மிக்கி மவுஸின் புன்னகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 7,565 
 

”அந்த வழியாக போக வேண்டாம்..” என்றாள் நிம்மி.

”ஊஹூம் நான் வந்தா அந்த வழியாகத்தான் வருவேன்.. நீ வேணுன்னா வேற வழியாக போ..” என்றாள் பவித்ரா.

“இல்லடி.. நான் சொல்றத கேளு.. வீட்டுக்கு அந்த வழியா போனா தூரம்..”

“ஏன் எப்பவும் அந்த வழியாத்தானே போவோம். இன்னைக்கு என்னாச்சு..? திடீர்னு எப்படி தூரமாச்சு..? அந்த வழியா போனா அந்த துணிக்கடையில புதுசா ஒரு மிக்கி மவுஸ் வந்திருக்காம். பார்த்துட்டு போலாம்.. கை கொடுக்கலாம்.. பேசலாம்.. ஜாலியா இருக்கலாம்.. உனக்கு அதை பார்க்கணும்னு தோணல..?”

”தோணல..”

“ஏண்டி..”

“ஏன்னா..” லேசாய் தயங்கிவிட்டு பிறகு சொன்னாள்

”அந்த மிக்கி மவுஸுக்குள்ள இருக்கறது எங்கப்பா..”

பவித்ரா அதிர்ச்சியாகி நிம்மியைப் பார்த்தாள்.

“உங்கப்பா அதுக்குள்ள எப்படிடீ போனாரு..”

“ம்.. வேலை கேட்டு போனாரு.. அந்த வேலை தந்துட்டாங்க..”

“சரி உங்கப்பாதானே.. இன்னும் ஜாலிதான்.. வா போலாம்..”

“இல்ல.. பிடிக்கல.. நீ வேணா போ..”

“சரி நான் போறேன்..” என்றபடி பவித்ரா நடக்க ஆரம்பிக்க எப்போதும் கூட வருகிறவள் திடீரென இல்லாமல் போக நிம்மிக்கு உடனே தனித்த விட்ட உணர்வு வந்தது. கூடவே அழுகை வரும் போல் இருந்தது. சட்டென அவளை நோக்கி ஓடினாள். அவளை நெருங்கியதும் மனசு அமைதியானது. பவித்ரா சந்தோசமாகிப் பார்த்தாள்.

“அப்ப மிக்கி மவுஸை பார்க்க வர்றேதானே..” என்றாள்.

“வர்றேன். ஆனா நீ மட்டும் அதுக்கிட்ட போ.. நான் பக்கத்தில வந்து பார்க்க மாட்டேன்.. சரியா..”

“சரி. நீ கூட வந்தா போதும்..”

இருவரும் வேகமாய் நடக்க ஆரம்பித்தார்கள்.

இருவரும் படிப்பது கார்ப்ரேசன் பள்ளியில்தான். ஐந்தாம் வகுப்பு. வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டராக இருக்கும் அவர்களது பள்ளிக்கூடம். நடந்தே வந்து விடுவார்கள். வரும் வழியில் நகரின் பிரதான சாலைகளை கடந்துதான் வருகிறார்கள். இருக்கும் கடைகளின் கண்ணாடி வழியே தெரியும் பொம்மைகளும் டாட்டா காட்டுவார்கள். அதை மெளனமாய் கொஞ்சி விட்டு பிரியமில்லாமல் நகர்வார்கள். உள்ளே தொங்கும் அழகிய துணிகளை நாம் உடுத்தினால் எப்படியிருக்குமென பேசிக் கொள்வார்கள். கற்பனையில் அதை போட்டு ரசித்தும் பார்ப்பார்கள். ஒழுங்காய் அடுக்கி வைத்திருக்கும் இனிப்பு வகைகளைப் பார்த்து பார்த்து எச்சில் ஊறுவார்கள். அவர்களுக்கு அந்த தெருவை கடக்கும் நிமிடங்கள் வாழ்வில் அழகிய நிமிடங்கள். புதியதாய் அதில் மிக்கி மவுஸும் சேர்ந்து கொள்ள பவித்ராவுக்கு கூடுதல் சந்தோசம்.

தூரத்தில் தெரிந்தது மிக்கி மவுஸ். அதை பார்த்ததும் பவித்ராவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. புத்தக பேக்கை நிம்மியிடம் தந்தாள். வேகமாக ஓடினாள். நிம்மி முதலில் நிமிர்ந்து பார்க்கவில்லை. பிறகு மெதுவாய் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். மிக்கி மவுஸுக்குள் அப்பா. அவரைச் சுற்றிலும் நிறைய கூட்டம் இருந்தது. அதுதவிர கடைக்குள் வரச் சொல்லி வீதியில் போவோர்களை அன்புடன் அழைத்துக் கொண்டிருந்தார். அவரது அசைவில் சின்ன நடனம் தெரிந்தது. மாலை வெய்யில் அவர்மீது இன்னும் அடித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் குழந்தைகள். சில குழந்தைகள் அதனிடம் கைக் கொடுத்த பரவசத்தில் இருந்தார்கள். சில குழந்தைகள் பயத்தில் விலகியிருந்தார்கள். குழந்தைகளுடன் . எடுக்கும் போட்டோக்களில் மிக்கி மவுஸிற்குள்ளிருந்து கஷ்டப்பட்டு அப்பா புன்னகைத்து கொண்டிருப்பது தெரிந்தது. நிம்மிக்கு அழுகை வரும்போல் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் பவித்ரா வந்தாள். முகத்தில் வீட்டிற்கு போக வேண்டிய வருத்தம் இருந்தது. பேக்கை வாங்கிக் கொண்டாள். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

“அப்பா.. எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு தெரியுமா..? உனக்கு ஏண்டி பார்க்கணும்னு தோணல.?”

“தோணல விடேன்..” என்று நிம்மி கத்தியபடி வேகமாய் நடந்தாள்.

நிம்மி வீட்டிற்குள் வந்ததுமே புத்தக பையை தூக்கிப் போட்டாள். அவளுக்கு தனியே உட்கார்ந்து ஓவென அழ வேண்டும் போலவும் இருந்தது. அம்மா இன்னும் வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பியிருக்கவில்லை. நிறைய யோசனைகள் வந்தது அவளுக்கு. ஆனால் அப்பா இந்த வேலைக்கு ஏன் போனார் என்பது மட்டும் புரியவேயில்லை. நேற்று இரவெல்லாம் வீட்டிற்கு வந்து எவ்வளவு கஷ்டப்பட்டார். நினைக்க நினைக்க நிம்மிக்கு கோபமும் வந்தது. அம்மா வந்ததுமே சண்டையை ஆரம்பித்தாள்.

“அப்பா இந்த வேலை பார்க்கறது பிடிக்கலம்மா..”

“என்னடி பண்ண சொல்லற.. அப்பாவுக்கு பெரிய படிப்பில்ல.. புத்திசாலித்தனமும் பத்தாது.. இதோட எத்தனை வேலை பார்த்துட்டாரு.. ஏதாவது ஒரு இடத்தில தொடர்ந்து அவரால இருக்க முடிஞ்சுதா..? போற இடத்தில ஏதாவது ஒரு சண்டையை போடர்றாரு.. இல்லா கொஞ்ச நாள் அவரோட வேலையைப் பார்த்துட்டு அவங்களே துரத்தி விட்டராங்க.. என்ன பண்ண சொல்ற என்னை..?’

”இல்லம்மா.. அப்பா பாவம்மா.. வேலை விட்டு வந்து ரெண்டு நாளா எப்படி கஷ்டப்படறாரு..”

கற்பகத்திற்கு நேற்று தன் கணவர் குமரேசன் வேலையை விட்டு வந்த அந்த காட்சி அப்படியே ஞாபகத்தில் இருந்தது. குமரேசன் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டினான். குளிக்க கிளம்பும் போதுதான் கற்பகம் அவனது உடம்பைப் பார்த்தாள். அது முழுக்க சிவந்து போயிருந்தது. ஆங்காங்கே நெருப்பில் வெந்த மாதிரியான சிவப்பு. கற்பகம் அதிர்ச்சியாகி அவனை நிறுத்தினாள்.

“உடம்பெல்லாம் என்னாச்சுங்க..” என்றாள்.

டி.வி பார்த்துக் கொண்டிருந்த நிம்மியும் பதட்டமாய் வந்து அப்பாவைப் பார்த்தாள். சிவந்த உடம்பைப் பார்த்ததும் அவளும் பதட்டமானாள்.

“அப்பா.. என்னாச்சுப்பா..”

“அது ஒண்ணுமில்லம்மா.. அந்த மிக்கி மவுஸ் டிரஸ் போடறனல்ல.. அடிக்கிற வெய்யிலுக்கு வியர்த்துப் போறதல அப்பா உடம்பு தாங்க மாட்டேங்குது.. அலர்ஜியாயிடுச்சு.. பயங்கரமா அரிக்க ஆரம்பிச்சிருது.. அதான் சிவந்துப் போச்சு.. அது ஒண்ணும் ஆகாது.. எல்லாம் போக போக சரியாயிடும்மா..”

நிம்மிக்கு சட்டென அழுகை வந்தது.

“இல்லப்பா.. இந்த வேலை வேண்டாப்பா.. பார்க்க கஷ்டமா இருக்குப்பா..” என்றாள்.

“எல்லாம் சரியாயிடும்.. கடையில ஓனரு மருந்து வாங்கி கொடுத்திருக்காரு.. போட்டா சரியாயிரும்.. போம்மா.. நீ போய் தூங்கு..” என்றபடி குமரேசன் குளிக்கப் போக நிம்மி அழுகையோடே அவரைப் பார்த்தாள்.

“அந்த மிக்கி மவுஸ் வேலை எனக்கு பிடிக்கலம்மா..” என்று கத்தினாள்.

நேற்றைய காட்சிகள் கலைய கற்பகம் நிம்மியிடம் பொறுமையாய் பதில் சொன்னாள்.

“அப்பாதான் எல்லாம் சரியாயிடும்னு சொன்னாரில்ல.. கொஞ்ச நாள் போகட்டும்.. அப்புறம் வேலை பார்த்துக்கலாம்.. சரியா..” என்றாள்.

“இல்லம்மா.. அப்பா பாவம்மா.. ராத்திரியெல்லாம் சரியாவே தூங்கலம்மா.. உடம்பை சொறிஞ்சுட்டே படுத்திட்டிருந்தாரு.. நீ வேலைப் பார்க்கற வீட்டில அவங்கிட்ட சொல்லி அப்பாவுக்கு வேற வேலை வாங்கி கொடும்மா..”

கற்பகம் நிம்மியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“சொல்றேம்மா.. நாளைக்கே சொல்றேன்.. போதுமா..” என்றபடி நிம்மியின் கண்களை துடைத்து விட்டாள்.

கற்பகம் குமரேசனுக்கு தீவிரமாகவே வேலை தேட ஆரம்பித்தாள். தான் வீட்டு வேலைப் பார்க்கும் இடம் தவிரவும் தெரிந்த இடத்திலெல்லாம் சொல்லி வைத்திருந்தாள். குமரேசன் அதே வேதனையோடுதான் தினமும் வீட்டிற்கு வருகிறான். குளித்து விட்டு வந்து மருந்தை தடவச் சொல்லி படுத்து விடுகிறான். தூக்கத்தில் அப்பாவின் முனங்கல் சத்தம் நிம்மியை தூங்க விடுவதில்லை. பிறகு தூங்கிய நிம்மியின் தூக்கக் கனவில் மிக்கி மவுஸ் வந்தது. அதற்கு நீளமான பற்கள் இருந்தன. தலையின் முன்புறம் கூர்மையாய் இரண்டு கொம்புகள் இருந்தன. பவித்ரா இப்போதும் மிக்கி மவுஸை பார்க்காமல் வீடு திருப்புவதில்லை. சலிக்காமல் ரசிக்கிறாள். அதனுடன் எப்படியாவது ஒரு போட்டோ எடுத்து கொள்ள வேண்டுமென்பது அவளின் கனவாய் இருந்தது. நிம்மி வழக்கம் போல் தூரத்தில் நின்று கொள்கிறாள். பக்கத்தில் போக பிடித்ததில்லை. எப்படியாவது அப்பாவுக்கு வேறு வேலை கிடைக்க வேண்டும். அதுதான் அவளது சமீபத்திய பிரார்த்தனையும்கூட.

குமரேசனுக்கு புதியதாய் வேலை கிடைத்த விஷயத்தை நிம்மியிடம் சொல்ல அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. கற்பகத்தை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள். தேங்க்ஸ்ம்மா என்றாள். ஒரு மளிகைக்கடையில்தான் வேலை. மளிகை ஆர்டர்களை வண்டியில் போய் நேரடியாய் வீடுகளுக்கு சப்ளை செய்கிற வேலை. சம்பளம் இதைவிட அதிகம்தான். கற்பகத்திற்கும் சந்தோசமாய் இருந்தது.

குமரேசன் வீட்டிற்கு உடைகளை மாற்றுவதற்குள் வேலை கிடைத்த விஷயத்தை அம்மாவும் பொண்ணும் போட்டி போட்டுக் கொண்டு வந்து சொன்னார்கள்.

“சம்பளமும் அதிகம்.. நடக்கற தூரத்திலதான் கடையே இருக்கு.. நாளைக்கே வந்து வேலையில சேர சொல்லிட்டாங்க.. அப்பா.. நிம்மி குட்டிக்கு என்னை விட ரொம்ப சந்தோசம்..” என்று கற்பகம் சொல்லிக் கொண்டு போக குமரேசன் பேசாமல் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டிக் கொண்டிருந்தான்.

“என்னங்க நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன்.. நீங்க ஒண்ணுமே சொல்ல மாட்டீறீங்க..?”

“எனக்கு அந்த வேலை வேண்டாம் கற்பகம். இதே வேலையில இருந்துக்கறேன்..” என்று குமரேசன் சொல்ல நிம்மியும் கற்பகமும் அதிர்ந்து போனார்கள்.

”அப்பா.. என்னப்பா சொல்றீங்க..? அம்மா கஷ்டப்பட்டு இந்த வேலையை வாங்கியிருக்காங்க.. நீங்க சரி போறேன்னு சொல்லுங்கப்பா..” நிம்மிக்கு அழுகை வரும் போல் இருந்தது.

குமரேசன் மெதுவாய் பேச ஆரம்பித்தான்.

“எனக்கு அந்த வேலை வேணாம்மா.. நான் பார்த்ததிலேயே இந்த வேலைதாம்மா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அதுக்கும் காரணம் இருக்கும்மா.. எனக்கு பெருசா படிப்பறிவு இல்ல. கையெழுத்துகூட ஒழுங்க போடத் தெரியாது. பெரிய அறிவுமில்ல.. அது எனக்கே தெரியும்.. இதுக்கு முன்னாடி வேலைப் பார்த்த எந்த இடத்திலயும் என்னை ஒரு மனுசனாகூட பார்த்ததுகூட இல்ல.. ஒரு நாயை விரட்டற மாதிரிதான் விரட்டியிருக்காங்க.. ஆனா.. இந்த துணிக்கடையில கொடுத்த அந்த மிக்கி மவுஸ் டிரஸ் என்னை புது மனுசனாக்கி இருக்குது.. மனுசனாவே இப்பத்தான் என்னை மதிக்கறாங்க.. வர்ற குழந்தைகள் என்னைப் பார்த்து சந்தோசப்படறாங்க.. கை கொடுக்குதுங்க.. போட்டோவெல்லாம் எடுத்துக்குதுங்க.. எனக்கு இப்பத்தான் வேலை பார்க்கற மாதிரியே இருக்கு.. பட்ட அவமானத்து முன்னால இந்த அரிப்பெல்லாம் ஒண்ணுமே இல்லம்மா.. அதெல்லாம் ஆறிடும்மா.. செல்லம் இங்க வா.. அப்பா இந்த வேலையிலயே இருந்துக்கறம்மா..” என்றபடி குமரேசன் நிம்மியை அணைத்துக் கொண்டான்.

கற்பகம் கண்கலங்கி குமரேசனைப் பார்த்தாள். நிம்மி நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.

“அப்பா..” என்றாள்.

“என்னம்மா..”

“நாளைக்கு பவித்ராவோட நானும் கடைப்பக்கம் வர்றேம்ப்பா.. வந்து நானும் அந்த மிக்கி மவுஸுக்கு கை கொடுக்கணும்ப்பா..!”

– ஃபெமினா – மே 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *