எதிர் வீட்டு எதிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 4,438 
 

சேகர், ஜானகி இடிந்து போனார்கள்.

அவன் ஆத்திரத்துடன் கூறியது இன்னும் அவர்கள் காதுகளில் ரீங்காரித்தது.

ஒரு சில வினாடிகளுக்கு முன்தான்…பெண்ணின் அண்ணன் அரவிந்தன் வந்தான் .

“வாங்க”ன்னு சொல்லி உபசரிப்பதற்கு முன்பே….

“உங்க தம்பி.. தங்கக் கம்பி. மனநிலை சரி இல்லாதவராமே ! போன வருசம் தஞ்சாவூர் மெடிக்கல்ல வைச்சு வைத்தியம் பார்த்தீங்களாம். இருபது பவுன் நகை போட்டு, அம்பதாயிரம் ரொக்கம் கொடுத்து, அம்பதாயிரத்துக்கு சீர்வரிசை செய்து தள்ளிவிட எங்க பொண்ணு ஒன்னும் நொண்டி முடமில்லே. இப்படி ஒட்ட வச்ச ஓட்டைப் பாத்திரத்துக்கு கட்டிக் கொடுக்க ஒன்னும் அவசர,அவசியமுமில்லே. பொண்ணு பத்தரை மாத்துத் தங்கம். விசயத்தை மறைச்சு இவ்வளவு தூரம் பேச்சு வார்த்தை நடத்தி, நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்து வஞ்சகம் பண்ணின நீயெல்லாம் ஒரு மனுசனா..? இந்த நிமிடத்திலிருந்து நமக்குள்ள பேச்சு வார்த்தை முடிஞ்சு போச்சு. என் தங்கச்சி உன் தம்பிக்கில்லே. வர்றேன். !”அதிரடியாய் அறிவித்துவிட்டு அகன்றான்.

இந்த திடீர் அதிரடியால் அவர்கள் இடியாமல் என்ன செய்வார்கள்…?

சிறிது நேர சுதாரிப்பிற்குப் பின்….

“ஆக… திருமணம் நின்று போய் விட்டது!” சேகருக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது.

தலையைக் கவிழ்த்துத் தரையைப் பார்த்தான்.

அந்த ஆள் சொன்னது அத்தனையும் உண்மை. ஆனால் இப்போது பொய். !

இவனின் தம்பி தனசேகரன் படித்து, படம் பெற்று வேலைக்காக அலைந்தான். நிறைய நேர்முகத் தேர்வுகளில்….எத்தனையோ கசப்பான அனுபவங்கள், ஏமாற்றங்கள் அவன் மனதை மிகவும் பாதித்து, அலைக்கழித்தது. முடிவில் மனதை விட்டுவிட்டான். மன நோயாளியாகி விட்டான். தஞ்சாவூரில் சென்று வைத்தியம் பார்க்க ஆறே மாதத்தில் ஆள் பழைய நிலைக்கு வந்துவிட்டான். அதற்கு அடுத்த மாதத்திலேயே வேலை கிடைத்துவிட்டது.

முப்பது முடியப்போகும் அவனுக்கு இனியும் திருமணம் தள்ளி வைக்க முடியுமா…?! கரும்புள்ளியை மறைத்து பெண் பார்க்க உடனே இந்த வரன் கிடைத்துவிட்டது.

எல்லாம் சரி வரும்போது தற்போது…. வெண்ணெய் திரண்டு வர… தாழி உடைந்த கதையாகிவிட்டது.

“என்னங்க யோசனை..?”ஜானகி கணவனைப் பார்த்தாள்.

“யார் சொல்லி இருப்பா ஜானகி..?”

இவன் மனைவியைப் பார்த்தான்.

“எதிர் வீட்டுக்காரன்தான் நம்ம பரம எதிரியாச்சே. அவனைத் தவிர வேற யார் சொல்லி இருப்பா..?”- சொன்னாள்.

இது யோசிக்கப்பட வேண்டிய விசயம்.

இவனுக்கும் அவனுக்கும் ஜென்மப் பகை. பேச்சு வார்த்தைக் கிடையாது.

இவன் கொஞ்சம் வசதியோடு வாழ்கிறானே !….என்று அவனுக்குப் பொறாமை.

இதனால்….ஒரு உருப்படாத விசயத்திற்கு ஒரு நாள் அவன் சேகரிடம் வீணாக வம்பு வளர்த்து… ஆய் ஊய் என்று கத்தி………கை, கால் துக்கினான்.

இடையில் புகுந்த தனசேகரன் அவனை அடித்து உதைத்து கீழே தள்ளி நொறுக்கி விட்டான்.

அதிலிருந்து அவன் எதிரியாகிவிட்டான். ஆக மாட்டானா பின்னே..?!

அவன் இப்போது அடித்தவனைப் பழி வாங்கி விட்டான். !

“சொல்லி இருக்கலாம் ஜானகி.”- சேகர் மெல்ல சொன்னான்.

“இப்பவே எழுந்து போய் ஏன்டா இப்படி சொன்னேன்னு கேளுங்க..”அவள் ஆத்திரப்பட்டாள்.

”வேணாம் !”

“என்ன பயமா…?”

“பயமில்லே ஜானகி. அவன்தான்னு நிரூபிக்க வழி..?”

”………………………..”

“என்ன பதில் சொல்லுவே..? எதிரி, பேச்சு வார்த்தை இல்லேன்னா எல்லாம் சொல்லிவிட முடியுமா..? உன் வீட்டு மேல கண்கொத்தி பாம்பா இருந்து எல்லா விசயத்திலும் தலையிட எனக்கென்ன தலையெழுத்தா…? உன் வீட்டுல பிரச்சனைன்னா… எதிரி என்கிறதினால என்ன வேணுமின்னாலும் கேட்டுடறதா..? இது வீண் வம்பு. வெட்டி சண்டை ! ன்னு எகிறுவான் ஜானகி. ”

இவளுக்கும் புரிந்தது.

“உண்மைதான். அவன்தான் சொல்லி இருப்பான்னு நல்லா தெரியுது. இருந்தாலும் நிரூபிக்க வழி இல்லாம கேட்க முடியல. ச்சே..!”சளித்தாள்.

“கெட்டது செய்தா அனுபவிப்பான். அவனும் மூணு பொண்ணு வச்சிருக்கான்.”சேகர் சொன்னான்.

“ஆமாம்ங்க. இன்னைக்கு அடுத்தவனுக்கு வெட்டுற குழி. நாலைக்குத் தனக்கு என்கிறது கண் கூடு.! அந்த ஆள் மொகத்துல கரியைப் பூசுறாப்போல இன்னும் எண்ணி பத்து நாட்களுக்குள்ள தம்பிக்குத் திருமணம் முடிக்கணும் ! ..”சொல்லி ஜானகி புசுபுசு என்று மூச்சு விட்டாள்.

“சபதம் சரி. ஆனால் எப்படி முடியும்..?” என்றான் சேகர்.

“முடியும் ! ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொன்னான். நாமதான் வேத்து சாதிக்காரி வேணாம்ன்னு கண்டிச்சி, கறார் பண்ணி இருக்கோம். அவளையே பேசி முடிக்கலாம்.

“ஜானகி..!!”

“ஏன் அலர்றீங்க…? தம்பி விஷயம் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சு தம்பட்டம் ஆகிப்போச்சு . இனி பொண்ணு கிடைக்கிறது கஷ்டம். எப்படி, எங்கே பொண்ணு பார்த்து முடிச்சாலும் நம்ம எதிரி மூக்கை நுழைச்சி கெடுத்துடுவான். மான அவமானம்தான் மிஞ்சும். இவனுக்குத் திருமணம் முடிக்க இதுதான் வழி. சாதியாவது, மதமாவது,…”ஜானகி தீர்மானமாகச் சொன்னாள்.

“சரி”சேகர் தலையாட்டினான்.

ஜானகி சபதம் போட்டாற்போல்… எண்ணி பத்தே நாட்களில் அந்தப் பெண்ணைப் பேசி முடித்து திருமணத்தை முடித்துவிட்டார்கள்.

முதலிரவு….

“எப்படி நம்ம யோசனை..?”கேட்டுக்கொண்டே….பட்டுப் புடவை சரசரக்க, புதுத்தாலி மினுங்க…நிர்மலா சென்று தன் காதல் கணவன் தனசேகரன் அருகில் நாணத்துடன் அமர்ந்தாள்.

“என்ன..?”

“நான் பொண்ணு வீட்ல போய் உங்களைப் பத்தி வத்தி வைக்கலேன்னா நமக்குத் திருமணம் நடக்குமா..?”என்று சொல்லி அவன் மார்மீது சாய்ந்தாள்.

“ஆமாம் நிர்மலா!” என்ற அவன் அவளை ஆசையாக அணைத்தான். ஆரத்தழுவினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *