அவன்-இவள்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 5,052 
 

அறையைத் திறந்து கட்டிலைப் பார்த்ததும் நடேசுக்குச் சொர்க்கம் கிடைத்த மகிழ்ச்சி, மனசுக்குள் குதூகலம். அவ்வளவு பயணக்களைப்பு.

காலையில் பேருந்து ஏறி…. இரவு எட்டு மணிக்கு மதுரையில் இறங்குவதென்றால் சமானியப்பட்ட விசயமில்லை. உட்கார்ந்து பயணத்ததில் முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி. 28 வயது இளைஞனென்றாலும் எந்த வலியும் இல்லாமலிருக்குமா ?

‘உட்கார்ந்து வரும் பயணிகளுக்கே இந்த வலிகளென்றால் பாவம் ஓட்டுநர்கள் எப்படித்தான் ஓட்டுகிறார்களோ ?!’ என்று வலி ஆரம்பத்திலேயே அவர்கள் மீது நடேசுக்குப் பச்சாதாபம்.

இப்படிப்பட்ட தன் நிலைக்கு இதுவே வீடாய் இருந்தால் காயத்ரி உடலுக்கு இதமான சூட்டில் வென்னீர் வைத்திருப்பாள். அதோடு மட்டும் நிறுத்தாமல் ஆளை இடுப்பில் துண்டோடு உட்காரவைத்து உடம்பில் வலிகண்ட இடங்களிலெல்லாம் அதிகமாக ஊற்றி கை காலெல்லாம் இதமாய்ப் பிடித்துவிடுவாள். சுகம் அப்படியே சொக்கும்.!
பாவி ! பிள்ளைப் பேற்றிற்காக மாமனார் வீடு சென்றவள் இரண்டு மாதங்களாகியும் இன்னும் திரும்பவில்லை. தலைச்சன் பிள்ளை மூன்று மாதங்கள் கழித்துதான் மாமனார் மாமியார் முறையாகக் கொண்டு விடுவார்களாம். ! வறட்சி !!

நடேஷ் வெறுப்பும் கசப்புமாக கையிலுள்ள சூட்கேசை கீழே வைத்துவிட்டு, ”அப்பாடீ!” என்று கட்டிலில் உட்கார்ந்து சாய்ந்தான். மெத்தை அவனை மனைவி அளவிற்கு அரவணைத்து அணைத்தது..

சுகம். ”அம்மா ! ” வாய்விட்டு முணகி புரண்டு படுத்தான். போட்டிருக்கும் உடைகளைப் பற்றி கவலை இல்லை. இரண்டு சோடிகள் சூட்கேசில் மடிப்பு களையாமல் இருக்கிறது. காலை திருமணத்திற்கு அழகாய்ப் போட்டுச் செல்லலாம். கால்களை நீட்டி நன்றாக மல்லாந்து படுத்தான்.

அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.

எழாமல், ”வரலாம் !” குரல் கொடுத்தான்.

அழகான சீருடையில் ஹோட்டல் பணியாள்.

”சார் ! இரவு சாப்பாடு ? டிபன் ?”

”ஒரு அரை மணி நேரம் கழிச்சு நாலு இட்லி மட்டும் போதும்.”

”வேறு ஏதாவது ?”

”புரியலை ?”

”மது, மாது ?”

மது இவன் எதிர்பார்த்தது. மாது….? எதிர்பாராதது.!!

கேட்ட அடுத்த விநாடியே களைப்பு, வலியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போக இரண்டு மாதங்களாகப் பெண் வாடையே காணாத உடலுக்குள்ளும் மனசுக்குள்ளும் சின்ன மின்சார தாக்கம்.

”இருக்கா ? ” ஆச்சரியமாகக் கேட்டான்.

”எல்லா மாநிலமும் இருக்கு சார்.”

”எய்ட்ஸ் !! ”

”எங்க ஹோட்டல் அந்த விசயத்துல ரொம்ப கறார், சுத்தம். வாடிக்கையாளர்களை ஏமாத்தாது, கெடுக்காது.”

”பணம் ? ”

சொன்னான்.

”சரி. அப்போ அதை பத்து மணிக்கு அனுப்பிடு.”

அவன் வெளியேறவும் இவன் சுறுசுறுப்பாக எழுந்து குளியலறை சென்று திரும்பவும் டிபன் வரவும் சரியாக இருந்தது. சாப்பிட்டு கட்டிலில் அமர்ந்தான்.

மணி 9.30த் தொட்டது. வழியில் புத்தகம் வாங்கியது நினைவிற்கு வந்தது. ஆள் வரும்வரை படிக்க…. சூட்கேஸ் திறந்து எடுத்து ஒரு சில பக்கங்கள் புரட்டினான்.’விபச்சாரியிடம் விந்து விடுகிறவன் அவள் பாவத்தில் பங்கு பெறுகிறவனாவான். விந்து ஒரு அருட்பிரசாதம். பரமன் அதிகம் அதில்தான் இருக்கிறான். உரிய சக்தியின் அரோகணத்தோடு பரமனைச் சேர்ந்தால் அணு போல ஒரு சக்தி உருத்திரளும்’ – அமிர்தகடிகை

ஐந்தாவது பக்கத்தில் தட்டுப்பட்டதைப் படித்ததும் இவனுக்குள் சொரக். மீண்டும் படித்தான்.

‘நிஜம்.! விபச்சாரியைச் சேருகிறவன் அவள் பாவத்தில் பங்கு பெறுபவன்தான். அவள் செய்த, செய்யும் பாவச் செயல்கள் அத்தனையும் அவளைத் தொடுகிறவர்களையும் தொடும் என்பது உண்மை.!’ நினைக்க நெஞ்சு நடுங்கியது.

‘விந்து ஒரு அருட்பிரசாதம். !’ அந்த வார்த்தையே நெஞ்சில் ஒரு மாதிரியாக ஆழமாகப் பதிந்து அலைக்கழித்தது. அதை வீணடிப்பது எவ்வளவு மடத்தனம்.! நினைக்க அவனையும் அறியாமல் குப்பென்று வியர்த்தது. இப்போது என்ன செய்ய ? தடுமாறினான்.

நித்யா இப்போது கதவு திறந்து உள்ளே வந்தாள். கொடுக்கும் கூலிக்கு நிறைவான அழகில் இருந்தாள்;. நடேஷ் அவளை மிரட்சியோடு பார்த்தான்.

”என்ன அப்படிப் பார்க்குறீங்க ? ” அவள் இயல்பாய்க் கேட்டு கட்டிலுக்குச் சென்றாள்.

மனசுக்குள் பதற்றம். ”வே…வேணாம்.!” படுத்திருந்தவன் எழுந்தமர்ந்தான்.

”என்ன வேணாம் ?” அமர்ந்தாள்.

”நீ….ஈஈஈஈ…” வார்த்தை வராமல் குழறியது.

”ஏன் ?”

”வந்து… வந்து….” கையிலுள்ள புத்தகம் நழுவியது.

அதை சுவாதீனமாக எடுத்து படித்த நித்யா, ”உங்க மன மாற்றத்துக்கு இதுதான் காரணமா ? ” கேட்டாள்.

”அ….ஆமா.”

”இதன்படி பலான பெண்கள் பாவம் பண்றவங்க. சாக்கடை. அப்படித்தானே ?”

”ம்ம்ம்…”

”நூத்துக்குத் தொண்ணூறு சதவிகிதப் பெண்கள் இந்த தொழிலுக்கு விரும்பி வர்றதில்லே. தாங்க முடியாத வறுமை, கொடுமையான குடும்ப சூழ்நிலை, கடைசியாய்க் கடத்தல் என்ற காரணங்கள் என்பது நாடறிந்த உண்மை. அப்படி இருக்கும் போது இது எப்படி பாவமாகும். ? ”

”இதெல்லாம் ஒப்புக்கான காரணம்….வறுமையைத் துரத்த, குடும்பத்தைக் காப்பாத்த இவர்களுக்கு இதைவிட்டால் வேறு தொழிலே இல்லையான்னு எல்லாருக்குள்ளும் ஒரு கேள்வி இருக்கு. பெண்கள் எந்த வேலைக்குப் போனாலும் முதல்ல உடம்பைத்தான் கவனிக்கிறாங்க. அடுத்துதான் வேலை, திறமை, மத்தது. இதுக்கு விபச்சாரமே மேலில்லையா ? மேலும் இது கை மேல் காசு, உடனடி நிவாரணம்.”

”அப்புறம்… ?….. நான் பலான தொழிலை ஆதரிக்கலை அதுக்காக வக்காலத்தும் வாங்கலை. இதை சாக்கடை, சகதின்னு தள்றது ,பேசுறது தப்பு. காலங்காலமா விபச்சாரம் நல்லது செய்தும் வருது. ஒன்னு…. ஜனத்தொகை கட்டுப்பாடு. ரெண்டு…கணவன் மனைவி பிணக்குன்னா….. ஆண்களுக்கு வடிகால். சாதி மதம் இல்லே. பலான பெண்கள் நிறைய ராஜதந்திரி வேலைகளுக்கும் பயன்பட்டு இருக்காங்க,வர்றாங்க. பொது மக்களுக்கு நன்மையும் செய்திருக்காங்க. உதாரணம் புதுச்சேரியில ஆயி மண்டபம் வரலாறு. இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். எந்த வினைக்கும் எதிர் வினை உண்டென்கிற நியூட்டன் விதி இதுக்கும் பொருந்தும். இப்போ சொல்லுங்க பலான பெண்கள் பாவம் செய்தவர்களா, பாவப்பட்டவர்களா, சாக்கடையா, ?? ” கேட்டு பார்த்தாள்.

நடேசுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. யோசித்து ஒரு முடிவிற்கு வந்தவன், ”இந்த அமிர்த கடிகை வார்த்தைகளை நான் வாபஸ் வாங்கிக்கிறேன். பலான பெண்கள் பாவப்பட்டவர்கள் பாவம் செய்பவர்களில்லே. ஒத்துக்கிறேன். ஆனா நான் செய்யிறது பாவம். என் மனைவிக்குத் துரோகம். அதனால எனக்கு இதுல விருப்பமில்லே. உங்களை வெறுங்கையாய் அனுப்பறது பாவம். இந்தாங்க உங்களுக்கான கூலி. பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினான்.

அதை ஒரு விநாடி உற்றுப் பார்த்த நித்யா, ”உழைக்காம வாங்குற பணம் பாவம். நான் வர்றேன்.” எழுந்து வேகமாக வெளியே சென்றாள்.

நடேசு சிலையானான். அவள் சென்ற வாசலையே வெறித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *