(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெறும் எஸ்.எஸ்.எல்.சி.யோடு படிப்பை நிறுத்திக்கொண்டது தப்பாகப் பட்டது. அதற்கு மேலும் படிக்காதது ஒரு விதத்தில் சரி என்றும் பட்டது. படித்துதான் என்னத்தை சாதித்து விட்டான்?
“அம்மா, போய்ட்டு வரேன்…”
“ஜாக்கிரதையாப் போய்ட்டு வாடா.. பாத்து…நன்னா பண்ணிட்டுவா…”
அம்மாவின் டேப்-ரெகார்டட் வசனங்கள்…ஏதோ டெஸ்டிமோனியலை மறந்துவிட்டதாகப் பட்டது. அவசரம் அவசரமாக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தான். அந்த அலமாரியின் நான்கு தட்டுகளில் ஒரு தட்டில், அதுவும் கீழ்த்தட்டில் ஒரு பாதிதான் அவனுக்குப் பாத்யதையான ஒரே இடம். அதுவும் இப்போதைக்கு…
சிவராமன் அலமாரியைக் குடைந்து துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு,
“அம்மா, போய்ட்டு வரேன்…” எழுந்தது.
“டீ சாரு, மறக்காம மாமாக்கு போன் பண்ணுடி…”
“ப்ச்… பார்க்கலாம்… ஒண்ணும் ப்ராமிஸ் பண்ண முடியாது. லைன் கெடைச்சா பண்ணறேன். பத்மாக்கு வேற பண்ணனும். ஏதோ புதுசா ஸாரி வாங்கிக்கோன்னு சொன்னா… டீடெல்ஸ் கேக்கணும். டேஞ்சூர் லைனே கஷ்டமாருக்கு.”
“அப்படியே மாமாக்கும் பண்ணும்மா, சமத்து, என் ராஜாத்தி!”
“சரிசரி அனத்தாதே.. ஹார்லிஸைக் கொண்டா. நாழியாச்சு. என்னோட புது ஸாரிக்கு… ஃபால்ஸ் அடிச்சாச்சா? நேத்திக்கே சொன்னேனே?”
அம்மா சமையற்கட்டுக்கு அவசரமாக ஓடிப்போய் ப்ளாஸ்க்கை எடுத்துவந்து சாருவின் கூடையில் வைத்தாள். கதகதப்பாக ஹார்லிக்ஸ்… இது போன உடனே குடிக்க. அப்புறம் எக்ஸ்சேஞ்சில் தனியாக காப்பி வரவழைத்துக் கொள்வாள்.
“டேய் சிவா! இன்னிக்கு என் ஃப்ரென்ட்ஸ் ரெண்டு பேரு வருவா. வீட்டைக் கொஞ்சம் ஒழிச்சு வைடா. அப்படியே ஈவ்னிங் ஸாரி ஃபால்ஸ் வாங்கிண்டு வந்துடுடா. கலரெல்லாம் அம்மாகிட்டே சொல்லிருக்கேன். வரப்ப, அப்ஸராலேருந்து க்யூடெக்ஸ்… என்ன?”
“டீ, அவனுக்கு இன்னிக்கு ஏதோ இண்டர்வ்யூடீ. நேரம் கிடைக்காது, பாவம்.”
“ஆமா, பெரிய்…ய இண்டர்வ்யூ…” தோள்பட்டையில் முகத்தை இடித்துவிட்டு, ஹைஹீல்ஸை மாட்டிக்கொண்டு, மாமா வாங்கிக்கொடுத்த சிங்கப்பூர் குடையை விரித்துக்கொண்டு சாரு கிளம்பினாள்.
அவனுக்குப் பின்னால் மூன்று வருஷங்கள் கழித்துப் பிறந்தவள்…
போன வருஷம் ஏதோ எஸ்.எஸ்.எல்.ஸி.யில் ஓஹோன்னு மார்க் வாங்கிட்ட புண்யத்துல டெலிபோன் ஆபரேட்டராக உத்தியோகம் கிடைத்துவிட்டது. வேலைக்குப் போய் அகங்காரத்தைத்தான் நெறைய சம்பாதிக்கிறாள்.
“சாரு, சாரு… மறக்காம மாமாக்கு போன் பண்ணும்மா, சமத்துல்லே…” — அம்மா தெருவரை ’சமத்துல்லே’ பல்லவியைப் பாடிக்கொண்டு வந்தாள். எல்லாம் ஓசி ’கால்’ தானே! காஷ்மீர்லேந்து கன்யாகுமரி வரைக்கும் போன் பண்ண முடியுங்கற ஜம்பம் வேறு!… அதுதான் அம்மாவுக்கு சாருவின் மேல் அத்தனை கரிசனம். ஓசி ’கால்’ உபயம். வாரா வாராம் பம்பாயில் இருக்கும் மாமாவுக்கு போன்… மாமாவும் குழைந்து குழைந்து பேசுவார்… என்ன அப்படிப் பேசிடப் போறார்!… சிவா இன்னும் ஆத்துலதான் உட்கார்ந்துண்டு இருக்கானா? வேறு என்ன பேசப் போறார்?
மதுரைச் சித்திக்கு… மெட்ராஸ்லே பெரியம்மா பொண்ணுக்கு. இல்லாட்ட இருக்கவே இருக்கா ஃப்ரெண்ட்ஸ்…
பேன்ட் லேசாக ஈரமாக இருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது.
எல்லாம் காய்ந்துவிடும். இப்போ அடிக்கற வெயில்லே, அப்படியே நனைச்ச பேன்ட் போட்டுண்டு போனாக்கூட சீக்கிரமே காய்ஞ்சு போயிடும்.
“அம்மா, நான் வரேம்மா…”
“சரி, பார்த்துப் பண்ணிட்டு வா…”
’நான்தான் ஒரு ஏழெட்டு தரமாவது அறுந்து ஹிண்ட் பண்ணிட்டேனே… எனக்கு ரெஸ்ட் கொடுத்தா என்னவாம்’ என்று முகத்தில் அறைந்தாற் போலக் கேட்கும் செருப்பு!
பன்னிரண்டாம் நம்பர் வீட்டுப் பெண் எதிர்ப்பட்டாள். ஈரக் கூந்தலை முடிந்திருந்தாள். பட்டுப் புடவை ’ஸ்விஷ்.. ஸ்விஷ்..’ என்றது. ஸ்டேட் பேங்க்கில் உத்தியோகம். ஏதோ எல்லாமே பெண்களுக்குத்தான் உத்தியோகம் தருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலப் பட்டது அவனுக்கு.
“சரிசரி நீ பாத்துப் போய்ட்டுவா…” என்று சொல்லிவிட்டு, “ஏண்டீ, ஒங்காத்து கல்பனா குளிச்சிண்டிருக்காளா?” என்று யாரையோ ஆதங்கமாக விசாரித்துக்கொண்டிருந்த அவள் மாமியார் சட்டென்று சிவராமனைப் பார்த்துவிட்டு,
“ஏண்டா சிவா… இன்டர்வ்யூவா? பார்த்து நன்னா பண்ணிட்டுவா… எங்காத்து வனஜா ஒனக்குப் பின்னாடிதான் படிப்பை முடிச்சா… இப்ப ஆபீஸரா இருக்கா. ஏன், ஒங்காத்லேயே சாரு இல்லையா? என்னமோடாப்பா…” என்று அங்கலாய்த்தாள்.
முனிசிபாலிடி ப்யூன் ஒருவன் வந்து அவர்களை அழைத்து விட்டுப் போனான். ’அல்லாரும் மொதல்ல ஹெட்கிளார்க்கைப் பார்த்துட்டுப் போகணும்’ என்ற உத்திரவோடு…
இந்த வேலை தனக்கு எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். உத்தியோகம் ஏதோ வெளியில் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. என்ன பெரிய உத்தியோகம்? ஒவ்வொரு தெருவிலும் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை ’சுவடே தெரியாமல்’ அழித்துவிட்டு மொட்டையாக எழுத வேண்டும்! ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய ஒரு பெரியவரின் பிறந்தநாள் விழாவை அந்த முனிசிபாலிடி விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது…
ஹெட்கிளார்க் வந்திருந்தவர்களின் ’எஸ்.எஸ்.எல்.சி.’ புத்தகங்களை வாங்கிப் பார்த்தார். அதோடு சரி. சிவராமன் அவரிடம் ’டெஸ்டிமோனியல்ஸ், ப்ரீவியஸ் எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட்’ என்று கதம்பமாக நீட்டினான்…
ஒரு மணி நேரத்தில் செலக்ட் ஆனவர்களின் பெயர்களை டைப் பண்ணி ஒட்டினார்கள்.
“என்ன ஹெட்கிளார்க் ஸார்… நா நல்லாத்தானே பண்ணியிருந்தேன். என் பேரு லிஸ்ட்லே காணுமே?”
“சிவராமன், உன்னோட ’எஸ்.எஸ்.எல்.சி.’ புக்கைப் பிரிச்சுப் பாரு. அதுலேதான் கோளாறு எல்லாம்…”
’ஒண்ணுமே புரியலை ஸார்’, என்ற பாணியில் ஹெட்கிளார்க்கைப் பார்த்தான்.
அவரும் விடாமல், “அட யாருப்பா, விவரந் தெரியாத பிள்ளையா இருக்கே… எஸ்.எஸ்.எல்.சி. புக்கோட மொதப் பக்கத்தை நல்லா பாரு…”
எல்லாக் கதைகளும் முதல் பக்கத்தில்தான் ஆரம்பிக்கின்றன.
சில கதைகள் முதல் பக்கத்திலேயே முடிந்து விடுகின்றன. வாழ்க்கையும் அப்படித்தான் போலிருக்கிறது…
– 27-07-1980
நன்றி: https://ugfamilywriters.blogspot.com