ராதா கல்யாண வைபோகமே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 3,154 
 
 

“இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சுட்டு டம்பளரை குடுங்கோ .மளமளன்னு அலம்பி வெச்சுட்டு கிளம்பணும் .ஏற்கெனவே, சுமி ரெண்டு தடவை ஃபோன் பண்ணி ‘இன்னும் கிளம்பலையா’ன்னு கேட்டுட்டா..ஆமா”

பரபரப்புடன் பேசிய பானுமதியை கிண்டலுடன் ஏறிட்டார் பரசுராமன்.

“சரிதான்.இதோ, இங்கே இருக்கற வேளச்சேரிக்கு போக இத்தனை ஆர்ப்பாட்டமா ?.நாம என்ன அமெரிக்காவுக்கா போறோம்?”

“நமக்கு அமெரிக்காவும் ஒண்ணு தான்.வேளச்சேரியும் ஒண்ணு தான் .நீங்களே சொல்லுங்கோ .சுமி ஆத்துக்கு நாம இது வரைக்கும் எத்தனை தடவை போயிருக்கோம்?”

அவளும் அந்த புது வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகப்போறது .! .அவளும் , மாப்பிள்ளையும் நம்ம ரெண்டு பேரையும் கூப்பிட்டுண்டே தானிருக்கா?”
அவள் பேசி கொண்டிருந்த அக்கணம்.

உள்ளறையில் சார்ஜ் பண்ணுவதற்க்காக போடபட்டிருந்த அவளின் மொபைல் அலறவே, சட்டென்று அங்கிருந்து விரைந்தாள் அவள்.

வேளச்சேரியிலிருந்து மகள் சுமி தான் அழைத்தாள். இது மூன்றாவது தடவை!

“அம்மா.கிளம்பியாச்சா நீங்க ரெண்டு பேரும்?.ஆமா,கண்டிப்பாய் இங்கே வரேள் தானே?அதுலே எந்த சேஞ்சும் இல்லியே?”

“ஒரு சேஞ்சும் இல்லே.கண்டிப்பாய் வரோம். அதிலென்ன சந்தேகம் நோக்கு?. டாக்ஸி வரதுக்கு கொஞ்சம் லேட் ஆறது. வேற ஒண்ணுமில்லை.ஆமா, ஏண்டி இப்டி கேக்கறே?”

“அது ஒண்ணுமில்லம்மா, அப்பாவோட சுபாவம் தான் எனக்கு தெரியுமே. ஆத்தை விட்டு அப்பா லேசுல எங்கேயும் கிளம்ப மாட்டாரே ..அப்டியே கிளம்பினாலும் , எங்கேயும் தங்க சம்மதிக்க மாட்டாரே. எங்கே, திடீர்னு மூட் மாறி, பிளானை மாத்திட்டாரோ என்னவோன்னு ஒரு சந்தேகம் .அதான் கேட்டேன்!. இங்கே அனிருத் வேற ‘நீங்க ரெண்டு பேரும் எப்போ வருவேள்னு கேட்டு சதா நச்சரிச்சுண்டே இருக்கான்.நீங்க ரெண்டு பேரும் வரலைனா குழந்தை ஏமாந்து போயிடுவான்.ஆமா.”

பேரன் அனிருத் மட்டுமில்லை .சுமியும் கூட இவர்கள் இருவரும் அங்கே செல்லவில்லையென்றால் ஏமாந்து போய் விடுவாள் என்பதை .அவளின் பேச்சு தொனியிலிருந்தே நன்கு உணர்ந்து கொண்டாள் பானுமதி.

“பானு. டாக்ஸி வந்தாச்சு.”

ஹாலிலிருந்து பரசுராமனின் குரல் அசரீரியாய் ஒலிக்க.

மறுகணம் பரபரத்தாள் பானுமதி ..

“ஏய் சுமி .டாக்ஸி வந்துடுத்து போல இருக்கு .நாங்க கிளம்பறோம் . .நேர்ல பேசலாம்”

மொபைலையும் , சார்ஜரையும் எடுத்து கொண்டு அங்கிருந்து விரைந்தாள் பானு .

பரசுராமன்-பானுமதி தம்பதியர் திருவான்மியூரில் வசிக்கிறார்கள் .

அவர்களின் ஒரே மகள் சுமித்ரா ..மாப்பிள்ளை மதன் , மற்றும் நான்கு வயது பேரன் அனிருத் மூவரும் வேளச்சேரியிலுள்ள ஒரு கேட்டட் ( gated ) அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கிறார்கள்.

பார்க், ஜிம், நீச்சல் குளம், லைப்ரரி, கோயில் ( சிறிய பிள்ளையார் கோயில் ) , சூப்பர் மார்க்கெட் ..பெரிய ஃபங்ஷன் ஹால்.இப்படி சகல வசதிகளும் கொண்ட பெரிய அபார்ட்மெண்ட் அது ! .

ஆயிரத்து அறுநூறு சதுர அடியில் ..நல்ல விஸ்தாரமான பெரிய ஃப்ளாட் அவர்களுடையது . . .சுமியின் கணவன் மதன் , ஒரு மல்டி நேஷனல் கம்பெனியொன்றில் பொறுப்பான பதவி வகிக்கிறான்!

அவர்களின் ஒரே பையன் அனிருத்.மூன்று வயதாகிறது.

மதன் முக்கியமான ஆபீஸ் வேலையாக , இரண்டு நாட்களுக்கு முன்பு தான் டெல்லி சென்றான் .திரும்பி வர பத்து நாட்களாகும் .

ஒரு மாறுதலுக்காக , பெற்றோர் இருவரையும் தங்களுடன் வந்து இருக்கும்படி சுமி , மிகவும் வற்புறுத்தி கூற .. . .. பரசுராமனுக்கு இதில் கடுகளவேனும் உடன்பாடு இல்லை .மாறாக, பேரனையும் , அவளையும் திருவான்மியூருக்கு வந்து தங்களுடன் தங்கும்படி கூறினார் அவர் .. . .

காரணம் சாதாரணமாகவே பரசுராமன் தனது வீட்டை விட்டு அவ்வளவு லேசில் எங்கும் கிளம்ப மாட்டார் .அப்படியே கிளம்பினாலும் , இரவில் தங்க மாட்டார் .

உற்றார் , உறவினர் வீட்டு விசேஷங்கள் , கல்யாணங்கள் .இவ்வளவு ஏன் ..பெண் வீட்டு விசேஷங்கள் .எல்லாவற்றிலும் கூட , அந்த நேரத்துக்கு போய் தலையை காண்பித்து விட்டு .சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விடுவார் மனைவியுடன்! அது அவரின் சுபாவம்!

பானுமதிக்கு இன்னும் சற்று நேரம் இருந்து விட்டு வரவேண்டும் என்றிருக்கும் .என்றாலும் , கணவரின் குணமறிந்து அவருடன் அனுசரித்து சென்று விடுவாள்.

ஆனால் , இம்முறை வெகு அபூர்வமாக .தனது சுபாவத்தை மீறி . பெண் சுமி வீட்டில் அவர் தங்க சம்மதித்ததற்கு ஒரு காரணம் உண்டு .

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் , பரசுராமனும் , பானுமதியும் கபாலி கோயிலுக்கு சென்றிருந்தார்கள் ..

ஸ்வாமி தரிசனம் முடிந்து .பின் பிராகாரம் வலம் வந்து முடித்து விட்டு , இருவரும் அமர்ந்து கொண்டிருந்த போது , எதிர்பாராத விதமாக , பானுமதி, தனது .பூர்வீக கிராமத்தை சேர்ந்த . சிவாச்சாரியார் மகன். ராஜப்பாவை சந்திக்க நேரிட,

இருவரும் பேசிக்கொண்டிருந்த போது .பேச்சினூடே , இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் கிராமத்தில் நடைபெறவிருக்கும் ராதாகல்யாண வைபவத்தை பற்றி குறிப்பிட்டதோடு .

தன் பையிலிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து பரசுராமனிடம் கொடுத்து . அவர்கள் இருவரும் கண்டிப்பாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினான்.

அன்றிரவு பானுமதிக்கு உறக்கமே வரவில்லை.

தான் பிறந்து வளர்ந்த அந்த அழகான கிராமம், அவள் கண் முன்னே வந்து நின்றது!

எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்ற வயல்கள். ஊரின் .நடுவே ஒரு குளம்.குளக்கரையிலுள்ள அரச மரத்தடியில் சாதுவாக அமர்ந்திருக்கும் பிள்ளையார் .குளத்தை தாண்டி ..பெரிய தூண்களுடன் கூடிய திண்ணைகள் அமைய பெற்ற பெரிய வீடுகள் கொண்ட அக்ரஹாரம்..அந்த அக்ரஹாரத்தின் கோடியில் அமைந்துள்ள ராமர் மடம்

அதை தாண்டி சிவன் கோயில் .சற்று தூரத்தில் பெருமாள் கோயில் .! .பெருமாள் கோயிலிலிருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பள்ளிக்கூடம் .அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த மாரியம்மன் கோயில் .இப்படி ஒவ்வொன்றாய் அவளின் நினைவில் வந்து போனது ! ..

கூடவே, ஒவ்வொரு வருடமும் நடை பெறும் ராதாகல்யாணம் , சீதா கல்யாணம் வைபவ நிகழ்ச்சியை எண்ணி உற்சாகத்தில் குதியாட்டம் போட துவங்கியது அவளின் மனம்.!

அங்குள்ள .ராமர் மடத்தில் தான் ராதாகல்யாணம் , சீதா கல்யாணம் .மற்றும் பாட்டு கச்சேரி, ஹரிகதா முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மார்கழி மாதங்களில், தினந்தோறும் காலை வேளையில் , காலில் சலங்கை கட்டி .தலையில் சிவப்பு வஸ்திரத்தால் தலைப்பாகை ஒன்றை கட்டிக்கொண்டு , தோளில் ஒரு பித்தளை சொம்பை சிறு கயிற்றால் கட்டி .முன்பக்கம் லாவகமாக தொங்க விட்டபடி .ஒரு கையில் சிப்பளாக்கட்டையும் , மறு கையில் தம்புராவையும் மீட்டியபடி ,

“கிருஷ்ணா ராமா கோவிந்தா
ஹரே ராம கிருஷ்ணா கோவிந்தா”

என்று பகவத் நாமாவை பாடியவாறு உஞ்சவிருத்தி எடுக்கும் பாகவதர்களை , தன் கல்யாணத்துக்கு முன்பு அம்மாவுடன் சேர்ந்து எத்தனை தடவைகள் பிரதட்சணம் செய்து நமஸ்கரித்திருப்பாள் அவள் ?..
இப்போது அந்த காட்சிகள் பானுமதியின் மனத்திரையில் நிழல் படமாய் ஓடியது ..

கல்யாணத்துக்கு பின், குடும்பம் .குழந்தை. கணவரின் உத்தியோக நிமித்தமாய் ஊர் , ஊராய் சென்று குடித்தனம் .பின் பெண்ணின் படிப்பு .அவளுக்கு கல்யாணம் .இப்படி உழன்றதோடு மேலும் பெற்றோரும் காலமாகி விட்ட நிலைமையில். பிறந்த கிராமத்தோடு இருந்த தொடர்பு சுத்தமாய் அற்றுபோய் விட ..

நீண்ட வருடங்களுக்கு பின் இப்போது, எதிர்பாராத விதமாக ராஜப்பாவின் சந்திப்பு மூலம் மீண்டும் பழைய நினைவுகள் அடுக்கடுக்காய் இப்போது .அவளின் மனதில்!

பலவித எண்ண அலைகளில் மூழ்கியவாறு, படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பானுமதி , ஒரு கட்டத்தில் தன்னையுமறியாமல் உறங்கி போனாள் ..

ராதாகல்யாணத்துக்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கின்ற நிலையில் , பானுமதிக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் . ராதாகல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்கிற ஆசையும் சேர்ந்து , அவளை அலைக்கழிக்க துவங்கியது .

தன் உள்ளக்கிடக்கையை ஒரு நாள் கணவரிடம் வெளியிட்ட போது , தனக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் , அவளை மட்டும் சென்று விட்டு வரும்படி அவர் கூற.
அவரை , வீட்டில் தனியே விட்டு விட்டு செல்ல மனம் விருப்பமில்லாத நிலையில், என்ன செய்வது என்று பானுமதி யோசித்து கொண்டிருந்த போது தான் , மகள் சுமி , எதிர்பாராத விதமாக தன் வீட்டுக்கு வரும்படி அவர்களை அழைத்தாள்.

பேச்சினூடே, அவளிடம், பானுமதி, தான் மட்டும் கிராமத்துக்கு செல்லவிருப்பதை கூற.

உடனே சுமி , அப்பா அங்கே தனியே இருக்க வேண்டாம் .என்றும் . அவரை தான் பார்த்து கொள்வதாக கூறியதோடு மட்டுமின்றி,

தங்கள் வீட்டு காரிலேயே கிராமத்துக்கு சென்று விட்டு வரச் சொல்லி கூடவே தங்களுக்கு தெரிந்த டிரைவர் ஒருவரையும் ஏற்பாடு செய்வதாக கூறினாள்.

இது நாள் வரையிலும், தன்னிடம் எதையுமே வாய் திறந்து கேட்டறியாத பானுமதியின் இந்த ஆசையை பூர்த்தி செய்யும் பொருட்டு . மகள் சுமியின் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டார் பரசுராமன்.

பானுமதியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

நீண்ட நாட்கள் கழித்து தன் கிராமத்துக்கு செல்லப்போவதோடு. ராதாகல்யாண வைபவத்திலும் கலந்து கொள்ள போகிறோம் என்கிற எண்ணமே தேனாய் இனித்தது அவளுள்!

“ரொம்ப ரொம்ப ஸாரி பானு .என்னால தான் நீ ஊருக்கு போக முடியாம போயிடுத்து. நான் இப்டி பாத்ரூமில் விழுந்து காலை உடைச்சுப்பேன்னு கனவுல கூட நினைச்சு பாக்கலை மா .உன்னோட சின்ன ஆசையை கூட என்னாலே நிறைவேத்தி வைக்க முடியலையே பானு”

குரல் கம்ம பேசிய பரசுராமனை கனிவுடன் ஏறிட்டாள் பானுமதி .

“அச்சோ .மனசை போட்டு குழப்பிக்காதீங்கோ. நாம எதிர்பார்த்தா எல்லாம் நடக்கறது?. நான் ஊருக்கு கிளம்பி போன பிற்பாடு , உங்களுக்கு இந்த மாதிரி ஆயிருந்தால், சுமிக்கு தான் சிரமம்.அதோட, என்னாலேயும் அங்கே நிம்மதியாய் இருந்திருக்க முடியாது .அடுத்த வருஷம் போனா போச்சு”

ஆறுதலாய் பேசினாள் பானுமதி .

சுமி வீட்டுக்கு இருவரும் வந்த அன்று இரவு , பாத்ரூமுக்கு சென்ற பரசுராமன் , சற்றும் எதிர் திர்பாராத வகையில் கால் ஸ்லிப் ஆகி அங்கேயே விழ..

அவரின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் அங்கே சென்று .அவரை மெல்ல படுக்கையறைக்கு அழைத்து சென்று படுக்கையில் படுக்க வைத்தனர் .

நல்ல வேளை ..கால் ஃப்ராக்ச்சர் ஏதுமில்லை .வெறும் சுளுக்கு மட்டுமே!

என்றாலும், அவரால் எழுந்து தன்னிச்சையாக நடக்க முடியவில்லை! சற்று சிரமப்பட்டார் .இந்த மூன்று நாட்களாய் , பானுமதி அவரின் அருகிலேயே இருந்து , அவரை கவனித்து கொண்டதில் .இப்போது சற்று குணமடைந்து .வீட்டுக்குள்ளேயே ஸ்டிக் வைத்து மெல்ல நடக்க துவங்கினார் பரசுராமன்!

தன்னால் தான் பானுமதி ஊருக்கு போக முடியாமல் போய் விட்டது என்கிற குற்ற உணர்வில், பானுமதியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் பரசுராமன் !

அன்று காலை ஆறு மணி:

அனைவரும் உறங்கி கொண்டிருக்க .. வழக்கம் போல பானுமதி எழுந்து ,காலைக்கடன்களை முடித்து விட்டு , கிச்சனுக்கு சென்று ..காப்பி மேக்கரில் டிக்காஷனை போட்டாள்.

பின், அருகிலிருந்த ஜன்னலை திறந்த போது ..

சட்டென்று அவள் பார்வையில் பட்ட அந்த காட்சியை கண்டு ஒரு கணம் திகைத்து நின்று விட்டாள் அவள்!

அவள் ஃப்ளாட்டிற்கு சற்று தொலைவில் , பகவன் நாமாவை சொல்லியபடி .உஞ்சவிருத்தி எடுத்துக்கொண்டு சில பாகவதர்கள் வந்து கொண்டிருக்க.

பானுமதியின் உடலில் ஒரு வித பரவசம்!

“ஹே. கிருஷ்ணா பரந்தாமா”

அவளையுமறியாமல் அவள் வாய் முணுமுணுத்தது !

பின் நொடியில் தன்னை சுதாரித்து கொண்டு .துரிதமாக செயல்பட துவங்கினாள் .அவள் .

அடுத்து வந்த சில நொடிகளில் , பானுமதி உஞ்சவிருத்தி நடக்கும் இடத்தில் ,நின்றிருந்தாள் .!.

அவளின் அருகில் இன்னும் சில மாமிகள் !

ஒரு சிறிய பையில் போட்டு கொண்டு வந்த அரிசியை , உஞ்சவிருத்தி சொம்பில் போட்டு விட்டு ..பின் , உஞ்சவிருத்தி எடுக்கும் அந்த மகானுபாவர்களை வலம் வந்து நமஸ்கரித்து விட்டு .மிகுந்த மனநிறைவுடன் பானு திரும்பிய அக்கணம்..

“மாமி .நீங்க இங்கே புதுசாய் குடி வந்திருக்கேளா ?”

புன்னகையுடன் தன்னை எதிர்கொண்ட அந்த மாமிக்கு , மெல்லிய குரலில் பதிலளித்தாள் பானுமதி .

“இல்ல மாமி .இங்கே என் பொண்ணாத்துக்கு வந்துருக்கேன் சி பிளாக்மூணாவது மாடியில இருக்கோம். ஆமா, இங்கே யாராத்துலயாவது ராதாகல்யாணம் பண்றாளா?”

பதிலுக்கு அந்த மாமி புன்னகை மாறாத புன்னகையுடன்,

“ஆமாம் மாமி, அது சரி.நீங்க சி பிளாக்கா?.நாங்களும் அந்த பிளாக் தான்.முதல் மாடியிலே இருக்கோம்”

என்றவள் பின் தொடர்ந்து,

“மாமி பி பிளாக்கிலே ராஜம் மாமின்னு ஒருத்தர் இருக்கா.அவாத்துல தான் ராதாகல்யாணம் பண்றா! அவா இங்கே வந்து ரெண்டு வருஷம் ஆறது.இதுக்கு முன்னாடி பூனாவிலே இருந்தாளாம் .அங்கே வருஷா வருஷம் தவறாம ராதாகல்யாணம் பண்ணுவாளாம் .போன வருஷம் இங்கே பிரமாதமாய் பண்ணினா.இதோ இந்த வருஷமும்! ஏதோ, அவாளாலே எங்களுக்கெல்லாம் அதை பார்க்க ஒரு கொடுப்பினை ”

கேட்டு கொண்டிருந்த பானுமதியின் உடல் வியப்பில் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது!

அந்த மாமி மேலும் தொடர்ந்தாள்.

“மாமி .திப்பிராஜபுரத்திலேருந்து ராமச்சந்திர பாகவதரும் ..அவரோட ஒரு பத்து பேரும் வந்துருக்கா..இங்கே ஃபங்ஷன் எல்லாம் நடத்தறதுக்குன்னே ஒரு பெரிய ஹால் இருக்கு .அங்கே , நூறு பேருக்கு மேல தாராளமாய் உக்காரலாம் .அபார்ட்மென்ட்லேருந்து நிறைய பேர் வருவா.! .இன்னிக்கு கார்த்தாலே பத்து மணிக்கு அஷ்டபதி பாட ஆரம்பிச்சா, மத்தியானம் ரெண்டு மணியாயிடும் முடியறதுக்கு .! அப்புறம் ,நாளைக்கு கார்த்தாலே கல்யாண அஷ்டபதி பாடி . முத்துக்குத்தல் பாடி .ஸ்வாமிக்கு சமர்ப்பணம் பண்ணினதும் . மங்களாஷ்டகம் பாடி ..ராதா கிருஷ்ணருக்கு மாங்கல்யதாரண விவாஹம் !.

அப்புறம் , ‘ கல்யாண கிருஷ்ணா கமனீய கிருஷ்ணா ‘ நாமாவளி பாடி, ஆஞ்சநேயர் பேர்ல பாட்டு பாடி . அப்புறம் வடைமாலை சாற்றி . ராதாகல்யணத்தை முடிச்சுடுவா.. அப்புறம் பாகவதாளுக்கு மரியாதை பண்ணுவா.! அதுக்கப்புறம் எல்லோருக்கும் வடை, பாயசத்தோட சாப்பாடு ..எப்படியும் ஆத்துக்கு போக மூணு மணிக்கு மேல ஆயிடும் . .”
பேசிக்கொண்டே வந்தவள் முத்தாய்ப்பாய் ,

“மாமி. நீங்களும் வாங்கோளேன் .நா வேணா உங்களை வந்து அழைச்சுண்டு போறேன் .”

அந்த மாமி பேச பேச, பானுமதியின் தேகமெங்கும் ஒரே பரவசம்!.

உணர்ச்சிகளின் கலவையாய் அவள் எதுவும் பேச முடியாமல் , உறைந்து போய் நின்றிருந்த அக்கணம்.

“அடடே, நீ இங்கேயா இருக்கே ?.ரொம்ப நாழியாய் உன்னை காணலியேன்னு தேடினேன் .. நீ ..இங்கேயிருக்கேன்னு சொன்னா.”

முதுகுக்கு பின்னாலிருந்து வந்த ஆண் குரல் கேட்டு சட்டென்று திரும்பினாள் பானுமதி..

அங்கே சிரித்த படி ஒரு ஆண்மகன் நின்றிருந்தார்..

நல்ல களையான முகம் .கண்களில் அப்படி ஒரு தீக்ஷண்யம் அவருக்கு!

“தோ வந்துட்டேன் .இந்த மாமியோட சித்த நாழி பேசிண்டுருந்தேன்..”

பரபரத்த அந்த மாமி , பின் பானுமதியை பார்த்து , மெலிதான புன்னகையுடன்,

“இவர் தான் எங்காத்து மாமா.பேரு கிருஷ்ணமூர்த்தி ! ..நான் அனுராதா.! எல்லாரும் என்னை ‘ அனு அனுன்னு ‘ தான் கூப்பிடுவா.ஆனா, இவர் மட்டும் என்னை ராதேன்னு செல்லமாய் கூப்பிடுவார். சரி, நாங்க கிளம்பறோம்! மாமி .கிளம்பி ரெடியா இருங்கோ .நானே உங்க ஃப்ளாட்டுக்கு வந்து உங்களை அழைச்சுண்டு போறேன் .”.

“ஆமாம் மாமி .கண்டிப்பா வாங்கோ”

மாமியை தொடர்ந்து இப்போது அவரும் அழைக்க.

புன்னகையுடன் இயல்பாக சொல்லி விட்டு சென்ற அவ்விருவரையும் கண்டு வாயடைத்து போய் நின்று விட்டாள் பானுமதி !..

கண நேரத்தில் அவளின் மனதில் ஆயிரமாயிரம் எண்ண அலைகள் !

‘ராதா-கிருஷ்ணமூர்த்தி’

அவளின் மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்!

ஏனோ அவளின் கண்களுக்கு அவ்விருவரும் ராதா-கிருஷ்ணராக காட்சியளித்தனர் இப்போது.

‘ஹே ..கிருஷ்ணா.மதுசூதனா . பக்தவத்சலா . . .ஸர்வவ்யாபியான உன் கருணையை என்னவென்பேன்? உன் கல்யாண வைபவத்தை காண ஊருக்கு செல்ல முடியவில்லையே என்கிற என் தாபத்தை போக்கும் விதமாய் , இங்கேயே அந்த வைபவத்தை நடக்க வைத்து நீயும், உன் பிரிய ராதையும் வந்து என்னை அழைத்த உன் லீலையை என்னவென்பேன்?’

கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க திராணியற்றவளாய் கற்சிலையாய் நின்றாள் பானுமதி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *