செம்மண் தரையில் சிந்திய நீரைப்போல பசி வயிரெங்கும் மெல்லப் பரவிப் படர்ந்தது. வயிறை நிரப்பிவிட்டால் மனதுக்குச் சிறகு முளைத்துவிடுகிறது. சிறகு முளைத்து மட்டுமென்ன பயன்? கூண்டை விட்டு வெளியேறி உயரப் பறந்து வானைத் தொட்டாலாவது பரவாயில்லை. முட்டி முட்டி மோதி கூண்டுக்குள்ளேயே சிறைப்பட்டு ரணமாகிறது. அதற்காகவே வயிறைக் காயப்போட்டேன். காலியான வயிறு எப்போதும் கனவுகளை அனுமதிப்பதில்லை.
கைகள் நிறையப் பைகளையும், கண்கள் நிறையத் தூக்கத்தையும் எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ஏந்தி வந்தனர். ஆட்களை இறக்கிவிட்டும், ஏற்றிக் கொண்டும் பேருந்துகள் வருவதும் போவதுமாய் இருந்தன. இதுவே எங்கள் ஊர்ப்பக்கமாயிருந்தால், இப்படியொரு பின்னிரவில் பொதுவாக ஆளரவம் அடங்கிப் போயிருக்கும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. திருமணம், எழவு, வரவு, செலவு, மருத்துவம், காதல், கவிதை, காமம் என பிரயாணத்திற்கான தாத்பரியம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கக்கூடும். யாரறிவார்?
இந்தப் பேருந்து நிலையத்தில், என்னைப் போல யாரேனும் ஒருவன் தன் அடங்காக் காமத்தையும், ஆறாத் தோல்வியையும் பசியால் மட்டுப்படுத்தி அமர்ந்திருப்பானா? இருக்கக்கூடும்.
வானம் சூல் கொண்டு நிறைந்திருந்தது. ஒரு நட்சத்திரம் கூட கண்ணில் படவில்லை. வீசும் காற்றில் குளிர் மெல்ல ஏறியிருந்தது. நான் உட்கார்ந்திருந்த திண்டுக்கு அருகே பேருந்துகளின் நடத்துனர்கள் தத்தம் வருகையைப் பதிந்து கொண்டிருந்தனர். அதற்குப் பின்னாலிருந்த விளக்குக் கம்பத்திற்கு அருகே பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள். ஜிகு ஜிகுவென மின்னும் கண்ணாடிச் சேலை. முகம் முழுக்க ஒப்பனை. அவளின் பெரிய கண்களில் கண்-மை நிறைந்து வழிந்தது. வாடாத மல்லிகைப் பூ. யாரையோத் தேடும் பாவனையில் இடம் வலம் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காலையில் அம்மா, மதுரைவரை சென்று, போன வாரம் பார்த்த பெண்ணின் அண்ணனை ஒரு தடவை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வருமாறு கூறிய பொழுதே எனக்குத் தெரியும் இப்படித்தான் நடக்கும் என்று. சொன்னால் மட்டும் கேட்கவா போகிறாள். அடுத்த இரண்டு நாட்கள் அழுது அடம்பிடிப்பாள். மூன்றாவது நாள் எப்படியும் நான் போக வேண்டியது வரும். அதுவரை காத்திருப்பானேன். அதனால் சரியென்று சொல்லிக் கிளம்பினேன்.
மதுரையில் ‘தங்கரீகல்’ தியேட்டருக்கு எதிரே இருந்த கடைத்தெருவில் சிறியதொரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். பெயர் ஆறுமுகம். தேடிக் கண்டடைவது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. மதிய உணவை முடித்துவிட்டு ஊரிலிருந்து கிளம்பி, அந்தக் கடைத்தெருவை அடையும் பொழுது மணி மாலை ஐந்தாகியிருந்தது. வானத்தைச் சாம்பல் நிற மேகங்கள் தழுவிப் போயின.
அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் ஒரு டீயைக் குடித்துக் கொண்டே, எப்படி ஆரம்பிப்பது என்று என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். கடை அடைத்திருந்தால் என்ன செய்வது? கடை திறந்திருந்து அவர் அங்கில்லாது போனால் என்ன செய்யலாம்? கடையும் திறந்திருந்து, அவருமிருந்து, ஒரு வேளை என்னை அவருக்கு அடையாளம் தெரியாவிட்டால்? இப்படி அத்தனை எதிர்மறைகளுக்கும் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
அவர், எனக்கு அவ்வளவுச் சிரமம் எல்லாம் வைக்கவில்லை. கடையில் தளம் தெரியாதவாறு தரையெங்கும் கோரைப்பாய் விரிக்கப்பட்டிருந்த்து. கடை மொத்தமே இருபதுக்கு இருபதடிதான் இருக்கும். அதில் ஒரு ஓரத்தில் மரத்தாலான மூன்றடி உயரமுள்ள மரப்பீரோ இருந்தது. பீரோவை ஒட்டி ஒரு சின்ன சாய்வு மேசை போட்டு உட்கார்ந்திருந்தார் ஆறுமுகம். திருநீறு, முன்வழுக்கை முழுவதும் நிறைந்திருந்தது. இருபுருவங்களுக்கிடைய மிகக்கச்சிதமாய் ஒரு வட்டப் பொட்டு. கழுத்தில் மெல்லிய துளசி மாலை. அப்போதுதான் குளித்துமுடித்து வந்து உட்கார்ந்திருந்தது போல கசங்கலோ களைப்போயின்றி இருந்தார்.
பயணத்தில் கலைந்து போயிருந்த முடியைக்கூட வாராமல், முகத்தையும் கழுவாமல் நான் போய் நின்றேன்.
“வணக்கம். என் பேர் சந்திரன். ராஜபாளையத்துல இருந்து வர்றேன். போனவாரம் கூட மீனாட்சியம்மன் கோவில்ல பொண்ணு பாக்க வந்திருந்தோமே..”
“அடடடே.. நல்லா ஞாபகம் இருக்கு தம்பி. வாங்க. உட்காருங்க. டீ, காபி என்ன சாப்டுறீங்க? “
“இல்ல ஒண்ணும் வேணாங்க… இப்போ வர்ற வழியிலதான் டீ குடிச்சுட்டு வர்றேன்.”
“அப்படியெல்லாம் (ச்)சொல்லக்கூடாது. டேய் தம்பி.. ஓடிப்போயி மயிலண்ணன் கடையில போயி மூணு டீ வாங்கியா.. வேடிக்க பாக்காம (ச்)சட்டுன்னு வந்துசேரணும்” என்று கடையிலிருந்த பையனை ஏவிவிட்டு என்னிடம் “சொல்லுங்க தம்பி. வீட்டுல எல்லாரும் செளக்கியம்தானே“ என்றார்.
“எல்லாரும் நல்லாயிருக்காங்க. போன வாரம் கோவில்ல வச்சே எங்களுக்குப் பொண்ணப் பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டோம். நீங்க போயி இரண்டு நாள்ல கலந்து பேசிட்டு சொல்றோம்ன்னு சொன்னீங்க. ஒரு வாரமாச்சு. தகவலொண்ணுமில்ல. அதான் அம்மா நேர்ல போயி ஒரு வார்த்த கேட்டுட்டு வரச் சொன்னா.“
“நல்லது தம்பி. நாங்களே உங்க வீட்டுக்கு ஒரு போன் பண்ணிச் சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தோம். அப்படியிப்படி கொஞ்சம் பிஸியாப் போயிடுச்சி.. தம்பி, தப்பா நினைக்க வேண்டாம். பொண்ணு மேல படிக்கணும் ஆசப்படுதா.. இத்தன வருசமா அவ முகம் கோண நாங்க எதுவும் செஞ்சதில்ல. படிக்கணும்மிட்டு ஆசப்படுத புள்ளயப் போயி கூரப் புடவயக் கட்ட வைக்க வேணாமுன்னு பாக்கோம். நாலெழுத்து நல்லாப் படிச்சுப்பிட்டா பின்னாடி அவ பிள்ளகுட்டிகளுக்கு பிரச்சனயில்ல பாருங்க. என்ன நான் சொல்றது. அதுனால இப்போதைக்கு அவ கல்யாணத்த இரண்டு வருசம் தள்ளிப் போடலாமுன்னு நினைக்கிறோம். அவளுக்கு இன்னும் வயசிருக்குல. இப்பதான கழுத இருபது கழிஞ்சு இருபதொண்ணே பொறக்குது. அதான் நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேண்டாம். “
“ஓ.. சரிங்க. பரவாயில்ல. நான் அம்மாக்கிட்ட எடுத்துச் சொல்லிக்கிறேன். அப்ப நான் வரேன்”
“இருங்க தம்பி.. இப்போ டீ வந்துடும். இருந்து, குடிச்சுட்டுப் போங்க”
“பரவாயில்லங்க. வர்றேன்“ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பினேன். எங்கே போக வேண்டும் என்ற எந்தக் குறிக்கோளும் இல்லாமல் கால் போன பாதையில் போனேன்.
முப்பத்து நான்கு வயதிலும், பெண் பார்க்க கோவில் கோவிலாகச் சுற்றித் தேய்ந்த கால்கள் இழுத்துப் போன பாதையெல்லாம் போய்க் கொண்டிருந்தேன். மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. யோசித்துச் சொல்கிறோம். ஜாதகம் பொருந்தவில்லை. படிப்பு போதவில்லை. வேலை நிலையானதாயில்லை என்று தட்டிக் கழிப்பதற்கு உண்டான அத்தனை காரணங்களையும் இதுவரையில் கேட்டாகிவிட்டது.
முதலில் என்னவோ மிக நாசூக்காகத்தான் ஆரம்பித்தார் ஆறுமுகம். எதிர்பார்த்ததுதான் என்பதால் எனக்குப் பெரிதாக அதிர்ச்சியொன்றுமில்லை. நானே நேரில் வந்தது உண்மையில் அவருக்குத்தான் சங்கடத்தைத் தந்திருக்கும். ஆனால் அந்தக் கடைசி வார்த்தையில், பெண்ணுக்கும் எனக்கும் பதிமூன்று வயதுகள் வித்தியாசம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். இல்லாதது ஒன்றையும் சொல்லவில்லைதான். ஆனால் உண்மையை உள்ளபடி ஏற்றுக்கொள்வதுதான் அத்தனை சுலபமாயிருப்பதில்லை. இதோ, போன பிப்ரவரியுடன் முப்பத்து நான்கு வயது நிறைவுற்றது. இத்தனை வயதிலும் கல்யாணம் நடைபெறாதிருப்பது என் குற்றம் மட்டுமா? நானா இந்த நட்சத்திரத்தில் பிறக்க வேண்டுமென்று வரம் வாங்கி வந்து உதித்தேன்? என் அப்பா குடியும் கூத்தியாளுமாய் இருப்பதற்கு நானா பொறுப்பு? இல்லை என் தங்கை வேறு ஜாதிப் பையனை காதலித்து மணந்தது என் குற்றமா? இல்லை அந்த சுஜாதாவைக் காதலித்ததுதான் என் தவறா?
* * * * *
சுஜாதாவை முதன் முதலாக கலைமன்ற படிப்பகத்தில் வைத்துதான் பார்த்தேன். பொதுவாக புத்தகத்தை பதிந்து வீட்டுக்கு எடுத்து வந்து படிப்பதே வழக்கம். அங்கு வரும் சிற்றிதழ்களை எடுத்து வந்து வாசிக்க இயலாது. வேண்டுமானால் பழைய இதழ்களை நூலகரிடம் கேட்டு எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி அங்கிருந்து வாசித்துக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் அந்தப் பெண்ணை பார்த்தேன். முதன் முதலாக நான் பார்த்த பொழுதே சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகளை’ வாசித்துக் கொண்டிருந்தாள். நல்ல இலக்கியப் பரிச்சயம் இல்லாமல் ஜே ஜே சில குறிப்புகளை போகிற போக்கில் வாசிக்கவியலாது என்பதென் அனுமானம். அதுவரையில் அங்கு வந்து சென்ற பெண்கள் பலரும் பாலகுமாரன், ஜெயகாந்தன், சில நேரங்களில் அரிதாக ஓரிருவர் தி.ஜா ஆகியோரை வாசித்துப் பார்த்துத்தான் பழக்கம்.
அந்தப் பெண்ணை பேரழகி என்றெல்லாம் வர்ணித்துவிட முடியாது. ஆனால் ஒரு முறை பார்த்ததும் திரும்பி ஒரு முறை பார்க்க வைக்கும் லட்சணம் அவளிடம் இருந்தது. லேசான சுருண்ட கேசம். அளவான நாசி. சிரித்தால் ஒரு பக்கம் மட்டும் விழும் கன்னக் குழி. நூல் பிடித்து நட்டாற் போன்ற பல் வரிசை. பாலீஷ் செய்த கோதுமை நிறம். ஒரு நாளில் கிடைத்த சில நிமிடங்களில் என்னால் அவதானிக்க இயன்றது இவ்வளவுதான்.
அப்பெண்ணை அடுத்த முறை பார்த்த பொழுது ஆதவனின் ‘காகித மலர்கள்’ புத்தகத்தை எடுத்துப் பதிந்து கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் அவளது லைப்ரரி கார்டில் அவளது பெயரைப் பார்த்தேன்.
அன்று, அவளது சைக்கிள் எனது சைக்கிளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இருபதைந்து வருடங்களில் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் பேச வேண்டும், பழக வேண்டும் என்று பேராவல் வந்தது அவளிடம் மட்டும்தான்.
“என்னங்க நீங்க சு.ரா, ஆதவன் எல்லாம் படிப்பீங்களா?”
“ஏன் நான் அவங்களையெல்லாம் படிக்கக் கூடாதா?” அவள் தன் லேடி ப்ர்ட் சைக்கிள் ஸ்டாண்டை தன் வலதுகாலால் மெல்லத்தள்ளி சைக்கிளை லாவகமாக வெளியே எடுத்தாள்.
“ஐய்யோ நான் அப்படிச் சொல்ல வர்லீங்க”
“பின்ன எப்படி?“ சைக்கிளில் ஏறிச் செல்லாமல் மெதுவாக உருட்டிக் கொண்டே வந்தாள். வார்த்தைகளில் சின்னதாய் ஒரு எள்ளல் தெரித்தது.
“நம்ம ஊர்ல அதுவும் நமக்குப் பக்கத்துல யாரோ ஒருத்தர் நமக்குப் பிடிச்ச எழுத்தாளர்களைப் படிக்கிறாங்கன்னா உள்ளுக்குள்ள குட்டியா ஒரு சந்தோஷம் எட்டிப் பாக்கும்ல. அதாங்க இது. அந்த ஆர்வத்துலதான் கேட்டேன்.” மெயின் ரோட்டுக்கு வந்ததும் யாரேனும் எங்களைக் கவனிக்கிறார்களா என்று அங்கும் இங்கும் நோட்டம் விட்டுக்கொண்டே வந்தேன். அப்படியான எந்தவித தடுமாற்றமோ முன்பின் தெரியாத ஒரு ஆடவனிடம் பேசும் பொழுது எழும் இயல்பான பதற்றமோ எதுவும் அவளிடம் இல்லை. தினம் உடன் செல்லும் வகுப்புத் தோழி ஒருத்தியுடன் பேசும் பாவனையில் என்னுடன் பேசிக் கொண்டே வந்தாள்.
“ஓ சரி.. சரி.. இவங்கள மட்டுமில்ல இன்னும் நிறைய படிப்பேன்“ என்று கூறிச் சிரித்து இரு கண்களையும் ஒரு நொடி, ஒரே ஒரு நொடி ஒருசேர மூடித்திறந்தாள். அப்போது இரண்டு கருப்பு வெள்ளைப் பட்டாம்பூச்சிகள் அவள் கண்களிலும், பல வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகள் என் வயிற்றிலும் பறந்தன.
அதன் பிறகு அவளிடம் பேசுவதற்காகவும், அப்போது பெருமையடித்துக் கொள்ளவும் அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். முயற்சி பொய்க்கவில்லை. இலக்கியம் பேசிப் பேசியே இருவரும் நண்பர்களானோம்.
எனக்கு இது போன்ற புத்தகங்களையும், சிறு பத்திரிக்கைகளையும், இலக்கிய உலகத்தையும் அறிமுகப்படுத்திய எனது பள்ளிக்கால நண்பன் பாலாவே ஒவ்வொரு முறையும் அவன் வரும் பொழுதெல்லாம் நான் நூலகத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுத்தான் போனான்.
ஒரு முறை அவன் வீட்டுக்கு வந்திருந்த பொழுது நான் ஆத்மாநாமின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். காதில் வந்து மெல்லமாய்க் கேட்டான் “ யாருடா மாமா அந்தப் பொண்ணு?”
“யாரு? எந்தப் பொண்ணு? நீ எப்போ பாத்த?”
“நான் யாரையும் பாத்தேன்னு சொல்லவேயில்லையே. சும்மாத்தான் கேட்டேன். நீதான் உளறிட்ட. இப்போ சொல்லு”
அவனிடம் இதுவரையில் எதையும் மறைத்ததில்லை. பள்ளியில் படிக்கும் நாட்களில், தினம்தினம் நான் கொண்டு போகும் பழையதுக்குத் தொட்டுக் கொள்ள வெஞ்சனம் கொடுத்த நாளிலிருந்து ஏற்பட்ட நட்பு. ஜே ஜே சில குறிப்புகளிலிருந்து எல்லாவற்றையும் அவனிடம் சொன்னேன். அவனுக்கும் அவளைத் தெரிந்திருந்தது. என்னைப் போலவே அவளை சிலமுறை கலைமன்ற நூலகத்திலும், ஒரு முறை சொக்கர் கோவிலிலும் பார்த்திருக்கிறான். அவன்தான் அடிக்கடி என்னிடம் பிடித்திருந்தால் நேராக்ச் சொல்லிவிடு. காலம் தாழ்த்த வேண்டாம் என்று அறிவுறுத்தியபடி இருந்தான்.
அவள் கண்களிலும் காதலை உணர்ந்த ஒரு நாளில், அவளிடம் என் காதல் கடிதத்தை நீட்டினேன். பெரிய அதிர்ச்சியேதும் காட்டாமல் நிலக்கடலைப் பொட்டலத்தை பிரித்து வாசிக்கும் ஒரு சாவதானத்துடன், என்னை நிற்க வைத்துக் கொண்டே வாசிக்கத் தொடங்கினாள்.
கடிதத்தை மடித்து அவள் எடுத்து வந்த புத்தகம் ஒன்றில் சொருகிக் கொண்டாள். பின்னர் என் கண்களைப் பார்த்து, “உன் கண்கள் ரொம்ப அழகு” என்று சொல்லிவிட்டு அவளின் லேடி பர்டில் ஏறிப் பறந்தாள்.
எனக்குத்தான் கால்கள் பூமிக்கு வர வாரக்கணக்கானது. அதன்பின் நூலகத்தில் புத்தகங்களைத் தவிர வேறு எல்லாவற்றையும் வாசித்தோம். கருங்குளம், மடவார் வளாகம், அய்யனார் கோவில் பாதை என்று தேடித் தினம் காதல் வளர்த்தோம்.
இதற்கிடையில் அம்மா ஒரு நாள், “ டேய் மனோ, நம்ம பாலாவோட அப்பா அம்மா ரெண்டு பேரும் பழனிக்கு பாத யாத்திர போறாகளாம். சந்தைக்குப் போற வழியிலதான் பாத்தேன். பாலாவ மதியச் சாப்பாட்டுக்கு இங்க வரச்சொல்லு. அவனுக்குப் பிடிச்ச வெந்தய்க் கொழம்பும், பருப்பும் செஞ்சு வைக்கிறேன்“ என்றாள். நேற்றிரவு பதினோரு மணி வரை பாலாவுடன்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். பரதேசிப்பயல், பாதயாத்திரை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை.
புதிதாக வருபவர்களுக்கு அவன் வீட்டைக் கண்டுபிடிப்பது என்பது நிச்சயம் ஒரு குட்டி சாகஸப் பயணத்தைப் போல்தான் இருக்கும். அத்தனை சந்துகளைச் சுற்றிச் சுற்றி வர வேண்டும். பொதுவாக அவன் வீட்டைச் சுற்றி, பகல் நேரங்களில்கூட ஆள் நடமாட்டம் அதிகமின்றி, வெறிச்சோடிப் போய் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பஞ்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். சில வீடுகளில் சிறுவர்களும் கூட. காலை ஆறு மணிக்குச் சென்றால், சாயுங்காலம் ஆறேழு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.
அவன் வீடு வெளியே பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டு வராண்டாவில் அவனது செருப்பு இருந்தது. அதன் அருகே மற்றும் ஒரு ஜோடி பெண் செருப்பும் இருந்தது. தலையை உதறிவிட்டு, கண்களைக் கசக்கியவாறு மீண்டும் பார்த்தேன். நான் அடிக்கடி பார்க்கும் செருப்பு. ஆம், அது சுஜாதாவின் செருப்புதான். மனம் என்னும் கிறுக்கன் அந்த ஒற்றை நிமிடத்தில் ஓராயிரம் முடிச்சுக்களை அவிழ்த்தான்.
இப்போது அவன் வீட்டு காலிங் பெல்லை விடாமல் பைத்தியம் பிடித்தவன் போல் அழுத்தினேன். ஐந்து நிமிடங்களுக்கு எந்தச் சலனமுமில்லை. இருந்தாலும் நான் காலிங் பெல்லை அழுத்துவதை நிறுத்தவேயில்லை. கொஞ்ச நேரத்தில் கைலியும் துண்டுமாக அவனே வந்து வீட்டைத் திறந்தான். அவன் கண்கள் அத்தனை உண்மையையும் சொன்னது. அவனின் உடல் மொழியில் பதற்றம் தொனித்தது.
“அவளை வெளியே வரச் சொல்லு”
“யார்டா.. அம்மாவும் அப்பாவும் பழனிக்குப் போயிருக்காங்கடா” என்றவாறே ஷூவிற்குள் கிடந்த சாவியை எடுத்து கதவு கிரிலைத் திறந்தான். அவன் கைகள் வழக்கத்திற்கு மாறாக நடுங்கின. வார்த்தைகளிலும் கோர்வையே இல்லை. பேச்சே சற்று குழறியது போலிருந்தது.
“அசிங்கமாயிடும்.. அவள வெளிய வரச் சொல்லு” என்று வாசற்படியிலிருந்தே கத்தினேன்.
நான் கத்தியது கேட்டிருக்க வேண்டும். “துப்பட்டாவை இரு கைகளாலும் மாறி மாறி இழுத்துவிட்டுக்கொண்டு தரையைப் வெறித்தப்படி அவள் வந்து நின்றாள்”.
வெளியில் கிடந்த அந்தச் செருப்பை எடுத்து, இருவரையும் மாறி மாறி என் ஆத்திரம் தீர அடித்தேன். ஆத்திரம் தீரும் முன்னரே அற்பச் செருப்பு அறுந்துவிட்டது. அந்தக் கெட்ட வார்த்தையால் அவளைத் திட்டி, அவள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு வெளியே நடந்தேன்.
அன்றுதான் அவர்கள் இருவரையும் நான் கடைசியாகப் பார்த்தது.
* * * * *
எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யக் கூடிய நிலையில் இருந்தது வானம். பெய்யனெச் சொன்னவுடன் பெய்வதற்கு வானமுண்டு. ஆனால் சொல்வதற்கு யாருண்டு?
நான் செல்ல வேண்டிய பேருந்து வந்துவிட்டது. ஆனால் எனக்குத்தான் ஏறிப் போக மனமேயில்லை. போய் மட்டும் என்ன சாதிக்கப் போகிறேன். அதுவரையில் அங்கு நின்று கொண்டிருந்த பேருந்து நடத்துனர்களும் கலைந்து போயினர். பசியில் தலை கனத்துப் பாரமாகியது.
அருகிலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு பச்சைப்பழங்கள் வாங்கி உண்டேன். அந்தக் கடையையே மூடியவாறு அனைத்து வார, மாத இதழ்களும் வரிசைகட்டித் தொங்கவிடப் பட்டிருந்தன. அவற்றில் சில மஞ்சள் பத்திரிக்கைகளும் அடக்கம். அதிலிரண்டை வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இதை நான் யோசித்துக் கொண்டிருக்கையில், எனக்கு அந்த ஜிகுஜிகு சேலை கட்டிய பெண் நினைவுக்கு வந்தாள். திரும்பிப் பார்த்தேன். இப்போதும், அவள் அந்தக் கடைக்கு அருகிலிருந்த கம்பத்திற்கு மறுபக்கம்தான் நின்று கொண்டிருந்தாள். வளைவு நெளிவுகளுடன், சற்றே சதைப்பிடிப்பு கொண்ட திரட்சியான தேக அமைப்பு அவளுக்கு. இந்த முறை நான் அவளைப் பார்த்ததை, அவள் கவனித்துவிட்டாள்.
அடுத்த முறை எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்ட பொழுது, அவள் தன் வலது கையால் வைத்திருந்த மல்லிகைப்பூவை மெதுவாக வருடிக் கொண்டே, மிக மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தாள். அது எனக்கான சமிஞ்ஞை. வாழைப்பழத் தோலை தூக்கி எறிந்துவிட்டு அவளருகே சென்றேன்.
“எவ்வளோ?”
அவள் ஒரு போன் நம்பரைக் கொடுத்து அதற்கு அழைக்குமாறு கூறிவிட்டு மெதுவாக அங்கிருந்து நகன்றாள்.
அவள் கொடுத்த நம்பருக்கு அழைத்ததும், அடையாளங்களைக் கேட்டுக் கொண்டு, நான் இருக்கும் இடத்திற்கு ஐந்து நிமிடத்தில் அவனே வருவதாகச் சொன்னான். வரவும் செய்தான். எண்ணெயே காட்டாத முடி. ஒட்டிப் போன முகம். ஒடிசலான தேகம். சின்னப் பையனாகத்தான் இருந்தான். இருபதுக்கு மேல வயதை மதிப்பிட முடியாது.
“ஆயிர ரூபா சார். ரூம், போய்வர ஆட்டோ எல்லாம் எங்க பொறுப்பு. உனக்கு ஓ.கே.வா?”
“சரி“ தீர்மானமாக இருந்தேன்.
பேருந்து நிலையத்துக்கு வெளியே நிற்பதாக, ஒரு ஆட்டோ நம்பரைச் சொல்லி, அதில் அவள் காத்திருப்பதாகவும் அங்கே சென்று ஆட்டோவில் ஏறிக்கொள்ளும்மாறு கூறினான். இதையெல்லாம் கூறுவதற்கு முன்பே என்னிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டான்.
அவன் சொன்னபடியே ஆட்டோ அங்கிருந்தது. அவளும் இருந்தாள். எதையும் பேசாமல் நான் ஏறி ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். அவள் மறு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். இதயம் ஆனமட்டும் வேகமாக அடித்துக் கொண்டது. ஆட்டோ கிளம்பி, பேருந்து நிலையத்திற்கு வலப்பக்கமாக எங்கோ சென்றது. அதுவரையில் எனக்குப் பாதை தெரிந்தது. அதன் பின் சந்து பொந்துகளாக நுழைந்து சென்றது.
பொட்டல் வெளியான ஒரு இடத்தில் ஆட்டோ நின்றது. சுற்றிலும் கட்டிடம் ஏதேம் தென்படவில்லை. அதிலிருந்து இரு நூறு மீட்டர் தொலைவில் பிரதான சாலை இருந்தது. ஆட்டோவிலிருந்து இறங்கியதும், அந்த டிரைவர், “ஏ கல்பனா, சீக்கிரம் முடிச்சுட்டு ஒரு கொரல் கொடுப்பா” என்று சொல்லி சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டே ஆட்டோவை விட்டு வெளியேறி பிரதான சாலையைப் பார்த்து நடக்கத் தொடங்கினான்.
எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. பின்னர் சுதாரித்து, அவனை நிறுத்தி, “என்னது இங்கயே வா? என்ன விளையாடுறியா? ஆயிரம் ரூபா வாங்கும் போது ரூமுக்கும் சேத்துன்னு வாங்கிட்டு இப்போ இங்கேயேன்னு சொல்ற”
“சார்.. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல சார். கொடுத்தவய்ண்ட போயி கேளுங்க. எனக்கே இது பயங்கர ரிஸ்க்கு. போலீஸ் எதாவது மடக்குனாய்ங்கனா ஆர்.சி. புடுங்கி வச்சுட்டு படுத்திடுவாய்ங்க. போங்க சார். இருட்டுல ஒண்ணும் தெரியாது. “
எனக்கு உச்சி மண்டையில் சுளீரென்று வலித்தது. ஏமாற்றமும் கோபமும் பொங்கிக் கொண்டு வந்தது. இவனிடமோ இவளிடமோ கோபப்பட்டும் ஆவப்போவது ஒன்றுமில்லை. இந்தக் கையாலாகத நிலை இன்னும் எரிச்சலையேத் தந்தது. அப்போது வெட்டிய மின்னலில் கண்கள் கூசியன.
அவள் என் முதுகுக்கு பின் நின்று, மெல்லிய குரலில் “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோயா.. மிஞ்சி மிஞ்சிப் போனா பத்து நிமிஷம்.. இதுக்குப் போயி..”. சட்டென்று முதுக்குப்பின் நின்றவளைத் திரும்பி முறைத்தேன். அப்படியே அடங்கி நிசப்தமானாள்.
“ஆட்டோவ எடு. பஸ் ஸ்டாண்ட்டுக்கு விடு”
“யோசிச்சுதான் சொல்றியா?”
“வண்டிய எடுடா” கத்தினேன்.
அவள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதே அருவருப்பாய் இருந்தது. என்னுடைய இயலாமை இன்னும் படுத்தியது. வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அமைதியாக வந்தேன். வேறேன்ன செய்ய முடியும் என்னால்? எல்லாவற்றிலும்.
பேருந்து நிலையத்துக்கு வெளியே சற்றுத் தள்ளியே ஆட்டோவை நிறுத்தினான். அதிலிருந்து இறங்க முற்பட்ட என்னை இடைமறித்து அவள், “கோபப்படும் போது கூட உன் கண்ணு ரொம்ப அழகுய்யா“ என்றாள்.
“போடித் தேவடியா”
திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன். வானத்தைக் கிழித்துக் கொண்டு மழை கொட்டத் தொடங்கியது.
– பெப்ரவரி 2014