பட்டால் புரியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 2,178 
 

வட இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரெயில் அது. சாதாரண வகுப்பில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தாள நயத்துடன் தடக்..தடக் என்ற சத்தம் கூட அந்த இரவில் படுத்து உறங்குபவர்களுக்கு தாலாட்டாக இருந்தது.. ஆயிற்று ஒன்றரை நாட்கள் ஆகி விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் பம்பாயை அடைத்து விடலாம்.

அந்த தூக்க கலக்கத்திலும் விலுக்கென்று நிமிர்ந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆளை பார்த்து நிம்மதியாகி மீண்டும் உறக்கத்திற்கு சென்றவன் அப்படியே அந்த ஆளின் மேலேயே சாய்ந்தும் கொண்டான். அவன் நினைவில் கூட அப்பாவின் கூச்சல் கேட்டது.

அப்பா மனிதனா அவர், எதற்கெடுத்தாலும் அடி, கையில் கிடைத்த்து எல்லாவற்றையும் எடுத்து அடிப்பார். அம்மா அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டும் இருப்பாள். சில நேரங்களில் அப்பாவிடம் போட்டும் கொடுப்பாள்.

அப்படி என்ன செய்துவிட்டேன், இவர்கள் இப்படி போட்டு அடிக்கிறார்கள், பக்கத்து பையன் புத்தக பையிலிருந்து பணத்தை எடுத்து வந்து விட்டேனாம், அதற்கு இந்த குதி குதிக்கிறார்கள். அவனே வீட்டில் இருந்து தெரியாமல் எடுத்து வந்த பணம்தான், அவன் என்னிடம் பெருமையாக சொன்னான். நான் அவன் பாத்ரூம் போகும்போது பையை திறந்து எடுத்து கொண்டு வந்து விட்டேன். இது எப்படி தப்பு என்கிறார்கள். சரி நான்தான் திருப்பி கொடுத்துடறேன்னு சொன்னாலும் போட்டு அடித்தால் எப்படி?

அது மட்டுமா? எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிகிட்டே இருக்கறது. அவன் படிக்கிறான், இவன் படிக்கிறான், நீ எருமை மாடு மேய்க்கறதுக்குத்தான் லாயக்கு, இப்படி சொல்லி சொல்லி என்னை வதைக்கிறது.

அப்படியென்ன நான் சின்ன பையனா, எட்டாம் வகுப்பு வந்துட்டேன். எனக்கு தெரியாதா நல்லது கெட்டது, ஏதோ இவங்க எனக்கு அறிவுரை சொல்லறதும், பிரண்ட்ஸ்கிட்ட என்னை பத்தியும் குறை சொல்றதும். இவங்க இரண்டு பேருக்கு பயந்துட்டுத்தான் பிரண்ட்ஸ்க வீட்டுக்கே வர்ரதில்லை.அப்படியும் ஒருத்தன் இரண்டு பேரு தவறி வந்துட்டா போச்சு, அவனை கேள்வி மேல கேட்டு, விரட்டி அடிச்சர்றது. சே போதுண்டா சாமி நான் பட்ட பாடு..

இப்ப கால் பரீட்சையில எல்லா பாடத்துலயும் பெயிலாயிட்டேன், அதுக்கு என்னமா அடிக்கிறான், இந்த ஆள். நல்லவேளை இந்த அங்கிள் மட்டும் அங்க வராம இருந்திருந்தா என்னை கொன்னே போட்டிருப்பான். ராமையா விடு, இப்படி போட்டு அடிக்கிறே? குச்சியை பிடுங்கன பின்னாடிதான் விட்டான்.

இவனை உருப்படவைக்க நான் படாதபாடு படறேன், என்னமோ அப்படியே பாசமா பேசற மாதிரி இந்த அங்கிள் கிட்ட சொல்றான்.

நல்ல வேளை இந்த அங்கிள் சொல்லிட்டாரு, இனிமே அவனை அடிக்காதே, நான் கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் பாம்பேல வச்சுக்கறேன்.

ஹையா பம்பாயா? நான் இந்த ஊரை பத்தி கேள்விப்பட்டிருக்கேன், இப்ப நானும் பாக்கப்போறேன். நினைக்கற போதே மனசுக்குள்ள சந்தோசம் வந்துடுச்சு. ஆனா இந்த ஆள் அதெல்லாம் வேண்டாமுன்னு சொல்றாரு. இந்த அங்கிள் மறுபடி அவர்கிட்டே ஏதோ சொல்லி சமாளிக்கறாரு.

அப்பாடி எப்படியோ இந்த அங்கிள் கூட வந்துட்டோம். அவர்கூட இரெயில் ஏறுனதுல இருந்து எவ்வளவு பாசமா இருக்கறாரு. தம்பி என்ன சாப்பிடறே? இப்படி ஒவ்வொரு இடத்துலயும் இரெயில் நிக்கும் போதும் கேட்டு வாங்கி தர்றாரு.இந்த இரண்டு நாள் போனதே தெரியலை. அதுவும் இந்த அங்கிள் கூட இருக்கறது சுகமாத்தான் இருக்கு. தூக்கத்திலும் அப்படியே பக்கத்து ஆளின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான்.

அப்பா என்ன கூட்டம்? நம்ம ஊரை விட எம்மாம் பெரிசா இருக்கு, புரியாம வேற பேசிகிட்டே இருக்காங்க. யோசித்து நினறவனின் தோளில் தட்டி இங்கேயே மலைச்சு நின்னுட்டா எப்படி, வா வா எங்கூட, கையை பிடிச்சு வேக வேகமா போகறாரு இந்த அங்கிள். ஏன் வேகமா போகணும்?

ஐயோ கால் வலிக்குது, இந்த அங்கிள் என்னடான்னா நடந்து கிட்டே இருக்கறாரு. அதுவும் சந்து சந்தா போறாரு. குடிசைகளா இருக்கு. ஐயோ இந்த இடம் ஏன் இப்படி அசிங்கமா இருக்கு. இதென்ன சாக்கடைக்கு பக்கத்துலயே குடிசை போட்டுகிட்டு இருக்கறாங்க, இந்த அங்கிள் அந்த குடிசை பக்கம் எதுக்கு போறாரு?

என்னைய மாதிரி நாலைஞ்சு பேரு உள்லே தூங்கிட்டு இருக்கறாங்க. எலே எந்திரிங்கடா? இந்த அங்கிள் எதுக்கு இப்படி மிரட்டறாரு. அடிச்சு பிடிச்சு எழுந்திருக்கறாங்க.

என்னடா நாய்களா, பத்து மணிக்கு தூக்கம், ஓங்கி ஒரு பையன் கன்னத்துல அறை. எனக்கு உடம்பு சரியில்லைங்க, அவன் சொல்ல என்னடா உன் உடம்புக்கு, மறுபடி கையை ஓங்க கூட இருந்த பையன், ஐயா இராத்திரி திருவிழா நடந்துச்சு, அங்க போய் இருந்துட்டு இப்பத்தான் வந்தோம், அப்படியே படுத்துட்டோம்..

சரி இந்த பையலை இங்க விட்டுட்டு போறேன், பாத்துக்குங்க, நாளைக்கு தொழிலுக்கு கூட்டிட்டு போங்க.. சொல்லிவிட்டு விருட்டுன்னு போயிடறாரு.

நான் அப்படியே திகைச்சு நிக்கறேன்.

அப்பா..அப்பா..என் கண்ணுல வந்து நிக்கறாறே? நீ என்னை அடிச்சாலும் அப்புறம் கட்டி பிடிச்சு அழுவியே, ஐயோ அம்மா கொஞ்ச நேரம் ஆனாலும் ராசான்னு என்னை தேடிகிட்டே வருவியே…உங்களை பாக்கவே முடியாதா? ஐயோ அம்மா…இங்க என்னை இந்த ஆள் போட்டு அடிக்கறானே, ஒவ்வொரு இடத்துல கொண்டு போய் ரோட்டுல படுக்க சொல்லி பிச்சை எடுக்க சொல்றாங்களே, வெயிலுல காலு மொண்டி மாதிரி எல்லாம் படுத்துகிட்டு நடிக்க சொல்றாங்களே, முதுகெல்லாம் புண்ணாயிடிச்சே, சாயங்காலம் வந்து எல்லா காசையும் பிடிங்கிட்டு அடிக்கவும் செய்யறாங்களே.

என்னன்னமோ சாப்பிட கொடுக்கறாங்களெ,வாயில வச்சா குமட்டுதே, ஐயோ அப்பா, அப்பா என்னை கூட்டிகிட்டு போயிடுப்பா…… உங்களை பாக்காம இருக்க முடியலையே? ஆறு மாசம் ஆயிடுச்சே? என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்களேன்.

என் மவனை இப்படி நாசம் பண்ணி வச்சிருக்கானே, அந்த கேடு கெட்ட நாய், பத்து நாளா படுத்து இப்பத்தான எந்திரிச்சிருக்கான். ஏய்யா நான் அப்பவே சொன்னேன் அந்த நாயிகிட்ட நம்ம பையனை அனுப்பாதேன்னு கேட்டியா?

நான் என்னத்தை கண்டேன், அந்த நாய் இந்த மாதிரி வேலைதான் செய்யறான்னு, நம்ம இரண்டு பேரும் கூலி வேலைக்கு போய் கஷ்டப்படறோம்,இவனாவது படிச்சு முன்னுக்கு வருவான்னு நினைச்சேன்.படிப்புதான் வரமாட்டேனுச்சு, சரி உன் பையனை நல்ல தொழில் கத்து கொடுத்து அவனை மேல கொண்டு வரேன்னு சொன்னான், நானும் படிப்பும் ஏறாம, பசங்க சாமானையும் திருடி இப்படி சீரழியறதுக்கு ஒரு தொழில் கத்துகிடட்டுமேன்னு அனுப்பிச்சேன். ஐயோ கடவுளே, பையன் உயிரோட வந்து சேர்ந்தானே.

ஆமா நம்ம உறவுக்காரன் இந்த பையலை பாத்த்துனால பையனை முழுசா நம்மால பாக்க முடிஞ்சது. அவன் இராத்திரியோட இராத்திரி இவனை கூட்டிகிட்டூ இரெயில் ஏறி இங்க கூட்டிகிட்டு வராம இருந்திருந்தா நம்ம புள்ளை கதி இந்நேரம் என்ன ஆயிருக்குமோ?

அம்மா…..அப்பா.. போய் பாரு பையன் ஏதோ தூக்கத்துல முணங்குறான்.

இருவரும் காது கொடுத்து கேட்கிறார்கள், அப்பா, இனி நான் நல்லா படிப்பேன்ப்பா, அம்மா பசங்களோடது எதையும் திருடமாட்டேப்பா, முணங்கி கொண்டே இருப்பதை கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *