மார்கோனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 7,496 
 
 

வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும், கோபாலும். இருவரும் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகின்றனர். மாடசாமியின் மனைவி மீனாவும், கோபாலின் மனைவி ராஜாத்தியும் தினமும் தங்கள் கணவர்களுக்கு மதிய உணவை அவர்களுடைய வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம்.

“ஏங்க, இப்ப எல்லாம் மத்தியானத்துல வெயில் அதிகமா இருக்குல்ல?” என்று பேச்சை ஆரம்பித்தாள் மீனா. “ஆமா, நீ வீட்டுல சும்மா இருக்க. உனக்கே சூடு அதிகமா இருந்ததுனா, நானும் கோபாலும் வயல்ல நாள் பூரா வேலை செய்யறோம், எங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றான் மாடசாமி. “அதுக்கு இல்லீங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, நம்ம கிராமத்துக்கு கரன்ட் வந்து ஆறு, ஏழு மாசம் ஆகுது. நீங்கதான் தனியா கொஞ்சம் காசு சேத்து வெச்சிருக்கீங்கல்ல. அதுல எதாவது வாங்கலாமா?” என்றாள் மீனா. இதைக்கேட்ட கோபால், “என்னடா, தனியா காசு சேத்து வெச்சிருக்கியா? என்ன செய்யப்போற அத வெச்சு?”. அதற்கு மாடசாமி, “இப்போ சொல்லமாட்டேன். செஞ்சதுக்கு அப்பறம் சொல்றேண்டா” என்றான்.

உண்டுமுடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் மீனாவும், ராஜாத்தியும். “உனக்கு ஏதாவது வாங்கி குடுக்கறதுக்கு தான் உன் வீட்டுக்காரர் காசு சேத்துட்டு வர்றார்னு நினைக்கிறேன்டி. குடுத்துவெச்சவ நீ”, என்றாள் ராஜாத்தி. இதைக்கேட்டு ஒருவித மகிழ்ச்சியில் மீனா, “அப்படியா? நீ சொன்னது உண்மையா இருந்த சந்தோஷம் தான். ஆனா அவ்ளோ காசுல என்னத்த வாங்கப்போறார்னு தான் தெரியல” என்றாள். “எவ்ளோ காசு இருக்கும்?” என்று கேட்டாள் ராஜாத்தி. அதற்கு மீனா, “கிட்டத்தட்ட முண்ணூறு ரூபா இருக்கும். இவ்ளோ காசுல என்ன செய்யப்போறார்னு தெரியல” என்றாள்.

“என்னாது? முண்ணூறு ரூபாயா? அவ்ளோ காசுல உன்ன தங்கத்துலயே குளிப்பாட்டப்போறாரு. அஞ்சு பவுன் தங்கம் வாங்கலாம் அந்த காசுல”, என்றாள் ராஜாத்தி. அதற்கு மீனா, “ஹும், நாம மட்டும் இதப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது. அவரு என்ன நெனச்சிருக்காரோ அது தெரியலயே” என்று பெருமூச்சுவிட்டாள். வீட்டை அடைந்தனர் இருவரும்.
சில நாட்கள் கழிந்தன. அன்று சனிக்கிழமை, நேரம் காலை 8 மணி. அன்று சீக்கிரமே எழுந்து, எங்கேயோ வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் மாடசாமி. “மீனா, அந்த சின்ன தகரப்பெட்டில வெச்சிருக்கற காசை எடுத்துட்டுவா. நான் வெளிய கிளம்பணும்”, என்று மீனாவைப் பார்த்து கூறினான் மாடசாமி. “இதோ ஒரே நிமிஷம், இப்பொ எடுத்துட்டு வர்றேங்க” என்று வேகவேகமாக உள்ளே சென்றாள் மீனா. அவளிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, “நான் திருச்சி வரைக்கும் போய்ட்டு வர்றேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் மத்தியானம் சாப்பிடறதுக்கு வந்துடுவேன்” என்றான்.

நேரம் பத்து மணி. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை தன்னுடைய மிதிவண்டியில் வந்தடைந்தான் மாடசாமி. முருகன் ரேடியோ கடையின் வாசலில் தன் மிதிவண்டியை நிறுத்தி கடைக்கு உள்ளே சென்றான். “வா மாடசாமி. எப்படி இருக்க? வீட்டுல மீனா சௌக்கியமா? என்றார் அந்த கடையின் முதலாளி முருகன். “எல்லாரும் நல்லா இருக்கோம் பெரியப்பா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான் மாடசாமி. “நான் நல்லா இருக்கேன். அப்பறம் என்ன சமாச்சாரம்? இந்த தடவ தேவையான அளவு காசு எடுத்துட்டு வந்திருக்கியா?” என்ற முருகனிடம் “இருக்கு பெரியப்பா” என்றபடியே கடையில் அங்கும் இங்கும் நடந்தவண்ணம் இருந்தான் மாடசாமி.

“சரி, இங்க வா, இதப்பாரு. இது தான் இருக்கறதுலயே சூப்பர். இத வாங்கிக்கோ” என்றார் முருகன். “இது வேணாம் பெரியப்பா. எனக்கு மார்கோனி கம்பெனி ரேடியோ தான் வேணும்”, என்றான் மாடசாமி. “மார்கோனியும் நல்ல கம்பெனி தான். அதயே எடுத்துக்கோ” என்றார் முருகன். “எவ்ளோ விலை பெரியப்பா?” என்று மாடசாமி கேட்க, “உனக்கு முண்ணூறு ரூபா, மத்தவங்களுக்கு முண்ணூத்தி அம்பது ரூபா” என்றார் முருகன். அவரிடம் தான் கொண்டுவந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, ரேடியோவை மிதிவண்டியின் பின்புற இருக்கையில் வைத்து இறுக கட்டிவிட்டு, தன் பெரியப்பாவிடம் விடைபெற்று, மிகவும் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினான் மாடசாமி. பெரிதாக எதையோ சாதித்துவிட்டது போல் உணர்ந்தான்.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி 12.40. தன் கணவன் வந்திருக்கும் சத்தத்தைக் கேட்டு, தனக்கு ஏதாவது வாங்கி வந்திருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் வீட்டு வாசலுக்கு விரைந்து வந்தாள் மீனா. “என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க? எனக்காக வாங்கறதுக்காகவா அவ்ளோ தூரம் போய்ட்டு வந்தீங்க”? என்று ஆவலுடன் கேட்டாள் மீனா. அதற்கு மாடசாமி, “இங்க பார் என்ன வாங்கிருக்கேன்னு” என்று மகிழ்ச்சியுடன் தான் கொண்டுவந்திருக்கும் ரேடியோவை மீனாவிடம் காட்டினான். இதை சற்றும் எதிர்பாராத மீனா, “என்னங்க இதப்போய் வாங்கிருக்கீங்க? தங்கம், வெள்ளினு ஏதாவது வாங்கியிருந்தாலாவது பிற்காலத்துல உதவும். இத வெச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும்?” என்று சற்றே தயக்கம் கலந்த ஏமாற்றத்துடன் கூறினாள். “எனக்கு இத வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அத ஒருவழியா வாங்கிட்டேன்னு சந்தோஷமா இருக்கேன், நீ என்ன இப்படி பேசற?” என்று சிறு கோபத்துடன் மாடசாமி கேட்க, மீனா வேறு வழியின்றி அமைதியானாள்.

அந்தக்காலத்தில் கணவன் பேச்சை தட்டிக்கேட்கமாட்டார்கள் மனைவிமார்கள்.
வீட்டுக்குள் சென்று, வீட்டுக்கூடத்தில் இருந்த ஒரு மேஜையை ஒரு ஓரமாக வைத்து, அதன் மேல் ஒரு துணியை விரித்து, அந்த துணியின் மேல் மிகவும் பொறுமையாக தான் வாங்கிவந்த ரேடியோவை வைத்தான் மாடசாமி. மின்கம்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து, ப்ளக் பாய்ன்ட்டில் சொருகி ஸ்விட்சைப் போட்டான். ரேடியோவில் ஏதோ ஒரு சத்தம் கேட்க ஆரம்பித்தது, ஆனால் தெளிவாக ஏதும் கேட்கவில்லை. சற்று டியூன் செய்து பார்த்தான் மாடசாமி. இலங்கை வானொலி நிலையத்தில் ஏதோ ஒரு செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ரேடியோ சரியாக வேலை செய்வதை எண்ணி மகிழ்ந்தான் மாடசாமி. அன்று முதல், தினமும் வீட்டுக்கு வந்தவுடன் ரேடியோவில் ஒலிபரப்பாவதைக் கேட்காமல் தூங்கியதில்லை மாடசாமி.

நாட்கள் ஒடின. அந்த ரேடியோவை பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்தான் மாடசாமி. அன்று ஒரு இரவு, வீட்டுக்கூடத்தில் அமர்ந்து ரேடியோவில் எதையோ கேட்டுக்கொண்டிருந்தனர் மாடசாமியும், மீனாவும். “நான் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றான் மாடசாமி. சிறிது நேரத்தில் ரேடியோவிலிருந்து வந்துக்கொண்டிருந்த சத்தம் திடீரென நின்றது.

“என்னங்க, ரேடியோ வேலை செய்யலங்க. என்ன ஆச்சுன்னு தெரியல” என்றாள் மீனா. ஆனால் பதில் ஏதும் வரவில்லை. உள்ளே சென்று பார்த்த மீனாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. மாடசாமி மயங்கி கீழே விழுந்திருந்தான். “ஐய்யோ! என்னங்க, என்னாச்சுங்க? எழுந்திருங்க” என்றபடியே மாடசாமியில் முகத்தில் பதற்றத்துடன் தண்ணீர் தெளித்தாள் மீனா. மாடசாமி மெதுவாக கண் திறந்ததைக் கண்டபின் தான் நிம்மதி அடைந்தாள். “திடீர்னு மயக்கம் வந்திருச்சு, அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியல. எனக்கு ஒண்ணும் இருக்காது, நீ பயப்படாத” என்று மீனாவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி கூடத்திற்கு அழைத்துவந்தான் மாடசாமி.

கூடத்திற்கு வந்து நாற்காலியில் மாடசாமி அமர்ந்த அடுத்த நொடி ரேடியோ வேலை செய்யத்தொடங்கியது. மீனாவுக்கு ஆச்சர்யம். நடந்த விஷயத்தை மாடசாமியிடம் கூற, “பாத்தியா? நான் நம்ம ரேடியோவ எவ்ளோ நல்லா பாத்துக்கறேன், அதனாலதான் நான் மயங்கி விழுந்தது உனக்கே தெரிஞ்சது. நான் ரேடியோ வாங்கினது எவ்ளோ நல்ல விஷயம் பாரு” என்றான் மாடசாமி. பதில் ஏதும் பேசாமல் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அமர்ந்தாள் மீனா. அடுத்த சில நாட்கள் வழக்கம்போல் இருந்தன.

திடீரென ஒரு நாள், ராஜாத்தி அவசர அவசரமாக மீனாவின் வீட்டுக்கு வந்து “மீனா, ஒரு கெட்ட சேதி. கொஞ்சம் பதட்டப்படாம இரு” என்று மூச்சிரைக்க மீனாவிடம் கூறினாள். “என்னடி சொல்ற. என்ன ஆச்சு?” என்றாள் மீனா. “உன் வீட்டுக்காரர் இன்னிக்கி, …” என்று ஆரம்பித்த ராஜாத்தி, சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் திணறினாள். “என்னடி ஆச்சு அவருக்கு? சொல்லுடி” என்று கதறத்தொடங்கினாள். “இன்னிக்கி வயல்ல வேலை செஞ்சிட்டிருக்கும்போது திடீர்னு மயங்கி விழுந்துட்டார். என் வீட்டுக்காரர்தான் அவர ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருக்கார். கவலப்படாத. பயப்படாம இரு. சரி ஆகிடும்” என்று மீனாவுக்கு தைரியம் கூற முயற்சித்தாள் ராஜாத்தி. “இவருக்கு மட்டும் இப்படியே ஆகுதே! நாங்க என்ன பாவம் பண்ணோம்! கடவுளே, நீ தான் அவர காப்பாத்தணும். எங்கள காப்பாத்து கடவுளே” என்று கதறினாள் மீனா. ராஜாத்தி எவ்வளவோ சமாதானம் சொல்லியும் மீனாவை சமாதானப்படுத்த முடியவில்லை.

என்ன தோன்றியதோ தெரியவில்லை மீனாவுக்கு, பூஜை அறையில் அமர்ந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்த அவள், திடீரென எழுந்து கூடத்திற்கு சென்றாள். ரேடியோவை ஆன் செய்து பார்த்தாள். ஆனால் அது வேலை செய்யவில்லை. இதையே மூன்று, நான்கு முறை செய்தாள். ஆனால் ரேடியோவில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மீனாவுக்கு கவலை அதிகமானது. ஓ என்று அலறியடித்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்றாள். சத்தம்போட்டு அழத்தொடங்கிய மீனாவை ராஜாத்தி சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. ராஜாத்தியின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்த மீனா, சட்டென்று கூடத்திற்கு சென்றாள். ரேடியோவில் ஏதோ பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட பிறகு தான் தன்னை சற்று சுதாரித்துக்கொண்டாள். அவளுக்குள் சின்ன ஒரு நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *