கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 3,648 
 

(1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்).

சுலைமான் ராவுத்தர் வீட்டுச் சேவலை முந்திக்கொண்டு தெருக் கோடியில் கொரகொரவென்று, “பாலிருக்குது… பழமிருக்குது…பழனிமலையிலே…” ரிக்கார்ட் வைக்க ஆரம்பிக்க, குஞ்சரமும் சத்தத்தைக் கூட்டிக் கொண்டாள்.

“இவுகளுக்குப் பாலும் வேண்டாம்… பழனியும் வேண்டாம்…லேவியம் இருந்தாப் போதும்… எத்தச் சொல்லி எளவக் கூட்டினாலும் புத்தி மாறாதே…”

சுப்பையாப்பிள்ளை ‘உ.ம். உம்..’ என்று முனகுகிற சத்தம்.

“வயசான காலத்துலே போனோமா வந்தோமா… போட்டதத் தின்னுட்டு முடங்கினோமான்னு கிடையாது… கூட்டிக்கிட்டுப் போனானாம் பேதியிலே போறவன்… இன்னொரு கழிச்சல்லே போறவன் உருட்டிக் கொடுத்தானாம் – கண்ணு மண்ணு தெரியாம முழுங்கி வச்சுத் தெருவிலே விழுந்து… இப்போ குத்துதே… குடையுதே… தவிட்டைக் கொண்டா… தண்டவாளத்தைக் கொண்டா… எல்லாத்துக்கும் நான் ஒருத்தி மாட்டிக்கிட்டேன்… முணுக்குனா குடுமியைத் தட்டிக்கிட்டு இளைய குடியாகிட்டே ஓடுவீகளே… போகவேண்டியதுதானே…”

“அவளை ஏன் புள்ளை இப்ப இழுக்கறே…”

சுப்பையாப்பிள்ளை ஒருக்களித்துப் படுத்தபடி ஈனசுவரத்தில் சொன்னார்.

“இழுக்கறாக புடிச்சு.. நீரு இழுத்தது எல்லாம் பத்தாதா…”

சூடான உமி அடைத்த துணி மூட்டையை வலதுகால் முட்டில் ணங்கென்று வைக்க சுப்பையாப் பிள்ளைக்கு உச்சத்தில் வலித்தது. இதமாக இருந்தது.

மெல்ல எழுந்து உட்கார முயற்சி செய்தார்.

“எந்திருச்சு என்னத்தை வெட்டி முறிக்கப் போறீகளாம்… ஆடி அழிஞ்சது எல்லாம் பத்தாதா… கையைக் கால அனங்காமக் கிடந்தா வெரசா வீக்கம் மட்டுப்படும்….அப்புறம் உம்ம பாடு… உம்மைப் படைச்சவன் பாடு…”

குஞ்சரம் பரபரவென்று வாசலைப் பெருக்கிவிட்டு வந்தாள்.

“அதில்லே புள்ளே… இன்னிக்கு செட்டியார் மண்டகப்படி… தவுலோட போனா நாலு காசு பாக்கலாம்…குருசாமி வேறே தேடிக்கிட்டு இருப்பான்…”

சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து நைச்சியமாகச் சிரித்தார். குஞ்சரத்தின் முகத்தில் இறுக்கம்தான் தெரிந்தது.

“செட்டியார் மண்டகப்படியிலே வெளியூரு செட்டு வந்து ஊதப் போகுது… அங்கே குருசாமியும் குந்தாணியும் என்னத்தை நொட்டப் போறாகளாம்…”

குஞ்சரம் துணி மூட்டையையும் கரி அடுப்பையும் ஓரமாக நகர்த்தி வைத்துத் தணலை அவித்தாள்.

“உனக்கு ஒரு எளவும் வெளங்காது… கோயில்லேருந்து மண்டகப்படிக்கு சாமியை எடுத்துப் போகயிலே உள்ளூர் மேளம்தானே பதிவு…”

சுப்பையாப்பிள்ளை இன்னும் விஸ்தரித்துச் சொல்வதை இருமல் வந்து கெடுத்தது. குஞ்சரம், வெளியே நகர்ந்தவள் கொஞ்சம் நின்றாள்.

“ஆமா… இவுக மேளம் கொட்டாட்டா உலகமே அத்தமிச்சுப் போகும்… நேத்து வாணியர் மண்டகப்படிக்கு ஒத்துக்கார சம்முவம் தான் மோளம் கொட்டிக்கிட்டுக் குருசாமியோட ஓடினான்… ஒத்துக் காரனோ… கோடாங்கிக்காரனோ…இன்னிக்கும் அதே படிக்கு ஏற்பாடு பண்ணிக்கட்டும்… நீரு நாளைக்கு வெளிக்கிளம்பினா போதும்…”

“கொஞ்சம் காபித்தண்ணி சுட வச்சுத் தந்துட்டுப் போயேன்…”

சுப்பையாப்பிள்ளை அப்பாவியாகக் கேட்டார்.

“பாவி மனுசா…கொட்டில்லே மாடு கட்டி தவலை நிறையப் பாலு சுறக்கறது பாழாப் போறது… காபித் தண்ணி வேணுமாமில்லே… தேவஸ்தானம் மானேஜர் வீட்டம்மா நேத்திக்கே நேரம் சுணங்கி வந்தேன்னு பிலுபிலுன்னு பிடிச்சுக்கிட்டாங்க… இன்னிக்காவது வெள்ளனக் கெளம்ப லாமுன்னு பாத்தா உம்ம பாடு பெரும்பாடா இருக்கே… நேத்து மதியம் வேறே போகாமே உம்மகூட லோல்பட்டேன்… போதும்டா சாமி…”

குஞ்சரம் போயிருந்தாள்.

சுப்பையாப்பிள்ளை தட்டுத் தடுமாறி வாசலுக்கு வந்தார்.

வலதுகாலில் இன்னும் வீக்கம் வற்றவில்லை. மற்றபடி உடம்பு பரவாயில்லை. பாவம் குஞ்சரம் தான் ராத்திரி முழுக்க வென்னீர் வைத்துக் கொடுக்கவும். ஒத்தடம் கொடுக்கவும். விளக்கெண்ணெய் தேய்த்து நீவவுமாகக் கண்முழித்திருந்தாள்.

பங்குனி உத்திர சமயத்தில் இப்படி காலையும் கையையும் இழுத்துக் கொண்டு… எல்லாம் குருசாமியால் வந்தது…

முந்தா நாள் பங்குனி உத்திரம் இரண்டாம் நாள். ஊமையன் மண்டகப்படி நன்றாக வாழ்ந்து நொடித்துப் போன குடும்பம் அது. ஏதோ ஒரு வீம்போடு இந்த விசேஷத்தை மட்டும் எப்படியோ வருடா வருடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் பஜார் மரக்கடை வியாபாரிகள் எத்தனையோ கேட்டும் விட்டுக் கொடுக்காத வீம்பு அது…

ஊமையன் மண்டபத்துக்குக் கோயிலிலிருந்து முந்தா நாள் காலையில் சாமியை அழைத்துக் கொண்டு போனபோது, குருசாமி வாசித்த நாட்டைக்குத் தவிலில் தாளம் சேர்த்தபடி நடந்தபோது அறுபத்தைந்து வயதிலும் சுப்பையாப் பிள்ளைக்குத் தெம்பாகவும் உற்சாகமாகவும்தான் இருந்தது.

ஊமையன் வகையறாக்கள் வஞ்சனையில்லாமல் சாப்பாடு போட்டார்கள். வெளியூர்க் கச்சேரி என்று எதுவும் ஏற்பாடு செய்யப் பணம் இல்லாததால் சாயந்திரம் மண்டபத்தில் கிழிந்த ஜமுக்காளம் விரித்து ஒற்றை பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் குருசாமியையே கச்சேரி செய்யச் சொன்னார்கள்.

“தனியாப் பத்து இருபது போட்டுத் தரேன் அப்பு… உபகாரமாப் போவுது… ஒரு மணி நேரமாவது வாசிக்கணும்…”

ஊமையன் சம்சாரம், தொண்டு கிழவி காதில் பாம்படம் ஆடக் கேட்டுக் கொண்ட போது தட்டமுடியவில்லை.

கொஞ்சம்போல வாங்கி வைத்திருந்த ஜவ்வந்திப் பூவை உற்சவ மூர்த்திக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த குருக்களும், பக்கத்து, எதிர் வீட்டு மப்ளர்கார வயசாளிகளும், குஞ்சுகுளுவானோடு ஊமையன் குடும்பமும் மட்டும் அடங்கின சபையில் குருசாமி இந்தோளத்திலிருந்து இங்கிலீஷ் நோட் வரை வாசிக்க ஈடு கொடுத்து, ‘தாமரை பூத்த தடாகமடி’யில் முடித்தபோது உள்ளபடிக்கே கால்மரத்துப் போய் கை விரல் விண்விண்ணென்று தெறித்தது.

நாலு வீதி சுற்றுவதற்குள் குருசாமிக்கும் களைத்துப் போனது. சப்பரமாக இருந்தால் உட்கார்ந்து வாசித்தபடியே வந்துவிடலாம். சப்பரம் வாடகைக்கு எடுக்கவும் மாடு பூட்டவும் கதியில்லாமல் பல்லக்கில் சுமந்தபடி நடத்துதான் சாமி புறப்பாடு.

கோயிலுக்குத் திரும்பின பிற்பாடு ஒத்துக்கார சண்முகத்திடம் நாயனத்தையும் மேளத்தையும் கட்டி அனுப்பிவிட்டு வெளிப்பிரகாரத்தில் உட்கார்ந்து குருசாமியும் சுப்பையாப் பிள்ளையும் காளாஞ்சியில் வந்த வெற்றிலையை மென்று கொண்டிருந்த போது குருசாமிதான் ஆரம்பித்தான்.

“எப்படி இருந்துச்சு மாமா?”

“உனக்கென்னடா குறைச்சல் மாப்ளே… காருகுறிச்சியார் மாதிரி வாசிக்கறே… அதிர்ஷ்டம்தான் கொஞ்சம் கட்டை…”

“அது இருந்தா உம்ம தவுலோட கச்சேரிக்கு உக்காருவேனா?”

“பாத்தியா…அடிமடியிலே கை வைக்கிறயே… காளையார்கோயில் செட்டுலே வாசிச்ச பெருங்கை இது… நான் பாக்காத ஊரா…. போகாத விசேஷமா… உனக்குத் தான் நிறையச் சொல்லியிருக்கேனே…நான் இருந்த இருப்பென்ன… கவுரதை என்ன… என்னோட கிரகம்… இப்படிக் கோயில்லே மாசச் சம்பளத்துக்கு உங்கப்பனுக்கும் அப்புறம் உனக்கும் பக்கமேளம் தட்டிக்கிட்டு… திருக்கோஷ்டியூர் சங்கரலிங்கம் பிள்ளே… அதான்டா என் குருநாதர்… வெள்ளைக்கார துரை கேட்டு அசந்து போய் மெடல் கொடுத்த வாசிப்புடா அவருது… எட்டு வருஷம் குருகுலவாசம் பண்ணிக் சுத்துக்கிட்ட வித்தை என்னுது….”

சுப்பையா பிள்ளையின் விரல்கள் கோயில் தூணில் தாளம் போட வெளியே நாய் குரைக்கிற சத்தம்.

“மாமா… நீங்க வித்தையும் கத்துக்கிட்டிங்க.. போன இடத்துலே இளையகுடியாளையும் சேத்துக்கிட்டீங்க இல்லையா…”

“எங்கே சுத்தியும் அங்கே வந்துடுவியே…” சுப்பையாப்பிள்ளை நெளிந்தார்.

“நான் குஞ்சரம் அத்தையைத் தான் தினம் பாக்கறேன்… சின்ன அத்தையைப் பாத்ததே இல்லியே… நல்ல அளகா இருக்குமா மாமா? பேரு என்ன… ருக்குமணிதானே…?”

குருசாமி கண்ணைச் சிமிட்டினான்.

“போடா போக்கத்தவனே… இப்ப எல்லோரும் ஒரே மாதிரி தலை நரைச்சு… கிழம்தாண்டா… பல்லு ஆடிக்கிட்டு…”

“இப்ப சரி…அப்ப ரெண்டாந் தாரமாக் கட்டுனபோது?” குருசாமி விடாமல் கேட்டான்.

“ரதிடா… கருப்பு ரதி…”

“ரதி இப்ப என்ன பண்றர்களாம்?”

“ரைஸ் மில்லிலே நெல்லு புழுக்கிய அரைச்சுக் கொடுத்து வயிறு கழுவிக்கிட்டு திருப்பத்தூர்லே சீவிச்சுக் கெடக்கா… எப்பவாவது அங்கிட்டுப் போறதுதான்…”

சுப்பையாபிள்ளை ஒரு நிமிடம் ருக்குமணி நினைவில் கண்கலங்கினார்.

“அதென்ன மாமா எப்பவாவது…வாரா வாரம் போறது…”

“கையிலே காசு வேண்டாமாடா?”

“அப்ப அவுகளை இங்க வரச் சொல்றது…”

“குஞ்சரம் முழியைத் தோண்டிப் புடுவா… சீக்கிரம் கிளம்புடா மாப்ளே… தாமதமானா அதுக்கு வேற இடிப்பா…”

சுப்பையாப்பிள்ளை நடக்க ஆரம்பிக்க, குருசாமி நிறுத்தினான்.

“ஏம்மாமா… கையும் காலும் இந்தக் கொடை கொடையுதே… நாளைக்கு மூணாம் மண்டகப்படிக்கு வாசிக்க முடியுமா?”

“வாசிச்சாத்தானேடா நாலு காசு பாக்கலாம்…”

“அப்ப என்னோட வாறீங்க… நாளைக்கு தெம்பா மேளத்தை என்ன, நெல்லுக் குதிரையே தோள்லே மாட்டிக்கிட்டு வர மாதிரி மருந்து வாங்கித் தர்றேன்…”

அவன் வெட்டகுடியான் வீட்டுப் பக்கம் நடந்தான். சுப்பையாப் பிள்ளையின் மனம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கால் நடந்தது. கதவைத் தட்டி, அரிக்கேன் விளக்கோடு வத்தவன் கொடுத்ததைக் காரமும் கசப்புமாக விழுங்க தொண்டை எரிந்து கண்ணில் உஷ்ணம் ஏறியது. முன்பெல்லாம் அவ்வப்போது சாப்பிட்டதுதான். இரண்டு வருஷமாகத் தொடாமலிருந்து விட்டு இப்போது விழுங்க எல்லாமே புதிராக இருந்தது.

“மாமா… இப்படியே போய்ப் படுத்தா சுகமாயிருக்கும். அத்தை கேட்டா வாயையே திறக்காதீங்க… காலையிலே எழுந்திருச்சா சின்ன அத்தையைத் தேடிக்கிட்டுக் கிளம்பிடப் போறீக… மண்டகப்படி இருக்கு…” குருசாமி சிரித்தான்.

“போடா மாப்ளே… உனக்கு எப்பவும் தமாசுதான்… நீயும் வாயேன்… போகலாம்”.

“ஐயோ இப்பவா…. டெண்ட் கொட்டாயிலே படம் பாத்துட்டு கிளம்பினா நிதானமா இருக்கும். அப்புறம் படுத்து விரசா எழும்பிடலாம்”.

குருசாமி ஊருணிக்கரைப் பக்கம் டெண்ட் கொட்டகையை நோக்கிப் போக, சுப்பையாப்பிள்ளை இருட்டு விழுந்த பாதையில் மெல்ல அடி எடுத்து வைத்தார்.

அவருக்கு நடக்கிற நினைவே இல்லை. ஜிவ்வென்று கிளம்பிப் பறக்க வேண்டும் என்று ஆசை. காலைத்தான் ஏதோ கட்டிப் போடுகிறது.

இப்போது அவர் இருபது வயது சுப்பையாப்பிள்ளை. அள்ளி முடிந்த கட்டுக் குடுமியும், நெற்றியில் அரகஜா பொட்டுமாக திருப்புல்லாணி தெப்பத்துக்கு காளையார் கோயில் ரெட்டை நாயனத்துக்கு இரண்டாம் தவில் பொறி பறக்க வாசித்த கட்டு மஸ்தான சுப்பையா…

இங்கே குஞ்சரத்தையும், திருக்கோஷ்டியூரில் இளையகுடியாள் ருக்குமணியையும் குடித்தனம் வைத்து வாரம் இரண்டு தடவை மல்லுவேட்டியும். சிலுக்குச் சட்டையுமாகப் போகவர இருந்த இருபத்தைந்து வயசு சுப்பையாப்பிள்ளை அப்புறம்…

குஞ்சரம் சாமி வந்தது போல ஆடி அப்புறம் அடங்கி, யார் யாரோ வந்து ‘சங்கீதக்காரன்னா அப்படி இப்படித்தான். நீதான் அடக்கி வாசிக்கணும்’ என்று சொன்னபடி அரைமனசோடு சமாதானமாகப் போக, போட்மெயிலில் காளையார் கோயில் செட்டோடு பட்டணத்தில் ரேடியோவில் வாசிக்கவும், கொலம்பியா கம்பெனியில் பிளேட் பதிவு பண்ணவும் கிளம்பிப் போன சுப்பையாப்பிள்ளை…

மைசூரில் நவராத்திரிக்கு மகாராஜா முன்னால் வாசித்து, சூட்டும் கோட்டும் தலைப்பாகையுமாக பெரிய மனுஷர்கள் இருந்த சபையில் சால்வையும் மற்றதும் சன்மானம் வாங்கிய ஸ்பெஷல் தவில்காரர் சுப்பையாப்பிள்ளை…

காளையார் கோயில் சகோதரர்களில் மூத்தவர் இறந்து போனதும் தான் சுப்பையாப்பிள்ளைக்குக் கஷ்ட தசை ஆரம்பித்தது… அப்புறம்.

எங்கெங்கோ சுற்றி அலைந்து வழியில்லாமல் உள்ளூரோடு ஒதுங்க பழைய தேவஸ்தான மேனேஜர் தயவில் கோயிலில் மேளம் வாசிக்கிற உத்தியோகமும் கொஞ்சம் போல சம்பளமும், இரண்டு கட்டி சாதமும், வாழைப்பழமும், வெற்றிலைப் பாக்குமாகத் தளர்ந்து நடக்கிற சுப்பையாப்பிள்ளை.

வருகிற வருமானம் பற்றாமல் குஞ்சரம் இரண்டு வீட்டில் வேலைக்குப் போக ஆரம்பித்து, மீந்துபோன குழம்பும் கறியுமாக எடுத்து வருவதை எதிர்பார்த்துச் சோற்று உருண்டையோடு காத்திருக்கிற சுப்பையாப் பிள்ளை…

‘ரெண்டு சம்சாரம் கட்டியும், பிள்ளைக்குட்டி இல்லாம இப்படி வயசான காலத்திலே அவதிப்பட வேண்டியிருக்கே’ என்று தன்னையே நொந்துகொண்டு, குருசாமி கூப்பிட்ட குரலுக்கு, காதுகுத்தலுக்கும், சடங்கான வைபோகத்துக்கும் வாசித்து விட்டுச் சாப்பாட்டை எதிர்பார்த்து வாசலில் உட்கார்ந்திருக்கிற சுப்பையாப்பிள்ளை…

‘இல்லை… இது நான் இல்லை’ என்று மனசு அடித்து அடித்துச் சொல்ல, ஆள்நடமாட்டம் ஒழிந்த தெருவில் ஆடி ஆடிப் போய்க் கொண்டிருந்த சுப்பையாப்பிள்ளை தெருவோரப் பள்ளத்தில் தலைக்குப்புற விழுந்தபோது முந்தாநாள் ராத்திரி பனிரெண்டு மணி…

தூக்கம் வராமல் லாந்திக் கொண்டிருந்த சுலைமான் ராவுத்தர் டார்ச் அடித்துப் பார்த்துத் தூக்கி விட்டு வீட்டில் கொண்டுவந்து சேர்த்தது மட்டும்தான் இப்போது சுப்பையா பிள்ளைக்கு ஞாபகம் இருக்கிறது…

நேற்று முழுக்கக் கண்ணே திறக்க முடியாமல் வலி உயிர் போய்விட் டது. எதுவும் சாப்பிடக்கூடத் தோன்றாமல் வாய் சுசந்து வழிந்து உமட்டி உமட்டி வந்தது. குஞ்சரம் நேற்று மதியம் ஒரு வீட்டிலும் வேலைக்குப் போகாமல் பக்கத்திலேயே இருந்து வென்னீரும், தவிட்டு ஒத்தடமும், கரைத்தாற் போல மோர்ச் சோறுமாகக் கவனித்துக் கொண்டிருக்கா விட்டால் இப்போது முதலுக்கே கூட மோசமாகி இருக்கும்.

பாவம் அவளுக்குத்தான் எத்தனை கஷ்டம்… நம்மால் வேறு இன்னும் அது அதிகப்படுகிறது… எல்லாம் சகித்துக் கொண்டு நாலு வீட்டுப் படி ஏறி இறங்கி அவள் கொண்டு வரும் பணமும் கிடைத்தால்தான் வண்டி ஓடுகிறது.

‘சே! என்ன பிழைப்பு இது.. சுப்பையா பிள்ளைக்கு ஏக துக்கமாக இருந்தது.இந்த மேளம் வாசிக்கிற தொழிலுக்கு ஏன் வந்தோம் என்று தோன்றியது. மங்கள வாத்தியம்னு பேரு… வாசிக்கிறவனை வயிறு காய வச்சுட்டு ஊருக்கு சுபத்தைச் சொல்கிற இதை கட்டி தூக்கிக்கிட்டு ஓடவும் முடியலை… வேண்டாம்னு விடவும் முடியலை.

சுப்பையாப்பிள்ளை தெருவில் அடி எடுத்து வைத்து நாலு எட்டு நடந்தார். சுலைமான் ராவுத்தர் வீட்டு வாசல் பெஞ்ச் காலியாக இருந் தது. அடுப்புக்கரி கொள்முதல் பண்ண திருமங்கலம் பக்கம் போயிருப்பார். இருந்தால் பிடித்து வைத்து நேற்று குஞ்சரம் சொன்ன புத்தியில் கொஞ்சம் போலாவது ஒரு டம்ளர் டீ போட்டு கொடுத்திருப்பார். அவ்வப்போது ஐந்தும் பத்தும் கைமாற்று கொடுத்து திருப்பித் தராவிட்டாலும் அலட்டிக் கொள்ளாத மனுஷர்… ராவுத்தர் வீட்டு டீ தித்திப்பு தூக்கலாகத் தனி வாசனையோடு வரும். அது மட்டும் இப்போது இருந்தால்…

தெருக்கோடியில் ரிக்கார்ட் நிறுத்தி மைக் ‘உய்ங்’ என்று விசிலடித்த அப்புறம் பேச ஆரம்பித்தார்கள்.

“இன்றைக்குத் தொடங்குகிற பழனியாண்டவர் அறுசுவை நிலையம்… உங்கள் நாவுக்கு இனிய இட்லி, தோசை, பொரட்டா. சால்னா, கறிக்குழம்பு சுடச்சுடத் தயார் செய்து தரும் ஒரே இடம்…”

சுப்பையாப்பிள்ளை சட்டைப் பையைத் துழாவினார். பொடி மட்டையும், புகையிலை சுற்றிய காகிதமும் போக ஒரு ரூபாயும், ஐம்பது நயாபைசாவும் சில்லறையாகத் தேறியது.

போதும்… நாலு இட்லிக்கும் ஒரு காப்பிக்கும் இதற்குமேல் ஆகாது… பக்தவத்சலம் ஆட்சியில் எல்லாம் யானை விலை. குதிரை விலைதான். ராவுத்தர் சொல்கிறபடி. அவர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இது சரியாகுமோ என்னமோ…

சுப்பையாப் பிள்ளை கடைக்குள் நுழைந்தார்.

‘ஏவ்…’ என்று பெரிதாக ஏப்பம் விட்டபடி சாப்பாட்டுகடையிலிருந்து இறங்கின சுப்பையாப் பிள்ளைக்கு வாழ்க்கை சகித்துக் கொள்ளக் கூடியதாகத் தோன்றியது. முதல்நாள் வியாபாரம் என்பதாலோ என்னவோ. இட்லியோடு இரண்டு கரண்டி டால்டா வடியும் ரவாகேசரியையும் இலையில் வைத்தபோது. மைசூர் மகாராஜா சால்வை போர்த்தினதை விட சந்தோஷமாக இருந்தது. சால்னாவில்தான் காரம் அதிகம்.

“சுப்பையாப் பிள்ளே… ஓய் சுப்பையா பிள்ளே…”

பின்னாலிருந்து யாரோ கூப்பிடுகிற சத்தம். பிள்ளை திரும்பிப் பார்த்தார். கோயில் ஓதுவார் சொக்கலிங்கம் கையை அசைத்தபடி தெருவைக் கடந்து வந்தார்.

கோயிலுக்கு யாராவது மேல் உத்தியோகஸ்தர் வருகிறாரா? வந்து வாசித்துத்தான் தீரவேண்டும் என்று சொக்கலிங்கம் ஓதுவாரிடம் சொல்லி விட்டிருக்கிறார்களா… இ.ஓ., சூப்பிரண்டு என்று அவ்வப்போது ஜீப்பில் வந்து இறங்கிக் கழுத்தறுக்கிற ஞானசூன்யங்கள்…

“என்ன ஒதுவார் மூர்த்திகளே… எங்கே இப்படி?”

சம்பிரதாயமாக விசாரித்தார்.

“உம்மத் தேடிக்கிட்டு ஈநேத்து சாயரட்சை தீபாராதனை சமயம் ஒரு ஆளு கோயிலுக்கு வந்துச்சுய்யா..”

எந்தக் கடன்காரன்?

“அதான்யா உம்ம மச்சான்…” அடுத்த ரிக்கார்ட் போட ஆரம்பிக்க, ஓதுவார் சத்தத்தைப் பெரிதாக்கினார்.

“மச்சானா…? ஓ… ருக்குமணி தம்பியா? அரசூர்லே கர்ணமாக இருக்கிறவன். அவனுக்கு என்ன?”

“ஹைஸ்கூல்லே வச்சு ஜமாபந்தி நடக்குதாம். அதுக்காக வந்தாப் பிலியாம். உம்மகிட்ட ஒரு தாக்கல் சொல்லணும்னாரு… நான் உம்ம விஷயத்தைச் சொல்லி வீட்டுலே வந்து பாக்கத் தோதுப்படாதாம். ஜமாபந்தி நேரத்துலே அலைய முடியாதாம்.”

“என்ன விஷயமா வந்தானாம்?” காலையில்குளித்துவிட்டு உடம்பில் ஏகப்பட்ட திருநீறு பூசிக்கொண்டு நின்ற ஒதுவாருக்குப் பக்கத்தில் இப்படி அட்டுப் பிடித்தது போல நிற்கவே சுப்பையாப்பிள்ளைக்கு என்னவோ போல இருந்தது. சந்தர்ப்பம் தெரியாமல் சுகமாக ஏப்பம் வேறு எட்டிப் பார்த்தது.

“அந்தாளு போன வாரம் திருப்பத்தூருக்கு அக்காவைப் பாக்க… அதான்யா உம்ம இளையவுசு… அவுகளைப் பாக்கப் போனாப்பிலியாம்… ஒரேமுட்டா படுத்த படுக்கையா, மேலுக்கு முடியாமக் கிடக்கறாகளாம். சுடுதண்ணி வச்சுக் கொடுக்கக் கூட ஆளு தட்டுப்பாடாம். உம்மை உடனே போய்ப் பாக்கச் சொன்னாப்பலே…”

சுப்பையாப் பிள்ளைக்கு தன்மேலே சீயென்று வந்தது. என்ன பிழைப்பு இது. கொண்டவளையும் நல்லா வச்சுக்க முடியாம.. அண் டினா ளையும் நிர்க்கதியா விட்டு… நாம மட்டும் வேளைக்கு கேசரியும். சால்னாவும், லேகியமும்… ஒரு பத்து நிமிஷம் முன்னால் ஓதுவார் வந் திருந்தால் கையில் இருந்த பணத் தோடு பஸ் ஏறி இருக்கலாம்.

“ஓதுவாரே… உம்மகிட்ட ஒரு அஞ்சு ரூவா திகையுமா… திருக்கல்யாணமும் தேரோட்டமும் முடிஞ்சதும் திருப்பிடறேன்.”

ஓதுவார் அவசரமாக நகர்ந்தார்.

“நானும் உம்மைப் போல கோயில் வருமானத்துலே வயிறு கழுவறவன்தானே சுப்பு… மாசக் கடைசியிலே எல்லாம் ஒரேமாதிரி ததிங்கிணதோம்தான்…”

ஊர்கிற ஒவ்வொரு வினாடியும் ருக்குமணி நினைப்பு பலமாகக் கவிந்து பிள்ளையை வதைக்க ஆரம்பித்தது. கால்வலி கூட மறந்து போனது. தனியாக் கிடந்து என்ன கஷ்டப்படறாளோ… ராவுத்தர் ஊரில் இருந்தாலும் கைமாற்றாக ஏதாவது வாங்கிக் கொண்டு புறப்படலாம். சோதனைக்கு அவரும் சவாரி விட்டிருக்கிறார்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலிலேயே விழுவதுதான் சரியாகப் பட்டது. நடையை எட்டிப் போட்டார்.

தேவஸ்தானம் மானேஜர், வீட்டு வாசலில் உட்கார்ந்து இங்கிலீஷ் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். உள்ளே ரேடியோவிலிருந்து நாத சுவரச் சத்தம். அது தான் வாசித்த கொலம்பியா ரிக்கார்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஏனோ தோன்றியது. இல்லை. இது ஆபேரி… காளையார்கோயில் செட் ரிக்கார்ட் கொடுத்தது அடாணாவில் ‘பாலகனகமய’,

மானேஜர் வீட்டம்மா வாசலுக்கு வந்தபோது சுப்பையாப் பிள்ளை முன்னால் போய் அவசரமாக நின்றார்.

“எங்க பொம்பளை இருக்குதாம்மா?”

“எல்லாப் பொம்பளையும் இருக்கு தய்யா… நீரூ என்ன ரெண்டு நாளாக் கண்ணுலே படலே…”

மானேஜர் சிரித்தபடி கேட்டார். இவருக்குத் தெரியாதா என்ன?

சத்தம் கேட்டு வாசலுக்குப் பெருக்குமாறோடு குஞ்சரம் வந்து விட்டாள்.

“அலையாதீங்கன்னா கேட்டாத் தானே… காப்பித்தண்ணி எடுத்துக்கிட்டு நானே வரத்தான் கிளம்பிக் கிட்டிருந்தேன். ஏன் கஷ்டப்படறீக… நான் பாத்துக்க மாட்டேனா… மனசுதான் வருமா?”

கூச்சல் மட்டும் இல்லை. இந்தக் கரிசனமும்தான் குஞ்சரம்.

ஆனால், இப்போது காப்பி வேண்டியிருக்கவில்லை. காலையில் இருந்து வெறும் வயிற்றோடு கிடக்கிற இவள் குடிக்கட்டும்.

“காப்பி வேண்டாம் பிள்ளே. ஒரு அஞ்சுரூபா அவசரமா தேவைப்படுது.”

“ஏன் லேவியம் வாங்கணுமா?” அவள் வெடுக்கென்று கேட்டாள்.

பம்மிப்பம்மி விஷயத்தைச் சொல்லி முடித்தார்.

“ஆமாமா- உடம்பு நேராச்சுல்லேட் கிளம்பிட வேண்டியது… இளைய குடியாளைப் பாக்காட்ட உசிரு தங்காதே…”

“அவ மெய்யாலுமே முடியாமக் கிடக்காளாம். தாக்கல் வந்துச்சு. நான் போறவரைக்கும் தாங்குமான்னு தெரியலை” கொஞ்சம் அதிகமாகவே சொல்லி வைத்தார்.

“நீரு போய் என்ன பண்ணப் போறீகளாம். உம்மைக் கவனிச்சுக்கவே ஆளு அம்பு வேண்டியிருக்கு. கையிலேயும் சல்லிக் காசு கிடையாது.”

மானேஜர் உள்ளே போயிருந்ததால். குரலை ஏற்றியவளைப் பரிதாபமாகப் பார்த்தபடியே சமாதானமாகச் சொன்னார்.

“ஏதோ ஒரு ஆதரவா இருக்குமில்லே… அவளுக்கு வேறே எதையும் நான் தரலை… மாசக்கணக்கா அந்தப் பக்கம் போகவுமில்லே…”

“என்னமோ கோடி கோடியா சம்பாதிச்சு என் மடியிலே கொண்டு வந்து கொட்டின மாதிரி இல்லே இருக்கு உங்க பேச்சு. ஏதேது நியாயத்துக்கு மதிப்பு இல்லியே… நான் உசிரைக் கொடுத்து ராப்பகலா கதிகெட்டு நீரு வாந்தி எடுத்ததையும், வயத்தால் போனதையும் வாரிக் கொட்டிக்கிட்டு கஞ்சி வச்சுத் தர வேண்டியது. உடம்பு நேராச்சா… ருக்குமணி எங்கே சுக்குமணி எங்கேன்னு நீரு பொறத்தாலே மண்ணைத் தட்டி விட்டுட்டு ஓட வேண்டியது… உம்மைச் சொல்லிக் குத்தமில்லையா… நான் பொறந்த நேரம்.”

குஞ்சரத்தின் சத்தத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். அழ ஆரம்பித்தால் சந்ததம் வந்தது போல உடம்பு பதறி நெஞ்சைப் பிடித்தபடி சாய்வதில் போய் முடியும்.

சுப்பையாப் பிள்ளை மெல்ல நழுவினார்.

வெய்யிலில் காயப் போட்ட தெருவில் சுப்பையாப்பிள்ளை தளர்ந்து வந்தபொழுது சந்தைக் கடையிலிருந்து கூட்டம் கூட்டமாக ஜனம் போய்க் கொண்டிருந்தது. கரும்பைக் கடித்தபடி நடக்கிறவர்களும், புதிதாக வாங்கிய சட்டிப் பானையைத் தலையில் ஏற்றி வருகிறவர்களும், ஆட்டை ஓட்டிப் போகிறவர்களுமாக வழியே கலகலப்பாக இருந்தது. மாம்பழ வாசனையும். கருவாடு வாடையுமாக ஒரு வினோதக் கலவையோடு வந்த காற்று பள்ளிக்கூட வாசல் புளியமரத்தடியில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையும், அல்லி அரசாணிமாவையும் விற்றுக் கொண்டிருந்தவர்களை சுற்றி ஒரு கூட்டம். ‘மட்டக் குதிரை ஏறிப்போனான் ராஜா தேசிங்கு…’ என்று நடுவில் நின்று ஒரே நேரத்தில் தாடி அசைந்துதாழ தலைப்பாகையோடு இரண்டுபேர் பாடுவதைக் கொஞ்சநேரம் கேட்டுக் கொண்டு நின்றார் சுப்பையாப்பிள்ளை. ‘சிரித்த படியே உசிரை விட்டான் ராஜா தேசிங்கு…’ தாடிக்காரர்கள் உச்சக் குரலில் பாடியபோது ஒண்ணரை மணிச் சங்கு பிடிக்கிற சத்தம்.

‘சிரித்தபடிக்கே உசிரை விடக் கூட ஒரு கொடுப்பினை வேணும். இருந்து இருந்து என்னத்தை சாதிச்சோம். நிம்மதியாக் கண்ணு மூடவும் வழி இல்லே… ஒரு அஞ்சுரூபாக் காசுக்குப் பாரமா… பூமிக்கு என்ன…. குஞ்சரத்துக்குப் பாரமா கொஞ்சம் கொஞ்சமா ஆகிக்கிட்டு இருக்கோம். இளையவளை நிர்க்கதியாக விட்ட பாவம்… இன்னும் எப்படி எல்லாம் இழுத்துக்கிட்டுக் கிடக்கணுமோ… இப்படியே கண்ணை மூட முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும். குஞ்சரத்துக்கு சோறு போட நாலு வீடு இருக்கு. குருசாமிக்கு மேளம் தட்ட ஒத்துக்காரன் இருக்கான். ருக்குமணிக்கு முன்னாலே நாம போய்ச் சேர்ந்தா எம்புட்டோ மேல்…’

யோசித்தபடி படுத்திருந்த சுப்பையாப்பிள்ளை கண்முன்னால் ஒரு பிரம்மாண்டமான கொலம்பியா ரிக்கார்ட் சுழன்று சுழன்று அடாணாவில் நாயனமும், மேளமுமாக இசைத்து ‘ஏலநீ… ஏலநீ… ஏலநீ…’ என்று ஊசி மாட்டி இடக்குப் பண்ணத் தூங்கிப் போனார்.

“கதவைத் தொறந்து வச்சுட்டுத் தூங்கறீகளே… சாத்திட்டுத்தான் படுப்போம்னு கைவராதே…”

குஞ்சரம் குரல் தட்டி எழுப்பியது.

“அம்மா வீட்டுலேருந்து சுடு சோறும், சாம்பாரும் கொண்டாந்திருக்கேன். சாப்பிட்டுப் படுங்க.”

முதுகில் மெல்ல கையமர்த்தி எழுப்பி விட்டாள்.

“நீ சாப்பிட்டியா பிள்ளே?” உட்கார்ந்தபடி. கேட்டார்.

“காலையிலே பழைய சோறு தண்ணிவிட்டு வச்சது மோரு போட்டு சாப்பிட்டேன். வயிறு இன்னும் நிறைஞ்சுதான் இருக்கு.”

குஞ்சரம் பனை ஓலை விசிறியால் வீசியபடி ஒவ்வொரு கவளமாக ஊட்டினாள். சுப்பையாப் பிள்ளைக்குக் குழந்தை போல அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“ராத்திரிக்குக் கஞ்சிவச்சுத் தாங்க ஆத்தான்னு ராவுத்தர் வீட்டு அம்மா கிட்டே சொல்லியிருக்கேன். குடிச்சுட்டுப் படுத்துக் கெடங்க. அவன் கூப்பிட்டான். இவன் கூப்பிட்டான்னு கிளம்பிடாதீக…”

“ஏன் நீ எங்கே போறியாம்?”

“போறாக.. சீமைக்குப் போய் துரைசானிக்கு முதுகு தேச்சுவிட ஆள் தேடறாகளாம். நீரு ஒண்ணு. திருப்பத்தூர் வரை போய்ட்டு காலையிலே வந்துடறேன்.”

குஞ்சரம் ஒரு புடவையை முறுக்கிய நார்ப்பையில் வைத்துக் கொண்டாள்.

“பாவம் அந்தப் பொம்பளை. ஏன் தனியா கெடந்து கஷ்டப்படணும். நான் போய்க் கைத்தாங்கலாக் கூட்டி வந்துடறேன்… கூழோ கஞ்சியோ நாம குடிக்கிறதை அதுக்கும் ஊத்தினாப் போகுது… அவளுக்கும் தான் நம்மைவிட்டா யாரு இருக்கா? ஒத்தைக்கு ரெட்டை கிழவியா உம்ம ரெண்டு பக்கமும் தொளைச்சு எடுத்தாலாவது கண்ட கருமாந்திரத்தையும் முழுங்கிட்டு வராம இருப்பீகளான்னு பாக்கலாம். முகத்தைப் பாரு…அடுக்கு தீபாராதனை கொளுத்தின மாதிரி… இளையகுடியா வரான்னா இருக்காதா பின்னே…?”

சத்தத்தைக் குறைக்காமல் வாசல் படலை ஒருக்களித்து மூடிவிட்டுத் தெருவில் இறங்கினவளைப் பார்க்க முடியாமல் சுப்பையாப் பிள்ளைக்குக் கண்ணீர் நிறைந்தது.

– நவம்பர் 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *