கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 27,799 
 

அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக ஓடியவன் மர வேரோ எதுவோ தடுக்கி தடுமாறி விழுகிறான்.அய்யோஓஓஓஓஓ…. வனத்தின் அமைதியில் அவனது குரல் எதிரொலிக்கிறது அருகில் இருளை வார்த்தது போல் அவனை துரத்தி வந்த யானை

அவன் யானையை அவ்வளவு அருகில் பார்த்ததில்லை துதிக்கையின் சொரசொரப்பான சுருக்கங்களும் வெறி மின்னும் நீர்வழியும் கண்களுமாக துதிக்கையை மேலே சுழற்றி ஆங்காரமாக பிளிறியபடி காலை உயரே தூக்கி கீழே இறக்க….

அழைப்பு மணி அடித்தது.

குப்பென்று வியர்த்து உடல் நடுங்கிக் கொண்டிருந்தது லுங்கியை சரியாகக் கட்டிக் கொண்டு கதவை திறந்தான்

குமாரின் பக்கத்து வீட்டு பையன் சங்கர்.

என்னப்பா?

சிறிது நேரம் தயங்கி குமார் சார் இறந்துட்டார் என்றதும்

அதிர்ந்துபோனவன் என்ன சொல்ற? என்றான்.

அஞ்சு மணிக்கு லேசா நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாராம். ஹாஸ்பிடல் போறதுக்குள்ள மேஸிவ் அட்டாக்.

நேற்று இரவு 12 மணிவரை தன்னுடன் பேசிக் கொண்டிருந்த குமார் இப்போது இல்லை என்ற உண்மையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

வரேன் சார் என்றபடி சங்கர் போனதும் கதவைக் கூட சாற்றாமல் அப்படியே வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

தெருவில் நுழையும் போதே வீடு தனியாகத் தெரிந்தது கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது எல்லோருடைய முகத்திலும் அதிர்ச்சியும்,வார்த்தைகளில் வெறுமையும் படர்ந்திருந்தது.
செருப்பைக் கழட்டி விட்டு, நுழைந்ததும் உயிர் கலங்கியது

நேற்று இரவு இவன் மறந்து வைத்து விட்டுப் போன ஆனந்த விகடன் சோபாவிலேயே இருந்தது.

படுக்க வைத்திருந்தார்கள் எரியும் குத்து விளக்கு,புகையும் ஊதுபத்தி,உறங்குவது போல் படுத்திருந்த குமாரையே பார்த்துக் கொண்டிருந்தான் குமாரது இரண்டு குழந்தைகளும் சூழ்நிலையின் விபரீதம் புரியாமல் அம்மாவை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தன. நீர் வழியும் கண்களுடன் தலைவிரிகோலமாக இருந்த குமாரின் மனைவியை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள்.

ராத்திரி அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்களே இப்ப அவரை பேச சொல்லுங்க அண்ணா

தாளாமல் விலகி வெளியே வந்தான்.

பந்தலுக்கான மூங்கில்களும் தடுக்குகளும் வந்து இறங்கின

வரிசையாக போடப் பட்டுக் கொண்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான்.

என்னய்யா அநியாயம் சாகற வயசா இது பாவம் ரெண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு அந்த பொண்ணு என்ன பண்ணப் போகுதோ

எங்க மாமா இப்படித்தான் சார் வயலுக்கு தண்ணி கட்டிட்டிருந்தார்.வாய்க்காலத் தாண்டும் போது கீழே விழுந்தவர் எழுந்திருக்கவே இல்ல.

குரல்களுக்கு நடுவே தீவு போல அமர்ந்திருந்தான்.

பெண்கள் உள்ளே போகும் போது அழுகையொலி உயர்வதும் பிறகு தாழ்வதுமாக பொழுது போய் கொண்டிருந்தது.

நேற்றிரவு,காலையில் புது கார் வாங்குவதற்காக மதுரை போவதாக பேசிக்கொண்டிருந்த போது குமார் அறிந்திருக்கவில்லை மறுநாள் விடியல் தனக்கு இல்லையென்பதை, ஒரு குடும்பத்தை நிராதரவாக்கிய உணர்வின்றி ஒரு உயிரை அருந்திய திருப்தியில் அவன் எதிரே அமர்ந்திருந்தது மரணம்.

எப்படிஎப்படி இதுநாள் வரை சிந்திக்காது போனேன். உயிர் பிரிகையில் வலிக்குமா?எப்படி வரும் என் மரணம்?வாழ்க்கைப் பாதை எங்கும் நுட்பமான கண்ணிகளை விரித்து வைத்துக் காத்திருக்கிறது மரணம் என்று தோன்றியதும் மனசுக்குள் பயம் ஊற ஆரம்பித்தது.

தலை வலித்தது சிகரெட்டை எடுக்க பாக்கெட்டில் கைவிட்டபோது,ஹரியின் விசிட்டிங் கார்டு வந்தது பின்புறம் ஒரு டெலிபோன் நம்பர் கிறுக்கப்பட்டிருந்தது

ராத்திரி எட்டு மணிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணு கோயம்புத்தூர் பார்ட்டி மிஸ் பண்ணிராத அப்புறம் வருத்தப்படுவ ஹரியின் குரல்,நினைவுகளில் எதிரொலித்தது

சீக்கிரம் எல்லாம் முடிந்து விட்டால் ராத்திரி போய்விடலாம் என்ற நினைப்பு வந்து மறைந்தது..காற்றில் கலந்திருக்கும் குமார் இதை உணர்வான் என்று நினைக்கையில் வெட்கப்பட்டான்

எல்லா உயிர்களின் அறிவையும் பாசி போல படர்ந்து மூடி இருக்கும் புலன்களை மயக்கி உலக பந்தத்தில் கட்டிவைக்கும் எங்கும் நிறைந்திருக்கும் மாயை எனும் பேரருள் அவனது உயிரை விட்டு விலகியது

தேர்வுக்காக மனனம் செய்த சித்தர் பாடல்கள் முழுப் பரிமாணத்துடன் முன் வந்து நின்றன

மண் காட்டி பொன் காட்டி
மாய இருள் காட்டி
செங் காட்டில் ஆடுகின்ற
தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம்
கண் வலையில் சிக்கி மிக
அங்காடி நாய்போல்
அலைந்தனையே நெஞ்சமே

பட்டினத்தார் பாடல் முழுவேகத்துடன் அறைந்து தள்ளியது

அங்காடி நாய் போலத்தான் அலைகிறோமா?வீசியெறிந்த மிச்சத்தை தின்று கொண்டிருக்கும் போதே, வேறொரு கடையிலிருந்து வேறொன்று விழக் கண்டு,இதை பாதியில் விட்டு ஓடி அதைத் தின்று,பறிகு அதையும் விட்டு…

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே
முக்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே

முக்தி என்று எதைச் சொன்னார்கள் மனம் என்னும் மாடா?மனம் ஒரு குரங்கு என்றுதானே சொல்வார்கள்

ஒரு பாக்கெட் சிகரெட் தீர்ந்திருந்தது.மணியோசையும் சங்கொலியும் அவனை அடிக்கடி நனவுலகிற்கு இழுத்து வந்தன.பந்தலின் கீழ் சூரிய ஒளி சில்லரை காசுகளாய் சிதறி இருந்தது தளர்ந்து போய் அமர்ந்திருந்தான்

சார் புறப்படலாம் என்று குரல் எழ வைத்தது

கிளம்பியது மார்போடு அணைத்துகொண்ட மனைவி ஐயோ என்னங்க என்று மார்பில் அடித்துக்கொண்டு அலறுவதை,கதறுவதைக் கேளாமல்,பிள்ளைகளை,சுற்றத்தை,பழகிய நண்பர்களை விட்டு,வண்டியின் குலுக்கல்களில் மெல்ல அசைந்தபடி பயணம். கிளம்பியது.

நாளை எனக்காக யார் அழுவார்கள்? எத்தனை பெண்கள் என் முகம் கூட மறந்திருக்கும் அவர்களுக்கு அவர்களை பொறுத்தவரை நான் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும்தானே.

உதிர்த்து விடப்பட்டு சாலைகளில் சிதறியிருந்த மலர்களை மிதிக்கும் உணர்வு கூட இல்லாமல், அந்த கூட்டத்தில் ஒரு துளியாக நகர்ந்து கொண்டிருந்தான்

குமாரின் சிதைக்கு அவனது நாலு வயது மகன் தீ வைத்த போது மனம் கலங்கி விட்டது.சிதை புகையெழ எரிய ஆரம்பித்தது.

குமார்,நேற்று வரை மனிதன்.இன்னும் சிறிது நேரத்தில் சாம்பல் நாளை முதல் வெறும் நினைவுதான்.இதற்குத்தான் இவ்வளவு ஆட்டமா,

பயத்தில் விழிகள் மருள மாடு என்று ம்ம்மாஆஆ என்று தீனமாய்க் குரலெழுப்பி,,கால்களை மடக்கி மாடு சுருண்டு படுத்தது.

விசிட்டிங் கார்டை எடுத்து நாலாய் எட்டாய்க் கிழித்து வீசி எறிந்தான் மனது மழை பெய்த சாலை மாதிரி பளிச்சென்று இருந்தது

வாய்க்காலில் தண்ணி வெள்ளமா ஓடுதே குளிக்கலாமா? ஒருவர் கேட்டபடி கீழே இறங்கவும், சாலையில் இருந்து கீழே பிரிந்த மண் பாதையில் நிறைய பேர் இறங்கினார்கள்

புழுதி படிந்து உடல் நசநசவென்றது.கலங்கிய.செம்மண் நிறத்தில் சருகுகள் மிதக்க புதுத் தண்ணீர் ஓடுவதைப் பார்த்ததும் நீந்த வேண்டும் போலிருந்தது

ஆறடி உயர பாலத்தில் இருந்து சிறுவர்கள் கத்தி போல நீரில் பாய்ந்த உற்சாகத்தை ரசித்தபடி மெல்ல நீரில் இறங்கினான்.தலைக்குள் நீரில் குளிர் உறைத்தது முழங்கால் நீர் திடீரென கழுத்து வரை உயர்ந்தது. அப்படியே மூழ்கினான் நீரை எதிர்த்து கொஞ்சதூரம் நீந்தினான் பெரிய கொய்யா மரக்கிளை ஒன்று மிதந்து வந்தது.கரையோரமாக தண்ணீர்ப் பாம்பொன்று வளைந்து நெளிந்து நீந்திக் கொண்டிருந்தது,சற்று நேரத்தில் உடலின் மனதில் அத்தனை களைப்பும் எங்கோ பறந்தது போல் உணர்ந்தான்.

நீரை விலக்கியபடி கரையேறும்போது புளியமரத்தின் ஓரமாக தலை துவட்டி கொண்டிருந்த இளம்பெண் உயர்த்திக் கட்டியிருந்த உள்ளாடை திடீரென அவிழ்ந்து…, அந்தப் பெண் பதறிக் கொண்டு நீரினுள் பாய்ந்தது.

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் என்னும் முத்தொழில்களை நிகழ்த்தும் மாயை வாய்விட்டு சிரித்தாள். காது நுனிகள் சூடாகி உடலெங்கும் மெலிதான நடுக்கம் பரவ காய்ச்சல் போல் உணர்ந்தான் மாடு சிலிர்த்து எழுந்தது வெறியுடன் கொம்புகளால் மண்ணைக் குத்தி புழுதி கிளப்பியது.கால்களை அழுத்தித் தரையில் தேய்த்து ஹூம் ஹூம் என உறுமியது

அந்த போன் நம்பர் என்ன?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *