லட்சத்தை விட பெரியது கோடி!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,833 
 

­ஒரு பழைய கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது, “பாபுஜி முதியோர் இல்லம்!’
குணா போன போது, முன்புற தோட்டத்தில், அங்கும் இங்குமாக அமர்ந்து, பேசிக் கொண்டும், நடந்து கொண்டும் இருந்தனர் முதியோர்.
அவனது பெரியப்பா, ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
அந்த இடத்தில், அந்த நிலையில் அவரைப் பார்க்க வேதனையாக இருந்தது.
லட்சத்தை விட பெரியது கோடி!“யாரைப் பார்க்கணும்…’ என்று விசாரித்து, உள்ளே விட்டனர்.
அவனை சற்றும் எதிர்பாராத வடிவேல், முதலில் திகைத்து, பின் சுதாரித்து, “”வா குணா…” என்றார்.
“”நான் ஒருத்தன் இருக்கேன்ற நினைப்பே இல்லையா உங்களுக்கு… வீட்ல பிரச்னைன்னா நேரா இங்கே வந்திடறதா… நம்ம வீட்டுக்கு வரவேண்டியது தானே!” உரிமையோடு கடிந்து கொண்டான் குணா. “”உட்கார்…” என்று சொல்லி, பக்கத்து இருக்கையை காட்டினார்; தளர்ந்திருந்தார்.
“”எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை குணா,” என்றபடி, படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்து, “”ஓய்வா இருக்கலாமேன்னு, நானாத்தான் இங்க வந்து இருக்கேன்… வீட்ல எல்லாரும் சவுக்கியமா? ராதிகா, குழந்தைகள்…” உள்ளடங்கிய குரலில் விசாரித்தார்.
“”நீங்க இங்க இருக்கிறதா கேள்விப்பட்டதிலிருந்து, யாருக்கும் மனசு சரியில்லை. உங்களை கூட்டிகிட்டு போறதுக்குத்தான் இங்க வந்திருக்கேன். உங்க உடமையை எல்லாம் எடுத்துக்குங்க… நான் வார்டனைப் பார்த்துட்டு வர்றேன்…” என்று நகர்ந்தவனை தடுத்தார்…
“”இல்லைப்பா… நான் எங்கும் வரலை… யாருக்கும் நான் பாரமாயிருக்க விரும்பலை… இங்கயே இருந்துக்கறேன்… மாதந்தோறும் பணம் அனுப்பிடறான் ராமு; அடிக்கடி வந்து பார்த்துக்கறான். நான் போய் இருக்கணும்ன்னா பெத்த மகனான ராமுகிட்டதான் இருக்கணும்; அதை விட்டுட்டு, உன்னோடு வந்தால், அது சரி வராது.”
“”எல்லாம் தெரிஞ்சுகிட்டுத்தான் வந்திருக்கேன் பெரியப்பா. ஒற்றைக் காசு கூட தரமாட்டேன்னு அவன் விரட்டியதையும், அக்கம் பக்கத்தவங்க பரிதாபப்பட்டு உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததையும் கேள்விப்பட்டு, அவன்கிட்ட போய் சண்டை போட்டுட்டுத்தான் வர்றேன். அவன், இப்ப பழைய ராமு இல்லை பெரியப்பா; அவனுக்கு தன்னலம் அதிகமாயிடுச்சு… அவன் மட்டுமா உங்களுக்கு பிள்ளை; நான் இருக்கேன்… நீங்க, என்னை மறந்தாலும், நான், உங்களை மறப்பேனா பெரியப்பா…”
அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை; அவனை நிமிர்ந்து பார்த்த கண்களில் கண்ணீர்; திடுக்கிட்டான்.
“”ஏன் அழறீங்க… அதான் நான் வந்திட்டேன்ல…” என்று ஆறுதல் சொல்லி, எழுந்து, இல்லத்தின் நிர்வாக அலுவலகம் நோக்கி போனான் குணா.
ஆட்டோ வரும் ஓசை…
கதவை திறந்தே வைத்திருந்தாள் ராதிகா.
ஆட்டோவிலிருந்து ஒற்றை சூட்கேசை கையில் எடுத்துக் கொண்டு, பெரியப்பாவை கைத்தாங்கலாய் இறக்கி, அழைத்து வந்தான் குணா.
“”வாங்க மாமா..” என்றபடி பெட்டியை வாங்கி, வரவேற்றாள் ராதிகா.
குழந்தைகளின் அறையை, அவருக்காக ஒதுக்கி, சுத்தம் செய்து வைத்திருந்தாள். நேரே அங்கு அழைத்து போய், கட்டிலில் உட்கார வைத்தான்.
“”இனி, இது உங்க வீடு; நீங்க சுதந்திரமாக இருக்கலாம். வேண்டியதை உரிமையோடு கேட்கலாம். என்னைக்காவது ஒருநாள், ராமு, தன் தவறை உணர்ந்து, அவனுக்காக நீங்க பட்ட சிரமங்களை எல்லாம் எண்ணி, வருந்தி வருவான். அப்படியே வராமல் போனாலும், நான் இருக்கேன்; கடைசி காலம் வரை காப்பாத்துவேன்,” என்றான். அவர், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இரவு…
குழந்தைகள் உறங்கியபின், ராதிகா கேட்டாள்…
“”அவர், எந்த காலத்துல உங்களுக்கு லட்ச லட்சமா பணத்தை கொட்டிக் கொடுத்து, படிக்க வச்சு ஆளாக்கிட்டார்ன்னு, நன்றிக் கடனுக்கு இங்கே அழைச்சிட்டு வந்து வச்சிருக்கீங்க… எல்லாத்தையும் தன் பேர்ல எழுதி சுருட்டிக்கிட்டு, நட்டாத்ல விட்டவர்தானே… எந்த பிள்ளைக்காக ஓடி, ஓடி சொத்து சேர்த்தாரோ, அந்தப் பிள்ளையே அவரை கைவிட்ட பிறகு, உங்களுக்கென்ன தலையெழுத்துன்னு கூட்டிகிட்டு வந்திருக்கீங்க…” என்று கேட்டாள்.
அவனால், சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
இரண்டு கைகளால் முகத்தை பொத்திக் கொண்டான்; யோசனைக்குள் விழுந்தான்.
நாற்பதாவது வயதின் தலை வாசலில் நிற்பவன் குணா.
அவன் கடந்து வந்த வழி நினைத்தான்…
அவன் அம்மா, காமாலையில் விழுந்து, இறந்து போனாள்.
அப்போது, குணாவின் வயது ஏழு; கிராமத்து பள்ளிக் கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா வெகுளி; சூது வாது தெரியாத ஆள். பசியைத் தவிர, வேறொன்றைப் பற்றிய அறிவும் இருக்காது; தெளிவும் இருக்காது. யார் அழைத்தாலும் போய், சொன்ன வேலைகளை செய்து, கொடுத்ததை வாங்கிக் கொண்டு வருவார். அது, அடுத்த வேளைக்கு அரிசி, பருப்பு வாங்கத்தான் சரியாக இருக்கும்.
அப்பா சாமர்த்தியம் இல்லாதவர் என்பதால், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட யாரும் முன்வரவில்லை; அதைப் பற்றி, அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை.
ஆரம்பத்தில், ஒரு பாட்டி வந்து, சமைத்து கொண்டிருந்தாள்; தள்ளாமையால் வருவதை நிறுத்திக் கொண்டாள்.
பிறகு, அப்பாவும், மகனுமாக சேர்ந்து, பொங்கித் தின்றனர்.
இளம் வயதில், பெரும்பாலும் விறகு பொறுக்குவது, புகைய புகைய அடுப்பு பார்த்து பெருமூச்சு விடுவது, நல்ல துணிக்கும், சாப்பாட்டுக்கும் ஏங்குவது என்பதாகத்தான் இருந்தது.
சிரமமான நாட்கள் அவை.
அந்த நாளில், சில்லென்று தூறலாய் கொஞ்சம் சந்தோஷம் இருந்ததென்றால், அது, பெரியப்பா கொடுத்ததாகத்தான் இருக்கும்.
பெரியப்பா ஊருக்கு வரும்போதெல்லாம், அவனுக்கு உற்சாகம்தான். பாங்கில் வேலை கிடைத்தது. அந்த காலத்திலேயே திருவள்ளூரில் வீடு கட்டி செட்டிலாகி இருந்தார்.
அவர் வந்து போகும் போதெல்லாம், ஊரில் முணுமுணுப்பு இருக்கும்.
அவனுக்கு புரியாது; அப்பாவும் ஒன்றும் சொன்னதில்லை.
வரும்போது இனிப்பு, காரம், பிஸ்கட், பழம் என்று வாங்கி வருவார்.
பக்கத்தில் அமர்ந்து, வாஞ்சையுடன் தலையை கோதிவிட்டு, நலம் விசாரிப்பார். அவன் நன்றாக படிப்பவன் என்பதால், அதைப் பற்றி கேட்டு, பாராட்டுவார்.
பாடப் புத்தகங்களுக்கு அப்பால், கையில் கிடைக்கும் தினசரிகள், கதைப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அவனிடம் இருந்தது; அதைப் பற்றியெல்லாம் கவனமாக கேட்பார்.
அப்பாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, 10 – 20 என்று கையில் கிடைத்த ரூபாயை கொடுத்துவிட்டு போவார். போகும் போது, “பரிட்சை முடிஞ்சதும் திருவள்ளூருக்கு வாடா…’ என்று சொல்லிவிட்டு போவார்; அப்பாவும் அனுப்பி வைப்பார்.
ஊருக்கு போவதென்றால் அப்படியொரு குஷி.
“ஊருக்கு போறேன்…’ என்று, நண்பர்களிடம் பெருமையாக சொல்வான். அதிகபட்சம், ஒரு மாதம் கூட அவன் பெரியப்பா வீட்டில் இருந்திருக்கிறான்.
அவ்வளவு ரம்மியமான நாட்கள் அவை.
திருவள்ளூரை அடுத்த, மணவாள நகரில்தான் பெரியப்பா வீடு.
பெரியப்பா வேலை பார்க்கும் வங்கியும் பக்கம்தான்.
அவர் மகன் ராமு, இவனை விட பெரியவன். அவன், சில நேரம் பேசுவான்; பல நேரம் அலட்சியமாய் இருப்பான்; பெரியம்மா மையமாய் இருப்பாள். அதிகம் பேசுவதுமில்லை, பேசாமல் இருப்பதுமில்லை.
வீட்டில், தமிழ் நாளிதழ் வாங்குவார் பெரியப்பா.
சுடச்சுட அதை படிப்பதில் அவனுக்கு ஆர்வம். பேப்பர் வந்து விழுந்ததுமே, முதல் ஆளாக ஓடிப்போய் எடுத்து படித்துவிட்டு தான் மறுவேலை.
பெரியப்பா எழுந்து காபியுடன் பேப்பரை கையில் எடுக்கும் போது, அதில் வந்திருக்கும் செய்தியை எல்லாம், அவனே கடகடவென சொல்லி விடுவான்.
படிப்பதில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை பார்த்து, ரெக்ரியேஷன் கிளப்பிலிருந்தும், நூலகத்திலிருந்தும் பத்திரிகைகள், நாவல்கள் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் பெரியப்பா.
வீட்டில் சைக்கிள் இருந்தது. ரேஷன் கடைக்கு அனுப்புவார் பெரியம்மா. அப்போது, அந்த சைக்கிளில்தான் போவான். வேலையை முடித்து கொடுத்து விட்டால் போதும். மற்ற நேரங்களில் சைக்கிளில் ஊர் சுற்றி வருவான்.
அவ்வப்போது, அவனுக்கு செலவுக்கு இரண்டு ரூபாய் தருவார் பெரியப்பா. மொட மொடப்பான தாள். அதன் நாலு பக்கமும் பிளேடு போல் கூர்மையாக இருக்கும். அதை, இரண்டாக மடித்து பாக்கெட்டில் வைக்கவே மனசு வராது. அந்த புது நோட்டு கையில் இருக்கும் போது, மனசு சந்தோஷமாக இருக்கும்; சிரிப்பு வரும்; மறைக்க முடியாது.
“படத்துக்கு போறதுன்னா பத்திரமா போயிட்டு வா…’ என்பார்.
இரண்டு ரூபாயும், இரண்டு சிறகாகி விடும் அவனுக்கு; பறப்பான்.
லீவு நாள் முடிவதே தெரியாது; ஏன் முடிகிறது என்று ஏக்கமாக இருக்கும். ஒவ்வொரு கோடை விடுமுறையையும் கொண்டாட்டமாக ஆக்கிய அவர், அதற்காகவே அவருக்கு கடமைப் பட்டவனாக நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.
பெரியப்பா காட்டிய அன்பு, கொடுத்த சுதந்திரம்… மனசில் அவர் மேல் மாறாத அன்பை, மரியாதையை ஏற்படுத்தி விட்டது.
“உங்க தாத்தா இருந்த நாள்லயே உங்களுக்கு சேர வேண்டியதையும் சேர்த்து எழுதி வாங்கி, கையோடு வித்துட்டு போய், வீடு கட்டிகிட்ட ஆள்தான் உங்க பெரியப்பா…’ என்று, நாலு பேர் சொல்லி புரிய வைத்த போதும், அப்பாவைப் போலவே எனக்கும் அவர் மேல் வெறுப்போ, கோபமோ உண்டாகவில்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு, அவர் கைவிட்டு விட்டார்.
ஸ்கூல் நாளில் செலவுகள் குறைவு; ஏதோ கொடுத்து உதவினார். காலேஜ் செலவை ஏற்க முடியுமா?
“செய்யட்டுமே… என்ன அவர் சம்பாதிச்சதுலருந்து கொடுத்து குறையப் போவுது. உங்களுக்கு சேர வேண்டியதை கொஞ்சம் கொடுத்தாலும், படிப்புக்கு உதவுமே… போய்க் கேளு… இல்லைன்னா கேசு போடுவோம்ன்னு சொல்லு… தானா வழி பிறக்கும்…’ என்று ஊர்க்காரர்கள் உசுப்பினர்.
அப்படி கேட்பதற்கு அவனுக்கு பிடிக்கவில்லை. அவரை, தவறாகவே நினைக்கத் தோன்றியது கிடையாது. அப்படி எதிர்த்தால், அவர் மனதை புண்படுத்தினால், அது, அவருக்கு செய்கிற துரோகம் என்று கூட நினைத்தான். எவ்வளவு அற்புதமான நாட்களை அவர் கொடுத்திருக்கிறார். அதற்கு நன்றியோடு இருக்க வேண்டாமா…
பெரியப்பா ஊர் பக்கம் வருவதும் நின்று விட்டது.
அதுவும் நல்லதுதான்; சங்கடங்கள் தவிர்க்கப்பட்டன.
அவனும் பகுதி நேர வேலை செய்து, சம்பாதித்து, படித்து, ரயில்வே கார்டு வேலையில் சேர்ந்து, கல்யாணம் பண்ணி, இரண்டு குழந்தைகள் பெற்று, வீடு கட்டி, 15 வருடத்தில் நிறைய சம்பவங்கள், நிறைய அனுபவங்கள்.
எப்போதாவது எண்ணிப் பார்க்கும் போது, அந்த திருவள்ளூர் வாழ்க்கையும், பெரியப்பா கொடுத்த செலவுப் பணமும், சுற்றித் திரிய அனுமதித்த சுதந்திரமும் தான் மனதில் முந்தி எழுகிறது. கோடி கொடுத்தாலும் அந்த சுகம் வருமா? அதோடு ஒப்பிடும் போது, அந்த நாளில் அவர் எடுத்துக் கொண்ட லட்ச ரூபாய் பெருமான சொத்து, ஒரு தொகையே இல்லை.
சொன்னால் புரியுமா மனைவிக்கு… ஏறிட்டு பார்த்தான்…
“”குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; படிச்சதில்லையா நீ. அதிலும், பெரியப்பாவுக்கு வயதாகிப் போச்சு. இப்போ கணக்கு, வழக்கு பார்க்கிறது சரியில்லை. என் கவலையெல்லாம் பழசை நினைச்சு, இப்ப அவர் வருத்தப்படாம இருக்கணுமேங்கிறதுதான்,” என்றான்.
அவன் மனதை உணர்ந்த ராதிகா, இதமாக அவன் தலை முடியை கோதி கொடுத்தாள். அதற்கு, “கவலைப்படாதீங்க… அவருக்கு, அப்படி ஒரு எண்ணம் உண்டாகாத மாதிரி, பத்திரமாய் பார்த்துக்கலாம்!’ என்று பொருள்.

– என். லிங்கேஸ்வரன் (மே 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *