல உண்மையில்லாம இல்ல. இனிமே அவரோட பொருள்களை தொடக்கூடாதுனு மனசுக்குள்ள சபதம் போட்டுக்குவேன். ரெண்டு நாளைக்கு மேல என் சபதம் தாங்குனது இல்ல. கிளாஸ்ல அவளுங்க கொண்டு வர டைரிகளை விட அழகான டைரியைக் காட்டி வெறுப்பேத்தணும். ஒரு நாள், ஒரே ஒரு நாள் அப்பாவோ, தாத்தாவோ அவங்களோட டைரியை குடுத்தாப் போதும். என் ஆசை நிறைவேறிடும்.

சமயத்துல சுபா கூட பரவாயில்லை. எல்லா சமயத்துலேயும் வரலட்சுமி மாதிரி கர்வமா இருக்க மாட்டா. வரலட்சுமி கிளாஸூக்கு வராத அன்னிக்கு சுபா என் கூடவேயிருப்பா. அப்ப பேனாவெல்லாம் எழுதக் குடுப்பா. மறுநாள் ஸ்கூலுக்கு வந்தவுடன் வரலட்சுமி, சுபா என்னோட நெருக்கமா இருக்கிறத கண்டு பிடிச்சுடுவா. அன்னிக்கு பூரா சுபாவுக்கு கொண்டாட்டந்தான். வரலட்சுமி, சுபா தோள்ல கை போட்டு கூட்டிட்டுப் போயி மாங்கா பத்தையெல்லாம் வாங்கித் தருவா. தன்கிட்ட இருக்கிற நோட்டுங்க எல்லாம் குடுத்து அவளை என் பக்கம் வராத மாதிரி பாத்துப்பா. வரலட்சுமி வராத அன்னிக்கு அவளைப் பத்தி கதையா சொன்னவளா இப்படினு எனக்கு ஆச்சர்யமாயிரும். முத நாள் என் கையப் பிடிச்சுக்கிட்டே திரியும்போது வரலட்சுமி பத்தி ஏராளமா சொல்லுவா. அவளுக்கு ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கறதில மண்டைக் கனம் ஜாஸ்தியாம். அவ கையெழுத்து நல்லா இருக்கறதுக்கு காரணமே அவகிட்ட இருக்கிற கருநீலப் பேனாதான். நாலு பேனா வேற கலர்ல வைச்சிருந்தாலும் கருநீலப் பேனாதான் ராசியான பேனாவாம். அது மாதிரியே பேனா வாங்கணும்டி என்கிட்ட சொன்னவள் அவளை முந்தணுங்கிற கோபத்தோடதான் சொன்னா. எனக்கு இவளுங்க இரண்டு பேரையும் முந்தணும்னு இருக்கு. சுபா சொல்றப்ப கூட நா அதை வெளிக்காட்டிக்கலை.

சுபா, வரலட்சுமி கிட்ட இருக்கிற மாதிரி நல்ல பேனாங்க என்கிட்ட ஒண்ணுகூட இல்ல. நல்லா எழுதணும்னு நம்பி கடையில வாங்கிட்டுப் போன பேனாங்க பல முறை வேடிக்கை காட்டும். ஹோலி கொண்டாடினவ மாதிரி கை, சட்டைனு எங்க பாத்தாலும் நீலக்கறை தான். ‘உன் பேனாவுக்கு ஒரு லிட்டர் இங்க் ஊத்தினியாடி’னு தாமரைக்கனி சிரிப்பாள். கூடவே மகேசுவரியும், ராஜேஸ்வரியும் சிரிப்பாளுக.

அப்பாகிட்ட மட்டுமல்ல. அம்மாவையும் நச்சரிச்சு புதுப்பேனா வாங்கி தரச் சொல்லி அழுவேன். அம்மா அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு அப்பாவோட அலமாரியை ஆராய்ஞ்சி அவரோட பழைய பேனாவை எடுத்து குடுப்பாங்க. அந்தப் பேனாவுல எழுதினா கையெழுத்து சூப்பராயிருக்கும். அவளுக்கு ஒரு கருநீலப் பேனா மாதிரி நமக்கு ஒரு சிவப்பு பேனான்னு சந்தோஷமா பரீட்சை எழுதுனேன். பேப்பர்ல தெரிஞ்ச கேள்வியை மட, மடன்னு எழுதுனேன். கையெழுத்து வேகமாக எழுதறப்ப கோணல் மாணலாயிடுச்சு மூணு கேள்வி எழுதின பிறகுதான் கையெழுத்து மோசமாயிட்டிருக்குதுனு ஞாபகம் வந்துச்சு. அதுக்கப்புறம் கவனமா எழுதி முடிச்சு கடைசியா ஒரு தரம் பேப்பரை ஆரம்பத்துலயிருந்து பாக்கறப்ப திருப்தியாயிருந்துச்சு. முத்து, முத்தான என் கையெழுத்தைப் பாத்தவுடன் இந்த முறை நாமதான் ஃபர்ஸ்ட்னு நினைச்சுக்கிட்டேன்.

பரீட்சை லீவு முடிஞ்சு முதல் நாள் தமிழ், இங்கீலிஷ் பேப்பர் கொடுத்தாங்க. இரண்டுலேயும் நான்தான் ஃபர்ஸ்ட். வரலட்சுமி இரண்டாவதா வந்தா. சுபாவும், சரசுவதியும் அடுத்தடுத்து வந்தாங்க. வரலட்சுமி முகம் அன்னிக்கெல்லாம் நல்லாவேயில்ல. எனக்குகூட அவளைப் பாத்ததும் பரிதாபமாயிடுச்சு. அவ என்னிக்காவது இப்படி நினைச்சுருக்காளான்னு தெரியாது. மறுநாள் அறிவியல், கணக்கு, வரலாறு கொடுத்தாங்க. எல்லாத்துலேயும் வரலட்சுமி தான் ஃபர்ஸ்ட் எல்லாத்துலேயும் அஞ்சாறு மார்க் வித்தியாசம். மொத்தத்திலே அவ என்னை விட அதிக மார்க்; கூட எடுத்து வழக்கம் போல ஃபர்ஸ்ட் வந்தா. இந்த ஜென்மத்தில அவளை பீட் பண்ண முடியாதுன்னு நினைக்கறப்ப அழுகையா வந்துச்சு. அன்னிக்கெல்லாம் வரலட்சுமி என்னை கண்டுக்கவேயில்ல. கர்வமாவே திரிஞ்சா. சரசுவதியும், சுபாவும் வந்து இந்த முறை அவளை பீட் பண்ணிடுவேன்னு தான் நினைச்சோம்னு சொன்ன பிறகு தான் எனக்கு அடங்குச்சு.

ஏழு மார்க்ல ஃபர்ஸ்ட் ரேங்க் போனதில அம்மா, அப்பாவுக்கு வருத்தம் இருந்தாலும் இரண்டாவது இடம் வந்ததுக்கு ஏதாச்சும் செய்யனுமேனு கடைக்கு கூட்டிட்டுப் போயி பேனா வாங்கித் தரேன்னாங்க. கடைக்காரர் அலட்சியா என்னைப் பாத்துட்டு சாதாரண பேனாக்களை காட்டினாரு. பூரா ஹோலி பேனாக்கள். அப்பா அதில் ஏதாவது ஒன்றை எடுத்திடப் போறார்னு பயமாயிருந்துச்சு. அம்மா அப்பாவை மீறி பாக்ஸில் இருக்கும் பேனாக்களை காட்டச் சொன்னார். அப்பா ரொம்ப ஆர்வமாய் அதிலொன்றை எடுத்தார். அதில் இங்க் தொட்டு எழுதிப் பார்த்தார். என்னையும் எழுதிப் பார்க்கச் சொன்னார். எழுத்து வழுக்கிக் கொண்டு போனது. அது எல்லாத்தையும் விட அந்தப் பேனா எனக்கு பிடித்ததிற்கு காரணம், அது கருநீலப் பேனாவாக இருந்ததுதான். வீட்டுக்குள் வந்தவுடன் அந்தப் பென்பாக்ஸை பத்திரமா எடுத்து ஸ்கூல் பைக்குள் வைத்தேன். முதல் முறையா வரலட்சுமி, சுபாகிட்ட காட்டற அளவுக்கு என்கிட்டயும் பேனா இருந்தது பெருமையா இருந்துச்சு.

கிளாஸ்ல எல்லா பிள்ளைகளும் ரொம்பப் பெருமையா என் பேனாவை பார்த்தார்கள். தாமரைக்கனியும், சரசுவதியும் வீட்டாண்ட இருக்கிறவங்க. பேனாவின் விலை, விக்கிற கடை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்கள். மதியம் சாப்பாட்டு பெல் அடிக்கிற வரைக்கும் வரலட்சுமி என் புதுப் பேனா பத்தி கண்டுக்கவேயில்லை. மதியம் முடிஞ்சு முதல் பீரியட்ல என் கிட்ட அவளாகவே வந்து பேனாவை கேட்டு அவ நோட்டுல கடைசிப் பக்கத்துல எழுதிப் பார்த்தா. அவ எழுதிப் பார்த்தது என் பேரைத்தான். ‘அழகா எழுது நல்லாயிருக்கு’னு சொன்னா. நானும் அவகிட்ட இருந்து பேனாவை பாக்ஸூக்குள் வைச்சு பைக்குள்ள வைச்சுக்கிட்டேன். அன்னிக்கு பஸ்ல ஒரே நெரிசல். வீட்ல கொண்டாந்து பையை வைச்சிட்டு விளையாடப் போயிட்டேன். அன்னிக்கு பூரா படிக்காம மறுநாள் படிச்சுக்கலாம்னு இருந்துட்டேன்.

ஞாயிற்றுக்கிழமையும் எதுவும் எழுத்து வேலை இல்ல. அதுனால பையைத் திறக்கல. திங்கட்கிழமை ஸ்கூல் கிளம்பறப்ப பேனாக்கு இங்க் ஊத்தலாம்னு பையைத் திறந்தா ஜாமென்ட்ரிபாக்ஸ், பென்பாக்ஸ் எதுவுமே காணல. ஸ்கூல் போறப்ப பென்பாக்ஸ், ஜாமென்ட்ரிபாக்ஸ் இல்லங்கிறது தெரிஞ்சா அவ்வளவுதான். அப்பா வேற வீட்ல இருந்தாரு. புத்தக அலமாரிக்குள்ள பழைய பேனா ஒண்ணு தலையில்லாம கிடந்தது. எடுத்து எழுதிப் பார்த்தேன். கையெல்லாம் இங்க் கொற, கொறன்னு எழுதுச்சு. பைக்குள்ள அதை வைச்சுக்கிட்டு கிளம்பினேன். பிரேயர் பெல்லுக்கு அஞ்சு நிமிசம் இருந்துச்சு. கிளாஸ்ல பூரா பையையும் கீழே கொட்டி ஆராய்ஞ்சேன். அப்பா கூட சில நேரங்கள்ல இப்படி பண்ணியிருக்கார். பேனா பைக்குள்ள இல்லன்னதும் மனசு திக்குனு ஆயிடுச்சு. அன்னிக்கு பூரா வகுப்புல நடத்துன எதுவுமே மண்டையில ஏறவேயில்ல. சுபாவும், சரசுவதியும் ஏதேதோ சொல்லி சமாதானம் பண்ணாங்க. தாமரைக்கனி அதே பேனாவை வாங்கி வந்திருந்தா.

பேனா தொலைஞ்சதை விட அது தொலைஞ்சதுக்கு என்ன பதிலை வீட்ல சொல்றதுனு பயமாயிடுச்சு. விஷயம் தெரிஞ்சவுடனே அடிக்கப்போகும் அப்பாவோட சேர்ந்து அம்மாவும் நாலு அடி போடுவாள் என்பது உறுதி. ஒரே வழி தாத்தாவை நைஸ் பண்ணி ஒரு புதுப் பேனாவை வாங்கி வைச்சுட வேண்டியதுதான். தாத்தா அவ்வளவு விலையில வாங்கித் தருவாரான்னு தெரியலை. சாயாங்காலத்துல வாக்கிங் போகிற தாத்தாகிட்ட, நிலைமையை சொல்லி கெஞ்ச வேண்டியதுதான். ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் யூனிபார்ம் கூட கழட்டாமல் தாத்தாவை பார்க்க ஒடினேன். ‘எங்கேடி அவ்வளவு அவசரம்’னு அம்மா கத்தினாள்.

வாக்கிங் போய்க் கொண்டிருந்த தாத்தா கையை பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் அவர் கூடவே நடந்து, அவரை நைஸ் பண்ண நான் சொல்லும் ‘லொல்லிம்மா’னு கொஞ்சினேன். எதுக்கோ அடி போடுறான்னு அவர் ஈஸியா புரிஞ்சுக்கிட்டாரு. பேனா தொலைஞ்சதை சொன்னதும் கத்துனாரு. அவனுக்கு ஏத்த மாதிரி இருக்குறேனு கத்திட்டு. பாக்கெட்ல காசு இல்லைங்கிறத காரணமா சொன்னாரு. பட்டு கடையில எது கேட்டாலும் உங்களுக்கு தருவாங்களேன்னு ஐடியா கொடுத்து அப்பா வாங்கிக் கொடுத்த கடைக்கு கூட்டிட்டுப் போயி அதே கலர்ல வேற பேனா வாங்கினேன். பெரிய கடையில வாங்குன அளவுக்கு இது விலை இல்ல. இது கூட ஹோலி பேனாதான்னு எனக்கு பட்டுச்சு. காரியம் முடிஞ்ச கையோட தாத்தா கையை விட்டுட்டு வீட்டுக்கு ஓடினேன். பின்னாடியே வந்த தாத்தா அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு.

அம்மா கத்துனாங்க. “சோத்தை கொட்டிக்காம எங்க ஓடுறான்னு பார்த்தேன். அவர்கிட்ட அடிவாங்கினாத்தான் திருந்துவா. எதுக்கு மாமா வாங்கி தந்திங்க”.

தாத்தா “சரி, சரி இத்தோட இந்தக் கதையை முடிச்சுக்கோ. அவன் வீட்டுக்குள்ள நுழையறப்ப சொல்லி அவனை ஏத்தி விட்டுடாதே அவன் ஆரம்பிச்சான்னா முடிக்கவே மாட்டான்”.

“இவளுக்கு ஸ்கூல்ல கிழவிங்க சாவகாசம் அதிகமாயிடுச்சு மாமா. பஸ்ல பேச்சு இன்ட்ரஸ்டுல எங்கேயாச்சும் விட்டுருப்பா. அந்த மனுசன் கத்தறார்னா இவ அடிக்கடி இப்படி பேனாவை தொலைச்சுட்டு வந்து நின்னா யார் சும்மாயிருப்பாங்க”.

எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியா இருந்தாப் போதும் அம்மா அடங்கிவிடுவாள். அமைதியானாலும் அப்பா விட மாட்டார். அவரோட ஆத்திரம் பூரா அடங்குன பிறகுதான் நிறுத்துவார். சமயத்துல தாத்தா மேல கூட சீறுவார். விடுடான்னு ஒரேயொரு வார்த்தைக்காக நிறைய திட்டு வாங்கியிருக்காரு தாத்தா.

தாத்தா அப்பாகிட்ட திட்டு வாங்குன பிரச்சினை என்னால பல முறை வீட்ல நடந்திருக்கு. ஒவ்வொண்ணும் தனிக் கதை. அதில ஒண்ணு என்னதுன்னா. கிளாஸ்ல இங்கிலீஷ் டீச்சர், டிக்டேசன் வேர்ட் எழுத தனி நோட் போட சொன்னாங்க. டைரியா இருந்தாக் கூட பரவாயில்லைனு டீச்சர் சொன்னதா தாத்தாகிட்ட சொல்லிட்டேன். தாத்தாவும் அதை நம்பிட்டாரு. அம்மா சமையல் பண்ணிக்கிட்டே என்னைப் பார்த்து சிரித்தாள். லொல்லிம்மா பாக்குற சீரியலை சத்தமா வைச்சு அரை மணி நேரம் சேனலை மாத்தாம இருந்தேன். ‘லொல்லிம்மா பீரோவை திறந்து எந்த டைரி சரியாயிருக்கும்னு நானே எடுத்துக்கவா’ன்னேன். ‘சீரியல் முடியற வரைக்கும் அமைதியாய் இரு’ன்னு கத்தினார். நா செய்றத எல்லாம் அம்மா நோட் பண்ணிக்கிட்டே இருந்தா. அவ எனக்கு இன்னொரு வரலட்சுமி மாதிரி.

“மாமா எதுக்கோ உங்களை சுத்தி, சுத்தி வரா, உங்க பீரோவை நோட்டம் விட்டு எதையோ பாத்து வைச்சிருக்கா. ‘லொல்லிம்மா’ன்னு கொஞ்சுனா உங்களுக்கு ஆபத்துனு புரிஞ்சுக்குங்க”.

அம்மா பேசப் பேச தாத்தா பொக்கைத் தெரிய சிரிக்க ஆரம்பிச்சுட்டார்னா நமக்கு பச்சை விளக்குனு அர்த்தம். தாத்தா கையை பிடிச்சு இழுத்துட்டுப் போயி, பீரோவிலுள்ள பழைய டைரிகள்ல ஏதாச்சும் கொடுங்கனு சொல்லிட்டு அவரோட நீலநிற டைரியைக் காட்டினேன். அதைக் கேட்ட நிமிடத்தில் தாத்தா பீரோவை பூட்டினார். ‘அடிக்கடி பீரோவை திறந்து பாக்கிறவ நீதானா. உனக்கு சாவி எப்படி கிடைக்குது’ன்னு கத்தினார்.

அவரு கத்த ஆரம்பிச்சதுமே அந்த டைரி இப்ப கைக்கு வரப்போவதில்லைனு புரிஞ்சுப் போச்சு. தாத்தா சொல்ற மாதிரி அந்த டைரியை பல முறை பாத்து ஏங்கியிருக்கேன். பெரிய டைரி அது பேப்பரெல்லாம் வழவழப்பாயிருக்கும். டைரியோட பேப்பர்கள்ல அப்படியொரு வாசனை வரும். டைரிகளுக்கு நடுவே ஏதேதோ பேப்பர்ங்க இருக்கும். நடுநடுவே கணக்குகள் போட்டு வைச்சிருப்பாரு. அவரைத்தேடி வரும் தாத்தாக்களை பக்கத்துல வைச்சுக்கிட்டு போட்ட கணக்குகள் அது. அவங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் எழுதி வைச்சிருப்பாரு. வேறொரு டைரியில பாட்டி படம், அப்பா மீட்டிங்ல பேசுன படம், என் படம் எல்லாம் இருக்கும். அவரு இல்லாதப்ப எடுத்துப் பாத்துருக்கேன். எனக்கு சிரிப்பா இருக்கும். இதுக்கெல்லாமா இத்தனை டைரிங்க. என்கிட்ட கொடுத்தா டிக்டேசன் வேர்ட்ஸ் எழுதலாம் தானே. இன்னோரு டைரிக்கு நடுவே பூரா ரூபா நோட்டுங்க இருக்கும். ஐந்நூறு, நூறு, ஐம்பது ரூபா நோட்டுங்க இருக்கும். தாத்தாக்கிட்ட இத்தனை ரூபா இருக்குனு அம்மாகிட்ட ரகசியமா சொல்லி அதுக்கும் திட்டு வாங்கியிருக்கேன்.

டைரிங்க மீது எனக்கு ஏன் ஒரு கண்ணுன்னா அந்த வாசனைக்காகத்தான். புது நோட், புது வெள்ளைப் பேப்பருங்களை மோந்து பாக்குற பழக்கம் சுபாவாலேதான் எனக்கு வந்தது. புது ஸ்டாம்ப்ல வாசனை வரா மாதிரி போட்டிருக்காங்கனு சொல்லி ஒரு நாள் கிளாஸூக்கும் கொண்டு வந்தா. எனக்கும் அந்த மாதிரி ஸ்டாம்ப் ஒண்ணு வாங்கி நோட் நடுவுல வச்சுக்கணும்னு தோணும். புது பேப்பர்களை வாசனை பாக்கிற பழக்கம் வந்த பிறகுதான் தாத்தாவோட பீரோவை, அப்பாவோட அலமாரியை ஆராய்ச்சி பண்;ற பழக்கம் வந்துச்சு.

தாத்தா அவருக்குத் தெரியாமல் பீரோவை ஆராய்ச்சி பண்ணதுக்காக என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் நிமிடத்தில் அப்பா வியர்க்க, வியர்க்க வீட்டுக்குள் நுழைந்தார். பார்வையாலே என்னனு தாத்தாவை விசாரிச்சார். என்னனு அவருக்கு உடனே தெரிஞ்சாவணும். இல்லைன்னா தாத்தாகிட்ட சண்டைக்குப் போவார். தாத்தா பாதி மறைத்து மீதியைச் சொன்னார். அம்மா எல்லாவற்றையும் சொன்னாள்.

இப்போது அப்பாவின் கோபம் என் மீது திரும்பியது, “பேப்பரு, பேனா, டைரிங்க இதுலதான் உனக்கு காலம் கழியுது பார்கவி. இது வரைக்கும் உனக்கு வாங்குன பேனாவுல ஒரு மாச காய்கறியை வாங்கலாம். போன மாசம் ஐந்நூறு பேப்பரை கட்டா வாங்கியாந்தேன். பாதிகூட அதுல இல்ல. எப்பவும் இவளாலதான் பிரச்சனை”

“நீ இப்படி பேப்பருக்கு கத்துறேன்னு பயந்துதான் என்கிட்ட டைரியைக் கேட்டா. என்கிட்ட இருக்கிற டைரிகள் எல்லாத்துலேயும் ஏதாச்சும் கணக்கு இருக்கு. அவ புது டைரியை கேட்குறா. அதை இப்போதைக்கு என்னால தர முடியாது. உங்கிட்ட இருக்கிற பழைய டைரியில ஏதாச்சும் ஒண்ணு கொடுடா, நாளைக்கு கிளாஸூக்கு எடுத்துட்டு போவணுமாம்.”

அப்பாவின் கோபம் இப்போது தாத்தா மீது. அவர் மீது கோபம் வரப்ப எல்லாம் அர்த்தத்தோட பேச்சு வராது. போன வருசத்து, அதுக்கும் முந்துன வருசத்து, திரும்பத்திரும்ப எல்லாச் சண்டைகளிலும் கேட்ட எனக்குப் புரியாத பல விஷயங்களை அப்பா பேசுவாரு. இம்முறையும் அப்படித்தான் பேசினார். பேசி முடித்துவிட்டு இறுதியாக சொன்னாரு “டைரிகளை வைச்சு என்னப் பண்ணப் போறிங்க. இந்த வருச டைரியே இரண்டு இருக்குதுல்ல. ஒண்ணைக் கொடுக்க வேண்டியது தானே. குழந்தைகளை விட இவரு ஒரு குழந்தை”.

தாத்தாவும் திருப்பிக் கத்துனாரு. சண்டை பெரிசாயிடுமோன்னு எனக்கு பயம். நான் நினைச்சது மாதிரியே அப்பாவும் பதிலுக்கு “நடையா நடந்து வேலை மெனக்கெட்டு ஒவ்வொருத்தருக்கும் எத்தனை செஞ்சிருக்கிங்க. ஒரு நாள் பகல்ல யாராச்சும் தூங்க விட்டான்களா? தூங்கிட்டிருக்காருன்னு சொன்னலும் பரவாயில்லை எழுப்புங்க அவசரமா பேசணும்னுட்டு. போன்ல கிராஜிட்டி கணக்கு கேட்பாங்க. வயசானவரு தூக்கத்தை கெடுக்கிறோமேங்கிற உணர்வு கூட இல்லாதவங்க எப்படி மனுசனா இருக்க முடியும். உங்க உழைப்பை சுரண்டுனவங்க, யாராச்சும் காரியம் முடிஞ்ச பிறகு தேங்க்ஸாவது சொல்லியிருக்காங்களா? போன் பண்ணா ரெண்டு ரூபா செலவாயிடுமே. துட்டை மட்டும் வாங்கி குடுத்துக்கிட்டே இருந்தா இப்படித்தான் இருப்பாங்க”.

“நா சர்வீஸ்ல இருக்கறப்பவே இவனுங்க இப்படித்தான். இனிமே மாறப் போறாங்களா. ஆனா அதுக்காக நாம மாத்திக்கினுமாடா. பெரிசா பேசறான் பாரு”.

“அப்படினு தெரியுதுல்ல. அவங்க பிரச்சனைக்காவது அவங்க செலவு பண்ணிக்கிடட்டும். அதுக்கெல்லாம் தாராளமா செலவு பண்ணிட்டு, பேரப் பிள்ளைக்கு டைரிக்கு கூட கணக்கு பாப்பிங்க!”

அப்பாவின் சத்தம் அதிகமாகமாக தாத்தா அப்படியே அடங்கிப் போயிடுவார். தாத்தா குரல் அடங்குனதும் அப்பாவும் அடங்கிடுவார். தாத்தாவுக்கு அப்பாவை ரொம்ப நேரமா கத்த வைச்சா அவருக்கு ஏதாவது ஆயிடுமோங்கிற பயம்.

அதுக்கப்புறம் தாத்தா என்னை ரகசியமா அழைச்சிட்டுப் போயி கடையில புது நோட்டா வாங்கித் தந்தாரு. ‘என் சொத்தெல்லாம் உனக்குத்தான் பார்கவி’னு கிண்டல் பண்ணிக்கிட்டே வந்தாரு. தாத்தா வாங்கிக் கொடுத்த நோட்டை வர வழியில் முகந்துப் பார்த்தேன். எந்த வாசனையும் வரலை. மக்கிப் போன பேப்பரின் வாசம்தான் வந்தது. அதுல எழுதுனா எழுத்துங்க மொத்தம், மொத்தமாதான் வரும். தாத்தாவும், அப்பாவும் ஏன் இந்த பழைய டைரிகளை கட்டிக்கிட்டு அழுவுறாங்களோன்னு தெரியலை. அப்பாவோட டைரியில கணக்கெல்லாம் இருக்காது. டைரில புதுப் பேனாவுல எதை எதையோ எழுதி வைப்பாரு. அவரு புத்தகம் படிக்கிறப்ப பக்கத்துல டைரி இருக்கும். சில நேரங்கள்ல என்கிட்டேயும் அம்மாகிட்டேயும், எழுதின விஷயத்தைப் படிச்சுக் காட்டுவாரு. சிலது புரியும். பலது புரியாது.

ஒருமுறை அவரோட டைரியில எப்படிக் கூட்டினாலும் ஒரே தொகை வரக் கூடிய மாயச்சதுர கணக்கை எழுதி வைச்சிருந்தாரு. எப்படிப்பா இதை போடறதுனு அவர் கிட்ட கேட்டவுடனே அதை ஆர்வமா எனக்குச் சொல்லித் தந்தாரு.

மறுநாள் கிளாஸ்ல மாயச்சதுர கணக்கை போட்டுக் காட்டி வரலட்சுமி, சுபா, சரசுவதியை வம்புக்கிழுத்தேன். ஒருத்திக்கும் இதை எப்படி போடறதுன்னு தெரியலை. ஒவ்வொருத்தியும் தனித்தனியா வந்து எப்படி போடறதுன்னு கெஞ்சிப் பாத்தாளுங்க. வரலட்சுமி பேனாவை என் கையிலேயே கொடுத்துட்டாள் இன்னிக்கெல்லாம் வைச்சுக்கடி. ஆனால் கணக்கு எப்படி போடறதுனு மட்டும் சொல்லுடினு கெஞ்சினாள். விஷயம் கேள்விப்பட்டு டீச்சர் எல்லாருக்கும் போர்டுல போட்டுக் காட்டச் சொன்னாங்க. மாயச் சதுரம் போடற ரகசியம் எப்படினு தெரிஞ்சதும் எல்லாரும் பாராட்டினாங்க. அன்னிக்கெல்லாம் எனக்குப் பெருமையா இருந்துச்சு.

ரொம்ப சந்தோஷத்துல இருந்தா கூடவே துக்கம் துரத்தும்னு எங்க வீட்டு எதிர்ப் பாட்டி சொல்லும். அது மாதிரியே ஆயிடுச்சு. நல்லா இருந்த தாத்தாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்ல. வீடு முழுக்க துக்கமாயிடுச்சு. அத்தையை ஃபோனில் கூப்பிட்டு அப்பா ரொம்ப நேரத்துக்கு பேசிட்டு, மறுநாள் தாத்தாவை அப்பா ஆஸ்பத்திரியில சேர்த்தாரு. வீட்ல தாத்தா இல்லாம இருக்கிறது எனக்குப் பிடிக்கலை. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தாத்தா கூட வாக்கிங் போகாமலிருந்ததை நினைச்சா அழுகையா வந்துச்சு. படிக்க உட்கார்ந்தா எதுவும் மனசுல ஏறலை. தாத்தா ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டதை சுபா, வரலட்சுமி, தாமரைக்கனிக் கிட்ட சொன்னேன். அவங்க என்னை சமாதானப்படுத்துனாங்க. தாமரைக்கனி அவங்க தாத்தா உடம்பு சரியில்லாம போன வருசம் இறந்து போனதைச் சொன்னா. எனக்கு பயமாயிடுச்சி. வாரக் கடைசி நாள்ல ஸ்கூல்லேயே இருக்கச் சொல்லி அம்மா சொன்னாங்க. அம்மா வந்து என்னை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போனங்க. ஆஸ்பத்திரியில தாத்தாவைப் பாத்ததும் எனக்கு கஷ்டமாயிடுச்சு. அவரு மூச்சு விட கஷ்டப்பட்டதை பாக்குறப்ப எனக்கு அழுகையா வந்துச்சு. தாத்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *