தூங்காத கண்ணென்று ஒன்று

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 22,691 
 

அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்… ”எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்…” – அவள் மேற்கொண்டு சொன்ன எதையும் நான் காதில் வாங்கவே இல்லை. திருமணமான 30 வயதுப் பெண், கணவனுடன் சேர்ந்து வாழாமல் தனியே இருந்தால், அம்மாவின் புலம்பல்கள் எதுவாக இருக்கும் என உங்களுக்குத் தெரியும்தானே? இரவு உணவு சாப்பிட்டதும் அறைக்குத் திரும்பினேன்.

எட்வினின் நினைவு, கடந்த ஒரு வாரமாகவே மனதைப் போட்டுப் பிசைந்தது. இப்போது ஏன் அடிக்கடி அவன் ஞாபகம் வருகிறது… அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து?

எங்கள் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் வேதா அக்கா வீட்டின் மொட்டைமாடி அறையில், அவன் நண்பர்களுடன் தங்கியிருந்தான். அவனைப் பார்த்ததும் அப்படி ஒன்றும் மனதில் பட்டாம்பூச்சி பறந்தோ, மணி அடித்தோ, மாயாஜாலமோ நிகழவில்லை. மிக இயல்பாகத்தான் முதல்முறை பார்த்தேன். 11-ம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து அப்பாவுடன் வரும்போது, அவன் பால்கனியில் நின்றிருந்தான். என்னை நன்றாகத் தெரியும் என்பதுபோல தலையைச் சரிசெய்தவாறு பார்த்தான். அதன் பிறகு நான்கைந்து முறை அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டோம்.

இரவில் அவர்களின் அறைக்குப் பின்புறம் அமர்ந்து, எப்போதும் பாட்டு, அரட்டை, படிப்பு என இருப்பார்கள். 11 மணிக்கு மேல் கிடார் வாசிக்கும் சத்தம் கேட்கும். அது பழைய பாடல் ‘தூங்காத கண்ணென்று ஒன்று…’. இந்தப் பாடலை கிடாரின் இசையில் கேட்பது எனக்குப் புதிதாகவும் விருப்பமாகவும் இருந்தது. மாடியில் இருக்கும் எனது அறையில் இருந்து பார்த்தால், அவனது அறை நன்றாகத் தெரியும். இதற்கு முன்னர் ஒருதடவைகூட அந்த அறையையோ, அவர்களையோ பார்க்க வேண்டும் என எனக்குத் தோன்றியது இல்லை.

தூங்காத கண்ணென்று ஒன்றுஆனால், அன்று ஏனோ ‘வாசிப்பது அவனாகத்தான் இருக்கும்’ என நினைத்தபடி என் அறையின் ஜன்னலில் இருந்து பார்த்தேன். பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் அவன் தெரிந்தான். ஒரு காலை சேரின் மீது தூக்கி வைத்தபடி கிடாரை வாசித்துக்கொண்டிருந்தான். காரணமே இல்லாமல் அன்று அவனை அவ்வளவு பிடித்தது.

என் தோழி காயத்ரி வீட்டுக்குப் போகும்போது அவன் நிற்கிறானா என, அந்த மாடி அறையைப் பதற்றத்துடன் ஒரு நொடி பார்ப்பேன். நான் வீதியில் வருவது தெரிந்தால், பால்கனியில் நின்றிருப்பவன் வேகமாகக் கீழே இறங்கி, என் எதிரில் வருவான். ஒவ்வொரு தடவையும் கடந்து சென்றதும், சில அடி தூரத்தில் இருவரும் ஒரே சமயத்தில் திரும்பிப் பார்த்துக்கொள்வோம். அது எப்படி என ஆராய்ச்சி செய்வேன்… கையில் புத்தகத்தை விரித்தபடி.

என்னால் அவன் பார்வையைச் சட்டெனக் கடந்துவிட முடியவில்லை. தீர்க்கமான பார்வை அவனுக்கு. என்னைப் பார்க்கும்போது எல்லாம் அவன் கண்கள் ஏதோ சொல்வதுபோலவே இருக்கும். ‘ஒருவேளை பிரமையோ… எல்லோரையும்போல எனக்கும் காதல் வந்துவிட்டதோ? கூடாது. அவனை இனிமேல் பார்க்கக் கூடாது’ என, தூக்கம் வராத ஓர் இரவில் உறுதிகொண்டேன். ஆனாலும் அந்த கிடாரின் ஸ்வரங்கள் என்னைப் பாடாய்ப் படுத்தியது.

ஆடித் தள்ளுபடி சமயத்தில் கடைவீதிக்குச் செல்லும்போது, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கின் நெரிசல் மிகுந்த இடத்தில் பல நாட்கள் கழித்து அவனைப் பார்த்தேன். எதிர்பாராமல் பார்த்துக்கொண்டதால், இருவர் முகத்திலும் ஆச்சர்யம்; மகிழ்ச்சி. என்னைப் பார்த்துச் சின்னதாகச் சிரித்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்தபடி அவனைக் கடந்தேன். என்னைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும்? படபடத்தேன். அவன் சிரிப்பு, இரவு முழுக்க என்னுள் வியாபித்திருந்தது.

அவன், எங்கள் வீதியில் இருக்கும் பெண்களுக்கான கதாநாயகன். அவனைப் பற்றி பேசாமல் அவர்களுக்கு எந்த நாளும் விடியாது. அவனது பழுப்பு நிற யமஹா பைக்கில் வேகமாக வந்து, வேதா அக்கா வீட்டின் முன்பு சட்டென யு டர்ன் அடித்து நிறுத்துவான். அந்த யமஹா வண்டி, இம்மி பிசகாமல் அவன் சொன்னபடி கேட்கும்.

ஒருசமயம்… காயத்ரி, நான், அவளது அக்கா, இன்னும் தோழிகள் நிறையப் பேர் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவன் வந்தான். அத்தனை பேர் மத்தியிலும் என்னை வைத்த கண் வாங்காமல் அழுத்தமாகப் பார்த்துச் சென்றான். காயத்ரியின் அக்காவும் தோழிகளும் புகைந்தனர். ‘அவன் யார் என்றே எனக்குத் தெரியாது’ எனச் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. அழுதுவிடும் நிலையில் இருந்தேன். எல்லாவற்றையும்விட அப்பாவை நினைத்துத்தான் அழுகை வந்தது. டி.வி-யில் காதல் படங்களோ பாடலோ வந்தால், ‘இந்தக் கருமாந்திரம்தான் நல்லா இருக்கிற புள்ளங்கள கெடுக்குது’ என வாய்க்கு வந்தபடி திட்டி, சேனலை மாற்றுவார்.

தூங்காத கண்ணென்று ஒன்று2ஒரு விடுமுறையின் மதிய வேளையில், குறுக்குச் சந்தில் வந்தபோது அவனை மீண்டும் பார்த்தேன். காத்திருந்து பேசுவதுபோல் இருந்தது.

”ஹலோ… ஒரு நிமிஷம் நில்லு. உன் பேர்கூடத் தெரியாது. தெரிஞ்சுக்கலாமா?”

”அன்னைக்கு எதுக்கு என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி என்னை அப்படிப் பார்த்தீங்க?”

அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்… ”உன்னை அப்படித்தான் பார்க்கத் தோணுது.”

”எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்… வழிவிடுங்க நான் போறேன்” எனக் கிளம்பினேன்.

”ஏய்… ராஜீ நில்லு..!”

”என் பேர் தெரியாதுனு சொன்னீங்க. இப்ப கூப்பிடுறீங்க… எப்படித் தெரியும்?”

”எல்லாம் தெரியும். உங்க வீட்ல இன்னைக்கு எண்ணெய்க் கத்திரிக்காயும் முள்ளங்கி சாம்பாரும்தானே?”

”அம்மாடி… நீங்க பயங்கரமான ஆளு! யாரு சொன்னா இதெல்லாம்?”

”உங்க அப்பாதான் என் ரூம்ல வந்து, ‘தம்பி, இதெல்லாம் செய்யட்டுமா?’னு எங்கிட்ட யோசனை கேட்டுட்டுப் போனார்.”

நான் அடக்க முடியாமல் சிரித்தபடி ஓடி வந்துவிட்டேன்.

என் வீட்டில் எது நடந்தாலும், எட்வின் என்னிடம் கேட்க ஆரம்பித்தான். ‘இவனுக்கு எப்படித் தெரியும்?’ எனக் குழம்பினேன். அதற்கு விடையும் கிடைத்தது. ‘கோழி’ சிவா; பக்கத்து வீட்டுப் பையன். என்கூடவே இருப்பவன். கடை, கோயில்… என அவனை அழைத்துச் செல்வேன். ஆறாவது படிக்கும் அறுந்த வாலு. சமீபமாக வீட்டுக்கு அதிகம் வராமல் இருந்தவன், ஒருநாள் எட்வினுடன் பைக்கில் பின் பக்கம் உட்கார்ந்துகொண்டு போனான்.

தூங்காத கண்ணென்று ஒன்று3வேறு ஒரு மாலையில் கோழி சிவாவை விசாரித்தேன். அவன் அம்மாவிடம் கூறுவதாகச் சொன்னவுடன் உண்மையை ஒப்புக்கொண்டான். அப்போதுதான் அவன் பெயர் ‘எட்வின்’ எனவும் தெரிந்துகொண்டேன்.

அதன் பின்னர், கோழி சிவா மூலமாகவே மறைமுகமாக ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொள்வோம். செமஸ்டர் முடிந்து அவன் சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்றிருந்த நாட்களில், எட்வினை அதிகமாக நேசித்தேன். டி.வி-யில் ‘என் இனிய பொன் நிலாவே…’ பாட்டு வந்தால், அதில் என்னையும் எட்வினையும் கற்பனைசெய்து பார்க்கும்போது, அப்பா சேனலை மாற்றிவிடுவார்.

இரு மாதங்கள் கழிந்ததும், இரவில் கிடார் வாசிப்பு கேட்டது. ஓடிச்சென்று பார்த்தேன். எட்வின் வந்திருந்தான். சைகையில் பேசிக்கொண்டோம். யாருக்கும் தெரியாமல் அது தினமும் தொடர்ந்தது. அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம்.

”உங்ககூட பைக்கில் உட்கார்ந்துட்டு வரணும்னு ஆசையா இருக்கு.”

”இப்பவே வா” – பைக்கில் அமரப் போனான்.

”வேணாம்… யாராவது பார்த்துட்டா… செத்தேன்.”

”இப்படிப் பயந்து பயந்து செத்தா பரவாயில்லையா?”

”அப்படியில்லை… நிலா வெளிச்சத்துல ஆள் – அரவம் இல்லாத ரோட்டுல நீங்க, நான் மட்டும் பைக்ல போகணும், ஊரெல்லாம் சுத்தணும்.”

”இதுக்குப் பேரு ஊரா?”

”ஹலோ, கிண்டல் பண்ணாதீங்க. அப்போ எதுக்கு இங்கே படிக்க வந்தீங்க… உங்க ஊர்லயே படிக்கவேண்டியதுதானே?”

”சரி, உன்னை அப்படி ஒருநாள் பைக்ல உட்காரவெச்சுக் கூட்டிட்டுப்போறேன். ஒண்ணு, நாம போற அந்த ரோடு முடியணும்; இல்லை பெட்ரோல் காலியாகணும். அப்படி ஒரு பைக் ரைடு போகலாம்… சரியா?”

ஒவ்வொரு தடவையும் அவனைக் கேள்விகளால் துளைப்பேன். பொறுமையாகச் சிரித்தபடியே பதில் சொல்வான்.

”உங்களுக்கு எங்க தெருவுல எவ்ளோ ஃபேன்ஸ் தெரியுமா?”

”தெரியுமே…”

”அவ்ளோ பேர் இருக்கும்போது என்னை ஏன் உங்களுக்குப் பிடிச்சது?”

தூங்காத கண்ணென்று ஒன்று4”லூஸு… உன்னை இப்பத்தான் தெரியும்னு நினைச்சியா? இங்க வந்து நான் ரெண்டு வருஷம் ஆகுது. முன்னாடி ஹாஸ்டல்ல இருந்தேன். உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறப்பவே என்னமோ தெரியலை… பிடிச்சிருச்சு. அப்புறம் உன்னை அடிக்கடி பார்ப்பேன். நீ வந்தா வேணும்னே எதிர்ல வருவேன்… நீதான் கண்டுக்கலை.”

”நல்லவேளை… அப்பவே உங்களை பார்த்திருந்தேன்னா, ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருக்க மாட்டேன்.”

அது மொபைல் போன் அறிமுகமாகி இருந்த காலம். கருமை நிறத்தில் கனமான அந்த மொபைலை அவன் வைத்திருந்தான். நான் அவனிடம் இருந்து அதை வாங்கி, அதிசயமாகப் பார்ப்பேன். அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போனால், பாட்டி தூங்கிய பிறகு மொபைல் போனில் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்போம் மெதுவாக.

”உங்களுக்கு கிடார் ரொம்பப் பிடிக்குமா… எப்பவும் பழைய பாட்டே வாசிக்கிறீங்களே ஏன்…? அதுவும் ஒரே பாட்டு?”

”என் சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க. அம்மாவுக்கு அந்தப் பாட்டு பிடிக்கும்கிறதால, அப்பா அடிக்கடி அந்தப் பாட்டை வாசிப்பார். என் அப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை மிஸ் பண்ணினா அந்தப் பாட்டு வாசிப்பேன்.”

அவன் அப்பா, அவனது அம்மாவை மிகவும் நேசித்தார் என்றும், அவர் மிகச் சிறந்த மனிதர் என்றும் அடிக்கடி சொல்வான். ஒவ்வொரு ஞாயிறு அன்றும், அவரின் கிடார் வாசிப்புக்காக தேவாலயத்துக்கு வருபவர்கள் அதிகம் என்பான். அவரவர் அப்பாவே மகனுக்கு வழிகாட்டி என்பதால், இவன் கடைசி வரை நிச்சயம் என்னைக் காதலிப்பான் என நினைத்தேன். அதனாலேயே எனக்கு அவன் மீது பெருங்காதல் வந்தது. தாம்பத்ய வாழ்க்கையில், அடக்குமுறை இல்லாத புரிதலானது எவ்வளவு முக்கியம் என்பது, எனக்கு இன்னொருவனுடன் திருமணம் ஆன பிறகுதான் புரிந்தது.

கல்லூரிப் படிப்பு முடிந்து ஊருக்குச் சென்றான் எட்வின். நான் பள்ளியின் இறுதி வகுப்புக்கு வந்தேன். இருவரும் அவரவரின் எதிர்கால நலனில் கவனம் கொள்ளவேண்டிய தருணம் என்பதால், அடிக்கடி பார்ப்பதை, பேசுவதைக் குறைத்துக்கொண்டோம். என் பாடப் பகுதிகளுக்குத் தேவையான புத்தகங்களை அனுப்பினான். பரீட்சைக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினான்.

கல்லூரிக் காலத்தில் என் காதல் இன்னும் தீவிரமானது. அவன் அப்போது சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தான். நானும் சென்னையின் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியின் விடுதி, என் காதலை அதிக உரம் போட்டு வளர்த்தது. தினமும் இரவில், மொபைலில் மணிக்கணக்காகப் பேசுவோம். பேசும் பாதி நேரம், சண்டையில்தான் போய் முடியும். மறுநாள், அவனே பேசட்டும் என இறுமாப்புடன் இருப்பேன். நேரம் ஆக ஆக எப்போது அழைப்பான் என அலைபேசியும் கையுமாகவே அலைவேன். பொறுமை மீறி அவனுடன் பேச நினைக்கும் தருணத்தில் அவனிடம் இருந்து அழைப்பு வரும். இறுதியில் அலைபேசி வழியாக அவன் தரும் முத்தங்கள் அன்று முழுக்க இனிக்கும். எட்வினுக்கு மிகுந்த அன்பு வந்துவிட்டால், ‘கண்ணம்மா…’ என அழைப்பான்.

அவனுக்கு ஒரு விபத்தில் கைமுறிவு ஏற்பட்டதால், பைக்கைத் தொடுவது இல்லை. சென்னையில் பைக்கில் என்னைக் கூட்டிச் செல்லாதது பற்றி புலம்பிக்கொண்டே இருப்பேன்.

தீவிரமான எந்த ஒரு விஷயமும் அடுத்தவருக்குத் தெரியாமல் போகாதுதானே? அப்படித்தான் என் காதலும் அப்பாவுக்குத் தெரிய வந்தது. அவருடைய ரௌத்திரமான கோபத்தின் அடையாளங்களாக என் உடல் முழுவதும் பெல்ட்டின் வரிகளும், அவரின் கை ரேகைகளும் சாட்சிகளாக இருந்தன. எனக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்தார் அப்பா. அது தொடர்பாக வெளியில் போய் வரும்போது மாரடைப்பால் இறந்துபோனார்.

அப்பாவின் கடமைகளை, அம்மா தொடர்ந்தாள். அம்மாவிடம் கதறினேன்; முரண்டுபிடித்தேன். ஆனால், அவள் விஷம் குடித்துச் சாக முயன்றாள். பிழைத்தவுடன் என்னிடம் கெஞ்சினாள்… ”குடும்ப மானம் போயிடும். நான் சொல்றவனைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள்.

எட்வினுக்கு போன் செய்து அழுதேன். அவன் சில நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை.

”உன் அம்மா உயிர் போய், நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நம்ம காதல் உண்மையா இருந்தா, நாம நிச்சயம் சேர்ந்து வாழ்வோம்” – போனை வைத்தான்.

ஆனால், அவன் சொன்னதுபோல் நடக்கவில்லை. அம்மா பார்த்த திலீப்பைக் கல்யாணம் செய்துகொண்டேன். அனைத்தும் என்னை மீறி நடந்தன. எட்வினை மறப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. விருப்பம் இல்லாத மாற்றங்கள் மிகவும் துயரமானவை. யதார்த்தத்தை மெள்ள மெள்ள உணர்ந்தேன். திலீப்புடன் வாழப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு வந்தேன். ஒருகட்டத்தில் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம்.

ஒருநாள், திலீப் தன் பழைய காதலைச் சொல்லி வருத்தப்பட்டான். நானும் அவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என, எனக்கும் எட்வினுக்கும் இருந்த காதலைச் சொன்னேன். அங்கேதான் ஆரம்பித்தது சனி. சின்னச் சின்னக் கருத்துவேறுபாடுகளில்கூட என் காதலை அசிங்கப்படுத்தினான்.

”கல்யாணத்துக்கு முன்னாடியே இன்னொருத்தன்கூட ஊர் சுத்தினவதானே… உங்கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்?”


”நீங்க மட்டும் லவ் பண்ணலையா?”

”நான் ஆம்பளடி… என்னை எவனும் கேள்வி கேக்க மாட்டான். நீ போய் சொல்லிப்பாரு… காறித் துப்புவான்.”

”அப்படித் துப்புறவன்கூட நான் வாழலையே…”

திலீப் ஆரம்பத்தில் என்னைச் சந்தேகப்பட்டது இல்லை. வேலைக்குச் சென்று தாமதமாக வந்தாலும் ‘ஏன்?’ எனக் கேள்வி கேட்டது இல்லை. இந்த நிகழ்வுக்குப் பிறகு, என் கடந்த காலத்தை வறுத்தான். இருவரும் வேலைக்குப் போனாலும் சிறு வேலையைக்கூட அவன் பகிர்ந்தது இல்லை. இரு பக்கங்களிலும் வேலை செய்வது அநாயாசமாக இருந்தது. அவனைக் கேட்டால், ”உன்னை எவன் வேலைக்குப் போகச் சொன்னான். வீட்டு வேலையைப் பார்த்துக்கிட்டு உட்கார முடியலை… உனக்கு ஊர் மேயணும்!”

”ஆமா… சின்னச் சின்னச் செலவுக்குக்கூட உன்கிட்ட கையேந்தணும். அதுக்கு ஆயிரம் கேள்வி கேட்டு, அப்புறம் குடுப்பே.”

”பின்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா இருக்கு… உன் இஷ்டத்துக்குச் செலவு செய்ய? நான் சம்பாதிக்கிறேன்… குடுக்கிறப்போ ஆயிரம் கேள்வி கேட்கிறேன்.”

தூங்காத கண்ணென்று ஒன்று5இப்படி சின்னச் சின்ன ஊடல்கள் எங்களுக்குள் விஸ்வரூபம் எடுத்தன. நாளுக்கு நாள் அவனுக்கு என் மீதும் எனக்கு அவன் மீதும் இருந்த பிடிப்பு, கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து கொண்டே இருந்தது. அவனுடைய ஆதிக்க மனப்பான்மையால் என்னை அடிக்கவும் செய்தான். சந்தேகமும் மெள்ள எட்டிப் பார்த்தது. பொறுத்துக்கொள்ள முடியாமல், அவனைவிட்டு நிரந்தரமாக… தனியாக… விவாகரத்தோடு வெளியே வந்தேன்.

அம்மா, நான் செய்யக் கூடாத தவறைச் செய்ததுபோல் சண்டை போட்டாள். அம்மாவுக்கு இது குடும்ப மானம்; எனக்கு இது என் வாழ்க்கை. உறுதியாக இருந்தேன். கடந்த நினைவுகளுடனே அப்படியே தூங்கிப் போனேன்.

சில மாதங்களுக்குப் பிறகு கோழி சிவாவைப் பார்த்தேன். இன்டர்வியூவுக்காக சென்னை வந்ததாகச் சொன்னான்.

”அக்கா, உனக்கு ஒண்ணு தெரியுமா? எட்வின் அண்ணா இங்கேதான் இருக்கார். சோழிங்கநல்லூர்ல.”

”உனக்கு எப்படித் தெரியும்?” – மெள்ள அதிர்ந்தேன்.

”அவர்கிட்ட அடிக்கடி பேசுவேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் அமெரிக்காவுல இருந்து வந்தார்.”

‘எட்வினுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?’ எனக் கேட்க அசிங்கமாக இருந்தது. அவனே தொடர்ந்தான்.

”அவர் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை… உன்னை அடிக்கடி விசாரிப்பார்.”

நான் எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் காலையில் ஊருக்குச் சென்றுவிட்டான் சிவா.

சென்றவன், எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். எட்வின் கொடுக்கச் சொன்னதாக அவனுடைய அலைபேசி எண்ணை அனுப்பியிருந்தான். கூடவே விலாசமும்.

எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. எந்தத் தவறுமே செய்யாத அவனைப் பார்க்கவோ, அவனிடம் பேசவோ கூச்சமாக இருந்தது. மேலும் இத்தனை வருடங்கள் இருந்த இடைவெளி உறுத்தியது.

ஒரு பின்னிரவில் ‘கண்ணம்மா…’ என்ற

குறுஞ்செய்தி எட்வினிடம் இருந்து வந்தது. என் கண்களில் தாரைதாரையாக நீர். நான் பதில் அனுப்பவில்லை. உடனே அலைபேசியில் அழைத்தான். இரண்டாவது முறை அழைத்தபோது எடுத்தேன்.

”ஹலோ… நான் எட்வின் பேசுறேன். எப்படி இருக்க?”

எனக்கு, தொண்டை அடைத்தது. அவன் குரலைக் கேட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ‘அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். என்னவென அவனிடம் சொல்வது? எப்படிப் பேசுவது?’ என யோசிக்கும்போது, ‘கண்ணம்மா’ என்றான். நான் அழைப்பைத் துண்டித்து அழுது தீர்த்தேன். சில நிமிடங்கள் கழித்து, நானே அவன் எண்ணுக்கு அழைத்தேன்.

”இனிமே அப்படிக் கூப்பிடாதீங்க எட்வின். எல்லாமே மறந்துட்டேன்.”

”நான் எப்படி இருக்கேன்னுகூட கேட்க மாட்டியா?”

”என்னை அழவைக்காதீங்க எட்வின். ப்ளீஸ்… எதைப் பத்தியும் நினைக்கிற மனநிலையில் இப்ப நான் இல்லை. அப்புறமா பேசுறேன்” என போனை வைத்தேன்.

அவனது அலைபேசி அழைப்பை நான் நிராகரித்தாலும், தினமும் இரு முறையாவது விடாமல் முயற்சிப்பான். எப்போதாவது பேசுவேன். ‘இனி பேச வேண்டாம்’ என்றே அழைப்பைத் துண்டிப்பேன். இருந்தாலும் அவன் அழைக்காமல் இருந்தது இல்லை.

”ராஜி… நீ எங்கிட்ட பழைய மாதிரி எல்லாம் பேச வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு ஃப்ரெண்டு போல பேசலாம்ல. உன்கிட்ட வேற எதுவும் நான் எதிர்பார்க்கலை” என்பான்.

அதன் பின் அடிக்கடி பேசுவான். எனக்கும் அவனிடம் பேச நிறைய இருக்கின்றன. நான் பார்த்த சம்பவங்கள், சின்னச் சின்ன விஷயங்களைப் பகிரத்தோன்றும். ஆனால், எதுவோ என்னைத் தடுத்தது. பட்டும்படாமல் பேசுவேன். இருப்பினும் அவன் அழைப்பை எதிர்பார்ப்பேன்.

தூங்காத கண்ணென்று ஒன்று6சில வாரங்களாக அவனிடம் இருந்து அழைப்பு வரவே இல்லை. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல், என் மனம் நிம்மதி இழந்தது. வறட்டுப் பிடிவாதத்தைத் தளர்த்தி, அவன் எண்ணுக்கு அழைத்தபோது, அலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாகப் பதிவுசெய்த குரல் ஒலித்தது. ஒரு வாரமாக அவனைத் தொடர்புகொள்ள முயற்சித்து தோற்றுப்போனேன். ‘அவன் வேண்டும் என்றே விளையாடுகிறானா அல்லது எண்ணை மாற்றிவிட்டானா? மொபைல் பழுதாகியிருக்குமோ… என்னவாயிற்று..?’ எனக் குழம்பி, கண்களில் நீர் தளும்பியது. அம்மா பார்த்துவிட்டுப் பதற்றப்பட்டாள்.

”ஏன் அழுவுற… என்ன ஆச்சு?”

”நான் அழுதா பதறுற அளவுக்கு உனக்கு நெஞ்சுல ஈரம் இருக்கா?”

அவளுக்கு எதைப் பற்றி கேட்கிறேன் எனத் தெரியும். நான் எட்வினைக் காதலிக்கிறேன் எனத் தெரிந்ததும், ஒன்றுவிட்ட உறவுகள்கூட ஒன்றாகக் கூடி அவனை அடிக்கப் புறப்பட்டது.

எப்போதாவது விசேஷங்களில் பார்க்கும் ஏதோ ஒரு சொந்தம், ‘அப்படி என்ன ஒருத்தனைப் பார்த்ததும் உங்களுக்கு எல்லாம் காதல் வந்துடுமோ… படிக்க அனுப்பினது உங்க அப்பன் தப்பு’ என்றபடி என் கன்னத்தில் அடித்தபோது, ‘நம்ம மாமா… உன் நல்லதுக்குத்தான் அடிச்சார்’ என சமாதானம் சொன்னாள் அம்மா.

அப்பா இறந்தவுடன் எல்லா சொந்தங்களும் விலகிப்போனது. திருமணத்தை நடத்த படாதபாடு பட்டாள் அம்மா. என்னை அடித்த மாமா, என் கல்யாணத்துக்குக்கூட வரவில்லை. இன்று நான் எட்வினைத் தவிர்ப்பதற்குக் காரணம் அம்மாவே சொல்லிக் காண்பிப்பாள்… ‘ஓ… இவனைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் திலீப்பை விவாகரத்து செஞ்சியா?’

கடந்த சில மாதங்களாக எட்வின் பேசியவையே மனதில் சுழன்றன. மனம் லேசாகிப்போன பொழுதுகள் அவை. ‘எட்வின் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?’ என மனதில் அடிக்கடி தோன்றும். ஒருநாள் அவனிடம் கேட்டேன்.

”உன்னை மறக்க முடியலை. அதான் பண்ணிக்கலைனு எல்லாம் பொய் சொல்லலை ராஜி. நிச்சயம் பண்ணியிருந்திருப்பேன்… உன்னை மாதிரி பெண்ணைப் பார்த்திருந்தா” என்றான்.

”ஏன்… எங்கிட்ட அப்படி ஒண்ணும் ஸ்பெஷல் இல்லையே எட்வின்.”

”ராஜி, வாழ்க்கையில ஒருசிலரைத்தான் காரணமே இல்லாமல் பிடிக்கும். ஏன் பிடிக்கும்… எதுக்குப் பிடிக்குனு எல்லாம் தெரியாது. எந்த உள்நோக்கமும் இருக்காது. அப்படித்தான் உன்னைப் பிடிச்சது. ஒரு லேடீஸ் சைக்கிள்ல பின்னாடி நோட்புக்ஸை வெச்சுக்கிட்டு, கன்னத்துல மிட்டாய் அடைச்சுக்கிட்டு, உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நீ சிரிச்சுச் சிரிச்சுப் பேசிட்டே போயிட்டிருந்தது இன்னும் என் கண் முன்னாடி வரும்.”

என் கண்களில் நீர் வழிந்தது. அந்தப் பின்னிரவில் அவன் கூறிய அந்த வார்த்தையின் உன்னதம் இப்போது புரிந்தது. அப்பவும் இப்பவும் அழகான தருணங்களையே பரிசாக அளித்திருக்கிறான். இதோ என் பொய் பிம்பத்தைக் கழற்றிக்கொண்டிருக்கிறேன்.

‘நிகழும் பொழுதுகளைவிட

அற்புதமானவை

சில பின்னிகழ்வுகள்’

எங்கோ படித்த இந்தக் கவிதையைப்போல் நானும் ஒரு நிகழ்வைச் சந்தித்தேன்.

கிறிஸ்துமஸ் அன்று, என் தோழியின் விருப்பத்துக்காக பெசன்ட் நகர் தேவாலயத்துக்குச் சென்றேன். வைக்கோலின் மேல் பஞ்சுப்பொதிகளில் செய்த குழந்தை இயேசு மற்றும் மாதாவின் உருவங்கள் மிகவும் சாந்தமாக, மெழுகுவத்தியின் ஒளியில் மிளிர்ந்தன. உள்ளே ஒலித்த கேரல் இசை, மனதுக்கு ஒருவித அமைதியைத் தந்தது.

‘கிடார் வாசிப்பது, ஒருவேளை எட்வினாக இருக்குமோ?’ 15 வயதில், ‘கிடார் வாசிப்பது அவனாகத்தான் இருக்கும்’ என ஜன்னல் வழியாகப் பார்த்த அதே மனநிலையில் தேவாலயத்தின் உள்ளே சென்றேன். அவனேதான். குழுவின் நடுவே பிரதானமாக நின்று, கிடார் வாசித்துக்கொண்டிருந்தான். எப்படிச் சரியாக யூகித்தேன் என ஆச்சர்யம். பல வருடங்கள் கழித்துப் பார்த்த பரவசத்துடன் அவன் முன்பு இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தேன். அவனும் என்னைப் பார்த்துவிட்டான். நம்ப முடியாமல் சிரித்தான்.

என் தோழியிடம் நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொன்னதும் விடை பெற்றுக்கொண்டாள். எட்வின் என் அருகே வந்தான். கண்களில் நீர் வழிய, ”என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா எட்வின்?” எனக் கேட்டேன்.

அவன் ஒரு நொடி யோசித்து ”இப்ப முடியாது. இங்கேயே அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு.. வந்துடுறேன்” என ஓடினான்.

பத்து நிமிடங்கள் கடந்தன. ‘எங்கே போயிருப்பான்… ஒருவேளை, தனக்குத் திருமணம் ஆயிற்று என ஒரு பெண்ணை என் முன்பு நிறுத்துவானோ? அதனால்தான் இத்தனை நாட்கள் பேசவில்லையோ…’ என்பது போன்ற வேண்டாத எண்ணங்கள் வந்து தொலைத்தன. அருகில் ஹார்ன் சத்தம் கேட்டது… எட்வின்.

”நீ அப்போ அடிக்கடி கேட்பியே… பைக் ரைடு. ஒண்ணு, பெட்ரோல் காலியாகணும்; இல்லை ரோடு முடியணும்… அப்படி ஒரு ரைடு போலாம் வா. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.”

‘கண்ணம்மா’ என எண் பலகையில் எழுதியிருந்த அதே பழைய யமஹா!

– ஜூலை 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *